பிரெஞ்சு ஜனாதிபதி தேர்தலில், கிட்டத்தட்ட வெற்றியை எட்டிய பின்னர் மெலோன்சோன் ஏன் பின்வாங்குகிறார்?

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

ஞாயிறு மாலை 8 மணியளவில், பிரெஞ்சு ஜனாதிபதித் தேர்தலின் முதல் சுற்று இன்னும் சமநிலையில் உள்ள நிலையில், அடிபணியா பிரான்ஸ் (LFI) கட்சியின் ஜோன்-லூக் மெலோன்சோன், பிரான்சின் பிற்போக்குத்தனமான தற்போதைய ஜனாதிபதியான இமானுவல் மக்ரோனின் வெற்றியை ஒப்புக்கொள்ளவும் ஆமோதிக்கவும் விரைந்தார். சிறிது நேரத்திற்குப் பின்னர், அவரது அமைப்பான அடிபணியா பிரான்ஸ், அவர் இனி குடியரசுத் தலைவர் பதவிக்கு வேட்பாளராக இருக்க மாட்டார் என அறிவித்தது.

அசாதாரணமான நேரத்தில் இந்த அறிவிப்பு வெளிவந்தது. பாரிஸ் பகுதியில் உள்ள மில்லியன் கணக்கான மெலோன்சோன் வாக்குகள் எண்ணப்பட்டுக் கொன்டிருக்க, நவ- பாசிச வேட்பாளர் மரீன் லு பென்னை விட 300,000 குறைவான வாக்குகள் மட்டுமே பின்தங்கியிருந்த மெலோன்சோன் 22 சதவீத வாக்குகளை பெறுவார் என்ற நிலையில், அவர் உடனடியாக தனது தோல்வியை ஒப்புக்கொண்டு, லு பென்னுக்கு எதிராக மக்ரோனை ஆதரிக்க அழைப்பு விடுத்தார். சுழன்று கொண்டிருந்த தொலைக்காட்சி கேமராக்களுக்கு முன்னால், 'திருமதி லு பென்னுக்கு நாம் ஒரு வாக்கு கூட கொடுக்கக்கூடாது' என அவர் திரும்பத் திரும்ப கோஷமிட்டார்.

மாலையில், பாரிஸ் பகுதி வாக்குகள் எண்ணப்பட்டுக் கொன்டிருக்கும்போது, மெலோன்சோனின் வாக்குகள் அதிகரித்து சென்றன. மெலோன்சோன், லு பென்னை தோற்கடித்து, மக்ரோனுக்கு எதிரான இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளாரா என்பது திங்கட்கிழமை அதிகாலை 1 மணி வரை தெளிவாகவில்லை. இந்த நிலைமையில், தோல்வியை ஒப்புக்கொள்ள LFI முடிவு செய்து, அதன் தலைவர் மற்றும் ஜனாதிபதி வேட்பாளரின் ஓய்வு குறித்து அறிவித்தது வியக்கத்தக்க வகையில் சுய அழிவுகரமானது.

மெலோன்சோன் தோற்றுவிட்டார், பிரச்சினை தீர்க்கப்பட்டது என்று வாதிடுவது அரசியல் சூழ்நிலையை பொய்யாக்குவதாகும். புறநிலையாக பார்க்கும்போது LFI, மிகவும் சக்திவாய்ந்த நிலையில் உள்ளது. இக்கட்சி, பாரிஸ், மார்சைய் மற்றும் துலூஸ் உட்பட, பிரான்சின் இளைஞர்களையும் தொழிலாள வர்க்கத்தின் சுற்றுப்புறங்களையும் கொண்டுள்ள 16 பெரிய நகரங்களில், 10 இல் 7.7 மில்லியன் வாக்குகளை பெற்றுள்ளது. பிரான்சின் 'செல்வந்தர்களின் ஜனாதிபதி' அல்லது முதல் நவ-பாசிச பெண் ஜனாதிபதிக்கு எதிராக வெடிக்கும் வேலைநிறுத்தங்கள் மற்றும் எதிர்ப்புக்களில், இந்த சக்திகள் முக்கிய பங்கு வகிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

ஜோன்-லூக் மெலோன்சோன் ஜூன், 2013. (Photo by Pierre-Selim) [Photo]

இந்த நிகழ்வுகள், LFI மற்றும் மெலோன்சோனின் கோழைத்தனமான, குட்டி முதலாளித்துவ குணாம்சத்தை வெளிப்படுத்துகின்றன. LFI மற்றும் பிரான்சில் இதேபோன்ற போலி-இடது கட்சிகளை, தொழிலாள வர்க்கத்தை நோக்கி தகவமைந்த ட்ரொட்ஸ்கிச கட்சியிலிருந்து பிரிக்கும் வர்க்க பிளவும் இந்த நிகழ்வுகளில் வெளிப்படுகிறது. LFI தனது வாக்குகளை ஒருங்கிணைத்து தொழிலாள வர்க்கத்தில் ஒரு இயக்கத்தை கட்டியெழுப்புவதற்கு பதிலாக, கட்டமைக்கப்பட்ட அனைத்து பலத்தையும் தூக்கியெறிந்துவிட்டு, மக்ரோனுடன் படுக்கைக்கு செல்ல LFI தீவிரமாக உள்ளது.

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் (ICFI) பிரெஞ்சுப் பிரிவான சோசலிச சமத்துவக் கட்சி (PES) மக்ரோன்-லு பென் இடையேயான தேர்தல் போட்டியை செயலூக்கத்துடன் புறக்கணிக்க அழைப்பு விடுத்துள்ளது. எந்த வேட்பாளர் வெற்றி பெற்றாலும் தொழிலாள வர்க்கத்தை வன்முறையில் தாக்கும் தீவிர வலதுசாரி அரசாங்கத்தை அமைப்பார்கள். இந்தத் தேர்தல்களில் வாக்களிக்க வேண்டாம் என்றும், 'செல்வந்தர்களின் ஜனாதிபதி' மற்றும் பிரான்சில் நன்கு அறியப்பட்ட நவ-பாசிஸ்டுகளுக்கு இடையே உள்ள நச்சுத் தேர்வை நிராகரிக்குமாறும், எந்த வேட்பாளர் வென்றாலும் தொழிலாள வர்க்கத்தில் ஒரு புரட்சிகர இயக்கத்தைக் கட்டியெழுப்ப பிரச்சாரம் செய்யுமாறும் தொழிலாளர்களுக்கும் இளைஞர்களுக்கும் சோசலிச சமத்துவக் கட்சி அழைப்பு விடுக்கிறது.

மறுபுறம் மெலோன்சன் மற்றும் LFI, அதிர்ச்சியுடனும் திகிலுடனும் தெளிவாக தேர்தல் முடிவுகளுக்கு எதிர்வினையாற்றினர். மார்ச் மாத இறுதியில், வாக்கெடுப்பில் மெலோன்சோன் இன்னும் 11 சதவீத கருத்துக்கணிப்பு வாக்குகளில் இருந்தபோது, அவர் மார்சையில் ஒரு பிரச்சார உரையை நிகழ்த்தினார், அதில் அவர் 70 வயதை எட்டினாலும், பிரெஞ்சு அரசியல் வாழ்க்கையில் தொடர்ந்து செயலில் பங்கு வகிக்க விரும்புவதாகக் குறிப்பிட்டார். தற்போதைய தேர்தல்கள் முடிவடைந்த பின்னர், 'சந்தேகமின்றி மற்ற பிரச்சாரங்களில் ஈடுபடுவேன்' என்றும் மெலோன்சோன் கூறினார்.

எவ்வாறாயினும், தேர்தலுக்கு முந்தைய இரண்டு வாரங்களில் அவரது பிரச்சாரத்திற்கு திரளான தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் அணிதிரண்ட பின்னரும்கூட, அவரது அரசியல் எதிர்காலத்திற்கான மெலன்சோனின் உற்சாகம் ஆவியாகிவிட்டது. ஞாயிற்றுக்கிழமை இரவு தனது ஆதரவாளர்களிடம் பேசிய அவர், திடீரென்று மிகவும் வலுவான தேர்தல் நிலையில் இருப்பதைக் கண்டார். அவர் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறலாம் என்றிருந்தபோது, மெலோன்சோன் ஆழ்ந்த அவநம்பிக்கை மற்றும் ஊக்கமிழந்து காணப்பட்டார்.

அவரது தோல்வியை அறிவித்த பின்னர், மெலோன்சோன் சிசிஃபஸின் (Sisyphus) கிரேக்க புராணக் கதையில் வரும் ஒரு தெளிவற்ற குறிப்பைக் கொடுத்து, தனது ஆதரவாளர்களின் கோபத்தைப் பற்றிய தனது பயத்தை வெளிப்படுத்தினார். அவர் பின்வருமாறு கூறினார், “சிசிஃபஸின் புராணக் கதையில் நிறைவேற்றப்பட்ட ஒரே பணியை நமக்கு நாமே எடுக்க வேண்டும். கல் மலையிலிருந்து பள்ளத்தாக்கின் அடிப்பகுதியில் விழுகிறது. நாங்கள் அதை மீண்டும் மேலே கொண்டு செல்கின்றோம். உங்கள் கோபத்தை நான் அறிவேன், அது உங்களை சரிசெய்ய முடியாத தவறுகளில் சிக்க வைக்க அனுமதிக்காதீர்கள். வாழ்க்கை தொடரும் வரை, சண்டையும் தொடரும்.”

சிசிஃபஸின் புராணக் கதை பற்றிய மெலோன்சோனின் தெளிவற்ற குறிப்பு ஒருவேளை அவர் நினைத்ததை விட அதிகமாக கூறியிருக்கலாம். இந்த புராணக்கதையில், சிசிஃபஸ் பாதாளத்திலிருந்து ஒரு கனமான கல்லை ஒரு மலையின் மேல் உருட்டுமாறு தண்டிக்கப்படுகிறார், ஆனால், கல் எப்போதும் உச்சியை அடையும்போதே கீழே உருண்டு விழும். நாம் கேட்க வேண்டியது: மெலோன்சோன் ஏன் ஒருவர் தனது இலக்கை அடையும்போது தோல்வியடைவதை, LFI உறுப்பினர்களையும் ஆதரவாளர்களையும் கடவுள்களால் விதி என்று சபிக்கப்பட்ட ஒரு மனிதனுடன் ஒப்பிடுகிறார்?

மெலோன்சோனால் மதிக்கப்படும் நிதியப் பிரபுத்துவம், மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் LFIக்கு வாக்களித்து, மலை உச்சியை அடைந்த பின்பு, உச்சியில் இருந்து அவர்களை தள்ளியதில் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. பில்லியனர் டசோ பேரரசில் உள்ள மெலோன்சோனின் கூட்டாளிகள் முதல் LFI தலைமை வரை ஆளும் ஸ்தாபகத்தில் உள்ள அனைவரையும் கையாளும் விதிமுறைகள் தெரியும் என்பதால், LFI மற்றும் மெலோன்சோன் ஊடகங்கள் மற்றும் அரசு பதவிகளுக்கான அணுகலைப் பெறுகின்றனர். தேர்தலில் தேர்ந்தெடுக்கப்படுவதிலிருந்து மெலோன்சோன் தோல்வியடைய வேண்டும், அவரை ஆதரிக்கும் தொழிலாளர்கள் தேர்தல்களில் ஏமாற்றம், மனச்சோர்வு மற்றும் செயலற்ற நிலையில் இருந்து வெளியே வரவேண்டும்.

தேர்தல் நடந்த இரவு, அவரது ஆதரவாளர்களின் கோபத்தைப் பற்றிய மெலோன்சோனின் பயம், அவர் பெற்ற வெகுஜன ஆதரவு இந்த உடன்படிக்கையை உடைக்க அச்சுறுத்துகிறது என்ற உண்மையிலிருந்து உருவாகிறது. ஒரு இடதுசாரி கொள்கைக்கு வெகுஜன ஆதரவு தெளிவாக உள்ளது, மேலும் தீவிரமான கோரிக்கைகள் அவருக்கு நகரங்களில் மட்டுமல்ல, இப்போது லு பென்னுக்கு வாக்களித்துள்ள சிறு நகரங்களிலும் ஆத்திரம்கொண்ட தொழிலாளர்களிடமிருந்தும் ஆதரவு இருக்கிறது. மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் தேர்தலில் இருந்து ஏமாற்றம் மற்றும் தனிமைப்படுத்தப்பட மாட்டார்கள், ஆனால் மெலோன்சோன் இடதுசாரி அரசியலைத் தொடரலாம் மற்றும் ஜனாதிபதியாகக் கூட ஆகலாம் என்ற எதிர்பார்ப்புடன் பலப்படுத்தப்பட்டனர். மெலோன்சோனால் அதை பொறுத்துக்கொள்ள முடியாது.

ஒரு குறிப்பிடத்தக்க வேகத்துடன், மூன்றாம் இடத்தை விட சிறப்பாக செயல்படுவார் என அவரது ஆதரவாளர்கள் எதிர்பார்த்தால், அவர்களை விட்டுவிடுவேன் என்று கடுமையாக மிரட்டினார்: 'நிச்சயமாக இளையவர்கள் என்னிடம் சொல்வார்கள், எனவே நாங்கள் இன்னும் அங்கு வரவில்லை, இது வெகு தொலைவில் இல்லை என்று நீங்கள் நினைக்கிறீர்கள், இல்லையா? சரி, நீங்களே சிறப்பாக செய்யுங்கள், நன்றி, என்று கூறினார்.

இந்த எரிச்சலூட்டும் கருத்தைப் பற்றி கேட்கப்பட்டதற்கு, LFI அதிகாரிகள் இராஜதந்திர ரீதியாக ஊடகத்திடம், மெலோன்சோன் மீண்டும் போட்டியிட மாட்டார் என்பதால், LFI ஜனாதிபதி வேட்பாளரின் வேலையை ஏற்க இளைய தலைமுறையினரை மெலோன்சோன் அழைக்கிறார் என்று கூறினார். Le Parisien இடம் பேசுகையில், அரசியலை விட்டு வெளியேறிய பின்னர், அவர் ஒரு பெரிய மூலதனத்துடன் La Boétie நிறுவனம் என்ற ஒரு அறக்கட்டளையை திறக்கலாம் என்று அவர்கள் ஊகித்துள்ளனர். இந்த அறக்கட்டளை, 'அரசியல் பணியாளர்கள், உயர் பதவியில் உள்ள அரசாங்க அதிகாரிகளுக்கு பயிற்சி அளிப்பது மற்றும் சர்வதேச விவாதங்கள் மற்றும் முன்முயற்சிகளை' தொடங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

நேற்று, LFI வட்டாரங்கள் இந்தக் கருத்துக்களைத் திரும்பப் பெற்றன. ஜூன் 12 சட்டமன்றத் தேர்தல்களில் போட்டியிடுவது குறித்து மெலோன்சோன் பரிசீலித்து வருவதாகவும், அங்கு ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னர் பிரச்சாரம் தொடங்கும் என்றும், மற்ற தேர்தல்களிலும் போட்டியிடலாம் என்றும் LFI கூறியது. உண்மையில், மெலோன்சோனின் ஓய்வு ஒரு வலதுசாரி அல்லது நவ-பாசிச ஜனாதிபதி பதவிக்கு வரும் வரை மட்டுமே நீடிக்கும் என்று தெரிகிறது.

மெலோன்சனின் இடத்தில் ஒரு ட்ரொட்ஸ்கிசக் கட்சி இருந்திருந்தால், ரஷ்யாவுடனான நேட்டோ போரின் ஆபத்து, தொழிலாளர்களின் வாழ்க்கையை நாசமாக்குகின்ற வேகமாக அதிகரித்து வரும் எரிசக்தி மற்றும் உணவுப் பொருட்களின் விலைகள், கோவிட்-19 தொற்றுக்கு எதிராகப் போராடுவதில் மக்ரோனின் தோல்வி என்பனவற்றுக்கு எதிராக, போராட்டங்கள் மற்றும் வேலைநிறுத்தங்களை நடத்த அதன் மில்லியன் கணக்கான வாக்காளர்களை அழைத்திருக்கும். இத்தகைய வேலைநிறுத்தங்கள், பிரான்சின் பெரும்பாலான முக்கிய நகரங்களில் தொழிலாளர்களின் பரந்த பிரிவுகளை அணிதிரட்டி, பிரெஞ்சு பொருளாதாரத்தை விரைவாக கட்டுப்படுத்தியிருக்கும். போர், பெருந்தொற்றுநோய் மற்றும் மக்களின் வறுமைக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தின் சக்திவாய்ந்த, சர்வதேசப் போராட்டத்திற்கான தொடக்கப் புள்ளியாக இந்த போராட்டம் அமைந்திருக்கும்.

மெலோன்சோன் ஒரு ட்ரொட்ஸ்கிஸ்ட் அல்ல. இருப்பினும், முன்னாள் சமூக-ஜனநாயக அமைச்சரும், மார்க்சிச எதிர்ப்பு 'இடது ஜனரஞ்சகவாதியுமான' அவர், சோசலிசப் புரட்சியை நிராகரிக்கும் ஒரு நடுத்தர வர்க்கக் கட்சியை வழிநடத்துகிறார். தொழிலாள வர்க்கம் அல்ல மாறாக, 'மக்களின் சகாப்தம்' என்று அவர் பிரகடனப்படுத்துகிறார். எனவே, போர், சிக்கன நடவடிக்கை அல்லது தொற்றுநோய்க்கு எதிராக தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டுவதை மெலோன்சோன் எதிர்க்கிறார்.

மெலோன்சோன் ஜனாதிபதித் தேர்தல்களில் செயலற்றவராக இருக்கவில்லை. மாறாக, மேலும், பெரும் செல்வந்தர்களின் பிரதிநிதிகளுடன் இரகசியப் பேச்சுக்களில் திரைக்குப் பின்னால் பணியாற்றி வருகின்றார். நேற்று ஒரு பிரச்சார இடத்தில் இருந்த மக்ரோன், மெலன்சோனுடன் குறுஞ்செய்திகளைப் பரிமாறிக் கொண்டிருப்பதாக கூறினார். ஆனால், இது ஒரு தனிப்பட்ட விவாதம் என்று கூறிய அவர், அவர்கள் விவாதித்த விடயத்தைக் கூற மறுத்துவிட்டார்.

குறிப்பிடத்தக்க வகையில், மக்ரோனுக்கு வாக்களிக்க தனது வாக்காளர்களுக்கு அழைப்பு விடுவதற்கு முன், மக்ரோனிடம் என்ன நிபந்தனைகளைக் கோருவார் என்பது குறித்து திவாலான பேரத்திலும் கூட மெலோன்சோன் ஈடுபடவில்லை. தொழிலாளர்களுக்கு எதிராக மக்ரோன் என்ன நடவடிக்கை எடுப்பார் என்பதிலும்கூட அவர் வரம்புகளை வைக்கவில்லை. மாறாக, பிரான்சின் பரவலாக வெறுக்கப்பட்ட 'செல்வந்தர்களின் ஜனாதிபதிக்கு' கை, கால் கட்டப்பட்ட தனது வாக்காளர்களை வழங்க அவர் திட்டமிட்டுள்ளார்.

இந்த முழு அத்தியாயமும், வெடிக்கும் தொழிலாள வர்க்க எதிர்ப்பை பிளவுபடுத்தி நசுக்கும் பிற்போக்குத்தனமான பிரெஞ்சு ஆளும் உயரடுக்கின் அரசியல் பொறிமுறையை மிகத் தெளிவாக விளக்குகிறது. மேலும், தொழிலாள வர்க்கத்தின் கோபம் அதிகரித்துள்ள நிலைமையில், மக்ரோன் அல்லது லு பென் போன்ற வலதுசாரி வேட்பாளர்களை நிறுவ, அது நிர்வகிக்கிறது.

தொழிலாள வர்க்கம் மற்றும் இளைஞர்களிடையே ஒரு இடதுசாரி, புரட்சிகர கொள்கைக்கு சக்திவாய்ந்த அடித்தளம் உள்ளதையும், அதனை அணிதிரட்ட முடியும் என்பதனையும் சோசலிச சமத்துவக் கட்சியினுடைய பகுப்பாய்வின் சரியான தன்மை உறுதிப்படுத்துகிறது. LFI போன்ற போலி-இடது கட்சிகள், தொழிலாளர்களின் இந்த எதிர்ப்பை அணிதிரட்ட முடியாது மற்றும் செய்ய முடியாது என்பதால், சோசலிச சமத்துவக் கட்சியின் செயலூக்கமிக்க புறக்கணிப்பு பிரச்சாரத்தை ஆதரிப்பது, மக்ரோன் மற்றும் லு பென் இருவருக்கும் எதிராக தொழிலாளர்களை அணிதிரட்டுவது மற்றும் LFI க்கு மாற்றாக சோசலிச சமத்துவக் கட்சியை கட்டமைப்பது மிகவும் அவசியமானது.

Loading