அரசாங்க தாக்குதல்களுக்கு மத்தியில் பிரிட்டிஷ் இரயில் வேலைநிறுத்தம் வலுவாக உள்ளது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

இரயில் தொழிலாளர்களுக்கு - நாங்கள் உங்கள் கருத்தை கேட்க விரும்புகிறோம். வேலைநிறுத்தம் பற்றிய அறிவிப்புகள், உங்கள் நிபந்தனைகள் பற்றிய விளக்கங்கள் மற்றும் நடத்தப்பட வேண்டிய போராட்டம் குறித்த உங்கள் கருத்துகளுடன் எங்களைத் தொடர்பு கொள்ளவும்.

செவ்வாய்கிழமை இரயில், கடல்சார் மற்றும் போக்குவரத்து (RMT) தொழிற்சங்கத்தால் அழைப்பு விடுக்கப்பட்ட பிரிட்டிஷ் தேசிய இரயில் வேலைநிறுத்தங்களின் தொடக்கமாக இருந்தது. வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் மேலதிக வேலைநிறுத்த நாட்கள் திட்டமிடப்பட்டுள்ளதுடன் மற்றும் வாரம் முழுவதும் இரயில் சேவைகள் பெரிதும் பாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இலண்டன் நிலத்தடி போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்த நடவடிக்கையை மேற்கொண்டனர். அவர்கள் தலைநகரின் பெரும்பாலான நிலத்தடி பாதைகளை மூடிவிட்டு மற்றைய சேவையை கடுமையாக கட்டுப்படுத்தினர்.

உலக சோசலிச வலைத் தளம் நாள் முழுவதும் நேரடி வேலைநிறுத்த புதிய செய்திகளை வழங்கியது.

லண்டன் பிரிட்ஜ் நிலையத்தில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலத்தடி தொழிலாளர்கள் [Photo: WSWS] [Photo: WSWS]

வேலைநிறுத்த இடங்களில் உள்ள மனநிலை தீர்மானகரமானதாக உள்ளது. வாழ்க்கைச் செலவு நெருக்கடி, கடுமையான கூடுதல் நேரம், பணியாளர்கள் பற்றாக்குறை மற்றும் நிதி வெட்டுக்கள் போன்றவற்றால் வாழ முடியாத வாழ்க்கையை தொழிலாளர்கள் விவரித்தனர். இரயில்வேயில் வேலைகள், ஊதியங்கள், விதிமுறைகள் மற்றும் வேலைநிலைமைகள் மீது காட்டுமிராண்டித்தனமான மற்றும் ஆபத்தான தாக்குதலுக்கான திட்டங்களை அவர்கள் விபரித்தனர்.

பல வேலைநிறுத்தக்காரர்கள் போராட்டம் இப்போதுதான் தொடங்கியுள்ளது என்பதை உணர்ந்து, வேலைநிறுத்த நடவடிக்கைக்கு அழுத்தம் கொடுக்கும் தொழிலாளர்களின் மற்ற பிரிவுகளை மேற்கோள் காட்டி, ஒரு பொது வேலைநிறுத்தம் உட்பட பரந்த நடவடிக்கைக்காக அழைப்புவிடுத்தனர். #RailStrikes நாள் முழுவதும் ட்விட்டரில் அதிகூடியவர்கள் பதிந்த ஹேஷ்டேக்காக இருந்தது, மேலும் ஆயிரக்கணக்கானோர் #GeneralStrike மற்றும் #GeneralStrikeNow ஆகியவற்றை பயன்படுத்தினர்.

இந்த உணர்வு ஒரு கன்சர்வேடிவ் அரசாங்கத்தின் எந்த எதிர்ப்பையும் முறியடிக்கும் நோக்கத்துடன் தொழிலாள வர்க்கத்தை மோதலுக்கு கொண்டுவருகின்றது. டோரிகள் கடந்த வாரங்களில் விடுக்கப்பட்ட ஒவ்வொரு அச்சுறுத்தலையும் திரும்பத் திரும்பக்கூறி, அது இறுதிவரை போராட்டமாக இருக்கும் என்று வலியுறுத்தினர்.

போக்குவரத்துச் செயலர் கிராண்ட் ஷாப்ஸ் BBC மற்றும் Sky News ஆகியவற்றுக்கு வழங்கிய நேர்காணலில், மோதலை முடிவுக்கு கொண்டுவர பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்ற RMT மற்றும் தொழிற் கட்சியின் புகார்களை நிராகரித்தார்.

டோனி பிளேயர் மற்றும் கோர்டன் பிரவுனின் தொழிற் கட்சி அரசாங்கங்கள் வேலைநிறுத்தம் செய்த 'தீயணைப்பு வீரர்கள் மற்றும் தபால் அலுவலக ஊழியர்களுடன்' ஒருபோதும் பேச்சுவார்த்தை நடத்தவில்லை. அரசாங்கம் அதற்குப் பதிலாக வேலைநிறுத்தங்களின் போது முகவர்களூடாக வரும் ஊழியர்களை கருங்காலிகளாக வேலைக்கு அமர்த்துவதற்கு நிறுவனங்களை அனுமதிக்கும் வகையில் சட்டத்தை மாற்றும். வேலைநிறுத்தங்களின் போது குறைந்தபட்ச சேவை சட்டத்தை இயற்றுவதில் அரசாங்கம் இன்னும் உறுதியாக உள்ளது, இதனால் தொழில்துறை நடவடிக்கை பயனற்றதாக உள்ளது.

மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு RMT இன் முன்மொழிவுக்கு அனுதாபம் தெரிவிக்கும் வகையில், Sky News இன் கே பேர்லி, ஷாப்ஸிடம் பின்வருமாறு கேட்டார், “இன்னும் இரண்டு வேலைநிறுத்தங்களைச் செய்யாமல் இருக்க, இந்த வாரம் தொழிற்சங்கங்களுடன் நீங்கள் ஏன் உங்கள் சட்டைக்கைகளைச் சுருட்டிக்கொண்டு மேசைக்கு வரக்கூடாது? ”

அவரது ஆதரவுக் குரல்கள், இரயில்வே வேலைநிறுத்தங்கள் தொழிலாள வர்க்கத்தில் ஒரு பரந்த இயக்கத்தை தூண்டிவிடக்கூடும் என்ற ஆளும் வட்டங்களில் உள்ள சிலரின் அச்சத்தையும், RMTயை ஒரு சளைக்காத எதிர்ப்பாளராக சித்தரிப்பது போலியானது என்ற அவர்களின் புரிதலையும் சுட்டிக்காட்டுகிறது.

RMT மூத்த உதவிப் பொதுச் செயலாளரான எடி டெம்ப்சே இடமிருந்து இதற்கான உறுதிப்படுத்தல் வந்தது. அவர் Independent இடம், “அரசாங்கம் சொல்வதில் பல பைத்தியக்காரத்தனமான மிகைப்படுத்தல்களும், ஆத்திரமூட்டும் கருத்துக்களுமாகும். அவர்கள் ஒரு தீர்வை விரும்பவில்லை… அந்த தீர்வை நாங்கள் பெற முடிந்தால் இந்த வேலைநிறுத்தங்கள் வாபஸ் பெறப்படும். பின்னர் அவர் Network Rail இன் நிர்வாகம் மற்றும் இரயில் இயக்குனர்கள் மீது பாராட்டுகளை குவித்தார். அவர்கள் 'பொறுப்புடனும்' 'சரியாகவும்' நடந்துகொண்டதாகக் கூறினார்.

Network Rail இன் தலைமை நிர்வாகி ஆண்ட்ரூ ஹெய்ன்ஸ், Times Radio இடம், நேற்றிரவு RMT உடன் 'சகாக்களுக்கான ஒரு நம்பத்தகுந்த பணியிடச் சீர்திருத்தங்களுடனும் மற்றும் வரி செலுத்துவோருக்கு மதிப்பளிக்கப்படும் ஒரு ஒப்பந்தத்தை எட்டுவதற்கு மிக அருகில் வந்ததாகக் கூறினார். நாங்கள் ஒரு நூலிழையில் அருகாமையில் இருந்தோம்' என்றார்.

டோரிகளின் உறுதியற்ற தன்மை மட்டுமே RMT இன் ஒரு அழுகிய காட்டிக்கொடுப்பைத் தடுத்தது. பிரதமர் போரிஸ் ஜோன்சன் இரயில் தொழிலாளர்களை தோற்கடிக்க தனது சொந்த உறுதியை மீண்டும் வலியுறுத்தினார். ஒரு அமைச்சரவைக் கூட்டத்தில், அவர் உக்ரேனியப் போர் 'சோர்வுக்கு' எதிராக எச்சரித்து, இங்கிலாந்து 'உறுதியாக' இருக்க வேண்டும் என்றும் நிதி கட்டுப்பாடு பேணப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார். இதன் பொருள் இரயில் துறையில் இன்னும் பரந்த அளவில் வெட்டுக்கள் தேவை என்பதாகும். 'Network Rail மற்றும் இரயில் நிறுவனங்களுடன் உட்கார்ந்து அதைத் தொடர தொழிற்சங்க தலைவர்கள் எங்களுக்குத் தேவை' என்றார்.

'தனது பாதையில் இருக்க நாடு தயாராக வேண்டும்... கடினமான விஷயங்களைச் செய்யவே இந்த அரசாங்கம் தேர்ந்தெடுக்கப்பட்டது…' என்றார்.

பெரும்பாலான பிரிட்டிஷ் பத்திரிகைகள் பெரும்பகுதி இரயில் தொழிலாளர்களை தோற்கடித்து பரந்த தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு உதாரணமாக காட்டும் ஜோன்சனின் உந்துதலுக்கு ஆதரவாக இருந்தன. 'இரயில் முதலாளிகள் மற்றும் அமைச்சர்கள் சரணடைந்தால், அது சந்தேகத்திற்கு இடமின்றி பொதுத்துறை முழுவதும் இதேபோன்ற ஊதியக் கோரிக்கைகளைத் தூண்டும்...' என்று Daily Mail எழுதியது.

Telegraph அரச அடக்குமுறைக்கு அழைப்பு விடுத்து: “நாடாளுமன்றத்தில் 80 பெரும்பான்மையை கொண்டிருக்கும் அரசாங்கம் நாளை கூட அவசரகாலச் சட்டங்களை அறிமுகப்படுத்தலாம். வேலைநிறுத்தம் செய்பவர்கள் தங்கள் இழப்பை மேலதிக நேரங்கள் மூலம் ஈடுசெய்வதையும் இது நிறுத்த வேண்டும். இறுக்கமாக இருக்க வேண்டிய நேரம் இது' என்று எழுதியது.

Times “அரசாங்கம் உறுதியாக நிற்க வேண்டும்,” மற்றும் பிரதம மந்திரி போரிஸ் ஜோன்சன் “அதற்கு என்ன வேண்டுமானாலும் செய்யத் தயாராக இருப்பதாகக் காட்டினார்” என்று வலியுறுத்தியது.

தொழிற் கட்சி இரயில் வேலைநிறுத்தத்திற்கு அதன் எதிர்ப்பை உறுதி செய்வதில் அன்றைய தினத்தைக் கழித்தது. அதே நேரத்தில் டோரிகள் அதைத் தூண்டிவிட்டதாகவும், தொழிற்சங்கங்களுடன் இணைந்து அதைத் திரும்பப் பெற முடியும் என்றும் புகார் கூறினர். இந்த நிலைப்பாட்டை சேர் கீர் ஸ்டார்மரின் கீழ் வலதுசாரிகளும், கோர்பின்வாத இடதுகளின் எச்சங்களும் பகிர்ந்துகொண்டன.

ஒரு சில தொழிற் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும் மற்றும் இப்போது சுயேச்சையாக இருக்கும் முன்னாள் தலைவர் ஜெரமி கோர்பினும், விலகி இருக்குமாறு நேற்று ஸ்டார்மரின் அறிவுறுத்தலுக்குப் பின்னர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் கலந்துகொண்டனர். கலந்துகொண்ட பெரும்பாலானவர்களில் கோர்பினின் குறைந்து வரும் கூட்டாளிகளான முன்னாள் நிழல் உள்துறைச் செயலர் டயான் அபோட், சோசலிச பிரச்சாரக் குழுத் தலைவர் ரிச்சர்ட் பேர்கன், முன்னாள் நிழல் அதிபர் ஜோன் மெக்டோனல் மற்றும் முன்னாள் தேசிய சுரங்கத் தொழிலாளர் சங்கத் தலைவர் இயன் லாவரி ஆகியோர் அடங்குவர். ஆனால், ஸ்கொட்லாந்து தொழிற் கட்சி தலைவர் அனஸ் சர்வார் உட்பட மற்றவர்கள், தொழிலாள வர்க்கத்தின் மத்தியில் இன்னமும் தொழிற் கட்சி அனுபவிக்கும் ஆதரவை ஸ்டார்மர் அழித்துவிட்டார் என்ற பொதுவான கவலையுடன் கலந்து கொண்டனர்.

RMT பொதுச்செயலாளர் மிக் லிஞ்ச், ஸ்டார்மர் மற்றும் 'அவரது குழுவிடம்' 'எதிர்ப்பின் அலையை' வழிநடத்தி வேலைநிறுத்தங்களை ஆதரிக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். Unite பொதுச் செயலாளர் ஷரோன் கிரஹாம் கூறினார், 'தொழிற் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள், வார்த்தைகளாலும், செயல்களாலும் தொழிலாளர்களைப் பாதுகாப்பார்கள் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்... நீங்கள் யாருடைய பக்கம் இருக்கிறீர்கள் என்பதைத் தீர்மானிக்க வேண்டிய நேரம் இது. தொழிலாளிகளின் பக்கமா அல்லது மோசமான முதலாளிகள் பக்கமா?”

ஜூன் 18, 2022 அன்று லண்டனில் நடைபெற்ற தொழிற்சங்க காங்கிரஸ் பேரணியில் RMT தலைவர் மிக் லிஞ்ச் பேசுகிறார் (WSWS Media)

தொழிற்சங்கங்களிடமிருந்தோ, தொழிற் கட்சி 'இடதுகளிடமிருந்தோ அல்லது பிளேயர் வாத வலதுகள் சிலவற்றில் இருந்தோ இவ்வாறான வார்த்தையாடல்கள் வந்தாலும், இவை அனைத்தும் பேச்சுவார்த்தை மூலம் விற்கப்படுவதற்கான அழைப்புகளின் கசப்பான மாத்திரைக்கு, இனிப்பூட்ட மட்டுமே உதவும்.

இரயில் வேலைநிறுத்தத்தில் உள்ள மற்றும் ஒவ்வொரு நடந்துகொண்டிருக்கும் அல்லது அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருக்கும் தொழில்துறைப் போராட்டத்தில் உள்ள மூன்று கட்சிகள் இவைதான்: ஜோன்சன் தலைமையிலான ஆளும் வர்க்கத்தின் பெரும்பான்மைப் பிரிவு வேலைநிறுத்தங்களை மிருகத்தனமான சக்தியுடன் நசுக்க முயல்கிறது; தொழிற்சங்கங்கள் மற்றும் ஆளும் வர்க்கத்தில் உள்ள அவர்களின் ஆதரவாளர்கள் அமைதியான சரணடைதலுக்கு வாதிடுகின்றனர்; மற்றும் தொழிலாள வர்க்கம் தனது நலன்களுக்காக போராடுவதற்கான வழியைத் தேடுகிறது.

தொழிலாளர்கள் இரண்டு முனைகளில் போரை எதிர்கொள்கின்றனர். ஜோன்சனின் டோரிகள் அரசு மற்றும் செய்தி ஊடகத்தின் முழு எந்திரத்தையும், தொழிற்சங்கங்கள் தங்கள் அதிகாரத்துவ அமைப்பு மற்றும் தொழிற் கட்சியில் உள்ள நண்பர்களையும் அழைக்க முடியும். இந்தத் தடைகளை முறியடிக்க, தொழிலாள வர்க்கத்திற்கு அதன் சொந்த அமைப்புகளும் அதன் சொந்த வேலைத்திட்டமும் தேவை. ஒவ்வொரு பணியிடத்திலும், பணவீக்கத்தைக் குறைக்கும் ஊதிய உயர்வுகளுக்காக, வேலைகள், ஓய்வூதியங்கள் மற்றும் நிலைமைகள் மீதான அனைத்துத் தாக்குதல்களுக்கும் முற்றுப்புள்ளி வைப்பதற்காகவும் மற்றும் இந்த வெறுக்கப்பட்ட அரசாங்கத்தை வீழ்த்துவதற்கும் போராடும் ஒவ்வொரு பணியிடத்திலும் சாமானிய தொழிலாளர்களின் குழுக்களை உருவாக்க வேண்டும்.

சோசலிச சமத்துவக் கட்சி, சர்வதேச தொழிலாளர்களின் சாமானிய தொழிலாளர்களின் குழுக்களின் உதவியுடன் இந்தப் போராட்டத்தை முன்னெடுப்பதற்கு இன்றே எங்களைத் தொடர்புகொள்ளுமாறு தொழிலாளர்களுக்கு அழைப்பு விடுக்கிறது. இது தொடர்பான உடனடி தகவல்களுக்காகவும் மற்றும் முக்கிய வாசிப்புகளுக்கு எங்கள் இரயில் வேலைநிறுத்தப் பக்கத்தைப் பார்வையிடவும்.

Loading