இலங்கைப் பெருவணிகங்கள் “இரு கட்சி தேசிய அரசாங்கத்தை” கோருகின்றன

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

தேசிய ஐக்கிய அரசாங்கத்தின் உருவாக்கம் உள்ளடங்கலாக நாட்டின் பொருளாதார, சமூக மற்றும் அரசியல் கொந்தளிப்பை முடிவுக்கு கொண்டுவருவதற்கான உடனடி நடவடிக்கைகளை பெரு வணிகங்கள் இந்தவாரம் கோரியதுடன் இலங்கை அரசாங்கத்தின் நெருக்கடி ஆழமடைந்துள்ளது.

2022.ஏப்ரல் 20, 2022 அன்று கொழும்பில் அரச துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் (Photo: WSWS Media) [Photo: WSWS]

தொழிலாள வர்க்கத்தின் பெரும் பகுதி, ஜனாதிபதி கோட்டாபய இராஜபக்ஷ மற்றும் அவரது அரசாங்கத்தை இராஜினாமா செய்யும் கோரிக்கையை கையில் எடுப்பதற்கான அறிகுறிகளை காட்டுவதுடன் நாட்டைக் கொந்தளிக்க செய்த வெகுஜன போராட்ட இயக்கத்தின் புரட்சிகர தாக்கங்களால் பெரு வணிக மற்றும் நிதி உயரடுக்குகள் பீதியடைந்துள்ளன. செவ்வாயன்று, ரம்புக்கனையில் நிராயுதபாணிகளான போராட்டக்காரர்கள் மீதான பொலிசாரின் காட்டு மிராண்டித்தனமான துப்பாக்கிச் சூடு ஒரு வறிய தொழிலாளியை பலியெடுத்தமை வெகு ஜனங்களை மேலும் கோபமடையச் செய்துள்ளது.

புதன் அன்று, இலங்கை வர்த்தக சம்மேளனம் மற்றும் இலங்கை வர்த்தக, தொழிற்துறை சம்மேளனங்களின் கூட்டணி உட்பட சகல பெரு வணிக சார்பு அமைப்புக்களும் “தற்போதைய நிலைமைக்கு பங்களிப்புச் செய்ததாக” கூறுகின்ற அரசியலமைப்பின் 20வது திருத்தத்தை இரத்து செய்வதற்கான சட்ட நடவடிக்கையை உடனடியாக ஆரம்பிக்குமாறு கோரி ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளன.

2020 அக்டோபரில் நிறைவேற்றப்பட்ட 20வது திருத்தமானது நிறைவேற்று ஜனாதிபதி முறைக்கான அனைத்து கடுமையான அதிகாரங்களை மீளவும் வழங்கியதோடு பாராளுமன்றத்தை ஒரு வெறும் இறப்பர் முத்திரையாக மாற்றியது.

அதிகரித்துவருகின்ற பொது அமைதியின்மையுடன் இணைந்த தற்போதைய அரசியல் முட்டுக்கட்டையானது நாட்டின் கடுமையான பொருளாதார நெருக்கடியை தீர்க்க எடுப்படுகின்ற நடவடிக்கைககளை சாத்தியமானவகையில் தடம்புரளச் செய்யக் கூடும் என்ற அச்சத்தை பெரு வணிக சம்மேளனங்கள் வெளிப்படுத்தின. 20வது திருத்தத்தை இரத்துசெய்வதானது “ஒருமித்த அணுகுமுறையுடன்” இணைக்கப்பட வேண்டும் என அவை குறிப்பிட்டன.

தற்போதைய பொருளாதார நெருக்கடியில் இருந்து வெளிவரவும் எரிபொருள், மின்சாரம், எரிவாயு மற்றும் விநியோகச் சங்கிலியின் பிற முக்கியமான பகுதிகளுடன் தொடர்புடைய பிரச்சினைகளை தீர்க்கவும் இரு கட்சி தேசிய அரசாங்கத்தை அமைக்க வேண்டும் என நாம் பரிந்துரைக்கின்றோம் என அந்தக் கடிதம் தெரிவிக்கின்றது.

பிரான்டிக்ஸ், மாஸ், கேமஸ், டயலொக், டில்மா, ஜோன் கீல்ஸ் போன்ற இலங்கையின் பாரிய நிறுவனங்கள், 'நல்ல ஆட்சி முறையை [ஸ்தாபிக்க] விரைவான மாற்றங்கள்' கோரி ஜனாதிபதிக்கு தனித்தனியாக கடித மூலம் அழைப்பு விட்டுள்ளன.

பெரு வணிகங்களின் முன்னெப்பொதுமில்லாத நேரடி தலையீடானது உழைக்கும் மக்களின் துயரங்களின் ஒரு துளியையும் வெளிப்படுத்தவில்லை. தீவினை வைரஸ் நாசமாக்க அனுமதித்த சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கும் கொள்கையை வலியுறுத்திய பெரு வணிகங்கள் மற்றும் நிதிய உயடுக்குகள் கோவிட்-19 தொற்று நோய் வேளையில் பாரிய இலாபங்களை குவித்தன.

ஏப்ரல் 20, 2022 அன்று கொழும்பு கோட்டையில் ஊர்வலம் செல்லும் துறைமுக தொழிலாளர்கள் (Photo: WSWS Media) [Photo: WSWS]

இந்தப் போராட்டங்கள் உடனடியாக முடிவுக்கு கொண்டுவரவிட்டால், அவசியமான சிக்கன நடவடிக்கைகளின் விரிவாக்கத்தை வெளிப்படுத்தும் ஒரு பிணையெடுப்பு பொதிக்காக சர்வதேச நாணய நிதியத்துடன் தற்போது இடம்பெறுகின்ற பேச்சுக்கள் முடிவடைந்ததும் மிகப் பரந்த அரசியல் இயக்கம் வெடிக்கும் என ஆளும் வர்க்கங்கள் அஞ்சுகின்றன.

இலங்கையுடனான பேச்சுவார்த்தையில் நாட்டின் கடனை ஒரு நிலையான பாதையில் கொண்டு செல்லக்கூடியதாக இருக்கின்ற “போதுமான உத்தரவாதங்களை சர்வதேச நாணய நிதியம் கோரியுள்ளது. அதன் அர்த்தம், அரச செலவீனங்களில் ஆழமான வெட்டுக்கள், அதிகரித்த வரிகள், மற்றும் அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களின் பரந்த மறுகட்டமைமைப்பு மற்றும் ஏனைய விடயங்களை குறிக்கின்றது.

அத்தைய நடவடிக்கைகளை அமைதியான முறையில் நடைமுறைப்படுத்த முடியாது என்பதை இராஜபக்ஷ அறிவார். ஜனாதிபதி மற்றும் அவரது சகோதரரும் பிரதமருமான மகிந்த இராஜபக்ஷ, ரம்புக்கனையில் செவ்வாயன்று இடம்பெற்ற பொலிஸ் துப்பாக்கிச் சூட்டுக்கு ஆர்ப்பாட்டக்காரர்கள் மீதே பழி சுமத்தினர். நேற்றைய தினம், ஜனாதிபதி, நாட்டின் 25 மாவட்டங்களில் சட்ட ஒழுங்கை பேண இராணுவத்துக்கான தனது உத்தரவைப் புதுப்பித்தார்.

இராஜபக்ஷ ஆட்சிக்கு எதிராக பாரிய எதிர்ப்புகள் வளர்ச்சியடைந்து வருகின்றன. பரந்தளவிலான விலையேற்றம், உணவு, மருந்துகள் மற்றும் எரிபொருள், மின்சாரம் போன்ற பிற அத்தியவசிய பொருட்களின் தட்டுப்பாட்டால் தூண்டப்பட்டு இரண்டு வாரங்களுக்கும் மேலாக அவை தொடர்ந்து நிகழ்கின்றன.

தொழிலாளர்கள் போராட்டத்தில் தனிநபர்களாக கலந்துகொண்டனர். எவ்வாறாயினும், சம்பள் உயர்வுக்ள் மற்றும் அவர்கள் முகங்கொடுக்கின்ற சமூகப் பேரழிவை தணிக்கும் ஏனைய செயல்பாடுகளுக்காக தொழிற்துறை நடவடிக்கைகளுக்காக அவர்கள் அழுத்தம் கொடுக்கின்றனர்.

ஏப்ரல் 20, 2022 அன்று வங்கி ஊழியர்களின் ஆர்ப்பாட்டம் (Photo: WSWS Media) [Photo: WSWS]

எதிர்ப்புகளின் எழுச்சிகளைத் திசைதிருப்ப தொழிற்சங்கங்கள் மட்டுப்படுத்தப்பட்ட போராட்டங்கள் மற்றும் வேலை நிறுத்தங்களுக்கு அழைப்புவிடுக்க கட்டாயப்படுத்தப்பட்டுள்ளன.

செவ்வாயன்று, பத்தாயிரக் கணக்கான தொழிலாளர்கள் கொழும்பு மற்றும் ஏனைய பிரதான நகரங்களில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் பங்குபற்றினர். அவர்கள், உடனடியான சம்பள அதிகரிப்பு, தட்டுப்பாடுகளுக்கான முடிவு, விலையிறக்கம் ஆகியவற்றைக் கோரியதுடன் சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகள் ஒரு பொறி என்றனர்.

ஆசிரியர்கள், சுகாதார, துறைமுக,மின்சார, ரெலிகொம் மற்றும் தபால் ஊழியர்கள் உட்பட சுமார் 1500 தொழிலாளர்கள் கோட்டை இரயில் நிலையத்துக்கு வெளியில் ஆர்ப்பாட்டம் செய்தனர். அதே நாளில், அனைத்து பல்கலைக் கழகத்தின் ஆசிரியர்கள் வேலைநிறுத்தும் செய்ததோடு அரசாங்கத்தை எதிர்த்து கொழும்பில் ஊர்வலம் நடத்தினர்.

வியாழன் அன்று, கார்ட்மோர் தோட்டத்தில் சுமார் 150 பெருந்தோட்டத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் செய்து மஸ்கெலிய நகருக்கு அருகில் ஊர்வலம் சென்றனர். அவர்கள் ரம்புக்கனை பொலிஸ் துப்பாக்கிச் சூட்டுக்கு எதிராகவும் பாரிய விலை உயர்வுக்கு எதிராகவும் கோசங்களை எழுப்பினர். இதற்கு முன்தினம் மஸ்கெலிய ஒல்டன் தோட்ட தொழிலாளர்கள் இதே போன்ற ஆர்ப்பாட்டத்தை நடாத்தியதுடன் நேற்றைய தினம் அக்கறபத்தன தொழிலாளர்கள் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

ஏப்ரல் 25 அன்று, விண்னை முட்டும் எரிபொருள் உயர்வு மற்றும் தட்டுப்பாடுகளை எதிர்த்து அரச பாடசாலை ஆசிரியர்கள் ஒரு நாள் சுகயீன விடுப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். செவ்வாய்க்கிழமை பாரிய போராட்டத்தை ஒழுங்கமைத்த அதே தொழிற்சங்கங்கள், ஒரு மில்லியன் தொழிலாளர்கள் உள்ளடங்கும் ஒரு நாள் பொதுவேலை நிறுத்தத்தை ஏப்ரல் 25 அன்று நடாத்த அறிவித்துள்ளது.

அரசாங்கத்துக்கு எதிரான எதிர்ப்பு இயக்கத்தைக் கட்டியெழுப்புவதற்கு மாறாக, தொழிற்சங்கங்கள் தொழிலாளர்களின் கோபத்தை கட்டுப்படுத்த முயல்கின்றன. சமீபத்திய எதிர்ப்புகளுக்கு அழைப்பு விடுத்த தொழிற்சங்கங்கள், மோசமடையும் பொருளாதார நெருக்கடியின் சுமையை தொழிலாளர்கள் மற்றும் ஏழைகள் மீது திணிக்க அரசாங்கத்துக்கு வழியமைத்து, கடந்த ஆண்டு வெடித்த ஒவ்வொரு போராட்டத்தையும் காட்டிக்கொடுத்தன.

கார்ட்மோர் தோட்டத் தொழிலாளர்கள் ஏப்ரல் 20, 2022 அன்று அணிவகுத்துச் செல்கின்றனர். (Photo: WSWS Media) [Photo: WSWS]

பெரு வணிகங்களின் நம்பிக்கையை இழந்த நிலையில், ஆளும் வர்க்கம் மேலும் குழப்பத்துக்குள் வீழ்கின்றது. நேற்று, புதிதாக நியமிக்கப்பட்ட ஊடக அமைச்சர் நாலக கொடகேவ, தனது இராஜிநாமாவை முன்வைத்து ஒரு இடைக்கால அரசாங்கத்துக்கு அழைப்புவிடுத்தார். ஜனாதிபதி இராஜபக்ஷ இராஜிநாமாவை ஏற்க மறுத்தார்.

ஆளும் கட்சியின் 13 பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்த வாரம் ஜனாதிபதியை சந்தித்து புதிய பிரதமரின் கீழான ஒரு இடைக்கால அரசாங்கத்துக்கு அழைப்பு விடுத்தனர். அரசாங்க அமைச்சர்களுடனான சந்திப்பில், ஜனாதிபதியின் சகோரதரும் பிரதமருமான மகிந்த இராஜபக்ஷ, தற்போதைய அரசாங்கம் தொடர்ந்தும் பதவியிலிருந்து பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு தீர்வுகள் காண முயலும் என வலியுறுத்தினார்.

எதிர்க்கட்சிகளான ஐக்கிய மக்கள் சக்தி, மக்கள் விடுதலை முன்னணி ஆகியனவும் வெகுஜன எதிர்ப்பு இயக்கத்தை கட்டுக்குள் கொண்டுவர தீவிரமாக உள்ளன. மக்கள் எதிர்ப்பை கட்டுப்படுத்தும் ஒரு முயற்சியில் ஐக்கிய மக்கள் சக்தி தலைவர் சஜித் பிரேமதாச நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிப்பதற்கான யோசனைகளை பாராளுமன்ற சபாநாயகரிடம் சமர்பித்தார். எவ்வாறாயினும், நிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழிப்பதால் எதையும் தீர்க்க முடியாது என அவரின் பிரதி மற்றும் முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

மக்கள் விடுதலை முன்னணி, ஆயிரக்கணக்கானோர் பங்குபற்றிய கொழும்பு நோக்கிய அதன் மூன்று-நாள் பேரணியை நிறைவுசெய்தது. மக்கள் கூட்டத்தில் உரையாற்றிய ம.வி.மு பேச்சாளர்கள் இராஜபக்ஷ அரசாங்கம் வீட்டுக்குச் செல்ல வேண்டும் என கோரினர். ஆனால் ம.வி.மு அடுத்ததாக எதை முன்மொழிகின்றது என்பதை அவர்கள் விளக்கவில்லை. கடந்த ஒரு மாதமாக, ம.வி.முன்னணி, “இடைக்கால அரசாங்கம்” மற்றும் புதிய தேர்தல்களுக்காக பிரச்சாரம் செய்தது. ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் மக்கள் விடுதலை முன்னணி உள்வாங்கப்படுகின்ற எந்த அரசாங்கமும் தற்போதைய அரசாங்கத்தைப் போலவே சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன நடவடிக்கையை உழைக்கும் மக்கள் மீது திணிக்கும்.

இராஜபக்ஷ ஆட்சி பலவீனமடைந்திருந்தாலும் சர்வதேச நாணய நிதியத்தின் கட்டளைகளை திணிப்பதற்கு கொடூரமான பொலிஸ் அரச நடவடிக்கைகள் உட்பட எதையும் நிறுத்தாது என் சோசலிச சமத்துவக் கட்சி எச்சரித்தது. அதனால் தான் சோசலிச சமத்துவக் கட்சி, உழைக்கும் மக்களுக்கு எதிராக மீண்டும் மீண்டும் பயன்படுத்தப்படும் ஜனநாயக-விரோத சட்டங்களோடு நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை முற்றாக ஒழிப்பதற்கு அழைப்பு விடுத்துள்ளது.

தொழிலாள வர்க்கத்திற்கு அதன் அடிப்படை ஜனநாயக மற்றும் சமூக உரிமைகளைப் பாதுகாப்பதற்கான போராட்டத்திற்கு அதன் சொந்த அமைப்புகள் தேவை. தொழிற்சங்கங்கள் தொழிலாளர்களின் போராட்டத்தை மட்டுப்படுத்துவது மட்டுமின்றி, பெருவணிகத்தின் அழைப்புகளுக்கு இணங்க ஐ.ம.சக்தி மற்றும் ம.வி.முன்னணியின் 'இடைக்கால அரசாங்கத்திற்கான' அழைப்போடு அவர்களை பிணைக்க முயல்கின்றன.

சோசலிச சமத்துவக் கட்சி, ஒவ்வொரு பணியிடத்திலும், தொழிற்சாலைகளிலும் மற்றும் குடியிருப்புகளிலும் நடவடிக்கைக் குழுக்கள் தொழிலாளர்களால் நிறுவப்பட வேண்டும், மற்றும் அவை ஜனநாயகரீதியாகவும், தொழிற்சங்கங்கள் மற்றும் ஒவ்வொரு முதலாளித்துவக் கட்சியிலிருந்தும் சுயாதீனமாக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என அழைப்புவிடுகின்றது.

இத்தகைய நடவடிக்கைக் குழுக்கள் ஏனைய ஒடுக்கப்பட்ட மக்களையும் இணைத்து தாங்கள் எதிர்கொள்ளும் சமூகப் பேரிடருக்குத் தீர்வு காண போராட்டத்தினுள் வரும் ஏழைகளையும் ஒன்று திரட்ட முடியும். இந்தப் போராட்டத்தில், இதேபோன்ற சமூகப் பேரழிவை எதிர்கொள்ளும் ஒவ்வொரு நாட்டிலும் உள்ள தங்கள் வர்க்க சகோதர சகோதரிகளை நோக்கி தொழிலாளர்கள் திரும்ப முடியும்.

சோசலிச சமத்துவக் கட்சி நெருக்கடிக்கு ஒரு சோசலிசத் தீர்வை முன்வைக்கிறது. தொழிலாளர்களின் கட்டுப்பாட்டில், அனைத்து பெருந்தோட்டங்கள், பெரு நிறுவனங்கள் மற்றும் வங்கிகளை தேசியமயமாக்குவது உட்பட பொருளாதாரத்தை சில செல்வந்தர்களுக்காக அல்லாது சமூகத்தின் பெரும்பான்மையினரின் நலனுக்காக மறுசீரமைக்க வேண்டும் என்கிறது. இந்த சோசலிச வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த ஒரு தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் அரசாங்கத்திற்கான போராட்டத்திற்கு நடவடிக்கை குழுக்களை ஸ்தாபிப்பது அடித்தளமாக அமைகிறது.சோசலிச சமத்துவக் கட்சியில் சேரவும், இந்த சோசலிச செயல்திட்டத்திற்காக போராடவும் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.

Loading