ஆஸ்திரேலிய தேர்தலுக்கான சோசலிச சமத்துவக் கட்சியின் அறிக்கை

போரை எதிர்ப்பதற்கும் மற்றும் கோவிட்-19 இனையும் சிக்கன நடவடிக்கையை எதிர்த்துப் போராடுவதற்கு தொழிலாள வர்க்கத்திற்கான ஒரு சோசலிச வேலைத்திட்டம்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

சோசலிச சமத்துவக் கட்சி (SEP) 2022 தேர்தலில் வேட்பாளர்களை நிறுத்தி, தொழிலாளர்களின் அடிப்படை சமூக மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான இடைவிடா தாக்குதலுக்கு எதிராகத் தங்கள் வர்க்க நலன்களுக்காகப் போராடுவதற்கான ஒரு சோசலிச வேலைத்திட்டத்தை முன்வைக்கின்றது.

[Photo: WSWS]

இந்த தாக்குதலுக்கான மூலகாரணமாக இருப்பது, கோவிட்-19 இன் கட்டுப்பாடற்ற பரவல், அதிகரித்துவரும் உலகப் போரின் ஆபத்து, சமூகச் செலவுகள் மற்றும் ஊதியங்களின் வெட்டுக்கள் மற்றும் காலநிலை மாற்றத்தின் அழிவுகள் ஆகியவற்றின் ஊடாக வெளிப்படும் உலகளாவிய முதலாளித்துவ அமைப்பின் வரலாற்று நிலைமுறிவாகும்.

ஆஸ்திரேலியாவிலும் சர்வதேச அளவிலும் தொழிலாள வர்க்கத்தின் முன்னேயுள்ள பிரச்சினை, உழைக்கும் மக்களின் வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்தின் மீதும் ஆதிக்கம் செலுத்தி அதனை தீர்மானிக்கும் முதலாளித்துவ இலாப நோக்கு அமைப்பு முறையை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான போராட்டமாகும்.

இதற்காக, தாராளவாத-தேசிய கூட்டணி, தொழிற் கட்சி, பசுமைக் கட்சி, ஐக்கிய ஆஸ்திரேலியக் கட்சி, மற்றும் சோசலிச கூட்டணி, விக்டோரியன் சோசலிஸ்டுகள் போன்ற போலி-இடது கட்சிகள் உட்பட அனைத்துக் கட்சிகளையும் நாம் சமரசமின்றி எதிர்க்கிறோம். அரசியல் ஸ்தாபகத்தின் கட்டமைப்பிற்குள்ளேயே பிரதான கட்சிகளின் ஆதரவைப் பெற விரும்பும் 'சுயேச்சை' வேட்பாளர்கள் என்று அழைக்கப்படுபவர்கள் அனைவரும் இலாப நோக்கு அமைப்பு முறையின் பாதுகாப்பிற்காக நிற்கின்றன.

தாராளவாத-தேசிய கூட்டணி மற்றும் தொழிற் கட்சிக்கான ஆதரவு மிகவும் குறைந்த மட்டத்தில் இருக்கையில், பெருகிவரும் கோபம் மற்றும் விரக்தியின் சூழ்நிலையில் இந்தத் தேர்தல் நடைபெறுகிறது. திசைதிருப்பும் சூழ்ச்சிகள், போலி வாக்குறுதிகள் மற்றும் தூற்றுதல் பிரச்சாரம் ஆகியவை ஒரேயொரு நோக்கத்தைக் கொண்டுள்ளன. அதாவது உண்மையான சிக்கல்களில் இருந்து கவனத்தை திசை திருப்புவதாகும்.

கூட்டணி, தொழிற் கட்சி அல்லது பல்வேறு சுயேச்சைகளால் ஆதரிக்கப்படும் சிறுபான்மை அரசாங்கத்தின் வடிவம் எதுவாக இருந்தாலும், அது இராணுவச் செலவுகள் மற்றும் பெருவணிக தொற்றுநோய் ஆதரவு உதவிப்பொதிகளுக்கு பில்லியன்களை கொட்டியதன் மூலம் உருவாக்கப்பட்ட பெரும் வரவு-செலவுத் திட்ட பற்றாக்குறைகள் மற்றும் அதிகரிக்கும் அரசாங்க கடனை தொழிலாள வர்க்கத்தை செலுத்தச் செய்யும். உண்மையில், தொழிற் கட்சித் தலைவர் அந்தோனி அல்பானீஸ் நாட்டைப் போருக்கு அழைத்துச் செல்வதற்கும் சிக்கன நடவடிக்கைகளைத் திணிப்பதற்கும் தொழிற் கட்சிதான் சிறந்த கட்சி என ஆளும் வர்க்கத்திற்கு சமிக்ஞை செய்கிறார்.

கில்லார்ட்டின் தொழிற் கட்சி அரசாங்கத்தை ஆதரித்தது போல், தொழிற் கட்சி அல்லது தாராளவாதத்துடன் கூட்டணியில் நுழைந்தவுடன், விரைவில் கைவிடும் மட்டுப்படுத்தப்பட்ட கொள்கைகளுடன் பசுமைவாதிகள் மீண்டும் ஒரு பசுமையான, மென்மையான ஆஸ்திரேலியாவை வழங்குவதாக உறுதியளிக்கின்றனர். பில்லியனர் கிளைவ் பால்மர், தன்னை மக்களின் மனிதனாக காட்டிக்கொள்வதற்காகவும், தனது போட்டியாளர்களான வலதுசாரி ஜனரஞ்சகவாதிகளான போலீன் ஹான்சன் மற்றும் ஜாக்கி லாம்பீ ஆகியோரை வெற்றிகொள்வதற்காகவும் தனது மில்லியன்களை தொலைக்காட்சி விளம்பரங்களுக்காக செலவு செய்கிறார்.

போலி-இடது கட்சிகள் குறிப்பாக தீங்கு விளைவிக்கும் பாத்திரத்தை வகிக்கின்றன. நெருக்கடிக்கு காரணமான கட்சிகள் மற்றும் அமைப்புகளான தொழிற் கட்சி, பசுமைக் கட்சி மற்றும் தொழிற்சங்கங்களுக்குப் பின்னால் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் எழுச்சி பெறும் முதலாளித்துவ எதிர்ப்பு உணர்வு மற்றும் போராட்டத் தன்மையை இணைக்க அவை செயல்படுகின்றன. எந்த வகையிலும் சோசலிசமாக இருப்பதற்குப் பதிலாக, இனம் மற்றும் பாலினம் ஆகியவற்றின் அடிப்படையில் பிளவுபடுத்தும் மற்றும் பிற்போக்குத்தனமான அடையாள அரசியலில் மூழ்கியிருக்கும் உயர் நடுத்தர வர்க்க அடுக்கின் நலன்களை அவை பிரதிநிதித்துவப்படுத்துகின்றன.

இந்தக் கட்சிகள் எதுவும் உழைக்கும் மக்களின் உண்மையான கவலைகள் மற்றும் அச்சங்களைப் பற்றி பேசவில்லை அல்லது மில்லியன் கணக்கானவர்கள் தங்கள் வாழ்க்கையை சந்திக்கப் போராடும் அன்றாட சிரமங்களுக்கு எந்தத் தீர்வையும் வழங்கவில்லை. மனிதகுலம் எதிர்கொள்ளும் பெரிய ஆபத்துக்கள் மற்றும் இளைஞர்களின் எதிர்காலம் குறிப்பாக தொற்றுநோய், போர், காலநிலை மாற்றம் மற்றும் மோசமாகிவரும் சமூக நெருக்கடி பற்றி விவாதிக்காதிருக்க ஊடகங்கள் மற்றும் அரசியல் ஸ்தாபகத்தில் ஒரு சதி உள்ளது.

கோவிட்-19 பேரழிவு

கோவிட் தொற்றுநோய் என்பது முதலாளித்துவம் மற்றும் உலகெங்கிலும் உள்ள ஆளும் வர்க்கங்களின் பேரழிவுகரமான அம்பலப்படுத்தலாகும். அவர்களின் அரசாங்கங்கள் அறிமுக்ப்படுத்திய 'சமூக நோய் எதிர்ப்பு சக்தி' என்ற விஞ்ஞானரீதியற்ற கொள்கை மேலும் கொடிய வைரஸ் உலக மக்கள்தொகையில் ஏற்கனவே 20 மில்லியனைக் கொன்று, இன்னும் ஆபத்தான விகாரங்கள் தோன்ற அனுமதிக்கின்றன. இது இலாபத்தின் தொடர்ச்சியான உற்பத்தியை உறுதி செய்வதற்காக, தொழிலாளர்களை தொழிற்சாலைகள் மற்றும் பணியிடங்களுக்கு திரும்ப அனுப்பும் பெருவணிகத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் மொத்தக் கொலைக்கான ஒரு கொள்கையாகும்.

2021அக்டோபரில் மெல்போர்னின் மேற்கில் கோவிட்-19 தடுப்பூசிகளைப் பெறக் காத்திருக்கும் மக்கள் வரிசை [Credit: @Lisylou via Twitter]

ஆஸ்திரேலியா ஒரு விதிவிலக்கல்ல. மாநில மற்றும் மத்திய அரசாங்கங்கள் தொற்றுநோயின் தொடக்கத்தில் நடைமுறையில் இருந்த மட்டுப்படுத்தப்பட்ட பொது சுகாதார நடவடிக்கைகளை பொறுப்பற்ற முறையில் நீக்கத் தொடங்கியபோது டிசம்பர் மாதத்தில் அதிக தொற்றும் தன்மை மிக்க ஓமிக்ரோன் ஆதிக்கம் செலுத்த தொடங்கியது. இதனால் நோய்த்தொற்றுகள், மருத்துவமனைகளில் அனுமதிப்பதும் இறப்புகளும் அதிகரித்தன. பள்ளிகள் மற்றும் பணியிடங்கள் பாரிய தொற்றும் இடங்களாக மாற்றப்பட்டுள்ளன. ஆயினும்கூட, அரசாங்கங்களும் ஊடகங்களும் மக்கள் வைரஸுடன் வாழ வேண்டும் என்றும் தொற்றுநோய் முடிந்துவிட்டது போல் செயல்பட வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றன.

அது பொய் என்பது அனைவருக்கும் தெரியும். நோய்த்தொற்றுக்கு ஆளான ஒருவரையாவது, சில சமயங்களில் இறந்துபோன ஒருவரையாவது ஒவ்வொருவருக்கும் தெரியும். கடந்த சில மாதங்களில் கிட்டத்தட்ட ஐந்து மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த ஆண்டு இதுவரை 4,000க்கும் அதிகமானோர் வைரஸால் இறந்துள்ளனர். இது தொற்றுநோயின் முதல் இரண்டு ஆண்டுகளைவிட கிட்டத்தட்ட இரு மடங்காகும்.

பேரழிவுக்கான பொறுப்பு அனைத்து தரப்பினரிடமும் உள்ளது. கூட்டணி மற்றும் தொழிற் கட்சி அரசாங்கங்கள் அரசியலமைப்பிற்கு முரணான தேசிய அமைச்சரவையில் தேவையான பொது சுகாதார நடவடிக்கைகளை நீக்கி வைரஸை கட்டவிழ்த்துவிட சதி செய்துள்ளன. குற்றம்மிக்க அலட்சியத்திற்கு காரணமானவர்கள் மீது வழக்குத் தொடர வேண்டும் என்ற கோரிக்கையை விடுத்து, அக்கொள்கையை விமர்சிக்கவோ அல்லது சவால் செய்யவோ எந்த நாடாளுமன்றத்திலும் யாரும் எழுந்து நிற்கவில்லை.

சோசலிச சமத்துவக் கட்சியும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் (ICFI) அதன் சகோதரக் கட்சிகளும் வைரஸை அகற்றுவதற்கான விஞ்ஞான ரீதியான அடிப்படையில் ஒரு மூலோபாயத்தை முன்வைத்துள்ளன. நோய்ஒழிப்பு சாத்தியம், ஆனால் ஒரு நாட்டில் அதை அடைய முடியாது என்பதை சீனா நிரூபித்துள்ளது. இதற்கு சர்வதேச அளவில் ஒருங்கிணைந்த பொது சுகாதார நடவடிக்கைகள் தேவை.

அதிகரித்து வரும் அணு ஆயுதப் போரின் ஆபத்து

உக்ரேனில் அணுஆயுத சக்திகள் நேருக்கு நேர் மோதலுக்கு செல்வதைப் பார்க்கும்போது தொழிலாளர்கள் அதிகரித்துவரும் அமைதியின்மையையான உணர்விடன் பார்க்கின்றனர். வலதுசாரி உக்ரேனிய ஜனாதிபதி வோலோடிமைர் செலென்ஸ்கியை சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்தின் பாதுகாவலராக சித்தரிக்கும் அதே வேளையில், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை பேய்த்தனமாக சித்தரிக்கும் பிரச்சாரத்தின் தினசரி வெள்ளம் குறித்து பலர் அவநம்பிக்கை கொண்டுள்ளனர். பால்கன், ஆப்கானிஸ்தான், ஈராக், சிரியா மற்றும் லிபியாவில் நடந்த அமெரிக்கத் தலைமையிலான போர்களில் இதை நாம் முன்பே பார்த்திருக்கிறோம்.

உக்ரேனின் பிராந்திய பாதுகாப்புப் படைகளின் உறுப்பினர்கள், ஆயுதப் படைகளின் தன்னார்வ இராணுவப் பிரிவுகள், ஜனவரி 22, 2022 அன்று உக்ரேனில் உள்ள கியேவ் நகர பூங்காவில் பயிற்சி பெறுகின்றனர் (AP Photo/Efrem Lukatsky, File)

ரஷ்யாவுடன் போர் தொடுக்கும் அமெரிக்க உந்துதலின் பின்னணியில் என்ன இருக்கிறது? முதலாளித்துவத்தின் உலகளாவிய நிலைமுறிவுக்கு விடையிறுக்கும் வகையில், அனைத்து நாடுகளிலும் உள்ள ஆளும் வர்க்கங்களுக்கு ஒரே ஒரு தீர்வு மட்டுமே உள்ளது. அதாவது அவர்களின் போட்டியாளர்களுக்கு எதிரான போரும் மற்றும் உள்நாட்டில் தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான வர்க்கப் போருமாகும்.

இந்த நெருக்கடியின் மிகக் கூர்மையான வெளிப்பாடு, உலக ஏகாதிபத்தியத்தின் மையமான வாஷிங்டனில் உள்ளது. உள்நாட்டில் சமூக மற்றும் அரசியல் கொந்தளிப்புகளை எதிர்கொண்டு, பைடென் நிர்வாகம், அமெரிக்காவின் வரலாற்று வீழ்ச்சியைத் தடுத்து நிறுத்துவதற்காக ரஷ்யாவையும் சீனாவையும் கீழ்ப்படுத்துவதற்கான நீண்டகால திட்டங்களை முன்வைத்துள்ளது. இது புட்டினை ஒரு பிற்போக்குத்தனமான மற்றும் பொறுப்பற்ற போருக்குள் வேண்டுமென்றே தூண்டிவிட்டது. அது மாஸ்கோவில் குழப்பத்தை உருவாக்கும் மற்றும் ரஷ்யா உடைந்து அமெரிக்க மேலாதிக்கத்தை எளிதாக்கும் என்று கணக்கிடுகிறது. இந்தப் போருக்கான முக்கிய பொறுப்பு, உக்ரேனுக்குள் ஆயுதங்களை மலைபோல் குவித்து வரும் அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளிடமே உள்ளது.

அதே நேரத்தில், அமெரிக்கா சீனாவிற்கு எதிரான அழுத்தம், அச்சுறுத்தல்கள் மற்றும் ஆத்திரமூட்டல்களை கைவிட்டுவிடவில்லை. இதில் ஆஸ்திரேலியா முக்கிய பங்கு வகிக்கிறது. தொழிற் கட்சியின் முழு ஆதரவுடன் மொரிசன் அரசாங்கம் கடந்த செப்டம்பரில் அமெரிக்கா மற்றும் ஐக்கிய இராச்சியத்துடன் AUKUS உடன்படிக்கையில் இணைந்தது. இராணுவம் இப்போது அணுசக்தியால் இயங்கும் தாக்குதல் நீர்மூழ்கிக் கப்பல்களையும் ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளையும் வாங்குகிறது. இந்த தசாப்தத்தில் 600 பில்லியன் டாலருக்கும் அதிகமான இராணுவ வரவு-செலவுத் திட்டத்திற்கு இரு கட்சிகளினதும் ஆதரவு உள்ளது. இந்த பாரிய தொகையை கொடுப்பது யார்? தவிர்க்க முடியாமல் அது தொழிலாள வர்க்கமாக இருக்கும்.

சோசலிச சமத்துவக் கட்சியும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவும் உக்ரேன் மீதான ரஷ்ய படையெடுப்பை எதிர்க்கின்றன. இது நேட்டோ கைப்பாவையான செலென்ஸ்கியை ஆதரிக்கும் நிலைப்பாட்டில் இருந்து அல்ல, மாறாக அது உக்ரேனிய மற்றும் ரஷ்ய தொழிலாளர்களிடையே பிளவுகளை விதைப்பதாலாகும். சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் ஒரு ஒருங்கிணைந்த போர் எதிர்ப்பு இயக்கம் மட்டுமே அணுசக்தி பேரழிவை நோக்கி இந்த பொறுப்பற்ற வீழ்ச்சியை நிறுத்த முடியும். கோவிட்டுக்கு மில்லியன் கணக்கான உயிர்களை தியாகம் செய்துள்ள அமெரிக்காவும் அதன் கூட்டாளிகளும் தங்கள் நலன்களை பாதுகாத்துக்கொள்ள இன்னும் பல மில்லியன் மக்களை அணு ஆயுத வெடிப்பில் கொல்லத் தயங்க மாட்டார்கள்.

சிக்கன வேலைத்திட்டத்தின் நிகழ்ச்சி நிரலை எதிர்க்கவும்

உழைக்கும் மக்களுக்கும், பெருநிறுவன நிர்வாகிகள் மற்றும் பில்லியனர்களுடன் ஒன்றிணைந்து செல்லும் அரசியல்வாதிகள், ஊடகப் பிரமுகர்கள் மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகள் வாழும் உலகிற்கும் இடையே ஒரு பெரிய இடைவெளி உள்ளது. வாடகை அல்லது அடமானம் செலுத்துதல், மருத்துவரைப் பார்ப்பது அல்லது ஒரு நேர உணவை பெறுவதற்றுக்கு இடையேயான எவ்விதமான கடினமான தேர்வுகளை எதிர்கொள்வது என்று அவர்களுக்குத் தெரியாதுள்ளது.

2020 இன் தொடக்கத்தில் சிட்னி Centrelink அலுவலகத்தில் தொழிலாளர்கள் வரிசையில் நிற்கின்றனர் (WSWS Media) [Photo: WSWS]

உண்மையில் இரண்டு ஆஸ்திரேலியாக்கள் உள்ளன. கடந்த ஆண்டு பணக்கார 250 ஆஸ்திரேலியர்களின் செல்வம் 50 பில்லியன் டாலர்கள் அதிகரித்து, 520 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் ஊதியங்கள் தேக்கமடைந்தன, வேலையின்மை மிகவும் நிச்சயமற்றதாக மாறியது மற்றும் அரசாங்க ஓய்வூதியங்கள் மற்றும் சமூகநல உதவிகள் உண்மையில் குறைந்தன.

இந்த நிலை இன்னும் மோசமாகும். தொற்றுநோய் மற்றும் இப்போது உக்ரேன் போரினால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் உந்தப்பட்ட ஆஸ்திரேலியா உட்பட, உலகம் முழுவதும் பணவீக்கம் அதிகரித்து வருகிறது. அரசாங்கத்தால் ஆதரிக்கப்படும் மத்திய வங்கிகளின் பதில், வட்டி விகிதங்களை உயர்த்துவதாகும். இது தொழிலாளர்களுக்கு அதிகரிக்கும் வீட்டு அடைமான செலுத்துமதியும் வாடகையும் அதிகரிப்பதுடன் பொருட்களுக்கான விலை அதிகரிப்புமான இரட்டை தாக்குதலாகும். இங்கு பணவீக்கம் ஏற்கனவே 3.5 சதவீதத்தை எட்டியுள்ளது. ஆனால் உணவு மற்றும் எரிபொருளுக்கான பணவீக்கம் 10 சதவீதத்திற்கு மேல் அதிகரித்து வருகிறது.

உழைக்கும் மக்கள் மீதான மாநில மற்றும் கூட்டாட்சி அரசாங்கங்களின் அவமதிப்பு, லிஸ்மோர் மற்றும் பிற பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் சமீபத்திய கொடூரமான காட்சிகளுக்கு அவர்கள் பதிலளித்ததன் மூலம் எடுத்துக்காட்டப்படுகிறது. மொரிசன் லிஸ்மோர் நகருக்குச் சென்று, ஆத்திரமடைந்த குடியிருப்பாளர்களிடமிருந்து மறைந்து, இது உங்கள் பொறுப்பு என்று நகர சபைக்கு சொன்னார். வெள்ளம், காட்டுத் தீ மற்றும் சூறாவளி ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசாங்க உதவியை எதிர்பார்க்க முடியாது. இதற்கான செலவு மிகவும் அதிகமானது என்றார்.

பருவநிலை மாற்றம்

வெள்ளம் மற்றும் காட்டுத்தீ போன்ற தீவிர வானிலை நிகழ்வுகள் அதிகரித்து வருகின்றன. தனிப்பட்ட நிகழ்வுகளுடனான தொடர்பு சிக்கலானது என்றாலும், வெப்பநிலை மற்றும் காலநிலை உறுதியற்ற தன்மையின் புதிய உச்சகட்டநிலைக்கு காலநிலை மாற்றம் அல்லது பசுமை இல்ல வாயுக்கள் முக்கிய அடிப்படையான உந்துதலாக இருக்கின்றது என்பதில் யாரும் சந்தேகிக்க முடியாது. ஆயினும்கூட, பல தசாப்தங்களாக, அரசாங்கங்கள் போதிய தேவையான நடவடிக்கைகள் இல்லாமலும் மற்றும் சந்தை அடிப்படையிலான கொள்கைகளுடனும் திணறுகின்றன. மனிதகுலத்தின் எதிர்காலத்தை அச்சுறுத்தும் மீளமுடியாத மாற்றங்களின் விளிம்பில் நாம் இருக்கிறோம் என்று ஏற்கனவே விஞ்ஞானிகள் எச்சரித்து வருகின்றனர்.

ஜனவரி 2, 2020 வியாழன், ஆஸ்திரேலியாவின் கான்ஜோலா ஏரிக்குப் பின்னால் புகை மற்றும் காட்டுத் தீ மூண்டதால் படகுகள் கரைக்கு இழுக்கப்படுகின்றன (Robert Oerlemans via AP)

பசுமைக் கட்சி உட்பட மற்ற எந்தக் கட்சிகளிடமும் தீர்வு இல்லை. அவர்களின் கொள்கைகள் இலாப நோக்கு அமைப்பு மற்றும் தேசிய அரசின் கட்டமைப்பிற்குள் மட்டுப்படுத்தப்பட்டவை என்பதால் தனித்தனியான, மட்டுப்படுத்தப்பட்ட மற்றும் சந்தையை அடிப்படையாக கொண்டவையாக உள்ளன. அதனால் முதலாளித்துவமும் உலகம் போட்டி தேசிய அரசுகளாகப் பிரிக்கப்பட்டிருப்பதும்தான் ஒரே உண்மையான தீர்வுக்கான முக்கிய தடையாகும். காலநிலை மாற்றத்தைத் தடுத்து நிறுத்துவதற்கும், திருப்புவதற்கும் விஞ்ஞான அடிப்படையிலான மற்றும் சர்வதேச அளவில் ஒருங்கிணைந்த வேலைத்திட்டம் தேவையாக உள்ளது.

ஜனநாயக உரிமைகளை பாதுகாக்கவும் மற்றும் ஜூலியன் அசாஞ்சை விடுதலை செய்யவும்

சமூக சமத்துவமின்மையும் மற்றும் போருக்கான முதலாளித்துவ திட்டமும் ஜனநாயக ரீதியான ஆட்சி வடிவங்களுடன் பொருந்தாது. பல்வேறு போலிக்காரணங்களின் கீழ், அடிப்படை ஜனநாயக உரிமைகள் மற்றும் சட்ட விதிமுறைகளை இல்லாதொழிப்பதிலும், தொழிலாள வர்க்கத்திற்கு எதிராகப் பயன்படுத்தப்படும் ஒரு பொலீஸ் அரசின் கட்டமைப்பை அமைப்பதில் கூட்டணியும், தொழிற் கட்சியினரும் ஒத்துழைத்துள்ளனர்.

விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசான்ஜ் [Credit: AP Photo/Matt Dunham]

அமெரிக்கா மற்றும் அதன் கூட்டாளிகளால் நிகழ்த்தப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் இராஜதந்திர சூழ்ச்சிகளை அம்பலப்படுத்தியதற்காக ஆஸ்திரேலிய குடிமகன் விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசான்ஜின் முடிவில்லாத சிறைவாசத்தில் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல் மிகவும் அப்பட்டமாக வெளிப்படுகிறது. சோசலிச சமத்துவக் கட்சியானது, அசான்ஜின் விடுதலைக்கான போராட்டத்தை தொழிலாள வர்க்கத்திற்குள் தொடர்ந்து எடுத்துச் செல்லும். இது நமது தேர்தல் பிரச்சாரத்தின் மைய அம்சமாக இருக்கும்.

முதலாளித்துவ அரசின் முழு அடக்குமுறை இயந்திரமும், அதன் பாதுகாப்புப் படைகளும், ஒருதொகை ஜனநாயக விரோதச் சட்டங்களும் அகற்றப்பட வேண்டும். இதில் கட்சியை மறுபதிவு செய்யும் சட்டம் மற்றும் இரட்டைக் குடியுரிமை பெற்றவர்கள் நாடாளுமன்ற தேர்தலில் நிற்பதைத் தடுக்கும் சட்டங்களும் உள்ளடங்கும்.

சோசலிச சமத்துவக் கட்சி எதனை முன்மொழிகிறது?

தொழிற்சங்கங்கள் மற்றும் தொழிற் கட்சியின் பல தசாப்தங்களாக மோசமான துரோகமும் காட்டிக்கொடுப்பும், தங்கள் வர்க்க நலன்களுக்காக தொழிலாளர்கள் நடத்தும் எந்தவொரு போராட்டத்திற்கும் தடையாக இருக்கும் அமைப்புகளுக்கு எதிரான கோபம், விரக்தி மற்றும் கிளர்ச்சி பெருக வழிவகுத்துள்ளது. தொழிற்சங்கங்களிலிருந்து சுயாதீனமான மற்றும் புரட்சிகர முன்னோக்கால் வழிநடத்தப்படும் புதிய தொழிலாளர் அமைப்புகள் தேவையாக உள்ளது. என்ன செய்ய வேண்டும் என்பதைப் புரிந்துகொள்ளும் ஒரு ஒருங்கிணைந்த போராட்ட சக்தியாக, தொழிலாள வர்க்கம் மனிதகுலத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்ய உலகளவில் சமூகத்தை மேலிருந்து கீழாக மறுஒழுங்கமைக்கும் திறனைக் காட்டிலும் அதிகமானதை கொண்டுள்ளது. அதுதான் சோசலிச சர்வதேசியத்திற்கான போராட்டத்தின் சாராம்சமாகும். அப்போராட்டம் முதலில் அபிவிருத்தி செய்யப்பட்டதிலிருந்து ஆளும் வர்க்கங்களை பயமுறுத்தியுள்ளது.

எங்கள் பிரச்சாரம் எல்லாவற்றிற்கும் மேலாக தொழிலாளர்களுக்கு அரசியல் கருவிகள் மற்றும் அவர்களின் நலன்களுக்காக போராடுவதற்கான அமைப்புரீதியான வழிமுறைகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. தொழிற்சங்க அமைப்புகளால் பல தசாப்தங்களாக ஒடுக்கப்பட்ட பின்னர், ஆஸ்திரேலியாவில் வர்க்கப் போராட்டம் மீண்டும் வெளிப்படுகிறது. நியூ சவுத் வேல்ஸில் உள்ள செவிலியர்கள் மற்றும் பிற சுகாதார பணியாளர்கள், ஒரு தசாப்தத்திற்கு மேலாக முதல் வேலைநிறுத்த நடவடிக்கையை எடுத்து, முன்னோக்கி செல்லும் வழியைக் காட்டியுள்ளனர், அதே நேரத்தில் ஆசிரியர்கள், இரயில் தொழிலாளர்கள் மற்றும் தொழிலாள வர்க்கத்தின் பல முக்கிய பிரிவுகள் ஊதியம் தொடர்பான தொழிற்துறை மோதல்களில் ஈடுபட்டுள்ளனர்.

மார்ச் 31, 2022 அன்று ஒரு நாள் வேலைநிறுத்தத்தின் போது NSW செவிலியர்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர் (WSWS Media) [Photo: WSWS]

இந்த வேலைநிறுத்தங்கள் ஒரு சர்வதேச இயக்கத்தின் முதல் கிளர்ச்சியின் ஒரு பகுதியாகும். ஏற்கனவே இலங்கை, இந்தியா மற்றும் பெரு மற்றும் மத்திய கிழக்கு மற்றும் ஆபிரிக்காவின் சில பகுதிகளில் உணவு மற்றும் எரிபொருளுக்கான விலை உயர்வு மற்றும் கடுமையான தட்டுப்பாடு ஆகியவற்றில் வேலைநிறுத்தங்கள் மற்றும் வெகுஜன எதிர்ப்புக்களை கண்டுள்ளது. வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் தொழிலாளர்கள் சில சமயங்களில் தொழிற்சங்கங்களை வெளிப்படையாக மீறி அதிகரித்தளவில் வேலைநிறுத்த நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

சோசலிச சமத்துவக் கட்சி, ஆசிரியர்கள், பல்கலைக்கழக ஊழியர்கள், தபால் ஊழியர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் மத்தியில், தொழிற்சங்கங்கள் சாராமல், அவர்களின் வேலைகள், ஊதியங்கள் மற்றும் வேலைநிலைமைகள் மீதான தாக்குதலை எதிர்த்துப் போராடுவதற்கான அடிப்படையை வழங்க, சாமானிய தொழிலாளர் குழுக்களை அமைப்பதை தொடங்கியுள்ளது. தொழிற்சங்கங்களின் கட்டுகளிலிருந்து வெளியேறி அவர்களின் வர்க்க கோரிக்கைகளை முன்னெடுப்பதற்கான வழிமுறையாக, ஒவ்வொரு தொழிற்சாலையிலும், பணியிடத்திலும், தொழிலாள வர்க்க புறநகர்ப் பகுதியிலும் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட சாமானிய தொழிலாளர் குழுக்களை அமைக்க தொழிலாளர்களை ஊக்குவிக்கிறோம்.

தொழிற்சங்கங்கள் தொழிலாளர்களின் மிக அடிப்படைத் தேவைகளைக் கூட பாதுகாப்பதில்லை. ஆனால் தொழிலாளர்களை ஒடுக்குவதற்கு அரசாங்கங்கள் மற்றும் பெருநிறுவனங்களுக்கு தொழில்துறை காவல்துறையாக செயல்படுகின்றன. கடந்த தொழிற் கட்சி அரசாங்கத்தால் இயற்றப்பட்ட மற்றும் தொழிற்சங்கங்களால் ஆதரிக்கப்படும் கடுமையான நியாயமான வேலை (Fair Work) என்ற சட்டத்தை அவர்கள் நம்பியிருக்கிறார்கள். அனைத்து வேலைநிறுத்த எதிர்ப்புச் சட்டங்களையும் நீக்குவது அனைத்து சாமானிய தொழிலாளர் குழுக்களின் அடிப்படைக் கோரிக்கையாக இருக்க வேண்டும்.

தொழிலாள வர்க்கத்தின் ஐக்கியம் என்பது போருக்கான உந்துதலை நிறுத்துவதற்கும், கோவிட்-19 ஐ அகற்றுவதற்கும் அல்லது காலநிலை மாற்றத்தை தடுப்பதற்கும் இன்றியமையாத வழிமுறையாகும். தொழிலாளர்களை ஒன்றிணைக்க, அனைத்து வகையான இனவெறியும் மற்றும் தேசியவாதமும் நிராகரிக்கப்பட வேண்டும். மேலும் அகதிகள் மற்றும் புலம்பெயர்ந்தோர் மீதான துன்புறுத்தல் எதிர்க்கப்பட வேண்டும். தொழிலாளர்கள் முழுக் குடியுரிமை உரிமைகளுடன் எங்கு வேண்டுமானாலும் வாழவும் வேலை செய்யவும் கூடியதாக இருக்கவேண்டும்.

உழைக்கும் மக்களின் உடனடித்தேவைகளைப் பூர்த்தி செய்ய பின்வரும் கோரிக்கைகளை நாங்கள் முன்வைக்கிறோம்:

  • கடந்த கால இழப்பு மற்றும் பணவீக்கத்துக்கு இணையாக ஊதியங்களை ஈடுசெய்ய அனைத்து ஊதியத்திலும் உடனடி உயர்வு வேண்டும்.
  • வேலை செய்யக்கூடிய அனைவருக்கும் நியாயமான ஊதியம் மற்றும் நிபந்தனைகளுடன் ஒரு முழுநேர நிரந்தர வேலை வழங்கவேண்டும். வேலை செய்ய முடியாத அனைவருக்கும் வாழ்வாதார ஊதியம் வழங்கு. முதியோர் மற்றும் ஊனமுற்றோருக்கான மிகக்குறைந்த ஓய்வூதியத்தை அதிகரிக்க வேண்டும்.
  • இலவச N95 முகமூடிகள் மற்றும் PCR பரிசோதனைகள் உட்பட, ஒவ்வொரு பணியிடத்திலும் பொது சுகாதார நடவடிக்கைகள் கோவிட்-ஐ ஒழிக்க உதவவேண்டும். எது பாதுகாப்பானது என்பதை நிர்வாகம் அல்ல தொழிலாளர்களே முடிவு செய்ய வேண்டும். வைரஸ் பரவுவதைத் தடுக்க, தொடர்புத் தடமறிதலை மீண்டும் நிறுவுதல், தனிமைப்படுத்தல் மற்றும் சிகிச்சையை விரிவுபடுத்துதல் மற்றும் அதிக தொற்று உள்ள பகுதிகளில் பூட்டுதல் வேண்டும்.
  • பொது சுகாதாரம் மற்றும் கல்வி அமைப்பு முறைகளுக்கு பல தசாப்தங்களாக நிதி வெட்டுக்களால் ஏற்பட்ட சேதங்களை ஈடுசெய்வதற்கும் வேலைகளை வழங்குவதற்கும் பொதுப்பணிகளின் பரந்த விரிவாக்கம் தேவை. அனைவருக்கும் இலவச, உயர்தர சுகாதாரம் மற்றும் கல்வி வழங்குவதற்காக பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகளை தரம் உயர்த்துவதற்கும், பணியாளர்களை நியமிப்பதற்கும், புதியவற்றை கட்டுவதற்கும் பல்லாயிரக்கணக்கான கோடிகள் ஒதுக்கப்பட வேண்டும்.
  • பொதுப் போக்குவரத்தை மேம்படுத்துதல் மற்றும் விரிவாக்குதல். கிராமப்புற மற்றும் தொலைதூரப் பகுதிகள் உட்பட அனைவருக்கும் நம்பகரமான அதிவேக தொலைத்தொடர்பு வழங்கப்பட வேண்டும்.
  • அனைவருக்கும் மலிவு விலையில் வீடுகளை வழங்குவதற்கான ஒரு பரந்த திட்டத்தின் ஒரு பகுதியாக வீடற்ற நிலையை முடிவுக்குக் கொண்டுவர அரசு வீட்டுவசதி திட்டத்தின் பரந்த விரிவாக்கம் தேவைப்படுகிறது.
  • பொது விவகாரங்களில் இருந்து இராணுவத்தை வெளியேற்றுங்கள். வெள்ளம் மற்றும் தீ விபத்துகளுக்குத் தயார்படுத்தவும், முடிந்தால் அவற்றைத் தடுக்கவும், தேவைப்பட்டால் உடனடியாகன நடவடிக்கைகளை எடுக்க முழு நிதியுதவி மற்றும் பணியாளர்களைக் கொண்ட தேசிய பேரிடர் அமைப்பை நிறுவுதல். பாதிக்கப்பட்டவர்களுக்கு முழு வருமான ஆதரவு மற்றும் அவர்களின் வாழ்க்கையை மீண்டும் கட்டமைக்க போதுமான நிதி உதவி வழங்கப்பட வேண்டும்.

நிதிப் பத்திரிகைகள், பெருநிறுவன மேலதிகாரிகள் மற்றும் அவர்களது அரசியல் ஊழியர்களிடமிருந்து இது கட்டுப்படியாகாது என ஒரு கூக்குரல் எழும். ஆனால், சமுதாயத்தின் அனைத்து செல்வங்களுக்கும் மூலாதாரமான தொழிலாள வர்க்கம், எது கட்டுப்படியாகக்கூடியது, எது இல்லை என்பதைத் தீர்மானிக்க வேண்டும்.

தொழிலாள வர்க்கத்தின் ஜனநாயகக் கட்டுப்பாட்டின் கீழ் வங்கிகள், நிதி நிறுவனங்கள் கொண்டுவரப்பட்டு மற்றும் பெரிய நிறுவனங்களை தேசியமயமாக்கப்பட வேண்டும். கோடீஸ்வரர்களின் பெரும் செல்வத்தை கைப்பற்றுங்கள். உற்பத்தி மற்றும் விநியோகத்தை ஜனநாயக தொழிலாளர்களின் கட்டுப்பாட்டின் கீழ் வைக்கவும். இராணுவம் மற்றும் போர் ஆயுதங்களுக்கு பில்லியன்களை வீணடிப்பதை நிறுத்துங்கள்.

இந்தக் கோரிக்கைகள் தவிர்க்கமுடியாமல் எந்த வர்க்கம் அதிகாரத்தின் கடிவாளத்தைப் பிடிப்பது என்ற பிரச்சினைக்கு இட்டுச் செல்கிறது. சர்வதேச அளவில் சோசலிசத்திற்கான போராட்டத்தின் ஒரு பகுதியாக, சோசலிச வழிகளில் சமூகத்தை மறுசீரமைக்க, அதன் போராட்டங்களுக்கு தொழிலாள வர்க்கத்தால் உருவாக்கப்பட்ட அமைப்புக்களில் தங்கியிருக்கும் ஒரு தொழிலாளர் அரசாங்கம் நிறுவப்பட வேண்டும்.

சோசலிச சமத்துவக் கட்சியைக் கட்டமைக்கவும்

சோசலிச சமத்துவக் கட்சி மற்ற கட்சிகளைப் போன்ற ஒன்றல்ல. எங்களுடைய இலட்சியம் நாடாளுமன்றத்தில் வசதியான ஆசனங்களில் முடிந்தவரை கூடுதலான உறுப்பினர்களை இருத்துவதல்ல. ரஷ்யப் புரட்சி மற்றும் வரலாற்றில் முதல் மற்றும் ஒரே உண்மையான தொழிலாளர் அரசை தோற்றுவித்த சோசலிச சர்வதேசியத்தின் கொள்கைகளை நாங்கள் அடிப்படையாகக் கொண்டுள்ளோம். உழைக்கும் வர்க்கத்திடம் இருந்து அதிகாரத்தைக் கைப்பற்றிய ஸ்ராலினிச அதிகாரத்துவத்தினால் ரஷ்யப் புரட்சி காட்டிக்கொடுக்கப்பட்டதற்கு எதிராக லியோன் ட்ரொட்ஸ்கி நடத்திய அரசியல் போராட்டத்தின் படிப்பினைகளிலும் நாங்கள் நிற்கிறோம். 1938ல் ட்ரொட்ஸ்கியால் ஸ்தாபிக்கப்பட்ட நான்காம் அகிலத்திற்கு அடித்தளமிட்ட வேலைத்திட்டம் மற்றும் முன்னோக்கைப் பாதுகாக்கும் மற்றும் போராடும் ஒரு சர்வதேசக் கட்சியான நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் ஒரு பகுதியாக நாங்கள் இருக்கிறோம்.

சோசலிச மாற்றீட்டுக்கான தங்கள் ஆதரவை நிரூபிக்க, எங்கள் வேட்பாளர்களுக்கு வாக்களிக்குமாறு தொழிலாளர்களுக்கு சோசலிச சமத்துவக் கட்சி அழைப்பு விடுக்கிறது. தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் எந்தவொரு பிரச்சினைக்கும் நாடாளுமன்றத்தின் மூலம் தீர்வு காண முடியாது. ஆனால் தேர்ந்தெடுக்கப்பட்டால், நமது வேட்பாளர்கள் முதலாளித்துவ அரசியல்வாதிகளின் அமைப்பையும், மோசமான சூழ்ச்சிகளையும் அம்பலப்படுத்துவதற்கும், தொழிலாள வர்க்கத்தின் பரந்த பார்வையாளர்களுக்கு எங்கள் வேலைத்திட்டத்தை பிரபலப்படுத்துவதற்கும் நாடாளுமன்றத்தை பயன்படுத்துவார்கள்.

தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் தங்களால் இயன்ற அனைத்து வழிகளிலும் எங்கள் பிரச்சாரத்தை ஆதரிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். ஆனால் எல்லாவற்றிற்கும் மேலாக வரவிருக்கும் போராட்டங்களுக்கு தேவையானது புரட்சிகர தலைமையாகும். கடந்த நூற்றாண்டின் வரலாறு, ஒரு புரட்சிகரக் கட்சி இல்லாமல், மிகப் பெரிய மற்றும் போர்க்குணமிக்க தொழிலாளர் இயக்கங்கள் கூட தோல்வியில் முடிவடைகின்றன என்பதை மீண்டும் மீண்டும் நிரூபித்துள்ளது. சோசலிச சமத்துவக் கட்சியை தொழிலாளர்களின் வெகுஜன புரட்சிகரக் கட்சியாகக் கட்டியெழுப்ப எங்களுடன் இணையுமாறு உங்களை கேட்டுக்கொள்கின்றோம்.

Contact the SEP:
Phone: (02) 8218 3222
Email: sep@sep.org.au
Facebook: SocialistEqualityPartyAustralia
Twitter: @SEP_Australia
Instagram: socialistequalityparty_au
TikTok: @SEP_Australia

Loading