மக்ரோன்-லு பென் இரண்டாம் சுற்றுக்கு எதிரான மாணவர் போராட்டங்களை காவல்துறையும் தீவிர வலதுசாரிகளும் தாக்கினர்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

வியாழன் மாலை, பாரிஸில் உள்ள சோர்போன் பல்கலைக்கழக பகுதியை ஆக்கிரமித்திருந்த மாணவர்கள் மீது பிரெஞ்சு காவல்துறை தாக்குதல் நடத்தியது. உள்ளே இருந்த மாணவர்கள் வலுக்கட்டாயமாக சிதறடிக்கப்பட்டனர், குறைந்தது ஒருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதை எழுதும் வரை, அருகிலுள்ள பாந்தெயோன் (Panthéon) நினைவு மண்டபத்தை சுற்றி எதிர்ப்பாளர்களைக் குறிவைத்து தொடர்ந்து போலீஸ் நடவடிக்கைகள் இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இது, பிரான்ஸ் முழுவதிலும் உள்ள பல்கலைக்கழக ஆக்கிரமிப்பு அலைக்கு எதிரான பரந்த ஒடுக்குமுறையின் ஒரு பகுதியாகும், இது ஜனாதிபதித் தேர்தல்களின் முதல் சுற்றுக்குப் பின்னர், தற்போதைய வலதுசாரி ஜனாதிபதி இமானுவல் மக்ரோனுக்கும் நவ-பாசிச வேட்பாளர் மரின் லு பென்னுக்கும் இடையே ஒரு இரண்டாம் கட்டப் போட்டியை உருவாக்கிய பின்னர் தொடங்கியது.

மக்ரோன், லு பென் மற்றும் அவர்களது உலகத்திற்கு எதிராக சோர்போன் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது!

முன்னதாக வியாழன் அன்று, பாரிஸில் உள்ள Sciences Po (அரசியல் அறிவியல் பல்கலைக்கழகம்) இன் பிரதான கட்டிடத்தை மாணவர்கள் குழு ஆக்கிரமித்தது. பிற்பகலில், இந்த குழு தீவிர வலதுசாரி கண்காணிப்பு குழுவால் மோசமாக தாக்கப்பட்டது.

இரவு 8:00 மணியளவில், நூற்றுக்கணக்கான ஆயுதமேந்திய போலீசார் சோர்போன் மீது முழு தாக்குதலைத் தொடங்கினர். பெரும்பாலான மாணவர்கள் சரணடைந்தனர் அல்லது தப்பினர், ஆனால் சுமார் 40 பேர் உள்ளே சிக்கிக்கொண்டனர் மற்றும் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக வெளியேற அனுமதிக்கப்படவில்லை.

அவர்களில் ஒருவர் ட்விட்டரில் பதிவிட்ட ஒரு வீடியோ கூறியது: “நாங்கள் 200 போலீஸ் மற்றும் ஜென்டார்ம்களால் சுற்றி வளைக்கப்பட்டுள்ளோம், எங்களில் சிலர் சிறார்களாக இருக்கிறோம், ஒருவருக்கு அவசர மருத்துவ உதவி தேவை. நாங்கள் முற்றிலும் அமைதியானவர்கள் மற்றும் வன்முறையற்றவர்கள். நாங்கள் அமைதியாக வெளியேற விரும்புகிறோம். நாங்கள் பூமி மாசுபடுத்தலுக்கு எதிராகவும், தீவிர வலதுசாரிக் கருத்துக்களின் எழுச்சிக்கு எதிராகவும் வெறுமனே எதிர்ப்பு தெரிவிக்கிறோம். அரசியல் கருத்துக்களை வெளியிடும் உரிமையைப் பயன்படுத்துவதன் ஒரு பகுதியே எமது நடவடிக்கை. நாங்கள் அமைதியாக வெளியேற முயற்சித்தோம், ஆனால் போலீசார் எங்களுக்கு எதிராக பலத்தை பிரயோகிக்கின்றனர்.”

சோர்போன் மீது, வன்முறை நடவடிக்கையை ஒடுக்கும் படையணி (la Brigade pour la Répression de l’Action Violente - BRAV) இல் இருந்து அதிக ஆயுதம் ஏந்திய பிரிவுகளால் மேற்கொள்ளப்பட்டது. BRAV என்பது 'மஞ்சள் சீருடை' எதிர்ப்புகளுக்கு மத்தியில் பாரிஸ் மாகாணத்தால் அமைக்கப்பட்ட ஒரு சிறப்புப் பிரிவாகும். பல்கலைக்கழகத்தைச் சுற்றியுள்ள அனைத்து தெருக்களும் தேசிய காவல்துறை, பாரிஸ் காவல்துறை மற்றும் ஜெண்டார்மேரியின் பல வாகனங்களால் சூழப்பட்டுள்ளன.

பாந்தேயோனுக்கு வெளியே ஆர்ப்பாட்டம் நடத்திய மாணவர்கள் மீது போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர் (Twitter, Mélodie Taberlet)

வியாழன் அன்று, Sciences Po வில் சுமார் 40 மாணவர்கள் அடங்கிய குழு ஒன்று பல்கலைக்கழகத்தின் பிரதான கட்டிடத்தை அமைதியான முறையில் ஆக்கிரமித்தது. பிற்பகல் 3:00 மணியளவில் இந்த குழு பல்வேறு நவ-பாசிச மாணவர் குழுக்களின் ஆர்வலர்களால் உருவாக்கப்பட்ட ஒரு கண்காணிப்புக் குழுவால் தாக்கப்பட்டது. மரின் லு பென் இன் தேசிய பேரணியுடன் தொடர்புடைய இளைஞர் குழுவான La Cocarde Étudiante இன் ட்விட்டர் பக்கம், இந்த நடவடிக்கைக்கு தலைமை தாங்கியதாகக் கூறியது.

மாணவர்கள் மீது அவர்கள் நடத்திய தாக்குதலின் வீடியோவை குழு ட்வீட் செய்து கூறியது: “எந்தவொரு குறிப்பிடத்தக்க சிரமமும் இல்லாமல் 3 நிமிடங்களில் நாங்கள் #SciencesPo முற்றுகையை முடித்துவிட்டோம். எனவே பல்கலைக்கழகங்களின் முற்றுகைகள் தொடர்வது இரண்டு விஷயங்களைக் காட்டுகிறது: நிறுவனங்களின் தலைவர்களின் கோழைத்தனம் மற்றும் அரசியல் விருப்பமின்மை.” Generation Z, பாசிச வேட்பாளர் எரிக் செமூரின் இளைஞர் இயக்கம் மற்றும் கோலிஸ்டுகளுடன் தொடர்புடைய வலதுசாரி மாணவர் குழுவான Union nationale inter-université ஆகியவற்றுடன் இணைந்து இந்த நடவடிக்கையை மேற்கொண்டதாகவும் அது கூறியது.

லு பென் மற்றும் மக்ரோனை எதிர்க்க ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டத்தை தடுக்க முயன்றபோது, புதன்கிழமை பிற்பகலில் இருந்து மாணவர்களால் சோர்போன் ஆக்கிரமிக்கப்பட்டது. வியாழன் காலை முழுவதும், நூற்றுக்கணக்கான போலீசார் பல்கலைக்கழகத்தைச் சுற்றி வளைத்தனர்.

பாரிஸில் உள்ள சோர்போன் பல்கலைக்கழகத்தின் அமைதியான ஆக்கிரமிப்பிற்கு வெளியே தாக்குதல் துப்பாக்கியுடன் ஆயுதம் ஏந்திய போலீஸ்காரர்

மத்திய பாரிஸில் உள்ள சோர்போனைச் சுற்றியுள்ள பகுதியான இலத்தீன் வட்டாரத்தில் (Quartier Latin) போலீஸ் பிரசன்னம் காலை முழுவதும் அதிகரித்தது. நண்பகலில், சோர்போனைச் சுற்றியுள்ள வீதிகள் முற்றிலுமாக சுற்றி வளைக்கப்பட்டன, மேலும் பல்கலைக்கழகத்திற்குள் மாணவர்கள் முற்றுகையிடப்பட்டனர். நூற்றுக்கணக்கான போலீசார், இயந்திர துப்பாக்கிகள், கேடயங்கள் மற்றும் முழு உடல் கவசங்களுடன் ஆயுதம் ஏந்தியிருந்தனர்.

நாள் முழுவதும், ஆக்கிரமிப்புக்கு ஆதரவாக அமைதியான போராட்டக்காரர்கள் மீது பல தாக்குதல்கள் நடத்தப்பட்டன. பிற்பகல் 1:30 மணியளவில் நூற்றுக்கணக்கான கலகத் தடுப்புப் போலீசார் பல்கலைக்கழகத்தின் பிரதான நுழைவாயிலுக்கு அருகில் உள்ள சோர்போன் சதுக்கத்தில் கூடியிருந்த கூட்டத்தை கலைத்தனர். எதிர்ப்பாளர்கள் Saint-Michel பெரு வீதிக்கு துரத்தப்பட்னர், சில நிமிடங்களுக்கு பின்னர் அவர்கள் மற்றொரு குழு கலகப் பிரிவு காவல்துறையினரால் தாக்கப்பட்டனர், போராட்டக்காரர்கள் மற்றும் வழிப்போக்கர்களை கலவரக் கவசங்கள் மற்றும் தடியடிகளால் சாலையை அகற்றினர்.

பல்கலைக்கழக ஆக்கிரமிப்புக்கு ஆதரவாக சோர்போன் சதுக்கத்தில் எதிர்ப்பாளர்கள் கூடினர் (WSWS ஊடகம்)

மாலை 6:00 மணியளவில் சோர்போன் சதுக்கம் மற்றும் சில நூறு மீட்டர் தொலைவில் உள்ள பாந்தெயோன் சதுக்கம் அருகே ஒரே நேரத்தில் புதிய கூட்டம் உருவானது. பாந்தெயோன் இல் நடந்த கூட்டம் அகதிகளைப் பாதுகாப்பதற்காக ஒரு பேரணியாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது, ஆனால் போலீஸ் சோர்போன் ஐத் தாக்கத் தயாராகிறது என்பது தெளிவாகத் தெரிந்தவுடன், நூற்றுக்கணக்கான பங்கேற்பாளர்கள் ஆக்கிரமிப்புக்கு ஆதரவாக சோர்போனுக்கு அணிவகுத்துச் செல்ல முயன்றனர்.

இரு கூட்டத்தினரையும் பலத்த ஆயுதம் தாங்கிய போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை பயன்படுத்தி வன்முறையில் கலைத்தனர். சோர்போன் இல் போராட்டக்காரர்கள் மீது BRAV பிரிவின் காவல்துறையும் இந்த தாக்குதலை நடத்தியது, அங்கு பல எதிர்ப்பாளர்கள் காவல்துறை அதிகாரிகளால் தாக்கப்பட்டனர். ஒரு காணொளி, சிவில் உடையில் இருக்கும் அதிகாரிகளால் ஒரு எதிர்ப்பாளர் தடுத்து வீழ்த்தி கைதுசெய்யப்படுவதை காட்டுகிறது. மற்றொரு காணொளியில், போராட்டக்காரர்கள் மீது போலீசார் தாக்குதல் நடத்துவதைக் காட்டுகிறது.

Protesters gather on Sorbonne square in support of university occupation (WSWS media) [Photo: WSWS]

சோர்போன் ஆக்கிரமிப்பிற்கு ஆதரவாக 1:30 மணிக்கு நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட மிஷேல் மற்றும் எட்கார் ஆகிய இரண்டு மாணவர்கள், சோர்போன் சதுக்கத்தில் இருந்தவர்களை போலீசார் துரத்தியடித்த பின்னர் WSWS உடன் பேசினார்கள்.

அவர்கள் இருவரும் முதல் சுற்றில் மெலோன்சோனுக்கு வாக்களித்தனர். அவர்கள் லு பென் மற்றும் மக்ரோனுக்கு வாக்களிப்பீர்களா என்று கேட்டபோது, மிஷேல் கூறினார்: 'ஒருபோதும் இல்லை, இது ஒரு தவறான தேர்வு. நான் வாக்களிக்கமாட்டேன்” என்றார். அவர் மேலும் கூறினார், “லு பென் ஒரு பாசிஸ்ட் மற்றும் முஸ்லிம்களுக்கு எதிரான வெளிப்படையான இனவெறி, இதை நாங்கள் அறிவோம். ஆனால் நான் மக்ரோனுக்கும் வாக்களிக்க மாட்டேன், அவர் ஒரு தாராளவாதி போல் மாறுவேடமிட்டு, முஸ்லிம்களைத் தாக்கி, பெரும்பாலான மக்களின் பொருளாதாரத்தை மோசமாக்கிய தீவிர வலதுசாரி அரசியல்வாதி.”

சோர்போனை ஆக்கிரமிப்பதற்கான மாணவர்களின் முடிவைப் பற்றி கேட்டபோது, மிஷேல், 'அவர்கள் ஒரு மாற்றத்தை செய்ய விரும்பினர், எப்படி என்று தெரியவில்லை' என்று கூறினார்.

ஆக்கிரமிப்புக்கு வழிவகுத்த சூழ்நிலையை எட்கார் விளக்கினார், “நேற்று சோர்போன் மாணவர்களுக்கான பொதுக்கூட்டம் இருந்தது, பின்னர் நிர்வாகம் காவல்துறையைக் கொண்டுவருவதாக அச்சுறுத்தியது. அவர்கள் தங்கள் சொந்த பல்கலைக்கழகத்தில் கூடியிருந்த மாணவர்களைத் தாக்கப் போவதாக அச்சுறுத்தினர், எனவே அவர்கள் ஆக்கிரமிப்புடன் பதிலளித்தனர்” என்றார்.

சோர்போன் சதுக்கத்தை அகற்றுவதில் காவல்துறையின் நடவடிக்கைகள் குறித்து கேட்டதற்கு, மிஷேல், “காவல்துறையினர் என்ன செய்கிறார்கள் என்பதைப் பாருங்கள். அது எப்படி ஜனநாயகமாகும்? நாங்கள் மக்ரோன் மற்றும் லு பென் மீது எங்கள் விரக்தியைக் காட்ட விரும்புகிறோம், மேலும் காவல்துறை வெறுமனே அடக்குமுறையுடன் பதிலளிக்கிறது. இதுதான் பிரான்ஸ்; இது ஜனநாயகம் அல்ல, இது அடக்குமுறை.”

மிஷேல் கூறுகையில், மாணவர்கள் 'மீண்டும் போராட விரும்பினர் மற்றும் மக்ரோன், லு பென் மற்றும் காவல்துறைக்கு தங்கள் ஆட்சியை எதிர்க்கிறோம் என்ற செய்தி அனுப்ப வேண்டும். … இந்த ஆக்கிரமிப்பை நாம் பரப்ப வேண்டும். இன்று காலை நான்சியில் Sciences Po மற்றும் பாரிஸில் உள்ள Sciences Po வில் படிக்கும் மாணவர்களைப் போல. நாமும் ஒரு செய்தியை அனுப்ப வேண்டும்.

மக்ரோன் அரசாங்கத்தின் கீழ் அமைதியான முறையில் எதிர்ப்புத் தெரிவிக்கும் மாணவர்களுக்கு எதிராக அரசு மற்றும் தீவிர வலதுசாரி கண்காணிப்பு குழுவின் வன்முறைகள் நடத்தப்படுகின்றன என்பது, வெளிப்படையாக நவ-பாசிச மரைன் லு பென்னுடன் ஒப்பிடும்போது தற்போதைய ஜனாதிபதி 'குறைவான தீயவர்' என்ற பொய்யை அம்பலப்படுத்துகிறது. யார் அதிகாரத்திற்கு வந்தாலும், ஆளும் வர்க்கத்தின் சிக்கன நடவடிக்கை, வெகுஜன தொற்று மற்றும் போரை எதிர்க்கும் அனைத்து இளைஞர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு எதிராக பிரெஞ்சு போலீஸ் அரசு எந்திரம் இயக்கப்படும்.

ஜனாதிபதித் தேர்தல்களை தீவிரமாகப் புறக்கணிப்பதற்காக பிரச்சாரம் செய்வதற்கும் மக்ரோன் மற்றும் லு பென் இருவரையும் நிராகரித்து தொழிலாள வர்க்கத்தில் ஒரு இயக்கத்தைக் கட்டமைப்பதற்கும் சோசலிச சமத்துவக் கட்சி (PES) விடுத்த அழைப்பின் சரியான தன்மையை இது அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. இரண்டு வேட்பாளர்களையும், முழு பிரெஞ்சு ஆளும் வர்க்கத்தையும் ஒரு சர்வதேச, சோசலிச மற்றும் புரட்சிகர முன்னோக்கின் அடிப்படையில் தொழிலாள வர்க்கத்தின் வெகுஜன இயக்கத்தால் மட்டுமே வெற்றிகரமாக எதிர்க்க முடியும்.

சோசலிச சமத்துவக் கட்சி தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் சோசலிச எண்ணம் கொண்ட புத்திஜீவிகளை திங்களன்று 'மக்ரோன்-லு பென் தேர்தலை தொழிலாள வர்க்கம் புறக்கணி' என்ற இணையவழி கூட்டத்தில் பங்கேற்க அழைக்கிறது.

Loading