சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன நடவடிக்கைகளை எதிர்ப்பதற்கு, இலங்கைத் தொழிலாளர்கள் கடந்த இரண்டு மாத வெகுஜன எழுச்சியின் படிப்பினைகளைப் பெற வேண்டும்

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

ஏப்ரல் தொடக்கத்தில் இருந்து, பூகோள முதலாளித்துவ நெருக்கடியால் உருவாக்கப்பட்ட சகிக்க முடியாத வாழ்க்கை நிலைமைகளுக்கு எதிராக தொழிலாளர்கள், கிராமப்புற உழைப்பாளிகள் மற்றும் இளைஞர்களும் நடத்திவரும் கிளர்ச்சியால், வெகுஜன எதிர்ப்புகள், ஆர்ப்பாட்டங்கள் மற்றும் வேலைநிறுத்தங்களால் இலங்கை ஆட்டங்கண்டுப் போயுள்ளது.

28 ஏப்ரல் 2022 வியாழன், இலங்கையின் கொழும்பில் ஜனாதிபதி கோட்டாபய இராஜபக்ஷவை பதவி விலகக் கோரி நடந்த வேலைநிறுத்தம். [AP Photo/Eranga Jayawardena] [AP Photo/Eranga Jayawardena]

இந்த வெகுஜன எழுச்சியில், தொழிலாள வர்க்கம் அதிகளவில் முன்நிலைக்கு வந்து, அதன் மகத்தான சமூக சக்தியை நிரூபித்திருக்கிறது. ஏப்ரல் 28 மற்றும் மே 6 நடந்த ஒரு நாள் பொது வேலைநிறுத்தங்களில் சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம்களுமாக மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் பங்கு கொண்டனர். இதன் மூலம் இலங்கை ஆளும் வர்க்கத்தால் தசாப்த காலங்களாக திட்டமிட்டு உருவாக்கி வந்த இனவாத பிளவுகளை அவர்கள் தகர்த்துள்ளனர்.

ஜனாதிபதி கோட்டாபய இராஜபக்ஷவும் அவரது அரசாங்கமும் அதிகாரத்திலிருந்து விலக வேண்டும் மற்றும் முன்னெப்போதும் இல்லாத விலைவாசி உயர்வு, அத்தியாவசியப் பொருட்களின் தட்டுப்பாடு மற்றும் மின்வெட்டு போன்றவற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்க அவசர நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையால் இந்த வெகுஜன எழுச்சி வலுப்பெற்றுள்ளது.

புறநிலையாக இந்த இயக்கம் இராஜபக்ஷவிற்கும் அவரது அரசாங்கத்திற்கும் மட்டுமல்ல, முழு அரசியல் ஸ்தாபனத்திற்கும் அவர்களுக்கு சம்பளம் கொடுக்கும் பெருவணிகத்திற்கும் மற்றும் உலக மூலதனத்திற்கும் விடுக்கப்பட்ட ஒரு சவாலாகும். இந்த பெரும் வணிகங்களும் சர்வதேச மூலதனமும், முதலாளித்துவத்தின் நெருக்கடிக்கு உழைக்கும் மக்கள் விலை கொடுக்க வேண்டுமென்பதில் விடாப்பிடியாக உள்ளன.

இந்த வெகுஜன எழுச்சி அரசாங்கத்தையும் முழு இலங்கை ஆளும் வர்க்கத்தையும் உலுக்கியுள்ளது. இது, முதலில் கோவிட்-19 தொற்றுநோயாலும் இப்போது ரஷ்யா மீதான அமெரிக்க-நேட்டோ போராலும் உக்கிரமாக்கப்பட்டுள்ள உலக முதலாளித்துவ நெருக்கடியால் உந்தப்பட்ட வெகுஜன எதிர்ப்பின் வெடிப்பு பற்றிய அச்சத்தை, உலகெங்கிலும் உள்ள தலைநகரங்களில் எழுப்பியுள்ளது.

வெகுஜன இயக்கத்தின் நோக்கம், பலம் மற்றும் போர்க்குணம் இருந்தபோதிலும், ஜனாதிபதி இராஜபக்ஷ அதிகாரத்தில் இருப்பதோடு உழைக்கும் மக்களும் முன்னெப்போதும் இல்லாத தாக்குதலுக்கு உள்ளாகின்றனர். மகிந்த இராஜபக்ஷவிற்குப் பதிலாக ஐக்கிய தேசியக் கட்சியின் (ஐ.தே.க.) தனி ஒரு பாராளுமன்ற உறுப்பினரான ரணில் விக்கிரமசிங்க பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளதுடன், அவர் சர்வதேச நாணய நிதியத்தின் (ச.நா.நி.) சிக்கன வேலைத்திட்டம் மற்றும் வர்க்கப் போர்க் கொள்கைகளை முன்னெடுப்பதற்காக அர்ப்பணித்துக்கொண்ட ஒரு அமெரிக்க-சார்பு கருவி ஆவார்.

முந்தையவற்றை விஞ்சுகின்ற புதிய சுற்று சமூகத் தாக்குதல்களை இப்போது ஆரம்பித்துள்ள இராஜபக்ஷ-விக்கிரமசிங்க ஆட்சியானது, வெகுஜனங்கள் இப்போது அனுபவித்து வரும் கடும் துன்பகரமான நிலைமைகளை ஒரு சமூகப் பேரழிவாக மாற்றுவதற்கு அச்சுறுத்துகிறது.

இரண்டு வாரங்களுக்கு முன்பு, அரசாங்கம் பெருமதி சேர் வரியை (வட்) 4 சதவீத புள்ளிகளால் உயர்த்தியதுடன் 25 முதல் 850 சதவீதம் வரை மேல் விதிப்பு வரியை சுமத்தியது. இதனால் பல அத்தியாவசிய பொருட்களின் விலைகள் வானளாவ உயர்வதற்கு வழிவகுத்தது. வருமான வரி வலையானது வருமானம் மிகக் குறைவாக இருந்ததால் இதுவரை விலக்களிக்கப்பட்டிருந்த உழைக்கும் மக்களின் கணிசமான பகுதியினரிடம் இருந்தும் வரிகளை கறப்பதற்காக விரிவாக்கப்பட்டுள்ளது.

800,000 அரச வேலைகள் மற்றும் ஓய்வூதிய பலன்களை வெட்டிக் குறைக்கும் நடவடிக்கையை அரசாங்கம் தொடங்கியுள்ளது. அரச நிறுவனங்களின் தனியார்மயமாக்கல் மற்றும் கூட்டுத்தாபனமயமாக்கலும் திட்ட நிரலில் உள்ளது. தேசிய விமான சேவை நிறுவனமான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் வெட்டுவதற்காக ஏற்கனவே கட்டையில் ஏற்றப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கைகள் பணவீக்கத்துக்கு எரியூட்டி, தொழிலாளர்கள் மற்றும் கிராமப்புற ஏழைகள் வாழ்க்கைக்கு அத்தியாவசியமானவற்றை அணுக முடியாத நிலைமைகளை உருவாக்குகிறது. அதிகாரப்பூர்வமாக, மே மாதத்தில் பணவீக்கம் 38 சதவீதத்தை எட்டியது, உணவு பணவீக்கம் 57 சதவீதமாக இருந்தது. பட்டினி அதிகரித்துள்ளது. நாளொன்றுக்கு ஒரு வேளை உணவைத் தவிர்ப்பது உட்பட, குறைந்தபட்சம் 70 சதவீத மக்கள் உணவைக் குறைப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் சமீபத்திய அறிக்கை குறிப்பிடுகிறது.

உலக வங்கியின் கூற்றுப்படி, வேலைகள், ஊதியங்கள், ஓய்வூதியங்கள் மற்றும் மானியங்கள் குறைக்கப்படுவது வறுமை விகிதத்தை அடுத்த ஆண்டு குறைந்தபட்சம் 22.8 சதவீதத்திற்கு தள்ளும். ச.நா.நி., அதன் பங்கிற்கு, பூகோள நெருக்கடியின் ஒருங்கிணைந்த தாக்கம் மற்றும் அரச செலவினங்களிலான பாரிய வெட்டுக்களின் விளைவாக, இலங்கையின் பொருளாதாரம் இந்த ஆண்டு 6 சதவீதத்தால் சுருங்கும் என்று கணக்கிடுகிறது.

சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.) வெகுஜன எழுச்சியை வரவேற்று அதில் இணைந்துகொள்கின்ற போதிலும், அது தொழிலாள வர்க்கத்தை ஒரு சுயாதீனமான அரசியல் சக்தியாக அணிதிரட்டி, சமூகப் பேரழிவிற்கு அதன் சொந்த தீர்வை முன்னெடுத்துச் செல்லும் நிலைப்பாட்டில் இருந்தே அவ்வாறு செய்துள்ளது. அத்தகைய தீர்வு வெகுஜனங்களின் தேவைகளில் இருந்தே தொடங்குகிறது. மாறாக அரசியல்வாதிகளும் வணிகத் தலைவர்களும் வங்குரோத்தடைந்துள்ள இலங்கை மற்றும் உலக முதலாளித்துவத்தின் வரையறைக்குள் செலவிடக்கூடியதாக காட்டுவதில் இருந்து தொடங்கவில்லை.

ஒரு சோசலிச வேலைத் திட்டத்திற்கான போராட்டத்தில், தங்கள் வர்க்க பலத்தை அணிதிரட்டுவதற்கு, ஒவ்வொரு வேலைத் தளத்திலும் மற்றும் சுற்றுப்புறங்களிலும் தொழிலாளர்களை தங்கள் சொந்த நடவடிக்கை குழுக்களை உருவாக்குமாறு நாங்கள் வலியுறுத்தியுள்ளோம்.

இந்த போராட்டத்தின் அவசரம் முன்னெப்போதையும் விட இன்று மிக முக்கியமானது. வெகுஜன எழுச்சி ஒரு மகத்தான சமூக விடுதலை சாத்தியத்தைக் கொண்டுள்ளது. ஆனால் அந்த சாத்தியத்தை உணர்ந்து, தொழிலாள வர்க்கம் இலங்கை ஆளும் வர்க்கம் மற்றும் ச.நா.நி. இன் சுட்டெரிக்கும் பொருளாதார திட்ட நிரலை தோற்கடிக்க வேண்டுமானால், அது கடந்த இரண்டு மாதங்களின் படிப்பினைகளைப் பெற வேண்டும். முதலாளித்துவ அரசியலின் பிடிக்குள் தம்மை இறுக்கி வைக்கவும் சற்றே பெரிய பஞ்ச உணவுகளுக்காக ஆளும் வர்க்கத்திடம் கெஞ்ச வைக்கவும் முயலுகின்று அனைத்து சக்திகளிலிருந்தும் அது அரசியல்ரீதியாக தன்னை விலக்கிக்கொள்ள வேண்டும்.

இன்றியமையாத படிப்பினைகள் எவை?

தொழிலாள வர்க்கத்தின் ஒருங்கிணைந்த தாக்குதலின் வளர்ச்சியைத் தடுக்கின்ற முக்கிய சக்திகளை மதிப்பீடு செய்வது அவசியம்.

தொழிற்சங்கங்கள்

முதலாவதாக, தொழிற்சங்கங்கள் வர்க்கப் போராட்டத்தை நடத்துவதற்கான கருவிகள் அல்ல, மாறாக அதை ஒடுக்குவதற்கு முதலாளிகள் மற்றும் அரசியல்வாதிகளின் கருவிகள் ஆகும்.

அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்களில் இருந்து தொழிலாள வர்க்கத்தை விலக்கி வைக்க பல வாரங்களாக தொழிற்சங்கங்கள் முயற்சித்தன. ஒரு நாள் பொது வேலைநிறுத்தங்களை அவை அங்கீகரித்த போது, வெகுஜன கோபத்தின் மத்தியில், தொழிலாளர்களை அரசியல் ரீதியாக தடம் புரளச் செய்யும் நோக்கத்துடனேயே அவற்றை தயக்கத்துடன் ஏற்பாடு செய்தன.

முதலாளித்துவ சார்பு தொழிற்சங்கங்கள் இரண்டு முனைகளில் ஒழுங்கமைந்தன: தொழிற்சங்க ஒருங்கிணைப்புக் குழு (TUCC) மற்றும் ஐக்கிய தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன அமைப்புகள் (UTUMO). அவர்கள் 'ஜனாதிபதி இராஜபக்ஷவும் அவரது அரசாங்கமும் பதவி விலக வேண்டும்' என்ற கோரிக்கையை, பாராளுமன்றத்தில் முதலாளித்துவக் கட்சிகளின் இடைக்கால ஆட்சிக்கும் மற்றும் ஒரு பொதுத் தேர்தலுக்குமான அழைப்புடன் இணைத்தனர். இந்த கோரிக்கைகள் எதிர்க் கட்சிகளான ஐக்கிய மக்கள் சக்தி (ஐ.ம.ச.), மக்கள் விடுதலை முன்னணி (ஜேவிபி), தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் பெரும் வர்த்தகர்களாலும் வெகுஜன எதிர்ப்பை திசைதிருப்பி, அதை அழுகிய பாராளுமன்ற கட்டமைப்பிற்குள் பிணைத்துவிட முன்வைக்கப்பட்டவை ஆகும்.

இந்த தொழிற்சங்கங்கள் 2021 மற்றும் இந்த ஆண்டு வெடித்த வேலைநிறுத்தங்கள் மற்றும் எதிர்ப்புகளை நசுக்கிய ஒரு மோசமான வரலாற்றைக் கொண்டுள்ளன, அவற்றின் முந்தைய காட்டிக்கொடுப்புகளைப் பற்றி குறிப்பிட வேண்டியதில்லை. மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் பங்குபற்றிய மே 6 பொது வேலைநிறுத்தம், ஏழைகள், ஒடுக்கப்பட்ட மக்கள் மற்றும் சிறு வணிகர்களும் முன்னெடுத்த ஒரு ஹர்த்தாலின் ஆதரவுடன், அரசியல் ஸ்தாபனத்தையும் தொழிற்சங்கங்களின் ஆணிவேரையும் உலுக்கியது.

தொழிலாள வர்க்க சக்தியின் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பிரதிபலித்த தொழிற்சங்க முன்னணிகள், மே 11 ஆரம்பிப்பதற்காக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த காலவரையற்ற பொது வேலைநிறுத்தத்தை இரத்துச் செய்தன. இது ஜனாதிபதி இராஜபக்ஷவிற்கு ஒரு அரசியல் திறப்பை வழங்கியது. அதனால் பின்னர் அவர், தொழிலாள வர்க்கத்தை நசுக்குவதற்கும் அரசாங்க-விரோத ஆர்ப்பாட்டங்களை அடக்குவதற்கும் தனக்கே பரந்த அதிகாரங்களை வழங்கும், அவசரகால நிலையைப் பிரகடனம் செய்தார்.

மே 9 அன்று, அப்போதைய பிரதமர் மஹிந்த இராஜபக்ஷவினால் தூண்டி விடப்பட்ட ஒரு கணக்கிட்டு மேற்கொண்ட ஆத்திரமூட்டலில், கொழும்பில் உள்ள காலி முகத்திடலில் அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக குண்டர்கள் கட்டவிழ்த்துவிடப்பட்டனர். பொலிசார் சும்மா பார்த்துக்கொண்டிருக்க, அவர்கள் ஆர்ப்பாட்டக்காரர்களை கொடூரமாகத் தாக்கியதோடு அவர்களின் தற்காலிக குடிசைகளை அடித்து நொறுக்கினர். இந்த குண்டர் தாக்குதல்களால் ஆத்திரமடைந்த துறைமுக மற்றும் சுகாதார ஊழியர்கள் உடனடியாக வேலைநிறுத்தம் செய்து. காலி முகத்திடலுக்கு பேரணியாக சென்றனர். இந்த தன்னிச்சையான நடவடிக்கை தங்கள் கட்டுப்பாட்டை மீறி விரிவடையும் என்று அச்சமடைந்த தொழிற்சங்கங்கள், காலவரையற்ற வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்க நிர்ப்பந்திக்கப்பட்டன.

மே 9 அன்று, எதிர்ப்பாளர்கள் மீதான குண்டர் தாக்குதல்களுக்கு எதிராக நாடு முழுவதும் பழிவாங்கும் கலவரங்கள் வெடித்த நிலையில், இராஜபக்ஷ இராணுவத்தை நிலைநிறுத்தி, கலவரக்காரர்கள் என்று அழைக்கப்படுபவர்களுக்கு எதிராக 'கண்டவுடன் சுடம்' உத்தரவுகளை பிறப்பித்தார். காலவரையற்ற வேலைநிறுத்தம் அரசாங்கத்துடன் நேரடி அரசியல் மோதலை உருவாக்கும் என்று அஞ்சிய தொழிற்சங்கங்கள், சரணடைந்து அனைத்து தொழிற்சங்க நடவடிக்கைகளையும் நிறுத்திக்கொண்டன.

கொழும்பில் கனரக ஆயுதம் ஏந்திய படையினரும் இராணுவ வாகனமும் ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்துகின்றன. [Image: Facebook]

மூன்று நாட்களுக்குப் பின்னர், மே 12 அன்று, இராஜபக்ஷ ஐ.தே.க. தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக நியமித்தார். அடுத்த நாள் வெளியிடப்பட்ட ஒரு சோசலிச சமத்துவக் கட்சியின் அறிக்கை எச்சரித்ததாவது: ' இராஜபக்ஷவைப் பொறுத்தவரை, விக்கிரமசிங்கவை பதவியில் அமர்த்துவதற்கான ஒரே தகுதி, அவர் ஒரு பாராளுமன்ற உறுப்பினராகவும் ஆறு முறை பிரதமராகவும் இருந்தவர் என்பதும், அமெரிக்க ஏகாதிபத்தியம் மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன நடவடிக்கைகளினதும் முகவராக இருந்தமையுமே ஆகும். இராஜபக்ஷ இப்போது ஒரு கொடூரமான சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தவும், தொழிலாளர்கள் மற்றும் ஏழைகளின் அதிகரித்து வரும் கோபத்தை அடக்கவும் இந்த ஊழல் நிறைந்த அரசியல் ஊழியரின் பக்கம் திரும்பியுள்ளார்.”

இவ்வாறு, இராஜபக்ஷ ஆட்சிக்கு எதிரான ஒரு ஒருங்கிணைந்த அரசியல் மற்றும் தொழில்துறை போராட்டத்தில் தொழிலாளர் வர்க்கத்தை அணிதிரட்டுவதைத் தடுத்து, இந்த தொழிற்சங்கங்கள், தொழிலாள வர்க்கம் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்கள் மீதான இந்த புதிய சுற்றுத் தாக்குதல்களுக்கான அரசியல் நிலைமைகளை சாத்தியமாக்கின.

ஐ.ம.ச. மற்றும் ஜே.வி.பி.யின் வகிபாகம்

பிரதான பாராளுமன்ற எதிர்க்கட்சிகளான ஐக்கய மக்கள் சக்தி (ஐ.ம.ச.), ஜே.வி.பி. மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் இராஜபக்ஷவின் சிக்கன கொள்கைகளுடன் அடிப்படை வேறுபாடுகள் எதுவும் கிடையாது. ஐ.ம.ச. ஒரு 'சர்வ கட்சி இடைக்கால ஆட்சியை' முன்வைக்கும் அதே வேளை, ஜனாதிபதி இராஜபக்ஷ பதவி விலகிய பின்னர் மற்ற கட்சிகளுடன் 'ஒருமித்த ஆட்சிக்கு' ஜே.வி.பி. அழைப்பு விடுக்கிறது.

இந்த அழைப்புகள் கொழும்பு ஆளும் உயரடுக்குடனான அவர்களின் அடிப்படை ஐக்கியத்தை மூடிமறைப்பதற்கான ஒரு முகமூடியாகும், மற்றும் ச.நா.நி. விதிக்கும் கட்டளைகளுக்கு அவர்களிடம் பதிலீடு எதுவும் கிடையாது. கடந்த வாரம் அவர்கள் இருவரும் விக்கிரமசிங்கவின் பெறுமதி சேர் வரி மற்றும் ஏனைய வரி நடவடிக்கைகளை ஆதரித்த போது இது அம்பலமானது.

இனவாத ஜே.வி.பி., இலங்கையில் ஏற்பட்டுள்ள பேரழிவு நெருக்கடியின் உண்மையான மூலகாரணம் முதலாளித்துவமே என்பதை மூடி மறைக்க, இது தனிநபர் ஊழல் மற்றும் மோசடியின் விளைவு என்று கூறுகிறது. அது புதிய சிக்கன நடவடிக்கைகள் குறித்து பாசாங்குத்தனமாக மௌனமாக இருந்த போதிலும், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ச.நா.நி. உத்தரவின்படி கிரேக்க நாட்டில் 2015ல் இருந்து அமுல்படுத்தப்பட்ட அதே பாணியிலான வெட்டுக்களை அமல்படுத்த வேண்டும் என்று கோருகிறது.

முன்னணி சோசலிஸ்ட் கட்சி (மு.சோ.க.), தன்னை ஒரு இடதுசாரி மாற்றீடாகக் காட்டிக்கொண்டாலும், அதன் வேலைத்திட்டம் பாராளுமன்ற எதிர்க்கட்சிகளின் வேலைத் திட்டத்திலிருந்து அடிப்படையில் வேறுபட்டதல்ல. ஜனாதிபதி இராஜபக்ஷ பதவிவிலகிய பின்னர், பாராளுமன்றக் கட்சிகளின் ஒருமித்த ஆட்சி என அழைக்கப்படுவதை மு.சோ.க. முன்மொழிகிறது. பாரிய எதிர்ப்புக்களுடன் ஆளும் ஆட்சிக்கு அழுத்தம் கொடுப்பதன் மூலம், தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் தங்கள் ஜனநாயக மற்றும் சமூக உரிமைகளைப் பாதுகாக்க முடியும் என்று வலியுறுத்துகிறது.

போலி-இடது மு.சோ.க., நேரடியாக தொழிற்சங்கங்களுடன் ஒத்துழைப்பதுடன் தொழிலாள வர்க்கம் ஒரு புரட்சிகர திசையில் நகர்வதைத் தடுக்கிறது. அதன் 'வர்க்கப் போராட்டக் குழு' எனப்படுவது, பல வேலைத் தளங்களில் இயங்குவதுடன் ஐக்கிய தொழிற்சங்கம் மற்றும் வெகுஜன அமைப்பின் ஒரு பகுதியாக இருந்து அதன் காட்டிக்கொடுப்புகளை ஆதரிக்கிறது.

'கோடா கோகம' ஆர்ப்பாட்டங்கள்

காலி முகத்திடலில் 'கோட்டா கோகமா' (கோடா வீட்டுக்குப் போ) என்று சுயமாக விவரிக்கப்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் ஏப்ரல் தொடக்கத்தில் இருந்து ஜனாதிபதி இராஜபக்ஷவையும் அவரது அரசாங்கத்தையும் இராஜினாமா செய்யுமாறு கோரி வரும் அதேவேளை, இராஜபக்ஷவிற்குப் பதிலாக எந்த வகையான ஆட்சி அமைய வேண்டும் என்று அவர்கள் கூறவில்லை. அல்லது, வெகுஜனங்கள் எதிர்நோக்கும் பிரமாண்டமான சமூகப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான எந்தத் திட்டத்தையும் அவர்கள் முன்வைக்கவில்லை.

எவ்வாறாயினும், காலிமுகத்திடலில் ஆதிக்கம் செலுத்தும் மத்தியதர வர்க்கக் குழுக்கள், தங்களது அரசியல் வங்குரோத்து நிலையை வெளிப்படுத்தியுள்ளன. ஒரு குழு, ஜனாதிபதியும் பிரதமரும் 'வீட்டிற்குச் செல்ல வேண்டும்' என்று கோருகிறது, ஆனால், அடுத்து என்ன? என்ற கேள்விக்கு பதிலளிக்க மறுக்கிறது. இப்போது அதிக மேலாதிக்கப் பாத்திரத்தை வகிக்கும் மற்றொரு குழு, கடன் மறுசீரமைப்பு மற்றும் ஊழலை முடிவுக்குக் கொண்டு வர, இடைக்கால முதலாளித்துவ ஆட்சிக்கு அழைப்பு விடுத்து, ஜே.வி.பி. மற்றும் மு.சோ.க. இன் கோரிக்கைகளை எதிரொலிக்கிறது.

ஒரு சோசலிச வேலைத்திட்டம்

இராஜபக்ஷ-விக்கிரமசிங்க அரசாங்கம் இப்போது அதன் வர்க்க யுத்த தாக்குதல்களை தீவிரப்படுத்தி வருகிறது. கடந்த வாரம், மின்சாரம் மற்றும் சுகாதார ஊழியர்களின் அனைத்து வேலைநிறுத்தங்கள் மற்றும் தொழிற்சங்க நடவடிக்கைகளுக்கு தடை விதிக்க, கடுமையான அத்தியாவசிய பொது சேவைகள் சட்ட நடவடிக்கைகளை அது பயன்படுத்தியது.

இலங்கையின் முதலாளித்துவ உயரடுக்கும் அதன் இராஜபக்ஷ-விக்கிரமசிங்க ஆட்சியும், கொடூரமான ச.நா.நி. சிக்கன வேலைத்திட்டத்தின் அடுத்த கட்டத்தை அமைதியான முறையில் முன்னெடுக்க முடியாது, அதற்கு எதேச்சதிகார நடவடிக்கைகள் தேவை என்பதை நன்கு உணர்ந்துள்ளன.

கண்டி மருத்துவமனை ஊழியர்கள் ஏப்ரல் மாதம் நடத்திய போராட்டம் (WSWS Media) [Photo: WSWS]

வெகுஜன அரசாங்க எதிர்ப்புப் போராட்டங்களின் வெடிப்புக்கு பிரதிபலித்த சோசலிச சமத்துவக் கட்சி, வெகுஜனங்களின் அவசரத் தேவைகளைப் பூர்த்தி செய்யவும், சமூகப் பேரழிவுக்குத் தீர்வுகாணவும் மற்றும் அரசாங்கத்தின் சர்வாதிகார நடவடிக்கைகளை தோற்கடிக்கவும், ஒரு தொகை இடைமறுவு கோரிக்கைகளைச் சூழ தொழிலாளர்களை அணிதிரட்டுவதற்கான தனது போராட்டத்தை சோசலிச சமத்துவக் கட்சி ஆழப்படுத்தியுள்ளது. இதில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிப்பது மற்றும் அவசரகாலச் சட்டம், அத்தியாவசிய சேவைகள் சட்டம் மற்றும் பயங்கரவாதத் தடைச் சட்டம் போன்ற இலங்கையின் அனைத்து கொடூரமான நடவடிக்கைகளையும் நீக்குவதும் அடங்கும்.

சோசலிச சமத்துவக் கட்சி ஏப்ரல் 7 அன்று விடுத்த அறிக்கை விளக்கியது போல்:

என்ன செய்ய வேண்டும்? இலங்கை முதலாளித்துவ வர்க்கம், தொழிலாளர்கள் மற்றும் ஏழைகளின் சமூகத் தேவைகள் எதனையும் நிவர்த்தி செய்வதில் முற்றிலும் திறனற்றது. அவர்களின் இலாபமும் செல்வமும் பணயத்தில் இருக்கும்போது எந்த விதமான கெஞ்சல் அல்லது அழுத்தம் கொடுத்தல் அவர்களின் போக்கை மாற்றாது.

தொழிலாள வர்க்கம் கடந்த இரண்டு ஆண்டுகளாக வெகுஜன வேலைநிறுத்தங்கள் மற்றும் எதிர்ப்பு அலைகளை நசுக்குவதில் துரோக பாத்திரத்தை ஆற்றிய தொழிற்சங்கங்கள் மற்றும் முதலாளித்துவத்தின் அனைத்து பிரிவுகளிலிருந்தும் இருந்தும் விலகி தனது சுயாதீனமான சொந்த அமைப்புகளை ஸ்தாபித்தால் மட்டுமே, அதன் தேவைகளுக்காகப் போராட முடியும்.

சோசலிச சமத்துவக் கட்சி, நாடு முழுவதும் உள்ள தொழிற்சாலைகள், வேலைத் தளங்கள், பெருந்தோட்டங்கள் மற்றும் தொழிலாள வர்க்க சுற்றுப்புறங்களில் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட நடவடிக்கைக் குழுக்களை அமைப்பதற்கான அதன் அழைப்பை முடுக்கி விடுகின்றது. இந்த போராட்ட அமைப்புகள், கிராமப்புற ஏழைகள் மற்றும் ஒடுக்கப்பட்ட அனைவரையும் அணிதிரட்டிக்கொண்டு, தொழிலாள வர்க்கத்தின் தொழில்துறை மற்றும் அரசியல் பலத்தை கட்டவிழ்த்துவிடும்.

சமூகப் பேரிடரை அனுகுவதற்கு, அனைத்து அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் ஏனைய இன்றியமையாத பொருட்களின் உற்பத்தி மற்றும் விநியோகத்தின் மீது தொழிலாள வர்க்கத்தின் ஜனநாயகக் கட்டுப்பாட்டிற்காக சோசலிச சமத்துவக் கட்சி அழைப்பு விடுக்கின்றது. இந்த முன்னோக்கிற்கு வெளிநாட்டு கடன்களை நிராகரிப்பது மற்றும் வங்கிகள், பெருநிறுவனங்கள், பெருந்தோட்டங்கள் மற்றும் ஏனைய பிரதான பொருளாதார மையங்களை தேசியமயமாக்குவதும் அவசியமாகும்.

பரவலான பணவீக்கத்தை எதிர்த்துப் போராடுவதற்கு வாழ்க்கைச் செலவுக்கு ஏற்ப ஊதியத்தை அட்டவணைப்படுத்துவதும், ஒழுக்கமான மற்றும் பாதுகாப்பான வேலை நிலைமைகளுடன் அனைவருக்கும் தொழில்களை உத்தரவாதம் செய்வதும், ஏழை மற்றும் சிறு விவசாயிகள் மற்றும் சிறு வியாபாரிகளின் கடன்களை இரத்து செய்வதும் மற்றும் உரங்கள் உட்பட மானியங்களை மீண்டும் வழங்குவதும் ஏனைய அத்தியாவசிய நடவடிக்கைகளில் அடங்கும்.

இந்த வேலைத்திட்டத்துக்கான போராட்டமும் அனைத்து இன மற்றும் மத வேறுபாடுகளை கடந்து தொழிலாளர்களின் ஐக்கியமும் மிகவும் அவசரமானது. அனைத்து வகையான பேரினவாதம் மற்றும் வகுப்புவாதமும் வேண்டாம்!

சோசலிச சமத்துவக் கட்சி இந்த சோசலிச வேலைத்திட்டத்தை தொழிலாளர் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்திற்கான போராட்டத்தின் ஒரு பகுதியாகவும், தெற்காசியா முழுவதும் மற்றும் அமெரிக்கா, இங்கிலாந்து, ஐரோப்பா மற்றும் பிற ஏகாதிபத்திய மையங்களிலும் போராட்டத்திற்கு வரும் தங்கள் வர்க்க சகோதர சகோதரிகளுடனான ஐக்கியத்துடனும் முன்னெடுக்கிறது.

தொற்றுநோய், ஏகாதிபத்திய போர் மற்றும் விலைவாசி உயர்வு வரை உலகெங்கிலும் உள்ள உழைக்கும் மக்கள் எதிர்கொள்ளும் மிகப்பெரும் சமூகப் பிரச்சினைகளுக்கு முதலாளித்துவ அமைப்புக்குள்ளும் தேசிய அடிப்படையிலும் தீர்வு கிடையாது.

சமூக சமத்துவமின்மை, போர் மற்றும் சர்வாதிகாரத்துக்கு எதிராகவும் மற்றும் சர்வதேச சோசலிசத்திற்குமான போராட்டத்தில் இலங்கைத் தொழிலாளர்களும் அவர்களது நடவடிக்கைக் குழுக்களும், நடவடிக்கை குழுக்களின் சர்வதேச தொழிலாளர் கூட்டணியின் மூலம் தங்கள் போராட்டத்தை ஐக்கியப்படுத்தி ஒருங்கிணைக்க முடியும்.

சோசலிசத்திற்கான இந்தப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லுங்கள்! இந்த போராட்டத்திற்கு தலைமை தாங்க சோசலிச சமத்துவக் கட்சியில் இணையுங்கள்!

Loading