இலங்கைப் பிரதமர் உழைக்கும் மக்களை அதிக தியாகம் செய்யக் கோருகிறார்

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாட்டு மக்களுக்கு ஆற்றிய விசேட உரையில், நாடு எதிர்நோக்கும் மோசமான பொருளாதார நிலைமையை அப்பட்டமாக கோடிட்டுக் காட்டினார். 'அடுத்த இரண்டு மாதங்கள் அனைத்து பிரஜைகளினதும் வாழ்க்கை மிகவும் கடினமானதாக இருக்கும்' என்று எச்சரித்த அவர், 'மக்கள் சில தியாகங்களைச் செய்யத் தயாராக வேண்டும்' என்று வலியுறுத்தினார்.

ரணில் விக்கிரமசிங்க [Source: United National Party Facebook] [Photo by United National Party Facebook]

புதிய பிரதமருக்கான ஆதரவு வாக்கெடுப்பு நடைபெறவுள்ள 17 மே அன்று நாடாளுமன்ற அமர்வுக்கு முன்னதாக முதல்நாள் மாலை விக்கிரமசிங்க இந்த அறிக்கையை வெளியிட்டார். முன்னெப்போதும் இல்லாத வகையில் நாட்டை சூழ்ந்துள்ள பொருளாதார, சமூக மற்றும் அரசியல் நெருக்கடிக்கு மத்தியில் கடந்த வியாழன் அன்று ஜனாதிபதி கோட்டாபய இராஜபக்ஷவினால் அவர் நியமிக்கப்பட்டார்.

இரு இராஜபக்ஷக்களையும் இராஜினாமா செய்யக் கோரியும் உழைக்கும் மக்கள் எதிர்கொள்ளும் சமூகப் பேரழிவிற்கு முடிவுகட்ட வேண்டும் என்று கோரியும் பல வாரங்களாக நடந்த வெகுஜன எதிர்ப்புக்கள் மற்றும் வேலைநிறுத்தங்களை அடுத்து ஜனாதிபதியின் சகோதரர் மஹிந்த இராஜபக்ஷ மே 9 அன்று பிரதமர் பதவியை இராஜினாமா செய்தார். உணவு, எரிபொருள், மருந்து உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் தாறுமாறாக உயர்ந்துள்ளன. பெரும் பற்றாக்குறையால் பொருட்களை வாங்க நீண்ட வரிசையில் நிற்க வேண்டியுள்ளது, தினமும் நீண்ட நேர மின்வெட்டு அமுல்படுத்தப்படுகிறது.

இலங்கையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி, குறிப்பாக உலகெங்கிலும் உள்ள அரசாங்கங்களின் குற்றவியல் 'பரவித் தொலையட்டும்' என்ற தொற்றுநோய்க் கொள்கையால் உருவாக்கப்பட்டதும் இப்போது உக்ரேனில் ரஷ்யாவிற்கு எதிரான அமெரிக்க-நேட்டோ பினாமி போரினால் தீவிரமாக்கப்பட்டதுமான முதலாளித்துவத்தின் உலகளாவிய நெருக்கடியின் தீவிர வெளிப்பாடாகும்.

இலங்கையின் சுற்றுலாத்துறை வீழ்ச்சியடைந்துள்ளது, வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்கள் அனுப்பும் பணம் வருடா வருடம் 61 வீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளது மற்றும் உக்ரைன் மற்றும் ரஷ்யாவின் பிரதான சந்தைகளுக்கான தேயிலை ஏற்றுமதி வறண்டு போயுள்ளது. நாட்டின் மத்திய வங்கி 51 பில்லியன் டாலருக்கும் அதிகமான பெரிய வெளிநாட்டுக் கடன்களை செலுத்துவதை தற்காலிகமாக நிறுத்துவதாக அறிவித்துள்ளது. அந்நியச் செலாவணி பற்றாக்குறையால் எரிபொருள், மருந்துகள் மற்றும் அடிப்படை உணவுப் பொருட்கள் இறக்குமதிக்கு பணம் கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

விக்கிரமசிங்கவின் நியமனம், சர்வதேச நாணய நிதியம் மற்றும் கடன் வழங்குனர்களுடன் பேச்சுவார்த்தைகள் நடந்து வரும் நிலையில் ஆளும் வர்க்கத்திற்கு நேரத்தை ஒதுக்கிக்கொள்ளும் அவநம்பிக்கையான முயற்சியாகும். நேற்றைய விக்கிரமசிங்கவின் உரையானது, அவரது அரசாங்கம் ஆளும் வர்க்கத்துக்குத் தேவைப்படும் கடுமையான சிக்கன நடவடிக்கைகளை எடுக்கும் என்றும், உழைக்கும் மக்களை தேசத்திற்காக 'தியாகம்' செய்யும் நிலைக்குத் தள்ளும் என்றும் அவர்களை நம்ப வைப்பதை நோக்கமாகக் கொண்டதாகும்.

சாப்பாட்டுக்கும், மருந்துகளைப் பெறுவதிலும் அல்லது வேலைக்குச் செல்வதற்கான போக்குவரத்துக் கட்டணத்திற்கும் சிரமப்படுகின்ற மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் அல்லது ஏழைகளுக்கு விக்கிரமசிங்க எந்த நிவாரணமும் வழங்கவில்லை, மாறாக, அவர் எடுக்க விரும்பும் கடுமையான நடவடிக்கைகளை நியாயப்படுத்த பொருளாதார நெருக்கடியின் ஆழத்தை வலியுறுத்தினார்.

நவம்பர் 2019 இல், இலங்கையின் அந்நியச் செலாவணி கையிருப்பு 7.5 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது, ஆனால் “இன்று, திரைசேறிக்கு 1 மில்லியன் டாலர்களை சேமிப்பது சவாலாக உள்ளது… வரிசையில் நிற்பதை குறைக்கவேண்டுமெனில், அடுத்த இரண்டு நாட்களுக்குள் சுமார் 75 மில்லியன் டாலர்களைப் பெற வேண்டும்.

'தற்போது, எங்களிடம் ஒரு நாளுக்கு மட்டுமே பெட்ரோல் கையிறுப்பில் உள்ளது,' என்று அவர் மிரட்டினார். ஞாயிற்றுக்கிழமை டீசல் கப்பல் வந்தாலும், வரும் நாட்களில் மேலும் தேவைப்படும். “நான்கில் ஒரு பங்கு மின்சாரம் எரிபொருள் மூலம் உற்பத்தி செய்யப்படுகிறது. எனவே, தினசரி மின்வெட்டு 15 மணி நேரமாக அதிகரிக்க வாய்ப்பு உள்ளது” என்று அவர் தொடர்ந்து கூறினார்.

'மருந்து இல்லாமை மற்றுமொரு பாரதூரமான கவலையாகும்' என்று விக்கிரமசிங்க கூறினார். “இதய நோய்க்கு தேவையான மருந்துகள் மற்றும் அறுவை சிகிச்சை உபகரணங்கள் உட்பட பல மருந்துகளுக்கு கடுமையான தட்டுப்பாடு உள்ளது. மருந்து, மருத்துவ உபகரணங்கள் மற்றும் நோயாளிகளுக்கான உணவு வழங்குபவர்களுக்கு நான்கு மாதங்களாக பணம் வழங்கப்படவில்லை.

ஒரு வெளிப்படையான கருத்துரையில், விக்கிரமசிங்க ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸை விற்கும் தனது விருப்பத்தை அறிவித்தார், அதை விற்ற பிறகும் கூட பெரும் நஷ்டம் ஏற்படும் என்று குறிப்பிட்டார். 'இது ஒரு விமானத்தில் ஏறாத இந்த நாட்டின் ஏழை மக்களுக்கும் கூட ஏற்படும் இழப்பு என்பதை நீங்கள் அறிந்திருக்க வேண்டும்,' என்று அவர் கூறினார்.

முதலாளித்துவ நெருக்கடியின் சுமைகளை உழைக்கும் மக்கள் சுமக்க நிர்ப்பந்திக்கப்படவுள்ளனர் என்பதையே அவரது கருத்துக்கள் தெளிவுபடுத்துகின்றன. அதாவது செல்வந்த பெருநிறுவன உயரடுக்கின் நலனுக்காக பெற்ற பெரும் கடன்களை அடைக்க வேண்டிய கட்டாயத்தில் பொதுமக்கள் உள்ளனர். அரசாங்கம் மானியங்கள் கொடுப்பது இனி கட்டுப்படியாகாது என்று கூறி, எரிபொருள் மற்றும் மின்சாரத்திற்கான பெரிய விலை உயர்வுகளை பிரதமர் முன்னறிவித்தார்.

விக்கிரமசிங்க, 'இந்த உண்மைகள் விரும்பத்தகாதவை மற்றும் திகிலூட்டுபவை' என்று அறிவித்தும், ஆனால் 'கடினமான காலங்கள்' குறுகியதாக இருக்கும் என்றும், அனைவரும் ஒன்றிணைந்தால் மகிழ்ச்சியான எதிர்காலம் வரும் என்றும் உறுதியளித்து தனது உரையை முடித்தார். ஆபத்தான மற்றும் கடினமான பாதையில் செல்லத் தயாராக, தேசத்தின் தியாகியாகத் தன்னை அவர் வர்ணித்துக் கொண்டார்.

என்ன ஒரு மோசடி! விக்கிரமசிங்க, இலங்கை பெருவணிகம் மற்றும் சர்வதேச நாணய நிதியம் மற்றும் வெளிநாட்டு கடன் வழங்குனரகளுடன் பேரம் பேசுவதற்கே நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு முன் ஐந்து முறை பிரதமராக இருந்த அவர், சந்தை சார்பு மறுசீரமைப்பை திணித்ததற்காகவும், அமெரிக்க சார்பு நோக்குநிலைக்காகவும் பேர் போனவராவார். இவரது நியமனத்தை கொழும்பில் உள்ள அமெரிக்க தூதுவர் வரவேற்றுள்ளார்.

விக்கிரமசிங்க தனது முதல் சில நாட்களை, அமெரிக்கா, ஜப்பான் மற்றும் சீனாவின் இராஜதந்திரிகளுடன் கலந்துரையாடல் நடத்துவதில் செலவிட்ட அதேவேளை, பாராளுமன்ற வாக்கெடுப்பில் பெரும்பான்மையை பெறுவதற்கான அவநம்பிக்கையான முயற்சியில் அரசாங்க மற்றும் எதிர்க்கட்சி பிரமுகர்களுடன் மூடிய கதவுகளுக்குள் பேச்சுவார்த்தைகளை நடத்தினார்.

225 ஆசனங்களைக் கொண்ட பாராளுமன்றத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் (ஐ.தே.க.) ஒரே பிரதிநிதியாக அவர் இருப்பதன் மூலம் அவருக்கு எந்தவிதமான மக்கள் ஆதரவும் இல்லை என்பதை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. ஐ.தே.க. 2020 இல் பிளவுபட்டது. அதன் பெரும்பான்மை உறுப்பினர்கள் இப்போது பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி (ஐ.ம.ச.) என்பதை உருவாக்கினர். விக்கிரமசிங்க அரசாங்கத்திற்கு தகுதியான ஆதரவை சமிக்ஞை செய்துள்ள ஐ.ம.ச., அதன் அமைச்சரவையில் நுழைய மறுத்துவிட்டது. நேற்றைய நிலவரப்படி, விக்கிரமசிங்கவின் அமைச்சரவையில் நான்கு அமைச்சர்கள் மட்டுமே நியமிக்கப்பட்டுள்ளனர், அவர்கள் அனைவரும் ஜனாதிபதி இராஜபக்ஷவின் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி (ஸ்ரீ.ல.பொ.ஜ.மு.) உறுப்பினர்கள் ஆவர்.

விக்கிரமசிங்க இன்று பாராளுமன்ற பெரும்பான்மையைப் பெற்றாலும், உழைக்கும் மக்கள் மீது சகிக்க முடியாத புதிய சுமைகளை சுமத்த முற்படுவதால் அவரது அரசாங்கம் தவிர்க்க முடியாமல் நெருக்கடியிலிருந்து நெருக்கடிக்கு தள்ளப்படும். மத்திய கொழும்பில் உள்ள காலி முகத்திடல் மைதானத்தில் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்கள் தொடர்கின்றன. அரசியல் ஸ்தாபனத்தில் மேற்கொள்ளப்படும் சூழ்ச்சிகளில் பரந்த அவநம்பிக்கையை பிரதிபலிக்கும் வகையில், போராட்டத் தலைவர்கள் விக்கிரமசிங்கவின் நியமனத்தை எதிர்த்தனர்.

போராட்டங்களின் பிரதான கோரிக்கையை நிராகரித்த ஜனாதிபதி இராஜபக்ஷ இராஜினாமா செய்ய முற்றாக மறுத்துவிட்டதுடன் அரசாங்கத்தை பதவி நீக்கம் செய்தல் மற்றும் பொலிஸ்-அரச நடவடிக்கைகளை திணிப்பது உட்பட பரந்த அதிகாரங்களைத் தன் வசம் வைத்துக் கொண்டார். மே 5 அன்று தீவு முழுவதும் மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் நடத்திய பொது வேலைநிறுத்தத்தை அடுத்து, அவர் நாடு தழுவிய அவசரகால நிலையை விதித்ததுடன் காலி முகத்திடலில் எதிர்ப்பாளர்கள் மீது வன்முறைத் தாக்குதலை நடத்துவதற்கு தனது சகோதரருடன் ஒத்துழைத்தார். பின்னர் அந்த ஆத்திரமூட்டல்களை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கவும் தெருக்களில் இராணுவத்தை அணிதிரட்டவும் சுரண்டிக்கொண்டார்.

இலங்கை சோசலிச சமத்துவக் கட்சியின் (சோ.ச.க.) தலைவரான விஜே டயஸ், உலக சோசலிச வலைத் தளத்திற்கு தெரிவித்த கருத்துக்களில், நாட்டின் பெயரால் முடிவில்லாத தொடர் தியாகங்களைச் செய்ய உழைக்கும் மக்களுக்கு பிரதமர் விக்கிரமசிங்க விடுத்த அழைப்பைக் கண்டனம் செய்தார்.

சோசலிச சமத்துவக் கட்சியின் பொதுச் செயலாளர் விஜே டயஸ் [WSWS Media] [Photo: WSWS]

'போலி சுதந்திரத்தின் பின்னர் கடந்த 74 வருடங்களாக பல்வேறு முதலாளித்துவ அரசாங்கங்களின் கீழ் இலங்கை மக்களை எலும்பு வரை சுரண்டிய சர்வதேச வங்கியாளர்கள் மற்றும் உள்ளூர் முதலாளித்துவக் கன்னைகள் சார்பாக விக்கிரமசிங்க விடுக்கும் வேண்டுகோளை நிராகரிக்குமாறு, சிங்களம், தமிழ் மற்றும் முஸ்லிம் என அனைத்து சமூகங்களின் தொழிலாள வர்க்கம், கிராமப்புற ஏழைகள் மற்றும் இளைஞர்களை சோசலிச சமத்துவக் கட்சி பலமாக வலியுறுத்துகிறது.

'வெகுஜன எதிர்ப்புக்கள் மற்றும் ஒரு நாள் பொது வேலைநிறுத்தங்கள் மூலம் தெருக்களை ஆக்கிரமித்த தொழிலாளர்கள், சிறு விவசாயிகள் மற்றும் இளைஞர்கள் கொண்டுள்ள எதிர்ப்பார்பில் இருந்து இது முற்றிலும் மாறுபட்ட விளைவு ஆகும். முதலாளித்துவ இலாப முறையின் கீழ் சகிக்க முடியாததாகிவிட்ட எரிபொருள், எரிவாயு, பால் பவுடர் மற்றும் மின்சாரத் தடைகள் ஆகியவற்றின் தட்டுப்பாடு மற்றும் உயர் விலைகளுக்கு முடிவுகட்ட வேண்டும் என்று அவர்கள் விரும்பினர்.

'காட்டிக்கொடுப்பின் நீண்ட வரலாற்றைக் கொண்ட, தொழிற்சங்கங்களும் அவற்றின் போலி-இடது கூட்டாளிகளும்தான், முதலாளித்துவ பாராளுமன்ற ஜனநாயகத்தின் மீது போலியான மாயைகளைப் பரப்புவதன் மூலம் வெகுஜனப் போராட்டத்தின் வெற்றியை நனவுடன் தடுத்து, முதலாளித்துவ ஆட்சியைத் தொடர்ந்து நிலைநிறுத்தி வருகின்றன.

“இதற்கு நேர்மாறாக, சோசலிச சமத்துவக் கட்சி, ஆரம்பத்தில் இருந்தே, தொழிற்சங்கங்களில் இருந்து சுயாதீனமான நடவடிக்கைக் குழுக்களை உருவாக்குவதன் மூலம், தொழிலாள வர்க்கத்தை பிரச்சினைகளை அதன் சொந்தக் கைகளில் எடுத்துக் கொள்ள அழைப்பு விடுத்துள்ளது, மேலும் தொழிலாளர்கள் தங்கள் நலன்களுக்காக போராடி வெற்றிபெறக்கூடிய மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களை அதன் பக்கம் ஈர்த்துக்கொள்ளக் கூடிய உறுதியான கோரிக்கைகளை முன்மொழிந்துள்ளது. இது வெகுஜனங்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய சோசலிசக் கொள்கைகளை நடைமுறைப்படுத்த ஒரு தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்தை அமைக்க அடித்தளமாக அமையும்.

'உழைக்கும் மக்களின் அபிலாஷைகளை நனவாக்கும் ஒரே தீர்வு இது மட்டுமே.'

Loading