இலங்கை: காலிமுகத்திடல் எதிர்ப்புகளின் "கட்சி சார்பின்மை" சாக்குப்போக்கின் பின்னால் இயங்கும் முதலாளித்துவ அரசியல்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

ஜனாதிபதி கோட்டாபய இராஜபக்ஷ மற்றும் அவரது அரசாங்கத்தை இராஜினாமா செய்யக் கோரி நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட மக்கள் போராட்டத்தின் மையமான காலிமுகத் திடல் போராட்டத்தின் பிரகடனப்படுத்தப்படாத தலைமைத்துவம், நாளாந்தம் அங்கு கூடும் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் மற்றும் ஏனைய ஒடுக்கப்பட்டவர்களை, கட்சிசார்பின்மை எனப்படுவதற்குள் சிறைப்படுத்தி அரசியல் ரீதியாக திசைதிருப்பும் நனவான செயற்றப்பாட்டில் ஈடுபட்டுள்ளது.

இந்த வெகுஜன இயக்கத்தில் பரவலாகப் பயன்படுத்தப்படும் '#GotaGoHome2022' என்ற ஹேஷ்டக்கை உருவாக்கியவர் என்று கூறிக்கொள்ளும் பத்தும் கர்னர் என்பவர், காலிமுகத் திடல் தலைமையின் ’கட்சி சார்பின்மை’ என்பதன் கீழ் இயங்கிக்கொண்டிருக்கும் முதலாளித்துவ அரசியல் வேலைத் திட்டத்தை ஊக்குவிப்பதில் முன்னணிப் பங்காற்றினார். தலைமைப் பொறுப்பில் இருந்து தான் நீக்கப்பட்டுள்ளதாக கர்னர் முறைப்பாடு கூறிக்கொண்டாலும், சமூக ஊடகங்களிலான அவரின் செயற்பாடுகள் முற்றிலும் இந்த வேலைத் திட்டத்திற்கு பங்களிப்பு செய்கின்றது.

9 ஏப்ரல் 2022 காலி முகத்திடலில் நடந்த ’கோடா போ’ ஆர்ப்பாட்டத்தின் ஒரு பகுதி [Photo: WSWS media] [Photo: WSWS]

கர்னர் என்பவர் ஒரு மருத்துவராக பணியாற்றிய முன்னாள் ராணுவ அதிகாரி ஆவார். தன்னை அறிமுகம் செய்துகொள்ளும் காணொளியில், கொழும்பு ஆட்சியாளர்களால் முன்னெடுக்கப்பட்ட உள்நாட்டுப் போருக்குப் பங்களிப்பதற்காக தான் இராணுவத்தில் இணைந்ததாகக் அவர் கூறுகிறார். தமிழ் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிராக நடத்தப்பட்ட அந்த இனவாதப் போரில் இலட்சத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்பட்டதோடு இலட்சக் கணக்கான மக்கள் தமது இருப்பிடங்களை இழந்து இடம்பெயர்ந்தனர்.

வளர்ச்சியடைந்துள்ள வெகுஜன எதிர்ப்பு, முழு முதலாளித்துவ வர்க்கத்திற்கும் சவால் விடும் ஒரு வெகுஜன இயக்கமாக வளர்ச்சியடைவதை தடுத்து, அதை பாராளுமன்ற பாதையில் சிறைவைத்து, முதலாளித்துவ முறைமையை பாதுகாப்பதற்கும் அதன் மூலம் தொழிலாள வர்க்க வெகுஜனங்களை சர்வதேச மற்றும் தேசிய மூலதனத்தினதும் தாக்குதலுக்கு அடிபணியச் செய்வதற்கும் கர்னரின் வார்த்தை ஜாலங்கள் அனைத்தும் அமைந்துள்ளன.

காலிமுகத் திடலில் போராட்டக்காரர்களால் அமைக்கப்பட்டுள்ள மேடையில் இருந்து உரையாற்றும் காட்சி அடங்கிய வீடியோவில், ’நெருக்கடியைத் தீர்ப்பதற்கான' அவரது வேலைத்திட்டம் முன்மொழியப்படுகிறது. பொருளாதார நெருக்கடியை தீர்பதற்க்கு தற்போதைய அரசாங்கத்தை அகற்ற வேண்டுமென்றும், ’சட்டப்பூர்வமான அதிகார பலம் கொண்ட, அரசியலமைப்பு ரீதியாக நியமிக்கப்பட்ட இடைக்கால அரசாங்கத்தை’ நிறுவுவ அவசியமானது என்று அவர் வலியுறுத்தினார்.

’225 நாடாளுமன்ற உறுப்பினர்களும் வேண்டாம் என்று தான் கூறவில்லை’ என்றும், இராஜபக்ஷகள் அல்லாத, தற்போதைய எதிர்க்கட்சி மற்றும் ஆளும் கட்சி உறுப்பினர்களைக் கொண்டதாக குறித்த ’இடைக்கால அரசாங்கம்’ இருக்க வேண்டும் கர்னர் கூறுகிறார். குறித்த அரசாங்கத்தின் பிரதமராக முன்னாள் இராணுவத் தளபதியும் ஐக்கிய மக்கள் சக்தி (ஐ.ம.ச.) பாராளுமன்ற உறுப்பினருமான சரத் பொன்சேகா, ஐ.ம.ச. பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா, ஐ.ம.ச. பாராளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க மற்றும் தேசிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினரும் மக்கள் விடுதலை முன்னணியின் (ஜேவிபி) தலைவருமான அனுரகுமார திஸாநாயக்க ஆகியோரின் பெயர்களை அரசாங்கத்தின் பிரதமராக நியமிக்க கர்னர் வரிசைப்படி முன்வைக்கிறார். இனவாத யுத்தத்தின் இரத்தத்தில் தோய்ந்த அவர்கள் தலை முதல் கால் வரை தொழிலாள வர்க்கத்திற்கு எதிரானவர்கள் ஆவர்.

தேசியப் பட்டியல் ஊடாக 'ஒவ்வொரு துறையிலும் அறிவுள்ள குறைந்தது 10 பேரையாவது' அந்த இடைக்கால அரசாங்கத்தில் உள்வாங்க அழுத்தம்கொடுக்க வேண்டும் என்றும், அவர்கள் ஊடாக 'பொருளாதார ஆணைக்குழு' ஒன்றை அமைத்து, அதே ஆணைக்குழுவிற்கு அமைச்சரவை அதிகாரங்களை வேண்டும் என்றும் அவர் கூறினார்.

அந்த ஆணைக் குழுவின் மூலம், 'பொருளாதார மறுசீரமைப்பு' மற்றும் பிற மாற்றங்களைச் செய்ய முடியும் என்றும், அதன் மூலம், ஆறு மாதங்களுக்குள் எரிவாயு, எண்ணெய் மற்றும் மின்சாரத் தேவைகள் உள்ளிட்ட முக்கிய பொருளாதார பிரச்சினைகளை தீர்க்க முடியும் என்றும், அதன் பிறகு தேர்தல் மூலம் ஒரு புதிய அரசாங்கத்தை நியமித்துக்கொள்ள முடியும் என்றும் கர்னர் கூறினார்.

அவரது பிரேரணையின் சாராம்சம் இதுதான்: இலங்கையின் பொருளாதார நெருக்கடியானது தவறான நிர்வாகம் மற்றும் ஊழலின் விளைவாகும். அந்த ஊழல் மற்றும் தவறான மேலாளர்களை அகற்றிவிட்டு இடைக்கால அரசாங்கம் ஒன்றை ஆட்சிக்கு கொண்டு வருவதன் மூலம், ’ஒவ்வொரு துறையிலும் அறிவு உள்ள நபர்கள்’ அடங்கிய 'பொருளாதார ஆணைக் குழு' அமைத்து, பொருளாதார மறுசீரமைப்பை செயல்படுத்துவதன் மூலம் இந்த நெருக்கடியை சமாளிக்க முடியும்.

கர்னர் கூறுவது போல், இலங்கையில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு மூல காரணம் தவறான நிர்வாகமும் ஊழலும் அல்ல. இது உலக முதலாளித்துவ முறைமை எதிர்கொள்ளும் அமைப்பு ரீதியான நெருக்கடியின் விளைவாகும். அதாவது, உற்பத்திச் சாதனங்களின் தனியார் உடமை மற்றும் இலாபத்தின் அடிப்படையிலான முதலாளித்துவ உற்பத்திப் பொருளாதார முறைமைக்கும் சமூகமயப்பட்ட உற்பத்திக்கும் இடையிலான, மற்றும் உற்பத்தியின் பூகோளமயமாக்கலுக்கும் போட்டி தேசிய அரச அமைப்புக்கும் இடையேயான வரலாற்று பரஸ்பர முரண்பாடுகள் கடந்த சில தசாப்தங்களாக ஆழமடைந்து வருவதே இந்த நெருக்கடியின் மூலகாரணமாகும்.

கோவிட் தொற்றினால் தீவிரமடைந்த நெருக்கடி, உக்ரேனை மையமாகக் கொண்டு ரஷ்யாவிற்கு எதிரான அமெரிக்கா தலைமையிலான நேட்டோ போரினால் மேலும் ஆழமடைந்துள்ளது. இலங்கை உட்பட உலகெங்கிலும் உள்ள ஆளும் வர்க்கங்கள், பொருளாதார நெருக்கடியின் சுமையை பல்வேறு சிக்கன நடவடிக்கைகள் மூலம் தொழிலாள வர்க்க வெகுஜனங்களின் மீது சுமத்தியும், அதற்கு எதிராக எழும் வர்க்கப் போராட்டங்களை கொடூரமாக நசுக்குவதன் மூலமுமே அதைக் கடக்க முயல்கின்றன.

கர்னரின் மற்றொரு வீடியோவில், சர்வதேச நாணய நிதியம் (IMF) பொருளாதார மறுசீரமைப்பு திட்டங்களை முழுமையாக அங்கீகரிக்கின்றார். சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளின்படி, இலங்கையின் வரி வருவாயை பாரியளவில் அதிகரிக்குமாறும், அரசாங்க செலவீனங்களைக் விசாலமானளவு குறைக்குமாறும் அவர் கோரிகின்றார். இந்த வரிச்சுமை தொழிலாள வர்க்கத்தின் மீது தவிர்க்க முடியாமல் திணிக்கப்படும் என்பதை அறிந்துள்ள அவர், வரிகளை நிர்ணயிக்கும் போது வருமான ஏற்றத் தாழ்வைக் கருத்தில் கொள்ள வேண்டும் என்று பாசாங்குத்தனமாக கூறுகிறார். அரசாங்க செலவுக் குறைப்புக்களில் கல்வி மற்றும் சுகாதாரம் நிச்சயமாக கடுமையான தாக்குதலுக்கு உள்ளாகப் போகும் நிலைமையில், அந்த துறைகளில் சர்வதேச நாணய நிதியம் எந்த வெட்டுக்களையும் முன்மொழியவில்லை என்று அவர் மோசடியாகக் கூறுகிறார்.

கர்னரின் முன்மொழிவுகளானவை ஐ.ம.ச., ஜேவிபி, மற்றும் பெருவணிகத்தின் திட்டங்களிலிருந்து எந்தவகையிலும் வேறுபட்டவை அல்ல. இடைக்கால அரசாங்கம் எனப்படுவதன் மூலம் சர்வதேச நாணய நிதியத்தின் உத்தரவுகளைடுத்த செயல்படுத்தவே அவர்களும் பிரேரிக்கின்றனர்.

இலங்கையில் அரசாங்க எதிர்ப்புப் போராட்டங்கள் எதிர்கொள்ளும் தீர்க்கமான அரசியல் பிரச்சினைகள் என்ற தலைப்பில் உலக சோசலிச வலைத் தளத்தில் வெளியான கட்டுரையின்படி, காலிமுகத் திடல் போராட்டத் தலைவர்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் தொழிலாள வர்க்கம் மற்றும் ஏழைகளின் நலன்களைப் பிரதிநிதித்துவப்படுத்தவில்லை, மாறாக ஒப்பீட்டளவில் கூறினால், தனது வசதியான நிலைமைகளை மேம்படுத்திக்கொள்வதற்காக, சர்வதேச நாணய நிதியம் மற்றும் முதலாளித்துவ எதிர்க் கட்சிகள் மீது நம்பிக்கையை வைக்கும் ஒரு உயர் மத்தியதர வர்க்க அடுக்கையே பிரதிநிதித்துவம் செய்கின்றன.

மேலே உள்ள விளக்கம் கர்னரின் கூற்றுக்களை நன்கு உறுதிப்படுத்தப்படுகிறது.

இறுதிப் ஆய்வில், அனைத்துலக சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையிலான தொழிலாள வர்க்கத்தின் ஒரு சுயாதீனமான அரசியல் இயக்கத்தைக் கட்டியெழுப்பப் போராடும் சோசலிச சமத்துவக் கட்சியின் அரசியல், தொழிலாள வர்க்க வெகுஜனங்கள் மத்தியில் கொண்டுசெல்லப்படுவதைத் தடுப்பதற்காகவே, காலிமுகத் திடல் போராட்டங்களுக்குத் தலைமை தாங்குபவர்கள், கட்சி சார்பின்மை என்ற பதாகையை தூக்கிப் பிடித்துள்ளனர் என்பது தெளிவாகிறது.

ஜனாதிபதி இராஜபக்ஷ, மக்கள் எழுச்சியை அடக்குவதற்கு, அவசரகாலச் சட்டத்தை விதித்துள்ளார். இதன் கீழ் பிடி ஆணை இன்றி நபர்களைக் கைது செய்ய இராணுவத்துக்கும் பொலிசுக்கும் அதிகாரம் உள்ளதுடன் வேலைநிறுத்தங்கள், ஆர்ப்பாட்டங்கள் மற்றும் பேரணிகளைத் தடை செய்தல், ஊரடங்குச் சட்டம் மற்றும் ஊடகத் தணிக்கைகளைத் திணித்தல், அரசியல் கட்சிகளைத் தடை செய்தல் போன்றவற்றை அமுல்படுத்த முடியும். சோசலிச சமத்துவக் கட்சி முன்வைக்கும் வேலைத்திட்டத்தின் ஊடாகப் போராடுவதன் மூலம் மட்டுமே இத்தகைய தாக்குதல்களுக்கு முடிவுகட்ட முடியும்.

சோசலிச சமத்துவக் கட்சி நேற்று உலக சோசலிச வலைத் தளத்தில் வெளியிட்ட அறிக்கை பின்வருமாறு கூறுகிறது:

“இராஜபக்ஷவின் இராணுவ அடக்குமுறை அச்சுறுத்தலை தோற்கடிப்பதற்கும் அதன் வர்க்க நலன்களுக்காக ஒரு அரசியல் வேலைத்திட்டத்திற்காக போராடுவதற்கும், சுயாதீனமாக அதன் பலத்தை அணிதிரட்டுவதே தொழிலாள வர்க்கம் எதிர்கொள்ளும் அவசர பணியாகும்.

“சோசலிச சமத்துவக் கட்சி தொழிலாளர்களை உடனடியாக ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட நடவடிக்கைக் குழுக்களை, தொழிற்சங்கங்கள் மற்றும் முதலாளித்துவக் கட்சிகளில் இருந்து சுயாதீனமா, ஒவ்வொரு தொழிற்சாலையிலும், வேலைத்தளத்திலும், பெருந்தோட்டங்களிலும், தொழிலாள வர்க்கத்தின் புறநகர்ப் பகுதிகளிலும் நகரங்களிலும் அமைக்குமாறு வலியுறுத்துகிறது.”

கொழும்பில் நேற்று ஆர்ப்பாட்டக்காரர்கள் மீதான அரசாங்கத்தின் கொடூரமான குண்டர் தாக்குதல்களும் இந்த வேலைத்திட்டத்திதிற்காகப் போராட வேண்டியதன் அவசரத் தேவையை எடுத்துக்காட்டுகிறது.

Loading