சமூக ஜனநாயகவாதிகளும் முன்னாள் ஸ்ராலினிஸ்டுகளும் பின்லாந்தையும் சுவீடனையும் நேட்டோவை நோக்கி இட்டுச் செல்கின்றனர்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

நேட்டோ இராணுவக் கூட்டணியில் அங்கத்துவம் பெறுவதற்கான பின்லாந்தினதும் சுவீடனினதும் கோரிக்கை, முக்கிய ஏகாதிபத்திய சக்திகளுடன் நெருக்கமான ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்பட்டது. அவர்கள் ரஷ்யாவை அடிபணியச் செய்வதற்கான இரண்டாவது போர்முனையைத் திறப்பதற்கு ஸ்காண்டிநேவிய நாடுகளை நேட்டோவுடன் ஒருங்கிணைப்பதை முக்கியமானதாகக் கருதுகின்றனர்.

உக்ரேன் மீதான ரஷ்யாவின் பிற்போக்குத்தனமான படையெடுப்பிற்கு விடையிறுக்கும் வகையில், ஹெல்சிங்கியும் ஸ்ரொக்ஹோம்மும் ஒரே இரவில் 'நடுநிலையிலிருந்து நேட்டோவிற்கு' சென்றது என்ற கூற்றுக்கு மாறாக, போரைப் போலவே மேற்கத்திய இராணுவக் கூட்டணியில் அவர்களது அங்கத்துவமும் திரை மறைவில் பல ஆண்டுகளாக சதித்திட்டத்தினால் தயாரிக்கப்பட்டதாகும். உக்ரேனில் புட்டினின் படையெடுப்பு, பிப்ரவரி 24, 2022 க்கு நீண்டகாலத்திற்கு முன்பே நேட்டோ விரிவாக்கத்திற்கான திட்டங்களைத் தூண்டுவதற்கான ஒரு சாக்குப்போக்காக மட்டுமே செயல்பட்டது.

BALTOPS 22 பயிற்சியின்போது அமெரிக்க கடற்படையினர் சுவீடன் ஆயுதமயமாக்கப்பட்ட தரைப்படையின் உறுப்பினர்களுடன் இணைந்து பணியாற்றுகின்றனர்

ஹெல்சிங்கியும் ஸ்ரொக்ஹோமும் நேட்டோ அங்கத்தவராவதற்கான சம்பிரதாயங்கள் இன்னும் இறுதிமுடிவு செய்யப்பட உள்ளன. குர்திஷ் தேசியவாத குழுக்களுக்கு இரு நாடுகளின் ஆதரவைப் பற்றிய கவலைகள் காரணமாக, அங்க்கத்தவராவதற்கான நடைமுறையைத் தொடங்குவதற்குத் தேவையான ஒருமனதான ஒப்புதலை வழங்க துருக்கி மறுத்துவிட்டது. எவ்வாறாயினும், ஹெல்சின்கியும் ஸ்ரொக்ஹோமும் தங்கள் முறையான விண்ணப்பங்களை மே நடுப்பகுதியில் தாக்கல் செய்ததில் இருந்து, அமெரிக்க ஏகாதிபத்தியம் ஸ்காண்டிநேவிய நாடுகளை நடைமுறையில் கூட்டணி உறுப்பினர்களாக ஆக்குவதற்கு 'அடிப்படை காரணிகளை' உருவாக்க நகர்ந்துள்ளது. ஜூன் 5 இல் தொடங்கி ஜூன் 17 வரை 45 கடல்சார் பிரிவுகள், 75 விமானங்கள் மற்றும் 7,000 இராணுவத்தினர் உள்ளடக்கிய பால்டிக் கடலில் ரஷ்யாவிற்கு எதிரான நேட்டோ ஆத்திரமூட்டல் BaltOps 22 இராணுவப் பயிற்சியை சுவீடன் நடத்துவதை ஒட்டி அமெரிக்கப் போர்க்கப்பலுடன் அமெரிக்க கூட்டுப்படைத் தலைவர்களின் தலைவர் ஜெனரல் மார்க் மில்லி இந்த மாதம் ஸ்ரொக்ஹோமுக்கு விஜயம் செய்தார். ரஷ்யாவுடனான தனது 1,300-கிலோமீட்டர் எல்லையில் தடைகளை அமைக்கும் திட்டத்தை கடந்த வாரம் ஃபின்லாந்து அறிவித்தது. இதற்கு காரணமாக நாட்டிற்கு குடியேறுபவர்களை அனுப்பும் ரஷ்யாவின் 'கலப்பின போர்' அச்சுறுத்தலை மேற்கோள் காட்டியது.

ரஷ்யாவுடனான நேட்டோவின் போரில் பின்லாந்தையும் சுவீடனையும் முன்னணி நாடுகளாக மாற்றியதில் மிக முக்கியமான அரசியல் பாத்திரம் சமூக ஜனநாயகவாதிகளாலும் மற்றும் போலி-இடது கட்சிகளாலும் மேற்கொள்ளப்பட்டது. அவர்கள் முன்னணி போர்வெறியர்களாக வெளிப்பட்டு, மக்கள் மத்தியில் நேட்டோ தொடர்பாக எஞ்சியிருக்கும் குறிப்பிடத்தக்க பரந்த சந்தேகத்தை அடக்குவதில் முக்கிய பங்கு வகிக்கின்றனர்.

ஃபின்லாந்து பிரதமர் சன்னா மரின், ஹெல்சின்கியில் உள்ள பின்லாந்து பாராளுமன்றத்தில் மே 16, 2022 திங்கட்கிழமை பேசுகிறார் (AP Photo/Martin Meissner) [AP Photo]

பின்லாந்து மற்றும் சுவீடன் அரசாங்கங்கள் இரண்டும் தற்போது சமூக ஜனநாயகக் கட்சிகளால் வழிநடத்தப்படுகின்றன. பின்லாந்து பிரதமர் சன்னா மரின் மற்றும் சுவீடன் பிரதமர் மக்டலேனா ஆண்டர்சன் ஆகியோர் தங்கள் நாடுகளின் சமூக ஜனநாயகக் கட்சிகளின் தலைவர்களாக உள்ளனர். பசுமை லீக் மற்றும் முன்னாள் ஸ்ராலினிச இடது கூட்டணியை உள்ளடக்கிய ஐந்து கட்சி கூட்டணிக்கு மரின் தலைமை தாங்குகிறார். அதே நேரத்தில் ஆண்டர்சன் சுவீடனின் பசுமைவாதிகள் மற்றும் முன்னாள் ஸ்ராலினிச இடது கட்சி ஆதரவுடனான நாடாளுமன்றத்தில் சிறுபான்மை நிர்வாகத்தில் ஆட்சி செய்கிறார்.

இராணுவவாதத்தை எதிர்ப்பவர்கள் என்பதில் இருந்து நேட்டோ போர்ப் பருந்துகளாக

1950கள் மற்றும் 1960களில் தொழிலாள வர்க்கத்திற்கு சலுகைகளை வழங்குவதில் மேற்கு ஐரோப்பாவில் உள்ள மற்ற சமூக ஜனநாயகக் கட்சிகளை விட சுவீடனின் சமூக ஜனநாயகக் கட்சியினர் முன்னேறியிருந்தனர். ஒப்பீட்டளவில் தாராளமான ஊதிய உயர்வுகள் மற்றும் விரிவான சமூகநல சேவைகள் உட்பட இந்த உதவிகள், சுவீடனின் ஆளும் உயரடுக்கால் ஆதரிக்கப்படும் கொள்கையின் ஒரு பகுதியாகும். இது தேசிய கூட்டு பேரம் மற்றும் தொழிற்சங்க/பெருநிறுவன கூட்டு மேலாண்மை மூலம் வர்க்கப் போராட்டத்தை கட்டுப்படுத்த முயன்றது. இரண்டாம் உலகப் போரின் போது சுவீடனின் நடுநிலைமையால் இது சாத்தியமானது. போரினால் அதன் முக்கிய தொழில்துறை மற்றும் உற்பத்தித் துறைகள் பாதிக்கப்படாது இருந்த அதே நேரத்தில் அதன் ஐரோப்பிய போட்டியாளர்கள் இடிபாடுகளுள் கிடந்தனர்.

இன்னும் அடிப்படையில், சுவீடனின் பொருளாதார வளர்ச்சியானது, போருக்குப் பிந்தைய காலத்தில் உலக முதலாளித்துவத்தின் தற்காலிக ஸ்திரப்படுத்தலைச் சார்ந்திருந்ததது. போருக்குப் பின்னர் வெடித்த புரட்சிகர தொழிலாள வர்க்கப் போராட்டங்கள் ஸ்ராலினிச அதிகாரத்துவத்தின் துரோகங்களால் காட்டிக் கொடுக்கப்பட்டதாலும் மற்றும் முன்னணி ஏகாதிபத்திய சக்தியான அமெரிக்காவினால் முதலாளித்துவ அமைப்பின் மறுமலர்ச்சி உறுதியளிக்கப்பட்டதாலும் சாத்தியமானது.

சமூக ஜனநாயகவாதிகள், இலவச சுகாதாரப் பாதுகாப்பு மற்றும் கல்வி, தாராளமான சமூக நல ஆதரவு மற்றும் இலவச குழந்தைப் பராமரிப்பு ஆகியவற்றுடன் மக்கள் நனவில் தொடர்புபட்டு இருந்தனர். இது Folkhemmet (மக்கள் இல்லம்) என்ற சமூகத்தை உருவாக்கியது. இது 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இரண்டு தலைமுறைகளுக்கு முன்பு பாரிய சுவீடன் தொழிலாளர்கள் அனுபவித்த வறுமைக்கு முற்றிலும் எதிர்மாறானதாக இருந்தது. அமெரிக்க ஏகாதிபத்தியத்தினாலோ அல்லது சோவியத் ஒன்றிய ஸ்ராலினிச அதிகாரத்துவத்தாலோ செய்யப்பட்டாலும் அவற்றின் இராணுவ வன்முறை மற்றும் அடக்குமுறைக்கு எதிராக குறைந்தபட்சம் பகிரங்கமாக வலுவான நிலைப்பாட்டினால் சமூக ஜனநாயகவாதிகள் பிரபலயமடைந்தவர்களாக இருந்தனர்.

மந்திரி ஓலோவ் பால்ம (இடமிருந்து இரண்டாவது) வடக்கு வியட்நாமின் மாஸ்கோ தூதர் நகுயென் தோ சானுடன் (மூன்றாவது இடமிருந்து) தீப்பந்த ஊர்வலத்தில் பங்கேற்கிறார் [Photo by Scanpix / CC BY 4.0] [Photo by Scanpix / CC BY 4.0]

1968 இல், ஒரு வருடம் கழித்து சுவீடிஷ் பிரதம மந்திரியாகவிருந்த கல்வி அமைச்சர் ஓலோஃப் பால்மே மாஸ்கோவிற்கான வடக்கு வியட்நாமின் தூதருடன் ஸ்ரொக்ஹோமில் வியட்நாம் போருக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் சேர்ந்தார். ஒரு பிரபலமான உரையில், பால்ம் அறிவித்தார், 'ஜனநாயகம் என்பது ஒரு சிறந்த அரசாளும் அமைப்புமுறையாகும். இதில் மற்றவர்களுக்கு மரியாதை கொடுக்க கோருகின்றது. வெளியில் இருந்து ஒரு தேசத்தின் மீது ஆட்சி முறையை ஒருவர் திணிக்க முடியாது. மக்கள் தங்கள் தலைவிதியை தீர்மானிக்கும் உரிமையை பெற்றிருக்க வேண்டும். எனவே இதுவே தேசிய சுயநிர்ணய உரிமையை முன்னிபந்தனையாக்குகின்றது.

ஜனநாயகம் நீதியைக் கோருகிறது. ஏழைகள் இன்னும் ஆழமான துயரத்தில் தள்ளப்படுகையில் ஏற்கனவே பணக்காரர்களாக உள்ளவர்களின் பைகளை நிரப்புவதன் மூலம் ஒரு மக்களை வெல்ல முடியாது. சமூக நீதிக்கான கோரிக்கையை வன்முறை மற்றும் இராணுவ பலத்தால் பூர்த்தி செய்ய முடியாது”.

இவ்வுரைக்கு, வாஷிங்டன் ஸ்ரொக்ஹோமில் இருந்த தனது தூதரை ஆலோசனைக்காக திரும்ப அழைத்ததன் மூலம் பதிலளித்தது. பின்னர் 1968 இல், பிராக் வசந்தத்தை நசுக்க ஸ்ராலினிச அதிகாரத்துவத்தால் சோவியத் துருப்புக்கள் செக்கோஸ்லோவாக்கியாவிற்கு அனுப்பப்பட்டதை பால்மே கண்டித்தார்.

டிசம்பர் 1972 இல் தேசிய வானொலியில் ஒலிபரப்பப்பட்ட மற்றொரு உரையில், சமூக ஜனநாயக அரசாங்கம் வடக்கு வியட்நாமை அதிகாரபூர்வமாக அங்கீகரித்த சிறிது நேரத்திலேயே, ஹனோய் மீதான அமெரிக்க குண்டுவீச்சை ஹிட்லரின் நாஜிக்களின் குற்றங்களுடன் பால்மே ஒப்பிட்டார். 'இந்த குண்டுவீச்சு ஒரு கொடூரம்,' என்றும் 'இதற்கு நவீன வரலாற்றில் பல எடுத்துக்காட்டுகள் உள்ளன என அவர் அறிவித்தார். அவை பொதுவாக குர்னிகா, ஓரடோர், பாபி யார், கட்டின், லிடிஸ், ஷார்ப்வில்லி, டிரெப்ளிங்கா… போன்ற ஒரேவிதமான பெயருடன் இணைக்கப்பட்டுள்ளன. இப்போது ஹனோய், கிறிஸ்துமஸ் 1972 என்பன இந்த பெயர் வரிசையில் சேர்க்கப்பட்டுள்ளது”.

அமெரிக்க ஏகாதிபத்திய ஆக்கிரமிப்புக்கு பால்மே மற்றும் சமூக ஜனநாயகவாதிகளின் எதிர்ப்பு, கொள்கைரீதியான தன்மையைக் கொண்டிருக்கவில்லை. சமூக ஜனநாயகக் கட்சியினர், சுவீடிஷ் ஆளும் வட்டங்கள் பரந்த அளவில் ஆதரவளித்த இராணுவ 'அணிசேரா' கொள்கையை பின்பற்றினர். இரண்டு பனிப்போர் முகாம்களிலிருந்தும் ஸ்ரோக்ஹோம் விலகியிருப்பதை பராமரிப்பது, ஏகாதிபத்திய சக்திகளால் சோவியத் ஒன்றியத்துக்கு எதிரான உளவுத்துறை சேகரிப்பு நடவடிக்கைகளுக்கு சுவீடன் ஒரு முக்கிய வழித்தடமாக செயல்பட உதவியது. 1954 ஆம் ஆண்டிலேயே சுவீடன் உளவுத்துறை பகிர்வு ஒப்பந்தத்தை மேற்கொண்டது. அமெரிக்க ஏகாதிபத்தியம் மற்றும் அதன் கூட்டாளிகளால் 'கம்யூனிச' அச்சுறுத்தலாகக் கருதப்படும் வளரும் நாடுகள் மற்றும் தேசிய விடுதலை இயக்கங்களுடன் தொடர்புகளை ஏற்படுத்த சுவீடிஷ் வணிகங்கள் மற்றும் இராஜதந்திரிகளுக்கு இது உதவியது. 'மனிதாபிமான வல்லரசு' என அறியப்பட்ட நாடு ஒப்பீட்டளவில் சிறிய அளவில் இருந்தாலும் உலக அரங்கில் சுவீடனுக்கு விகிதாசார ரீதியில் ஒரு சமமற்ற பங்கு கிடைத்தது.

அமெரிக்க ஏகாதிபத்திய வன்முறை பற்றிய சமூக ஜனநாயகக் கட்சியினரின் பொது விமர்சனங்கள் அவர்களுக்கு கணிசமான மக்கள் ஆதரவைப் பெற்றுத் தந்தன. நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக தொடர்ச்சியான சமூக ஜனநாயக ஆட்சியில் 1976 வரை பால்மே பிரதமராக இருந்தார். பிப்ரவரி 1986 இல் காரணம்தெரியாத சூழ்நிலையில் அவர் படுகொலை செய்யப்பட்டார். அந்த நேரத்தில் அவர் நான்கு ஆண்டுகளாக மீண்டும் பிரதமராக இருந்தார். இக்கொலையானது போருக்குப் பிந்தைய சகாப்தத்தின் முதலாளித்துவ ஸ்திரத்தன்மைக்கு பின்னர் உருவாகிய நெருக்கடி சுவீடனின் சமுதாயத்தை உடைத்த சமூக மற்றும் அரசியல் பதட்டங்களை வெளிப்படுத்தியது.

போருக்குப் பிந்தைய காலத்தில் பின்லாந்து சமூக ஜனநாயகமும் ஸ்ராலினிசமும்

பின்லாந்தில் சமூக ஜனநாயகத்தின் ஆதிக்கம் குறைவாகவே காணப்பட்டாலும், போருக்குப் பிந்தைய சகாப்தத்தின் பெரும்பகுதி முழுவதும் சமூக ஜனநாயகக் கட்சியே மிகப்பெரிய கட்சியாக இருந்தது. அவர்கள் பொதுவாக 25 சதவீத வாக்குகளைப் பெற்றபோதிலும் பனிப்போரின் போது ஹெல்சின்கியின் நடுநிலை வெளியுறவுக் கொள்கையை வளர்ப்பதில் முக்கிய பங்கு வகித்தனர்.

ஏப்ரல் 6, 1948 அன்று மாஸ்கோவில் சோவியத் ஒன்றியத்துக்கும் ஃபின்லாந்துக்கும் இடையே நட்பு, ஒத்துழைப்பு மற்றும் பரஸ்பர உதவி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. சோவியத் வெளியுறவு மந்திரி வியாஸேலாவ் மொலோடோவ் (உட்கார்ந்துள்ளார்) கையொப்பமிட்டார். அதைத் தொடர்ந்து சோவியத் தலைவர் ஜோசப் ஸ்ராலின் (மொலோடோவின் பின்னால் நிற்கினறார்). ஸ்ராலினின் இடதுபுறத்தில் பின்லாந்து பிரதமர் மௌனோ பெக்கலா, ஸ்ராலினுக்கு வலதுபுறம் வெளியுறவு அமைச்சர்கள் கார்ல் என்கெல் மற்றும் ரெய்ன்ஹோல்ட் ஸ்வென்டோ, உள்துறை அமைச்சர் ஜெர்ஜோ லீனோ மற்றும் நாடாளுமன்ற அங்த்தவர்களான உர்ஹோ கெக்கோனென், ஒன்னி பெல்டோனென் மற்றும் ஜே.ஓ. சோடெர்ஹெல்ம் [Photo by Unknown author / CC BY 4.0] [Photo by Unknown author / CC BY 4.0]

பின்லாந்தின் ஸ்ராலினிச கம்யூனிஸ்ட் கட்சியும் (SKP) உத்தியோகபூர்வ அரசியலில் முக்கிய பங்கு வகித்தது. இரும்புத்திரைக்கு மேற்கே உள்ள மிகப்பெரிய ஸ்ராலினிசக் கட்சிகளில் ஒன்றான SKP, பின்லாந்து முதலாளித்துவத்தை ஸ்திரப்படுத்த இரண்டாம் உலகப் போரின் முடிவில் அரசாங்கத்தில் நுழைந்தது. 1948 இல் சோவியத் யூனியனுடனான நட்பு, ஒத்துழைப்பு மற்றும் பரஸ்பர உதவி ஒப்பந்தத்தின் பேச்சுவார்த்தைகளில் இது நெருக்கமாக ஈடுபட்டு பின்லாந்தில் சந்தைப் பொருளாதாரம் தொடர்வதற்கு உத்தரவாதம் அளித்து மற்றும் ஹெல்சின்கியின் நடுநிலை நிலையை நிர்ணயித்தது. சோவியத் ஒன்றியத்துக்கு எதிரான அழிப்புப் போரில் நாஜிகளின் பக்கம் பங்கேற்றதற்காக சோவியத் ஒன்றியத்துக்கு இழப்பீடு வழங்க ஒப்பந்தம் ஹெல்சின்கியை கட்டாயப்படுத்தியது மற்றும் 'ஜேர்மனி மற்றும் அதன் கூட்டாளிகளின்' எந்தவொரு தாக்குதலையும் ஃபின்லாந்து எதிர்க்க வேண்டும் என்று கோரியது. இது பரவலாக மேற்கத்திய சக்திகளால், ஃபின்லாந்து பிரதேசத்தின் வழியாக சோவியத் ஒன்றியத்தினால் மேற்கொள்ளப்பட்ட ஒன்று என கருதப்பட்டது. SKP உறுப்பினர் மௌனோ பெக்கலா, ஃபின்லாந்தின் பிரதம மந்திரியாக ஏப்ரல் 1948 இல் மாஸ்கோவில் நடந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் விழாவில் கலந்து கொண்டார்.

பின்லாந்து மக்கள் ஜனநாயக கழகம் (Finnish People's Democratic League -SKDL), ஸ்ராலினிஸ்டுகளால் மேலாதிக்கம் பெற்ற ஒரு தேர்தல் கூட்டணி, 1948 முதல் 1966 வரை நாடாளுமன்றத் தேர்தல்களில் 20 சதவீத வாக்குகளைப் பெற்று அரசாங்கத்திற்கு வெளியே இருந்தது. 1960 களின் பிற்பகுதியிலும் 1970 களின் முற்பகுதியிலும், இது பல சமூக ஜனநாயகக் கட்சி தலைமையிலான அரசாங்கங்களில் பங்கேற்றது. 1990 இல், சோவியத் ஒன்றியத்தில் முதலாளித்துவ மறுசீரமைப்புக்கான கோர்பச்சேவின் திட்டம் முன்னெடுக்கப்பட்டபோது, SKDL தன்னை முழுவீச்சுடன் இடது கூட்டணியாக மாற்றிக்கொண்டது. அது இப்போது மரினின் நேட்டோ-சார்பு அரசாங்கத்தில் இரண்டு மந்திரி பதவிகளைக் கொண்டுள்ளது.

சோவியத் ஒன்றியத்தின் கலைப்பு

சோவியத் ஒன்றியம் ஸ்ராலினிசத்தால் கலைக்கப்பட்டதும் மற்றும் ரஷ்யாவிலும் கிழக்கு ஐரோப்பா முழுவதிலும் முதலாளித்துவத்தின் மறுசீரமைப்பு, பின்லாந்து மற்றும் சுவீடனின் 'நடுநிலைமை' தங்கியிருந்த அரசியல் மற்றும் புவி மூலோபாய கட்டமைப்பை அடிப்படையில் மாற்றியது. சோவியத் ஒன்றியத்தின் முடிவிற்குப் பின்னர், இரண்டு ஸ்காண்டிநேவிய நாடுகளும் தங்கள் வெளியுறவுக் கொள்கைகளை நேரடியாக அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஏகாதிபத்தியத்திற்கு அடிபணிய வைக்க நடவடிக்கை எடுத்தன. மேற்கத்திய கூட்டுறவில் பங்கேற்பதற்கு அதிக சுதந்திரத்தை அனுமதிப்பதற்காக பின்லாந்து 1992 இல் ரஷ்யாவுடன் அதன் 1948 உடன்படிக்கையை மீள்பேச்சுவார்த்தைக்கு உட்படுத்தியது. மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர், பின்லாந்து மற்றும் சுவீடன் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைந்தன.

1994 இல் நேட்டோவின் அமைதிக்கான கூட்டில் (Partnership for Peace - PFP) அவர்கள் இணைந்ததில் தொடங்கி, பெரிய ஏகாதிபத்திய சக்திகளுடன் சுவீடன் மற்றும் பின்லாந்தின் உறவுகளை ஆழப்படுத்துவதில் சமூக ஜனநாயகவாதிகள் முக்கியமானவர்கள். முன்னாள் சோவியத் செல்வாக்கு மண்டலத்தில் இருந்து 13 நாடுகளை நேட்டோவில் ஒருங்கிணைக்கவும் உக்ரேனுடனான ஒத்துழைப்பை வலுப்படுத்தவும் PFP ஒரு பொறிமுறையாக செயல்பட்டது.

ஜூன் 17, 1999 அன்று ஃபின்லாந்தின் ஹெல்சின்கியில் உள்ள ஜனாதிபதி இல்லத்தில் பேச்சு வார்த்தைக்காக சந்திக்கும் போது அமெரிக்க பாதுகாப்புச் செயலர் வில்லியம் எஸ். கோஹன் (இடதுபுறம்), ஃபின்லாந்து அதிபர் மார்ட்டி அஹ்திசாரி (இடமிருந்து 2வது), ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் மார்ஷல் இகோர் செர்ஜியேவ் (வலமிருந்து 2வது) ஒரு மொழிபெயர்ப்பாளருடன் (வலது) இணைந்துள்ளனர். இதில் கொசோவோவில் அமைதி காக்கும் முயற்சிகளில் ரஷ்யாவின் பங்கேற்பு பற்றிய விவரங்களை பங்கேற்பாளர்கள் விவாதித்தனர் [Photo by Helene C. Stikkel / CC BY 4.0] [Photo by Helene C. Stikkel / CC BY 4.0]

1994 முதல் 2000 வரை பின்லாந்தின் அதிபராக இருந்த மார்ட்டி அஹ்திசாரி, நேட்டோ உறுப்பினருக்கு ஆதரவாக மிகவும் வெளிப்படையாகப் பேசும் சமூக ஜனநாயகவாதிகளில் ஒருவராக உருவெடுத்தார். பெல்கிராட் மீதான நேட்டோவின் காட்டுமிராண்டித்தனமான குண்டுவீச்சின் போது ஜூன் 1999 இல் சேர்பியாவை சரணடைய செய்ய முயன்ற முன்னணி ஐரோப்பிய ஒன்றிய பேச்சுவார்த்தையாளரான அஹ்திசாரி, 2014 இல் “மேற்கத்திய ஜனநாயகங்கள் இருக்கும் அனைத்து சர்வதேச அமைப்புகளிலும் நீண்ட காலத்திற்கு முன்பே பின்லாந்தும் இருந்திருக்க வேண்டும். அதில் நேட்டோவும் அடங்கும்” எனக் கூறினார்.

ஆப்கானிஸ்தானில் சுவீடன் படைகள் [Photo by Brindefalk from Karlskrona, Sweden / CC BY 4.0] [Photo by Brindefalk from Karlskrona, Sweden / CC BY 4.0]

கோரான் பேர்சோனின் சமூக ஜனநாயகக் கட்சியின் தலைமையிலான அரசாங்கத்தின் கீழ், 2002 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் சுவீடன் அதன் வெளியுறவுக் கொள்கை நடுநிலைமையை முறையாகக் கைவிட்டது. கொசோவோ மற்றும் ஆப்கானிஸ்தானில் நேட்டோ ஆக்கிரமிப்புப் படைகளுக்கு ஆதரவாக சுவீடன் துருப்புக்கள் அனுப்பப்பட்டதுடன் இது ஒத்துப்போனது. சுவீடன் போர் விமானங்கள் லிபியா மீதான நேட்டோவின் காட்டுமிராண்டித்தனமான குண்டுவீச்சில் பின்னர் இணைந்து பல்லாயிரக்கணக்கான உயிர்களைக் கொன்றதுடன் மற்றும் இன்றுவரை தொடரும் ஒரு உள்நாட்டுப் போரில் நாட்டை மூழ்கடித்தது.

பாசிச சக்திகளால் வழிநடத்தப்பட்ட 2014 ஆம் ஆண்டு மேற்கத்திய ஆதரவுடைய மைதான் சதி, கியேவில் ரஷ்ய சார்பு உக்ரேனிய ஜனாதிபதி விக்டர் யானுகோவிச்சை தூக்கியெறிவதற்கு வழிவகுத்தது, இது ஒரு பெரிய இராணுவ தயாரிப்பை நியாயப்படுத்துவதற்கு ஸ்காண்டிநேவியாவால் பற்றிக்கொள்ளப்பட்டது. ரஷ்ய மொழி பேசும் உக்ரேனியர்களை துன்புறுத்திய கியேவில் மேற்கத்திய சார்பு ஆட்சியை நிறுவியதன் பிரதிபலிப்பாக, கிரிமியாவை ரஷ்யா தன்னுடன் இணைத்ததை மேற்கோள் காட்டி, சுவீடன் பாதுகாப்பு செலவினங்களில் பாரிய அதிகரிப்பைத் தொடங்கியது. பின்லாந்து மற்றும் சுவீடன் ஆகிய இரண்டும் நேட்டோவின் கூட்டுழைப்பு பரிமாற்ற (Partnership Interoperability) முன்முயற்சியின் மூலம் 'மேம்படுத்தப்பட்ட வாய்ப்பு பங்காளிகளாக' ஆனது. இது 2014 வேல்ஸில் நடந்த நேட்டோ உச்சிமாநாட்டில் தொடங்கப்பட்டதுடன், இது கூட்டாளிகள் பயிற்சிகளில் சேரவும் நேட்டோ தரநிலைகளை பின்பற்றவும் அனுமதிக்கிறது. உக்ரேன் மற்றொரு 'மேம்படுத்தப்பட்ட வாய்ப்புக்கான பங்குதாரரானது'.

மே 2022 இல் ஃபின்லாந்தில் நடைபெற்ற கூட்டுப் படைப் பயிற்சியான Exercise Arrow வின் போது UK Challenger 2 தாங்கி செயல்பாட்டில் உள்ளது [Photo by Defence Equipment & Support] [Photo by Defence Equipment & Support]

பசுமைக் கட்சி மற்றும் இடது கட்சியின் ஆதரவை நம்பியிருக்கும் ஸ்டீபன் லோஃப்வெனின் சமூக ஜனநாயகக் கட்சி தலைமையிலான அரசாங்கம், பின்லாந்து மற்றும் நேட்டோ உறுப்பினர்களான டென்மார்க், நோர்வே மற்றும் ஐஸ்லாந்துடன் 2015 இல் நோர்டிக் பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. 2017 இல், ரஷ்யாவை எதிர்கொள்வதை வெளிப்படையாக நோக்கமாகக் கொண்ட பிரிட்டிஷ் தலைமையிலான பால்டிக் மற்றும் நோர்டிக் நேட்டோ உறுப்பினர்களின் கூட்டணியான கூட்டுப் நடவடிக்கை படையில் (JEF) ஹெல்சின்கியும் ஸ்ரொக்ஹோமும் இணைந்தன.

ரஷ்யாவுடனான அமெரிக்க-நேட்டோ போர் மற்றும் நேட்டோவில் இணைவதற்கான அவசரம்

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் உக்ரேன் மீதான படையெடுப்பைத் தொடர்ந்து பின்லாந்தும் சுவீடனும் தங்கள் வெளியுறவுக் கொள்கையில் பெரும் மாற்றத்தை செய்ததாகக் கூறும் ஊடக அறிக்கைகளின் அபத்தத்தை இந்த வரலாறு தெளிவுபடுத்துகிறது. நேட்டோவில் இணைவதற்கான ஸ்ரொக்ஹோம் மற்றும் ஹெல்சின்கியின் திட்டங்கள் நீண்ட காலமாக செயல்பாட்டில் இருந்ததுடன் மேலும் அவற்றை செயல்படுத்தப்படுவதற்கான ஒரு சாக்குப்போக்குக்கு மட்டுமே காத்திருந்தன.

புட்டினின் படையெடுப்புகளுக்கு வழிவகுத்த நேட்டோ ஆத்திரமூட்டல்களின் தொடரில் பின்லாந்தும் சுவீடனும் நெருக்கமாக ஈடுபட்டிருந்தன. கருங்கடல் மற்றும் பால்டிக் பிராந்தியத்தில் உக்ரேனுடன் நேட்டோ தலைமையிலான பயிற்சிகளில் அவர்களது இராணுவத்தினர் கலந்துகொண்டனர். டிசம்பர் 2021 இல், பைடென் நிர்வாகம் பாதுகாப்பு உத்தரவாதங்கள் குறித்த பேச்சுவார்த்தைகளுக்கான ரஷ்யாவின் முறையீட்டை நிராகரித்த அதே மாதத்தில், லாக்ஹீட் மார்ட்டின் நிறுவனத்திடமிருந்து F-35 போர் விமானங்கள் 64 இனை வாங்குவதற்கு வாஷிங்டனுடன் பின்லாந்து ஒரு ஒப்பந்தத்தை இறுதி செய்தது. ஜேர்மனியின் அளவுக்கு 900 போர் விமானங்களை வாங்குவதற்கு சமமான இந்த ஒப்பந்தம், ஃபின்லாந்து வரலாற்றில் மிகப்பெரிய இராணுவ கொள்முதல் ஆகும்.

ரஷ்யாவின் படையெடுப்பைத் தொடர்ந்து, சுவீடனும் பின்லாந்தும் விரைவாக முழுப் போர் முறைக்கு மாறின. உக்ரேனுக்கு ஆயுதங்கள் மற்றும் இராணுவ உபகரணங்களை அனுப்ப பெப்ரவரி 28 அன்று சுவீடன் பாராளுமன்றத்தில் சமூக ஜனநாயகக் கட்சியினர் ஒருமனதாக ஆதரவைப் பெற்றனர். 1939 இல் பின்லாந்துக்கும் சோவியத் ஒன்றியத்துக்கும் இடையிலான குளிர்காலப் போருக்குப் பின்னர் சுவீடன் அதிகாரப்பூர்வமாக போரில் ஈடுபட்டுள்ள ஒரு நாட்டிற்கு ஆயுதங்களை அனுப்பியுள்ளது.

குளிர்காலப் போரின் போது ஒரு பின்லாந்து Maxim M-32 இயந்திர துப்பாக்கி அகழி[Photo by unknown author / CC BY 4.0] [Photo by unknown author / CC BY 4.0]

இந்த முடிவுடன் முன்னாள் ஸ்ராலினிச இடது கட்சி போர்க் காய்ச்சலை முழுமையாகத் தழுவிக்கொண்டது. பெப்ரவரி 27 அன்று நடந்த கட்சித் தலைமைக் கூட்டத்தில், உக்ரேனுக்கு ஆயுதங்கள் வழங்குவதை எதிர்க்கும் முடிவை கட்சி முதலில் எடுத்தது. ஆனால் அடுத்த நாள் பாராளுமன்றத்தில் ஐந்து பிரதிநிதிகள் தமது நிலைப்பாட்டை கடந்து ஆயுத பரிமாற்றத்திற்கு ஆதரவளித்த பின்னர், மார்ச் 1 அன்று நடந்த இரண்டாவது தலைமைக் கூட்டம், உக்ரேனுக்கு ஆயுதங்கள் வழங்குவதை எதிர்ப்பது என இரண்டு நாட்களுக்கு முன்னர் எடுத்த இடது கட்சியின் நிலைப்பாட்டை மாற்றியது.

ஜூலை 7, 2021 அன்று பாராளுமன்றத்தில் இடது கட்சித் தலைவர் நூஷி டாட்கோஸ்டார் பேசுகிறார் [Photo by Frankie Fouganthin-Eget arbete / CC BY 4.0] [Photo by Frankie Fouganthin-Eget arbete / CC BY 4.0]

இடது கட்சித் தலைவர் நூஷி டாட்கோஸ்டார் மார்ச் மாதத்தின் பிற்பகுதியில் ஒரு தேசியவாத உரையில் நேட்டோ உறுப்புரிமைக்கான தனது ஆதரவை அறிவித்தார். 'எந்தவொரு இராணுவக் கூட்டணிக்கும் வெளியே இருந்தால் நாங்கள் சுவீடனில் மிகவும் பாதுகாப்பாக இருக்கிறோம் என்பதே எனது நிலைப்பாடு' என்று அவர் கூறினார். “ஆனால் நாம் பரந்த உடன்பாட்டைக் கொண்டிருப்பது முக்கியம். ஒரு மக்கள் மற்றும் ஒரே தேசமாக நாம் இதை ஒன்றாகச் செய்வோம். கார்ல் பில்டுடன் (முன்னாள் பழமைவாத பிரதம மந்திரி மற்றும் நேட்டோ உறுப்பினர்களின் நீண்டகால ஆதரவாளர்) நான் அடிக்கடி உடன்படவில்லை. ஆனால் இந்த கேள்வியில் நான் ஒன்றுபடுகின்றேன். இடதுசாரிகள் இருக்கிறார்கள், வலதுசாரிகளும் இருக்கிறார்கள். ஆனால் சுவீடன் இராணுவம் அனைவரையும் ஒன்றாக கொண்டுள்ளது”.

பின்லாந்து போலி-இடதுகள் இதற்கு சமமான வெறித்தனமான முறையில் நடந்து கொண்டனர். ஜூன் 2019 இல் சமூக ஜனநாயகக் கட்சி தலைமையிலான அரசாங்கத்தில் சேர்வதற்கான பேச்சுவார்த்தையின் போது, அரசாங்கத்தின் பதவிக்காலத்தில் பின்லாந்து நேட்டோவில் சேராது என்று கூறியதால் நிபந்தனையுடன் அவ்வாறு செய்ததாக குறிப்பிட்டது. இடது கூட்டணி பின்லாந்தின் நேட்டோ விண்ணப்பத்தை ஏற்றுக்கொண்டது. நேட்டோவிற்கு இடதுசாரிக் கூட்டணியின் பொதுவான எதிர்ப்பு இருந்தபோதிலும், கட்சியின் தலைவர் லீ ஆண்டர்சன் மே மாத தொடக்கத்தில் அவர் கல்வி மந்திரி பதவியை வகிக்கும் அரசாங்கம் நேட்டோவில் சேர விண்ணப்பத்தை தாக்கல் செய்தால், தனது பதவியை இராஜினாமா செய்வதற்கான ஒரு காரணமாக அதை பார்க்க மாட்டோம் என்று அறிவித்தார்.' இடது கூட்டணி இந்த பிரச்சினையில் மிகவும் ஒருமனதாக இருந்தது, ஆனால் இப்போது கட்சிக்குள் இரண்டு தனித்துவமான முகாம்கள் உள்ளன. மற்றும் பலர் அவர்களின் நிலைப்பாடு குறித்து உறுதியாக இருக்கவில்லை' என்று மே 7 அன்று கட்சித் தலைமையின் கூட்டத்தைத் தொடர்ந்து ஆண்டர்சன் அறிவித்தார்.

ஆண்டர்சன் கட்சி குழு மற்றும் பாராளுமன்றக் குழுவின் கூட்டுக் கூட்டத்தின் ஆதரவைப் பெற்றார், இது நேட்டோ உறுப்பினர் விண்ணப்பம் தாக்கல் செய்யப்பட்டால் அரசாங்கத்தில் நீடிக்க 52 வாக்குகள் ஆதரவாகவும் 10 வாக்குகள் எதிராகவும் கிடைத்தன. நேட்டோவிற்கு இடது கூட்டணியின் 'எதிர்ப்பு' வெறும் காகிதத்தில் மட்டுமே இருந்தது. மே 12 அன்று ஆண்டர்சன் இதை வெளிப்படையாகக் கூறி, நேட்டோவிற்கான விண்ணப்பத்திற்கு தனது ஆதரவை அறிவித்தார்.

மூன்று நாட்களுக்குப் பின்னர், சமூக ஜனநாயகக் கட்சியின் தேசிய குழுவில் நேட்டோ உறுப்பினர்களுக்கு ஆதரவாக பெரும் வாக்குகள் கிடைத்தன. 60 உறுப்பினர்களில் 53 பேர் கூட்டணியில் சேர வாக்களித்தனர். மே 17 அன்று பாராளுமன்றத்தில் பேசிய பிரதம மந்திரி மரின், 'எங்கள் பாதுகாப்பு சூழல் அடிப்படையில் மாறிவிட்டது' என்று அறிவித்தார்.

ரஷ்யாவுடனான அமெரிக்க-நேட்டோ போரில் பின்லாந்து மற்றும் சுவீடனை முன்னணி அரண் நாடுகளாக மாற்றப்பட்டதானது, அதே அரசியல் சக்திகளால் பல தசாப்தங்களாக பெரும் சக்திகளின் போட்டிகளுக்கு வெளியே இருக்கவும், முதலாளித்துவத்தை மிகவும் அமைதியான மற்றும் 'நியாயமான' சமூகமாக சீர்திருத்தவும் முடியும் எனக் கூறியமையும் சர்வதேச அளவில் உழைக்கும் மக்களுக்கு ஒரு அரசியல் பாடமாகும். உலகப் போரின் ஆபத்து, சமூக சமத்துவமின்மையின் வளர்ச்சி மற்றும் மில்லியன் கணக்கானவர்களைக் கொன்ற கொடிய தொற்றுநோய் ஆகியவற்றில் வெளிப்படுத்தப்பட்டுள்ள உலக முதலாளித்துவத்தின் ஆழமடைந்து வரும் நெருக்கடியால் உலகின் எந்தப் பகுதியையும் தீண்டப்படாமல் விடப்படவில்லை. தேசிய குறுகிய மனப்பான்மை மற்றும் துண்டு துண்டான சீர்திருத்தங்களை அடிப்படையாகக் கொண்ட 'சுவீடன் மாதிரியை' உலகெங்கிலும் உள்ள 'முற்போக்குவாதிகள்' நியாயப்படுத்திய அரசியல் கற்பனைகள் இன்று திவாலாகிவிட்டமை நிரூபிக்கப்பட்டுள்ளது.

போர் மற்றும் பெருகிவரும் சமூக நெருக்கடியை எதிர்ப்பதற்கு, சுவீடன், பின்லாந்து மற்றும் ஸ்காண்டிநேவியா முழுவதும் உள்ள தொழிலாளர்கள் வெளியுறவுக் கொள்கை மற்றும் உள்நாட்டில் சமூக சமரசம் ஆகியவற்றிற்கான சமூக ஜனநாயக 'நடுநிலை' நாட்களுக்கு திரும்ப முடியாது. முதலாளித்துவத்தின் தற்காலிக போருக்குப் பிந்தைய மறுசீரமைப்பு மற்றும் இந்த கொள்கைகளை சாத்தியமாக்கிய பெரும் சக்திகளுக்கு இடையிலான சக்திகளின் சமநிலை நீண்ட காலமாக மறைந்துவிட்டன. ஒரு புதிய அரசியல் நோக்குநிலையின் அடிப்படையில் ஒரு வெகுஜன போர்-எதிர்ப்பு இயக்கத்தை கட்டியெழுப்புவது அவசியமானது. சுவீடன் மற்றும் ஃபின்லாந்தில் உள்ள தொழிலாள வர்க்கத்தை ஐரோப்பா முழுவதிலும் மற்றும் உலகம் முழுவதிலும் உள்ள வர்க்க சகோதர சகோதரிகளுடன் ஒரு சோசலிச மற்றும் சர்வதேசியவாதத்தின் அடிப்படையில் ஐக்கியப்படுத்துதல் இன்றைய நிகழ்ச்சிநிரலில் உள்ளது. இந்தப் போராட்டம் ஸ்காண்டிநேவியப் பகுதி முழுவதும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பிரிவுகளை ஸ்தாபிப்பதை அவசியமாக்குகிறது.

மேலும் படிக்க

Loading