நாடு தழுவிய போராட்டங்கள் அதிகரித்து, இலங்கை அரசாங்கத்தை ஆழமான நெருக்கடிக்குள் தள்ளுகின்றன

இந்தமொழிபெயர்ப்பின்மூலக்கட்டுரையைஇங்குகாணலாம்.

விண்ணை முட்டும் பணவீக்கம், எரிபொருள் மற்றும் இதர அடிப்படைப் பொருட்களின் தட்டுப்பாடு, தினமும்பல மணிநேரம் மின்வெட்டு போன்றவை சம்பந்தமாக ஜனாதிபதி கோட்டாபய இராஜபக்ஷ பதவி விலகவேண்டுமெனக் கோரி இலங்கை முழுவதும் நேற்று பாரிய போராட்டங்கள் தொடர்ந்தன. பெரும் பொலிஸ் மற்றும் இராணுவ அணிதிரட்டலின் ஆதரவுடன் ஞாயிற்றுக்கிழமை அதன் அவசரகாலச் சட்டத்தை திணித்து, 36 மணி நேர ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தபோதிலும் அவற்றையும் மீறி போராட்டங்கள் நடந்ததை அடுத்து அரசாங்கம் ஆழ்ந்த அரசியல் நெருக்கடியில் உள்ளது.

ஏப்ரல் 4, 2022அன்று களுத்துறையில் உள்ள துறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை அமைச்சர் ரோஹித அபேகுணவர்தனவின் அலுவலகத்திற்குள் நுழைய முயன்ற போராட்டக்காரர்களை பொலிசார் தடுத்துள்ளனர் [Photo: Shehan Gunasekara]

நாடளாவிய ரீதியில் அனைத்துப் பகுதிகளிலும் போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றன. வடக்கில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சுமார் 1,000மாணவர்களும் மட்டக்களப்பில் உள்ள கிழக்குப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மாணவர்களும் எதிர்ப்புப் பேரணிகளை நடத்தினர். மேற்கில் ஹோமாகம, மஹரகம, மொரட்டுவ, கம்பஹா மற்றும் ஜா-எல, வடமேற்கில் குருநாகல், வட மத்தியில் அனுராதபுரம் மற்றும் தெற்கில் காலி மற்றும் மாத்தறை உட்பட ஏனைய நகரங்களிலும் பெரும் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன. சிறு நகரங்களிலும் வீதி சந்திகளிலும் பல சிறிய போராட்டங்கள் நடந்தன.

'கோ-கோடா-கோ' என்று முழக்கமிட்ட எதிர்ப்பாளர்கள் இன்னும்பல கோஷங்களைஎழுப்பிக்கொண்டுபல அரசாங்க பாராளுமன்ற உறுப்பினர்களின் வீடுகளைச் சுற்றிவளைக்க முயன்றனர். தீவின் தெற்கில் உள்ள தங்காலையில் உள்ள பிரதமர் மஹிந்த இராஜபக்ஷவின் தனிப்பட்ட வீடான கார்ல்டன் இல்லம் ஆர்ப்பாட்டக்காரர்களால் சூழப்பட்டதுடன், அவர்களைக் கலைக்க பொலிஸார் கண்ணீர்ப்புகைப் பிரயோகம் செய்தனர். பல ஆர்ப்பாட்டங்களை தடுக்கும் வகையில் போலீசார் தடுப்புகளை அமைத்தனர்.

இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கான இராஜபக்ஷவின் முயற்சிகளுக்கு பதிலடிகொடுக்கும் வகையில், சமீபத்திய சூழ்ச்சிகளை தெளிவாக நிராகரிக்கும் 'ஒட்டுவேலை செய்ய வேண்டாம்' போன்ற பதாகைகளை எதிர்ப்பாளர்கள் ஏந்தியிருந்தனர். மற்றவர்கள் உணவு, மருந்து மற்றும் எரிபொருளின் பற்றாக்குறை குறித்து கடுமையான வெகுஜன கோபத்தை வெளிப்படுத்தினர். இன்னும் சிலர், எந்த பிரதானக் கட்சிகளிலும் நம்பிக்கை இல்லை என்பதை வெளிப்படுத்தினர். 'மக்களுக்கு அதிகாரம்வண்டும்', 'எங்கள் எதிர்காலத்தைக் கொல்லாதீர்கள்', 'போதுமென்றால் போதும்', 'ஏமாற்றிய பணத்தை எங்களுக்குத் திருப்பிக் கொடு' போன்ற பதாதைகளை அவர்கள் ஏந்திருந்தனர்.

4 ஏப்பிரல்2022 யாழ் பல்கலைக்கழக மாணவர்கள்நடத்தியஆர்ப்பாட்டம் [WSWS Media] [Photo: WSWS]

தொழிலாள வர்க்கப் பிரிவினர் வெகுஜன எதிர்ப்புக்களில் இணைந்துகொண்டனர். குறிப்பிடத்தக்க வகையில், நூற்றுக்கணக்கான தாதிகள் மற்றும் இளநிலை சுகாதார பணியாளர்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு வெளியே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பேராதனையில் நடைபெற்ற எதிர்ப்புப் பிரச்சாரத்தில் பல்கலைக்கழக ஆசிரியர்கள் மற்றும் கல்விசாரா ஊழியர்களும் இணைந்து கொண்டனர். பல்வேறு இடங்களில் வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.

அரசாங்கம் ஒரு நெருக்கடியிலிருந்து அடுத்த நெருக்கடிக்கு தள்ளாடிக்கொண்டிருக்கிறது. நேற்று, ஜனாதிபதி இராஜபக்ஷ ,தனது சகோதரரான பிரதமர் மஹிந்த இராஜபக்ஷவைத் தவிர முழு அமைச்சரவையின் இராஜினாமாவை ஏற்றுக்கொண்டதுடன், தற்போதைய நெருக்கடியைத் தீர்ப்பதற்கு இடைக்கால அரசாங்கத்தில் இணையுமாறு எதிர்க்கட்சிகளுக்கு ஏக்கத்துடன் வேண்டுகோள் விடுத்தார்.

மூன்று பிரதான எதிர்க்கட்சிகளும் இந்த வாய்ப்பை திட்டவட்டமாக நிராகரித்தன. எதிர்க்கட்சித் தலைவரும், ஐக்கியமக்கள்சக்தியின் (ஐ.ம.ச.) தலைவருமான சஜித் பிரேமதாச,“ஸ்ரீ.ல.பொ.ஜ.மு.[ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன] அடங்கிய அரசாங்கத்தில் எந்தப் பதவியையும் ஏற்க நாங்கள் தயாராக இல்லை,”என்றுஅறிவித்தார். இராஜபக்ஷவின் ஆளும் கூட்டணியில் ஸ்ரீ.ல.பொ.ஜ.மு. பிரதான கட்சியாகும்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இந்த யோசனையை நிராகரித்தது. 'எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுடன் அமைச்சரவையை மறுசீரமைக்க அவர் முன்வந்திருப்பது முட்டாள்தனமானது மற்றும் அவரது இராஜினாமா கோரி வரும் மக்களை கோபப்படுத்துகிறது' என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் மதியபரணன் ஆபிரகாம் சுமந்திரன் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

ஏப்ரல் 4அன்று கண்டியில்நடந்த எதிர்ப்பு ஊர்வலம் [WSWS Media] [Photo: WSWS]

அத்தகைய அரசாங்கத்தில் இணைவதுஒரு அரசியல் தற்கொலை என்று மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) அப்பட்டமாக அறிவித்தது. 'சிதைந்து வரும் அரசாங்கத்திற்கு எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் முட்டுகொடுப்பார்கள் என்று நினைக்கும் அவர் உண்மையில் ஒரு பைத்தியக்காரராகத்தான் இருக்க வேண்டும்' என்று ஜே.வி.பி.யின் தலைவரும்பாராளுமன்றஉறுப்பினருமானஅனுர திஸாநாயக்க கொழும்பில் செய்தியாளர்களிடம் கூறினார்.

இந்தக் கட்சிகள் எதுவும் கடந்த காலத்தில் அரசாங்கத்துடன் ஒத்துழைக்கத் தயங்கியதில்லை. அவர்கள் 2020இல் அனைத்துக் கட்சி மாநாடுகளில் கலந்து கொண்டதுடன் 2020 நடுப்பகுதியில் கோவிட்-19 தீவு முழுவதும் பரவ அனுமதித்தது, பொருளாதாரத்தை முன்கூட்டியே திறக்கும் இராஜபக்ஷவின் கொள்கையையும் ஆதரித்தனர். எவ்வாறாயினும், அவர்கள் எவரும் முற்றிலும் மதிப்பிழந்த இராஜபக்ஷ அரசாங்கத்துடன் தங்களை இணைத்துக் கொள்ளத் துணியவில்லை என்பது மக்களின் கோபத்தின் அளவுகாட்டுகிறது.

ஐ.ம.ச., ஜே.வி.பி., மற்றும் தமிழ் கூட்டமைப்பு அனைத்தும் ஜனாதிபதி இராஜபக்ஷவைக் கண்டித்து அவரை பதவிவிலகுமாறுஅழைப்பு விடுக்கும் அதே வேளை, தொழிலாள வர்க்கம் மற்றும் கிராமப்புற மக்கள் மீது புதிய சுமைகளைத் திணிப்பதைத் தவிர, தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு அவர்களில் எவருக்கும் தீர்வு கிடையாது. பிணை எடுப்புப் பொதிக்காகசர்வதேசநாணயநிதியத்துடன் கைகோர்த்து செல்லுமாறுஐ.ம.ச. பலமுறை அரசாங்கத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது, அதுவே இப்போது நடந்துகொண்டிருக்கிறது – இதுதவிர்க்க முடியாமல் கடுமையான சிக்கன நடவடிக்கைகளைகொண்டுவரும்.

நேற்று நண்பகல் நிலவரப்படி இராஜபக்ஷ நான்கு அமைச்சர்களை மட்டுமே நியமித்திருந்தார். இராஜபக்ஷவின் முன்னாள் சட்டத்தரணியும் நீதி அமைச்சருமான அலி சப்ரி, ஜனாதிபதியின் சகோதரர் பசில் இராஜபக்ஷவிற்குப் பதிலாக நிதி அமைச்சராக நியமிக்கப்பட்டார். பசில் இராஜபக்ஷ பொருளாதார நெருக்கடியை கையாளும்முறைசம்பந்தமாக ஆளும் கூட்டணிக்குள் உட்பட பரவலாக விமர்சிக்கப்பட்டார். ஜி.எல். பீரிஸ், தினேஷ் குணவர்தன மற்றும் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ ஆகியோர் வெளிவிவகாரம், கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் ஆகிய துறைகளில் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஏப்ரல் 4அன்று மஹரகமவில்நடந்த ஆர்ப்பாட்டம் [WSWS Media] [Photo: WSWS]

பொருளாதார நெருக்கடிக்கு எவ்வாறு தீர்வு காண்பது என்பது தொடர்பில் அரசாங்கத்துடனான கருத்து வேறுபாடு காரணமாக மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் நேற்று இராஜினாமா செய்ததன் மூலம் அரசாங்கம் மேலும் குழப்பத்தில் தள்ளப்பட்டுள்ளது. மத்திய வங்கி அதன் ஏப்ரல் மாத நிதிக் கொள்கை மதிப்பாய்வை வெளியிட்டு வட்டி விகிதங்கள் குறித்த முடிவை இன்று எடுக்கவிருந்தது. அது எப்போது நடக்கும் என்று எந்தஅறகுறியும்கொடுக்கவில்லை.

உக்ரேனில் ரஷ்யாவிற்கு எதிரான அமெரிக்க-நேட்டோ பினாமி போரினால் பெரிதும் உக்கிரமடைந்துள்ள, ஏற்கனவே கோவிட்-19 தொற்றுநோயால் ஏற்பட்ட உலகளாவிய பொருளாதார நெருக்கடியால் இலங்கைப் பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. அந்நியச் செலாவணியின் கடுமையான பற்றாக்குறை எரிபொருட்கள், அத்தியாவசிய உணவுகள், மருந்துகள் மற்றும் பிற அடிப்படைப் பொருட்களின் இறக்குமதியை சீர்குலைத்துள்ளது. பெரும் வெளிநாட்டுக் கடனைத் திருப்பிச் செலுத்த முடியாத விளிம்பில் நாடு மிதக்கிறது.

மோசமான நெருக்கடிக்கு மத்தியில், கொழும்பு பங்குச் சந்தை திங்கட்கிழமை இருமுறை வர்த்தகத்தை இடைநிறுத்தியது. இலங்கைப் பங்குச் சந்தை பெப்ரவரியில் 11 வீதம் வீழ்ச்சியடைந்த பின்னர் மார்ச் மாதத்தில் 23 வீதம் வீழ்ச்சியடைந்தது. இது இந்த வருடத்தில் இதுவரை 32 வீத ஒட்டுமொத்த வீழ்ச்சியாகும்.

ஏப்ரல் 4அன்று ஹட்டனில் நடந்தஅரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் [WSWS Media] [Photo: WSWS]

இன்று பாராளுமன்றம் கூட்டப்படுவதால் அரசியல் குழப்பம் இன்னும் ஆழமடையும். ஆளும் கூட்டணி பெரும்பான்மையை இழக்கும் அனைத்து அறிகுறிகளும்காணப்படுகின்றன. வெகுஜன எதிர்ப்பை எதிர்கொள்ளும் வகையில், பல கட்சிகளும், அதிருப்தி குழுக்களும், கூட்டணியில் இருந்து வெளியேறி, சுயேச்சைக் குழுக்களாகச் செயல்படப் போவதாகச் சுட்டிக்காட்டியுள்ளன.

அரசாங்கம் தற்போதைய தந்திரோபாயத்தை தொடர முயற்சித்தால், ஆளும் ஸ்ரீ.ல.பொ.ஜ.மு. இன் 50பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று முதல் பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படுவார்கள் என முன்னாள் இராஜாங்க அமைச்சர் நிமல் லான்சா தெரிவித்துள்ளார். 14பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி (ஸ்ரீ.ல.சு.க.) புதிதாக நியமிக்கப்பட்டுள்ள நான்கு அமைச்சர்கள் குறித்து நேற்று கேள்வி எழுப்பி,ஆளும் கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்தது. அது நடந்தால், 225ஆசனங்களைக் கொண்ட பாராளுமன்றத்தில் அரசாங்கம் சிறுபான்மையாகக் குறைக்கப்படும்.

அவற்றின் அமைப்பு மற்றும் வடிவத்துக்கு அப்பால், முதலாளித்துவத்தை இறுதிவரை பாதுகாக்க அர்ப்பணித்துக்கொண்ட கட்சிகளால் அமைக்கப்படும் அடுத்த அரசாங்கத்தால், உழைக்கும் மக்களின் துன்பத்தைத் தணிக்க எதுவும் செய்ய முடியாது. கோவிட்-19 தொற்றுநோயின் போதுபோலவே, பெரும்பான்மையான சாதாரண மக்களின் நல்வாழ்வு, ஆரோக்கியம் மற்றும் உயிர் வாழ்க்கையை விட, இந்தக் கட்சிகள் அனைத்தும் பெருவணிகத்தின் இலாபங்களையும், பெரும் பணக்காரர்களின் செல்வத்தையும் முன்னிலைப்படுத்துகின்றன.

இலங்கையில் சோசலிச சமத்துவக் கட்சி மட்டுமே இந்த எதிர்ப்பு இயக்கத்தில் தலையிட்டு, தொழிலாள வர்க்கத்தை விவகாரத்தை தனது கைகளில் எடுத்துக் கொள்ளுமாறு வலியுறுத்துகிறது. இந்த நெருக்கடி முழுவதும் மௌனமாக இருந்த தொழிற்சங்கங்கள் மற்றும் முதலாளித்துவ வர்க்கத்தின் அனைத்துக் கட்சிகளையும் நிராகரித்து, தொழிற்சாலைகள் மற்றும் தொழிலாள வர்க்க புறநகர் பகுதிகளில் நடவடிக்கைக் குழுக்களை அமைக்கஅதுஅழைப்பு விடுக்கிறது. சர்வதேச அளவில் சோசலிசத்திற்கான போராட்டத்தின் ஒரு பகுதியாக சோசலிசக் கொள்கைகளை செயல்படுத்துவதன் மூலம் உழைக்கும் மக்களின் நலன்களுக்கான நெருக்கடிகளுக்குத் தீர்வு காண முடியும். அதை முன்னெடுப்பதற்கான ஒரே வழிசோசலிச கொள்கையின் அடிப்படையில்தொழிலாளர்-விவசாயிகளின் அரசாங்கத்தை அமைப்பதாகும். அதற்கு இத்தகைய நடவடிக்கைக் குழுக்கள் அடித்தளமாக அமையும்.

Loading