நேற்றைய பொது வேலைநிறுத்தத்தை தொடர்ந்து இலங்கை ஜனாதிபதி அவசரகால நிலையை பிரகடனம் செய்தார்

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

ஜனாதிபதியும் அவரது அரசாங்கமும் இராஜினாமா செய்ய வேண்டுமென கோரி நேற்றைய தினம் நடந்த ஒரு நாள் பொது வேலைநிறுத்தம் மற்றும் முழு அடைப்பும் (ஹர்த்தால்) தீவின் பொருளாதாரத்தை முடக்கியதை அடுத்து, நேற்று இரவு இலங்கை ஜனாதிபதி கோட்டாபாய இராஜபக்ஷ அவசரகால நிலையை பிறப்பித்தார்.

அவசரகாலச் சட்டத்தின் கீழ், இராஜபக்ஷ இராணுவத்தையும் பொலிஸாரையும் நிலைநிறுத்துவதற்கும், பிடியாணையின்றி மக்களைக் கைது செய்வதற்கும், வேலைநிறுத்தங்கள் மற்றும் போராட்டங்களைத் தடை செய்வதற்கும், ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்துவதற்கும், ஊடக தணிக்கையைச் சுமத்துவதற்கும், இதர பலவற்றையும் செய்வதற்கும் ஆகக் கூடிய அதிகாரம் கொண்டுள்ளார்.

ஜனாதிபதியின் அறிக்கையானது அவசரகால பிரகடனம் 'பொது பாதுகாப்பு நலன், பொது ஒழுங்கைப் பாதுகாத்தல் மற்றும் சமூகத்தின் வாழ்க்கைக்கு அத்தியாவசியமான பொருட்கள் மற்றும் சேவைகளைப் பராமரித்தல் ஆகியவற்றுக்காக' செய்யப்பட்டது என்று அறிவித்தது.

கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலய தொழிலாளர்கள் 28 ஏப்ரல் 2022 அன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் [Photo: WSWS media] [Photo: WSWS]

அவசரகாலச் சட்டமானது இராஜபக்ஷ ஏற்கனவே நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாகவும் மற்றும் அடக்குமுறைச் சட்டத்தின் கீழும் தன்வசம் கொண்டுள்ள பரந்த அதிகாரங்களுக்கு மேலதிகமானதாகும்.

அவசரநிலை பிரகடனம் ஒரு மாதத்தில் இரண்டாவது முறையாகும். முதல், மார்ச் 31 அன்று, வளர்ந்து வரும் அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை ஒடுக்கும் முயற்சியில் ஊரடங்கு உத்தரவை விதிக்க இது பயன்படுத்தப்பட்டது. எவ்வாறாயினும், போராட்டக்காரர்கள் ஊரடங்கு உத்தரவை மீறி போராடிய நிலையில், அரசாங்கம் பின்வாங்கியதுடன் ஜனாதிபதி தனது அவசரகால விதிமுறைகளை ஏப்ரல் 5 அன்று இரத்து செய்தார்.

கடந்த ஒரு மாதமாக, உழைக்கும் மக்கள் எதிர்கொள்ளும் சகிக்க முடியாத பொருளாதார மற்றும் சமூக நெருக்கடியால் உந்தப்பட்ட போராட்டங்கள் தினசரி அடிப்படையில் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் தாறுமாறாக உயர்ந்து, பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதால், உணவு, எரிபொருள் மற்றும் மருந்துகளுக்கு மக்கள் மணிக்கணக்கில் வரிசையில் நிற்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். தினமும் நீண்ட மணிநேரம் மின்சாரம் தடைபடுகிறது.

அரசாங்கத்திற்கு எதிரான போராட்டத்தில் தொழிலாள வர்க்கமும் இணைந்துள்ளதன் காரணமாக ஜனாதிபதி இராஜபக்ஷ தெளிவாக அதிர்ச்சியடைந்துள்ளார். இதற்கு முன்னதாக ஏப்ரல் 28 அன்று நடந்த ஒரு நாள் பொது வேலைநிறுத்தத்தைத் தொடர்ந்து, நேற்றைய பொது வேலைநிறுத்தம், மில்லியன் கணக்கானவர்களை ஈர்த்திருந்தது,

தொழிற்சங்கங்கள், தொழிலாள வர்க்கத்தின் பெருகிவரும் அரசாங்க எதிர்ப்பு இயக்கத்தின் மீது கட்டுப்பாட்டை தக்கவைத்துக்கொள்ளும் ஏக்கத்தில், ஜனாதிபதியும் அரசாங்கமும் இராஜினாமா செய்யாவிட்டால் மே 11 முதல் காலவரையற்ற பொது வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன.

யாழ்ப்பாணத்தில் ஊர்காவற்துறை வைத்தியசாலையின் சுகாதார ஊழியர்கள் 6 மே 2022 அன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் [Photo: WSWS media] [Photo: WSWS]

தொழிலாளி வர்க்கத்தின் சக்தியை நேற்று எல்லா இடங்களிலும் காணக்கூடியதாக இருந்தது. நேற்றைய பொது வேலைநிறுத்தத்தில் ஏறக்குறைய அனைத்து பிரிவு தொழிலாளர்களும் பங்கேற்றனர். ரயில் மற்றும் தனியார் பேருந்து போக்குவரத்து முற்றிலும் முடங்கியது. மின்சாரம் மற்றும் தபால் ஊழியர்கள் மற்றும் அனைத்து அரசு நிர்வாக ஊழியர்களும் வேலை நிறுத்தத்தில் கலந்து கொண்டனர். அரசு மற்றும் தனியார் வங்கிகள் மூடப்பட்டன.

வைத்தியர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள் மற்றும் பிற ஊழியர்கள் உட்பட சுகாதார ஊழியர்கள், வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். அவசர சிகிச்சைகள் மற்றும் கவலைக்கிடமான நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக ஒரு சிலர் மற்றும் சேவையில் ஈடுபடுத்தப்பட்டனர். அனைத்து ஆசிரியர்களும் அதிபர்களும் போராட்டத்தில் கலந்து கொண்டதால், அரசாங்கப் பாடசாலைகளை மூட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

தேயிலை மற்றும் ரப்பர் தோட்டத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் செய்தனர் மற்றும் ஆயிரக்கணக்கானோர் அருகிலுள்ள நகரங்களுக்கு ஆர்ப்பாட்டங்களை நடத்துவதற்காக வந்திருந்தனர்.

பல சுதந்திர வர்த்தக வலயங்களில் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்தனர். டெய்லி எஃப்டி படி, பத்தாயிரக்கணக்கான தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கட்டுநாயக்கா, பியகம, சீதாவக்க ஆகிய பிரதான சுதந்திர வர்த்தக வலயங்களில் தொழிற்சாலைகள் எதுவும் இயங்கவில்லை. அனைத்து வாகனங்களும் உள்ளே செல்வதும் வெளியேறுவதும் தடுக்கப்பட்டது.

கொக்கல சுதந்திர வர்த்தக வலயத் தொழிலாளர்கள் வெளியேறுவதை தடுக்க கம்பனிகள் வலயத்துக்கான வாயில்களை மூடிவிட்டதாக உலக சோசலிச வலைத் தளத்திடம் கூறினர். தீவின் பெருந்தோட்ட மாவட்டத்திலுள்ள ஹட்டனில் ஆயிரக்கணக்கான ஆடைத் தொழிலாளர்கள் வேலையை நிறுத்திவிட்டு நகரத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

துறைமுகத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் சேர விரும்பினர் ஆனால் துறைமுக தொழிற்சங்கங்கள் அதை 'சட்டப்படி வேலை செய்யும் பிரச்சாரத்துக்குள்' சிறுமைப்படுத்தி, மதிய நேர ஆர்ப்பாட்டத்துடன் மட்டுப்படுத்தின. துறைமுக ஊழியர்கள் தங்களை வேலைநிறுத்த நடவடிக்கையில் ஈடுபட அனுமதிக்கப்பட வேண்டும் என்று தொழிற்சங்க அதிகாரிகளுடன் வாதிட்டதாக உலக சோசலிச வலைத் தள நிருபர்களிடம் கூறினர்.

நாடு முழுவதும் பல மாநகரங்கள் மற்றும் சிறு நகரங்களில் நடந்த போராட்டங்களில் இலட்சக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு, சாலைகளை மறித்து, அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். தொழிற்சங்கங்கள் வெகுஜன போராட்டங்களை ஊக்குவிக்காமல் நடத்திய ஏப்ரல் 28 பொது வேலைநிறுத்தத்தை விட, இம்முறை தீவிரமாக போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களின் எண்ணிக்கை மிக அதிகமாக இருந்தது.

கொழும்பில் உள்ள ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்திலிருந்து பேரணியாகச் சென்ற ஆயிரக்கணக்கான மாணவர்கள் தேசிய பாராளுமன்ற வளாகத்திற்குச் செல்லும் பிரதான வீதிகளை மறித்து வியாழக்கிழமை முதல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நேற்றைய தினம் கூட்டத் தொடர் நடந்துகொண்டிருந்த பாராளுமன்ற கட்டிடத்தை நோக்கி பேரணியாக செல்ல முற்பட்ட போது பொலிஸார் வீதியை மறித்து போராட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரை தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

6 மே 2022 அன்று கொழும்பில் பொலிஸார் நடத்திய நீர் பீரங்கி மற்றும் கண்ணீர் புகை தாக்குதல்களை சவால் செய்து, ஆர்ப்பாட்டக்காரர்கள் புகை குண்டுகளை பிடித்து திருப்பி வீசினர். [Photo: WSWS media] [Photo: WSWS]

தொழிலாளர்கள் தங்கள் நலன்களைக் காக்க ஒரு போராட்டத்தை நடத்துவது என்பது தொழிற்சங்கங்களின் முன்னோக்கிற்கு முரணாக உள்ளது தொழிற்சங்கங்கள் இந்த வெகுஜன இயக்கத்தை மீண்டும் பாராளுமன்ற அரசியலின் முட்டுச்சந்திற்குள் வழிநடத்த செய்படுகின்றன.

தேசிய தொழிற்சங்க முன்னணி மற்றும் வெகுஜன அமைப்புக்கள் மற்றும் தொழிற்சங்க ஒருங்கிணைப்புக் குழுவும் ஜனாதிபதி மற்றும் அவரது அரசாங்கத்தை மாற்றுவதற்கும் புதிய தேர்தலை நடத்துவதற்கும் இடைக்கால அரசாங்கத்திற்கு அழைப்பு விடுக்கின்றன.

இந்தக் கோரிக்கைகள், முதலாளித்துவ எதிர்க்கட்சிகளான ஐக்கிய மக்கள் சக்தி (ஐ.ம.ச.) மற்றும் மக்கள் விடுதலை முன்னணி (ஜேவிபி) மற்றும் பெருநிறுவன அறிவுரை குழுக்களின் கோரிக்கைகளுடன் கிட்டத்தட்ட ஒரே மாதிரியானவை ஆகும். தொழிற்சங்கங்களுடன் அணிவகுத்து நிற்கும் முன்னிலை சோசலிசக் கட்சியும் அதன் அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமும் இதேபோன்ற திட்டத்தையே கொண்டுள்ளன.

பொருளாதார நெருக்கடியின் சுமையை மக்களின் முதுகில் இறக்குவதைத் தவிர இந்த எதிர்க்கட்சிகளுக்கு வேறு வழியில்லை. எதிர்க்கட்சிகளால் அமைக்கப்படும் எந்தவொரு இடைக்கால அரசாங்கமும், அவசர கடனுக்கான விலையாக, சர்வதேச நாணய நிதியத்தின் கடுமையான புதிய சிக்கன நடவடிக்கைகளுக்கான கோரிக்கைகளை செயல்படுத்தும்.

சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.) உறுப்பினர்கள் கொழும்பு, யாழ்ப்பாணம், காலி, மத்திய பெருந்தோட்ட மாவட்டத்தின் மஸ்கெலியா மற்றும் கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயம் உட்பட நாட்டின் பல பகுதிகளிலும் தலையிட்டனர். தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு முதலாளித்துவமே மூலகாரணம் என்பதை விளக்கிய அவர்கள், வெகுஜனங்களின் தேவைகளை நிவர்த்தி செய்வதற்கான கட்சியின் சோசலிச வேலைத்திட்டத்தை தெளிவுபடுத்திக் காட்டினார்கள்.

பல தொழிலாளர்கள் அரசாங்கத்திற்கு மட்டுமல்ல, முழு அரசியல் ஸ்தாபனத்திற்கும் எதிரான தங்கள் முழுமையான விரோதத்தை வெளிப்படுத்தினர்.

கொழும்பில் உள்ள தனியார் வங்கி ஊழியர் ஷானக கூறியதாவது: “இலங்கை மக்கள் எதிர்கொள்ளும் முற்றிலும் பரிதாபகரமான நிலைமைகளுக்கு முடிவுகட்ட முழு அரசியல் அமைப்பிலும் மாற்றம் வர வேண்டும் என்று நான் உறுதியாக நம்புவதால் இந்தப் போராட்டத்தில் பங்கேற்கிறேன். இலங்கையை இதுவரை ஆட்சி செய்த அனைத்து ஆட்சியாளர்களும் மக்களை ஏமாற்றி வருகின்றனர். அவர்கள் அனைவரும் ஒரே கொள்கையைப் பாதுகாக்கிறார்கள் என்பது தெளிவாகிறது.”

காலியில் உள்ள சில்லறை கடை உதவியாளர்: “என்னால் இனியும் பொறுமை காக்க முடியாது. எனது சொற்ப சம்பளம் வாழ்வதற்கு போதாது. எனது பிள்ளைகளை படிக்க கூட என்னால் பணம் செலவழிக்க முடியவில்லை. அடிப்படைத் தேவைகளுக்குப் போதிய பணம் கிடைக்கவில்லை. என் மனைவிக்கு வேலை இல்லை. என் வீட்டில் விற்க எதுவும் இல்லை. நாங்கள் மிகவும் ஆதரவற்றவர்கள். இந்த முதலாளித்துவ அரசியல்வாதிகள் யாரையும் நான் நம்பவில்லை.

புத்தளம் மாவட்டத்தைச் சேர்ந்த ஆலைத் தொழிலாளியான அமில விளக்கியதாவது: 'நாங்கள் அதிகாலை 4.30 முதல் 5.00 மணி வரை கிட்டத்தட்ட அனைத்து தொழிற்சாலைகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிலாளர்களுடன் சுதந்திரமாக ஆர்ப்பாட்டத்தில் சேரத் தொடங்கினோம். தொழிற்சங்கங்கள் எங்களை அழைக்கவில்லை. இந்த அரசை வீட்டுக்கு அனுப்ப வேண்டும். பாராளுமன்றத்தில் உள்ள 225 அரசியல்வாதிகளும் செல்ல வேண்டும். அவர்களின் கொள்ளையடிக்கப்பட்ட சொத்துக்கள் திரும்பப் பெறப்பட வேண்டும். மக்களுக்கு எரிபொருள் இல்லை, உரம் இல்லை, சாப்பிட எதுவும் இல்லை. அடுத்து எந்த அரசாங்கம் வந்தாலும் அதையே செய்வார்கள்”

நேற்றைய அவசரகால பிரகடனம், சோசலிச சமத்துவக் கட்சி அதனது கட்சி அறிக்கையில் தொழிலாள வர்க்கத்திற்கு விடுத்துள்ள எச்சரிக்கைகளை உறுதிப்படுத்துகிறது. ஆர்ப்பாட்டங்களுக்கு எதிராக பாதுகாப்புப் படைகளைப் பயன்படுத்துவதற்கான தனது முந்தைய முயற்சியை ஜனாதிபதி பின்வாங்கிய நிலையில், சர்வதேச நாணய நிதியத்தின் கொடூரமான சிக்கன கோரிக்கைகளை ஜனநாயக ரீதியாகவோ அல்லது அமைதியாகவோ திணிக்க முடியாது என்பதை அவர் நன்கு அறிவார்.

சோசலிச சமத்துவக் கட்சி, அதனது ஏப்ரல் 7 அறிக்கையில் எச்சரித்ததாவது: 'ராஜபக்ஷ தனது நேரத்தை எடுத்துக்கொள்கிறார். அவர் முன் எச்சரிக்கை இல்லாமல் அவசரகால ஆட்சியை மீண்டும் அமுல்படுத்துவதோடு மீண்டும் இராணுவத்தை அணிதிரட்ட முடியும். அவரால் தொழிற்சங்க நடவடிக்கைகளை, அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகளை தடை செய்ய முடியும், ஊடகங்களை தணிக்கை செய்ய முடியும். மற்றும் எதேச்சதிகாரமாக தனிநபர்களை கைது செய்து காவலில் வைக்க முடியும். ஜனாதிபதி பதவியே ஒழிக்கப்பட வேண்டும். கோட்டாபயவுடன், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையும் அரசாங்கத்தின் கைகளில் இருக்கும் ஒரு தொகை ஜனநாயக விரோத சட்டங்களும் அகற்றப்பட வேண்டும்.”

அவசரகால நிலைப் பிரகடனமானது, எதிர்ப்பு இயக்கத்தின் மீதான இரத்தக்களரி ஒடுக்குமுறையின் அச்சுறுத்தலை எதிர்கொள்ளத் தயாராகும் வகையில், அதன் சொந்த சுயாதீன அரசியல் மற்றும் தொழில்துறை நடவடிக்கையை தொழிலாள வர்க்கம் மேற்கொள்ள வேண்டியதன் அவசரத்தை கூட்டியுள்ளது. சமிந்த லக்ஷனைக் கொன்று பலரைக் காயப்படுத்திய ரம்புக்கனை ஆர்ப்பாட்டக்காரர்கள் மீதான பொலிஸ் துப்பாக்கிச் சூட்டின் மூலம், வன்முறையைப் பயன்படுத்துவோம் என்பதை அரசாங்கம் ஏற்கனவே நிரூபித்துள்ளது.

வேலைநிறுத்தங்கள் மற்றும் போராட்டங்களை விற்றுத்தள்ளி, தொழிலாளர்களின் இழப்பில் பெருவணிகம் மற்றும் அரசாங்கத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்குத் தங்கள் விருப்பத்தை மீண்டும் மீண்டும் வெளிப்படுத்தி வரும் தொழிற்சங்கங்களின் கைகளில் விஷயங்களை விட்டுவிட முடியாது. சோசலிச சமத்துவக் கட்சி, தொழிற்சங்கங்களில் இருந்து சுயாதீனமாக தங்கள் சொந்த நடவடிக்கைக் குழுக்களை அமைக்குமாறும், தங்கள் கோரிக்கைகளுக்காக போராடவும் மற்றும் அவர்களின் உரிமைகள் மீதான அரசாங்க தாக்குதல்களில் இருந்து தங்களை தற்காத்துக் கொள்ளவும் இலங்கையிலும் சர்வதேச அளவிலும் உள்ள தொழிலாளர்களின் ஏனைய பிரிவுகளுடன் கைகோர்க்குமாறு தொழிலாளர்களை வலியுறுத்துகிறது.

சோசலிச சமத்துவக் கட்சி தனது அறிக்கையில், தொழிலாள வர்க்கத்தின் ஜனநாயக மற்றும் சமூக உரிமைகள் மீதான தாக்குதல்களை எதிர்கொள்ள ஒரு சோசலிச வேலைத்திட்டத்தை விரிவுபடுத்தியுள்ளது. வங்கிகள், பெருநிறுவனங்கள், பெருந்தோட்டங்கள் மற்றும் ஏனைய பொருளாதார மையங்களைத் தொழிலாளர்களின் கட்டுப்பாட்டின் கீழ் தேசியமயமாக்குவதன் மூலம் தொழிலாள வர்க்கத்தின் ஜனநாயகக் கட்டுப்பாட்டின் கீழ் அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் உற்பத்தி மற்றும் விநியோகத்தை கொண்டு வருவதும் இதில் அடங்கும். அனைத்து வெளிநாட்டு கடன்களையும் நிராகரிக்க வேண்டும் என்று அது அழைப்பு விடுத்தது.

நடவடிக்கைக் குழுக்களை நிறுவி அதன் வர்க்க நலன்களுக்காகப் போராடுவதன் மூலம், தொழிலாள வர்க்கத்தால் சமூகத்தை சோசலிச வழியில் மறுசீரமைப்பதற்கும், ஒரு சில செல்வந்தர்களின் இலாபத்துக்காக அன்றி, பெரும்பான்மையினரின் அவசரத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் அரசாங்கத்திற்கான போராட்டத்தில் கிராமப்புற உழைப்பாளிகளையும் நகர்ப்புற ஏழைகளையும் தன் பக்கம் திரட்ட முடியும். ,.

சோசலிச சமத்துவக் கட்சி மட்டுமே இந்த முன்னோக்கிற்காக போராடுகிறது. சோசலிச சமத்துவக் கட்சியில் இணையுமாறும், விரைவாக வெளிவரும் போராட்டங்களுக்கு அரசியல் தலைமையை வழங்குவதற்குத் தேவையான வெகுஜனக் கட்சியாக அதைக் கட்டியெழுப்புமாறும் நாங்கள் உங்களை கேட்டுக்கொள்கிறோம்.

Loading