இலங்கை ஜனநாயக-விரோத ஜனாதிபதி தேர்தல் ஒழிக!

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.) ஜூலை 20 அன்று இலங்கை பாராளுமன்றத்தில் புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ள வாக்கெடுப்பானது தொழிலாள வர்க்கம், இளைஞர்கள் மற்றும் கிராமப்புற ஏழைகளுக்கு எதிரான ஒரு மோசடி மற்றும் சதி என்று கண்டிக்கிறது. பாராளுமன்றமானது எந்த வகையிலும் உழைக்கும் மக்களின், அதாவது சமூகத்தின் முழுமையான பெரும்பான்மையினரின் அரசியல் உணர்வுகளையும் நலன்களையும் பிரதிநிதித்துவப்படுத்துவதில்லை.

11 ஜூலை 2022 திங்கட்கிழமை ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் மக்கள் கூட்டம் [Photo: WSWS] [Photo: WSWS]

ஜனாதிபதி பதவிக்கான 'வெற்றிடமானது' பாரிய தொழிலாள வர்க்க வேலைநிறுத்தங்கள் மற்றும் கொழும்பு நகரில் ஜூலை 9 நடந்த மாபெரும் கிளர்ச்சியின் விளைவாகும். இதனால் கோட்டாபய இராஜபக்ஷ நாட்டை விட்டு வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்டதுடன் பின்னர் அவரது இராஜினாமா கடிதத்தை அனுப்பியிருந்தார். இப்போது, நாட்டின் ஜனநாயக விரோத அரசியலமைப்பின் கீழ், அடுத்த ஜனாதிபதியைத் தேர்வு செய்ய பாராளுமன்றம் கூடும். இலங்கையில் ஜனாதிபதி பதவியானது பெரும் எதேச்சதிகார அதிகாரங்களைக் கொண்டுள்ளது.

'225 பேரும் ஒழிக', அதாவது 225 பாராளுமன்ற உறுப்பினர்களும் ஒழிய வேண்டும் என்பதே, கடந்த மூன்று மாத வெகுஜன எதிர்ப்புக்களில் மிக முக்கியமான முழக்கங்களில் ஒன்றாக இருந்தது. எதிர்க்கட்சிகளுக்கு நெருக்கமான போராட்டத் தலைவர்கள் இந்த சுலோகத்தை மூடி மறைக்க முயன்றாலும், அந்த கோஷத்தின் ஜனரஞ்சகமானது, புறநிலையாக கடந்த 75 ஆண்டுகால முழு பாராளுமன்ற அமைப்பையும் நிராகரிப்பதை வெளிப்படுத்துகிறது.

இந்த கோஷம், ஆழமாக எதிரொலிப்பது ஏனெனில், மக்களிடமிருந்து முற்றிலும் அந்நியப்பட்ட ஆட்சியில் இருந்த பாராளுமன்றங்கள், வாழ்க்கை நிலைமைகள் சகிக்க முடியாத அளவிற்கு மோசமடைந்ததற்கு பொறுப்பாகும். ஜனாதிபதியை தெரிவுசெய்வது ஒருபுறமிருக்க, தற்போதைய பாராளுமன்றத்தை எடுத்துக்கொண்டால், அதற்கு செயற்படுவதற்கு எந்த அரசியல் சட்டபூர்வத்தன்மையும் கிடையாது. அவற்றின் அரசியல் சாயல் எதுவாக இருந்தாலும், சகல பாராளுமன்ற உறுப்பினர்களும் அனைத்துக் கட்சிகளும், 2020 பொதுத் தேர்தலின் போது கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை வெளிப்படையாகக் காட்டிக் கொடுத்துள்ளனர்.

ஏப்ரல் மாதம் நாடு முழுவதும் வெகுஜன எதிர்ப்புக்கள் வெடித்தபோது, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய இராஜபக்ஷவும் அவரது சகோதரரும் முன்னாள் பிரதமருமான மஹிந்த இராஜபக்ஷவும் பதவி விலக வேண்டும் என்பதே மைய கோரிக்கையாக இருந்தது. பாரிய வேலைநிறுத்தங்கள் மற்றும் எதிர்ப்புக்களுக்குப் பின்னர் மே 9 அன்று மஹிந்த இராஜபக்ஷ பதவி விலக நிர்ப்பந்திக்கப்பட்ட போது, ஜனாதிபதி இராஜபக்ஷ அவருக்குப் பதிலாக ஊழல் நிறைந்த அரசியல் வேட்டைக்காரனும், வலதுசாரி ஐக்கிய தேசியக் கட்சியின் (ஐ.தே.க.) தலைவருமான ரணில் விக்கிரமசிங்கவை நியமித்தார்.

அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கையாளாகவும் சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கனக் கோரிக்கைகளை அமுல்படுத்தியவராகவும் நீண்ட வரலாற்றைக் கொண்ட விக்கிரமசிங்க, பரவலாக வெறுக்கப்படுகிறார். 2020 பொதுத் தேர்தலில் ஐ.தே.க. அதன் அனைத்து ஆசனங்களையும் இழந்ததுடன், விக்கிரமசிங்க, கட்சியின் தேசியப் பட்டியல் மூலம் மட்டுமே பாராளுமன்றத்துக்குள் நுழைந்தார்.

ஆயினும்கூட, இந்த வெறுக்கத்தக்க நபர், முதலில் பிரதமராகவும் பின்னர் கடந்த வெள்ளிக்கிழமை பதில் ஜனாதிபதியாகவும் ஜனநாயக விரோதமாக நியமிக்கப்பட்டார். இப்போது, அரசியல் மற்றும் கூட்டுத்தாபன உயரடுக்கின் சில பிரிவுகளின் ஆதரவுடன், பாராளுமன்றத்தில் அவரை அடுத்த ஜனாதிபதியாக்க பிரச்சாரம் செய்கிறார். அவரை இராஜினாமா செய்யக் கோரி ஆர்ப்பாட்டங்கள் வலுப்பெற்று பரவி வருவதில் ஆச்சரியமில்லை.

ரணில் விக்கிரமசிங்க [Source: United National Party Facebook] [Photo by United National Party Facebook]

சனிக்கிழமை இரவு, கண்டி மற்றும் மாத்தறையில் உள்ள போராட்டத் தளங்கள் 'கோடா கோகம' (கோடா வீட்டுக்குப் போ) என்பதிலிருந்து 'ரணிலா கோகம' அல்லது ரணில் வீட்டிற்குப் போ என்று பெயர் மாற்றப்பட்டது. கொழும்பில் உள்ள பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு வெளியே உள்ள போராட்ட தளமும் இதேபோல் பெயர் மாற்றப்பட்டுள்ளது.

ஜனாதிபதித் தேர்தலுக்கான பின் அறையில் நடக்கும் பேரம்பேசல்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், எதிர்க் கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் (ஐ.ம.ச.) தலைவர் சஜித் பிரேமதாச, இராஜபக்ஷவின் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் (ஸ்ரீ.ல.பொ.ஜ.மு.) டலஸ் அழகப்பெரும, மற்றும் எதிர்க்கட்சியான மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி.) தலைவர் அனுரகுமார திஸாநாயக்க ஆகியமேலும் மூன்று பிரமுகர்கள் தங்கள் வேட்புமனுவை அறிவித்துள்ளனர்.

மூவரும் உழைக்கும் மக்களின் வாழ்க்கை நிலைமைகளில் ஏற்பட்ட சீரழிவுகளுக்கு பொறுப்பான அரசாங்கங்களில் பங்காளிகளாக இருந்துள்ளனர் அல்லது ஆதரித்துள்ளனர். தனியார்மயமாக்கல், பொதுச் செலவினங்களில் ஆழமான வெட்டுக்கள் மற்றும் எஞ்சிய விலை மானியங்களையும் இல்லாமல் ஆக்குதல் போன்ற சர்வதேச நாணய நிதியத்தின் கொடூரமான சிக்கன திட்ட நிரலைத் திணிப்பதைத் தவிர, தற்போதைய நெருக்கடியிலிருந்து வெளியேற வழி இல்லை என மூவரும் வலியுறுத்துகின்றனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா, இந்தோனேசியாவில் சனிக்கிழமை நடைபெற்ற ஜி20 நிதி அமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்களின் கூட்டத்தில், அதிக கடன் உள்ள நாடுகளுக்கு இலங்கை ஒரு 'எச்சரிக்கை அறிகுறி' என்று கூறினார். முதலாளித்துவத்தின் பூகோள நெருக்கடியானது, அபிவிருத்தி அடையாத நாடுகள் என்று அழைக்கப்படும் நாடுகளில் மட்டுமன்றி, ஏகாதிபத்திய மையங்களிலும் இலங்கையில் போன்ற மக்கள் எழுச்சிக்கான நிலைமைகளை உருவாக்குகிறது என்று சர்வதேச ஆளும் வட்டங்களில் காணப்படும் அச்சத்தை இது வெளிப்படுத்துகிறது.

இலங்கையில் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்கள் நாட்டின் மோசமான பொருளாதார மற்றும் சமூக நெருக்கடியால் உந்தப்பட்டிருக்கின்றன. எரிபொருளுக்காக பல கிலோமீட்டர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து இதுவரை 19 பேர் உயிரிழந்துள்ளனர். சனிக்கிழமையன்று, எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர, ஒரு எரிபொருள் பங்கீடு திட்டமான 'தேசிய எரிபொருள் அனுமதிச்சீட்டு' மூலம் மேலும் கட்டுப்பாடுகளை அறிவித்தார். மாவனல்லை, கம்பஹா மற்றும் பொலன்னறுவை உட்பட மாகாண நகரங்களில் உள்ள சுகாதார ஊழியர்கள், அரசாங்கம் வாக்குறுதி கொடுத்த போதிலும் வேலைக்குச் செல்வதற்கு எரிபொருள் இல்லை என்று எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.

மருந்துகள், சமையல் எரிவாயு, பால் பொருட்கள் மற்றும் அடிப்படை உணவுப் பொருட்கள் போன்ற அத்தியாவசியப் பொருட்கள் பற்றாக்குறையாக இருப்பதுடன் பலரால் அவற்றுக்கு செலவிடமுடியாதுள்ளது. பேராதனை பல்கலைக்கழகத்தின் சமீபத்திய ஆய்வின்படி, 900,000 குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்கள் ஒரு நாளைக்கு ஒரு வேளை அல்லது இரண்டு வேளை உணவை மட்டுமே வாங்க கூடிய நிலையில் உள்ளனர். பொருளாதார நெருக்கடியின் விளைவாக, 16,300 அல்லது 20 சதவீத சிறு மற்றும் நடுத்தர வணிகங்கள் மூடப்பட்டதால் மூன்று மில்லியன் தொழில்கள் அழிக்கப்பட்டுள்ளன.

தொழிற்சங்கங்கள் தொழிலாளர்களின் நலன்களைப் பாதுகாப்பதற்காகப் போராடவில்லை, மாறாக தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான அணிதிரட்டலைத் தடுக்கத் தலையிட்டன. எந்தவொரு வேலைநிறுத்த நடவடிக்கையும் கண்டிப்பாக மட்டுப்படுத்தப்பட்டு, அவை பிசுபிசுத்துப் போக திட்டமிடப்படுவதோடு, உழைக்கும் மக்களை திவாலாகிவிட்ட எதிர்கட்சிகளுக்கு பின்னால் கட்டிவைக்க தொழிற்சங்கங்கள் முயற்சிக்கின்றன.

தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன அமைப்புகளின் கூட்டமைப்பு, கோட்டாபய இராஜபக்ஷவும் ரணில் விக்கிரமசிங்கவும் தமது பதவிகளை இராஜினாமா செய்யாவிட்டால், ஜூலை 14 அன்று பொது வேலைநிறுத்தம் மற்றும் ஹர்த்தாலை (முழு அடைப்பு) நடத்தப் போவதாக அறிவித்தது. அதே நாளில், மற்றொரு தொழிற்சங்க முன்னணியான தொழிற்சங்க ஒருங்கிணைப்பு மையத்தின் இணை ஒருங்கிணைப்பாளர் ரவி குமுதேஷ், நாட்டின் அரசியல் நெருக்கடிக்கு பாராளுமன்ற சபாநாயகர் உட்பட பொறுப்பான நபர்கள் அரசியலமைப்பு ரீதியான தீர்வை வழங்காவிட்டால், தொழிற்சங்கங்கள் போராட்டம் நடத்தும் என்று எச்சரித்தார்.

தொழிலாள வர்க்கத்தின் மத்தியில் அரசியல் ஸ்தாபகம் சம்பந்தமாக காணப்படும் ஆழமான எதிர்ப்பிற்குப் பிரதிபலிக்கும் வகையில் தொழிற்சங்கங்கள் விடுக்கும் அச்சுறுத்தல்கள், முற்றிலும் வஞ்சத்தனமானவை மற்றும் வெறுமையானவை. 'அரசியலமைப்பு ரீதியான தீர்வுக்கான' அழைப்பு, தொழிற்சங்கங்கள் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் ஒடுக்குமுறையான வாழ்க்கை நிலைமைகளில் அன்றி, மாறாக முதலாளித்துவ அரசு மற்றும் முதலாளித்துவ ஆட்சிக்கு முட்டுக் கொடுப்பதில் கவனம் செலுத்துகின்றன என்பதை வெளிப்படையாக நிரூபிக்கின்றன.

அதே தொழிற்சங்க எந்திரங்கள், ஜூலை 13 அன்று இராஜபக்ஷ பதவி விலகவில்லை என்றால், தாங்கள் ஒரு 'முழுமையான' போராட்டத்தை நடத்துவோம் என்று அறிவித்தன, ஆனால் அத்தகைய போராட்டம் எதுவும் முன்னெடுக்கப்படவில்லை. எல்லாவற்றுக்கும் மேலாக, விக்கிரமசிங்க இராஜினாமா செய்யாததோடு, இப்போது ஜனாதிபதியாக பதவியேற்கவும் முனைந்துள்ளார். சனிக்கிழமையன்று விக்கிரமசிங்கவுக்கு எழுதிய பகிரங்கக் கடிதத்தில், குமுதேஷ், குறைந்தபட்சம் அடுத்த தேர்தல்கள் வரையாவது தனது 'நேர்மையான ஆதரவை' வழங்கி, அரசாங்க எதிர்ப்புப் போராட்டங்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யுமாறும் கெஞ்சினார்.

ஜனாதிபதி என்ற முறையில் தாம் என்ன செய்யப் போகிறோம் என்பதை விக்ரமசிங்க ஏற்கனவே தெளிவுபடுத்தியுள்ளார். மே மாதம் பிரதமராக பதவியேற்ற உடனேயே, மிகவும் கடினமான காலம் வரவிருக்கிறது என்றும் தவிர்க்க முடியாமல் மக்கள் புதிய சுமைகளைத் தாங்கிக்கொள்ள வேண்டியிருக்கும் என்றும் எச்சரித்தார். அவர், உழைக்கும் மக்களுக்கு தவிர்க்க முடியாமல் கடுமையான கஷ்டங்களை ஏற்படுத்துகின்ற, சகலதையும் துடைத்துக் கட்டுகின்ற கோரிக்கைகளை முன்வைக்கும் சர்வதேச நாணய நிதியத்துடன் கலந்துரையாடல்களை முன்னெடுத்துள்ளார்.

விக்கிரமசிங்க, எதிர்ப்புகளை நசுக்குவதில் முற்றிலும் ஈவிரக்கமற்றவராக இருப்பதற்கான தனது விருப்பத்தை நிரூபிப்பதன் மூலம் ஆளும் வட்டாரங்களில் ஆதரவை நாடுகிறார். கடந்த வாரம் தற்காலிக ஜனாதிபதியாக பதவியேற்ற உடனேயே, அவர் நாடு முழுவதும் அவசரகால நிலை மற்றும் ஊரடங்கு உத்தரவை விதித்தார். ஒரு தொலைக்காட்சி உரையில் அவர் அரசாங்க-விரோத எதிர்ப்பாளர்களை 'பாசிஸ்டுகள்' என்று முத்திரை குத்தியதுடன் 'பொது ஒழுங்கை மீட்டெடுக்க' தேவையான அனைத்தையும் செய்ய இராணுவத்திற்கு சுதந்திரம் வழங்கினார்.

முதலாளித்துவ அரசியல் ஸ்தாபகத்தின் அனைத்துக் கட்சிகளுக்கும், அவர்களின் போலி-இடது அடிவருடிகளுக்கும், தொழிற்சங்க அதிகாரத்துவத்திற்கும் எதிராக, சோசலிச சமத்துவக் கட்சி தொழிலாள வர்க்கம், இளைஞர்கள் மற்றும் கிராமப்புற ஏழைகளை ஒரு புரட்சிகர சோசலிச வேலைத்திட்டத்திற்காக போராட அழைப்பு விடுக்கிறது. இதுவே அவர்கள் எதிர்கொள்ளும் மகத்தான சமூக நெருக்கடியைத் தீர்ப்பதற்கான வழிமுறையாகும்.

தீவு முழுவதிலும் உள்ள ஒவ்வொரு வேலைத் தளங்களிலும், தொழிற்சாலைகளிலும், பெருந்தோட்டங்களிலும், தொழிலாளர் சுற்றுப்புறங்களிலும் மற்றும் கிராமப்புறங்களிலும், ஸ்தாபகக் கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்களில் இருந்து சுயாதீனமாக, அவர்களது ஜனநாயக மற்றும் சமூக உரிமைகளுக்காகப் போராடுவதற்கு தொழிலாளர்கள் மற்றும் ஏழை விவசாயிகளின் நடவடிக்கைக் குழுக்களை உருவாக்குமாறு நாங்கள் அழைப்பு விடுக்கின்றோம். முதலாளித்துவத்திற்கு எதிரான ஒரு பொதுவான போராட்டத்தில் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவால் தொடங்கப்பட்ட தொழிலாளர் நடவடிக்கை குழுக்களின் சர்வதேச கூட்டணியுடன் இணைக்கப்பட்ட, நடவடிக்கை குழுக்களின் ஒரு வலையமைப்பு நிறுவப்பட வேண்டும்.

சோசலிச சமத்துவக் கட்சி, உழைக்கும் மக்களின் அவசரத் தேவைகளை நேரடியாக அணுகும், ஜனநாயக மற்றும் சோசலிச கோரிக்கைகளை பரிந்துரை செய்கின்றது. நடவடிக்கைக் குழுக்கள் அந்த கோரிக்கைகளைச் சூழ போராட முடியும். பெருவணிகங்கள் மற்றும் வங்கிகளின் தேசியமயமாக்கல், பில்லியனர்களின் சொத்துக்களைக் கைப்பற்றுதல், அனைத்து வெளிநாட்டுக் கடன்களையும் நிராகரித்தல், ஏழை விவசாயிகளின் கடன்களை இரத்து செய்தல், வெளிநாட்டு வர்த்தகத்தின் மீது ஏகபோகத்தை நிறுவுதல் மற்றும் தொழிலாளர்களின் ஊதியத்தை பண வீக்கத்துக்கு ஏற்ப அட்டவணைப்படுத்துதல் ஆகியவை இதில் அடங்கும்.

புதிய ஜனாதிபதிக்காக பாராளுமன்றத்தில் புதன்கிழமை நடைபெறவுள்ள வாக்கெடுப்பு மோசடியை நிராகரிப்பதன் மூலம், எதேச்சதிகார நிறைவேற்று அதிகாரம்கொண்ட ஜனாதிபதி முறையை உடனடியாக நீக்குமாறு கோருகிறோம்.

ஜனநாயக மற்றும் சமூக உரிமைகளுக்காகப் போராடும் தொழிலாள வர்க்கத்தின் ஒரு சுயாதீன இயக்கம், இளைஞர்களையும் கிராமப்புற ஏழைகளையும் அதன் பக்கம் அணிதிரட்டி, சோசலிசக் கொள்கைகளுக்காக அர்ப்பணித்துக் கொண்ட தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்திற்கு அடித்தளத்தை அமைக்கும். இது தெற்காசியாவிலும் சர்வதேச அளவிலும் சோசலிசத்திற்கான பரந்த போராட்டத்தின் ஒரு பகுதியாகும்.

இந்த புரட்சிகர சோசலிச வேலைத்திட்டத்திற்காகப் போராட, சோசலிச சமத்துவக் கட்சியில் சேர முன்வருமாறு தொழிலாளர்கள், இளைஞர்கள், மாணவர்கள் மற்றும் கிராமப்புற ஏழைகளுக்கு நாங்கள் அழைப்பு விடுக்கின்றோம்.

Loading