இலங்கையின் இராஜபக்ஷ அரசாங்கத்தை வீழ்த்து! நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழித்திடு! சிக்கன நடவடிக்கையும் பட்டினியும் வேண்டாம்! அனைவருக்கும் உணவு, எரிபொருள் மற்றும் மருந்துகளைப் பெறக்கூடிய ஒரு சோசலிச வேலைத்திட்டத்திற்காகப் போராடுவதற்கு நடவடிக்கைக் குழுக்களை உருவாக்கு!

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

இலங்கை முழுவதும் இலட்சக்கணக்கான உழைக்கும் மக்கள் தாங்கள் எதிர்கொள்ளும் பாரிய கஷ்டங்களுக்கு நேரடி பொறுப்பாளியான ஜனாதிபதி கோட்டாபய இராஜபக்ஷ மற்றும் அவரது முதலாளித்துவ அரசாங்கத்தை உடனடியாக இராஜினாமா செய்யக் கோரி வீதிகளில் இறங்கி உள்ளனர். இராஜபக்ஷ பதவி விலகவோ அல்லது தனது அரசாங்கத்தை கலைக்கவோ போவதில்லை என விடாப்பிடியாக அறிவித்துள்ளார். பாராளுமன்ற பெரும்பான்மையை இழந்தாலும், தான் ஜனாதிபதியாக இருப்பேன் என்றும் இராணுவம் மற்றும் பொலிஸ் மீதான கட்டுப்பாட்டை தக்கவைத்துக் கொள்வேன் என்றும் அவர் அகம்பாவமாக அறிவித்துள்ளார்.

6 ஏப்ரல் 2022 அன்று கொழும்பின் புறநகர்ப் பகுதியான ஹோமாகமவில் நடைபெற்ற மறியல் போராட்டத்தின் போது சோசலிச சமத்துவக் கட்சியின் சுலோக அட்டைகளை ஏந்தியிருக்கும் ஆசிரியர்கள் [WSWS Media] [Photo: WSWS]

சோசலிச சமத்துவக் கட்சி, 'கோட்டா போக வேண்டும்!' என்ற உழைக்கும் மக்களின் கோரிக்கைகளுக்குப் பின்னால் நேரடியாக நிற்கிறது. ஆனால் அவருக்கு பதிலாக வரப்போவது என்ன? இராஜபக்ஷவை பதவி நீக்கம் செய்யக் கோருவது மட்டும் போதாது. முதலாளித்துவ வர்க்கத்தின் செல்வம் மற்றும் நலன்களைப் பாதுகாப்பதற்கும், தீவு முழுவதிலும் உள்ள தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் சுரண்டப்படுவதையும் வறுமையையும் உறுதிப்படுத்த ஒழுங்கமைக்கப்பட்ட மோசடியான மற்றும் பிற்போக்கான ஜனாதிபதி ஆட்சி முறையின் இன்றைய அசிங்கமான முகம் அவர் மட்டுமே.

சோசலிச சமத்துவக் கட்சி, தற்போதைய அரசியல் நெருக்கடியைத் தீர்ப்பதற்கான ஒரு முக்கிய படியாக, அதன் பரந்த எதேச்சதிகார அதிகாரங்களுடன், தொழிலாள வர்க்கத்தின் தலைக்கு நேராக துப்பாக்கியை நீட்டிக்கொண்டிருக்கும் நிறைவேற்று ஜனாதிபதி முறையை உடனடியாக ஒழிக்கக் கோருகிறது. 1978ல் ஜே.ஆர். ஜெயவர்தனவினால், பதவியில் இருப்பவர் எவரேனும் முதலாளித்துவ உயரடுக்கின் விருப்பத்தை எதேச்சதிகாரமாக திணிக்கக்கூடிய நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை, ஸ்தாபிக்கப்பட்டதில் இருந்தே தொழிலாளர்கள், ஏழைகள் மற்றும் கிராமப்புற மக்களின் ஜனநாயக மற்றும் சமூக உரிமைகளை ஈவிரக்கமின்றி நசுக்கப் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

கடந்த வாரம், மீண்டும் தனது ஜனாதிபதி அதிகாரங்களை பயன்படுத்திய இராஜபக்ஷ, அவசரகால நிலையை பிரகடனப்படுத்தி, ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்தியதோடு பொலிஸ், இராணுவம் மற்றும் கவச வாகனங்களை வீதிகளில் இறக்கி, வெகுஜன போராட்டங்களை தடுப்பதற்கான அவநம்பிக்கையான முயற்சியில் ஈடுபட்டார். பல்லாயிரக்கணக்கான உழைக்கும் மக்கள் தைரியமாக அச்சுறுத்தலை மீறியதால் அவர் தோல்வியடைந்தார்.

எவ்வாறாயினும், இராஜபக்ஷ தனது நேரத்தை ஏலம் விட்டுக்கொண்டிருக்கிறார். அவரால் முன்னெச்சரிக்கை இல்லாமல் அவசரகால ஆட்சியை மீண்டும் அமுல்படுத்தவும் மீண்டும் இராணுவத்தை அணிதிரட்டவும் முடியும். அவரால் தொழிற்சங்க நடவடிக்கையை தடை செய்யவும், அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகளை தடை செய்யவும், ஊடகங்களை தணிக்கை செய்யவும் மற்றும் எதேச்சதிகராமாக தனிநபர்களை கைது செய்து காவலில் வைக்வும் முடியும். ஜனாதிபதி பதவியே ஒழிக்கப்பட வேண்டும். கோட்டாபயவுடன் சேர்த்து நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையும் அரசாங்கத்தின் கைகளில் கைகளில் உள்ள ஒரு தொகை ஜனநாயக விரோதச் சட்டங்களும் அகற்றப்பட வேண்டும்.

பொதுத்துறை ஊழியர்களின் வேலைநிறுத்தங்களை குற்றமாக்க பயன்படுத்தப்படும் அத்தியாவசிய பொது சேவைகள் சட்டத்தை இரத்துச் செய்யுமாறு சோசலிச சமத்துவக் கட்சி கோருகிறது. பாதுகாப்புப் படையினருக்கு பொலிஸ் அரச அதிகாரங்களை வழங்கும் பொதுப் பாதுகாப்புச் சட்டத்தையும் பேர்போன பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தையும் நீக்குமாறு நாங்கள் கோருகிறோம்.

தொழிலாள வர்க்கம், கிராமப்புற ஏழைகள் மற்றும் இளைஞர்களின் உறுதியான போராட்டத்தின் மூலம் மட்டுமே அடையக்கூடிய இந்த இன்றியமையாத ஜனநாயக அரசியல் மாற்றங்களின் நோக்கம், சோசலிச வழிகளில் பொருளாதாரத்தின் அடிப்படை மறுசீரமைப்பை முன்னெடுப்பதே ஆகும் என்று சோசலிச சமத்துவக் கட்சி வலியுறுத்துகிறது.

அரசாங்கம் மற்றும் எதிர்க்கட்சிகளும் முன்வைக்கும் சிக்கனத் திட்டத்திற்கு எதிராக, தொழிலாள வர்க்கம் அதன் சமூக சக்தியை அணிதிரட்டுவதற்கும், பிரமாண்டமான சமூக மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு அதன் சொந்த தீர்வை அமுல்படுத்தவும் ஒரு வேலைத்திட்டத்தை நாங்கள் மேம்படுத்தி வருகிறோம். இந்த பொருளாதார நெருக்கடி மனித தேவைகளுக்கு மேலாக முதலீட்டாளர்களின் இலாபத்துக்கு முன்னுரிமை கொடுக்கன்றது.

உழைக்கும் மக்கள் மீது மேலும் பயங்கரமான சுமைகளைத் திணிப்பதைத் தவிர, எல்லா இடங்களிலும் உள்ள முதலாளித்துவ அரசாங்கங்களுக்கு வேறு பதில் கிடையாது. இது மத்திய கிழக்கு, ஆபிரிக்கா மற்றும் இலத்தீன் அமெரிக்கா மற்றும் அமெரிக்கா உட்பட பிரதான ஏகாதிபத்திய மையங்களில் வர்க்கப் போராட்டத்தை தூண்டிவிட்டுக்கொண்டிருகிறது. இலங்கையில் தொழிலாளர்கள் தங்கள் போராட்டங்களில் தனியாக இல்லை. தொழிலாளர்கள் பரஸ்பர உதவிக்காக சர்வதேச அளவில் தங்கள் வர்க்க கூட்டாளிகளின் பக்கம் திரும்ப முடியும். முதல் எடுத்துக் காட்டாக கடந்த வாரம் மோடி அரசாங்கத்தின் சிக்கன நடவடிக்கை மற்றும் தனியார்மயமாக்கல் திட்டநிரலுக்கு எதிராக இரண்டு நாள் பொது வேலைநிறுத்தத்தை நடத்திய இந்திய தொழிலாளர்களின் பக்கம் திரும்ப வேண்டும்.

6 ஏப்ரல் 2022 அன்று பேராதனை கலஹா சந்தியில் மாணவர்கள் நடத்திய போராட்டம் [WSWS Media] [Photo: WSWS]

என்ன செய்ய வேண்டும்? இலங்கை முதலாளித்துவ வர்க்கம், தொழிலாளர்கள் மற்றும் ஏழைகளின் சமூகத் தேவைகள் எதனையும் நிவர்த்தி செய்வதில் முற்றிலும் திறனற்றது. அவர்களின் இலாபமும் செல்வமும் பணயத்தில் இருக்கும்போது எந்த விதமான கெஞ்சல் அல்லது அழுத்தம் கொடுத்தல் அவர்களின் போக்கை மாற்றாது.

தொழிலாள வர்க்கம் கடந்த இரண்டு ஆண்டுகளாக வெகுஜன வேலைநிறுத்தங்கள் மற்றும் எதிர்ப்பு அலைகளை நசுக்குவதில் துரோக பாத்திரத்தை ஆற்றிய தொழிற்சங்கங்கள் மற்றும் முதலாளித்துவத்தின் அனைத்து பிரிவுகளிலிருந்தும் இருந்தும் விலகி தனது சுயாதீனமான சொந்த அமைப்புகளை ஸ்தாபித்தால் மட்டுமே, அதன் தேவைகளுக்காகப் போராட முடியும்.

சோசலிச சமத்துவக் கட்சி, தொழிலாள வர்க்கத்தின் சுய-அமைப்புக்கான முதல் படியாக நடவடிக்கைக் குழுக்களை அமைக்குமாறு அழைப்பு விடுக்கிறது. மற்ற தொழிலாளர்களையும் அவ்வாறே செய்ய நாம் அழைக்கிறோம். நாடு முழுவதும் உள்ள தொழிற்சாலைகள், வேலைத் தளங்கள், பெருந்தோட்டங்கள் மற்றும் தொழிலாள வர்க்க சுற்றுப்புறங்களில் சுயாதீனமான, ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட நடவடிக்கைக் குழுக்களை அமையுங்கள். தொழிலாள வர்க்கத்தின் இத்தகைய போராட்ட அமைப்புகளை கட்டியெழுப்புவதற்கு அனைத்து அரசியல் உதவியையும் நாங்கள் வழங்குகிறோம்.

முதலாளித்துவவாதிகள் தங்களது தேசிய அரசுகள் மற்றும் தனியார் சொத்துக்களுக்குள் சுகபோகத்தை அனுபவிப்பதன் பேரில், தொழிலாள வர்க்கம் அதன் வயிற்றை இறுக்கிக் கட்டிக்கொள்ளக் கூடாது என்று சோசலிச சமத்துவக் கட்சி வலியுறுத்துகிறது. மாறாக சமூக மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு அதன் சொந்த வர்க்கத் தீர்வை முன்வைக்க வேண்டும்.

வெகுஜனங்களின் அவசர தேவைகளை நிவர்த்தி செய்வதற்கு, நடவடிக்கைக் குழுக்களின் பணியை வடிவமைக்க பின்வரும் வேலைத்திட்டம் மற்றும் கொள்கைகளை நாங்கள் முன்மொழிகிறோம்:

* மக்களின் வாழ்க்கைக்கு தீர்க்கமாக தேவைப்படும் அனைத்து அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் பிற வளங்களின் உற்பத்தியும் விநியோகமும் தொழிலாளர்களின் ஜனநாயகக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும்! வங்கிகள், பெரும் நிறுவனங்கள், பெருந்தோட்டங்கள் மற்றும் ஏனைய பிரதான பொருளாதார மையங்களை தேசியமயமாக்கு!

முதலாளித்துவ வர்க்கம் அதன் உற்பத்தி மற்றும் விநியோகச் சாதனங்களின் உரிமையைப் பயன்படுத்தி மிகப் பெரும் இலாபங்களைக் குவிக்கிறது. தொழிலாள வர்க்கம் அதன் அத்தியாவசியத் தேவைகளைப் பெறுவதற்கான ஒரே வழி, முதலாளிகளின் கைகளில் இருந்து அவற்றைப் பெறுவதும், தற்போதைய துன்பங்களையும் துயரங்களையும் முடிவுக்குக் கொண்டுவருவதற்குப் பயன்படும் வகையில் வளங்களின் பட்டியலை உருவாக்குவதே ஆகும்.

* அனைத்து வெளிநாட்டுக் கடன்களையும் தள்ளுபடி செய்! சர்வதேச வங்கியாளர்கள் மற்றும் நிதி நிறுவனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் சிக்கனக் கோரிக்கைகளை நிராகரி!

இராஜபக்ஷ அரசாங்கம் அதன் கடுமையான சிக்கன நடவடிக்கைகளுக்கு காரணமாக, உலகளாவிய வங்கியாளர்களுக்கு பில்லியன் கணக்கான டாலர்களை திருப்பிச் செலுத்த வேண்டியிருப்பதாக கூறுகின்றது. எதிர்க் கட்சிகளும் இதை ஒப்புக்கொள்கின்றன. இந்த ஆண்டு செலுத்த வேண்டிய 7 பில்லியன் அமெரிக்க டாலர்கள் சர்வதேச வங்கிகளின் கருவூலங்களுக்குச் செல்வதற்குப் பதிலாக, அது உழைக்கும் மக்களுக்குத் தேவையான உணவு, எரிபொருள், மருந்துகள் மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களுக்குப் பயன்படுத்தப்பட வேண்டும்.

* பில்லியனர்கள் மற்றும் கூட்டுத்தாபனங்களின் பெரும் செல்வத்தை கைப்பற்று!

உலக சமத்துவமின்மை தரவுத் தளத்தின் படி, 2021 இல் இலங்கை சமூகத்தின் 10 வீதமான செல்வந்தர்கள், தீவின் மொத்த செல்வத்தில் பாரியளவான 63.8 வீதத்தை தம்வசம் வைத்திருக்கும் அதேவேளை, கீழ்மட்டத்தில் உள்ள 50 வீதமானவர்கள் வெறும் 4.3 வீதத்தையே பகிர்ந்துகொள்கின்றனர். தொழிலாள வர்க்கத்தால் உருவாக்கப்பட்ட இந்தப் பரந்த செல்வம் சமூகத் தேவையின் அடிப்படையில் கைப்பற்றப்பட்டு விநியோகிக்கப்பட வேண்டும்.

* ஏழை மற்றும் சிறு விவசாயிகள் மற்றும் சிறு வியாபாரிகளின் அனைத்து கடன்களையும் இரத்து செய்! விவசாயிகளுக்கு உர மானியம் உட்பட அனைத்து மானியங்களையும் மீண்டும் வழங்கு!

தங்களை நசுக்கும் பொருளாதாரப் பிரச்சனைகளில் இருந்து விடுபட ஒரு வழியை வழங்குவதன் மூலம், தொழிலாள வர்க்கமானது ஒடுக்கப்பட்ட கிராமப்புற மக்களுக்கும், அதிக கடன், விலையுயர்ந்த உள்ளீடுகள் மற்றும் அவர்களின் அத்தியாவசியத் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியாத விலைகளால் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும் சிறு வியாபாரிகளுக்கும் அணிதிரள்வதற்கு ஒரு ஈர்ப்பு துருவமாக மாறும்.

* கண்ணியமான மற்றும் பாதுகாப்பான வேலை நிலைமைகளுடன் அனைவருக்கும் தொழில் உத்தரவாதம் வேண்டும்! வாழ்க்கைச் செலவுப் புள்ளிக்கு ஏற்ப ஊதியம் வேண்டும்!

சர்வதேச நாணய நிதியம் மற்றும் சர்வதேச வங்கியாளர்களின் கோரிக்கைக்கு அடிபணிந்தால், மலைபோல் தொழில் அழிப்பு நடக்கும். பணவீக்கம் ஏற்கனவே அபரிமிதமாக அதிகரித்து, சம்பளத்தை விழுங்கிவிட்டது. விடயங்களை தொழிற்சங்கங்களின் கைகளில் விட்டு வைத்தால், பல ஆண்டுகளாக நடந்தது போலவே வேலைகள், ஊதியங்கள் மற்றும் நிலைமைகள் பேரம் பேசப்பட்டு அழிக்கப்படும்.

இந்தத் வேலைத் திட்டத்திற்கான போராட்டம், முன்னோக்கி செல்லும் வழியை வழங்குவதுடன் தொழிலாள வர்க்கத்துக்கு அதன் திறன்களில் நம்பிக்கையை ஊட்டவும், கிராமப்புற மக்களைத் தன் பக்கம் இழுக்கவும், நடவடிக்கைக் குழுக்களின் வலையமைப்பை உருவாக்குவதன் மூலம், சமூகத்தின் சோசலிச மறுசீரமைப்பைத் தொடங்குவதற்கு தொழிலாள வர்க்கம் அதிகாரத்தைக் கைப்பற்றவும் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் அரசாங்கத்தை நிறுவுவதற்குமான அமைப்பு ரீதியான அடித்தளங்களையும் வழங்கும்.

இலங்கையில் போராடும் தொழிலாளர்கள் தங்கள் பொதுவான வர்க்க எதிரிகளுக்கு எதிராக, தங்கள் வர்க்க சகோதர சகோதரிகளுடன் சேர்ந்து ஒரு பொது போராட்டத்தை எதிர்கொள்கின்றனர். உலகெங்கிலும் அதிகரித்து வரும் வர்க்கப் போராட்ட அலையானது இலங்கைத் தொழிலாளர்களுக்கு தொழிற்சாலைகள், வேலைத் தளங்கள் மற்றும் அலுவலகங்கள் உட்பட எல்லா இடங்களிலும் கூட்டாளிகள் கிடைப்பதை சாத்தியமாக்குவதோடு ஆதரவு தளங்களையும் வழங்குகிறது. உலகளாவிய பெருநிறுவனங்கள், வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களின் பொருளாதார மேலாதிக்கத்திற்கு எதிராக சர்வதேச அளவில் ஒருங்கிணைந்த முதலாளித்துவத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கான போராட்டமாக உருவாக்கப்படலாம்.

சோசலிச சமத்துவக் கட்சி ஒரு எச்சரிக்கையை விடுக்கின்றது. இராஜபக்ஷ ஆட்சியானது, 1948 இல் உத்தியோகபூர்வ சுதந்திரத்தில் இருந்தே அதன் முன்னோடிகள் மற்றும் அதன் இனவாத கூட்டாளிகளும் இனவாத ஆத்திரமூட்டல்களையும் சிங்களப் பேரினவாதத்தின் விஷத்தையும் பரப்பி, சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் தொழிலாளர்களை இன ரீதியாகப் பிரிக்கும் அவநம்பிக்கையான முயற்சியில் ஈடுபடுவார்கள். இருப்பினும், அனைத்து தொழிலாளர்களும் ஏழைகளும் ஒரேவிதமான அவநம்பிக்கையான பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்கின்றனர். அனைத்து வகையான தேசியவாதம் மற்றும் வகுப்புவாதத்தை நிராகரிப்பதானது இலங்கையிலும் சர்வதேச ரீதியிலும் தொழிலாளர்களின் ஒற்றுமையை கட்டியெழுப்புவதற்கு இன்றியமையாதாகும்.

இலங்கையில் ஒரு சோசலிசப் புரட்சி தேவை, அதற்கு ஒரு புரட்சிகர தலைமைத்துவம் இன்றியமையாதது. ஒரு புரட்சிகரக் கட்சி இல்லாமல் தொழிலாள வர்க்கத்தின் மிகவும் போர்க்குணமிக்க மற்றும் உறுதியான போராட்டங்கள் தவிர்க்க முடியாமல் தோற்கடிக்கப்பட்டு, எதிர் புரட்சிக்கும் மிலேச்சத்தனமான அடக்குமுறைக்குமான கதவைத் திறந்துவிடுகின்றன என்பதை கடந்த நூற்றாண்டின் முழு வரலாறும் காட்டியுள்ளன.

இந்த வேலைத்திட்டத்துடன் உடன்படும் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களை சோசலிச சமத்துவக் கட்சியில் சேருமாறும் அதை தொழிலாள வர்க்கத்தின் வெகுஜனக் கட்சியாக கட்டியெழுப்புமாறும் நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.

Loading