வட இலங்கையில் ஏழைக் குடும்பங்கள் பட்டினியைத் தவிர்ப்பதற்காக இந்தியாவுக்குத் தப்பிச் செல்கின்றன

இந்த மொழிபெயர்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

வட இலங்கையில் இருந்து கடந்த நான்கு மாதங்களில் டஜன் கணக்கான ஏழைக் குடும்பங்கள் பட்டினியைத் தவிர்ப்பதற்காக, தமிழ்நாடு உட்பட தென்னிந்தியாவிற்கு இடம்பெயர்ந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

விலைவாசி உயர்வும் உணவு, மருந்துகள் மற்றும் எரிபொருள் போன்ற அத்தியாவசியப் பொருட்களின் பற்றாக்குறை மற்றும் தினசரி மின்வெட்டும் தீவு முழுவதும் தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் ஏழைகளுக்கு தாங்க முடியாத சமூக நிலைமைகளை உருவாக்கியுள்ளன. இது ஏப்ரலில் இருந்து தொடர்ச்சியான எதிர்ப்பு அலைகளை உருவாக்கியுள்ளது. ஜனாதிபதி இராஜபக்ஷவையும் அவரது அரசாங்கத்தையும் இராஜினாமா செய்யக் கோரியும் பொருளாதார நெருக்கடிக்கு முடிவு கட்டக் கோரியும் ஏப்ரல் 28 மற்றும் மே 6 அன்றும் நடந்த பொது வேலைநிறுத்தங்களில் மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் பங்குபற்றினர்.

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் 4 ஏப்பிரல் 2022 நடத்திய எதிர்ப்புப் பேரணி [Photo: WSWS] [Photo: WSWS]

2009 மே மாதம் முடிவடைந்த 26 ஆண்டுகால இரத்தக்களரி இனவாதப் போரின் அழிவுடன் இன்னும் போராடிக்கொண்டிருக்கும் இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு வாழ் மக்கள், முன்னெப்போதும் இல்லாத வகையில் நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடியால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இலங்கையில் பட்டினியில் இருந்து தப்பிக்கும் முயற்சியில் 80க்கும் மேற்பட்டோர் இந்தப் பகுதிகளில் இருந்து படகு மூலம் இந்தியாவுக்கு இடம்பெயர்ந்துள்ளதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

  • மே 2, இரண்டு மாத கைக்குழந்தையுடன் தாய் உட்பட 5 பேர் கொண்ட குடும்பம் சிறு படகில் தமிழக கடற்கரைக்கு சென்றது.
  • ஏப்ரல் 25, மன்னாரில் இருந்து 15 பேர் மீன்பிடி படகு மூலம் தமிழ் நாட்டை அடைந்தனர்.
  • ஏப்ரல் 10, தமிழ்நாட்டின் பாம்பன் தீவின் தென்கிழக்கு முனையில் உள்ள தனுஷ்கோடிக்கு அருகே ஆழமற்ற கடல் பகுதிக்கு மொத்தம் 19 பேர் கொண்டு இரண்டு வெவ்வேறு குழுக்கள், தனித்தனி சிறு படகுகளில் சென்றடைந்தனர். இரண்டு கைக்குழந்தைகள் உட்பட பத்து பேர் கொண்ட ஒரு குழுவினர் திருகோணமலையைச் சேர்ந்தவர்கள், மற்றைய குழுவினர் மன்னார் மற்றும் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்கள்.

பொதுவாக, இந்திய கடற்படை தங்கள் படகுகளை கைப்பற்றிவிடுமோ என்ற அச்சத்தில், படகு உரிமையாளர்கள் இந்தப் புலம்பெயர்வோரை இந்திய நிலப்பரப்பில் இருந்து சிறிது தூரத்தில் இறக்கி விட்டுச் செல்கின்றனர். பொலிஸாரால் கைது செய்யப்பட்டு தாங்கள் அகதிகள் முகாமுக்கு மாற்றப்படுவார்கள் என எதிர்பார்த்து, பயணிகள் தாங்களாகவே கரைக்கு செல்லத் தள்ளப்படுகின்றனர். தனுஷ்கோடிக்கு படகு மூலம் வந்த 20 பேர் கொண்ட மற்றொரு குழு தற்போது மண்டபம் அகதிகள் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

தனது மனைவியுடன் இந்தியாவுக்குப் பயணம் செய்த கோடீஸ்வரன், தாங்கள் தப்பிச் செல்வதற்கு தள்ளிய மோசமான சமூக நிலைமைகள் குறித்து தினத்தந்தி பத்திரிகைக்கு தெரிவித்தார்.

“நான் இலங்கையில் விவசாய தொழிலாளியாக இருந்தேன், ஆனால் அங்கு விவசாயத்திற்கு தேவையான விதைகள் மற்றும் பூச்சிக்கொல்லிகள் கிடைக்காததால், நாங்கள் தொழிலை இழந்தோம். மூன்று மாத கர்ப்பிணியாக உள்ள எனது மனைவியயை இந்த பொருளாதார சூழ்நிலையில் கவனிக்க முடியவில்லை. அவளது நகைகள் அனைத்தையும் அடகு வைத்து கிடைத்த பணத்தில் படகுக் கட்டணத்தைச் செலுத்திவிட்டு இந்தியா வர முடிவு செய்தோம்” என்று அவர் கூறினார்.

ஏழைக் குடும்பங்கள் எதிர்கொள்ளும் சில கடினமான வாழ்க்கை நிலைமைகளை பற்றி, ஒரு மீனவரின் மனைவி உலக சோசலிச வலைத் தள நிருபர்களிடம் விளக்கினார். 'படகு இயந்திரத்துக்கு தேவையான மண்ணெண்ணை தடுப்பாடு ஏற்பட்டுள்ள சூழ்நிலையில், கிடைக்கும் சிறிய வருமானத்தில் ஒரு மீனவரால் பொருட்களின் விலையை தாங்க முடியாது. கூட்டுறவு விற்பனை நிலையங்கள், ஒரு வாரத்திற்கு மூன்று லிட்டர் மண்ணெண்ணெய் மட்டுமே ஒரு நபருக்கு வழங்குகின்றன, ஒரு லிட்டர் 100 ரூபாய். வெளி கடைகளில் ஒரு லிட்டர் மண்ணெண்ணெய் 250 ரூபாய்க்கு விற்கப்படுகிறது,'' என அவர் கூறினார்.

“இப்போது பல ஏழைகள் வருமானம் இல்லாமல் ஆதரவற்ற நிலையில் உள்ளனர். எங்கள் வாராந்த வருமானம் சுமார் 3,000 ரூபாய், ஆனால் இந்த தொகையை கொண்டு என்ன செய்ய முடியும்? நீங்கள் ஒரு பாக்கெட் அங்கர் பால் மா வாங்க விரும்பினால், அதற்காக நான்கு யோகட் கோப்பைகளையும் வாங்க வேண்டும். ஒரு பாக்கெட் பால் மா மட்டும் 850 ரூபாய். மருந்து பற்றாக்குறை உள்ளது, குழந்தைகளுக்கு காய்ச்சல் அல்லது சளி ஏற்பட்டால் கொடுப்பதற்கு பனடோல் மாத்திரை கூட கிடைக்காது.”

தங்கள் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக கடன் வாங்குவதைத் தவிர, குடும்பங்களுக்கு வேறு வழியில்லை என்று மீனவரின் மனைவி கூறினார். “எங்கள் கிராமத்தில் உள்ள அனைவராலும் இந்தக் கடனைத் திருப்பிச் செலுத்த முடியவில்லை. கடன் கொடுப்பவர்களின் தொல்லை அதிகரித்து வருகிறது. எங்களின் அடையாள அட்டைகள் பறிக்கப்படுகின்றன,” என்று அவர் மேலும் கூறினார்.

இலங்கையின் மோசமான சமூக நிலைமைகள் காரணமாக இந்தியாவிற்கு ஆபத்தான பயணத்தை மேற்கொண்டதாக இளம் அகதியான சிவசங்கரி, மார்ச் 23 அன்று பிபிசியின் தமிழ்ச் சேவையிடம் கூறினார், .

“எங்கள் குடும்பத்தின் ஒரு நாள் சாப்பாட்டுச் செலவு 2,000 ரூபாய், மேலும், உணவில் இறைச்சி மற்றும் மீன் சேர்த்தால், அதற்கு சுமார் 3,000 ரூபாய் தேவைப்படும். எனது கணவர் தினக்கூலி தொழிலாளி, அவர் ஒரு நாளைக்கு சுமார் 1,500 ரூபாய் சம்பாதிக்கிறார். இந்தப் பணத்துடன் குழந்தைகளுக்கு எப்படி சாப்பாடு கொடுப்பது? அரசாங்கத்திடம் இருந்து எங்களுக்கு எந்த உதவியும் கிடைக்கவில்லை, அதனால்தான் எனது சகோதரரின் குடும்பத்துடன் இந்தியாவுக்கு வருவதற்கு கடலில் உயிரை பணயம் வைக்க முடிவு செய்தோம்.

“இலங்கையை விட்டு வெளியேறிய ஒரு மணி நேரத்தில் படகு இயந்திரத்தில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டது. இயந்திரம் திருத்தப்படும்வரை, குடிக்க தண்ணீர், சாப்பிட உணவு இல்லாமல் 37 மணி நேரம் குழந்தைகளுடன் நடுக்கடலில் உயிருடன் இருக்க போராடினோம். காலையில் எழுந்தது முதல் உறங்கும் வரை இலங்கை வாழ்க்கை எமக்கு ஒரு சவாலாகவே இருக்கிறது. எங்களைப் போல் இன்னும் பலர் இந்தியாவுக்கு வரும்வோம் என்ற நம்பிக்கையில் உள்ளனர்,” என அவர் தெரிவித்தார்.

மார்ச் மாத இறுதியில் இந்தியாவுக்குத் தப்பிச் சென்ற ஏழை இலங்கைக் குடும்பங்கள் இந்திய அதிகாரிகளால் கொடூரமாகப் பிரிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். 2012ஆம் ஆண்டு இலங்கை அகதிகள் நாட்டிற்குள் நுழைய இந்தியா தடை விதித்ததுடன், அவர்களை சட்டவிரோதமாக குடியேறியவர்கள் எனக் கருதி தண்டிக்கிறது.

இந்த மனிதாபிமானமற்ற நடவடிக்கைகள் சம்பந்தமாக பரவலான வெகுஜன எதிர்ப்பை முகங்கொடுத்த தமிழக அரசு சமீபத்திய அகதிகளை கைது செய்யாமல், இலங்கை உள்நாட்டுப் போரின் போது முன்னர் நிறுவப்பட்ட அகதிகள் முகாம்களில் தங்க வைத்துள்ளது. புதிதாக வருபவர்கள் சமூக அல்லது ஜனநாயக உரிமைகள் இல்லாத, ஏறத்தாழ அவர்களும் கைதிகளே.

இந்த முகாம்களில் முன்பு பிறந்து வளர்ந்த இளைஞர்கள், பட்டப்படிப்பை முடித்திருப்பினும் கூட, அவர்கள் இந்திய சிவில் உரிமைகள் மறுக்கப்பட்டு பொது அல்லது தனியார் துறையில் கண்ணியமான வேலைகளைப் பெற அனுமதிக்கப்படுவதில்லை. படிப்பறிவில்லாத ஆயிரக்கணக்கான இளைஞர்கள் தினக்கூலிகளாக வேலை செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இந்த முகாம்களில் தற்கொலைகள் சகஜமாக இடம்பெறுகின்றன.

அண்மையில் வந்தவர்களை, தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் 'அன்புடன்” வரவேற்பதாக சமீபத்தில் வெளியான ஊடக அறிக்கைகள் விவரிக்கின்றன. இந்தக் கூற்றுக்கள் பொய்யானவை. உண்மையில் இந்திய அதிகாரிகள், இலங்கை அகதிகளின் நுழைவைத் தடுப்பதற்காக கடலோர ரோந்துப் பணியை பலப்படுத்தியுள்ளனர்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு (TNA) உட்பட இலங்கையின் தமிழ் தேசியவாதக் கட்சிகள், மக்களின் அவலநிலை குறித்து பாசாங்குத்தனமான கவலைகளை வெளிப்படுத்தும் அதே வேளை, இராஜபக்ஷவின் சிக்கன நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்கின்றன. சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்துவதற்கு தமிழ் கூட்டமைப்பு தலைமை கொழும்புக்கு அழைப்பு விடுத்துள்ளது. அது உள்நாட்டுப் போரின் போது அனுபவித்த இன்னல்களைக் குறிப்பிட்டு, 'தமிழ் மக்கள் இந்த வகையான துன்பங்களுக்குப் பழகிவிட்டனர்' என்று பிரகடனம் செய்துள்ளது.

இதேபோல், ஐக்கிய மக்கள் சக்தி உட்பட இலங்கையின் அனைத்து பாராளுமன்ற எதிர்க்கட்சிகளும் சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்தை முழுமையாக ஆதரிக்கின்றன. ஜனாதிபதி இராஜபக்ஷ, சமீபத்தில் ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை இலங்கைப் பிரதமராக நியமித்து, தொழிலாளர்கள் மற்றும் ஏழைகள் மீது சர்வதேச நாணய நிதியத்தின் கொடூரமான சிக்கனத் தாக்குதல்களை சுமத்தினார்.

அரசுக்கு சொந்தமான நிறுவனங்களின் தனியார்மயமாக்கல், கடுமையான அரசாங்க செலவின வெட்டுக்கள் மற்றும் அதிக வரிகள் ஆகியவை இதிலடங்கும். இதனால் வேலைகள், ஊதியங்கள் மற்றும் ஓய்வூதியங்களும் வெட்டப்படும் அதேவேளை, அத்தியாவசிய பொருட்களின் விலைவாசியையும் அதிகரிக்கச் செய்யும்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சியானது உலகளாவிய முதலாளித்துவத்தின் அதிகரித்துவரும் நெருக்கடியின் கூர்மையான வெளிப்பாடாகும். தொழிலாள வர்க்கம், ஏழைகளை அணிதிரட்டிக்கொண்டு, சிங்கள, தமிழ், மற்றும் முஸ்லீம் தொழிலாளர்களை ஒன்றிணைத்து, தொழிற்சங்கங்கள் மற்றும் முதலாளித்துவக் கட்சிகளில் இருந்து சுயாதீனமாக, ஒவ்வொரு வேலைத் தளங்களிலும் மற்றும் அயல் பகுதிகளிலும் நடவடிக்கைக் குழுக்களைக் கட்டியெழுப்ப நடவடிக்கை எடுக்கவேண்டும்.

முதலாளித்துவ அமைப்புமுறைக்குள் இந்த நெருக்கடிக்கு தீர்வு கிடையாது. அதனாலேயே, சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.) சோசலிச மற்றும் அனைத்துலகவாத கொள்கைகளின் அடிப்படையில் இந்த சமூகத் தாக்குதல்களுக்கு எதிராக போராடுவதற்கும் தொழிலாளர்-விவசாயிகள் அரசாங்கத்தை அமைப்பதற்காகவும் தொழிலாளர்களை அணிதிரட்டுவதற்கான தொடர் கோரிக்கைகளை அபிவிருத்தி செய்துள்ளது. வெளிநாட்டுக் கடன்களை நிராகரித்தல், பில்லியனர்களின் சொத்துக்களைக் கைப்பற்றுதல், வங்கிகள், பெரிய நிறுவனங்கள் மற்றும் பெருந்தோட்டங்களை தேசியமயமாக்குதல், உற்பத்தி மற்றும் விநியோகத்தை தொழிலாளர்களின் ஜனநாயகக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவருதல் ஆகியவை இதில் அடங்கும்.

Loading