இலங்கை: கிளிநொச்சியில் தொழிலாளர்களும் இளைஞர்களும் வாழ்க்கை நிலைமைகள் மீதான தாக்குதலுக்கு எதிராகப் பேசுகின்றனர்

சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.), சமூக சமத்துவத்துக்கான அனைத்துலக இளைஞர் மற்றும் மாணவர்கள் (IYSSE) அமைப்பு மற்றும் வட மாகாண மீனவர் நடவடிக்கைக் குழுவும் மே 30 அன்று போரினால் பாதிக்கப்பட்ட கிளிநொச்சியில் தொழிலாளர்கள், விவசாயிகள், சிறு வணிகர்கள் மற்றும் இளைஞர்களுடன் சோசலிச முன்னோக்கு பற்றி கலந்துரையாட சக்திவாய்ந்த பிரச்சாரமொன்றை நடத்தின. இந்தப் பிரச்சாரம் அப்பகுதியில் தொழிலாளர் நடவடிக்கைக் குழுவை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டது.

சோசலிச கொள்கைகளை வலியுறுத்தி ஏப்ரல் 7 அன்று சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.) வெளியிட்ட அறிக்கையை பிரச்சாரகர்கள் விநியோகித்தனர். அந்த அறிக்கை இலங்கை தொழிலாளர்களுக்கு மட்டுமல்ல சர்வதேச அளவிலும் தொழிலாளர்களுக்கு சோசலிச கொள்கையை வலியுறுத்தியது.

கிளிநொச்சியில் பிரச்சாரம் செய்யும் சோ.ச.க. உறுப்பினர்கள் (PhotoL WSWS media)

முதலாளித்துவ நெருக்கடியை எதிர்கொள்வதற்காக முன்வைக்கப்பட்ட சோசலிச கொள்கைகள் பதாகைகளில் இருப்பதைப் பார்த்த மக்கள், பிரச்சாரகர்களுக்கு ஆர்வத்துடன் பதிலளித்துள்ளனர். ஆட்சியில் இருந்த கொழும்பு அரசாங்கங்கள் பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக 26 ஆண்டுகாலமாக முன்னெடுத்த இரத்தக்களரி இனவாதப் போரை கடந்து வந்த பின்னர், இப்போது மக்கள் தாம் எதிர்கொள்ளும் வீழ்ச்சியடைந்து வரும் சமூக நிலைமைகளை விளக்கினர்.

சிவில் உடையில் இருந்த பொலிஸ் உளவுத்துறை அதிகாரிகள் பிரச்சாரம் குறித்து விசாரித்தனர். சோ.ச.க. உறுப்பினர்கள் விவரங்களைத் தர மறுத்துவிட்டனர். எங்கள் பிரச்சாரத்தை அவர்கள் அவதானித்துக் கொண்டிருந்தனர். யுத்தம் முடிவடைந்த பின்னரும், இராணுவ ஆக்கிரமிப்பில் உள்ள நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கில் உளவுத்துறை கண்காணிப்பு தொடர்கிறது. இது மக்களின் ஜனநாயக உரிமைகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது.

கடந்த தசாப்தத்தில் பல இளைஞர்கள் ஆடை மற்றும் பிற தொழிற்சாலைகளில் சேர்ந்து, சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் ஒரு பகுதியாக ஆகியுள்ளனர். இலங்கை பெருவணிகமும் சர்வதேச முதலீட்டாளர்களும் வேலையற்ற இளைஞர்களின் மலிவு உழைப்பைச் சுரண்டுவதில் ஆர்வமாக உள்ளனர்.

பொருளாதார நெருக்கடியானது நாட்டின் பிற பகுதிகளில் போலவே வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் கிராமப்புற ஏழைகளையும் கடுமையாக பாதித்துள்ளது. கோவிட்-19 தொற்றுநோயால் தீவிரமடைந்து, உக்ரைனில் ரஷ்யாவிற்கு எதிரான அமெரிக்க-நேட்டோவின் சமீபத்திய பினாமி யுத்தமும், பேரழிவு தரும் சமூக-பொருளாதார தாக்கங்களை உருவாக்கி, ஒட்டுமொத்த மக்கள் மத்தியில் கோபத்தைத் தூண்டி விட்டுள்ளது.

தடுக்கக்கூடிய தொற்றுநோய் 16 ஆயிரத்துக்கும் அதிகமான உயிர்களைக் காவிகொண்டு 663,000 க்கும் அதிகமானோரை பாதித்துள்ளது. மனித உயிர்களை விட இலாபத்துக்கு முன்னுரிமை கொடுக்கும் இராஜபக்ஷ அரசாங்கத்தின் குற்றவியில் தொற்றுநோய்க் கொள்கை, உழைக்கும் மக்களைப் பேரழிவிற்குள் தள்ளிய அதே வேளை, பெருவணிகங்களையும் செல்வந்தர்களையும் செழிப்படைய அனுமதித்தது.

பாதுகாப்பற்ற உயிராபத்தான சூழ்நிலைகளில், தொற்றுநோயின் பரவலின் போது கூட, மாணவர்களும் ஆசிரியர்களும் பாடசாலைகளுக்கு செல்ல நிர்ப்பந்திக்கப்பட்டதோடு தொழிலாளர்கள் வேலை செய்ய கட்டாயப்படுத்தப்பட்டுள்ளனர். விண்ணைத் தொடும் பணவீக்கம், உணவு, மருந்து, சமையல் எரிவாயு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் பற்றாக்குறை மற்றும் நீண்ட மின்வெட்டும் உழைக்கும் மக்கள் மத்தியில் சகிக்க முடியாத வெடிக்கும் சூழ்நிலையை உருவாக்கியுள்ளன.

ஜனாதிபதி கோட்டாபய இராஜபக்ஷவையும் அவரது அரசாங்கத்தையும் பதவி விலகக் கோரி நடந்த பாரிய போராட்டங்கள் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களை வடக்கு மற்றும் கிழக்கிலும் நாட்டின் ஏனையப் பகுதிகளிலும் ஐக்கியப்படச் செய்தது. இது இனம், மொழி மற்றும் மத அடிப்படையில் தொழிலாளர்களை பிளவுபடுத்தி வைக்கும் தமிழ்க் கட்சிகளின் இனவாத வலியுறுத்தல்களுக்கு நேரடியான அடியாகும்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் மற்றும் மட்டக்களப்பில் உள்ள கிழக்குப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சுமார் 1,000 மாணவர்கள் அரசாங்க எதிர்ப்புப் போராட்டத்திற்கு ஆதரவாக ஆர்ப்பாட்டப் பேரணிகளை நடத்தினர். இதன் எதிரொலியாக தமிழ்க் கட்சிகளின் தேசியவாத அரசியலைப் பற்றிக்கொண்டுள்ள பல்கலைக்கழக நிர்வாகங்கள் பல்கலைக்கழகங்களை உடனடியாக மூடிவிட்டன.

ஏப்பிரல் 4 அன்று யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய போராட்டம் [Photo: WSWS] [Photo: WSWS]

உழைக்கும் மக்கள் மற்றும் இளைஞர்களின் இந்த இயக்கத்தை எதிர்த்த தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி உள்ளிட்ட தமிழ் கட்சிகள் இராஜபக்ஷ அரசாங்கத்தை ஆதரித்தனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன், தெற்கில் அரசாங்கத்திற்கு எதிரான பிரச்சாரம் தமிழர்களின் பிரச்சினையல்ல அது சிங்கள மக்களின் பிரச்சினை என்ற இனவாத அவதூறை கட்டவிழ்த்து விட்டார். கொழும்பில் உள்ள உயரடுக்கினரைப் போலவே, தமிழ் முதலாளித்துவமும் தமிழ், சிங்களம் மற்றும் முஸ்லிம் இனப் பாகுபாடுகளுக்கு அப்பால் தொழிலாள வர்க்கத்தின் ஐக்கியப்பட்ட போராட்டம் அபிவிருத்தியடைவதையிட்டு பீதியடைந்துள்ளது.

பல தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் தெரிவித்த கருத்துக்களை கீழே வெளியிடுகிறோம்:

பாரதிபுரத்தில் உள்ள விடியல் தொழிற்சாலையில் ஆடைத் தொழிலாளி ஒருவர் தனது வாழ்க்கை நிலையை விவரித்தார்: “நான் விடியல் ஆடைத் தொழிற்சாலையில் வேலை செய்து வருகிறேன். எனக்கு ஒரு நாளைக்கு 800 ரூபாய் (2.23 டொலர்) ஊதியம்; நான் மேலதிக நேரம் வேலை செய்தால், 900 ரூபா கிடைக்கும். விடுமுறை எடுத்தால் சம்பளம் வெட்டப்படும். எங்களுக்கு ஓராண்டு போனஸ் வழங்கப்படவில்லை.

“போர் காரணமாக எனது கணவரை இழந்தேன். அம்மாவின் உதவியுடன் பிள்ளைகளை வளர்க்க போராடி வருகிறேன். நான் போரில் அனைத்தையும் இழந்துவிட்டேன். ஆனால் அரசாங்கங்கள் எனக்கு இழப்பீடு வழங்கவில்லை. இப்போதும் வாடகை வீட்டில்தான் வசிக்கிறேன்,'' என்றார். விடியல் MAS ஹோல்டிங்ஸுக்கு சொந்தமான நிறுவனமாகும்.

கோனாவிலில் வசிக்கும் 65 வயது பாக்கியராசா பரமேஸ்வரி கூறியதாவது: “நான் கிளிநொச்சி சந்தையில் மீன் வியாபாரம் செய்கிறேன். எல்லாவற்றினதும் விலை உயர்ந்துள்ளது. என்னால் அதிக விலைக்கு மீன்களை வாங்கி வாடிக்கையாளர்களுக்கு அதிக விலைக்கு விற்க முடியாது. வருமானம் இல்லாத நிலையில் என்ன செய்வது என்று தெரியவில்லை. பஸ் கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த அவலங்களுக்கு எதிராக நாம் வீதியில் இறங்கி போராட வேண்டும். பொலிஸ், இராணுவம் மற்றும் அரச புலனாய்வுப் பிரிவினர் மட்டுமன்றி தமிழ்க் கட்சிகளும் இத்தகைய போராட்டங்களை எதிர்த்தன.

முச்சக்கர வண்டி சாரதியான டி. ரதீஸ்: “தற்போதைய ஜனாதிபதியாக கோட்டாபய இராஜபக்ஷ பதவியேற்றதிலிருந்து, உணவுப் பொருட்களின் விலையேற்றத்தினால் எங்களின் வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. எரிபொருளின் விலை அதிகரிப்புடன் முச்சக்கரவண்டி கட்டணத்தையும் அதிகரிக்க வேண்டியுள்ளது. அதே பிரச்சினைகளை எதிர்கொள்ளும் மக்கள் முச்சக்கர வண்டிகளை வாடகைக்கு எடுப்பதில்லை. எங்களது வருமானம் பாதியாக குறைந்துவிட்டது.”

“இந்த அரசாங்கம் உர இறக்குமதிக்கு தடை விதித்ததால் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. 2019இல் 10 ஏக்கர் நெல் வயலில் அறுவடை செய்தபோது 330 மூடைகள் கிடைத்தன, ஆனால் கடந்த பெரும் போகத்தில் வெறும் 166 மூடைகளே கிடைத்தன.”

'நாங்கள் பெரும் வருமான இழப்பை மட்டுமல்ல, குறைந்த அறுவடை காரணமாக அரிசி பற்றாக்குறையையும் எதிர்கொண்டோம். இதற்கு அரசாங்கமே பொறுப்பு. இது தொடர்ந்தால் மக்கள் பட்டினியால் சாவார்கள்’”, என அவர் மேலும் கூறினார்.

விவசாயியான 67 வயது எஸ். இராசையா, வவுனியாவில் வசிப்பவர்: “நான் முன்பு கிளிநொச்சியில் வாழ்ந்தேன். 2006 ஆம் ஆண்டு மஹிந்த இராஜபக்ஷ அரசாங்கத்தினால் யுத்தம் ஆரம்பமான போது நான் எனது குடும்பத்துடன் வவுனியாவிற்கு குடிபெயர்ந்தேன். நெளுக்குளம் அகதிகள் முகாமில் சுமார் 11 வருடங்கள் வாழ்ந்தோம். அதன் பிறகு செட்டிகுளத்தில் குடியேறினோம். எங்களிடம் மூன்று ஏக்கர் நெல் வயல் உள்ளது. உரத் தட்டுப்பாட்டுக்கு முன் 80 மூடைகள் அறுவடை செய்துள்ளோம், தற்போது 30 மூடைகள் மட்டுமே அறுவடை செய்யப்பட்டுள்ளது. அரசு கொடுக்கும் கரிம உரங்களால் எந்த பயனும் இல்லை. நாங்கள் அண்டை வீட்டாரிடமிருந்து கடன் வாங்க வேண்டியிருந்தது, அதைத் தீர்க்க முடியவில்லை,” எனத் தெரிவித்தார்.

பழ விற்பனையாளரான நெமி: 'நெருக்கடிக்குப் பிறகு 5,000 கிலோ வாழைப்பழங்களின் அறுவடை 500 ஆக குறைந்தது. தற்போது வாகன வாடகை இரண்டு மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது. மக்கள் உடைந்து போயுள்ளனர். தற்போது ஒரு கிலோ வாழைப்பழம் 100 ரூபாய்க்கு விற்கிறோம். முன்பு 60 ரூபாயாக இருந்தது. வாழ்வதற்கு ஒரு நாளைக்கு 2,500 ரூபாய் தேவை. எங்கள் நகைகள் அனைத்தையும் வங்கிகளில் அடகு வைத்துள்ளோம். போர்க்காலத்தில் இப்படித்தான் வாழ்ந்தோம், ஆனால் நம் குழந்தைகள் இதைப் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள். உணவுப் பொருட்களின் விலை 100 ரூபாயில் இருந்து 300 ரூபாயாக உயர்ந்துள்ளதால், காலை உணவைத் தவிர்க்கிறோம்.”

தினக்கூலி ஊழியர் என். ரவி இறுதி யுத்த காலத்தில் தனது அனுபவத்தை விளக்கினார். “யுத்தத்தின் இறுதி நாள், முல்லைத்தீவில் உள்ள சிறிய பகுதியில் நாங்கள் சிக்கிக் கொண்டோம். பாதுகாப்பு வலயம் என அரசு அறிவித்தது. அதை நம்பியிருந்தோம். ஆனால் இந்த பகுதியில் இலங்கை இராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வந்தது. குண்டுவீச்சு மற்றும் ஷெல் தாக்குதலால் பெண்கள், குழந்தைகள் உட்பட பலர் கொல்லப்பட்டனர். மக்கள் அனைவரும் உணவின்றி தவித்தனர். சில சமயம் புலிகள் கஞ்சி கொடுத்துக் கொண்டிருந்தார்கள். மக்கள் கஞ்சி வரிசையில் நின்றபோது, இலங்கை இராணுவம் அந்த வரிசையில் ஷெல் வீசியது. நிறைய பேர் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டதை நான் பார்த்தேன்.”

கிளிநொச்சியில் கடை பொறுப்பாளர் வி. சந்திரன் கூறுகையில், “இராஜபக்ஷ அரசுக்கு எதிரான பாரிய போராட்டத்தில் ஈடுபடும் சிங்கள மக்களுடன் தமிழ் மக்கள் இணைய வேண்டியதில்லை” என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரச்சாரம் செய்வதாக தெரிவித்தார். “இதை நான் எதிர்க்கிறேன். இந்த தொடரும் பொருளாதார நெருக்கடியால் சிங்கள மக்கள் மாத்திரம் பாதிக்கப்படவில்லை, அனைவரும் பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றனர். நான் தினமும் என் குடும்பத்திற்கு உணவளிக்க போராடுகிறேன். நாடு முழுவதும் மக்கள் இப்படி போராடுகிறார்கள்.

“நான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு ஆதரவானவனாக இருந்தாலும், அதன் தற்போதைய செயற்பாடுகளுக்கு நான் எதிரானவன். தமிழ் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் கொழும்பின் ஆளும் வர்க்கத்துடன் நெருக்கமாகச் செயற்படுகின்றார். புதிய அரசியலமைப்பு பற்றி பேசுகிறார்கள். இது தேவையற்ற விவாதம் என்று நினைக்கிறேன். இப்போது நமக்குத் தேவை நல்ல வாழ்க்கை”.

ஒரு தனியார் சந்தைப்படுத்தல் நிறுவனத்தில் பயிற்சி பெற்ற மூன்று இளைஞர்கள் குழு WSWS பிரச்சாரகர்களிடம் பேசியது. அவர்களுக்கு 15,000 முதல் 40,000 ரூபாய் வரை மாதாந்திர கொடுப்பனவுகள் வழங்கப்படுகின்றன.

குறித்த மாணவர்களில் ஒருவரான நிரூபன், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் அண்மையில் தெரிவித்த கருத்தைக் சுட்டிக் காட்டினார். ’தற்போது நடைபெற்று வரும் அரசாங்க எதிர்ப்புப் போராட்டங்கள் சிங்கள மக்களின் பிரச்சினை, தமிழர்களின் பிரச்சினை அல்ல’ என சிறிதரன் தெரிவித்திருந்தார். “போரின் போது மக்கள் பல இன்னல்களுக்கு ஆளானார்கள் என்பது உண்மைதான். அவர்கள் கடினமான சமூக நிலைமைகளுக்குள் தள்ளப்பட்டார்கள் என்பதும் உண்மை. ஆனால் கேள்வி என்னவென்றால், இந்த நிலைமைகளை நாம் ஏற்க வேண்டுமா? இதற்கு மக்கள் தகவமைத்துக் கொண்டால், அதற்கு இந்த தலைவர்கள் எனப்படுபவர்கள் பொறுப்பேற்க வேண்டும்,” என நிரூபன் தெரிவித்தார்.

“மொழியோ இனமோ முதன்மையான விஷயம் அல்ல. அத்தகைய பிரிவினைகளை நாங்கள் நிராகரிக்கிறோம். அன்றாட வாழ்க்கை நிலைமைகளை எவ்வாறு சமாளிப்பது என்பது முதன்மையான பிரச்சினையாகிவிட்டது. இளைஞனாக நான் மகிழ்ச்சியாக வாழ விரும்புகிறேன். 'இலங்கைக்கு ஒரு புரட்சி தேவை,' அது இல்லாமல் மக்கள் முன்னோக்கி செல்ல முடியாது.

'சந்தைப்படுத்தல் மாணவர்களாக, எங்களுக்கு கள வேலை உள்ளது. நாங்கள் முல்லைத்தீவு போன்ற தூர இடங்களுக்கு பயணிக்கின்றோம். அது கிளிநொச்சியில் இருந்து 64 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. ஒரு தலவை சென்று வர 500 ரூபா செலவாகும்.”