இலங்கையில் அரசாங்க எதிர்ப்புப் போராட்டங்கள் எதிர்கொள்ளும் தீர்க்கமான அரசியல் பிரச்சினைகள்

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

ஏப்ரல் 22, 2022 அன்று உலக சோசலிச வலைத் தளத்தில் முதன்முதலில் வெளியிடப்பட்ட இந்தக் கட்டுரை, அதன் உள்ளடக்க பகுப்பாய்வு முழுமையாக நிரூபிக்கப்பட்டிருப்பதால், அதன் முக்கியத்துவம் கருதி ஒரு மாதத்திற்குள் மீண்டும் பிரசுரிக்கிறோம்.

சர்வதேச சோசலிசத்தை அடிப்படையாகக் கொண்ட தொழிலாள வர்க்கத்தின் ஒரு சுயாதீனமான அரசியல் இயக்கத்தால் மட்டுமே, விண்ணை முட்டும் விலைவாசி, உணவு, எரிபொருள், மருந்து உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் பற்றாக்குறை மற்றும் தினசரி நீடிக்கும் மின்வெட்டு போன்ற கடுமையான நிலைமைகளை சமாளிக்க முடியும் என்று கட்டுரை வலியுறுத்துகிறது.

*****

ஜனாதிபதி கோட்டாபய இராஜபக்ஷ மற்றும் அவரது அரசாங்கம் பதவி விலக வேண்டும் எனக் கோரி இலங்கையில் நடைபெற்று வரும் பாரிய போராட்டங்கள் ஒரு தீர்க்கமான கட்டத்தை எட்டியுள்ளன. மத்திய கொழும்பில் காலி முகத்திடலில் கடந்த ஏப்ரல் 9 முதல் தினமும் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு, இரவு பகலாக அந்த பிரதான போராட்ட தளத்தில் தங்கியிருந்து கோஷமிட்டு வருகின்றனர்.

காலிமுகத் திடலில் 9 ஏப்பிரல் 2022 நடந்த, கோடா வீட்டுக் போ, ஆர்ப்பாட்டத்தின் ஒரு பகுதி (WSWS Media) [Photo: WSWS]

இராஜபக்ஷ அரசாங்கமும் அதன் ஆதரவாளர்களும் இனவாதத்தைத் தூண்டி தொழிலாள வர்க்கம் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களை பிளவுபடுத்த எடுக்கும் மோசமான முயற்சிகளுக்கு மத்தியில் உழைக்கும் மக்கள், இளைஞர்கள், தொழில் வல்லுநர்கள், கிராமப்புற ஏழைகள் மற்றும் குடும்பப் பெண்களுமாக சிங்களம், தமிழ், முஸ்லிம், கிறிஸ்தவர் என அனைத்து இன, மத பேதங்களுக்கும் அப்பால் கலந்து கொள்கின்றனர்.

காலிமுகத்திடல் உள்ளமர்வு தீவு முழுவதிலும் உள்ள உழைக்கும் மக்களின் பரந்த போராட்டங்களின் ஒரு பகுதியாகும், இது விண்ணை முட்டும் விலைவாசிகள், உணவு, எரிபொருள் மற்றும் மருந்து உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் பற்றாக்குறை மற்றும் நீண்ட நாள் மின்வெட்டு ஆகியவற்றால் உந்தப்படுகிறது.

எவ்வாறாயினும், இது 'கோடா வீட்டுக்குப் போ' என்ற முழக்கத்தையும் மற்றும் தீவின் சமூக மற்றும் பொருளாதார பேரழிவைத் தடுக்க ஏதாவது செய்ய வேண்டியதன் அவசியத்தையும் சூழ ஒருங்கிணைக்கப்பட்ட, ஒரு அரசியல் உருவமற்ற இயக்கமாகும். எல்லாவற்றுக்கும், தொழிலாள வர்க்கம் அதன் சொந்த கோரிக்கைகளுடன் ஒரு வர்க்கமாக இந்த இயக்கத்திற்குள் நுழைவது, தொழிற்சங்கங்களால் தனிமைப்படுத்தப்பட்ட மற்றும் வரையறுக்கப்பட்ட நடவடிக்கைகள் மூலம் தடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலைமை காலவரையின்றி தொடராது என்று சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.) எச்சரிக்கிறது. கடந்த வாரம் பிரதமர் மஹிந்த இராஜபக்ஷ, எதிர்ப்பு இயக்கத்தின் மீது இரத்தக்களரி ஒடுக்குமுறை கட்டவிழ்த்து விடப்படும் என்று மெல்லிய மறைமுகமான அச்சுறுத்தல்களை விடுத்தார். செவ்வாயன்று, ரம்புக்கனையில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது பொலிசார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில், சமிந்த லக்ஷான் கொல்லப்பட்டதுடன் பலர் காயமடைந்தனர்.

இந்த அச்சுறுத்தல்கள், போராட்டத்தின் தலைவர்களை தம்பக்கம் கவர்ந்திழுக்கும் முயற்சிகளுடன் கைகோர்த்து செல்கின்றன. பிரதமர் காலி முகத்திடலில் முகாமிட்டிருந்தவர்களை 'அவர்களின் எண்ணங்கள் மற்றும் புகார்களைக் கேட்கவும்' 'இலங்கையின் நலனுக்காக சாத்தியமான, நம்பத்தகுந்த நடவடிக்கைகளை கலந்துரையாடவும்' அழைப்பு விடுத்தார்.

காலிமுகத் திடல் போராட்ட ஏற்பாட்டாளர்கள் இராஜபக்ஷவின் கோரிக்கையை நிராகரித்தனர், ஆனால் அவர்களின் கோரிக்கைகளின் பட்டியல், பிரசித்தமாக போராட்ட தளத்தில் காட்சிப்படுத்தப்பட்டு சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டிருந்தது. அது அரசாங்கத்தை மறுசீரமைத்தல், சிறிய அரசியலமைப்பு சீர்திருத்தங்கள் மற்றும் இன்னும் பாரியளவிலான சிரமங்களை. உழைக்கும் மக்களின் மீது திணிக்கும் சர்வதேச நாணய நிதிய சிக்கன நடவடிக்கையை அமுல்படுத்துவதையும் இலக்காகக் கொண்டிருந்தன..

9 ஏப்ரல் 2022 காலி முகத்திடலில் நடந்த ’கோடா போ’ ஆர்ப்பாட்டத்தின் ஒரு பகுதி [Photo: WSWS]

அதே குழு காலிமுகத் திடலில் 'அரசியல்' இருக்கக்கூடாது என்று வலியுறுத்துகிறது. இந்த கோஷம், எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி (ஐ.ம.ச.) மற்றும் மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) உட்பட முழு அரசியல் ஸ்தாபனத்தின் மீதும் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் காணப்படும் பரவலான விரோதப் போக்கிற்கு அழைப்பு விடுக்கின்றது. இது 'பாராளுமன்றத்தில் உள்ள 225 பேரும் வேண்டாம்' –அதாவது அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் வேண்டாம் என்ற பிரபலமான கோஷத்தை பிரதிபலிக்கிறது.

எவ்வாறாயினும், காலிமுகத்திடல் போராட்டத் தலைவர்களால் முன்வைக்கப்படும் கோரிக்கைகள் திட்டவட்டமான அரசியல் உள்ளடக்கத்தைக் கொண்டுள்ளன. 'அரசியல் வேண்டாம்' என்று பிரகடனம் செய்யும் அதே வேளை, அவர்களின் கோரிக்கைகள் ஐ.ம.ச. மற்றும் ஜே.வி.பி. இன் கோரிக்கைகளை கிட்டத்தட்ட ஒத்ததாக உள்ளதுடன் அவை பாராளுமன்ற மற்றும் இலாப முறைமயின் கட்டமைப்பிற்குளேயே முற்றிலும் அடங்கியுள்ளன. 'அரசியல் வேண்டாம்' என்ற முழக்கம் எல்லாவற்றிற்கும் மேலாக சோசலிச அரசியலுக்கு எதிரானதாகும்.

இந்தக் கோரிக்கைகள் என்ன?

ஜனாதிபதி மற்றும் பிரதமர் இராஜினாமா செய்ய வேண்டும், இராஜபக்ஷ குடும்ப உறுப்பினர் எவரும் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை வகிக்க கூடாது, மற்றும் 'இராஜபக்ஷ குடும்பத்தின் ஊழல் பேர்வழிகள், ஊழல் அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளால் சூறையாடப்பட்ட' வளங்களை மீளப் பெறுவதற்கு சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தற்போது நிலவும் முன்னெப்போதும் இல்லாத நெருக்கடிக்கு அரசியல்வாதிகளின் ஊழலை குற்றஞ்சாட்டும் ஆர்ப்பாட்டத் தலைவர்கள், உலக முதலாளித்துவத்தையும் உலகம் பூராவும் உள்ள நாடுகளையும் ஆட்டிப்படைக்கும் பொருளாதாரக் குழப்பத்தை அலட்சியம் செய்கின்றனர். உலக முதலாளித்துவப் பொருளாதாரத்தின் வளரும் நெருக்கடியானது உலகளாவிய கோவிட்-19 தொற்றுநோய், இலங்கையில் உட்பட அரசாங்கங்களின் 'சமூகத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை பரப்பும்' குற்றவியல் கொள்கைகள், இப்போது உக்ரேனில் ரஷ்யாவிற்கு எதிரான அமெரிக்க/நேட்டோ பினாமி போர் ஆகியவற்றால் துரிதப்படுத்தப்பட்டுள்ளது.

1948 இல் சுதந்திரம் பெற்றதில் இருந்து ஒட்டுமொத்த அரசியல் ஸ்தாபனமும் ஊழலில் மூழ்கிப் போயுள்ளது. ஊழல் அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் மீது சட்ட நடவடிக்கை எடுத்து, அவர்கள் கொள்ளையடித்த்தில் சிலவற்றை மீட்டெடுப்பதற்கும், உழைக்கும் மக்கள் எதிர்கொள்ளும் பொருளாதார மற்றும் சமூக பேரழிவைத் தீர்ப்பதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

பாராளுமன்ற மற்றும் ஜனாதிபதித் தேர்தல்களுக்குத் தயாராகும் வகையில் ஆறு மாதங்களுக்கு இடைக்கால அரசாங்கம்.

அத்தகைய இடைக்கால அரசாங்கத்தை எந்த கட்சிகள் அமைக்கும்? இது பிரதானமாக ஏனைய எதிர்க் கட்சிகளுடன் இணைந்து ஐ.ம.ச. மற்றும் ஜே.வி.பி. ஆட்சியமைப்பதாக இருந்தாலும், போராட்டத் தலைவர்களோ இராஜபக்ஷவின் குடும்ப உறுப்பினர்களாக அல்லாத அரசாங்க அரசியல்வாதிகள் அதில் நுழைந்துகொள்வதற்கான கதவைத் திறந்தே வைத்துள்ளார்கள்.

அத்தகைய அரசாங்கம் தற்போதைய அரசாங்கத்தின் அதே அடிப்படைக் கொள்கைகளை செயல்படுத்தும்: எந்தவொரு சர்வதேச நாணய நிதிய பிணை எடுப்பின் விளைவும் கடுமையான சிக்கன நடவடிக்கைளை அமுல்படுத்தி நிலைமைய மேலும் மோசமடையச் செய்யும். ஐ.ம.ச. மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியும் (UNP), முன்னதாகவே அரசாங்கம் சர்வதேச நாணய நியத்துக்கு பிச்சை பாத்திரத்துடன் செல்லத் தவறியதற்காக விமர்சித்துள்ளன. ஜே.வி.பி இந்த விடயத்தில் குற்றவியல் மௌனத்தை கடைப்பிடித்து, அதன் ஆதரவை சமிக்ஞை செய்துள்ளது.

அவ்வாறான அரசாங்கமானது தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் நகர்ப்புற மற்றும் கிராமப்புற ஏழைகளின் இழப்பில் செல்வந்தர்கள், வெளிநாட்டு கடன் கொடுப்போர் மற்றும் பெருநிறுவன உயரடுக்கின் நலன்களைப் பாதுகாக்கும் அரசாங்கமாக இருக்கும். எல்லாவற்றுக்கும் மேலாக, ஆறு மாதங்களில் ஒரு தேர்தலை நடத்துவதை நோக்கி எதிர்ப்புகளை திருப்பி விடுவதற்காக நேரத்தை எடுத்துகொள்வது அவநம்பிக்கையான முயற்சியாகும்.

தொழிலாள வர்க்கத்தால் ஆறு மாதங்கள் காத்திருக்க முடியாது. தாம் எதிர்கொள்ளும் சமூகப் பேரழிவைத் நிறுத்துவதற்காகப் போராடுவதற்கு அமைப்பு ரீதியான அரசியல் ரீதியான வழிமுறைகள் அதற்கு அவசியமாகும். அவை அரச மற்றும் எதிர்க்கட்சி உட்பட அனைத்து ஸ்தாபனக் கட்சிகளுக்கும் அவை பாதுகாத்து வரும் இலாப அமைப்புக்கும் எதிரான ஒரு அரசியல் போராட்டத்தை கட்டாயமாக உள்ளடக்கி இருக்க வேண்டும்.

அரசியலமைப்பின் '19 வது திருத்தத்தை மீண்டும் பலப்படுத்தல்'.

2015 இல் மைத்திரிபால சிறிசேன மற்றும் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான தேசிய 'ஐக்கிய' அரசாங்கத்தின் கீழ் நிறைவேற்றப்பட்ட, தற்போதைய இராஜபக்ஷ அரசாங்கத்தால் இரத்துச் செய்யப்பட்ட 19வது அரசியலமைப்புத் திருத்தம், வாக்குறுதியளிக்கப்பட்டபடி நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிக்கவில்லை, மாறாக ஜனாதிபதியின் அதிகாரங்களுக்கு சில சிறிய வரம்புகளை விதித்துள்ளது.

19வது திருத்தம் இருந்தாலும் இல்லாவிட்டாலும், இராஜபக்ஷ ஏற்கனவே செய்ததைப் போன்று, அவசரகாலச் சட்டத்தை அமுல்படுத்துவது மற்றும் தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக பாதுகாப்புப் படைகளை அணிதிரட்டுவது உள்ளிட்ட எதேச்சதிகார அதிகாரங்கள் நிறைவேற்றும் அதிகாரம் ஜனாதிபதியிடம் உள்ளது.

சோசலிச சமத்துவக் கட்சியானது கடந்த காலங்களில் தொழிலாளர்களுக்கு எதிராக பலமுறை பயன்படுத்தப்பட்ட, ஜனநாயக விரோத சட்டங்களுடன் சேர்த்து, நிறைவேற்று ஜனாதிபதி முறைமையும் அகற்றப்பட வேண்டும் என்று கோருகிறது.

'நெருக்கடியை எதிர்கொள்ளும் அத்தியாவசிய சேவைகள் மற்றும் ஏனைய (சுகாதாரம், கல்வி போன்றவை) விசேட துறைகளை சரியான நிலைமைகளுக்கு கொண்டு வருவதற்கு” இடைக்கால அரசாங்கம் தேவை.

மில்லியன் கணக்கான மக்கள் எதிர்கொள்ளும் சமூக நெருக்கடியை ஒரு இடைக்கால அரசாங்கம் சரி செய்யப் போகிறது என்று கூறுவது போலித்தனமானது. ஒரு இடைக்கால அரசாங்கம், குறைவில்லாமல் சிக்கன நடவடிக்கைகளை கோரும் சர்வதேச நாணய நிதியம், வெளிநாட்டு கடன் வழங்குநர்கள் மற்றும் இலங்கை பெருநிறுவன உயரடுக்கின் வேண்டுகோள்களையே நடைமுறைப்படுத்தப் போகிறது.

தங்கள் குடும்பங்களுக்கு உணவளிப்பதற்கும் அன்றாட வாழ்க்கைத் தேவைகளைப் பெறுவதற்கும் போராடும் உழைக்கும் மக்களின் மிகப்பெரும் இன்னல்களைப் பற்றிய குறிப்பு கூட இந்தக் கோரிக்கைகளில் இல்லை. மருத்துவமனைகள் மருந்துகள் மற்றும் உபகரணங்களின் கடுமையான பற்றாக்குறையை எதிர்கொள்கின்றன. விவசாயிகள் இரசாயன உரங்களைப் பெற முடியாதுள்ளனர். எரிபொருள் பற்றாக்குறையால் போக்குவரத்து மற்றும் மின்சாரம் முடங்கிப் போயுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் கட்டளைகளை திணிப்பதில் தற்போதைய ஆட்சியை விட ஒரு இடைக்கால அரசாங்கம் இரக்கமற்றதாக இருக்கும் என்றும் எதிர்ப்பு இயக்கத்திற்கு எதிராக பாதுகாப்புப் படைகளை அணிதிரட்டவும் தயங்காது என்றும் நாம் எச்சரிக்கிறோம்.

காலிமுகத் திடல் போராட்டத் தலைவர்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் தொழிலாள வர்க்கம் மற்றும் ஏழைகளின் நலன்களைப் பிரதிநிதித்துவப்படுத்தவில்லை, மாறாக ஒப்பீட்டளவில் கூறினால், தனது வசதியான நிலைமைகளை மேம்படுத்திக்கொள்வதற்காக, சர்வதேச நாணய நிதியம் மற்றும் முதலாளித்துவ எதிர்க் கட்சிகள் மீது நம்பிக்கையை வைக்கும் ஒரு உயர் மத்தியதர வர்க்க அடுக்கையே பிரதிநிதித்துவம் செய்கின்றன.

அவர்களின் வர்க்க நோக்குநிலை தொழிலாள வர்க்கம் அல்ல, மாறாக வங்கிகள் மற்றும் பெருவணிகங்களாகும். “காலி முகத்திடல் ஆக்கிரமிப்பை (OGF) பரிந்துரைப்பவர்கள்” அமைப்பானது தங்களது கோரிக்கைகளை தனியார் துறையினர் ஆதரிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளதாக இலங்கையில் வெளியாகும் Daily FT.lk, தெரிவித்துள்ளது. அவர்கள் காலிமுகத் திடல் ஆக்கிரமிப்புக்கு ஆதரவாக அறிக்கைகள் விடுதல், 'தெளிவான வர்த்தக முத்திரையுடன் காலி முகத்திடலில் தளவாடங்களுக்கு உதவுதல்,' ஆர்ப்பாட்டத் தளத்திற்கு 'நிறுவன பதாகைகள் அல்லது காட்சி ஒளியமைப்புகளை' கொண்டு வந்து பங்குபற்றுதல் மற்றும் 'அலுவலக வளாகத்திற்கு வெளியே ஊழியர்கள் போராட்டம்' நடத்துவதற்கு நிறுவனங்கள் ஊக்குவித்து வாய்ப்பை வழங்குதல் போன்ற அர்ப்பணிப்புகளை செய்ய வேண்டும் என அழைப்பு விடுக்கின்றனர்.

எதிர்க்கட்சிகளின் வணிக சார்பு நோக்குநிலைக்கு எதிராக, சோசலிச சமத்துவக் கட்சியானது தொழிலாள வர்க்கத்திற்கான ஒரு சோசலிச செயல் திட்டத்தை விரிவுபடுத்தியுள்ளது. சோசலிச சமத்துவக் கட்சி, ஏப்ரல் 7 அன்று வெளியிட்ட அறிக்கையில், இராஜபக்ஷவும் அவரது அரசாங்கமும் இராஜிநாமா செய்ய வேண்டும் என்ற உழைக்கும் மக்களின் கோரிக்கைகளை முழுமையாக ஆதரிக்கிறது என்பதை தெளிவுபடுத்திய அதே வேளை, அது முதல் படி மட்டுமே என்று விளக்கியது. அது 'எதேச்சதிகார அதிகாரங்களுடன், தொழிலாள வர்க்கத்தின் தலைகளுக்கு நேரே துப்பாக்கியை நீட்டிக்கொண்டிருக்கும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை உடனடியாக ஒழிக்கப்பட வேண்டும்” என்று அறைகூவல் விடுத்தது.

சோசலிச சமத்துவக் கட்சி, ஏற்கனவே அனைத்து முதலாளித்துவக் கட்சிகள் மற்றும் தொழிலாள வர்க்கத்துக்கு விலங்கிட்டு ஒன்றன் பின் ஒன்றாக போராட்டங்களை விற்றுத்தள்ளும் தொழிற்சங்கங்களில் இருந்தும் சுயாதீனமாக, பல நடவடிக்கைக் குழுக்களை உருவாக்கியுள்ளது. தொழிலாளர்கள் தங்களின் அடிப்படை ஜனநாயக மற்றும் சமூக உரிமைகளைப் பாதுகாக்கத் தேவையான அரசியல் போராட்டத்திற்கான அமைப்புகளாக ஒவ்வொரு தொழிற்சாலையிலும், வேலைத் தளத்திலும், பெருந்தோட்டங்களிலும் மற்றும் சுற்றுப்புறங்களிலும் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட சொந்த நடவடிக்கைக் குழுக்களை நிறுவுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

சோசலிச சமத்துவக் கட்சியின் அறிக்கையானது, வெளிநாட்டுக் கடனை நிராகரிப்பது மற்றும் சர்வதேச நாணய நிதிய மற்றும் உலக வங்கியின் சிக்கனக் கோரிக்கைகளை நிராகரிப்பது உட்பட, நடவடிக்கைக் குழுக்கள் போராடக்கூடிய ஒரு தொடர் கொள்கைகளை முன்வைத்தது. வெகுஜனங்களின் அவசரத் தேவைகளைப் பூர்த்தி செய்ய, உழைக்கும் மக்களின் வாழ்க்கைக்கு முக்கியமான அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் வளங்களின் உற்பத்தி மற்றும் விநியோகத்தின் கட்டுப்பாட்டை தொழிலாள வர்க்கம் தன் கையில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

தொழிலாள வர்க்கத்தின் இத்தகைய இயக்கம், கிராமப்புற ஏழைகள் உட்பட ஒடுக்கப்பட்ட வெகுஜனங்களின் ஆதரவைப் பெற்று, சோசலிசக் கொள்கைகளை முன்னெடுக்கக் கூடிய தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்திற்கான போராட்டத்திற்கு அடித்தளத்தை அமைக்கும். இலங்கைத் தொழிலாளர்களின் கூட்டாளிகள், இதே போன்ற மோசமான சமூக நெருக்கடியை எதிர்கொள்ளும், தெற்காசியா முழுவதிலும் மற்றும் உலகம் முழுவதிலும் உள்ள அவர்களது வர்க்க சகோதர சகோதரிகளே ஆவர். ஒரு சோசலிச எதிர்காலத்திற்கான போராட்டம் கட்டாயமாக ஒரு சர்வதேச போராட்டமாகும்.

இந்த போராட்டத்திற்கு தேவையான புரட்சிகர தலைமையாக சோசலிச சமத்துவக் கட்சியை கட்டியெழுப்ப இணையுமாறு தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.

Loading