பிரான்சின் தொழிலாளர் போராட்டம் அமைப்பு நேட்டோ-ரஷ்ய போர் ஆபத்துக்கு எதிராக தொழிலாளர்களின் எதிர்ப்பை அணிதிரட்ட மறுக்கிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

உக்ரேன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு மற்றும் நேட்டோ சக்திகளின் ஆக்கிரமிப்பு மூலோபாயம் என்பன, ஒரு பேரழிவுடன் உலகப் போருடன் உலகை அச்சுறுத்துகிறது. இடைவிடாது தொடர்ச்சியான ரஷ்ய எதிர்ப்பு பிரச்சாரத்தை பிரெஞ்சு செய்தி ஸ்தாபனங்கள் ஒளிபரப்பும் போது, பாரிஸ் மீது அணுகுண்டுத் தாக்குதலின் விளைவுகள் பற்றி அவை விவாதிக்கின்றன. இந்த நெருக்கடியானது, பிரெஞ்சு ஊடகங்களினால் 'தீவிர இடது' என விவரிக்கப்படும் குட்டி முதலாளித்துவக் கட்சிகளான புதிய முதலாளித்துவ எதிர்ப்பு கட்சி (NPA) மற்றும் தொழிலாளர் போராட்டம் அமைப்பு (Lutte ouvrière - LO) வகிக்கும் பாத்திரம் மற்றும் தன்மை பற்றிய கேள்வியை நேரடியாக முன்வைக்கிறது.

இந்த போரில், நேட்டோ இராணுவ ஈடுபாட்டிற்கு தொழிலாளர்களின் எதிர்ப்பு மிகப்பெரிதாக உள்ளது. கடந்த வாரம், ராஸ்முசென் கருத்துக்கணிப்பின் (Rasmussen poll) படி 69 சதவீத அமெரிக்கர்கள், அமெரிக்கத் தலையீட்டை எதிர்த்துள்ளனர், மேலும், CNews கருத்துக்கணிப்பின்படி 70 சதவீத பிரெஞ்சு மக்கள் பிரெஞ்சுத் தலையீட்டை எதிர்த்துள்ளனர். எவ்வாறாயினும் இந்த எதிர்ப்பை, NPA மற்றும் LO ஆகிய கட்சிகள் நேட்டோவின் போர்வெறியை ஆதரிக்கும் முதலாளித்துவ சார்பு தொழிற்சங்கங்களின் பின்னால் செலுத்த முயல்கின்றன, இதன் மூலம் உலகப் போரின் ஆபத்துக்கு எதிரான போராட்டத்தை அவை தடுக்கின்றன.

ரஷ்ய சார்பு ஆட்சிகளுக்கு எதிராக லிபியா மற்றும் சிரியாவில் நேட்டோவின் தலையீட்டை ஆதரித்த NPA, இந்த மோதலை விரிவுபடுத்த அழைப்பு விடுக்கிறது. அது நேட்டோவால் 'எந்தவித நிபந்தனையுமின்றி தற்காப்பு ஆயுதங்களை உக்ரோனுக்கு வழங்குவதை' ஆதரிக்கும் அதே நேரத்தில், ரஷ்யாவையும் புட்டினையும் பேய்த்தனமாக சித்தரிக்கிறது. ஊதியம் வாங்கி, பிரிட்டிஷ் இராணுவத்திற்கு ஆலோசகராகப் பணியாற்றும் பேராசிரியர் ஜில்பேர் அஷ்கார் என்பவர் வெளியிட்டுள்ள பகுப்பாய்வுகளின்படி, NPA க்கு, என்ன விலைகொடுத்தும் நிறுத்தப்பட வேண்டிய உலகின் மிக ஆக்ரோஷமான நாடாக ரஷ்யா இருக்கிறது. உண்மையில், ஆஷ்கார் பின்வருமாறு வலியுறுத்துகிறார்:

உக்ரேன் மீதான ரஷ்ய படையெடுப்பின் தலைவிதியானது, இதர அனைத்து நாடுகளின் ஆக்கிரமிப்புக்கான போக்கை தீர்மானிக்கிறது. ரஷ்ய தோல்வியுற்றால், அனைத்து உலக மற்றும் பிராந்திய வல்லரசுகள் ஒரு வலுவான தடுப்பாக இருக்கும். அது வெற்றியடைந்தால், அதாவது, ரஷ்யா உக்ரேனை அதன் கணுக்கால் காலணிகள் கீழ் 'அமைதிப்படுத்த' முடிந்தால், அதன் விளைவு உலக சூழ்நிலையில் காடுகளின் சட்டத்தை நோக்கிய ஒரு பெரிய சரிவை ஏற்படுத்தும்.

மேலோட்டமாக LO ஒரு வித்தியாசமான பாத்திரத்தை வகிப்பதாகத் தோன்றினாலும், அது NPA இணைக்கப்பட்டுள்ள அதே தொழிற்சங்க அதிகாரத்துவம் மற்றும் முதலாளித்துவ அரசு எந்திரத்தின் வெவ்வேறு அடுக்குகளை நோக்கியே உள்ளது. NPA ஐ போலவே, 2000 ஆண்டுகளின் முற்பகுதியில் ஊடகங்களின் பிரச்சாரம் காரணமாக LO அதன் தேர்தல் வேட்பாளர்களுக்கு மில்லியன் கணக்கான வாக்குகளைப் பெற முடிந்தது. ஆனால், அது பிரெஞ்சு வெளியுறவுக் கொள்கை பற்றிய சில விமர்சனங்களுடன் மட்டுமே தன்னை மட்டுப்படுத்திக் கொள்கிறது. போருக்கு எதிராக தனது வாக்காளர்களை அணிதிரட்டாமல், அதே நேரத்தில் NPA போன்ற வெளிப்படையான போர் ஆதரவுக் கட்சிகளுடன் ஒத்துழைக்கிறது.

2012 ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பாளருக்கான நத்தலி ஆர்த்தோ (Source: Wikimedia Commons) [Photo]

பிரான்ஸ் 5 தொலைக்காட்சியில், LO இன் ஜனாதிபதி வேட்பாளர் நத்தலி ஆர்த்தோ, நேட்டோ சக்திகள் ரஷ்யாவைச் சுற்றி தங்கள் நிலைகளை வலுப்படுத்திக் கொண்டிருப்பதாகவும், போரைத் தூண்டும் அபாயம் இருப்பதாகவும் புகார் கூறினார்.

பிராந்தியத்தில் 'செல்வாக்கிற்கான ஒரு போர் பல ஆண்டுகளாக நீடித்தது' என அவர் கூறினார், மேலும் நேட்டோ முக்கிய பொறுப்பு எனக் குற்றம் சாட்டினார்: 'மேற்கத்திய ஏகாதிபத்திய சக்திகள், நேட்டோ மற்றும் நிச்சயமாக அமெரிக்காவினால் மேற்கொள்ளப்படும் இந்த சூழ்ச்சிகளை நாம் கண்டிக்க வேண்டும். அதேவேளை, இன்று நிச்சயமாக புட்டின் ஒரு ஆக்கிரமிப்பாளர் என்று நாங்கள் கூறுகிறோம். உண்மை என்னவென்றால், இந்த செல்வாக்குக்கான போர் பல ஆண்டுகளாக நீடிக்கிறது. 2014ல் இருந்து இப்பிராந்தியத்தில் ஏற்பட்ட இந்த இராணுவ அழுத்தமே இன்று ஆயுத மோதலாக சீரழிந்து வருகிறது' என்று அவர் கூறினார்.

ஆர்த்தோ 'நேட்டோ ரஷ்யாவைச் சுற்றி வளைத்திருக்கிறது, இது ரஷ்யா மீது இராணுவ அழுத்தத்தை அளித்து இறுதியாக இந்த ஆயுத மோதலுக்கு வழிவகுத்துள்ளது. நிச்சயமாக, இந்தப் போட்டிகளையும், இந்த அதிகாரப் போட்டியையும் நான் கண்டிக்கிறேன்' என அவர் குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறியதாவது: 'இந்த சக்திகளின் உறவு, இந்த அதிகாரப் போராட்டம் பல ஆண்டுகளாக உள்ளது, 2003 இல் ஈராக்கில் நடந்ததைப் போன்ற ஒரு வகையான மொத்த சூழ்ச்சியை நாங்கள் காண்கிறோம் என்ற எண்ணம் எனக்கு உள்ளது. சதாம் ஹுசைன் ஒரு அசுரன் என்றும், அவர் பூமி கிரகத்தை வெடிக்க வைக்க முயன்றார் என்றும் எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. மேலும், போரைத் தொடங்கி அதன் மீது படையெடுப்பதற்காக, அமெரிக்கர்கள் ஈராக்கில் பேரழிவு ஆயுதங்களைக் கண்டுபிடித்தனர்'.

மாஸ்கோவால் தொடங்கப்பட்ட போரைப் பற்றி, ஆர்த்தோ பின்வருமாறு கூறினார்: 'புட்டினின் ஆட்சிக்கு எனக்கு எந்த அனுதாபமும் இல்லை. நிச்சயமாக இந்தப் போர் நிறுத்தப்பட வேண்டும் என நான் நினைக்கிறேன், முதல் பலி மக்கள் ஆகும். ஆனால், உண்மையில் அமெரிக்காவுடன் இணைந்திருக்கும் பிரான்ஸ் மேற்கத்திய சக்திகளின் பொறுப்பை எதிர்கொள்ளும் வகையில், நாங்கள் எங்கள் சொந்த வீட்டை ஒழுங்கமைக்க வேண்டும்'.

சமீபத்திய தசாப்தங்களில் பிராந்தியத்தில் நேட்டோவின் ஆக்கிரமிப்பு பாத்திரம் மற்றும் புட்டினின் பிற்போக்குத்தனமான பாத்திரம் ஆகியவற்றைப் பொறுத்தவரை, ஆர்த்தோவின் கருத்துக்களில் எந்தத் தவறும் இல்லை. பிரான்ஸ் 5 தொலைக்காட்சி நேர்காணல் செய்பவரால் தனக்காகப் போடப்பட்ட சில பொறிகளையும் அவரால் எதிர்கொள்ள முடிந்தது, அவர் இப்போரில் NPA இன் போர்வெறி கொண்ட நேட்டோ-சார்பு நிலைப்பாட்டை ஏற்குமாறு அழுத்தம் கொடுத்தார்.

'ஆனால் போரை நடத்துவது நேட்டோ அல்ல' என்று அவரது கேள்வியாளர் ஆட்சேபித்தபோது ஆர்த்தோ பதிலளித்தார்: 'ஆனால் ஆம், நேட்டோ போரை நடத்துகிறது. போலந்து, ருமேனியா, உக்ரேன் போன்ற நாடுகளுக்கும் அமெரிக்கர்கள் எத்தனை ஆயுதங்களை அனுப்பியுள்ளனர் என்பது உங்களுக்குத் தெரியுமா? ரஷ்யாவைச் சுற்றி இவ்வளவு இராணுவத் தளங்கள் இருந்ததில்லை.'

உண்மையில், வாஷிங்டனும் அதன் ஐரோப்பிய கூட்டாளிகளும் 1991ல் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டதை, பூகோளத்தின் மீது தங்களுடைய சவாலற்ற மேலாதிக்கத்தை நிலைநிறுத்த முயற்சிக்கும் சந்தர்ப்பமாக விளக்கினர். அப்போதிருந்து, ஏகாதிபத்தியத்தின் தலைமையிலான தலையீடுகள் ஆப்கானிஸ்தான், ஈராக், லிபியா மற்றும் சிரியாவை நாசமாக்கியுள்ளன. நேட்டோ தற்போது ரஷ்யாவை குறிவைத்து ஒரு பரந்த மறுஆயுதத் திட்டத்தை மேற்கொண்டு வருகிறது. ரஷ்யாவை இராணுவ தளங்களுடன் சுற்றி வளைத்து, அதன் பாதுகாப்பு தொடர்பான உத்தரவாதங்களுக்கான மாஸ்கோவின் அழைப்புகளை மறுத்த நேட்டோ, உக்ரேன் மீதான ரஷ்ய படையெடுப்பைத் தூண்டுவதற்கு வெற்றிகரமாக முயற்சித்தது.

ஆனால், அனைத்து பெரும் வல்லரசுகளின் கொள்கைகளிலிருந்தும் எல்லாவற்றிற்கும் மேலாக ஏகாதிபத்திய சக்திகளின் கொள்கைகளிலிருந்தும் பாயும் போர் அபாயத்திற்கு எதிராக தொழிலாளர்களை அணிதிரட்டுவதில் LO அக்கறை காட்டவில்லை. 1968 நடுத்தர வர்க்க மாணவர் இயக்கத்திலிருந்து தோன்றிய குட்டி முதலாளித்துவ போலி-இடது சூழலைப் போலவே, தொழிலாள வர்க்கத்தில் ஒரு சர்வதேச போர்-எதிர்ப்பு இயக்கம் வளர்வதை தடுப்பதையே LO நோக்கமாகக் கொண்டுள்ளது.

தேர்தல்களில் இலட்சக்கணக்கான வாக்குகளைப் பெற்றாலும், பல ஆயிரம் உறுப்பினர்களைக் கொண்டிருந்தாலும், இந்தக் கட்சி போருக்கு எதிராக அணிதிரட்டுவதற்கு அழைப்பு விடுக்கவில்லை.

உண்மையில், LO ஒவ்வொரு நாட்டிலும் தொழிற்சங்க எந்திரங்களின் பிடியை வலுப்படுத்த முயற்சிக்கிறது. இந்தக் கொள்கை, கடந்த மாதம் ஸ்டெல்லான்டிஸ் (PSA) வாகன உற்பத்தி நிறுவனத்தில் ஸ்ராலினிச பொதுத் தொழிலாளர் கூட்டமைப்பு (CGT) தொழிற்சங்கத்தின் முன்னணி தொழிற்சங்கப் பிரதிநிதியும் 2022 ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரத்தில் நத்தலி ஆர்த்தோவின் செய்தித் தொடர்பாளருமாக இருந்த ஜோன்-பியர் மேர்சியே (Jean-Pierre Mercier) ஆல் ஒரு கூட்டத்தில் தெளிவாக வெளிப்படுத்தப்பட்டது.

ஆளும் வர்க்கத்திற்கு 'தொழிலாள வர்க்கத்தில் தொழிற்சங்கங்கள் ஒரு இணைப்பு பெல்ட்டின் பாத்திரத்தை வகித்துள்ளன' என்பதை ஒப்புக்கொண்ட மேர்சியே, தொழிற்சங்க அதிகாரத்துவத்தில் பங்கேற்பது ஒரு புரட்சியாளரின் முதல் கடமை என்று கூறினார்: 'அவை மிகவும் செயலில் உள்ள கூறுகளாக இருப்பதோடு, மிகவும் உறுதியான, மிகவும் போராளியாக இருக்க வேண்டும். தொழிலாளர்கள் இருக்கும் இடத்தில் புரட்சிகர கம்யூனிஸ்டுகள் இருக்க வேண்டும், அவர்கள் பக்கம் நின்று போராடி, தொழிற்சங்க உறுப்பினர்களாக இல்லாதவர்களை ஒருங்கிணைக்க முற்பட வேண்டும்.”

முதலாவதாக, இந்த வாதம் தவறானது, ஏனென்றால் தொழிலாளர்கள் இப்போது பிரான்சிலும் மற்றும் உலகின் பரந்த பகுதிகளிலும் தொழிற்சங்கங்களில் இல்லை. பிரான்சில் தொழிற்சங்க உறுப்பினர்களாக உள்ள தொழிலாளர்களின் சதவீதம் சுமார் 7 சதவீதம் ஆகும். சமூக ஊடகங்களில் தொழிற்சங்கங்கள் சாராமல் ஒழுங்கமைக்கப்பட்ட 'மஞ்சள் சீருடை' இயக்கத்தில் காணப்பட்டதைப் போல, தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் மீது பரந்தளவில் தொழிலாளர்கள் அவநம்பிக்கை கொண்டுள்ளனர்.

மேலும், எல்லாவற்றிற்கும் மேலாக, தேசிய தொழிற்சங்க அதிகாரத்துவங்களின் பின்னால் தொழிலாளர்களை வழிநடத்தும் LO இன் மூலோபாயம் தொழிலாள வர்க்கத்தை பிளவுபடுத்துகிறது மற்றும் போருக்கு எதிரான பொதுவான போராட்டத்தைத் தடுக்கிறது. நேட்டோ தொடர்பான LOவின் பாசாங்குத்தனமான விமர்சனங்கள் அம்பலப்பட சில நாட்கள் மட்டுமே ஆனது. உண்மையில், LO ஆல் ஊக்குவிக்கப்பட்ட தொழிற்சங்கங்கள் ஏகாதிபத்திய சக்திகளுடன் சேர்ந்து ரஷ்யாவிற்கு எதிரான நேட்டோ இராணுவத் தலையீட்டிற்கான பிரச்சாரத்திற்கு ஆதரவளிக்கின்றன.

மார்ச் 9 அன்று, CGT தொழிற்சங்கம், இதில் மேர்சியே ஒரு உயர் அதிகாரி, ரஷ்யாவை ஒரு ஆக்கிரமிப்பாளராகக் கண்டித்து, நேட்டோ சக்திகள் அதை கடுமையாக தண்டிக்க வேண்டும் எனக் கோரும் ஒரு பிரகடனத்தை வெளியிட்டது. நேட்டோவினால் ரஷ்யாவைத் தோற்கடிப்பதும், புட்டின் ஆட்சியின் வீழ்ச்சியும் மட்டுமே அமைதியை மீண்டும் நிலைநாட்டவும், உலகப் போரைத் தடுக்கவும் போதுமானதாக இருக்கும் என்று அது வலியுறுத்துகிறது.

'அமைதிக்குத் திரும்புவது புட்டின் வீழ்ச்சியின் மூலம் நடைபெறும்,' என CGT எழுதுகிறது: 'அவர் வெளியேறுவதன் மூலம் மட்டுமே நீடித்த அமைதியைப் பெற முடியும், இது மூன்று காரணிகளின் ஒருங்கிணைப்பின் மூலம் மட்டுமே வரும்: வலுவான மற்றும் உண்மையில் பயனுள்ள சர்வதேச தடைகள், ஒரு நம்பிக்கையுடன் வெற்றிகரமான உக்ரேனிய எதிர்ப்பு; ஜனநாயக மற்றும் முற்போக்கான ரஷ்ய எதிர்ப்பிற்கு ஆதரவு.'

சர்வதேச அளவில் ரஷ்ய எண்ணெய் மற்றும் தானிய ஏற்றுமதிகள் மீது விதிக்கப்பட்ட பேரழிவுத் தடைகள் மற்றும் கடுமையான பொருளாதாரத் தடைகள் என்பன ரஷ்யாவில் உள்ள தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரத்தை அழித்துவிடும் என்று CGT மகிழ்ச்சியடைகிறது. மேலும், அதி தீவிர வலதுசாரி உக்ரேனியப் படைகளின் பங்கை CGT வெள்ளையடித்து, மாஸ்கோவிற்கு எதிரான நேட்டோ ஆதரவுக்கு வெற்றி கிடைக்கும் என்று CGT நம்புகிறது. LO போன்ற CGT அதிகாரத்துவம், ஏகாதிபத்தியத்தை நனவுபூர்வமாக ஆதரிக்கும் நடுத்தர வர்க்கத்தின் வசதியான அடுக்குகளின் நலன்களை பிரதிநிதித்துவப்படுத்துகிறது என்பதை இந்த அறிவிப்புகள் உறுதிப்படுத்துகின்றன.

LO வின் செயலற்ற தன்மைக்கு எதிராக, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் (ICFI) பிரெஞ்சுப் பகுதியான சோசலிச சமத்துவக் கட்சி (PES), தொழிலாள வர்க்கத்தில் ஒரு போர்-எதிர்ப்பு இயக்கத்தைக் கட்டியெழுப்ப அழைப்பு விடுக்கிறது. தொழிற்சங்க அதிகாரத்துவம் மற்றும் போலி-இடது கட்சிகளில் உள்ள அதன் பாதுகாவலர்களிடமிருந்து இந்த போர் எதிர்ப்பு இயக்கம் சுயாதீனமாக இருக்க வேண்டும்.

தொழிலாள வர்க்கத்தில் ஒரு சர்வதேச போர்-எதிர்ப்பு இயக்கத்தை கட்டியெழுப்பும் இந்த முன்னோக்கு, உலக ட்ரொட்ஸ்கிச இயக்கமான ICFI மற்றும் PES ஐ, NPA மற்றும் LO பிரதிநிதித்துவப்படுத்தும் மத்தியதர வர்க்கப் போக்குகளிலிருந்து பிரிக்கிறது. பெருகி வரும் மூன்றாம் உலகப் போரின் ஆபத்தை எதிர்த்துப் போராடுவதற்கும், தொழிற்சங்க அதிகாரத்துவங்கள் மற்றும் LO க்கு எதிராக, சாமானிய குழுக்களின் சர்வதேச தொழிலாளர் கூட்டணியை உருவாக்குவதே PES க்கு முன்னால் உள்ள அவசர கேள்வியாக உள்ளது.

Loading