உக்ரேன் போரில் அமெரிக்க தலையீட்டை அமெரிக்க பாதுகாப்பு செயலர் ஆஸ்டின் ஒப்புக்கொண்டார்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

ஞாயிற்றுக்கிழமை, அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஆண்டனி பிளிங்கெனும் பாதுகாப்பு செயலர் லொயிட் ஆஸ்டினும் உக்ரேனுக்குச் சென்றனர், அங்கு ஆஸ்டின், உக்ரேன் போரில் அமெரிக்கா ஈடுபட்டுள்ளது என வெளிப்படையாகக் கூறினார்.

உக்ரேனிய ஜனாதிபதி வோலோடிமிர் செலென்ஸ்கியை சந்தித்ததன் பின்னர், ஆஸ்டின், 'தற்போதைய போரில் வெற்றி பெறுவதற்கும் எதிர்காலத்திற்கும் தயாராகும் விஷயங்களைப் பற்றி நாங்கள் பேசினோம்' என்று முன்னரே தீர்மானித்த கருத்துக்களை தெரிவித்தார்.

அமெரிக்காவையும் உக்ரைனையும் முதல் நபர் பன்மையில் குறிப்பிட்டு, 'நாங்கள்' ரஷ்யாவிற்கு எதிராக 'போராடுகிறோம்' என அறிவித்ததன் மூலம், அமெரிக்கா போரிடும் பிரிவுகளில் ஒன்று என்பதை வெளிப்படையாக ஒப்புக்கொண்ட முதல் அமெரிக்க அதிகாரியாக ஆஸ்டின் ஆனார்.

ஏப்ரல் 24, 2022, ஞாயிற்றுக்கிழமை, கியேவில், உக்ரேனிய ஜனாதிபதி வோலோடிமிர் செலென்ஸ்கியை அமெரிக்க பாதுகாப்பு செயலர் ஆஸ்டினும் (இடது) வெளியுறவுத்துறை செயலர் ஆண்டனி பிளிங்கெனும் சந்திக்கின்றனர். (Photo: Ukrainian Presidential Press Office)

“நேட்டோவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையேயான நேரடி மோதல் மூன்றாம் உலகப் போராக இருக்கும், அதை எப்படியாவது நாம் தடுக்க வேண்டும்” என மார்ச் மாதத்தில் பைடென் அறிவித்த நிலையில் இந்த அறிக்கை குறிப்பாக கவனிக்கத்தக்கது.

ரஷ்யாவிற்கு எதிரான ‘மோதலில்’ ‘நாங்கள்’ ஈடுபட்டுள்ளோம் என்ற ஆஸ்டினின் அறிக்கையையும், அமெரிக்காவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையேயான போர் ‘மூன்றாம் உலகப் போரை’ குறிக்கும் என்ற பைடெனின் அறிவிப்பையும் இணைத்துப் பார்த்தால், உக்ரேன் விவகாரத்தில் அமெரிக்காவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையேயான பினாமி போரானது விரைவாக ஒரு உலகப் போராக உருவெடுப்பதற்கு அச்சுறுத்துகிறது என்ற முடிவுக்கு வராமல் இருக்க முடியாது.

ஆஸ்டின் தொடர்ந்து கூறுகையில், 'உக்ரேனை ஆக்கிரமிப்பது போன்றவற்றுக்கு அந்த நாடு இனியும் தகுதியற்றது என்ற நிலைக்கு ரஷ்யா பலவீனமடைய வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்' என்றார்.

அமெரிக்கா 'ரஷ்யாவின் முதுகை உடைப்பதை' இலக்காகக் கொள்ள வேண்டும் என்று அமெரிக்க இராணுவ ஐரோப்பிய கட்டளைத் தளபதி பென் ஹோட்ஜஸ் கூறியதையே ஆஸ்டினின் அறிக்கை அடிப்படையில் மீண்டும் கூறுகிறது. சமீபத்திய நியூ யோர்க் டைம்ஸ் தலையங்கமும் 'ரஷ்யாவை மண்டியிட வைக்கும்' இலக்குக்கு வலியுறுத்தியது.

ஆஸ்டினின் அறிக்கைகள் குறித்து நியூ யோர்க் டைம்ஸின் டேவிட் சாங்கர் இவ்வாறு எழுதினார்,

உக்ரேன் குறித்த போராட்டத்தில் திரு. புட்டின் ‘ஏற்கனவே தோற்றுப்போன’ பல்வேறு வழிகளைப் பற்றிய வெளியுறவுத்துறை செயலர் ஆண்டனி ஜே. பிளிங்கெனின் அறிக்கைகளால் வலுவூட்டப்பட்ட திரு. ஆஸ்டினின் கருத்துக்களானது, பைடென் நிர்வாகம் மற்றும் அதன் நெருங்கிய கூட்டாளிகளால் எடுக்கப்பட்ட முடிவை பிரதிபலிக்கிறது, அதாவது மிக வெளிப்படையாகவும் நம்பிக்கையுடனும் பேசுவதானால் அடுத்த சில மாதங்களில் உக்ரேனிய வெற்றிக்கான சாத்தியக்கூறுகள் உள்ளன என்று திங்களன்று பல அதிகாரிகள் கூறினர்.

சாங்கர் மேலும் இவ்வாறு தொடர்ந்தார்,

இரண்டாவது ஆபத்தும் உள்ளது: அதாவது, திரு. புட்டின் தனது வழக்கமான இராணுவப் படைகளின் கழுத்து நெரிக்கப்படுவதாக உணர்ந்தால், அவர் மேற்கத்திய உள்கட்டமைப்பு, இரசாயன ஆயுதங்கள் அல்லது ‘போர்க்கள’ தந்திரோபாய அணு ஆயுதங்கள் மீதான படிப்படியான சைபர் தாக்குதல்களுக்கு (cyberattacks) திரும்புவார். எட்டு வாரங்களுக்கு முன்னர் கற்பனை செய்ய முடியாதிருந்த இந்தவொரு சாத்தியம் பற்றி இப்போது வழமையாக விவாதிக்கப்படுகிறது.

“ஜனாதிபதி புட்டின் மற்றும் ரஷ்ய தலைமையின் சாத்தியமான விரக்தியையும், அவர்கள் இதுவரை இராணுவ ரீதியாக எதிர்கொண்ட பின்னடைவையும் கருத்தில் கொண்டு பார்த்தால், தந்திரோபாய அணு ஆயுதங்கள் அல்லது குறைந்த பாதிப்பைத் தரும் அணு ஆயுதங்கள் மூலமான அச்சுறுத்தலை நாம் எவரும் அவ்வளவு இலகுவாக எடுத்துக் கொள்ள முடியாது,” என்று சிஐஏ இயக்குநர் வில்லியம் ஜே. பர்ன்ஸ் இந்த மாத தொடக்கத்தில் எச்சரித்தார்.

வேறு வார்த்தைகளில் கூறுவதானால், பைடென் நிர்வாகம் உக்ரேன், ரஷ்யா, அமெரிக்கா மற்றும் உலக மக்களை அணு ஆயுதப் போருக்குத் தூண்டும் அபாயகரமான பாதையில் நனவுடன் வழிநடத்துகிறது.

ஆயினும்கூட, இந்தக் கொள்கைகளின் தாக்கங்கள் பற்றி எந்த பொது விவாதமும் இல்லை, அல்லது பைடென் நிர்வாகம் அதன் போர் விரிவாக்கத்தால் ஏற்படும் பரந்த ஆபத்து குறித்து மக்களை எச்சரிக்கவில்லை. மாறாக, பல மாதங்களாக, அணு ஆயுதப் போரின் ஆபத்துகள் பற்றிய பொதுக் கருத்தை மழுங்கடிக்கவே அது முறையாக செயல்பட்டு வருகிறது. பைடென் சமீபத்தில், 'அவர் [புட்டின்] அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவதை தொலைதூரத்தில் கூட சிந்திக்கவில்லை என்று நான் நினைக்கிறேன்' என அறிவித்தார்.

இதற்கு நேர்மாறாக, தற்போதைய மோதலின் பாரிய ஆபத்துகளைச் சுட்டிக்காட்டி, ரஷ்ய அதிகாரிகள் அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவதாக மீண்டும் மீண்டும் அச்சுறுத்தியுள்ளனர். திங்களன்று, ரஷ்ய வெளியுறவு மந்திரி சேர்ஜி லாவ்ரோவ் அணுசக்தி விரிவாக்கத்தின் ஆபத்து பற்றி எச்சரித்து, 'இப்போது அபாயங்கள் கணிசமானவை' என்றார்.

லாவ்ரோவ், “மொத்தத்தில், நேட்டோ ஒரு பினாமி மூலமாக ரஷ்யாவிற்கு எதிராக ஒரு போரில் ஈடுபட்டுள்ளது, அந்தப் பினாமிக்கு ஆயுதங்களை வழங்குகிறது. இருப்பினும், போர் என்றால் போர் தான்” என்று முடித்தார்.

பிளிங்கென் மற்றும் ஆஸ்டினின் கருத்துக்கள், போரில் அமெரிக்காவின் பாரிய அளவிலான ஈடுபாட்டைத் தெளிவாக்கின. “உக்ரேனுக்கு பெரும் ஆதரவை வழங்குதல், ரஷ்யாவிற்கு எதிராக பெரும் அழுத்தத்தைக் கொடுத்தல், மேலும் இந்த முயற்சிகளில் ஈடுபட்டுள்ள 30 க்கும் மேற்பட்ட நாடுகளுடன் ஒற்றுமையாக செயல்படுதல் என நாங்கள் வகுத்த மூலோபாயம் உண்மையான முடிவுகளைத் தருகிறது” என்று பிளிங்கென் கூறினார்.

ஞாயிறன்று, பிளிங்கெனும் ஆஸ்டினும் உக்ரேனுக்கு 322 மில்லியன் டாலர் புதிய ஆயுத நிதியுதவி வழங்குவதாக அறிவித்தனர், இது போர் தொடங்கியதிலிருந்து உக்ரேனுக்கு அமெரிக்கா அனுப்பிய ஆயுதங்களின் மொத்த மதிப்பை 3.7 பில்லியன் டாலராக அதிகரிக்கச் செய்தது என்று ராய்ட்டர்ஸ் செய்தி கூறியது. அமெரிக்க ஆயுத விநியோகங்களில் ஜவெலின் ஏவுகணைகள், பீரங்கிகள், வெடிமருந்துகள் மற்றும் ட்ரோன்கள் அடங்கும்.

திங்களன்று, அவசரகால நடவடிக்கையின் ஒரு பகுதியாக உக்ரேனுக்கு 165 மில்லியன் டாலர்கள் மதிப்பிலான வெடிமருந்துகளை விற்க அனுமதிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறை அறிவித்தது. ஹோவிட்சர்கள், டாங்கிகள் மற்றும் கையெறிகுண்டு ஏவுகணைகளுக்கான வெடிமருந்துகளும் விற்பனையில் அடங்கும் என பென்டகன் தெரிவித்துள்ளது.

இந்த திட்டம் “ஹோவிட்சர்கள், டாங்கிகள், மற்றும் 2A36 Giatsint பீரங்கிக்கான 152 மிமீ சுற்று வெடிமருந்துகள்; D-29 Cannons பீரங்கிகளுக்கான 152 மிமீ சுற்று வெடிமருந்துகள்; தானியங்கி கையெறி குண்டு ஏவுகணை AGS-17 க்கான VOG-17; T-72 பீரங்கிக்கான 125 மிமீ HE வெடிமருந்துகள் மற்றும் 2A65 Msta பீரங்கிக்கான 152 மிமீ வெடிமருந்துகள் போன்ற கையெறிகுண்டு ஏவுகணைகளுக்கான வெடிமருந்துகளை உள்ளடக்கியிருக்கும்” என்று ராய்ட்டர்ஸ் செய்தி தெரிவித்தது.

இந்த வாரம், உக்ரேனுக்கு ஆயுதம் வழங்குவதை மையமாகக் கொண்ட டஜன் கணக்கான நாடுகளின் கூட்டத்தை அமெரிக்கா நடத்தவுள்ளது.

போர் வெடித்து இரண்டு மாதங்களுக்குப் பின்னர், அமெரிக்க அதிகாரிகள் முன்னர் இரகசியமாக மட்டுமே ஒப்புக்கொண்டதை இப்போது பகிரங்கமாக தெரிவிக்கிறார்கள்: அதாவது, ரஷ்யாவை முடக்கி அடிபணிய வைத்து அதன் அரசாங்கத்தை தூக்கியெறியும் நோக்கில் நடத்தப்படும் ஒரு போரில் அமெரிக்கா முக்கிய உந்து சக்தியாக உள்ளது.

உலகின் மிகப்பெரிய அணு ஆயுதங்களைக் கொண்ட இரு நாடுகளும் உக்ரேனில் இராணுவ மோதலில் ஈடுபட்டுள்ளன என்பதை ஆஸ்டினின் நடைமுறை ஒப்புக்கொண்டது உலகம் முழுவதும் உள்ள உழைக்கும் மக்களுக்கு ஒரு தெளிவான எச்சரிக்கையாக எடுத்துக்கொள்ளப்பட வேண்டும். தற்போதைய நெருக்கடி பெரும் ஆபத்துக்களைக் கொண்டுள்ளது மேலும் போருக்கு எதிராக சர்வதேச தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டுவதை அவசரப்படுத்துகிறது.

Loading