இலங்கையில் வெகுஜன எழுச்சி சம்பந்தமாக சோ.ச.க. நடத்தும் கூட்டத்துக்கு வலுவான ஆர்வம் அதிகரிக்கின்றது

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

சோசலிச சமத்துவக் கட்சியும் (சோ.ச.க.) சமூக சமத்துவத்துக்கான அனைத்துலக இளைஞர் மற்றும் மாணவர் (IYSSE) அமைப்பும் வரும் ஞாயிற்றுக்கிழமை 'இலங்கையில் வெகுஜன எழுச்சியின் படிப்பினைகள்' என்ற தலைப்பில் நடத்தவுள்ள இணையவழி பொதுக் கூட்டத்திற்கு தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகின்றன. இந்த நிகழ்வு சூம் மூலம் ஒளிபரப்பப்படுவதுடன் கட்சியின் முகநூல் பக்கத்தில் நேரடியாக ஒளிபரப்பப்படும்.

பிரச்சாரகர்கள், 'சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன நடவடிக்கைகளை எதிர்ப்பதற்கு, இலங்கைத் தொழிலாளர்கள் கடந்த இரண்டு மாத வெகுஜன எழுச்சியின் படிப்பினைகளைப் பெற வேண்டும்,” என்ற தலைப்பிலான சோ.ச.க. அறிக்கையின் பிரதிகளை விநியோகித்து வருவதுடன் சமூக ஊடக தளங்கள் மூலம் அதை பரப்புகின்றனர்.

மிகவும் வெடிக்கும் அரசியல் சூழ்நிலையில் இந்த கூட்டம் நடைபெறுகிறது. இந்த வாரம் கொழும்பு அரசாங்கம் அரசாங்க அலுவலகங்கள் மற்றும் பாடசாலைகளை மூடுவதற்கு மேலதிக நடவடிக்கைகளை எடுத்ததுடன் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக தொழிலாளர்களை வரவழைப்பதை மட்டுப்படுத்துமாறு தனியார் முதலாளிகளிடம் கேட்டுக்கொண்டது.

நெக்ஸ்ட் ஆடைத் தொழிற்சாலை தொழிலாளர்கள் தங்கள் போனஸைக் கோரி டிசம்பர் 2020 நடத்திய போராட்டம் [Photo: WSWS Media] [Photo: WSWS]

மக்களை நடமாட்டத்தை கட்டுப்படுத்துமாறு கூறுகின்ற அரசாங்கம் நேற்று எரிபொருள் விலைகள் மற்றும் பஸ் மற்றும் ரயில் கட்டணங்களை அதிகரித்துள்ளது. எரிபொருள், உணவு, மருந்துகள் உட்பட அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கத்திடம் அந்நியச் செலாவணி இல்லை.

கொழும்பு பிணை எடுப்பு கடனைப் பெறுவதற்கு அரசாங்கம் சுமத்த வேண்டிய மேலும் கடுமையான சிக்கன நடவடிக்கைகள் பற்றிய கலந்துரையாடல்களை சர்வதேச நாணய நிதியத்தின் குழுவொன்று நடத்தி வருகின்றது. சிரேஷ்ட அமெரிக்க அதிகாரிகளும் இலங்கை இருந்துகொண்டு, அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தின் பக்கம் திரும்புவதற்கு ஆதரவளித்து வருவதுடன் வாஷிங்டனின் பூகோள அரசியல் நலன்களையும் பலப்படுத்துகின்றனர்.

இலங்கையில் நடந்து வரும் மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் பங்குபற்றும் பாரிய எதிர்ப்புக்கள் மற்றும் வேலைநிறுத்தங்கள், தொழிலாள வர்க்க போராட்டங்களின் சர்வதேச எழுச்சியின் ஒரு பகுதியாகும். எதிர்க்கட்சிகள் மற்றும் போலி-இடது குழுக்களால் ஆதரிக்கப்படும் தொழிற்சங்கங்கள், இந்தப் போராட்டங்கள் ஒரு புரட்சிகர திசையில் வளர்ச்சியடைவதைத் தடுத்துள்ளன.

சோ.ச.க./ஐ.வை.எஸ்.எஸ்.இ. கூட்டம், வரவிருக்கும் போராட்டங்களுக்கு அரசியல்ரீதியாகத் தயாராகும் வகையில் கடந்த இரண்டு மாதங்களின் முக்கியமான படிப்பினைகளைப் பற்றி கலந்துரையாட அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை கூட்டத்திற்கு பதிவு செய்துகொண்டவர்ளின் சில கருத்துக்கள் கீழே வெளியிடப்பட்டுள்ளன.

D.M.D.P ஜெயவர்தன [Photo: WSWS] [Photo: WSWS]

எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக ஏற்படும் சிரமங்களுக்கு மேலாக, ஊழியர் பற்றாக்குறையினால் இரவு பகலாக உழைக்க வேண்டியுள்ளதாக கண்டி வைத்தியசாலையின் சுகாதார உதவியாளர் D.M.D.P ஜயவர்தன விளக்கினார். 'கடந்த வெள்ளிக்கிழமை அத்தியாவசிய சுகாதார சேவைகளுக்கான எரிபொருள் அனுமதிப்பத்திரத்துடன் நான் ஒரு நிரப்பு நிலையத்திற்குச் சென்றிருந்தாலும், வரிசையில் ஆறு மணி நேரம் காத்திருந்த பிறகு எரிபொருள் எதுவும் இல்லாமல் வீடு திரும்ப வேண்டியிருந்தது.'

இந்த இக்கட்டான சூழ்நிலை இருந்தபோதிலும், “தொழிற்சங்கங்கள் மௌனம் காக்கின்றன. தொழிலாளர்களுக்குப் பிரச்சினை இல்லை என்பது போல! அரசாங்கம் சொல்வதை அவர்கள் ஏற்றுக்கொள்கிறார்கள். தொழிலாளர்கள் தியாகம் செய்ய வேண்டும், அதுதான் அவர்களின் அமைதிக்குக் காரணம். மேலதிக நேர ஊதியத்தை அரசாங்கம் மட்டுப்படுத்தியதால் நாங்கள் மிகவும் சிரமத்தில் விழுந்துள்ளோம். இந்த சம்பளத்தில் என்னால் வாழ முடியாததால், ஓய்வு நேரத்தில் நெல் பயிர்ச் செய்கிறேன்” என அவர் கூறினார்.

ஞாயிற்றுக்கிழமை கூட்டத்தில் பங்கேற்குமாறு மற்ற தொழிலாளர்களுக்கும் அவர் அழைப்பு விடுத்தார். “கண்டி சுகாதார ஊழியர்களின் நடவடிக்கைக் குழுவில் நடைபெற்ற கலந்துரையாடல்களில், இந்தப் பிரச்சினைகளுக்கு பாராளுமன்றத்தில் மாற்றங்களை ஏற்படுத்துவதன் ஊடகவோ அல்லது தேர்தல் மூலமாகவோ தீர்வு காண முடியாது என்பதை உணர்ந்தேன். தொழிலாளர்கள் ஒரு பரந்த குழுவினர் அந்த புரிதலுக்கு வந்து நடவடிக்கை குழுக்களை உருவாக்குவதற்கு தீவிரமாக பங்களிக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன்.

கொழும்பில் உள்ள ஒரு பாடசாலை உப அதிபர் நிரஞ்சலா கூறியதாவது: எரிபொருள் நெருக்கடி காரணமாக அரசாங்கம் எதேச்சதிகாரமாக பாடசாலைகளை மூடுகிறது. மாணவர்களின் கல்விக்கு ஏற்படும் அழிவை இனியும் தாங்க முடியாது. அவர்களில் பலருக்கு எதிர்காலம் பற்றிய நம்பிக்கை இல்லை. இந்த நெருக்கடிக்கு அவர்கள் யாரும் காரணமில்லை. ஆனால் அதற்கான விலையை அவர்கள் ஏன் கொடுக்க வேண்டும்? இந்த நிலையை இனியும் பொறுத்துக்கொள்ள முடியாது.

“இந்த நெருக்கடியின் மத்தியில் இலங்கையில் உள்ள பெரிய நிறுவனங்கள் எவ்வாறு இலாபம் ஈட்டியுள்ளன என்பது பற்றிய WSWS கட்டுரையைப் படித்தேன். தொகையைப் பார்க்கும்போது நான் மிகவும் கோபமாக உணர்ந்தேன். துன்பப்படும் மக்களின் பிரச்சனைகளை தீர்க்க அந்த செல்வத்தை பயன்படுத்தலாம். இந்த நிலைமைக்கு இலங்கையில் உள்ள முதலாளித்துவ வர்க்கம் மட்டும் பொறுப்பேற்க வேண்டியதில்லை என்பது மிக முக்கியமான விடயமாகும். உலகம் முழுவதிலும் உள்ள முதலாளிகளின் சொத்துக் குவிப்புதான் உலக அளவில் சமத்துவமின்மையை உருவாக்கியுள்ளது.

“[ஜனாதிபதி] கோட்டாபய இராஜபக்ஷவை வீட்டுக்குச் செல்லுமாறு கோரி அண்மையில் நடைபெற்ற போராட்டத்தின் போது பலருக்கு இந்த புரிதல் இருக்கவில்லை. அந்த புரிதல் இல்லாமல் தொழிலாளர்கள் எதிர்கால போராட்டங்களில் என்ன வேலைத்திட்டத்திற்காக போராட வேண்டும் என்பதை தீர்மானிக்க முடியாது. இந்த காலகட்டத்தில் முதலாளித்துவ இலாபமும் மனித தேவைகளும் ஒன்றாக இணைந்து இருப்பதற்கு சாத்தியம் இல்லை. மனித நலன்களைப் பாதுகாக்க முதலாளித்துவ அமைப்பு முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும்.

'நான் இதற்கு முன்பு சோ.ச.க. கூட்டங்களில் கலந்து கொண்டுள்ளேன். இந்தக் கூட்டத்தில் இந்த முக்கியமான விஷயங்கள் இன்னும் விரிவாக கலந்துரையாடப்படும் என்று நான் நம்புகிறேன்.”

சரத், கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் வேலை செய்யும் ஒரு இளம் ஆடைத் தொழிலாளி ஆவார். அவர் ஏப்ரல் 28 மற்றும் மே 6 பொது வேலைநிறுத்தங்களில் பங்கேற்றிருந்தார்.

கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலய தொழிலாளர்கள் 28 ஏப்ரல் 2022 அன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் [Photo: WSWS media] [Photo: WSWS]

“கட்டுநாயக்க வலயத்திலுள்ள தொழிற்சங்கங்கள் போராட்டங்களுக்கு அழைப்பு விடுக்கவில்லை. நாங்கள் திடீரென்று தெருக்களுக்கு வர முடியாது, ஏனெனில் தொழிலாளர்கள் வேலை இழப்பதால் குடும்பங்களைப் பாதிக்கலாம். ஆனால் இந்த முறை தொழிலாளர்கள் ஒற்றுமையாக வெளியே வந்தனர்.

சுதந்திர வர்த்தக வலயம் மற்றும் பொதுச் சேவைகள் தொழிற்சங்கம் ஜனவரி மாதம் ஆடைத் தொழிலாளர்கள் நடத்திய 10 நாள் ஊதிய வேலைநிறுத்தத்தை காட்டிக் கொடுத்தது, அதன் பிறகு தொழிலாளர்கள் தொழிற்சங்கத்தை விட்டு வெளியேறினர்.

'இந்த முதலாளித்துவ அரசியல்வாதிகள் அனைவரையும் நிராகரிப்பதற்கான போராட்டத்தை முன்னெடுப்பதற்கு நாம் நம்மை ஒழுங்கமைத்துக்கொள்ள வேண்டும் என்று நான் நம்புகிறேன்,” என்று சரத் கூறினார்.

ஒவ்வொரு தொழிற்சாலையிலும், தொழிலாள வர்க்கத்தின் சுற்றுப்புறத்திலும், புதிய அமைப்பு வடிவங்களாக நடவடிக்கை குழுக்களை உருவாக்குவதன் அவசியத்தை, பிரச்சாரகர்கள் சரத்துடன் கலந்துரையாடினர். சுதந்திர வர்த்தக வலயத் தொழிலாளர்கள் பன்னாட்டு நிறுவனங்களால் நேரடியாகச் சுரண்டப்படுவதால், தொழிலாளர்களின் சர்வதேச ஒற்றுமைக்கான போராட்டத்தின் முக்கியத்துவம் குறித்து கலந்துரையாடல் சென்றது.

அதற்கு பதிலளித்த சரத், “இதுபோன்ற குழுக்களை அமைப்பது நல்லது. இந்த அரசாங்கங்களை அகற்றுவதற்கான வழிகளை நாம் தேட வேண்டும். அத்தகைய நடவடிக்கைக் குழுவிற்கு எனது தொழிற்சாலையில் உள்ள நண்பர்களை என்னால் ஏற்பாடு செய்ய முடியும்,” என்றார்.

நாட்டில் அபிவிருத்தியடைந்து வரும் நிலைமைகளால் தொழிற்சாலைகள் மூடப்படலாம் என்று அவர் எச்சரித்தார். 'எரிபொருள், உணவுகள் விநியோகம் அனைத்தும் சரிந்துவிட்டதை நாங்கள் காண்கிறோம். இலங்கையிலும் பிற நாடுகளிலும் உள்ள மற்ற தொழிலாளர்களுடன் ஒரு கூட்டணியை உருவாக்குவது சாத்தியமானதாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்.

கடுநாயக சுதந்திர வர்த்தக வலயத்தின் இளம் தொழிலாளியான நுவந்த, ஏப்ரல் 28 மற்றும் மே 6 அன்று நடந்த பொது வேலைநிறுத்தங்களில் இணைந்திருந்தார். இலங்கையில் மக்கள் ஏற்கனவே பட்டினியால் அவதிப்பட்டு வருவதாக அவர் கூறினார். “எனது சம்பளம் முழுவதையும் சாப்பாட்டுக்கு செலவழிக்க வேண்டும். இறுதியாக எதுவும் மிச்சமில்லை. ஒரு காய்கறி கூட வாங்க முடியாது. நாங்கள் பணத்தை சேமிக்க விரும்பினால், சாப்பாட்டைத் தவிர்க்க வேண்டும்.

மே 6 பொது வேலைநிறுத்தத்திற்குப் பின்னர் சுதந்திர வர்த்தக வலயத்தைச் சுற்றி இராணுவத்தை நிலைநிறுத்தியதற்காக அரசாங்கத்தை நுவந்த கண்டனம் செய்தார். “தொழிலாளர்கள் போராட்டத்திற்கு வருவதைக் கண்டு அரசாங்கம் அஞ்சுகிறது. அரசாங்கம் தொழிலாளர்களைத் தடுக்க எவ்வளவு கடினமாக முயற்சித்தாலும், அவர்கள் எதிர்கொள்ளும் நிலைமைகள் அவர்களைப் போராடுவதற்கே தள்ளும்.

“தொழிற்சங்கங்களின் அழைப்பு எதுவுமின்றி நாங்கள் தானாக முன்வந்து அந்த வேலைநிறுத்தங்களில் கலந்துகொண்டோம். சில மாற்றம் ஏற்படும் என்று நாங்கள் எதிர்பார்த்தோம் ஆனால் எங்கள் போராட்டம் எந்த பலனையும் தரவில்லை.”

சோசலிசக் கொள்கைகளின் அவசியம் ஏன் என்பதை நுவந்த அறிய விரும்பினார். தொழிற்சங்கங்களின் பங்கு, உலகளாவிய முதலாளித்துவ நெருக்கடி பற்றிய கலந்துரையாடலுக்கு அந்த கேள்வி வழிவகுத்தது. இந்த பிரச்சினைகள் ஞாயிற்றுக்கிழமை பொதுக் கூட்டத்தில் ஆராயப்படும்.

சந்துனி [Photo: WSWS] [Photo: WSWS]

களனிப் பல்கலைக்கழகத்தின் இறுதியாண்டு நாடகம் மற்றும் அரங்கேற்றல் கலை மாணவியான சந்துனிசோமரத்ன \ தெரிவித்ததாவது: “இந்தப் பொருளாதார நெருக்கடியானது எமது எதிர்காலத்தை கடுமையாகப் பாதிக்கிறது. நான் அரசுப் பல்கலைக்கழகத்தில் வெளிவாரி பட்டப்படிப்பு படித்து வருகிறேன். பரீட்சைக் கட்டணம் பல மடங்கு உயர்ந்துள்ளது. வகுப்பு கட்டணம் இருமடங்காக உயர்ந்துள்ளது. கட்டணம் செலுத்த என் நகையை அடகு வைக்க வேண்டியிருந்தது. எனது நண்பர்கள் பலர் இதே முறையில் கல்வியைத் தொடர்கின்றனர். ஆனால் வேலை வாய்ப்புகள் இல்லாததால், நாம் அனைவரும் எதிர்காலத்தைப் பற்றி நிச்சயமற்றவர்களாக உணர்கிறோம்.

“தொழிலாளர்கள் போராட்டத்தில் இறங்குவதைப் பார்ப்பது உற்சாகமாக இருந்தது. தொழிலாளி வர்க்கத்தால் இந்நிலையை மாற்ற முடியும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். சர்வதேச நாணய நிநிதிய நடவடிக்கைகளை செயல்படுத்துவது என்பது மக்களை கெட்டதில் இருந்து மோசமான நிலைக்குள் இழுத்துத் தள்ளுவதாகும்.

அதிக அழுத்தத்தை பிரயோகிப்பது அரசாங்கத்தை மாற்றும் என்று கூறி, அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்களை வேண்டுமென்றே குழப்பியதற்காக எதிர்க்கட்சியான மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) மற்றும் போலி-இடது முன்னிலை சோசலிஸ்ட் கட்சியை அந்த மாணவி விமர்சித்தார்.

“இலங்கையில் ஏற்பட்டுள்ள நெருக்கடியைத் தீர்ப்பதில் வெளிநாட்டுக் கடனை நிராகரிப்பது ஒரு முக்கியமான நடவடிக்கையாகும். உற்பத்தி மற்றும் விநியோகம் பெரிய வணிகர்களின் கைகளில் இருந்து அபகரிக்கப்பட வேண்டும் என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். சர்வதேச தொழிலாள வர்க்கத்துடன் ஐக்கியப்படுவதைத் தவிர அத்தகைய நடவடிக்கைகளை எவ்வாறு செயல்படுத்த முடியும்? அரசுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபடும் ஒவ்வொருவரும் தங்களது சொந்தப் போராட்டத்தின் வரம்புகளை அடையாளம் கண்டுகொள்ள வேண்டும்” என அவர் கூறினார்.

Loading