இராஜபக்ஷ அரசாங்கத்துக்கு எதிராக இலங்கை முழுவதும் உள்ள ஆசிரியர்கள் ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் இணைகின்றனர்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

ஜனாதிபதி கோட்டாபய இராஜபக்ஷ பதவி விலகவும் கடுமையான எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் அதிகரிக்கும் விலைகளால் ஆசிரியர்கள், மாணவர்கள் எதிர்கொள்ளும் போக்குவரத்து சிரமங்களில் இருந்து விடுபடக் கோரியும் 250,000 க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் திங்கள் அன்று ஒரு நாள் வேலைநிறுத்தத்தில் கலந்துகொண்டர்.

ஏப்ரல் 25 அன்று கண்டியில் ஊர்வலம் செல்லும் ஆசிரியர்கள் [Photo: WSWS]

கோட்டாபய இராஜபக்க்ஷ அரசாங்கத்தைப் பதவி விலகக் கோரியும் அத்தியவசிய உணவு, மருந்து மற்றும் எரிபொருள் போன்றவற்றின் விண்னணமுட்டும் விலையேற்றம் அதே போல் நீண்ட நேர நாளாந்த மின்தடைகளுக்கு எதிராகவும் உழைக்கும் மக்கள், இளைஞர்கள், உத்தியோகத்தர்கள் மற்றும் கிராமப்புற ஏழைகள் ஆகியோரின் வாரக்கணக்கான பரந்த போராட்டத்தின் ஒரு பாகமாகவே இந்த வேலை நிறுத்தம் இடம் பெற்றது.

தசாப்த காலமாக தொழிலாள வர்க்கத்தை பிளவுபடுத்துவதற்காக அரசியல் ஸ்தாபகத்தால் ஊக்குவிக்கப்பட்ட விசமத்தனமாக வகுப்புவாதத்தைக் கடந்து தீவு முழுவதுமாக ஆசிரியர்கள் வேலை நிறுத்தம் செய்துள்ளனர். வீட்டில் இருக்குமாறு தொழிற்சங்கங்களால் அறிவுறுத்தப்பட்டாலும் கொழும்பு, களுத்துறை மற்றும் கண்டி ஆகிய இடங்களில் நூற்றுக்கணக்கான ஆசிரியர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

தொழிலாள வர்க்கத்தின் ஏனைய பிரிவுகள் எதிர்நோக்கும் சகல சிரமங்களையும் முகங்கொடுக்கும் ஆசிரியர்கள் மத்தியில் பெருகிவரும் கோபத்தைத் தணிக்கும் ஒரு வழிமுறையாக மட்டுமே தொழிற்சங்கங்கள் இந்த வேலை நிறுத்தத்துக்கு அழைப்புவிடுத்துள்ளன. பாடசாலைகளில் ஆசிரியர் மற்றும் மாணவர்களின் வருகையானது எரிபொருள் மற்றும் பொதுப் போக்குவரத்துப் பற்றாக்குறையால் குழப்பட்டன. கடந்த இரு வாரங்களின் போது, மாணவர் வருகையானது சுமார் 50 சதவீதமாக குறைந்துள்ளது. பொருட்களின் உயர்ந்த விலையேற்றத்தால் வெறும் வயிற்றுடன் பாடசாலைக்கு வரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளன.

தமது ஜனநாயக மற்றும் சமூக உரிமைளுக்காகவும் அரசாங்கத்துக்கு எதிராகவும் போராட ஆசரிரியர்கள் வேலை நிறுத்தத்தில் இணைந்த அதேவளையில், தொழிற்சங்கங்கள், மக்கள் விடுதலை முன்னணி (ஜேவிபி) மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி (SJB) போன்ற எதிர்க் கட்சிகளுக்கு பின்னால் போராட்டத்தை திசை திருப்ப முயற்சிக்கின்றன. இவ் வேலை நிறுத்தமானது இலங்கை ஆசிரியர் சங்கம் (CTU), மக்கள் விடுதலை முன்னணியுடன் இணைந்த இலங்கை ஆசிரியர் சேவைகள் சங்கம் (CTSU) மற்றும் முன்னிலை சோசலிச கட்சியால் (FSP) கட்டுப்படுத்தப்படும் ஒன்றிணைந்த ஆசிரியர் சேவை சங்கம் (UTSU) ஆகியவற்றை உள்ளடக்கிய ஆசிரியர்-அதிபர் தொழிற்சங்க கூட்டணியால் அழைப்பு விடுக்கப்பட்டதாகும்.

இந்த தொழிற்சங்கக் கூட்டமைப்பு விடுத்த ஊடக அறிக்கையில், வேலைநிறுத்தத்தின் முக்கிய நோக்கம் 'திறமையற்ற அரசாங்கத்தை இராஜினாமா செய்ய அழுத்தம் கொடுப்பது' என்று அறிவித்த போதிலும், அதற்கான ஒரு மாற்றீடு தொடர்பாக அது அமைதியாக இருந்தது. இது புதிய தேர்தல்களுக்கான தயாரிப்பில் ஐ.ம.ச மற்றும் ம.வி.மு ஆல் பரிந்துரைக்கப்படுகின்ற “இடைக்கால அரசாங்கத்துக்கான” கதவை திறக்கிறது. எவ்வாறாயினும், இந்த எதிர்க் கட்சிகள், அவசரகால பிணையெடுப்புக்காக IMF உடனான பேச்சுவார்த்தைகளை ஆதரிக்கின்றன. அது தவிர்க்க முடியாமல் கடுமையான சிக்கன நடவடிக்கைகளுக்கான கோரிக்கைகளுடன் வரும். அது உழைக்கும் மக்கள் எதிர்கொள்ளும் சமூகப் பேரழிவைத் தீவிரப்படுத்தும்.

இதற்கிடையில், ஆசிரியர் தொழிற்சங்கங்கள் ஒப்பனை அலங்கார நடவடிக்கைகளை முன்மொழிகின்றன. ஏப்ரல் 21 அன்று, “நெருக்கடி நீங்கும் வரையில்” ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களை அருகில் உள்ள பாடசாலைக்கு செல்ல அனுமதிக்குமாறு கல்வி அமைச்சுக்கு அழைப்பு விடுத்தது. இந்தக் கோரிக்கையை அமைச்சு மறுத்த பின்னர் கூட்டமைப்பு வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்தது, ஆனால் ஆசிரியர்களை சுகயீனத்தில் உள்ளதாக தெரிவித்து வீட்டில் இருக்குமாறு கூறியதன் மூலம் ஏனைய தொழிலாளர்களிடம் இருந்து ஆசிரியர்களை தனிமைப்படுத்துவதற்கு கூட்டமைப்பு வேண்டுமென்று செயற்பட்டது.

பெப்ரவரி 8, 2022 அன்று கொழும்பில் வேலை நிறுத்தம் செய்யும் சுகாதாரத் தொழிலாளர்களின் பேரணி [Photo: WSWS]

கடந்த ஆண்டின் பிற்பகுதியில், அதே தொழிற்சங்கங்கள் கணிசமான ஊதிய உயர்வு கோரி நூறாயிரக்கணக்கான ஆசிரியர்களால் நடத்தப்பட்ட 100 நாட்களுக்கும் மேலான வேலைநிறுத்தத்தை காட்டிக் கொடுத்ததோடு, அரசாங்கம் வழங்கிய பரிதாபகரமான உயர்வுக்கு உடன்பட்டு அதை ஒரு 'வெற்றி' என்று கூறின. நாட்டின் அதிகரித்துவரும் பொருளாதார கொந்தளிப்புக்கு மத்தியில் தொழிற்சங்கத் தலைவர்கள், “நாம் அரசாங்கத்தின் நெருக்கடியை புரிந்துகொண்டோம், ஆகவே நாம் வளைந்துகொடுப்பவர்களாக மாறியதுடன் நாம் மேலும் எலும்புத் துண்டை கேட்கவில்லை” என அறிவித்தனர். அதே சமயம், கோவிட்-19 மக்கள்தொகையில் பரவுவதை அனுமதிக்கும் வகையில், பெருவணிகத்தால் விடுக்கப்பட்ட கோரிக்கையை, பாதுகாப்பற்ற பள்ளிகளை மீண்டும் திறப்பதற்கு இத் தலைவர்கள் முழு ஆதரவை அரசாங்கத்திற்கு வழங்கினர்.

ஏப்ரல் 23 அன்று பத்திரிகையாளர் சந்திப்பில் சி.டி.யு யின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் “ஏப்ரல் 25 தின பொது வேலை நிறுத்தத்தின் செய்தியை செவிமடுக்க அரசாங்கத்துக்கு நாம் வேண்டுகாள் விடுக்கின்றோம், இது செய்யப்படாவிட்டால், ஏப்ரல் 25 அன்று பொது வேலை நிறுத்தத்தையும் மே 6 அன்று கர்த்தாலையும் (பொது வேலை நிறுத்தமும் கடையடைப்பும்) நடத்துவோம் என தெரிவித்தார். அதே நாளில் CTSU தலைவர் மகிந்த ஜெயசிங்க “நாம் எமது வேலை நிறுத்தத்தின் பாரிய ஆயுதங்களைப் பயன்படுத்தி”, அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்புவோம்” என பெருமையடித்தார்.

ஆசிரியர்கள், இவ்வாறான துரோகத்தனமான, முதலாளித்துவ சார்பு அமைப்புகளின் மீது நம்பிக்கை வைக்க கூடாது. உழைக்கும் மக்களின் சமூக நிலைமையின் மீதான தாக்குதல்களுக்கு மூல காரணமான முதலாளித்துவ அமைப்பு முறைக்கு எதிரான ஒரு அரசியல் போராட்டத்தை மேற்கொள்ள எண்ணம் தமக்கு இல்லை என்ற உண்மையை மறைக்கவே அவர்களின் வெற்று வாய்ச்சவாடல்கள் உள்ளன. தொழிற்சங்கங்கள், கடந்த ஆண்டு செய்ததைப் போலவே, பாராளுமன்ற அரசியலின் பாதுகாப்பான பாதைக்குள் எந்தவொரு போராட்டத்தையும் அடக்கி வைக்க நோக்கம் கொண்டுள்ளன.

சோசலிச சமத்துவக் கட்சியும் (சோ.ச.க) மற்றும் சோ.ச.கட்சியின் முன்முயற்சியால் உருவாக்கப்பட்ட ஆசிரியர்கள்-பெற்றோர்கள்-மாணவர்கள் நடவடிக்கை குழுவும் இராஜபக்க்ஷ அரசாங்கத்துக்கு எதிராக சோசலிச கொள்கைகளின் அடிப்படையில் தொழிலாள வர்க்கத்தின் ஒன்றிணைந்த இயக்கத்தில் ஆசிரியர்களை அணிதிரட்ட போராடி இந்த வேலை நிறுத்தத்தில் தலையீடு செய்தது.

சோசலிச சமத்துவக் கட்சியின் அரசியல் குழு உறுப்பினரும், TPSAC செயலாளருமான கபில பெர்னாண்டோ, வேலைநிறுத்தம் செய்யும் ஆசிரியர்களுக்கு ஆதரவாக ஒரு வீடியோ அறிக்கையை வெளியிட்டார். அந்த அறிக்கையில், “ஆசிரியர்கள் உட்பட தொழிலாள வர்க்கம், இராஜபக்ஷ அரசாங்கத்தை தூக்கி வீசுவதோடு நின்றுவிடாமல், அதன் சொந்த சுயாதீன வர்க்கத் தீர்வுக்காகப் போராட வேண்டும். முதலாளித்துவ அரசாங்கங்களுக்கு அழுத்தம் கொடுக்கும் தொழிற்சங்கங்களின் திவாலான வேலைத்திட்டத்தில் இருந்து முறித்து, சர்வதேச தொழிலாள வர்க்க ஐக்கியத்துடன். சோசலிசக் கொள்கைகளுக்கு அர்ப்பணிப்புடன் செயல்படும் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்திற்காகப் போராடுவதே தீர்வு” என்று பெர்னாண்டோ குறிப்பிட்டார்.

ஆசிரியர்கள் உட்பட தொழிலாளர்களின் போராட்டங்களை மீண்டும் மீண்டும் காட்டிக் கொடுத்துவரும் தொழிற்சங்கங்களின் துரோக பாத்திரத்தை பெர்னாண்டோ அதில் விளக்கினார். ஆசிரியர்கள் தங்கள் உரிமைகளுக்காகப் போராட தொழிற்சங்கங்கள் சாராத, நடவடிக்கை குழுக்களை கட்டியெழுப்ப வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

சோசலிச சமத்துவக் கட்சி உறுப்பினர்கள் திங்களன்று நடந்த ஆர்ப்பாட்டங்களில் ஆசிரியர்களிடம் பேசினர்.

கண்டியிலுள்ள கன்னோருவ ரணபிம பாடசாலையின் ஆசிரியரான மயூர ஏகநாயக்க, எரிபொருளுக்காக பல மணிநேரம் வரிசையில் நிற்க வேண்டியிருப்பதால், வகுப்புகளை சரியாக திட்டமிட முடியவில்லை என விளக்கமளித்தார். “நாடு முழுவதும் தொழிற்சங்கங்கள் போராட்டங்களுக்கு அழைப்பு விடுத்திருந்தால், ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் அனைத்து நகரங்கள் மற்றும் மாநகரங்களில் இருந்து ஒன்று சேருவார்கள். ஆனால் தொழிற்சங்கங்கள் அதனைத் தவிர்த்துவிட்டன என்று அவர் தொழிற்சங்கங்களை விமர்சித்தார்.

“இராஜபக்ஷ அரசாங்கம் ஆசிரியர்களுக்கு கடந்த ஆண்டு வழங்கிய சொற்ப சம்பள உயர்வு வெற்றியல்ல என்பது இப்போது தெளிவாகியுள்ளது. இந்த உயர்ந்த வாழ்க்கைச் செலவை எங்களால் தாங்கிக் கொள்ள முடியாது. அந்த நேரத்தில் சோசலிச சமத்துவக் கட்சி கூறியது சரியானது. தொழிலாள வர்க்கம் முதலாளிகளால் வழங்கப்படும் அற்பத் தொகையை ஏற்காமல், தொழிலாளர்கள் விரும்புவதை வென்றெடுப்பதற்கு ஒரு சோசலிச வேலைத்திட்டத்திற்காக நடவடிக்கை குழுக்களை உருவாக்கி போராட வேண்டும்” என்று அவர் குறிப்பிட்டார்.

வட மத்திய மாகாணத்தில் உள்ள ஹிங்குராங்கொடையைச் சேர்ந்த ஒரு பெண் ஆசிரியர் ஒருவர், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் எதிர்கொள்ளும் சிரமங்களை விளக்கினார்: “சமீபத்திய மாதங்களில் எங்கள் மாணவர்களில் பாதி பேர் மட்டுமே பள்ளிக்கு சமூகமளித்தனர். ஆசிரியர்களின் வருகையும் குறைந்தது. போதிய போக்குவரத்து வசதி இல்லாததால் பல மணி நேரம் பள்ளிக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. சிலர் எரிபொருளைப் பெறுவதற்காக இரவு முழுவதும் பெட்ரோல் நிலையங்களில் கழித்தனர். அனைவரும் பெரும் அழுத்தத்தில் உள்ளனர். கடந்த புதன் கிழமை, எங்கள் பள்ளியில் நடந்த காலை அசெம்பிளியில், ஏழெட்டு குழந்தைகள் உணவு இல்லாததால் மயங்கி விழுந்தனர்.

தற்போதைய அரசாங்க எதிர்ப்புப் போராட்டங்கள் குறித்து அவர் கருத்துத் தெரிவிக்கையில், 'அனைவரும் 'கோட்டா [ஜனாதிபதி] வீட்டிற்கு செல்ல வேண்டும்' என்று கோருகின்றனர். தொழிற்சங்கங்களும் அனைத்து எதிர்க்கட்சிகளும் அந்தக் கோரிக்கையை முன்வைக்கின்றன. ஆனால், ஒரு மாற்றீடு குறித்து அவர்கள் மௌனம் சாதிக்கின்றனர். அது என்ன மாதிரியான மாற்றீடாக இருக்கும்? எமக்கு சொந்த அரசாங்கம் தேவை என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். துன்பத்தில் இருக்கும் நாம் அனைவரும் ஒன்றுபட்டு சொந்த அரசாங்கத்தை கட்டியெழுப்ப வேண்டும்.”

Loading