கருங்கடல் பிராந்தியத்தின் பொருளாதார, புவி மூலோபாய முக்கியத்துவமும் உக்ரேனில் ரஷ்யாவிற்கு எதிரான ஏகாதிபத்திய பினாமிப் போரும்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

ரஷ்யாவிற்கு எதிரான உக்ரேனில் ஏகாதிபத்திய பினாமிப் போரானது, முன்னாள் சோவியத் ஒன்றியத்தின் பிரதேசங்களைத் தங்கள் நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவதற்கான ஏகாதிபத்திய சக்திகளின் பல தசாப்த கால உந்துதலின் விளைவையும், உலகின் மூலவளங்களை மறுபகிர்வு செய்வதற்கான ஏகாதிபத்திய சக்திகளுக்கு இடையிலான ஒரு புதிய உலகப் போராட்டத்தின் எழுச்சியின் பண்புரீதியான ஒரு புதிய கட்டத்தினையும் பிரதிநிதித்துவப்படுத்துகின்றது.

ரஷ்யாவை போர் மூலம் அடிபணியச் செய்யும் ஏகாதிபத்திய உந்துதலின் புவி மூலோபாய மற்றும் பொருளாதார நோக்கங்களில் முக்கியமான கனிமவளங்களின் பங்கு பற்றிய சமீபத்திய ஆய்வில், உலக சோசலிச வலைத் தளம் பின்வருமாறு குறிப்பிட்டது.

ரஷ்யாவை உடைப்பதும், அமெரிக்க மூலதனத்தால் அதனை மேலாதிக்கம் செய்வதும், சீனா மற்றும் யூரேசியாவை இன்னும் பரந்த அளவில் அதன் நோக்கங்களுக்கு அடிபணியவைப்பதன் மூலம் ஒரு 'புதிய அமெரிக்க நூற்றாண்டை' சுமத்த முயலும் அமெரிக்க ஆளும் வர்க்கத்தின் முயற்சிகளில் ஒரு மூலோபாய படிக்கல்லாக இருக்கும். இதில் மூலவளங்கள் ஒரு பங்கு வகிக்கின்றன. எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவின் நீடித்த தேவை மற்றும் முக்கியமான கனிமவளங்களுக்கான வேகமாக அதிகரித்துவரும் தேவை ஆகியவற்றின் மத்தியில், ரஷ்யா பரந்தளவிலான செல்வங்களைக் கொண்டுள்ள ஒரு பாரிய நிலப்பரப்பாக நோக்கப்படுகின்றது.

ரஷ்யாவிற்கு எதிரான போர், சீனாவிற்கு எதிரான போருக்கான ஒரு 'படிக்கல்' என்றால், கருங்கடல் மீதான கட்டுப்பாடு ரஷ்யாவை உடைப்பதற்கான ஒரு படிக்கல் எனக் கருதப்படுகிறது. இந்தப் போர் நடைபெறும் கருங்கடல் பகுதியின் முக்கியமான முக்கியத்துவத்தை புவிசார் மூலோபாய மற்றும் பொருளாதார நிலைப்பாட்டில் இருந்து இந்தக் கட்டுரை மதிப்பாய்வு செய்யும்.

கருங்கடல் பகுதியின் புவிசார் மூலோபாய முக்கியத்துவம்

1917 அக்டோபர் புரட்சியைத் தொடர்ந்து ஏழு தசாப்தங்களாக ஏகாதிபத்தியத்திற்கு கிடைக்காதிருந்த முன்னாள் சோவியத் ஒன்றியத்தின் மூலவளங்களை நேரடியாக அணுகுவது, பல தசாப்தங்களாக ஏகாதிபத்திய சக்திகளின் முக்கிய இலக்காக உள்ளது. இந்த உள்ளடக்கத்தில், கிழக்கு மற்றும் தென்கிழக்கு ஐரோப்பா, ரஷ்யா, காகசஸ் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு இடையே ஒரு இணைப்பை உருவாக்கும் கருங்கடல் பகுதி மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்தது.

ஐரோப்பா, காகசஸ் மற்றும் மத்திய ஆசியா இடையே கருங்கடல் ஒரு பாலத்தை உருவாக்குகிறது [Photo by Google Maps] [Photo by Google Maps]

ஏற்கனவே நீடித்த பொருளாதார மற்றும் அரசியல் வீழ்ச்சியின் மத்தியிலிருக்கும் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு, ஸ்ராலினிச அதிகாரத்துவத்தால் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டதும் மற்றும் முதலாளித்துவத்தை மீட்டெடுத்ததும் சொர்க்கத்திலிருந்து கிடைத்த பரிசாகத் தோன்றியது. வெற்றி வெறி போதையில், அமெரிக்க ஆளும் வர்க்கம் 1991 ஐ 'ஒருமுனைத் தருணம்' என்று அறிவித்தது. 1992 இல், பென்டகனின் மூலோபாய ஆவணம், அமெரிக்க மூலோபாயம் 'எதிர்கால உலகளாவிய போட்டியாளரின் எழுச்சியைத் தடுப்பதில் இப்போது கவனம் செலுத்த வேண்டும்' என்று தீர்மானித்தது.

கடந்த அரை நூற்றாண்டில் வாஷிங்டனின் மிகவும் செல்வாக்கு மிக்க வெளியுறவுக் கொள்கை ஆலோசகர்களில் ஒருவரான அவரது பெரிய சதுரங்கப்பலகை (The Grand Chessboard) என்ற புத்தகத்தில் ஸிபிக்னியேவ் பிரெஸின்ஸ்கி (Zbigniew Brzezinski), அமெரிக்கா அதனது உலகளாவிய மேலாதிக்கத்தை பாதுகாக்கும் அவநம்பிக்கையான முயற்சிகளுக்காக புவிசார் மூலோபாயவாதிகள் 'யூரேசியா' என்று அழைக்கும் ஐரோப்பிய ஆசிய நிலப்பரப்பை உள்ளடக்கிய பகுதியின் முக்கியத்துவத்தை விவரித்தார்.

ஸிபிக்னியேவ் பிரெஸின்ஸ்கி

யூரேசியாவிற்குள், பிரெஸின்ஸ்கி 'யூரேசிய பால்கன்கள்' என்று அழைத்ததை யூரேசியா முழுவதுமாக கட்டுப்படுத்துவதில் பெரும் மோதல்கள் நடக்கும் பகுதி என்று அடையாளம் காட்டினார். இந்த பகுதி, 'கருங்கடலில் உள்ள கிரிமியாவிலிருந்து நேரடியாக கிழக்கு நோக்கி ரஷ்யாவின் புதிய தெற்கு எல்லைகள் வழியாக, சீன மாகாணமான ஜின்ஜியாங் வரை, பின்னர் இந்தியப் பெருங்கடலில் இருந்து மேற்கு நோக்கி செங்கடல் வரை, பின்னர் வடக்கு நோக்கி கிழக்கு மத்தியதரைக் கடல் மற்றும் மீண்டும் கிரிமியாவரை நீண்டுள்ளது' என பிரெஸின்ஸ்கி எழுதினார்.

அவர் தொடர்ந்தார் 'இந்த பிராந்தியத்தில் உள்ள 25 நாடுகளில் ஏறக்குறைய அனைத்துமே இன ரீதியாகவும், மத ரீதியாகவும் பன்முகத்தன்மை கொண்டவையும் மற்றும் நடைமுறையில் அவை எதுவும் அரசியல்ரீதியாக ஸ்திரமானவை அல்ல. … கொந்தளிப்பான வெறுப்புகளால் கிழிந்து, போட்டியிடும் சக்தி வாய்ந்த அண்டை நாடுகளால் சூழப்பட்ட இந்தப் பெரிய பகுதி, தேசிய-அரசுகளுக்கிடையேயான போர்களுக்கும், மேலும், நீடித்த இன மற்றும் மத வன்முறைகளுக்கும் ஒரு பெரிய போர்க்களமாக இருக்கலாம்”.

'யூரேசிய பால்கன்கள்', ஸிபிக்னியேவ் பிரெஸின்ஸ்கியின்படி அவரது புத்தகமான The Grand Chessboard இலிருந்து எடுத்த வரைபடம் [Photo by Zbigniew Brzeziński ] [Photo by Zbigniew Brzeziński ]

பிரெஸின்ஸ்கியின் புத்தகம் ஒரு 'கணிப்பு' அல்ல. மாறாக அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் அடிப்படை மூலோபாய நோக்கங்கள் மற்றும் பரிசீலனைகளின் ஒரு வரைபடம் ஆகும். உண்மையில், அவர் 'யூரேசிய பால்கன்கள்' என்று அழைத்த பகுதி கடந்த தசாப்தங்களில் அமெரிக்க குண்டுவீச்சு தாக்குதல்கள் மற்றும் படையெடுப்புகள் மற்றும் உள்நாட்டுப் போர்கள் மற்றும் இனக்கலவரங்களை திட்டமிட்டு தூண்டுதல் ஆகியவற்றின் மூலம் தலைகீழாக மாற்றப்பட்டுள்ளது.

1991 இல் ஈராக் மீதான அமெரிக்க படையெடுப்பு, 2001 இல் ஆப்கானிஸ்தான் படையெடுப்பு மற்றும் 2003 இல் ஈராக் மீதான இரண்டாவது படையெடுப்பு தொடங்கி, பாக்கிஸ்தான் மற்றும் பல நாடுகளில் ஆளில்லா விமானம் மற்றும் பிற போர் முறைகள் மூலம் ஏகாதிபத்தியத்தின் முக்கிய தலையீடுகள் இடம்பெற்றுள்ளன. 1990கள் முழுவதும், அமெரிக்காவும் ஜேர்மனியும் முன்னாள் யூகோஸ்லாவியாவில் இன மோதல்களை தூண்டியமை, 1999 இல் சேர்பியா மீதான காட்டுமிராண்டித்தனமான நேட்டோ குண்டுவீச்சில் உச்சக்கட்டத்தை அடைந்தது.

மிக சமீபத்தில், ரஷ்யாவிற்கும் கஜகஸ்தானுக்கும் எல்லையாக இருக்கும் சீனாவின் புவி மூலோபாயரீதியில் முக்கியமான ஜின்ஜியாங் மாகாணம், சீனாவிற்கு எதிரான அமெரிக்க ஆத்திரமூட்டல்கள் மற்றும் நாட்டை சீர்குலைத்து உடைக்கும் முயற்சிகளுக்கு ஒரு முக்கிய இடமாக மாறியுள்ளது. ரஷ்யாவிலும், பிரிவினைவாத போக்குகள் மற்றும் ஆளும் தன்னலக்குழுவிற்குள் பிராந்தியவாத மற்றும் அரசியல் மோதல்களை தூண்டுவது, நாட்டை சுற்றிவளைக்கும் இறுதி நோக்கத்துடன் அமெரிக்க கொள்கையின் மையக் கூறுபாடு ஆகும்.

இந்த 'யூரேசிய பால்கன்களின்' மேற்கு முனையான கருங்கடல் பகுதி, நேட்டோ விரிவாக்கம் மற்றும் வாஷிங்டனின் பல ஆட்சிக்கவிழ்ப்பு நடவடிக்கைகளின் மையப் புள்ளியாக இருந்து வருகிறது. ஸ்ராலினிச அதிகாரத்துவங்கள் 1989-1991ல் சோவியத் ஒன்றியத்திலும் கிழக்கு ஐரோப்பா முழுவதிலும் முதலாளித்துவத்தை மீட்டெடுக்கும் வரை, கருங்கடல் பகுதி பெரும்பாலும் ஏகாதிபத்தியத்தின் நேரடிக் கட்டுப்பாட்டிற்கு வெளியே இருந்தது. கருங்கடலின் அண்டை நாடுகளில் ஒன்றான துருக்கி மட்டுமே நேட்டோ அங்கத்தவராக இருந்தது.

1991 இல் சோவியத் ஒன்றிய அழிவுடன் இது முற்றிலும் மாறியது. இன்று, நேட்டோவின் கிழக்கு நோக்கிய விரிவாக்கத்தின் மூன்று தசாப்தங்களுக்குப் பின்னர், ரஷ்யாவைத் தவிர கருங்கடலின் எல்லையில் உள்ள அனைத்து நாடுகளும் நேட்டோவில் (துருக்கி, ருமேனியா, பல்கேரியா) உறுப்பினர்களாக உள்ளன அல்லது அமெரிக்க ஏகாதிபத்தியம் அந்நாடுகளின் அரசியலில் பாரிய தலையீடுகளைத் தொடர்ந்து (உக்ரேன், ஜோர்ஜியா), பெயரளவில் இல்லாவிட்டாலும் பெரும்பாலும் கூட்டணியில் ஒருங்கிணைக்கப்பட்டது.

கருங்கடல் மற்றும் பால்டிக் கடலுக்கு நேட்டோவின் விரிவாக்கத்திற்கு மேலதிகமாக, இந்த நடவடிக்கைகளில் 2003 மற்றும் 2004-2005 'வண்ணப் புரட்சிகள்' அடங்கும். அமெரிக்கா ஆதரவளிக்கும் குறிப்பாக ஜோர்ஜியா மற்றும் உக்ரேனில் இந்த சதிகள் சலுகை பெற்ற நடுத்தர வர்க்கத்தின் அடுக்குகள் மற்றும் தன்னலக்குழுவின் பிரிவுகளை அணிதிரட்டுவதை நம்பியிருந்தன.

2008 இல், ஜோர்ஜியா, வாஷிங்டனின் ஆதரவுடன், கருங்கடலின் கிழக்குக் கரையில் உள்ள தெற்கு ஒசேஷியா மற்றும் அப்காசியா ஆகிய இரண்டு பிரிந்து சென்ற பகுதிகள் தொடர்பாக ரஷ்யாவுடன் போரைத் தூண்டியது.

இந்த நடவடிக்கைகள் கியேவில் 2014 ஆட்சிக் கவிழ்ப்பில் உச்சக்கட்டத்தை அடைந்தன. அது ஜேர்மனி மற்றும் அமெரிக்காவால் பெரிதும் ஆதரிக்கப்பட்டதுடன், Right Sector போன்ற தீவிர வலதுசாரி ஆயுதக்குழுக்கள் மற்றும் உக்ரேனிய தன்னலக்குழுவின் ஒரு பகுதிகளால் மேற்கொள்ளப்பட்டது. அப்போது அத்தன்னலக்குழு 'சாக்லேட் வணிக தன்னலவாதி' பெட்ரோ பொரோஷென்கோவின் தலைமையில் இருந்தது.

1949 முதல் நேட்டோவின் கிழக்கு நோக்கிய விரிவாக்கத்தைக் காட்டும் வரைபடம் [Photo by Patrickneil/CC BY-NC-SA 4.0] [Photo by Patrickneil / CC BY-NC-SA 4.0]

ரஷ்யாவை சுற்றி வளைப்பதற்கான இந்த வெளிப்படையான நகர்வுகள், கருங்கடல் 'நேட்டோ ஏரியாக' மாற்றப்படும் என்ற அச்சத்தை கிரெம்ளினில் தூண்டியுள்ளது. உண்மையில், இதுதான் வாஷிங்டனின் நோக்கமாக இருந்தது. குறிப்பாக, கருங்கடல் மீதான முழு நேட்டோ கட்டுப்பாடு ரஷ்யாவிற்கு ஏற்படுத்தும் இராணுவ மற்றும் பொருளாதார விளைவுகளைப் பற்றி அது முழுமையாக அறிந்திருக்கிறது.

ரஷ்யாவுடனான மோதலில் கருங்கடல் பிராந்தியத்தின் இராணுவ முக்கியத்துவம்

ஓய்வுபெற்ற அமெரிக்க இராணுவ அதிகாரியும், அமெரிக்க இராணுவ ஐரோப்பாவின் முன்னாள் கட்டளைத் தளபதியுமான பென் ஹோட்ஜஸ், சமீபத்தில் அப்பட்டமாக இந்தப் பினாமிப்போரில் அமெரிக்காவின் இலக்கு “ரஷ்யாவிற்கு வெளியே ஜோர்ஜியா, மால்டோவாவை மற்றும் எங்கள் பால்டிக் கூட்டாளிகளை அச்சுறுத்தும் அதிகாரத்தை வெளிப்படுத்தும் ரஷ்யாவின் திறனின் முதுகை உடைப்பதில் அடங்கியிருந்தது” என்று கூறியிருந்தார்.

கருங்கடல் பிராந்தியத்தில் கிரெம்ளினின் நிலையை குறைமதிப்பிற்கு உட்படுத்துவது இந்த இலக்கை அடைவதற்கு முக்கியமானது.

அமெரிக்க பாதுகாப்புத் துறையின் ஐரோப்பிய கொள்கைக்கான இயக்குனர் ஆல்டன் புலான்ட், கருங்கடலை 'ரஷ்யாவின் புவிசார் மூலோபாய ஈர்ப்பு மையம்' என்றும் அதன் 'தெற்கிற்கான நுழைவாயில், மத்திய கிழக்கிற்கான நுழைவாயில் [மற்றும்]… ஆசியாவுக்கான நுழைவாயில்' என்றும் விவரித்தார்.

கருங்கடல் வழியாகவும், போஸ்பரஸ் (Bosphorus) ஜலசந்தி வழியாகவும் ரஷ்யாவிற்கு மத்தியதரைக் கடலுக்கான பாதை உள்ளது. எவ்வாறாயினும், போஸ்பரஸ் மற்றும் டார்டனெல்லஸ் ரஷ்யாவுடன் மிகவும் பதட்டமான உறவை கொண்டுள்ள நேட்டோ அங்கத்தவரான துருக்கியால் கட்டுப்படுத்தப்படுவதால், இந்த வசதி மிகவும் தற்காலிகமானது. (போஸ்பரஸ் மீதான கட்டுப்பாடு முதலாம் உலகப் போரில் ஒட்டோமான் பேரரசுக்கு எதிராக ரஷ்ய பேரரசின் முக்கிய நோக்கமாக இருந்தது.)

போஸ்பரஸ் ஜலசந்தி (சிவப்பு) மற்றும் டார்டனெல்லஸ் ஜலசந்தி (மஞ்சள்) [Photo by User:Ineriot /CC BY-NC-SA 4.0] [Photo by User:Ineriot / CC BY-NC-SA 4.0]

கருங்கடல் நாடுகள் ரஷ்யாவிற்கு அருகாமையில் இருப்பதால், நாட்டின் பெரும்பான்மையான மக்கள் வசிக்கும் ஐரோப்பிய ரஷ்யாவின் பெரும் பகுதிகள், உக்ரேனில் அல்லது ருமேனியா அல்லது பல்கேரியா போன்ற அந்த பகுதியில் நேட்டோ அங்கத்துவ நாடுகளில் நிலைநிறுத்தப்பட்டுள்ள அமெரிக்க கடல் மற்றும் நிலம் சார்ந்த இடைநிலை ஏவுகணைகளால் எளிதில் குறிவைக்கப்படலாம்.

இந்த உள்ளடக்கத்தில், குறிப்பாக கடந்த பத்து ஆண்டுகளில் ரஷ்யா கருங்கடலில் தனது நிலைப்பாட்டை ஒரு முக்கிய இராணுவ முன்னுரிமையாக மாற்றியுள்ளது. 1991 க்குப் பின்னர் ரஷ்யா முன்னாள் சோவியத் ஒன்றியத்தில் தக்கவைத்துக் கொண்ட ஆறு இராணுவத் தளங்களில் கிரிமியாவில் உள்ள கருங்கடல் கடற்படைத் துறைமுகம் உட்பட மூன்று கருங்கடலில் அமைந்துள்ளன. கியேவில் 2014 இல் மேற்கத்திய ஆட்சிக் கவிழ்ப்பைத் தொடர்ந்து கருங்கடலில் உள்ள தீபகற்பமான கிரிமியாவை ரஷ்யா தன்னுடன் இணைத்தது. 2014 இல் அமெரிக்க கடற்படைப் போர்க் கல்லூரி, கிரிமியாவை இணைத்ததன் மூலம் ரஷ்யா “கருங்கடலில் கடற்படை ஆதிக்கத்தை' மீள் ஸ்தாபித்துக்கொள்ள முடிந்தது எனக் குறிப்பிட்டது.

கிரிமியாவில் உள்ள ரஷ்யாவின் இராணுவத் தளம் உக்ரேனுடனான மோதலில் மட்டும் முக்கியமானதல்ல. சிரியாவில் கிரெம்ளின் தனது இராணுவ நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தும் புள்ளியும் இதுதான். இங்கு 2011 இலிருந்து அமெரிக்க ஆதரவு பெற்ற இஸ்லாமிய எதிர்ப்பு (Islamist opposition) சக்திகளுக்கு எதிராக அசாத் ஆட்சியை ஆதரித்து வரும் ரஷ்யாவிற்கும் இடையே ஒரு உள்நாட்டுப் போர் மற்றும் நடைமுறையில் பினாமிப் போர் இடம்பெற்று வருகிறது.

கருங்கடலில் இருந்து ரஷ்யாவைத் துண்டித்து, அதன் மூலம் மத்திய தரைக்கடலை துண்டிப்பது, மத்திய கிழக்கிலும் வட ஆபிரிக்காவிலும் அதன் நிலையை கணிசமாகக் குறைமதிப்பிற்கு உட்படுத்தும். வட ஆபிரிக்காவில் குறிப்பாக 2011 நேட்டோ தாக்குதலால் ஒரு உள்நாட்டு போரினுள் தள்ளப்பட்டுள்ள லிபியாவில் ரஷ்யா இன்னும் குறிப்பிடத்தக்க பொருளாதார மற்றும் இராணுவ நலன்களைக் கொண்டுள்ளது.

கருங்கடல் பகுதியின் வரைபடம் [Photo by Norman Einstein/ CC BY-NC-SA 4.0] [Photo by Norman Einstein / CC BY-NC-SA 4.0]

கருங்கடலின் ரஷ்யாவிற்கான புவிசார் மூலோபாய மற்றும் இராணுவ முக்கியத்துவத்தை நன்கு அறிந்த நேட்டோ, அண்மைய ரஷ்ய படையெடுப்பிற்கும் அதற்கு முன்னரான கடந்த ஆண்டுகளில் பல ஆத்திரமூட்டல்களை அங்கு நடத்தியுள்ளது.

இதில் 2021 ஆம் ஆண்டில் கருங்கடலில், 32 நாடுகள், 5,000 துருப்புக்கள், 32 கப்பல்கள் மற்றும் 40 விமானங்களை உள்ளடக்கிய மாபெரும் Sea Breeze exercises அடங்கும். ஜூன் 2021 இல் கிரிமியாவிற்கு அப்பால் ரஷ்யா உரிமை கோரும் கடல் பகுதிக்குள் ஒரு போர்க்கப்பலை அனுப்பிய பிரிட்டன் உட்பட இது பல ஆத்திரமூட்டல்களை ஏற்படுத்தியது. இது நாசகாரி கப்பலின் பாதையில் ரஷ்ய இராணுவத்தை வெடிகுண்டை வீசத் தூண்டியது. 2021 வசந்த காலத்திலும் இலையுதிர்காலத்திலும், அமெரிக்காவும் ஆத்திரமூட்டும் வகையில் பல போர்க்கப்பல்களை கருங்கடலுக்கு அனுப்பியது. கிரெம்ளின் தனது தேசிய பாதுகாப்பு நலன்களின் அடிப்படையில் இதை 'சிவப்புக் கோடு' என்று கருதுகிறது என்பதை நன்கு அறிந்திருந்தது. பெப்ரவரி 2022 நிலவரப்படி, கருங்கடலில் நேட்டோ 18 போர்க்கப்பல்களை நிறுத்தி வைத்திருந்தது.

கடந்த மாதம், உலகளாவிய பட்டினி நெருக்கடியைத் தவிர்க்கும் ஒரு 'மனிதாபிமான பணி' என்ற மறைவின் கீழ், 'உக்ரேனிய தானியங்களை ஏற்றிச் செல்லும் சரக்குக் கப்பல்களைப் பாதுகாக்க' ரஷ்யாவிற்கு எதிராக கருங்கடலில் நேட்டோ தலைமையிலான கடற்படை தலையீட்டிற்கு பிரிட்டன் அழைப்பு விடுத்தது. இருப்பினும், உக்ரேன் மீதான ரஷ்ய படையெடுப்பின் தொடக்கத்திலிருந்து ரஷ்ய மற்றும் நேட்டோ போர்க்கப்பல்களுக்கு ஏஜியன் மற்றும் கருங்கடல்களுக்கு இடையிலான டார்டனெல்லெஸ் மற்றும் போஸ்பரஸ் ஜலசந்திகளை அங்காரா மூடியுள்ளது.

கருங்கடலை நேரடியாக எல்லையாகக் கொண்டிருக்கவில்லை என்றாலும், நேட்டோ உறுப்பினராக கிரீஸ், சமீபத்திய ஆண்டுகளில் கருங்கடல் பிராந்தியத்திற்கான அமெரிக்க-நேட்டோ திட்டங்களில் பெருகிய முறையில் மைய நாடாக மாறியுள்ளது. வடக்கு ஏஜியன் கடலில் உள்ள கிரேக்கத் துறைமுக நகரமான அலெக்ஸாண்ட்ரூபோலி, அமெரிக்காவின் முக்கியமான தளமாகவும், நிலை நிறுத்தப் புள்ளியாகவும் மாற்றப்பட்டுள்ளது. அங்காரா ஜலசந்தியை மூடியதிலிருந்து, ரஷ்யாவிற்கு எதிரான நேட்டோ போரில் உக்ரேனுக்கான இராணுவ விநியோகங்களுக்கு இந்த நகரம் பயன்படுத்தப்பட்டது.

'தானியம், எண்ணெய் விதைகள் மற்றும் கனிம எண்ணெய்கள்': வினியோக குழாய்கள் மற்றும் கருங்கடல் பிராந்தியத்தின் பொருளாதார வளங்கள்

கருங்கடல் பகுதி 20 ஆம் நூற்றாண்டின் இரண்டு உலகப் போர்களின் மைய அரங்காக இருந்து வருகிறது. குறிப்பாக ஜேர்மன் ஏகாதிபத்தியம் இப்பிராந்தியத்தை, குறிப்பாக உக்ரேனை தனது நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர முயன்றது. ஜேர்மன் வரலாற்றாசிரியர் கிறிஸ்டியான் கெயலாஹ், இரண்டு உலகப் போர்களிலும் ஜேர்மன் போர் நோக்கங்களுக்கிடையிலான ஒற்றுமைகளைக் குறிப்பிட்டு, முன்னாள் சோவியத் ஒன்றியத்தில் குறைந்தது 27 மில்லியன் பேர் கொல்லப்பட்ட நாஜிகளின் ஆக்கிரமிப்புக் கொள்கைகள்:' தானியங்கள், எண்ணெய் விதைகள் மற்றும் எண்ணெய்கள் என சில மூலப்பொருட்களைச் சுரண்டுவதில் கவனம் செலுத்தியதாக எழுதினார்'. (Christian Gerlach: Krieg, Ernährung, Völkermord. Deutsche Vernichtungspolitik im Zweiten Weltkrieg, Zürich 2001, p. 14)

இன்று அமெரிக்க மற்றும் ஜேர்மன் ஏகாதிபத்தியத்தின் போர்க் கொள்கைகள், ஒட்டுமொத்த பிராந்தியத்தையும் மீண்டும் அடிபணியச் செய்வதையும், ஏகாதிபத்திய சக்திகளின் காலனித்துவ பகுதிகளாக அவற்றை மாற்றுவதையும் அடிப்படையாக நோக்கமாகக் கொண்ட அந்த பாரம்பரியத்தில் நிற்கின்றன.

வேளாண்மை

போரினால் தூண்டப்பட்ட உணவு நெருக்கடியானது உலகளாவிய தானிய சந்தைக்கான கருங்கடல் பகுதியின் மைய முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகிறது. உண்மையில், இப்பகுதி, குறிப்பாக ரஷ்யா மற்றும் உக்ரேன் மற்றும் ஐரோப்பா மட்டுமல்ல, ஆபிரிக்கா மற்றும் மத்திய கிழக்கின் பெரும்பகுதியின் 'உணவுக்களஞ்சியம்' (“breadbasket”) என்று கருதப்படுகிறது.

உக்ரேனின் உயர்மட்ட ஏற்றுமதிகள் அனைத்தும் அதன் விவசாயத் தொழிலுடன் தொடர்புடையவை. 2020 ஆம் ஆண்டு நிலவரப்படி, பட்டியலில் எண்ணெய் விதைகள் (ஏற்றுமதியில் 10.1 சதவீதம், $5.32 பில்லியன் மதிப்பு), அதைத் தொடர்ந்து சோளம் (9.29 சதவீதம் அல்லது $4.89 பில்லியன்), கோதுமை (8.76 சதவீதம் அல்லது $4.61 பில்லியன்.)

2021 ஆம் ஆண்டில் உலகின் முன்னணி கோதுமை ஏற்றுமதியாளராக ரஷ்யா இருந்தது. உலகின் சோளச் சந்தையில் 2.3 சதவீதத்தை அந்நாடு கொண்டுள்ளது. உக்ரேனுடன் சேர்ந்து, ரஷ்யாவும் சூரியகாந்தி எண்ணெய் மற்றும் பார்லி உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் முன்னணியில் உள்ளது. ருமேனியாவும் ஒரு முக்கிய விவசாய உற்பத்தியாளராக உள்ளது. 2021 ஆம் ஆண்டு நிலவரப்படி, ருமேனியா ஐரோப்பாவின் மிகப்பெரிய சோள மற்றும் சூரியகாந்தி உற்பத்தியாளரும் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் முதல் ஐந்து கோதுமை மற்றும் சோயாவிதை உற்பத்தியாளர்களில் ஒன்றாகும்.

இந்த வளங்களின் மீதான கட்டுப்பாடு, மகத்தான இலாபத்தை உறுதியளிக்கிறது. குறிப்பாக உணவு நெருக்கடியின் போது விவசாய பெருநிறுவனங்கள் சோள விலையில் பாரிய ஊகவணிகங்களில் ஈடுபடும் போது. ஏற்கனவே கடந்த ஆண்டு, உலக உணவு நிறுவனமான Cargill, உலகின் மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்றான மற்றும் உலகளாவிய விவசாய சந்தையில் 70 சதவீதத்தை கட்டுப்படுத்தும் நான்கு நிறுவனங்களில் ஒன்றாகும். இது 134 பில்லியன் டாலர்கள் வருவாயில் 5 பில்லியன் டாலர்கள் இலாபத்தில் முதலிடத்தை பிடித்தது. தொற்றுநோய்களின் போது Cargill குடும்பத்தின் ஒருங்கிணைந்த செல்வம் ஒரு நாளைக்கு சராசரியாக 120 மில்லியன் டாலர்களாக வளர்ந்தது. மேலும் இது அதிகூடிய உணவு விலைகளுக்கு மத்தியில் கணிசமாக மேலும் வளர உள்ளது.

எரிவாயு மற்றும் எண்ணெய்

அதன் சொந்த பரந்த விவசாய மற்றும் மூலப்பொருள் வளங்களைவிட, கருங்கடல் பகுதி ரஷ்யாவின் எண்ணெய் ஏற்றுமதிக்கும், காகசஸ் மற்றும் மத்திய ஆசியாவில் இருந்து எண்ணெய் மற்றும் எரிவாயு இருப்புக்களை கொண்டு செல்வதற்கும் முக்கியமானதாகும்.

2021 ஆம் ஆண்டில் வாஷிங்டனை தளமாகக் கொண்ட சிந்தனைக் குழுவான Carnegie அறக்கட்டளையின் ஒரு பகுப்பாய்வு, “கருங்கடல் ரஷ்யாவிற்கு ஒரு முக்கியமான வர்த்தகம் மற்றும் போக்குவரத்து நாடியாக உள்ளது. ரஷ்யாவும் மத்திய ஆசிய நாடுகளும் கப்பல் மூலம் தானியம் மற்றும் எண்ணெயை ஏற்றுமதி செய்வதற்காக ரஷ்ய துறைமுகமான நோவோரோசிஸ்க்கையே அதிகம் நம்பியுள்ளன.

ரஷ்யா ஒரு 'ஏகாதிபத்திய' நாடாக இல்லாததுடன், அதனது அனைத்து தேவைகளுடனும் நோக்கங்களுடனும், எல்லாவற்றிற்கும் மேலாக உலகப் பொருளாதாரத்தின் மூலப்பொருள் வினியோகஸ்தராக இருக்கிறது. எண்ணெய் மற்றும் எரிவாயு, நிலக்கரி மற்றும் பிற கனிமங்களுடன், ரஷ்யாவின் மிக முக்கியமான ஏற்றுமதி பொருட்களாகும். கச்சா மற்றும் சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலியம் ரஷ்யாவின் ஏற்றுமதியில் 37 சதவிகிதம் (74.4 பில்லியன் டாலர் மதிப்பிற்கு மேல்), அதைத் தொடர்ந்து பெட்ரோலிய வாயு (ஏற்றுமதியில் 6 சதவிகிதம் மற்றும் கிட்டத்தட்ட $20 பில்லியன்), தங்கம் (5.67 சதவிகிதம் மற்றும் $18.7 பில்லியன் மதிப்பு), நிலக்கரி (4.4 சதவிகிதம் அல்லது $14.5 பில்லியன்), பிளாட்டினம் (3.2 சதவீதம் மற்றும் $10.5 பில்லியன் மதிப்பு), பின்னர் கோதுமையும் உள்ளடங்குகின்றது.

ரஷ்யாவின் கருங்கடல் கரையில் உள்ள நோவோரோசிஸ்க் துறைமுகம் நாட்டின் மிகப்பெரிய துறைமுகமாகவும், கச்சா எண்ணெய் ஏற்றுமதிக்கான மூன்றாவது மிக முக்கியமான மையமாகவும் உள்ளது. 2020 இல், சர்வதேச எரிபொருள் அமைப்பின் படி, ஒவ்வொரு நாளும் 459,000 பீப்பாய்கள் எண்ணெய் நோவோரோசிஸ்க் துறைமுகம் வழியாக சென்றது.

எண்ணெய் மற்றும் எரிவாயு ஏற்றுமதியில் கூடியளவில் தங்கியிருப்பதை கருத்தில் கொண்டு, கருங்கடல் மற்றும் மத்தியதரைக் கடலுக்கான ரஷ்யாவின் அணுகலைத் துண்டிப்பது பொருளாதாரரீதியில் நாட்டின் 'முதுகை உடைப்பதற்கு' சமமானமாகும்.

மத்திய ஆசியா மற்றும் காகசஸின் வளங்களை அணுகுவதற்கு கருங்கடல் முக்கியமானது.

சோவியத் ஒன்றிய அழிவைத் தொடர்ந்து, எரிசக்தி நிறுவன நிர்வாகிகள், இந்த வளங்களை அணுகுவதற்கு முன்னாள் ஸ்ராலினிச அதிகாரத்துவமாக இருந்து தன்னலக்குழுக்களாக மாறியவர்களுடன் இலாபகரமான ஒப்பந்தங்களை பேச்சுவார்த்தை நடத்துவதற்காக அப்பகுதிக்கு வந்தனர். 1999 இல் உலக சோசலிச வலைத் தளம் குறிப்பிட்டது போல், 1990களில் பால்கனில் ஏகாதிபத்தியத்தால் தூண்டப்பட்ட போர்களின் மையக் குறிக்கோள், கருங்கடலுக்கு சற்று கிழக்கே உள்ள காஸ்பியன் கடலுக்கான அணுகல் ஆகும். இது இதுவரை கண்டுபிடிக்கப்படாத 17 முதல் 33 பில்லியன் பீப்பாய்கள் எண்ணெய் மற்றும் 232 டிரில்லியன் கன மீட்டர் எரிவாயுவை கொண்டுள்ளன.

காஸ்பியன் கடல் நிலத்தால் சூழப்பட்டிருப்பதால், இந்த வளங்களைக் கட்டுப்படுத்த குழாய் உள்கட்டமைப்பு பற்றிய கேள்வி முக்கியமானதாக உள்ளது. இன்றுவரை, ரஷ்யாவின் குழாய்வழிகள், இந்த வளங்களுக்கு பிரத்தியேக அணுகலை வழங்கவில்லை என்றாலும், அவை மையத்தில் உள்ளதுடன், அவை அனைத்தும் கருங்கடல் வழியாக செல்கின்றன.

இவ்வாறு, காஸ்பியன் குழாய்வழிகள், ரஷ்ய அரசுக்கு சொந்தமான நிறுவனங்கள் மற்றும் அமெரிக்க எரிசக்தி நிறுவனமான செவ்ரான் ஆகிய இரண்டையும் உள்ளடக்கிய ஒரு பன்னாட்டு கூட்டமைப்பால் இயக்கப்படுவதுடன், கஜகஸ்தானில் உள்ள எண்ணெய் வயல்களிலிருந்தும், காஸ்பியன் பிராந்தியத்தில் உள்ள ரஷ்ய வயல்களிலிருந்தும், ரஷ்ய கருங்கடல் நோவோரோசியாக துறைமுகத்திற்கு எண்ணெய் கொண்டு செல்கிறது. இங்கிருந்து எண்ணெய் உலகம் முழுவதும் அனுப்பப்படுகிறது.

கடந்த இரண்டு தசாப்தங்களாக, கருங்கடல் வழியாகச் சென்று உக்ரேனைக் கடந்து செல்லும் பல்வேறு குழாய்த்திட்டங்களுக்கு அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் முற்றுப்புள்ளி வைக்க முன்வந்துள்ளன. அதே நேரத்தில், அவர்கள் காஸ்பியன் பிராந்தியம் மற்றும் மத்திய ஆசியாவில் உள்ள எரிவாயு மற்றும் எண்ணெய் வயல்களுடன் ஐரோப்பிய ஒன்றியத்தை நேரடியாக இணைக்கும் நோக்கத்துடன் போட்டிக்குழாய் திட்டங்களைத் தொடர்ந்தனர்.

எனவே, 4 பில்லியன் டாலர்களுடன், அமெரிக்கா பாகு-திபிலிசி-செய்ஹான் குழாய்வழியை (BTC குழாய் வழி என்றும் அழைக்கப்படுகிறது) முன்னெடுத்தது. இது ரஷ்யாவை கடந்து அஜர்பைஜானில் இருந்து ஜோர்ஜியா வழியாக துருக்கிக்கு எண்ணெயை விநியோகித்தது. இந்த குழாய்வழி ஜோர்ஜியாவில் அமெரிக்க நடவடிக்கைகளில் ஒரு முக்கியமான விடயமாக இருந்தது. அங்கு வாஷிங்டன் 2003 இல் ஒரு ஆட்சிக்கவிழ்ப்புக்கு நிதியளித்து மற்றும் 2008 இல் ரஷ்யாவுடன் போரை ஊக்குவித்தது.

இந்த குழாய்வழி மோதல்கள், போட்டிமிக்க ரஷ்ய ஆதரவு திட்டங்களை குழப்புவதையும் உள்ளடக்கியது. ரஷ்ய-ஜேர்மன் நோர்ட் ஸ்ட்ரீம் குழாய்வழிகளைத் தவிர மிகப் பெரியது, 50 பில்லியன் டாலர் சவுத் ஸ்ட்ரீம் குழாய்வழி திட்டமாகும். இது ரஷ்ய எரிவாயுவை கருங்கடல் கடற்கரையிலிருந்து பல்கேரியா, சேர்பியா மற்றும் ஹங்கேரி வழியாக ஆஸ்திரியாவுக்கு ஒரு பாதை வழியாகவும், மற்றொரு வழியூடாக கிரீஸ் வழியாக இத்தாலிக்கு கொண்டு சென்றிருக்கும். 63 பில்லியன் கன மீட்டர் வருடாந்திர கொள்ளளவைக் கொண்ட இந்த குழாய், அந்த நேரத்தில் ஐரோப்பாவின் மொத்த எரிவாயு தேவையில் பத்தில் ஒரு பங்கை உள்ளடக்கியிருந்திருக்கும். 2014 இல் உக்ரேனில் ஆட்சிக்கவிழ்ப்புக்குப் பின்னர் கிரெம்ளின் இந்த திட்டத்தை கைவிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

ஐரோப்பாவிற்கான முக்கிய ரஷ்ய எரிவாயு குழாய்கள். ஐரோப்பிய ஒன்றியத்தின் எதிர்ப்பின் காரணமாக கிரெம்ளினால் கருங்கடல் வழியாக சவுத் ஸ்ட்ரீமமை முடிக்க முடியவில்லை [Photo by Samuel Bailey/ CC BY 4.0] [Photo by Samuel Bailey / CC BY 4.0]

இந்த குழாய்வழி மோதல்கள் மூன்று முக்கிய நோக்கங்களைக் கொண்டுள்ளன:

முதலாவதாக, ஏகாதிபத்திய சக்திகள் முன்னாள் சோவியத் ஒன்றியத்தின் பரந்த வளங்களின் மீது ரஷ்யா நேரடிக் கட்டுப்பாட்டைப் பெறுவதை தடுக்க முயல்கின்றன. மற்றும் இப்பிராந்தியத்தில் பொருளாதார ஈடுபாட்டை கணிசமாக அதிகரித்துள்ள சீனாவும் அவற்றைக் கட்டுப்படுத்துவதைத் தடுக்கின்றன.

இரண்டாவதாக, இத்தகைய எண்ணெய் மற்றும் எரிவாயு ஏற்றுமதிகளை பெரிதும் நம்பியிருக்கும் ரஷ்யப் பொருளாதாரத்தையும், அதன் மூலம் புட்டின் ஆட்சியையும் கீழறுப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளனர்.

மூன்றாவதாக, அவை ஏகாதிபத்திய சக்திகளுக்கு, குறிப்பாக அமெரிக்காவிற்கு, எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனங்களின் சந்தைப் பங்குகள் மீதான போட்டியில் புவிசார் மூலோபாய முன்னுரிமைகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளன.

ஷேல் எரிவாயு (shale gas) அகழ்வு மூலம், ஒரு காலத்தில் உலகின் மிகப்பெரிய நிகர எரிவாயு இறக்குமதியாளராக இருந்த அமெரிக்கா, எரிவாயுவின் முக்கிய ஏற்றுமதியாளராக மாறியுள்ளது. மேலும் இப்போது ஐரோப்பிய சந்தையில் ரஷ்யாவுடன் நேரடியாக போட்டியிடுகிறது. ஜனவரி 2022 இல், உக்ரேன் மீதான ரஷ்ய படையெடுப்பிற்கு சற்று முன்பு, ஐரோப்பாவிற்கு திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு (LNG) ஏற்றுமதி, ரஷ்யாவின் எரிவாயு குழாய் விநியோகத்தை முதன்முறையாக கடந்தது. உக்ரேனில் போரின் தொடக்கத்திற்கு விடையிறுக்கும் வகையில், ஜேர்மனி உடனடியாக ரஷ்ய-ஜேர்மன் எரிவாயு குழாய் நோர்த் ஸ்ட்ரீம் 2 இனை இரத்து செய்தது. அதே நேரத்தில் வெள்ளை மாளிகை ஐரோப்பாவிற்கு LNG ஏற்றுமதியை 22 பில்லியன் கன மீட்டரிலிருந்து 37 பில்லியன் கன மீட்டராக அதிகரிப்பதாக அறிவித்தது.

உலகின் ஐந்து நாடுகள் இயற்கை எரிவாயுவின் மிகப்பெரிய வருடாந்த நிகர இறக்குமதியைக் கொண்டுள்ளன. 'ஷேல் கேஸ் புரட்சி' காரணமாக, 2008 இல் தொடங்கி அமெரிக்கா தனது இறக்குமதியைக் கடுமையாகக் குறைத்து, அதன் பின்னர் LNGயின் முக்கிய ஏற்றுமதியாளராக மாறியுள்ளது[Photo by Plazak / CC BY-NC-SA 4.0] [Photo by Plazak / CC BY-NC-SA 4.0]

ஏற்கனவே, அமெரிக்க ஷேல் நிறுவனங்கள் இந்த ஆண்டின் முதல் காலாண்டில் பல மடங்கு இலாபம் அடைந்துள்ளன. Pioneer Natural Resources அமைப்பின் இலாபம் ஐந்து மடங்குக்கும் அதிகமாகவும், Continental Resources அமைப்பின் இலாபம் மூன்று மடங்கிற்கும் அதிகமாகவும் அதிகரித்துள்ளது.

கருங்கடல் பகுதியில் சீனாவுடன் மோதல்

கருங்கடல் பிராந்தியத்தில் ஏகாதிபத்திய தலையீட்டின் முதன்மை இலக்காக ரஷ்யா இருந்தபோதிலும், கடந்த தசாப்தங்களில் கருங்கடல் பிராந்தியத்தில் சீனாவுடனான போட்டியானது அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகிய இரண்டின் மையக் கருத்தாக மாறியுள்ளது.

சீனாவைப் பொறுத்தவரை, இப்பகுதி கிழக்கு ஆசியாவிற்கும் ஐரோப்பாவிற்கும் இடையே எளிதான மற்றும் விரைவான இணைப்பாகும். பட்டுப்பாதை முன்முயற்சி (BRI), ஆரம்பத்தில் $40-பில்லியன் உள்கட்டமைப்பு திட்டமாக கருதப்பட்டதுடன், அஜர்பைஜான், உக்ரேன், ஜோர்ஜியா மற்றும் துருக்கி உட்பட காகசஸ் மற்றும் கிழக்கு ஐரோப்பா வழியாக செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டுகளில், பட்டுப்பாதை திட்டம் மிகவும் மெதுவாக முன்னேறியுள்ளது. ஆயினும்கூட, சீனா பிராந்தியத்தில் உள்ள பல நாடுகளுடன் குறிப்பிடத்தக்க பொருளாதார உறவுகளை உருவாக்கியுள்ளது. குறிப்பாக உக்ரேன், 2017 இல் பட்டுப்பாதை திட்டத்தில் இணைந்தது.

2019 ஆம் ஆண்டில், சீனா உக்ரேனின் மிக முக்கியமான வர்த்தகப் பங்காளியாகி ரஷ்யாவை 2வது இடத்திற்குத் தள்ளியது. உக்ரேன், சீனாவின் இரண்டாவது பெரிய சோள விநியோகஸ்தராகவும் மற்றும் மிகப்பெரிய ஆயுதங்களை வழங்கும் நாடாகவும் மாறியுள்ளது. 2021 இன் தொடக்கத்தில், ஜனாதிபதி வோலோடிமையர் செலென்ஸ்கி தனது நாடு 'சீன வணிகத்திற்கான ஐரோப்பாவிற்கு ஒரு பாலமாக' மாறும் என்று நம்புவதாகக் கூறினார்.

எவ்வாறாயினும், உக்ரேனில் சீனாவின் வளர்ந்து வரும் பாத்திரம் குறிப்பாக அமெரிக்காவின் பக்கத்தில் ஒரு பெரிய முள்ளாக இருந்து வருகிறது. மேலும் உக்ரேனுக்கும் சீனாவிற்கும் இடையே வளர்ந்து வரும் பொருளாதார ஒத்துழைப்பைக் குறைமதிப்பிற்கு உட்படுத்த வாஷிங்டன் பெரிதும் தலையிட்டது. இவ்வாறு, 2021 வசந்த காலத்தில், கருங்கடலில் ரஷ்யாவிற்கு எதிரான கியேவின் ஆத்திரமூட்டல்களை அமெரிக்கா ஆதரித்ததால், உக்ரேனிய அரசாங்கம் பல பில்லியன் டாலர் ஒப்பந்தத்தை இரத்து செய்தது. இது விமானங்கள் மற்றும் வானூர்திகளுக்கான உலகின் மிகப்பெரிய இயந்திர உற்பத்தியாளர்களில் ஒன்றான உக்ரேனிய நிறுவனமான Motor Sich இனை சீனா கையகப்படுத்த அனுமதித்திருக்கும். கடைசி நிமிடத்தில், வாஷிங்டனின் பாரிய அழுத்தம் மற்றும் உக்ரேனிய அரசாங்கத்திற்கு கணிசமான இழப்பில் இத்திட்டம் இரத்துசெய்யப்பட்டது.

ஆனால் ஐரோப்பிய ஏகாதிபத்திய சக்திகள் வாஷிங்டனிடம் இருந்து பெருகிய முறையில் சுதந்திரமாக இருக்க விரும்பும் அதன் பொருளாதார மற்றும் மூலோபாய நலன்களுக்கு ஒரு சவாலாக இப்பிராந்தியத்தில் சீனாவின் செல்வாக்கு அதிகரித்து வருவதை ஐரோப்பிய ஒன்றியமும் பார்க்கிறது.

ஐரோப்பிய ஒன்றிய சார்பான Global Security சிந்தனைக் குழுவின் சமீபத்திய பகுப்பாய்வு பின்வருமாறு குறிப்பிட்டது:

'ரஷ்யாவின் புவிசார் அரசியல் மற்றும் எரிசக்தி நலன்களை எதிர்கொள்வதற்கும், சீனாவின் அதிகரித்து வரும் செல்வாக்கை கட்டுப்படுத்துவதற்கும், அதன் ஒரே இணைப்பு ஒரே பாதை மற்றும் சீன டிஜிட்டல் பட்டுப்பாதை, ஆகியவற்றைக் கட்டுப்படுத்தவும் அபிவிருத்தி உதவி, ஆபத்தான இராணுவ உபகரண உதவி ஆகியவற்றின் மூலம் அமெரிக்கா கருங்கடல் பிராந்தியத்தில் ஈடுபட்டுள்ளது. மூன்று கடல் முன்முயற்சி (3SI) மற்றும் Clean Network ஆதரிக்கிறது. ரஷ்ய எரிசக்தி நலன்களுடன் (குறிப்பாக நோர்ட் ஸ்ட்ரீம் 2) போட்டியிடும் அமெரிக்காவும் தனது எரிசக்தி ஏற்றுமதிக்கான சந்தையைக் கண்டறிய முயற்சிக்கிறது.

'ஐரோப்பிய ஒன்றியம் சீனாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையில் மூன்றாவது இடத்தை உருவாக்க விரும்புகிறது. இதனால் அது சுதந்திரமாக செயல்பட முடியும். இதற்காக அதன் ஐரோப்பிய மூலோபாய சுயாட்சியை நடைமுறைப்படுத்துவதற்கு ஒப்பீட்டளவில் தன்னியல்பான மற்றும் பலதரப்பட்ட கொள்கைகள், முன்முயற்சிகள் மற்றும் கூட்டாண்மை மூலம் செயல்பட்டது.

முடிவுரை

கடந்த இரண்டு உலகப் போர்களைப் போலவே, கருங்கடல் பகுதியும் பல்வேறு முதலாளித்துவ அரசுகளுக்கு இடையே ஒரு முக்கிய போர்க்களமாக உருவெடுத்துள்ளது. ஏகாதிபத்திய சக்திகள் ரஷ்ய மற்றும் சீன செல்வாக்கை குறைமதிப்பிற்கு உட்படுத்துவதில் உறுதியாக உள்ளதுடன், அதே நேரத்தில் பிராந்தியத்தில் மேலாதிக்கத்திற்காக தங்களுக்குள் போட்டியிடுகின்றன.

இந்த போட்டி முயற்சிகளின் ஒரு வெளிப்பாடாக 'இண்டர்மேரியம்' ('கடல்களுக்கு இடையே' என்று பொருள்) என அழைக்கப்படுதல் மீண்டெழுவதாகும். கிழக்கு ஐரோப்பிய நாடுகளின் ஒரு கூட்டணி பால்டிக் முதல் கருங்கடல் வரை அட்ரியாட்டிக் கடல் வரை நீண்டுள்ளது. ட்ரம்பின் கீழ், வாஷிங்டன் இந்த கூட்டணியை வெளிப்படையாக ஆதரிப்பதில் கவனம் செலுத்தியது. இது நீண்ட காலமாக தீவிர வலதுசாரி சட்டம் மற்றும் நீதிக் கட்சியின் (PiS) போலந்து அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்டது.

இப்பகுதியில் ஏகாதிபத்தியத்தின் அரணாக போலந்தைக் கட்டியெழுப்பிய, போருக்கு இடையிலான போலந்து சர்வாதிகாரி ஜோசப் பிஸ்சுட்ஸ்கியால் இது முதலில் உருவாக்கப்பட்டது. Intermarium முக்கியமாக சோவியத் ஒன்றியத்திற்கும் கிழக்கு ஐரோப்பாவின் மக்கள் மீது ரஷ்யப் புரட்சியின் தாக்கத்திற்கும் எதிராக இயக்கப்பட்டது. இது பிராந்தியம் முழுவதிலும் உள்ள வலதுசாரி கம்யூனிச எதிர்ப்பு சக்திகளுடனும் மற்றும் முன்னாள் சோவியத் ஒன்றியத்தில் இருந்து நாடுகடத்தப்பட்டவர்களுடனும் கூட்டணிகளை நிறுவியது. இது சோவியத் ஒன்றியத்திற்குள் தேசியவாத சக்திகளை அணிதிரட்டுவதை நோக்கமாகக் கொண்டு அதை உள்ளிருந்து ஸ்திரமின்மைக்கு ஆக்குவதற்கும் முதலாளித்துவ மறுபுனருத்தானத்திற்கும் தயார்படுத்துவதை இலக்காக கொண்டிருந்தது.

முதலாம் உலகப் போருக்குப் பிந்தைய பிஸ்சுட்ஸ்கியின் Intermarium கருத்து வடக்கில் பால்டிக் கடல் முதல் தெற்கில் மத்தியதரைக் கடல் மற்றும் கருங்கடல் வரை. வெளிர்-பச்சை நிறத்தில்: உக்ரேனிய மற்றும் பெலாருஷ்ய நிலங்களின் கிழக்குப் பகுதிகள் 1922 இல் சோவியத் ஒன்றியத்துடன் இணைக்கப்பட்டன [Photo by GalaxMaps / CC BY-NC-SA 4.0] [Photo by GalaxMaps / CC BY-NC-SA 4.0]

இன்று, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் நேட்டோவின் ஆதரவின் கீழ், மூன்று கடல் முன்முயற்சி (Three Seas Initiative) என்று அழைக்கப்படும் கூட்டணி மீண்டும் புத்துயிர் பெற்றுள்ளது. போருக்கு இடையிலான காலத்தைப் போலவே, Intermarium மும் பிரதான ஏகாதிபத்திய சக்திகள் மற்றும் தீவிர வலதுசாரி தேசியவாத சக்திகளின் ஆதரவை நம்பியுள்ளது. கிழக்கு ஐரோப்பாவில், ஆளும் போலந்து சட்டம் மற்றும் நீதி (PiS) கட்சி மற்றும் உக்ரேனில் உள்ள நவபாசிச அசோவ் பட்டாலியன் போன்ற தீவிர வலதுசாரி சக்திகளால் இது அங்கீகரிக்கப்படுகிறது.

இந்த கூட்டணி இன்று முதன்மையாக ரஷ்ய மற்றும் சீன செல்வாக்கிற்கு எதிராக இயக்கப்பட்டாலும், வாஷிங்டன் மற்றும் வார்சோ இரண்டின் தரப்பிலும், இது கிழக்கு ஐரோப்பாவில் ஜேர்மன் ஏகாதிபத்தியத்தின் கணிசமான நிலையை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் நோக்கத்தையும் கொண்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தில் மேலாதிக்க ஏகாதிபத்திய சக்தியான பேர்லின், குறிப்பாக இக்கூட்டணியில் உறுப்பினராக இல்லை. எவ்வாறாயினும், வெளியே தள்ளப்படும் என்ற அச்சத்தில், போலந்தின் தெளிவான எதிர்ப்பையும் மீறி, ஜேர்மன் அரசாங்கம் சமீபத்தில் இந்த மூன்று கடல் முன்முயற்சியுடன் சிறந்த உறவுகளை ஏற்படுத்த முயற்சித்தது.

இந்த மாறிவரும் கூட்டணிகள் எதுவாக இருந்தாலும், உலக முதலாளித்துவத்தின் நெருக்கடி ஏகாதிபத்திய சக்திகளை ஒரு புதிய உலகளாவிய மோதலை நோக்கிச் செலுத்துகிறது. உலகின் மிகப்பெரிய அணுசக்தி நாடுகளுக்கு இடையேயான ஒரு நடைமுறை மோதலான உக்ரேனில் ஏகாதிபத்திய பினாமிப் போர், அத்தகைய மோதலின் ஆரம்ப அத்தியாயமாக இருக்கும். ஆனால் சர்வதேச தொழிலாள வர்க்கம் இங்கு தனது கருத்தை கூறவுள்ளது.

லியோன் ட்ரொட்ஸ்கி வலியுறுத்தியபடி, மார்க்சிஸ்டுகள் போரின் வரைபடத்தைப் பின்பற்றுவதில்லை, மாறாக வர்க்கப் போராட்டத்தின் வரைபடத்தைப் பின்பற்றுகிறார்கள். முதலாளித்துவ அரசாங்கங்கள் பேரழிவுகரமான போர்களில் ஈடுபடுவதன் மூலம் முதலாளித்துவ நெருக்கடியை 'தீர்க்க' முனைகின்றன. இதற்கு நேர்மாறாக, தொழிலாள வர்க்கம் ஒரு சர்வதேச வர்க்கப் போராட்டத்தை ஒரு சோசலிச அடிப்படையில் நடத்துவதன் மூலமும், போருக்கான அடிப்படைக் காரணங்களான முதலாளித்துவம் மற்றும் காலாவதியான தேசிய-அரசு அமைப்பை முடிவுக்குக் கொண்டுவர போராடுவதன் மூலம் இந்த நெருக்கடிக்கு அதன் பதிலை அபிவிருத்திசெய்யவேண்டும்.

Loading