ஆரம்பகால சோவியத் ஒன்றியம் மற்றும் ஸ்ராலினிசம் பற்றிய ஒரு குறிப்பிடத்தக்க நினைவுக் குறிப்பு: அலெக்ஸி யாரோட்ஸ்கியின் வாழ்க்கை

பகுதி-1, "கடந்த காலத்தை எதிர்கொள்வது"

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

[பகுதி-1] [பகுதி-2]

அலெக்ஸி யாரோட்ஸ்கி: Litsom k proshlomu [கடந்த காலத்தை எதிர்கொள்வது - Facing the Past], மாஸ்கோ 2018.

அலெக்ஸி யாரோட்ஸ்கி: Zolotaya Kolyma. Vospominaniia A. S. Yarotskogo o Kolyme v literaturnom kontektse [Golden Kolyma. ஏ.எஸ். யாரோட்ஸ்கியின் இலக்கிய உள்ளடக்கத்தில் கோலிமாவைப் பற்றிய நினைவுக் குறிப்புகள் - The memoirs of A. S. Yarotsky about the Kolyma in their literary context] சென்.பீட்டர்ஸ்பேர்க்: Nestor-Istoriia, 2021.

'நூல்களுக்கு அவற்றின் சொந்த தலைவிதி உள்ளது' என்ற முதுமொழி அலெக்ஸி யாரோட்ஸ்கியின் நினைவுக் குறிப்புகளுக்கும் பொருந்தும். யாரோட்ஸ்கி ஒரு சோவியத் பொறியியலாளர் ஆவார். அவர் 1970களில் அக்டோபர் புரட்சி, உள்நாட்டுப் போர் மற்றும் பெரும் பயங்கரம் பற்றிய தனது அனுபவத்தைப் பற்றி இரண்டு தொகுதி நினைவுக் குறிப்புகளை எழுதினார். இத்தொகுதிகள் முறையே 2018 மற்றும் 2021 இல் சமீபத்தில் மட்டுமே வெளியிடப்பட்டன. அசாதாரணமான பிரச்சாரம் மற்றும் வரலாற்று பொய்மைப்படுத்துதலுடன் சேர்ந்து வரும் உக்ரேனில் ரஷ்யாவிற்கு எதிரான நேட்டோ பினாமி போரின் நிலைமைகளின் கீழ், இந்த நினைவுக் குறிப்புகள், எந்த சூழ்நிலையிலும் குறிப்பிடத்தக்கவையும், கூடுதல் முக்கியத்துவத்தையும் பெறுகின்றன.

ஸ்ராலினிசம் மற்றும் பெரும் பயங்கரத்தின் மரபுகளில் ஒன்றான, 20 ஆம் நூற்றாண்டின் மிகப் பெரிய சமூக எழுச்சிகளான அக்டோபர் புரட்சி மற்றும் அதைத் தொடர்ந்து வந்த உள்நாட்டுப் போரைப் பற்றி விவாதிக்கக்கூடிய வகையில் மிகக் குறைவான நினைவுக் குறிப்புகள் மற்றும் சாதாரண மக்களின் மிகக்குறைவான நினைவுக் குறிப்புகளே உள்ளன. யாரோட்ஸ்கியின் நினைவுகள் அரிதான விதிவிலக்காகும். பெட்ரோகிராட்டில் தொழிலாள வர்க்கம் அக்டோபர் மாதம் அதிகாரத்தைக் கைப்பற்றியதையும், அதைத் தொடர்ந்து உக்ரேனில் நடந்த உள்நாட்டுப் போரையும் கண்ட அவர், 1930களின் பெரும் பயங்கரத்திற்கு இலக்காகி, சைபீரியாவில் கடூழிய உழைப்பு முகாமில் தனது வாழ்நாளின் பல ஆண்டுகளைக் கழித்தார்.

அக்டோபர் புரட்சியின் இரண்டாம் ஆண்டு தினத்தில் லெனினும் ட்ரொட்ஸ்கியும்

அவரது சொந்த பயங்கரமான அனுபவங்கள் இருந்தபோதிலும், ஸ்ராலினிசத்திற்கு எதிரான சோசலிச அடிப்படையிலான எதிர்ப்பாளராக யாரோட்ஸ்கி தனது நினைவுக் குறிப்புகளை எழுதினார். அவர் அக்டோபர் புரட்சியின் கொள்கைகளுக்கு அர்ப்பணிப்புடன் இருந்தார். அவர் தனது அனுபவங்கள் மில்லியன் கணக்கானவர்களினது அனுபவங்கள் என்பதையும், இந்த வரலாற்று நிகழ்வுகள் மற்றும் புரட்சியின் பழைய போல்ஷிவிக் தலைவர்கள் பற்றிய வரலாற்று நினைவைப் பாதுகாப்பது தன்னைப் போன்ற பயங்கரத்திலிருந்து தப்பிய ஒரு சில நனவானவர்கள் மீது விழுந்தது என்பதையும் அவர் புரிந்துகொண்டார். அந்த தலைவர்களைப் பற்றி முதலில் நாட்டின் ஆட்சியாளர்களாகவும் பின்னர் ஸ்ராலினிச உழைப்பு முகாம்களில் கைதிகளாகவும் அறிந்துகொண்டார்.

ட்ரொட்ஸ்கிச இலக்கிய விமர்சகர் அலெக்சாண்டர் வோரொன்ஸ்கியின் பேத்தி டாடியானா ஐசேவாவால், கடந்த காலத்தை எதிர்கொள்வது (Litsom k proshlomu) என்ற தலைப்பின் கீழ், அவரது நினைவுக் குறிப்புகளின் முதல் பகுதி 2018 இல் வெளியிடப்பட்டது. இது 1917 முதல் 1930 வரையிலான காலப்பகுதியை உள்ளடக்கியது.

அலெக்ஸி யாரோட்ஸ்கி 1908 இல் செயின்ட் பீட்டர்ஸ்பேர்க்கில் ரஷ்ய ஜனநாயக புத்திஜீவிகளின் ஒப்பீட்டளவில் வசதியான குடும்பத்தில் பிறந்தார். சிறுவனாக இருந்தபோது, 1917 ஆம் ஆண்டு பிப்ரவரி புரட்சியை கண்டார். அதில் புரட்சியின் தியாகிகளுக்காக Field of Mars இல் நடந்த புகழ்பெற்ற ஆர்ப்பாட்டம் மற்றும் அந்த ஆண்டு அக்டோபரில் (சமகால நாட்காட்டியின்படி நவம்பர் 7) போல்ஷிவிக்குகளால் அதிகாரம் கைப்பற்றப்பட்டதையும் கண்டார்.

புத்திஜீவிகளின் பல குடும்பங்களைப் போலவே, யாரோட்ஸ்கியின் குடும்பமும் புரட்சிகர எழுச்சியின் போக்கில் பாட்டாளி வர்க்கமாக்கப்பட்டது. 1917 புரட்சிக்குப் பின்னர் அவர்கள் உக்ரேனுக்குச் சென்று மேலும் உள்நாட்டுப் போர் முழுவதும் அங்கேயே இருந்தனர். இங்கு, இளம் யாரோட்ஸ்கி, உள்நாட்டுப் போரின் போது யூத-எதிர்ப்பு வன்முறை வெடித்ததைக் கண்டார். அப்போது 200,000 உக்ரேனிய யூதர்கள் கொல்லப்பட்டனர். அவர்களில் பெரும்பாலோர் வெண்காவலர்கள் மற்றும் பல்வேறு தேசியவாத அமைப்புகளால் கொல்லப்பட்டனர். பல ஆண்டுகளாக, செம்படை, வெண்காவலர்கள் மற்றும் ஜேர்மன் ஆக்கிரமிப்புக்கு இடையில் அரசியல் அதிகாரம் எவ்வாறு முன்னும் பின்னுமாக கைமாறியது என்பதையும் அவர் கண்டார். மேலும் அராஜகவாதியான நெஸ்டர் மக்னோவின் தலைமையில் விவசாயிகள் எழுச்சிகளையும் அவர் கண்டார்.

அதன் புவிசார் மூலோபாய முக்கியத்துவம் மற்றும் அதன் சிக்கலான சமூக-பொருளாதார அமைப்பு ஆகியவற்றின் காரணமாக உள்நாட்டுப் போரில் உக்ரேனைப் போல எந்தப் பகுதிக்காகவும் கடுமையாகப் போராடப்படவில்லை. முன்னாள் ரஷ்ய பேரரசின் மிக முக்கியமான நிலக்கரி இருப்புக்களைக் கொண்டிருந்த இப்போது உக்ரேனின் கிழக்கில் உள்ள டொன்பாஸ் மற்றும் ஒரு பெரிய தொழில்துறை தொழிலாள வர்க்கத்தின் தாயகமாக இருந்தபோது, இந்தத் தொழிலாளர்கள் பெரும்பாலும் ரஷ்ய இனத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தனர். உக்ரேனிய மொழி பேசும் மக்களில் பெரும்பாலோர், மாறாக, கிராமப்புறங்களில் வாழ்ந்து விவசாயிகளாக உழைத்து வந்தனர்.

உக்ரேனிய மக்களின் விசுவாசத்தை வென்றெடுப்பதற்காக போல்ஷிவிக்குகள் நடத்திய போராட்டம், தேசியங்கள் பற்றிய பிரச்சினையில் அவர்களது நீண்டகாலமாக ஒடுக்கப்பட்ட தேசியரீதியான முயற்சிகளை அங்கீகரிப்பது மற்றும் விவசாயிகளுக்கு நிலம் வழங்குவது உட்பட ஒரு சரியான அரசியல் நிலைப்பாட்டைக் கொண்டிருந்தது. உக்ரேனின் பெரும்பாலான பகுதிகள் உள்நாட்டுப் போரின் போது சிவப்பிலிருந்து வெண்காவலர்களுக்கு மீண்டும் சிவப்புகளுக்கு என பல முறை தங்கள் ஆட்சியாளர்களை மாற்றின. அராஜகவாத எழுச்சிகளும் இந்த பகுதியில் உள்ள உள்நாட்டுப் போரில் பொருத்தமற்ற விகிதத்திலான பங்கைக் கொண்டிருந்தன.

மார்ச்-நவம்பர் 1918 இல் உக்ரேனின் வரைபடம், பெரும்பாலான பகுதி ஜேர்மனி மற்றும் ஆஸ்திரிய-ஹங்கேரியின் கட்டுப்பாட்டில் இருந்தது [Photo by Andrew Andersen] [Photo by Andrew Andersen]

எவ்வாறாயினும் யாரோட்ஸ்கியின் நினைவுக் குறிப்புகள் நகரும் வகையில் காட்டுவது போல், வெண்காவலர்கள் மற்றும் உக்ரேனிய தேசியவாதிகள் மீதான செம்படையின் வெற்றியானது போல்ஷிவிக்குகளின் தேசியக் கொள்கை மற்றும் விவசாயிகளுக்கு நிலம் வழங்கியதன் காரணமாக மட்டும் அடையப்படவில்லை. நவம்பர் 1918 இல் ஜேர்மனியில் புரட்சி வெடித்தது புரட்சிகரப் போரின் முடிவை தீர்மானிப்பதில் ஒரு முக்கிய காரணியாக இருந்தது. அதுவரை, ஜேர்மன் துருப்புக்கள் உக்ரேனில் நிலைகொண்டிருந்தன. அங்கு அவர்கள் போல்ஷிவிசத்திற்கும் செம்படைக்கும் எதிர்ப்பலமாக ஹெட்மான் பாவ்லோ ஸ்கோரோபாட்ஸ்கியின் (Hetman Pavlo Skoropadskyi) சர்வாதிகாரத்தை ஆதரித்தனர். யாரோட்ஸ்கியின் குடும்பம் வாழ்ந்த நகரமும் ஜேர்மன் கட்டுப்பாட்டில் இருந்தது. மேலும் குடும்பம் ஒரு ஜேர்மன் சிப்பாயை கட்டாயமாக தங்க வைக்க வேண்டிய நிலையில் இருந்தது. ஜேர்மனியில் சிப்பாய்களும் தொழிலாளர்களும் குழுக்களை உருவாக்கிவிட்டனர், மற்றும் அரசர் தப்பி ஓடிவிட்டார் என்ற செய்தியின் பாரிய தாக்கத்தை யாரோட்ஸ்கி நினைவு கூர்ந்தார். 1970 களில் சோவியத் அதிகாரத்துவத்தால் முன்வைக்கப்பட்ட உள்நாட்டுப் போரின் தேசியவாதத்தின் பங்கை நிராகரித்து அவர் பின்வருமாறு எழுதினார்;

செம்படையின் தாக்குதலின் கீழ், ஜேர்மன் ஆக்கிரமிப்பாளர்கள் உக்ரேனை விட்டு எப்படி தப்பி ஓடினர் என்பதை எழுதுவது இங்கு [1970களின் சோவியத் ஒன்றியத்தில்] விருப்பத்திற்குரியதாக உள்ளது. ஆனால் நான் முற்றிலும் மாறுபட்ட ஒன்றைக் கண்டேன். …ஜேர்மனியில் புரட்சியை கேள்விப்பட்டதும் ஒரு அதிசயம் நடந்தது, குரலற்ற, ஊமையாக இருந்த அணியினர் [ஜேர்மன் படையினர்கள்] திடீரென்று பேசத் தொடங்கினர். எஃகு தலைக்கவசங்களுக்கு கீழ் ஏதோ உடைந்து, சத்தமும் சலசலப்பும் அணிகளுக்குள் சென்றன. அரசரின் பதவி விலகல், போர் நிறுத்தம் மற்றும் புரட்சி பற்றிய தந்தியை அவர்கள் படித்தனர்.

மூன்று அல்லது நான்கு நாட்களில் ஜேர்மன் இராணுவம் உடைந்தது. நகரத்தில் ஒரு சிப்பாய்கள் குழு உருவாக்கப்பட்டது. வடக்கு-பச்சை சீருடையில் சிவப்பு வில் தோன்றியது. ஒரு துப்பாக்கியின் அடிப்பக்கம் மேலுள்ளவாறு தோள்களில் தொங்கியது. ஜேர்மனியர்கள் வெளியேறினர். திரு.ஓட்டோ என் அம்மாவிடம் பின்வருமாறு கூறினார்:

திருமதி. யாரோட்ஸ்காயா, நாங்கள் இப்போது வீட்டிலும் அதையே செய்வோம், அதுதான் ஒரு புரட்சி.

அக்டோபர் புரட்சியின் கருத்துக்களுக்கு இது மிகப்பெரிய வெற்றியாகும்: ஜேர்மனியர்கள் எதிரிகளாக அல்லாது புரட்சிகரப் போராட்டத்திற்குத் தயாராக இருக்கும் மக்களாக வெளியேறினர்”.

இந்த அவதானிப்புகள் ரஷ்ய புரட்சியின் வளர்ச்சி ஜேர்மனியில் நிகழ்வுகளின் மீதான மகத்தான தாக்கத்தை மட்டும் காட்டவில்லை, உலக சோசலிசப் புரட்சியின் முன்னோக்கு வெறும் முழக்கம் அல்ல, மாறாக சோவியத் ரஷ்யா மற்றும் உக்ரேனில் இருந்து ஜேர்மனி வரை, மகத்தான செல்வாக்கைப் பெற்ற மற்றும் மக்களை ஈர்க்கும் ஒரு துருவமாக இருந்த ஒரு சாத்தியமான அரசியல் வேலைத்திட்டம் என்பதையும் அவை சக்தியுடன் நிரூபிக்கின்றன.

1918 ஜேர்மன் புரட்சியின் தொடக்கத்தில் உருவாக்கப்பட்ட பிரின்ஸ்ரெஜென்ட் லூயிட்போல்ட் என்ற கடற்படை வீரர்கள் குழு (c- Bundesarchiv, Bild 183-J0908-0600-002 / CC-BY-SA 3.0)

யாரோட்ஸ்கி அந்தக் காலகட்டத்தின் 'லெனினிச மக்கள் ஆணையர்களை [லெனின்ஸ்கி நர்கோமி]' முற்றுமுழுதாக போற்றுகிறார். உக்ரேனில், இவர்களில் லியோன் ட்ரொட்ஸ்கியின் நெருங்கிய நண்பர்கள் மற்றும் கூட்டாளிகளில் ஒருவரான கிறிஸ்டியான் ரகோவ்ஸ்கியும் மற்றும் இடது எதிர்ப்பின் பல எதிர்காலத் தலைவர்களும் அடங்குவர். அவர் கம்யூனிஸ்ட் இளைஞர் அமைப்பான கொம்சோமாலில் சேர்ந்து, மேலும் அரசியல் பொருளாதாரம் படித்து பொறியியலாளராக லெனின்கிராட் சென்றார்.

சோவியத் ஒன்றியத்தின் சிறந்த பொருளாதார நிறுவனங்களில் ஒன்றான Polytechnical Institute இல் உள்ள அவரது சகாக்கள் பெரும்பாலும் உள்நாட்டுப் போரின் முன்னாள் வீரர்களாக இருந்தனர். அவர்கள் அவரை விட மிகவும் வயதானவர்கள் மற்றும் அரசியல் அனுபவமுள்ளவர்கள். அவர்களில் பல எதிர்கால சிறந்த பொருளாதார வல்லுநர்கள் இருந்தனர். அவர்கள் அனைவரும் பின்னர் பெரும் பயங்கரத்தில் கொல்லப்பட்டனர்.

யாரோட்ஸ்கி ஏற்கனவே கட்சி உறுப்பினரான தனது மூத்த சகோதரரின் உதவியுடனும், கோடையில் ஒரு தொழிற்சாலையில் வேலை செய்வதன் மூலமாகவும் தனது படிப்புக்கு நிதி பெற்றார். தொழிலாள வர்க்கத்தின் மகத்தான சமூக சக்தியையும் அவர் அறிந்துகொண்டார். ஜூன் 7, 1927 அன்று வார்சோவில் ஒரு வெண்படை குடியேற்றவாசியால் முதிர்ந்த போல்ஷிவிக் புரட்சியாளர் பீட்டர் வோய்கோவ் கொல்லப்பட்டதை அடுத்து நிகழ்ந்த ஒரு பெரிய ஆர்ப்பாட்டம் அவர் மீது குறிப்பாக ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியது:

பிற்பகல் நான்கு மணியளவில் செயின்ட் பீட்டர்ஸ்பேர்க்கில் உள்ள அனைத்து தொழிற்சாலைகளிலும் மற்றும் அனைத்து நிலையங்களில் உள்ள அனைத்து நீராவி இயந்திரங்களும் அவசர ஒலியெழுப்பப்பட்டு, வாயில்கள் திறக்கப்பட்டன, உடனடியாக வைபோர்க் பக்கத்தின் முழு தொழிலாள வர்க்கமும் ஆர்ப்பாட்டத்திற்கு வந்தனர். முன்னாள் சாம்சோனோவ்ஸ்கி பாதையின் முழு அகலத்தையும் தடுத்து, இப்போது அங்கு லெனினின் ஒரு நினைவுச்சின்னம் உள்ள பின்லாந்து நிலையத்திற்குச் சென்றனர்.

இது என்ன, அது உழைக்கும் வர்க்கம் எவ்வாறான சக்தியைக் கொண்டுள்ளது மற்றும் இந்த மக்கள் எவ்வளவு ஒருமித்த கருத்துடையவர்கள் என்பதை நான் புரிந்துகொண்டேன். (229-230)

ஸ்ராலினிச கம்யூனிச அகிலத்தின் சந்தர்ப்பவாதக் கொள்கைகளின் விளைவாக 1925-27 சீனப் புரட்சி தோல்வியுற்றதைத் தொடர்ந்து, 1927 டிசம்பரில் கட்சியின் இடது எதிர்ப்பின் தலைவர்களை ஸ்ராலினிச பிரிவு வெளியேற்றியது. லியோன் ட்ரொட்ஸ்கியின் தலைமையின் கீழ், போல்ஷிவிக் கட்சியின் தேசியவாத மற்றும் அதிகாரத்துவ சீரழிவுக்கு எதிராக 1927க்குப் பின்னர் இந்த எதிர்ப்பு தொடர்ந்து போராடியது. இந்த நூலின் மிகவும் குறிப்பிடத்தக்க பத்திகளில் ஒன்றில், யாரோட்ஸ்கி தன்னைப் பொறுத்தவரை, அந்த நேரத்தில், கட்சிக்குள் இருந்த மூர்க்கமான அரசியல் சண்டைகள் கிட்டத்தட்ட புரிந்துகொள்ள முடியாதவை என்பதை ஒப்புக்கொள்கிறார். மாணவராக இருந்த காலத்தை நினைவு கூர்ந்து அவர் பின்வருமாறு எழுதுகிறார்:

அந்த நேரத்தில் ட்ரொட்ஸ்கிஸ்டுகளுடன் நான் சூடான விவாதங்களுக்கு வந்தேன். ஆனால் நான் இன்னும் அந்த அரசியல் வளர்ச்சியை எட்டவில்லை, அவர்கள் எதைப் பற்றி வாதிடுகிறார்கள் என்பது எனக்குப் புரியவில்லை. இப்போது, அவர்கள் எதைப் பற்றி வாதாடினார்கள் என்பது எனக்குப் புரிகிறது. ஆனால் நான் அதைச் செய்யவில்லை. அந்த நேரத்தில் வாழ்க்கையின் இந்த முழு அம்சமும் என்னை கடந்து சென்றது. நான் மிகவும் இளமையாக இருந்தேன். ஆனால் அப்போது நடந்த விவாதங்கள் இன்னும் வரவிருந்த பல தசாப்தங்களுக்கு நம் நாட்டின் முழு போக்கையுமே தீர்மானித்திருந்தன என்பது இன்று தெளிவாகிறது. (பக்கம் 220)

அவரது அனுபவம் பல தொழிலாளர்களாலும் இளைஞர்களாலும் பகிர்ந்து கொள்ளப்பட்டது என்பதில் சந்தேகமில்லை. உண்மையில், ஸ்ராலினிச அதிகாரத்துவத்தின் மிகப்பெரிய குற்றங்களில் ஒன்று, எதிர்ப்பினரின் ஆவணங்களை வெளியிடுவதையும் புழக்கத்தில் விடுவதையும், புதிய அதிகாரத்துவத்திற்கும் ஸ்ராலினுக்கும் எதிரான போராட்டம் பற்றி லெனின் தனது இறுதிக் கட்டுரையில் எழுதிய கட்டுரைகளையும் திட்டமிட்டு நசுக்கியது. சோவியத் வரலாற்றாசிரியர் வாடிம் ரொகோவின் எடுத்துக்காட்டியுள்ளபடி, அதிகாரத்துவ ஆட்சி கட்சியில் ஜனநாயக விவாதத்தை பெருகிய முறையில் சாத்தியமற்றதாக ஆக்கியது. தொழிலாள வர்க்கம் மற்றும் இளைஞர்களுக்குள் உள்ள கட்சியின் மிகவும் முன்னேறிய மற்றும் அர்ப்பணிப்புள்ள உறுப்பினர்களிடையே கூட இது பெரும் குழப்பத்தையும் அமைதியின்மையையும் உருவாக்கியது. ட்ரொட்ஸ்கி மற்றும் ஒட்டுமொத்த எதிர்ப்பினருக்கு எதிராக சோவியத் பத்திரிகைகளின் பக்கங்களில் ஒரு மூர்க்கமான பிரச்சாரம் நடத்தப்பட்ட நிலையில், தொழிலாளர்கள் இந்த எதிர்ப்பில் ஏதேனும் ஒன்றைப் படித்தால் கட்சியில் இருந்து வெளியேற்றப்படும் அபாயம் இருந்தது.

1927ல் இடது எதிர்ப்பு தலைவர்கள். இருப்பது; செரிப்ரியாகோவ், ராடெக், ட்ரொட்ஸ்கி, போகஸ்லாவ்ஸ்கி, பிரயோபிரஜென்ஸ்கி. நிற்பது: ரகோவ்ஸ்கி, டொப்னிஸ், பெலோபோரோடோவ், சோஸ்னோவ்ஸ்கி

கட்டாய கூட்டுமயமாக்கல் மற்றும் முதல் ஐந்தாண்டுத் திட்டத்தின் விரைவான தொழில்மயமாக்கல் ஆகியவற்றின் நடுவில் யாரோட்ஸ்கி 1930 இல் பட்டம் பெற்றார். அவரது தலைமுறையில் பலரைப் போலவே, அவர் தொழில்மயமாக்கலில் புரட்சிகர முன்னேற்றங்களில் முழு உற்சாகத்துடன் இருந்ததுடன், மேலும் சோவியத் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப தன்னால் முடிந்த அனைத்தையும் செய்யத் தீர்மானித்தார். இருப்பினும், கூட்டுறவுமயமாக்கலின் தாக்கம் மற்றும் எழுச்சியடைந்து வரும் ஸ்ராலின் தனிமனித வழிபாட்டு முறை அவரை அரசியல்ரீதியாக விரைவில் அவநம்பிக்கைக்குள்ளாக்கியது.

அவரது மூத்த சகோதரர் கிராமப்புறங்களுக்கு அனுப்பப்பட்ட பல இளைஞர்களின் பிரிவுகளில் ஒன்றுக்கு தானாக முன்வந்து, விவசாய குடும்பங்களின் கூட்டுறவுமயமாக்கலை செயல்படுத்தினார். இந்த இளைஞர்கள், இலட்சியவாத கம்யூனிஸ்டுகள், தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் நலனுக்காகப் போராடுகிறோம் என்று உறுதியாக நம்பியிருந்தவர்கள், கட்டாயக் கூட்டுறவுமயமாக்கல் கொள்கையால் உருவாக்கப்பட்ட பயங்கரமான யதார்த்தத்தை எதிர்கொண்டனர்.

'தனியொரு நாட்டில் சோசலிசத்தை' கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்தின் அடிப்படையில் மற்றும் புதிய பொருளாதாரக் கொள்கையின் கீழ் 1920 களில் செழித்தோங்கியிருந்த விவசாயிகளின் செல்வந்த அடுக்குகளின் பாரிய சமூக அழுத்தங்களை எதிர்கொண்ட ஸ்ராலினிச தலைமை 1928 இல் ஒரு கூர்மையான திருப்பத்தை ஏற்படுத்தியது. சோவியத் சமுதாயத்தின் விரைவான தொழில்மயமாக்கல் மற்றும் விவசாயிகளுக்கு சொந்தமான பல்லாயிரக்கணக்கான தனியார் நிலங்களை பெருமளவில் திரட்டுதல் ஆகிய இரண்டின் அவசியத்தையும் அறிவித்தது. இத்தகைய கொள்கைகள், விவசாயம் மற்றும் தொழில்துறை ஆகிய இரண்டிலும் போதுமான உயர் தொழில்நுட்ப வளர்ச்சி இல்லாத நிலையில், பேரழிவிற்கு மட்டுமே வழிவகுக்கும் என்ற ட்ரொட்ஸ்கியின் எச்சரிக்கைகள் விரைவாகவும் சோகமாகவும் உறுதிப்படுத்தப்பட்டன. கட்டாயக் கூட்டுறவுமயமாக்கல் கொள்கையானது பல்லாயிரக்கணக்கான விவசாயிகளை முழுமையான பட்டினியில் ஆழ்த்தியதுடன் அதனாலான இறப்பு எண்ணிக்கை மில்லியன்களாக மதிப்பிடப்பட்டது. மேலும் சோவியத் கிராமப்புறங்களை உள்நாட்டுப் போரின் விளிம்பிற்கு கொண்டு வந்தது.

கிராமப்புறங்களில் தனது அனுபவங்களைப் பற்றி அவரது சகோதரரால் கூறப்பட்ட யாரோட்ஸ்கி, கூட்டுறவுமயமாக்கலில் ஈடுபட்டுள்ள மிருகத்தனம் மற்றும் குறிப்பாக பசியால் குழந்தைகளின் பாரிய மரணம் ஆகியவற்றால் ஆழமாக கலக்கமடைந்தார். பொது வாழ்வின் ஸ்ராலினிசமயமாக்கல் மற்றும் ஸ்ராலின் தனிநபர் வழிபாட்டு முறையால் அவர் திகைத்தார்.

மார்க்ஸ், பிளெக்கானோவ் மற்றும் லெனினைப் பற்றி நான்கு ஆண்டுகள் படித்த பின்னர், தேசம் என்றால் என்ன, முதல், இரண்டாவது, மூன்றாவது என்பது போன்ற மிகவும் எளிமைப்படுத்தப்பட்ட சூத்திரங்களுக்கு பழக்கப்படுவது கடினமானது. நீங்கள் அதை நினைவில் கொள்ள வேண்டும் என்பது முற்றிலும் தெளிவாக இருந்தது. ஆனால் ஒருவர் சிந்திக்கத் தொடங்கியவுடன், ஸ்ராலினின் இந்த அற்புதமான சூத்திரத்தில் எதுவும் இருக்கவில்லை. (பக்கம் 271).

1920கள் முழுவதும் அவர் கொம்சோமால் உறுப்பினராக இருந்த போதிலும், யாரோட்ஸ்கி இப்போது கட்சியில் சேர அழைக்கப்பட்டபோது, அதற்கு எதிராக அவர் முடிவு செய்தார். ஏனெனில் அவர் இனி 'நேர்மையாக' கட்சியில் சேர முடியாது என்று உணர்ந்தார். இந்த முடிவு நீண்டகால விளைவுகளை ஏற்படுத்தியது. அவர் விரைவில் கொம்சோமாலில் இருந்து வெளியேற்றப்பட்டார் மற்றும் ஒரு ஆபத்தான வரைவிலக்கணமான ஒரு 'வர்க்க எதிரி' என்று கண்டனம் செய்யப்பட்டார்.

1930களின் முற்பகுதியில் பொருளாதார வல்லுநர்கள் மற்றும் புத்திஜீவிகளின் பரந்த அடுக்குகளின் மத்தியிலான களையெடுப்பின் தொடக்கத்தில், யாரோட்ஸ்கி லெனின்கிராட்டை விட்டு வெளியேற முடிவு செய்தார். இப்போது ஒரு இரயில்வே ஊழியரின் மகள் மரியாவை மணந்துகொண்டு அவர் மாஸ்கோவிற்கு குடிபெயர்ந்தார். அங்கு அவர் மக்கள் போக்குவரத்து ஆணையத்தில் பொறியாளராக வேலை பெற்றார். அங்குதான் 1930களின் பெரும் பயங்கரத்தை அவர் அனுபவித்தார் என்பதும், இதுதான் அவரது நினைவுக் குறிப்புகளின் இரண்டாவது தொகுதியின் கருப்பொருளாகும்.

தொடரும்....

Loading