தெற்கு மற்றும் கிழக்கு சீனக் கடல்களில் அமெரிக்கா தலைமையிலான ‘ஆத்திரமூட்டும்’ இராணுவ நடவடிக்கைகள் குறித்து சீனா எச்சரிக்கிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

கிழக்கு சீனக் கடலில் தைவானுக்கு அருகிலும் மற்றும் தென் சீனக் கடலில் சீன நிலைகளுக்கு அருகிலும் அமெரிக்கா, மற்றும் அதன் நெருங்கிய கூட்டாளிகளான கனடா மற்றும் ஆஸ்திரேலியாவின் இராணுவ விமானங்கள் மோதல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதால் எழக்கூடிய ஆயுத மோதலின் கடுமையான ஆபத்துகள் குறித்து சீன அதிகாரிகள் இந்த வாரம் எச்சரித்துள்ளனர்.

ஆஸ்திரேலிய P-8A Poseidon கண்காணிப்பு விமானம் தெற்கு ஆஸ்திரேலிய கடலோரப் பகுதியில் பயிற்சியில் உள்ளது

கனேடிய மற்றும் ஆஸ்திரேலிய அரசாங்கங்கள் பைடென் நிர்வாகத்துடன் இணைந்து செயல்படுவதாகவும், மற்றும் கடுமையான வான்வழி மோதல்களுக்கு வழிவகுத்த சமீபத்திய சம்பவங்கள் குறித்து தவறான தகவல்களையும் எரியூட்டும் குற்றச்சாட்டுக்களையும் அவை பரப்பியதாகவும் சீனா குற்றம்சாட்டியுள்ளது.

வாஷிங்டன் அதன் உலகளாவிய மேலாதிக்கத்திற்கு ஒரு அச்சுறுத்தலாகக் குறிப்பிட்டுள்ள சீனாவுடன் இராணுவ மோதல்களை எளிதில் தூண்டக்கூடிய வகையில் அமெரிக்க, கனேடிய மற்றும் ஆஸ்திரேலிய கண்காணிப்பு விமானங்கள் வேண்டுமென்றே ஊடுருவும் போக்கு காட்டுவதை சீனத் தரவுகள் சுட்டிக்காட்டின.

வாஷிங்டன் ரஷ்யாவிற்கு எதிராக உக்ரேனில் அதன் பினாமிப் போரை தீவிரப்படுத்தும் அதேவேளை, அமெரிக்காவும் அதன் பங்காளிகளும் அமெரிக்கா தலைமையிலான போருக்கு ஒரு சாக்குப்போக்கை வழங்கக்கூடிய வகையில் சீனாவை இராணுவ எதிர்விளைவுகளுக்கு தூண்டும் நகர்வுகளை மேற்கொள்வதை இந்த போக்கு சுட்டிக்காட்டுகிறது, அத்துடன் வளங்கள் நிறைந்த மற்றும் மூலோபாய ரீதியாக முக்கியமான யுரேசிய நிலப்பரப்பில் அமெரிக்க மேலாதிக்கத்திற்கு ஒரு தடையாகவும் அது கருதப்படுகிறது.

பெய்ஜிங் அரசு நடத்தும் வெளியீடுகளில் ஒன்றான குளோபல் டைம்ஸ் நாளிதழ் ஜூன் 7 அன்று இவ்வாறு செய்தி வெளியிட்டது: “பெப்ரவரி 24 முதல் மார்ச் 11 வரை, ஆஸ்திரேலிய இராணுவ விமானங்கள் இந்த ஆண்டு தைவான் தீவின் வடக்கே கிழக்கு சீனக் கடலுக்கு ஆறு முறை பயணித்து நெருக்கமான உளவு நடவடிக்கைகளை மேற்கொண்டதை தரவு காட்டுகிறது; மறுபுறம், கிழக்கு சீனக் கடலில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானங்களை நிறைவேற்றுவதற்காக, ஏப்ரல் முதல் மே 26 வரை, PLA [சீன] போர் விமானங்களால் கனேடிய இராணுவ விமானங்கள் பல சந்தர்ப்பங்களில் அணுகப்பட்டன என்று வியாழக்கிழமை ராய்ட்டர்ஸ் அறிக்கை கூறுகிறது.

“இது சீனாவிற்கு அருகே அமெரிக்கா அடிக்கடி மேற்கொண்டு வரும் நெருக்கமான உளவு நடவடிக்கைகளுக்கு கூடுதலாக நடக்கிறது. பெய்ஜிங்கை தளமாகக் கொண்ட சிந்தனைக் குழுவான தென் சீனக் கடல் மூலோபாய சூழ்நிலை ஆய்வு முன்முயற்சி (South China Sea Strategic Situation Probing Initiative) வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையின்படி, கடந்த மாதம், அமெரிக்க இராணுவத்தின் குறைந்தது 41 பெரிய உளவு விமானங்கள் இத்தகைய நடவடிக்கைகளுக்காக தென் சீனக் கடலுக்கு அனுப்பப்பட்டன, அத்துடன் PLA கடற்படையின் லியோனிங் விமானம் தாங்கிக் கப்பல் குழுவினது உட்பட பிற உளவு நடவடிக்கைகளும் அங்கு நடக்கின்றன.”

இந்த வாரம், சமீபத்தில் நிறுவப்பட்ட ஆஸ்திரேலிய தொழிற் கட்சி அரசாங்கம் மற்றும் பெருநிறுவன ஊடகங்களால் வெளியிடப்பட்ட சீன ‘ஆக்கிரமிப்பு’ பற்றிய குற்றச்சாட்டுக்களை இந்த தகவல் மேலும் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது, அதாவது, மே 26 அன்று தென் சீனக் கடலில் ஒரு ஆஸ்திரேலிய கண்காணிப்பு விமானத்தை ஒரு சீன ஜெட் விமானம் ‘இடைமறித்தது’ என்று தாமதமாக குற்றம் சாட்டியது.

ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானிஸ், இந்த வாரம் இந்தோனேசியாவுக்குச் சென்றிருந்தபோது, சீனா மீது தனிப்பட்ட முறையில் இந்தக் கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்தார். அதாவது, “இந்தப் பகுதியில் சீனாவின் நடவடிக்கைகளை ஆக்கிரமிப்பு நடவடிக்கையாக நாங்கள் கருதுகிறோம்,” என்று திங்களன்று ஜகார்த்தாவில் இருந்து அல்பானிஸ் கூறினார்.

ஆஸ்திரேலியா மற்றும் பிற அமெரிக்க நட்பு நாடுகளுடன் இந்தோனேசியா அதன் இராணுவ உறவுகளை மேம்படுத்துமாறு அதன் அரசாங்கத்தை வலியுறுத்துவதற்காகவும், மற்றும் அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா இடையே கடந்த செப்டம்பரில் மேற்கொள்ளப்பட்ட சீன எதிர்ப்பு AUKUS இராணுவ உடன்படிக்கையால் தூண்டப்பட்ட பிராந்திய ஆயுதப் போட்டி குறித்து ஜகார்த்தா பகிரங்கமாக வெளிப்படுத்திய கவலைகளை மறுக்கவும் அல்பானிஸ் இந்தோனேசியாவிற்கு மூன்று நாள் விஜயம் செய்தார்.

மே 26 சம்பவம் தற்செயலானது அல்ல, அதாவது அல்பானிஸ் பதவியேற்று முதல் நடவடிக்கையாக, ஜப்பான் மற்றும் இந்தியா உடனான மற்றொரு சீன எதிர்ப்பு கூட்டணியின் நாற்கர பாதுகாப்பு உரையாடலின் (Quad) உச்சிமாநாட்டில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடெனுடன் இணைந்துகொள்ள அவர் டோக்கியோவிற்குச் சென்ற இரண்டு நாட்களுக்குப் பின்னர் அது நிகழ்ந்தது.

அந்த உச்சிமாநாட்டின் போது, பைடென், பசிபிக் மற்றும் தென் கிழக்கு ஆசியாவில் சீனாவின் வளர்ந்து வரும் பொருளாதார மற்றும் இராஜதந்திர செல்வாக்கை எதிர்த்துப் போராட வேகமாக முன்னேறுமாறு அல்பானிஸ் மற்றும் வெளியுறவு மந்திரி பென்னி வோங்கிடம் தெளிவாகக் கூறினார்.

கான்பெராவின் ‘இடைமறியல்’ குற்றச்சாட்டிற்கான விரிவான பதிலில், சீனாவின் பாதுகாப்பு அமைச்சகம், ஆஸ்திரேலிய விமானப்படை விமானம் “சீனாவின் இறையாண்மை மற்றும் பாதுகாப்புக்கு கடுமையான அச்சுறுத்தல்” என அடையாளம் காணப்பட்டதாக கூறியுள்ளது.

செய்தித் தொடர்பாளர் Tan Kefei, சம்பவம் நடந்த இடம் பற்றிய முதல் தகவலை வழங்கினார், இது அல்பானிஸ் அரசாங்கத்தால் வெளியிடப்படவில்லை. அவர், “சீன தரப்பில் இருந்து மீண்டும் மீண்டும் எச்சரிக்கைகள் வந்தபோதிலும்” ஆஸ்திரேலிய P-8 நீர்மூழ்கி கப்பல் எதிர்ப்பு ரோந்து விமானம், ஷிஷா தீவுகள் என்றழைக்கப்படும் சர்ச்சைக்குரிய பாராசெல் தீவுகளுக்கு அருகே வான்வெளியில் நுழைந்ததாக கூறினார்.

வெளியுறவுத் துறையின் இணைய தளத்தில் வெளியிடப்பட்ட சீன மொழி அறிக்கையில் டான் இவ்வாறு கூறினார்: “மக்கள் விடுதலை இராணுவத்தின் தெற்குப் பகுதி கட்டளையகம் (People’s Liberation Army Southern Theatre Command) ஆஸ்திரேலிய இராணுவ விமானத்தை அடையாளம் கண்டு சரிபார்க்க வான் மற்றும் கடல் படைகளை ஏற்பாடு செய்து அதை விரட்டுமாறு எச்சரித்தது.

“சீன இராணுவத்தால் எடுக்கப்பட்ட பதில் நடவடிக்கைகள் தொழில்முறையானவை, பாதுக்காப்பானவை, நியாயமானவை மற்றும் சட்டப்பூர்வமானவை” என்று டான் கூறியதுடன், ஆஸ்திரேலியா “மீண்டும் தவறான தகவல்களைப் பரப்புவதாகவும்” “மோதலை ஆதரிப்பதாகவும்” குற்றம் சாட்டினார்.

“இதுபோன்ற ஆபத்தான மற்றும் ஆத்திரமூட்டும் செயல்களை நிறுத்தவும், அதன் கடற்படை மற்றும் விமானப் படைகளின் நடவடிக்கைகளை கண்டிப்பாக கட்டுப்படுத்தவும் ஆஸ்திரேலியாவை சீனா வலியுறுத்துகிறது; இல்லையெனில் ஆஸ்திரேலியா தரப்பு கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என அது எச்சரிக்கிறது.”

வடகொரியாவைக் கண்காணிக்கும் தமது விமானங்களை சீனப் போர் விமானங்கள் தொந்தரவு செய்வதாக ஒட்டாவா புகார் கூறியதை அடுத்து, கனடாவுக்கும் இதேபோன்ற எச்சரிக்கையை சீனா விடுத்தது. அல்பானிஸைப் போலவே, கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவும் பெய்ஜிங்கின் “பொறுப்பற்ற மற்றும் ஆத்திரமூட்டும்” நடவடிக்கைகளை கடுமையாகக் கண்டித்தார்.

இரண்டு நாட்களுக்கு முன்பு உலக சோசலிச வலைத் தளம் (WSWS) குறிப்பிட்டது போல், அல்பானிஸ் அரசாங்கமோ அல்லது ஒரு பெருநிறுவன ஊடகமோ அவர்களின் ‘இடைமறிப்பு’ குற்றச்சாட்டுக்கள் பற்றி வெளிப்படையான கேள்விகள் எதையும் கேட்கவில்லை: அதாவது “இந்த இடைமறிப்பு சரியாக எங்கே நடந்தது? ஆஸ்திரேலிய விமானம் என்ன செய்து கொண்டிருந்தது? சம்பவம் நடந்து பத்து நாட்களுக்குப் பின்னராக ஏன் அறிவிக்கப்பட்டது? வீடியோ காட்சிகள் உட்பட, நிகழ்வுகளின் ஆஸ்திரேலிய பதிப்புக்கான ஆதாரம் எங்கே?” என எந்த கேள்வியும் கேட்கப்படவில்லை.

இந்த அனைத்து கேள்விகளுக்கும் இன்னும் விடை கிடைக்கவில்லை. அதாவது, தற்போதைய சூழல் மற்றும் சீனா வழங்கிய விபரங்களை வைத்து, WSWS ஆல் வகுக்கப்பட்ட முடிவை மேலும் சுட்டிக்காட்டுகிறது: “ஒரு துளி ஆதாரம் கூட இல்லாமல், ஒருங்கிணைக்கப்பட்ட அரசாங்க-ஊடகங்களின் சரமாரியான செய்திகளுடன் இணைக்கப்பட்ட, இந்த இடைமறிப்புக் கதை அரசியல் உந்துதல் கொண்ட ஒரு ஆத்திரமூட்டல் என்று முத்திரை குத்துகிறது. மே 26 அன்று என்ன நடந்திருந்தாலும், வெறித்தனமான பதில் சீனாவுடனான பதட்டங்களை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டது, மற்றும் இந்தோ-பசிபிக் பகுதியில் ஆஸ்திரேலியாவின் அதிகரித்தளவிலான ஆக்கிரமிப்பு போக்கை நியாயப்படுத்துகிறது.”

திங்களன்று, சீனக் கடற்கரைக்கு அப்பால் உள்ள முக்கிய வெடிப்புப் புள்ளிகளில் சீனாவுடன் மோதல்களைத் தூண்டுவதற்கான ஒருங்கிணைக்கப்பட்ட அமெரிக்க-திட்டமிட்ட உந்துதல் பற்றிய மற்றொரு அறிகுறி தெரிய வந்தது. HMAS Parramatta Anzac வகை போர்க்கப்பல் தென் சீனக் கடலின் ‘போக்குவரத்தை’ முடித்துவிட்டதாக ஆஸ்திரேலிய கடற்படை அறிவித்தது.

கடற்படையின் கூற்றுப்படி, போர்க்கப்பல் ஜூலை இறுதி வரை தென்கிழக்கு மற்றும் வடக்கு ஆசியா பகுதிகளில் இரண்டு மாத “பிராந்திய இருப்பு நிலைப்பாட்டை” மேற்கொண்டது. கடந்த வாரம், கப்பல் இந்தோனேசியாவின் இராணுவத்துடன் கூட்டு கடல்சார் பாதுகாப்பு ஒத்திகைகளை தெற்கு சுலவேசிக்கு அப்பால் உள்ள மூலோபாய மக்காசர் ஜலசந்தியில் நடத்தியது, இது அல்பானிஸின் இந்தோனேசிய பயணத் திட்டத்திலும் இடம்பெற்றது. போர்க்கப்பலும் ஆஸ்திரேலிய விமானப்படை P-8 உளவு விமானமும் இந்தோனேசிய விமானத்துடன் இணைந்து பயிற்சியில் பங்கேற்றன, இப்பயிற்சி கடந்து செல்லும் கப்பல்களைக் கண்காணித்து அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டது.

சீனாவுடனான உக்கிரமான மோதலை தீவிரப்படுத்துவதில் பைடென் நிர்வாகத்தின் பங்கு இந்த வாரம் மேலும் சுட்டிக்காட்டப்பட்டது. அநாமதேய சீன அதிகாரி ஒருவரை மேற்கோள் காட்டி ஒரு வாஷிங்டன் போஸ்ட் அறிக்கை, கம்போடியாவில் பெய்ஜிங் இரகசியமாக கடற்படை தளத்தை உருவாக்கி வருவதாக கூறியுள்ளது. கம்போடியாவும் சீனாவும் இந்த கூற்றை உடனடியாக மறுத்தன, ஆனால் ஊடக அறிக்கை குறித்த கவலைக்கு அல்பானிஸ் குரல் கொடுப்பதை நிறுத்தவில்லை.

“ரீம் [கடற்படை தளம்] இல் பெய்ஜிங்கின் செயல்பாடு குறித்து நாங்கள் சில காலமாக அறிந்திருக்கிறோம், மேலும் பெய்ஜிங்கை அதன் நோக்கம் குறித்து வெளிப்படையாக இருக்கவும், அதன் செயல்பாடுகள் பிராந்திய பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை ஆதரிப்பதை உறுதி செய்யவும் ஊக்குவிக்கிறோம்,” என்று அல்பானிஸ் கூறினார்.

சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஜாவோ லிஜியன் திங்களன்று வாஷிங்டன் போஸ்ட் செய்தியை நிராகரித்தார். உலகளவில் சுமார் 800 இராணுவ தளங்களை பராமரிக்கும் அதேவேளையில் அமெரிக்கா மற்ற நாடுகளைப் பற்றி தவறான தகவல்களை பரப்புவதாகவும், அடுத்த ஒன்பது அதிக செலவு செய்யும் நாடுகளின் கூட்டுத் தொகையை விட அதன் இராணுவத்திற்கு அதிகமாக செலவு செய்வதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

வாஷிங்டனில் உள்ள கம்போடிய தூதரகமும் செய்தியிதழின் ‘ஆதாரமற்ற குற்றச்சாட்டை’ மறுத்தது. கம்போடியா நாட்டின் அரசியலமைப்பை ‘உறுதியாக கடைப்பிடிக்கிறது’ என அது கூறியது, எனவே இது கம்போடிய மண்ணில் வெளிநாட்டு இராணுவ தளங்களை அல்லது வெளிநாட்டு இராணுவ பிரசன்னத்தை அனுமதிக்காது. “தளத்தை புதுப்பித்தலானது, அதன் கடல்சார் ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பதற்கும் சட்டவிரோத மீன்பிடித்தல் உள்ளிட்ட கடல்சார் குற்றங்களை எதிர்த்துப் போராடுவதற்கும் கம்போடிய கடற்படைத் திறனை வலுப்படுத்த மட்டுமே உதவுகிறது,” என்று அறிக்கை கூறியது.

ஒவ்வொரு முன்னணியிலும், ஆஸ்திரேலியாவின் தொழிற் கட்சி அரசாங்கம், கனடாவில் உள்ள ட்ரூடோவின் தாராளவாத கட்சி அரசாங்கத்துடன் சேர்ந்து, சீனாவிற்கு எதிரான ஒரு பேரழிவுகரமான போருக்கான வாஷிங்டனின் ஆதாரமற்ற கூற்றுக்கள் மற்றும் தயாரிப்புகளுக்குப் பின்னால் அணிவகுத்து நிற்கிறது. வான்வழி ‘அருகாமை தவிர்ப்புகள்’ பற்றிய குற்றச்சாட்டுக்கள், இந்தப் போர்த் திட்டங்கள் ஏற்கனவே ஒரு விமானியின் தவறான கணக்கீடு மற்றும் பிழையால் அத்தகைய போரைத் தொடங்கக்கூடிய சூழ்நிலையை உருவாக்கிவிட்டது என்பதற்கான எச்சரிக்கையாகும்.

Loading