பாரிய அரசாங்க எதிர்ப்பு எழுச்சியின் மத்தியில் இலங்கையின் தொழிற்சங்கங்கள் என்ன செய்து கொண்டிருக்கின்றன?

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

இலங்கையின் தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்கள், ஜனாதிபதி கோட்டாபய இராஜபக்ஷவும் அவரது பெரும்வணிகர், சிங்கள-பேரினவாத அரசாங்கம் உடனடியாக இராஜினாமா செய்ய வேண்டும் மற்றும் பாராளுமன்றத்தை கலைக்க வேண்டும் என்று கோரி தீவு முழுவதும் தெருக்களில் இறங்கி போராடி வருகின்றனர். பாரிய இன்னல்களை எதிர்நோக்கும் அவர்கள், விலைவாசி உயர்வு மற்றும் உணவு, மருந்து, எரிபொருள் மற்றும் சமையல் எரிவாயு தட்டுப்பாட்டிற்கு உடனடியாக நிவாரணமும், தினசரி மின்வெட்டை நிறுத்தவும் கோருகின்றனர்.

இலங்கை ஜனாதிபதியை பதவி விலகக் கோரி கண்டியில் இளைஞர்கள் நடத்திய ஆர்ப்பாட்டம் (WSWS Media) [Photo: WSWS]

சமூக எதிர்ப்பின் இந்த பிரமாண்ட வெடிப்பு இராஜபக்ஷ ஆட்சியையும் முழு ஆளும் வர்க்கத்தையும் நிலைகுலையச் செய்துள்ளது. மற்ற நாடுகளைப் போலவே, பேரழிவு தரும் உலகளாவிய கோவிட்-19 தொற்றுநோய் மற்றும் உக்ரேன் மீதான ரஷ்யாவிற்கு எதிரான அமெரிக்க-நேட்டோ போரும், இலங்கையின் பொருளாதாரத்தை சிதைத்துள்ளதுடன், ஊதிப் பெருத்துள்ள முதலாளித்துவ உயரடுக்குக்கும் தொழிலாள வர்க்கம் மற்றும் கிராமப்புற உழைப்பாளிகளுக்கும் இடையே ஏற்கனவே காணப்படும் அப்பட்டமான இடைவெளியை மேலும் ஆழமாக்கியுள்ளது.

முப்பதுக்கும் மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்தை விட்டு வெளியேறி எதிர்பக்கம் சேர்ந்துள்ளதை அடுத்து, ஆட்சியை தக்கவைக்க அரசாங்கம் துடிக்கிறது.

அது இந்த வாரம் வெளிநாட்டுக் கடன் செலுத்துவதில் 'தற்காலிக' தவணை தவறுதலை அறிவித்ததுடன் பிணை எடுப்பு கடனைப் பெறுவதற்கு சர்வதேச நாணய நிதியம் கட்டளையிட்ட கடுமையான சிக்கன நடவடிக்கைகளை செயல்படுத்த தயாராகி வருகிறது. இந்த சிக்கன திட்டத்தில் பின்வருவன அடங்கும்: வருமான வரி மற்றும் பெறுமதி சேர் வரியை உயர்த்துதல்; எரிபொருள் விலை அதிகரிப்பு மற்றும் மின்சார கட்டணங்கள் அதிகரிப்பு; சந்தையால் நிர்ணயிக்கப்படும் நெகிழ்வான நாணய மாற்று விகிதத்தை நிறுவுதல்; நிதிப் பற்றாக்குறையைக் குறைத்தல், அதாவது சமூகச் செலவுகளைக் குறைத்தல்; மற்றும் தனியார்மயமாக்கல், கூட்டுத்தாபனமயமாக்கல் மற்றும் ஒப்பந்த முறைமை மூலம் அரசு துறையை 'மறுகட்டமைப்பு' செய்தல். இந்த நடவடிக்கைகள் மூலம் தொழில்கள் அழிக்ப்படுவதோடு, ஊதியங்கள் வெட்டப்படுவதுடன் உழைக்கும் மக்களின் சமூக உரிமைகள் நசுக்கப்படும்.

அரசாங்கம் மற்றும் முழு ஆளும் வர்க்கமும் முன்னெடுக்கும் இந்த வர்க்கப் போர் தாக்குதலை எவ்வாறு எதிர்ப்பது என்ற கேள்வியை தொழிலாளர்கள் இப்போது எதிர்கொள்கின்றனர்.

தொழிலாள வர்க்கம் அதன் தொழில்துறை மற்றும் அரசியல் அதிகாரத்தை அணிதிரட்டுவதைத் தடுப்பதற்கும் முதலாளித்துவம் மற்றும் பாராளுமன்ற அரசியலுடன் அதை முடிச்சுப்போட்டு விடுவதற்கும் அவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கங்கள் தங்களால் முடிந்த அனைத்தையும் செய்கின்றன.

2019 நவம்பரில் இராஜபக்ஷ ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுவதற்கு முன்னர் நிகழ்ந்த சக்திவாய்ந்த வேலைநிறுத்த அலை உட்பட, வர்க்கப் போராட்டத்தை தொழிற்சங்கங்கள் நசுக்கி வருவதால், பாரிய அரசாங்க எதிர்ப்புப் போராட்டங்கள் எதிர்க் கட்சிகளைப் போலவே முற்றிலும் தொழிற்சங்கங்களுக்கு வெளியே வெடித்தன.

'கோடா வீட்டுக்குப் போ' ஆர்ப்பாட்டங்கள் பெருகியதால், பல நாட்கள் வெளிப்படையாக மௌனமாக இருந்த பின்னர், தொழிற்சங்கங்கள் இப்போது நடந்து கொண்டிருக்கும் போராட்டங்களுக்கு ஆதரவளிப்பதாகக் கூறுகின்றன. ஏனெனில், முதலாளித்துவ ஆட்சிக்கு சவாலாக அது வளர்வதைத் தடுக்க அவற்றைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும் நோக்கத்தில் மட்டுமே தொழிற்சங்கங்கள் அவ்வாறு செய்கின்றன.

நேற்று, தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன அமைப்புக்கள் (TUMO), ஜனாதிபதி இராஜபக்ஷவும் அவரது அரசாங்கமும் பதவி விலகக் கோரி மத்திய கொழும்பில் கடந்த ஏழு நாட்களாகப் பெருகி வரும் போராட்டத்திற்கு ஆதரவாக, ஏப்ரல் 16, சனிக்கிழமையன்று பேரணி ஒன்றை நடத்தப்போவதாக அறிவித்தது.

இலங்கை ஆசிரியர் சங்கம் (CTU), இலங்கை வர்த்தக மற்றும் பொதுத் தொழிலாளர் சங்கம் (CMU) மற்றும் இலங்கை வங்கி ஊழியர் சங்கம் உட்பட 34 தொழிற்சங்கங்களும், அதே போல் போலி-இடது முன்நிலை சோசலிசக் கட்சியின் தொழிலாளர் போராட்ட மையம் மற்றும் மீனவர் குழு, மற்றும் சில அரசு சாரா நிறுவனங்களும் இந்த டி.யு.எம்.ஒ. உடன் இணைந்துள்ளன.

இந்த டி.யு.எம்.ஒ. தனது பேரணிக்கான முக்கிய முழக்கமாக “வெகுஜன கருத்துக்கு தலைவணங்கு! திறமையற்ற அரசு, வீட்டுக்குப் போ!” என்பதை தேர்ந்தெடுத்துள்ளது.

வெறுக்கப்பட்ட இராஜபக்ஷ ஆட்சியை பதிலீடு செய்யவேண்டிய அரசாங்கத்தின் அமைப்பு அல்லது வர்க்க தன்மை பற்றி டி.யு.எம்.ஒ. எதுவும் கூறவில்லை. ஆனால் அது இன்னொரு முதலாளித்துவ அரசாங்கத்திற்கு வழி வகுக்க விரும்புகிறது என்பது இரகசியமல்ல. உண்மையில், தற்போதைய அரசாங்கம் 'திறமையற்றது' என்று டி.யு.எம்.ஒ. முன்வைக்கும் கண்டனம், பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியும் (ஐ.ம.ச.) எதிரொலிக்கிறது. இராஜபக்ஷ பொருளாதாரத்தை 'தவறாக நிர்வகிக்கிறார்' என்று கண்டனம் செய்த ஐ.ம.ச. சர்வதேச நாணய நிதிய சிக்கன நடவடிக்கைகளை முன்கூட்டியே அமுல்படுத்தவில்லை என்றும் கண்டனம் செய்கின்றது.

ஏப்ரல் 4 அன்று, டி.யு.எம்.ஒ. ஒரு அறிக்கையை வெளியிட்டது. புத்திஜீவிகள் மற்றும் தொழில் வல்லுநர்கள், மக்களின் 'எரியும் சமூக-பொருளாதார பிரச்சனைகளை' தீர்க்க 'குறுகிய கால, இடைக்கால மற்றும் நீண்ட கால நடைமுறை மற்றும் அறிவியல் திட்டத்தை' தயாரிப்பதில் தன்னுடன் இணைய வேண்டும், என்று அது அழைப்பு விடுத்தது. தொழிலாளர்களின் வர்க்க நலன்களுடன் சம்பந்தப்பட்ட தீர்வுகளைத் திணிக்கின்ற இந்த வேலைத்திட்டத்துக்கு தொழிலாள வர்க்கம் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்கள் அணிதிரட்டப்பட மாட்டார்கள் என்பதை அது தெளிவுபடுத்திவிட்டது. மாறாக அது, நெருக்கடி நிறைந்த முதலாளித்துவத்தின் எல்லைக்குள் மற்றும் இலங்கை அரசியல் ஸ்தாபனத்தின் தொடர்ச்சியான மேலாதிக்கத்தின் கீழ் 'சாத்தியமான'வற்றுடன் ஆரம்பித்து முடிவடையும்.

இந்த திட்டத்தின் அடிப்படையில், டி.யு.எம்.ஒ. 'மக்கள் பக்கம் நின்று குறுகிய கால தீர்வுகளை கொண்டு வர ஆட்சியாளர்களுக்கு அழுத்தம் கொடுக்க நடவடிக்கை எடுக்கும்' மற்றும் 'மக்கள் நட்பு அரசியலமைப்பை' தயாரிக்கும் என்று அந்த அறிக்கை விளக்கியது. இது அனைத்து தொழிற்சங்கங்கள், மற்றும் தொழில்முறை குழுக்கள் மற்றும் சிவில் அமைப்புகளை, 'இந்த திட்டத்தை யதார்த்தமாக்குவதற்கு நிறம் மற்றும் கட்சி வேறுபாடு இன்றி ஒன்றிணைய வேண்டும் ...' என்று அழைப்பு விடுக்கிறது.

வேறு வார்த்தைகளில் கூறுவதானால், முன்மொழியப்படுவது ஒரு மக்கள் முன்னணி வகையிலான, பல வர்க்க இயக்கம் ஆகும், இது பெரும்பாலும் முதலாளித்துவ ஸ்தாபனத்தின் கட்சிகளை நேரடியாக உள்ளடக்குவதை இலக்காகக் கொண்டதாகும். உலக அளவில் அமைப்பு ரீதியான நெருக்கடியில் சிக்கிக்கொண்டுள்ள, பிற்போக்கை வாந்தி எடுக்கின்ற, உலகளாவிய இராணுவ மோதல்களில் மனிதகுலத்தை மூழ்கடிக்க அச்சுறுத்திக்கொண்டிருக்கும் முதலாளித்துவத்தை சீர்திருத்த முடியும் என்ற வதந்தியை அடிப்படையாகக் கொண்டதாக அது இருக்கும். அத்தகைய இயக்கம் தொழிலாள வர்க்கத்தை அரசியல் ஸ்தாபனத்துடன் பிணைக்கவும், வர்க்கப் போராட்டத்தை நசுக்கவும், முதலாளித்துவ ஆட்சியை நிலைநிறுத்தவும் பயன்படும், இதில் இன்று தொழிற்சங்கங்கள் முழுமையாக ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன.

தொழிற்சங்க ஒருங்கிணைப்பு மையம் (TUCC) என்ற என்ற இரண்டாவது தொழிற்சங்க முன்னணி ஒன்று உள்ளது. இருப்பினும், அதன் அரசியல் அடிப்படையில் வேறுபட்டதல்ல. டி.யு.சி.சி. ஆனது நான்கு டஜன் தொழிற்சங்கங்களை ஒன்றிணைக்கிறது. அவற்றில் சில அரசியல் ரீதியாக எதிர்க்கட்சியான மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) ஆதிக்கத்தில் உள்ளதுடன், மற்றவை ஜே.வி.பி.யைச் சுற்றி சுழலும் சுயாதீன தொழிற்சங்கங்களாகும்.

ஏப்ரல் 8 அன்று, டி.யு.சி.சி. அணுசரனையில் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டத்திற்கு ஆதரவாக ஆர்ப்பட்டங்கள் மற்றும் அரச ஊழியர்களின் ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தம் நடத்தப்பட்டது. தற்போதைய நெருக்கடிக்கு தீர்வு காண இராஜபக்ஷ அரசாங்கத்திற்கு ஏப்ரல் 18 வரை கால அவகாசம் வழங்குவதாக அது தெரிவித்துள்ளது.

கடந்த சனிக்கிழமையன்று ஒரு செய்தியாளர் கூட்டத்தில் பேசிய, டி.யு.சி.சி. இணைந்த சுகாதார தொழில் வல்லுநர்களின் கூட்டமைப்பின் (சு.தொ.வ.கூ.) தலைவர், ஏப்ரல் 18 ஆம் திகதிக்குள் அரசாங்கம் 'நியாயமான தீர்வை' எட்டவில்லை என்றால், 'அனைத்து தொழிற்சங்கங்களும் மக்கள் போராட்டத்துடன் இணைந்து காலவரையற்ற வேலைநிறுத்தத்தை தொடர முடிவு செய்துள்ளன.” என்றார்.

டி.யு.சி.சி. தொழிற்சங்கங்கள் விடுத்துள்ள பொது வேலைநிறுத்த அச்சுறுத்தல், அரசியல் ஸ்தாபனத்திற்கு எதிராக தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டுவதை நோக்கமாகக் கொண்டிருக்கவில்லை மற்றும் உள்நாட்டு மற்றும் உலகளாவிய பெருவணிகம் மற்றும் இலங்கை முதலாளித்துவத்தின் இழப்பில் பொருளாதார நெருக்கடியைத் தீர்ப்பதை நோக்கமாகக் கொண்ட நடவடிக்கைகளுக்கு அது அழைப்பு விடுக்கவில்லை. மாறாக, தீவிர எதிர்ப்பின் தோரணையைக் காட்டுவதன் மூலம், இந்த தொழிற்சங்கங்கள், பெருகிய முறையில் கடுமையாக சிதைந்து வரும் தங்கள் வாழ்க்கைத் தரங்களைப் பாதுகாக்க அவசர நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் மற்றும் அரசாங்கத்தின் தனியார்மயமாக்கல் உந்துதலை எதிர்க்க வேண்டும் என்று கோருகின்ற, தீவிரமயமாக்கப்பட்டுள்ள அடிமட்ட சாமானிய உறுப்பினர்கள் மீது கட்டுப்பாட்டைத் தக்கவைத்துக் கொள்ள முயல்கின்றன. அதனுடன் தொடர்புபட்ட இரண்டாவது நோக்கம், அரசாங்கம் மற்றும் பிற எதிர்க்கட்சிகளுடன் ஜே.வி.பி. மேற்கொள்ளும் சூழ்ச்சியுடன் தொழிலாள வர்க்கத்தை கட்டிப்போட்டு விடுவதாகும்.

ஜே.வி.பி.யைப் போலவே, ஜே.வி.பி. தலைமையிலான தொழிற்சங்கங்களும் ஜனாதிபதி இராஜபக்ஷவும் அவரது அரசாங்கமும் இராஜினாமா செய்த பின்னர் எதிர்க்கட்சிகளை அடிப்படையாகக் கொண்டு ஒரு 'இடைக்கால அரசாங்கத்தை' அமைக்க அழைப்பு விடுக்கின்றன. 'கொள்ளை, ஊழல் மற்றும் மோசடிகள் அற்ற' தொழில் வல்லுநர்களின் புதிய அரசாங்கத்தை ஆட்சிக்குக் கொண்டுவர புதிய தேர்தல்களுக்கும் அவர்கள் அழைப்பு விடுக்கின்றனர். இது இன்னொரு முதலாளித்துவ அரசாங்கமே அன்றி வேறல்ல. குறிப்பிடத்தக்க வகையில், 'ஆதரவுக்காக' சர்வதேச நாணய நிதியத்தில் உள்ள உலக மூலதனத்தின் பூதங்களை அணுகுவதை நிராகரிக்க ஜே.வி.பி மறுத்துள்ளது.

அண்மையில் கொழும்பு சுதந்திர வர்த்தக வலயத்தில் உள்ள முதலாளிகள், அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவு தொடர்பாக தொழிலாளர்கள் மத்தியில் அதிகரித்துவரும் அமைதியின்மை குறித்து எச்சரித்தனர். இருப்பினும், தொழிற்சங்கங்கள் முற்றிலும் மௌனமாக உள்ளன. அதே நேரத்தில், சுதந்திர வர்த்தக வலயம் மற்றும் பொதுத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் அன்டன் மார்கஸ், இராஜபக்ஷ அரசாங்கத்திற்கு எதிராக நடந்து வரும் போராட்டத்தை, 'ஒழுங்கமைக்கப்படாத, ஒழுக்கமற்ற மற்றும் வன்முறை' என்று கண்டித்துள்ளார். ஆளும் வர்க்கத்தைப் போலவே, தொழிற்சங்கங்களும் வெகுஜன அரசாங்க-விரோத எழுச்சி மற்றும் தங்கள் உரிமைகளைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற தொழிலாளர்கள் மத்தியில் பெருகிவரும் கோரிக்கையால் பீதியடைந்துள்ளன.

கடந்த இரண்டு ஆண்டுகளில் கல்வி, சுகாதாரம், அரசு நிர்வாகம், ரயில்வே, துறைமுகம், பெட்ரோலியம் மற்றும் மின்சாரம் ஆகிய துறைகளில் அரச ஊழியர்களின் போர்க்குணமிக்க வேலைநிறுத்தங்கள் மற்றும் எதிர்ப்பு அலைகள் காணப்பட்டன. தோட்டத் தொழிலாளர்கள் தரப்பில் தொடர்ச்சியான போராட்டங்கள் மற்றும் சுதந்திர வர்த்தக வலயங்களில் வேலைநிறுத்தங்கள் மற்றும் எதிர்ப்புக்களும் நடந்து வருகின்றன.

நெருக்கடியின் சுமையை உழைக்கும் மக்கள் மீது சுமத்துவதற்கான உந்துதலை இராஜபக்ஷ அரசாங்கம் முன்னெடுத்துச் செல்வதற்கு இராஜபக்ஷ அரசாங்கத்திற்கு இயலும் வகையில், தொழிற்சங்கங்கள் எப்போதும் இந்தப் போராட்டங்களைத் தனிமைப்படுத்தி விற்றுவிட்டன. அதே நேரத்தில், மனித உயிர்களுக்கும் மேலாக இலாபத்துக்கு முன்னுரிமை கொடுக்கும் அரசாங்கத்தின் தொற்றுநோய் கொள்கையை அமுல்படுத்த தொழிற்சங்கங்கள் அரசாங்கத்துடன் ஒத்துழைத்தன.

கடந்த ஆண்டு சுமார் 250,000 ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் 100 நாட்களுக்கும் மேலாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். இந்த கல்வித் தொழிலாளர்கள் கோரியதில் மூன்றில் ஒரு பங்கிற்கு சமமான ஊதிய உயர்வை தொழிற்சங்கங்கள் ஏற்றுக்கொண்டன. வேலைநிறுத்தத்தின் ஆரம்பத்தில், இலங்கை ஆசிரியர் சங்கம் மற்றும் ஜே.வி.பி.யை சேர்ந்த ஆசிரியர் சேவை சங்கங்கள் உட்பட சம்பந்தப்பட்ட பிரதான தொழிற்சங்கங்களின் தலைவர்கள், பிரதமர் மஹிந்த இராஜபக்ஷவுடனான ஒரு கலந்துரையாடலில், நாடு 'பொருளாதார நெருக்கடியில்' இருப்பதை 'புரிந்து கொள்கிறோம்' என்று கூறினர்.

சுகாதாரப் பணியாளர்களின் போராட்டத்தைக் காட்டிக்கொடுத்து கடந்த மாதம் சுகாதார தொழில் வல்லுனர்களின் கூட்டமைப்பின் தலைவர் ரவி குமுதேஷ் வெளியிட்ட ஊடக அறிக்கையும், மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. தங்கள் கோரிக்கைகளுக்காக போராடுமாறு தொழிற்சங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கும் உறுப்பினர்களை 'நிர்வகிப்பதற்கே' தொழிற்சங்கங்கள் மட்டுப்படுத்தப்பட்ட வேலைநிறுத்தங்கள் மற்றும் எதிர்ப்புக்களுக்கு அழைப்பு விடுத்தன என்பதை அவர் ஒப்புக்கொண்டார்.

கடந்த ஆண்டு ஜூன் மாதத்திலிருந்து, ஜனாதிபதி இராஜபக்ஷ, பெரும்பாலான பொதுத்துறை நிறுவனங்களில் தொழில்துறை நடவடிக்கைகளை குற்றமாக்குவதற்கு அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டத்தின் அதிகாரங்களை மீண்டும் மீண்டும் பயன்படுத்தினார். இந்த கொடூரமான சட்டம் குறித்து தொழிற்சங்கங்கள் முற்றிலும் மௌனமாக உள்ளன. அரசாங்கத்திற்கு எதிரான போராட்டத்தை ஒடுக்குவதற்கு அரச வன்முறையைப் பயன்படுத்துவதற்கு ஜனாதிபதி கோட்டாபய இராஜபக்ஷவின் மூத்த சகோதரரான பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ விடுத்த அச்சுறுத்தல்களையும் அவர்கள் கண்டிக்கவில்லை. அதன் மூலம் அவர்கள் ஜனநாயக உரிமைகள் சம்பந்தமான அவர்களின் அலட்சியத்தை காட்டினர். எதேச்சாதிகார நிறைவேற்று ஜனாதிபதி முறையை விமர்சிக்கும் அதே வேளையில், தொழிற்சங்கங்கள் பல தசாப்தங்களாக அதை நிலைநிறுத்திய ஸ்தாபனக் கட்சிகளுடன் கொடுக்கல் வாங்கல் செய்கின்றன. மேலும் அதை ஒழிப்பதற்கான போராட்டத்தை முதலாளித்துவ ஸ்தாபனத்திற்கு எதிராக மக்களை அரசியல் ரீதியாக அணிதிரட்டுவதற்கான நெம்புகோலாக மாற்றி, சோசலிச வழியில் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு எண்ணம் அவற்றுக்கு கிடையாது.

தற்போதைய உலகளாவிய முதலாளித்துவ நெருக்கடியில், உழைக்கும் மக்கள் அரசாங்கத்திற்கும் முதலாளித்துவ வர்க்கத்திற்கும் அழுத்தம் கொடுப்பதன் மூலமோ, அல்லது வேண்டுகோள் விடுப்பதன் மூலமோ, தங்கள் உரிமைகளைப் பாதுகாக்கவோ அல்லது அவர்களின் அடிப்படைத் தேவைகளைப் பாதுகாக்கவோ முடியாது. மாறாக, சிக்கன நடவடிக்கைளையும் சர்வதேச நாணய நிதியத்தையும் எதிர்ப்பதற்கும், அனைவருக்கும் கண்ணியமான வேலைகள், உணவு, எரிபொருள் மற்றும் மருந்துகளைப் பெறக்கூடிய ஒரு சோசலிச செயல் திட்டத்திற்கான போராட்டத்தில் அவர்கள் தங்கள் சுயாதீன வர்க்க பலத்தை அணிதிரட்ட வேண்டும்!

அதன் வர்க்க பலத்தை அணிதிரட்ட, தொழிலாள வர்க்கம் முதலாளித்துவ சார்பு தொழிற்சங்கங்களின் கிடுக்கிப்பிட அரசியல் மற்றும் நிறுவன கட்டுப்பாட்டில் இருந்து விடுபட்டு தொழிலாள வர்க்க போராட்டத்தின் உண்மையான அமைப்புகளை கட்டியெழுப்ப வேண்டும்.

அதனால்தான் சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.) ஒவ்வொரு வேலைத் தளங்களிலும், தொழிற்சாலைகளிலும், தொழிலாள வர்க்கத்தின் புறநகர்ப் பகுதியிலும், ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட மற்றும் தொழிற்சங்கங்கள் மற்றும் அனைத்து முதலாளித்துவக் கட்சிகளிலிருந்து சுயாதீனமான நடவடிக்கைக் குழுக்களை அமைக்க அழைப்பு விடுக்கிறது.

இந்த நடவடிக்கை குழுக்கள் மக்களின் அவசர தேவைகளை நிவர்த்தி செய்ய தேவையான அத்தியாவசிய நடவடிக்கைகளுக்கான போராட்டத்தை ஏற்பாடு செய்யும். மக்களின் வாழ்க்கைக்கு இன்றியமையாத அனைத்து அத்தியாவசிய பொருட்கள் மற்றும் பிற வளங்களை உற்பத்தி செய்வதிலும் விநியோகிப்பதிலும் தொழிலாளர்களின் ஜனநாயகக் கட்டுப்பாட்டை நிறுவுதலும் இதில் அடங்கும்; ஏழை விவசாயிகளின் கடன்களை ரத்து செய்தல்; மற்றும் பெரும் பணக்காரர்களின் வங்கிகள், பெரிய தோட்டங்கள், பெரிய நிறுவனங்கள் மற்றும் செல்வங்களை தேசியமயமாக்குவதன் மூலம் அவர்களின் வளங்கள், அனைத்து உழைக்கும் மக்களுக்கும் ஒழுக்கமான வாழ்க்கை மற்றும் சமூக நிலைமைகளை வழங்குவதற்கு திருப்பி விடப்படும்.

எழுச்சி பெறும் நடவடிக்கைக் குழுக்களின் வலையமைப்பு, கிராமப்புற ஏழைகள் மற்றும் இளைஞர்களுக்கு ஒரு அணிதிரள்வு புள்ளியாகச் செயல்படுத்துவதோடு முதலாளிகள் மற்றும் அவர்களின் அரசியல் பிரதிநிதிகளால் பிரச்சாரம் செய்யப்படும் பேரினவாத மற்றும் இனவாத அழுக்குகளை நிராகரித்து சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் தொழிலாளர்களை ஐக்கியப்படுத்தும்.

நடவடிக்கைக் குழுக்களின் அதிகாரம் பெருகும்போது, அவை தொழிலாள வர்க்க அரசியல் அதிகாரத்தின் உறுப்புகளாக மாறி, மேற்கூறிய சோசலிச வேலைத் திட்டத்தை செயல்படுத்துவதற்கு தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் அரசாங்கத்திற்கு போராடுவதற்கான அடிப்படையை வழங்கும். இந்தப் போராட்டத்தில் இலங்கைத் தொழிலாளர்களின் இன்றியமையாத கூட்டாளிகள் உலகெங்கிலும் உள்ள அவர்களது வர்க்க சகோதர சகோதரிகளே ஆவர்.

இந்த வேலைத்திட்டத்துடன் உடன்படும் அனைத்து தொழிலாளர்களும் இளைஞர்களும் சோசலிச சமத்துவக் கட்சியை தொழிலாள வர்க்கம் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் புரட்சிகர தலைமையாக கட்டியெழுப்ப வேண்டும்.

Loading