இலங்கை அரசாங்கம் மறைமுகமாக தேசிய முடக்கத்தை அறிவிக்கிறது! சமூகப் பேரிடரை முடிவுக்குக் கொண்டுவர சோசலிச வேலைத்திட்டத்திற்காகப் போராடுங்கள்

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

இலங்கையின் பொருளாதாரம் 'முற்றிலும் சரிந்துவிட்டது' என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அறிவித்த நான்கு நாட்களுக்குப் பிறகு, அரசாங்கம் நாட்டின் மீது ஒரு மறைமுக முடக்கத்தை விதித்து, எரிபொருள் இல்லாமையால் ஜூலை 10 வரை இரண்டு வாரங்களுக்கு மக்களை வீட்டிலேயே இருக்கச் சொல்கிறது.

ஏப்ரல் 2022, இலங்கையின் கொழும்பில் உள்ள சீமாட்டி ரிட்ஜ்வே மருத்துவமனைக்கு வெளியே, செவிலியர்கள் நடத்திய ஆர்ப்பாட்டம் [Photo by image supplied to WSWS courtesy of nursing staff] [Photo: WSWS]

அத்தியாவசிய சேவைகளைத் தவிர பொது அலுவலகங்கள் மூடப்பட்டுள்ள அதே நேரம், தனியார் துறையினர் 'வீட்டிலிருந்து வேலைசெய்யும்' முறையைப் பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். பத்து இலட்சக் கணக்கான சாதாரண நாள் கூலி தொழிலாளர்கள் மற்றும் சுயதொழில் செய்பவர்கள் நிர்க்கதியில் விடப்பட்டுள்ளனர். முக்கிய நகரங்களில் உள்ள பாடசாலைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. பொது போக்குவரத்து முடங்கியுள்ளது.

இந்த கொடூரமான நடவடிக்கைகள், ஏற்கனவே பெரும் துன்பங்களை எதிர்கொண்டுள்ள உழைக்கும் மக்கள் மீது திணிக்கப்பட்டுள்ளன. ஐக்கிய நாடுகள் சபையின் கூற்றுப்படி, 70 சதவீத மக்கள் ஒரு நாளைக்கு ஒரு வேளை உணவையாவது தவிர்த்து வருகின்றனர். அதே நேரம், பலர் பணவீக்கம் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் கடுமையான பற்றாக்குறைக்கு மத்தியில் பட்டினியால் வாடுகின்றனர். உயிர்காக்கும் மருந்துகள் இல்லாமல், எரிபொருள் நெருக்கடிக்கு மத்தியில் அரசு மருத்துவமனைகள் செயலிழந்து வருகின்றன.

இந்த பிரமாண்டமான சமூக நெருக்கடிக்கு முதலாளித்துவ வர்க்கத்திடமும் அதன் ஜனாதிபதி கோட்டாபய இராஜபக்ஷ மற்றும் பிரதமர் விக்கிரமசிங்க அரசாங்கத்திடமும் தீர்வு கிடையாது. சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.) ஒரு சோசலிச வேலைத்திட்டத்தை செயல்படுத்துவதன் மூலம் தொழிலாள வர்க்கத்தால் மட்டுமே இந்த பாரிய சமூகப் பிரச்சினைகளைத் தீர்க்க முடியும் என்று வலியுறுத்துகிறது.

இலங்கையின் பொருளாதார மற்றும் சமூகக் கொந்தளிப்புக்கு அடிநிலையில் இருப்பது உலக முதலாளித்துவ நெருக்கடியாகும். இது கோவிட்-19 தொற்றுநோயால் தீவிரமாக்கப்பட்டு, உக்ரேனில் ரஷ்யாவிற்கு எதிரான அமெரிக்க-நேட்டோ பினாமி போரினால் பெரிதும் உக்கிரமடைந்துள்ளது.

வெகுஜனங்களுக்கு ஒரு சமூகப் பேரழிவை உருவாக்கிய பின்னர், இப்போது இராஜபக்ஷ-விக்கிரமசிங்க அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படும் தீர்வு என்ன? அது ஒரு ஈவிரக்கமற்ற சிக்கன திட்டமாகும்.

கடந்த வாரம் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் பின்வருமாறு கூறினார்: “இப்போது எமக்கு முன்னால் உள்ள ஒரே பாதுகாப்பான தெரிவு, சர்வதேச நாணய நிதியத்துடன் கலந்துரையாடல்களை நடத்துவதுதான். உண்மையில், இதுவே எங்களுக்கு உள்ள ஒரே தெரிவாகும்.”

கொழும்பில் உள்ள சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள், அரச துறையை பாரியளவில் வெட்டி, அரச நிறுவனங்களை தனியார்மயமாக்குவதோடு அதை வணிகமயமாக்குவதையும் மற்றும் வரிகளை அதிகரிப்பதையுமே முன்மொழிகின்றனர்.

துறைமுகம், மின்சாரம் மற்றும் பெட்ரோலியத் தொழிலாளர்கள் 08 டிசம்பர் 2021 அன்று ஜனாதிபதி செயலகத்தை நோக்கி பேரணியாக சென்றனர் (WSWS Media) [Photo: WSWS]

ஏற்கனவே, 8 இலட்சத்துக்கும் மேற்பட்ட அரச வேலைகள் வெட்டுப் பலகையின் மீது வைக்கப்பட்டுள்ளன. எரிபொருள் கிடைக்காவிட்டாலும், அனைத்து வகையான எரிபொருட்களின் விலையையும் அரசாங்கம் மீண்டும் உயர்த்தியுள்ளது. இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் விநியோக நிலையங்களை கல்டெக்ஸ், ஷெல் மற்றும் எஸ்ஸோ போன்ற பன்னாட்டு நிறுவனங்களுக்கு வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இந்தியன் எண்ணெய் நிறுவனம் ஏற்கனவே தனது சொந்த வலையமைப்பை இயக்கி வருகிறது. நாளாந்தம் நீடித்து வரும் மின்வெட்டுக்கு மத்தியில், மின் கட்டணத்தை 87 வீதத்தால் அதிகரிக்கவுள்ளதாக மின்சார சபை தெரிவித்துள்ளது.

முடிவு என்பது பார்வைக்கு தெரியவே இல்லை என்பதை அறிந்திருந்தும், 'இந்த சிரமங்களையும் கஷ்டங்களையும் குறுகிய காலத்திற்குத் தாங்கிக்கொண்டு தேசத்தைக் கட்டியெழுப்பும் முயற்சியில் பங்களிக்க வேண்டும்' என்று விக்கிரமசிங்க வஞ்சத்தனமான முறையில் மக்களுக்கு அழைப்பு விடுத்தார்.

எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் தீர்வுகள் என்ன?

தாங்க முடியாத நிலைமைகள் மீதான வெகுஜன சீற்றத்தின் மத்தியில், பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி (ஐ.ம.ச.), 'அரசாங்கத்தை மாற்ற இந்த வாரத்தில் இருந்து தெருப் போராட்டங்களைத் தொடங்கப் போவதாக' இந்த வாரம் அறிவித்தது.

இது மக்களை ஏமாற்றுவதாகும். இந்த முதலாளித்துவக் கட்சி, கடந்த ஆண்டு முதல், சர்வதேச நாணய நிதியத்தின் உதவியைப் பெறுவதானது வாழ்க்கை நிலைமைகளில் பாரிய சீரழிவைக் குறிக்கும் என்பதை நன்கு அறிந்திருந்தும், கடந்த ஆண்டு முதல், அந்த உதவியைப் பெறுமாறு அழைப்பு விடுத்து வந்தது. அதன் தலைவர்கள் 2001 முதல் 2004 மற்றும் 2015 முதல் 2019 வரை அதிகாரத்தில் இருந்தபோது சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கனக் கொள்கைகளை நடைமுறைப்படுத்திய விக்கிரமசிங்கவின் வலதுசாரி ஐக்கிய தேசியக் கட்சியின் ஒரு பகுதியாக இருந்தனர்.

ஏனைய முதலாளித்துவக் கட்சியான மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.), இந்த வாரம் 'தெருக்களில் அணிதிரளுங்கள்! அரசாங்கத்தை விரட்டுங்கள்!'' என்று ஒரு தனியான பிரச்சாரத்தை ஆரம்பித்துள்ளது.

எவ்வாறாயினும், ஜே.வி.பி.யின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க, சர்வதேச நிறுவனங்களிடமிருந்து கடன் பெறுவது, கடன் மறுசீரமைப்பு மற்றும் “சில பிரதான துறைகள் தவிர” அரச நிறுவனங்களை தனியார்மயமாக்கலுக்கும் செல்வதைத் தவிர, 'பொருளாதார நெருக்கடிக்கு உடனடி தீர்வு இல்லை' என்று அடிக்கடி கூறிவந்துள்ளார். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன நடவடிக்கைகளை செயல்படுத்துவதே அவர்களின் தீர்வாகும்.

இராஜபக்ஷ ஆட்சியால் அமுல்படுத்தப்பட்ட சர்வதேச நாணய நிதியத்தின் கடுமையான கோரிக்கைகள் எதனையும் ஐ.ம.ச. அல்லது ஜேவிபி எதிர்க்கவில்லை. புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கு தேர்தலை நடத்துவதற்கு முன்னதாக ஒரு குறுகிய காலத்திற்கு இடைக்கால அனைத்துக் கட்சி நிர்வாகம் ஒன்றை அமைக்க இரு கட்சிகளும் அழைப்பு விடுக்கின்றன.

இந்த கட்சிகளிடம் கவனமாக இருக்க வேண்டும்! அரசாங்கத்திற்கு எதிரான வெகுஜன எதிர்ப்பை, முதலாளித்துவ ஆட்சிக்கு முட்டுக் கொடுப்பதற்காக பாதுகாப்பான பாராளுமன்ற வழிகளில் திசை திருப்புவதன் மூலம், அதை ஒடுக்குவதே, அவர்களின் நோக்கம் ஆகும்.

சோசலிச சமத்துவக் கட்சி விளக்கியது போல், தொழிலாளர்கள் மற்றும் ஏழைகளுக்கு முதலாளித்துவ அமைப்பிற்குள் பொருளாதார மற்றும் சமூக நெருக்கடிக்கு தீர்வு கிடையாது அல்லது தேசிய ரீதியான தீர்வும் கிடையாது. எவ்வளவு அழுத்தம் கொடுத்தாலும் அரச மற்றும் ஆளும் வர்க்கத்தின் கொள்கைகள் மாறாப் போவதில்லை. இது கடந்த இரண்டு மாதங்களாக இது கசப்பான முறையில் நிரூபிக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் தொடக்கத்தில் இருந்து, இலங்கையில் இராஜபக்ஷ ஆட்சியை மட்டுமல்ல, முழு அரசியல் ஸ்தாபனத்தையும் உலுக்கிய எதிர்ப்புகளும் வேலைநிறுத்தங்களும் வெடித்தன. ஏப்ரல் 28 மற்றும் மே 6 அன்றும் சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் தொழிலாளர்களை ஒன்றிணைத்து மில்லியன் கணக்கானவர்கள் பொது வேலைநிறுத்தங்களில் கலந்து கொண்டனர். இதை ஒடுக்கப்பட்ட ஒவ்வொரு பிரிவினரும் ஆதரித்தனர்.

ஜனாதிபதி இராஜபக்ஷவையும் அவரது அரசாங்கத்தையும் பதவி விலகுமாறு வெகுஜனங்கள் கோரினர். விலைவாசி உயர்வு, அத்தியாவசியப் பொருட்களின் கடுமையான தட்டுப்பாடு, நீட்டிக்கப்பட்ட மின்வெட்டு ஆகியவற்றை நிறுத்த வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

தொழிலாளர்களின் கொதித்தெழுந்த கோபத்தை திசைதிருப்ப, தொழிற்சங்கங்கள் இந்த வேலைநிறுத்தங்களுக்கு தயக்கத்துடன் அழைப்பு விடுத்தன. அவர்கள் உடனடியாக இந்த வேலைநிறுத்தங்களை, ஐ.ம.ச. மற்றும் ஜேவிபியினதும் கோரிக்கைகளான இடைக்கால ஆட்சி மற்றும் பொதுத் தேர்தல்களுக்கான அழைப்பாக திசை திருப்பியதோடு தொழிலாள வர்க்கத்தின் உண்மையான நலன்களை துரோகத்தனமாக காட்டிக் கொடுத்தனர்.

பிரதான முதலாளித்துவக் கட்சிகளுடன் தொங்கிக் கொண்டிருக்கும் முன்னிலை சோசலிசக் கட்சி உட்பட போலி-இடது குழுக்கள், இந்தப் போராட்டங்களைக் காட்டிக் கொடுப்பதில் தொழிற்சங்கங்களுக்கு ஒத்துழைத்தன.

தொழிலாளர்களுக்கு உள்ள மாற்று வழி என்ன? தொழிலாள வர்க்கம் தனது அவசரத் தேவைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய ஒரு சோசலிச தீர்வை எவ்வாறு செயல்படுத்த முடியும்?

முதலாளித்துவ தாக்குதலுக்கு எதிராக அதன் மகத்தான சமூக சக்தியை அணிதிரட்டக் கூடியவாறு தொழிற்சாலைகள், பெருந்தோட்டங்கள், வேலைத் தளங்கள் மற்றும் தொழிலாள வர்க்க சுற்றுப்புறங்களிலும் தொழிற்சங்கங்கள் மற்றும் அரசியல் ஸ்தாபனங்கள் சாராமல், ஜனநாயக ரீதியாக செயல்படும் நடவடிக்கை குழுக்களின் வலையமைப்பை ஒழுங்கமைக்குமாறு தொழிலாளர்களுக்கு சோசலிச சமத்துவக் கட்சி அழைப்பு விடுக்கிறது. இந்த முயற்சியில் நாங்கள் உதவுவோம் மற்றும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவால் (ICFI) தொடங்கி வைக்கப்பட்ட நடவிடக்கை குழுக்களின் சர்வதேச தொழிலாளர் கூட்டணியுடன் இந்தக் குழுக்களை இணைக்க வேலை செய்வோம்.

நடவடிக்கைக் குழுக்கள் ஒரு அரசியல் போராட்டத்தை நடத்தக்கூடிய பின்வரும் கொள்கைகளை சோசலிச சமத்துவக் கட்சி முன்வைக்கிறது. இவை சர்வதேச நிதி மூலதனம் மற்றும் பெருவணிகத்தின் இலாபங்களை விட மனித தேவைகளுக்கு முன்னுரிமை கொடுப்பதன் மூலம் அரசாங்கம் மற்றும் எதிர்க்கட்சிகளின் ஈவிரக்கமற்ற சிக்கன திட்டத்திற்கு நேரடியாக சவால் விடுகின்றன.

* மக்களின் வாழ்க்கைக்கு இன்றியமையாத அனைத்து அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் வளங்களின் உற்பத்தி மற்றும் விநியோகம் தொழிலாளர்களின் ஜனநாயகக் கட்டுப்பாட்டின் கீழ் முன்னெடுக்கப்பட வேண்டும்! வங்கிகள், பெருநிறுவனங்கள், பெருந்தோட்டங்கள் மற்றும் பிற பிரதான பொருளாதார மையங்களை தேசியமயமாக்க வேண்டும்!

* அனைத்து வெளிநாட்டுக் கடன்களையும் நிராகரி! சர்வதேச வங்கியாளர்கள் மற்றும் நிதி நிறுவனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் சிக்கனக் கோரிக்கைகளை நிராகரி!

* பில்லியனர்கள் மற்றும் பெருநிறுவனங்களின் பிரமாண்ட செல்வத்தை கைப்பற்றுங்கள்!

* ஏழை மற்றும் சிறு விவசாயிகள் மற்றும் சிறு வணிகர்களின் அனைத்து கடன்களையும் இரத்து செய்! விவசாயிகளுக்கு உரம் உட்பட அனைத்து விலை மானியங்களையும் மீண்டும் வழங்க வேண்டும்!

* கண்ணியமான மற்றும் பாதுகாப்பான தொழில் சூழலுடன் அனைவருக்கும் தொழில்களை உத்தரவாதம் செய்! வாழ்க்கைச் செலவுக்கு ஏற்ப ஊதியத்தை திட்டமிடு!

இந்தக் கொள்கைகளுக்காக தொழிலாள வர்க்கம் அதன் நடவடிக்கைக் குழுக்களின் ஊடக முன்னெடுக்கும் உறுதியான போராட்டம், அடிப்படை ஜனநாயக உரிமைகள் பறிக்கப்பட்ட ஏழை விவசாயிகளையும் ஒடுக்கப்பட்ட சமூகங்களையும் அதன் பக்கம் அணிதிரட்டும். சோசலிசக் கொள்கைகளுக்கு அர்ப்பணிப்புள்ள தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்தை அமைப்பதற்கான அடித்தளத்தை அது அமைக்கும்.

2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் கொடிய கோவிட்-19 தொற்றுநோயிலிருந்து மக்களைப் பாதுகாக்க நாட்டை முடக்குவதற்கு மிகவும் தயக்கம் காட்டிய அரசாங்கம், இப்போது நாட்டை திவால்நிலையிலிருந்து காப்பாற்ற மக்களை வீட்டிலேயே இருக்கச் சொல்கிறது. முதலாளித்துவ வர்க்கமும் அதன் அரசாங்கமும் மனித உயிர்களைப் பற்றி கவலைப்படுவதில்லை. அவர்களின் ஒரே கவலை பெருவணிக மற்றும் சர்வதேச முதலீட்டாளர்களின் இலாபங்களைப் பாதுகாப்பது மட்டுமே ஆகும்.

எந்தவொரு எதிர்ப்பையும் நசுக்குவதற்கு இராணுவத்தை அணிதிரட்டுவது மற்றும் பொலிஸ் அரச நடவடிக்கைகளை முன்னெடுப்பது உட்பட, சர்வதேச நாணய நிதியத்தின் கட்டளைகளை சுமத்துவதற்கு ஆளும் வர்க்கம் எந்த இடத்திலும் பின்நிற்கப் போவதில்லை என்று சோசலிச சமத்துவக் கட்சி எச்சரிக்கிறது. சர்வாதிகாரத்துக்காக காத்திருக்கும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையையும், அதனுடன் தொடர்புடைய அனைத்து ஜனநாயக விரோத சட்டங்கள் மற்றும் அவசரகால அதிகாரங்களையும் உடனடியாக நிறுத்துமாறு நாங்கள் அழைப்பு விடுக்கின்றோம்.

இந்த பாரிய நெருக்கடிக்கு மத்தியில் அமெரிக்காவும் இந்தியாவும் ஏன் தமது தூதுவர்களை இலங்கைக்கு அனுப்புகின்றன என்பதை பற்றி தொழிலாளர்களும் இளைஞர்களும் தீவிரமாக சிந்திக்க வேண்டும். வாஷிங்டனும் புதுடில்லியும் இலங்கை மக்களின் அவல நிலை குறித்து அக்கறை கொள்வதாகக் கூறுவது கேலிக்கூத்தானது. பூகோள முதலாளித்துவத்தின் ஆழமான நெருக்கடிக்கு மத்தியில், இலங்கையிலான அரசியல் ஸ்திரமின்மை பிராந்தியத்திலும் சர்வதேச அளவிலும் இன்னும் பரந்த அளவில் புரட்சிகர எழுச்சிகளைத் தூண்டிவிடும் ஆற்றலைக் கொண்டுள்ளது என்பதே அவர்களின் உண்மையான கவலையாகும். அவர்கள் சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன திட்ட நிரலை ஆதரிப்பதுடன், சீனாவுடனான தமது மோதலுடன் முழுமையாக இணையுமாறு கொழும்புக்கு அழுத்தம் கொடுக்க இந்த நெருக்கடியைப் பயன்படுத்த முற்படுகின்றனர்.

ரஷ்யாவிற்கு எதிரான நேட்டோவின் பினாமி போரை நடத்துவதற்காக உக்ரேனுக்கு பல ஆயிரம் கோடிகளை இராணுவ உதவிகளாக வழங்கும் அதே வேளை, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் இலங்கைக்கு வெறும் 2 கோடி அமெரிக்க டொலர்களை உதவியாக வழங்க முன்வந்துள்ளார். ஸ்பெயினில் நடந்த ஜி7 கூட்டம் மற்றும் நேட்டோ உச்சிமாநாடும் ரஷ்யாவுடனான மோதலை விரிவுபடுத்துவதற்கான ஒரு போர் சபை ஆகும். இது சீனாவிற்கு எதிராகவும் இலக்கு வைக்கப்பட்டதுடன் அணு ஆயுத சக்திகளுக்கு இடையேயான உலகளாவிய மோதலை கட்டவிழ்த்துவிட அச்சுறுத்துகிறது.

அமெரிக்கா மற்றும் இந்தியாவின் ஆதரவுடன் சர்வதேச மூலதனம் முன்னெடுக்கும் சதிக்கு எதிரான போராட்டத்தில், இலங்கை தொழிலாள வர்க்கத்தின் கூட்டாளியாக இருப்பது, தமது வாழ்க்கை நிலைமைகளுக்கு எதிரான இதே போன்ற தாக்குதல்களை ஏற்கனவே எதிர்த்துப் போராடிக்கொண்டிருக்கும் சர்வதேச தொழிலாள வர்க்கமே ஆகும்.

வர்க்கப் போராட்டமானது தெற்காசியா, மத்திய கிழக்கு, ஆபிரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்காவில் மட்டுமன்றி, அமெரிக்கா மற்றும் ஐரோப்பா உடப்ட பிரதான ஏகாதிபத்திய மையங்களிலும் தீவிரமடைந்து வருகிறது.

இந்தியாவில் ஃபோர்டு தொழிலாளர்கள், தென்னாப்பிரிக்க சுரங்கத் தொழிலாளர்கள், வெனிசுலாவில் உள்ள உருக்குத் தொழிலாளர்கள், இஸ்ரேலிய ஆசிரியர்கள் மற்றும் பேருந்து ஓட்டுநர்கள், பிரிட்டிஷ் ரயில்வே தொழிலாளர்கள், ஜெர்மனியில் கப்பல்துறை ஊழியர்கள், ஆஸ்திரேலிய செவிலியர்கள் மற்றும் ஆசிரியர்கள், கிரேக்கத்தில் உள்ள சுகாதாரப் பணியாளர்கள், கனடாவில் கியூபெக் சுரங்கத் தொழிலாளர்கள் மற்றும் அமெரிக்காவில் சிஎன்எச் தொழில்துறை தொழிலாளர்களினதும் வேலைநிறுத்தங்கள் ஒரு குறுகிய பட்டியலில் அடங்கும்.

நடவடிக்கை குழுக்களின் சர்வதேச தொழிலாளர் கூட்டணி என்பது உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்களின் இந்தப் போராட்டங்களை ஒருங்கிணைப்பதற்கான வழிமுறையாகும். இலங்கை தொழிலாள வர்க்கம் தங்கள் அடிப்படை சமூக மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதலுக்கு எதிரான பொதுப் போராட்டத்தில், உலகளவில் தங்கள் வர்க்க சகோதர சகோதரிகளுடன் ஐக்கியத்தை கட்டியெழுப்ப நடவடிக்கை குழுக்களின் சர்வதேச தொழிலாளர் கூட்டணியுடன் உடன் தொடர்புகளை ஏற்படுத்த வேண்டும்.

இந்த வேலைத்திட்டத்தைப் பற்றி கலந்துரையாடவும் இந்த அத்தியாவசிய அரசியல் போராட்டத்தில் இணைந்துகொள்ளவும் சோசலிச சமத்துவக் கட்சியும் சமூக சமத்துவத்துக்கான அனைத்துலக இளைஞர் மற்றும் மாணவர் அமைப்பும் ஏற்பாடு செய்துள்ள ஜூலை 3 அன்று மாலை 4 மணிக்கு நடைபெறும் இணையவழி கூட்டத்தில் பங்கு கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் படிக்க

Loading