இலங்கை தோட்டத் தொழிலாளர் நடவடிக்கைக் குழுக்களின் கூட்டத்தில் கலந்துகொண்டு பாதிக்கப்பட்ட அனைத்து தொழிலாளர்களையும் மீண்டும் வேலையில் அமர்த்தக் கோருங்கள்

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

ஓல்டன், கிளனுகி, எபோட்ஸ்லி தோட்டங்களைச் சேர்ந்த தோட்டத் தொழிலாளர் நடவடிக்கைக் குழுக்கள் (PWAC) இணைந்து மார்ச் 27 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு, வேலை நீக்கம் செய்யப்பட்ட அனைத்து தோட்டத் தொழிலாளர்களையும் நிபந்தனையின்றி மீண்டும் வேலையில் அமர்த்தக் கோரி, இணையவழி கூட்டமொன்றை நடத்துகின்றன. ஓல்டன், கட்டுகலை மற்றும் வெலிஓயா தோட்டங்களில் மொத்தம் 54 தொழிலாளர்கள் நிர்வாகத்தால் பழிவாங்கப்பட்டுள்ளதுடன் வேலை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

அதிகரிக்கப்பட்டுள்ள வேலைச்சுமை, ஊதியக் குறைப்பு, வருவாய்-பங்கீடு மாதிரி என அழைக்கப்படுபவை மற்றும் உற்பத்தி திறனை உயர்த்துவதற்கான பிற நடவடிக்கைகள் உட்பட தொழிலாளர்களின் உரிமைகள் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருவது குறித்து கூட்டத்தில் கலந்துரையாடப்படும். இந்த செலவுக் குறைப்புத் தாக்குதல்களை ஜனாதிபதி கோட்டாபய இராஜபக்ஷவின் அரசாங்கம் அங்கீகரித்துள்ளதுடன் தொழிற்சங்கங்கள் அதை முழுமையாக ஆதரிக்கின்றன.

கட்டுகலை தோட்டத் தொழிலாளர்கள் செப்டம்பர் 29 அன்று கொழுந்து மடுவத்துக்கு அருகில் நடத்திய ஆர்ப்பாட்டம் [Photo: WSWS media]

பெருந்தோட்டங்கள் மற்றும் ஏனைய துறைகளில் உள்ள தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களை ஞாயிற்றுக்கிழமை கூட்டத்தில் பங்கேற்குமாறும், இந்த அடக்குமுறையை தோற்கடிப்பதற்கும் வேலைகள், ஊதியங்கள் மற்றும் நிலைமைகளைப் பாதுகாப்பதற்கும் தேவையான வேலைத்திட்டம் பற்றி கலந்துரையாடுமாறும் நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.

ஒப்பந்த அடிப்படையில் தனித்தனி தொழிலாளர்களுக்கு 1,000 முதல் 1,500 தேயிலை செடிகளைக் கொண்ட ஒரு நிலத்தை கொடுக்கும், வருமானப் பங்கீடு என்ற சுரண்டல் முறையை தோட்டத் தொழிலாளர்கள் நீண்டகாலமாக எதிர்த்து வருகின்றனர். தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் கம்பனி வழங்கும் சில உள்ளீடுகளுடன், தேயிலைச் செடிகளை பராமரித்து, பயிரை அறுவடை செய்வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கொழுந்துகள் கம்பனியிடம் ஒப்படைக்க வேண்டும். அது அதன் செலவுகள் மற்றும் இலாபத்தைக் கழித்துக்கொண்டு எஞ்சிய அற்பத் தொகையை தொழிலாளிக்கு வருமானமாக கொடுக்கும். இந்த முறைமை முழுமையாகச் செயல்படுத்தப்படும்போது, தொழிலாளர்கள் தங்கள் வருங்கால சேமிப்பான ஊழியர் சேமலாப நிதி உட்பட கடுமையாகப் போராடி வென்ற பிற உரிமைகளையும் இழக்கின்றார்கள்.

மத்திய மாகாணத்தில் உள்ள மஹா ஊவா மற்றும் வலப்பனை தோட்டங்களிலும், ஹட்டனுக்கு அருகில் உள்ள டிக்கோயாவில் டில்லிரி, பட்டல்கல்ல மற்றும் என்ஃபீல்ட் தோட்டங்களிலும் 2016 ஆம் ஆண்டு முதன்முதலில் வருவாய் பகிர்வு முறை நடைமுறைப்படுத்தப்பட்டது. எவ்வாறாயினும், தோட்ட நிர்வாகம், தொழிலாளர்களின் எதிர்ப்பின் காரணமாக இந்த முறைமையை கைவிட அல்லது பாதி மட்டுமே அமுல்படுத்த நிர்ப்பந்திக்கப்பட்டது.

சாமிமலையில் ஓல்டன், தலவாக்கலையில் கட்டுகலை மற்றும் ஹட்டனுக்கு அருகிலுள்ள வெலிஓயா ஆகிய தோட்டங்களில் தொழிலாளர்களின் தொடர் போராட்டங்களை ஒடுக்கியதன் பின்னர், தோட்டக் கம்பனிகள் கடந்த வருடம் வருமானப் பங்கீட்டை முழுமையாக நடைமுறைப்படுத்தத் தொடங்கின. ஹொரண தோட்டக் கம்பனியானது ஓல்டன் தொழிலாளர்கள் மீதான கொடூரமான தாக்குதலுக்குப் பின்னர், ஓல்டன், பெயார்லோன், கவரவில, மாநெலு ஆகிய தோட்டங்களில் இந்த முறைமையைத் திணிக்கத் தொடங்கியுள்ளது.

அக்டோபர் 7 அன்று கடும் பிணை நிபந்தனையின் கீழ் விடுவிக்கப்பட்டு வீட்டிற்கு செல்லும் வழியில் நிற்கும் பாதிக்கப்பட்ட கட்டுகலை தோட்டத் தொழிலாளர்கள் [Photo: WSWS media] [Photo: WSWS]

2021 பெப்ரவரி, ஓல்டன் தோட்டத்தைச் சேர்ந்த 24 தொழிலாளர்களையும் இரண்டு இளைஞர்களையும், தோட்ட முகாமையாளர்களை அடித்தனர் என்ற சோடிக்கப்பட்ட குற்றச்சாட்டின் பேரில் பொலிசார் கைது செய்தனர். ஊதிய உயர்வு கோரியும் நிர்வாகத்தின் அடக்குமுறைகளை எதிர்த்தும் தொழிலாளர்கள் 47 நாட்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதை அடுத்தே, இந்த பழிவாங்கல் தொடங்கப்பட்டது. கைது செய்யப்பட்ட தொழிலாளர்கள் இப்போது நீதிமன்றில் குற்றவியல் விசாரணையை எதிர்கொள்கின்றனர். அதே போலிக் குற்றச்சாட்டுக்களைப் பயன்படுத்தி, ஹொரண பெருந்தோட்டக் கம்பனி 38 தொழிலாளர்களை வேலை நீக்கம் செய்தது. இப்போது இந்த தொழிலாளர்கள் வருமானம் பெற போராடிக்கொண்டிருக்கின்றனர்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் (இ.தொ.கா.) கம்பனியும் பொலிசும் தீட்டிய சதித்திட்டத்திற்கு உதவியதுடன், தொழிலாளர் தேசிய சங்கம் (NUW) மற்றும் ஜனநாயக தொழிலாளர் முன்னணியும் (ஜ.தொ.மு.) இந்த அடக்குமுறையை மௌனமாக அங்கீகரித்துள்ளன.

ஓல்டன் தோட்டத்தின் நான்கு பிரிவுகளும் அக்டோபர் மாதத்தில் வருமானப் பகிர்வு முறையின் கீழ் கொண்டுவரப்பட்டன. 1,000 ரூபாய் (சுமார் $US4) தினசரி ஊதியத்தைப் பெறுவதற்கு, தொழிலாளர்கள் நாளொன்றுக்கு 18 கிலோ தேயிலை கொழுந்துகளைப் பறிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். இந்த இலக்கை எட்டவில்லை என்றால், நாளொன்றுக்கு 1,000 ரூபாய்க்கும் குறைவான கூலியாக, ஒரு கிலோவுக்கு 40 ரூபாய் மட்டுமே தொழிலாளிக்கு வழங்கப்படுகிறது.

ஓல்டன் தோட்டத்தைச் சேர்ந்த ஒரு பெண் தொழிலாளி விளக்கியது போல்: “எனக்கு கிட்டத்தட்ட 1,500 தேயிலை செடிகள் உள்ள நிலம் கிடைத்துள்ளது, ஆனால் இது எனது மாத சம்பளத்தை பாதியாகக் குறைத்துவிட்டது. கொழுந்து பறிப்பதுடன் நிலத்தை சுத்தம் செய்வேண்டும் வேறு வேலைகளையும் செய்ய வேண்டும். சில சமயங்களில் ஓய்வு பெற்ற என் கணவர் எனக்கு உதவுகிறார், ஆனால் எங்கள் இலக்கை அடைவது மிகவும் கடினம்.

கடந்த மாதம் 4,000 ரூபாய் மட்டுமே அவருக்கு கிடைத்தது. ஒதுக்கப்பட்ட தேயிலை நிலங்கள் இரண்டு வெவ்வேறு இடங்களில் இருப்பதால், இடங்களுக்குச் செல்வதில் நேரம் வீணாகி, தினசரி இலக்கை அடைவதில் சிரமம் ஏற்பட்டது. தொழிற்சங்கங்கள் தொழிலாளர்களின் புகார்களை புறக்கணித்துள்ளன.

மஸ்கெலியாவில் உள்ள நல்லதண்ணி தோட்டத்தில் உள்ள தேயிலைத் தோட்டத்தில் மலையில் வேலை செய்யும் தொழிலாளர்கள் (Source: WSWS Media)

ஃபெயர்லோன் தோட்டத்தைச் சேர்ந்த ஒரு தொழிலாளி, “வருவாய்ப் பகிர்வு முறையை அறிமுகப்படுத்தியதைத் தொடர்ந்து, நிர்வாகத்தால் எங்கள் உரிமைகள் அபகரிக்கப்படுகின்றன, எங்களுடைய தோட்டத்தில் குடிநீர் விநியோகம் முற்றிலும் பழுதடைந்துள்ளது, அதன் பழுதுபார்ப்புக்கான செலவை நாங்கள் ஏற்க வேண்டியுள்ளது,” என்றார்.

கட்டுகெல்லை தோட்டம் மஸ்கெலியா பெருந்தோட்ட நிறுவனத்தால் நிர்வகிக்கப்படுகிறது. கடந்த செப்டம்பரில் தொழிலாளர்கள் அதிக வேலைச்சுமைக்கு எதிராக நடவடிக்கை எடுக்கத் தொடங்கியபோது, அவர்கள் நிர்வாகமும் பொலிசும் மேற்கொண்ட தொடர்ச்சியான தாக்குதல்களுக்கு இலக்காகினர். பதினொரு தொழிலாளர்கள் வேலைநீக்கம் செய்யப்பட்டு இப்போது நீதிமன்ற வழக்குகளை எதிர்கொள்கின்றனர்.

வருமானப் பகிர்வு மாதிரியானது இ.தொ.கா., தொ.தே.ச., ஜ.தொ.மு. மலையக மக்கள் முன்னணி (UPF) மற்றும் இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் (LJEWU) உட்பட அனைத்து தோட்டத் தொழிற்சங்கங்களாலும் ஆதரிக்கப்படுகிறது. கடந்த பொதுத் தேர்தலின் போது இ.தொ.கா. தலைவர் ஜீவன் தொண்டமான், தொ.தே.ச. தலைவர் ப. திகாம்பரம் ஆகியோர் இந்த சுரண்டல் முறைக்கு ஆதரவாக தீவிரமாக பிரச்சாரம் செய்தனர்.

தொண்டமான் தற்போது இராஜபக்ஷ அரசாங்கத்தில் இராஜாங்க அமைச்சராக இருப்பதோடு ஏனைய தொழிற்சங்கத் தலைவர்களும் கடந்த ஆட்சிகளில் அமைச்சுப் பதவிகளை வகித்துள்ளனர். தோட்டத் தொழிற்சங்கத் தலைவர்கள் அரசியல் ஸ்தாபனத்தின் ஒரு பகுதியாக உள்ளதுடன், அவர்கள் வழிநடத்தும் தொழிற்சங்கங்கள் கம்பனிகளுக்கும் அன்றைய அரசாங்கத்திற்கும் சேவை செய்கின்றன.

கடந்த வாரம், முன்னர் அரசுக்கு சொந்தமான தோட்டங்களை தனியார்மயமாக்கியதில் இருந்து 30 ஆண்டுகளைக் கொண்டாடிய பெருந்தோட்ட உரிமையாளர்கள் சங்கம் வருமானப் பகிர்வு மாதிரியை முழுமையாக செயல்படுத்தக் கோரியது. தேயிலை உற்பத்தியில் 70 சதவிகிதம் தொழிலாளர்களுக்காக செலவிடப்படுவதால் அதை குறைக்க வேண்டும் என்று அது கூறியது.

பெருந்தோட்ட உரிமையாளர் சங்க தலைவர்கள் இலங்கை தோட்டத் தொழிலாளர்களின் உற்பத்தியை, குறைந்த செலவில் அதிக உற்பத்தி பெறும் கென்யா மற்றும் தென்னிந்தியா உடன் ஒப்பிட்டனர். உலக சந்தையில் போட்டியிட புதிய முறைமை தேவை என்று அவர்கள் கூறினர். இலங்கை தோட்டத் தொழிலாளர்களுக்கு அதிக சம்பளம் வழங்குவதாகவும், ஒழுக்கமான வீடுகள் உட்பட சமூக நலன்களை வழங்குவதாகவும் அவர்கள் மீண்டும் மீண்டும் கூறினர்.

இந்தக் கூற்றுக்கள் பொய்யானவை. இலட்சக்கணக்கான தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களும் அடிப்படை சுகாதார வசதிகள் இல்லாத 10 x12 அடி வரிசை (லைன்) அறைகளில் வாழ்கின்றனர். தோட்டப் பாடசாலைகள் என்று ஒன்று இல்லாத அதே வேளை மருத்துவ நிலையங்கள் கிட்டத்தட்ட இல்லாமல் ஆக்கப்பட்டு வருகின்றன​.

பல ஆயிரம் குடும்பங்களுக்கு புதிய வீடுகள் வழங்கப்பட்டாலும், இவை பழைய லைன் அறைகளில் இருந்து வேறுபட்டவை அல்ல. அவை பிரதானமாக வெளிநாட்டு உதவித் திட்டங்களின் கீழ் கட்டப்பட்டவை.

வளர்ச்சி வீழ்ச்சி, அந்நியச் செலாவணி சரிவு மற்றும் வெளிநாட்டுக் கடன் தவனைத் தவறும் அபாயத்துடன் இலங்கை முதலாளித்துவம் எதிர்கொள்ளும் முன்னெப்போதும் இல்லாத பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், தோட்டத் தொழிலாளர்கள் மீது அதிகரித்துவரும் தாக்குதல்கள் கட்டவிழ்த்து விடப்படுகின்றன. இதன் பிரதிபலனாக அத்தியாவசியப் பொருட்களின் விலையை அரசாங்கம் உயர்த்தியுள்ளது. அடிப்படை உணவுப் பொருட்கள் மற்றும் எரிபொருளுக்கு பணம் செலவிட முடியாமல், தொழிலாள வர்க்கமும் கிராமப்புற மக்களும் இந்த நெருக்கடியின் சுமையை சுமந்து வருகின்றனர்.

கடந்த வாரம், ஜனாதிபதி இராஜபக்ஷ தனது அரசாங்கம் நிதி உதவிக்காக சர்வதேச நாணய நிதியத்தை நாடும் என்று அறிவித்தார். அதாவது இன்னும் கடுமையான சிக்கன நடவடிக்கைகள் திணிக்கப்படும் என்பதே இதன் அர்த்தமாகும்.

தோட்டத் தொழிலாளர்கள், ஏனைய துறைகளில் உள்ள அவர்களது சகாக்களைப் போலவே, சம்பளம் மற்றும் நிலைமைகளைப் பாதுகாக்க கடந்த ஆண்டு தொடர்ச்சியான போராட்டங்களில் இறங்கினர். ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் நடவடிக்கை குழு கூட்டத்தில் பின்வரும் கோரிக்கைகளின் அடிப்படையிலான போராட்டத்தின் அவசியம் குறித்து கலந்துரையாடப்படும்:

* வேலைநீக்கம் செய்யப்பட்ட அனைத்து தொழிலாளர்களையும் நிபந்தனையின்றி மீண்டும் வேலையில் அமர்த்த வேண்டும்.

* வருமானப் பகிர்வு முறைமை வேண்டாம்.

* வாழ்க்கைச் செலவு அதிகரிப்புடன் இணைக்கப்பட்ட ஊதிய அதிகரிப்பும் முழு சம்பளத்துடன் கூடிய விடுமுறை மற்றும் ஓய்வூதியத் திட்டம் வேண்டும்.

* ஒவ்வொரு தோட்டத்திலும் அனைத்து தொழிலாளர்களுக்கும் மருத்துவச் சலுகைகள் மற்றும் உயர்தர மருத்துவ வசதிகள் வேண்டும்.

*அனைவருக்கும் ஒழுக்கமான, வாழக்கூடிய வீடுகள் வேண்டும்.

இந்தக் கோரிக்கைகளுக்காகப் போராடுவதற்கு, தொழிற்சங்கங்கள் மற்றும் அவற்றின் அதிகாரிகளைச் சாராமல் தொழிலாளர்கள் தங்கள் சொந்த நடவடிக்கைக் குழுக்களை உருவாக்க வேண்டும்.

சோசலிச சமத்துவக் கட்சியால் ஆரம்பிக்கப்பட்ட, தோட்டத் தொழிலாளர் நடவடிக்கைக் குழுவானது கம்பனி, பொலிஸ் மற்றும் அரசாங்கத் தாக்குதல்களில் இருந்து தோட்டத் தொழிலாளர்களைப் பாதுகாக்க தொடர்ந்து போராடி வருவதுடன் தொழிற்சங்கங்களின் காட்டிக்கொடுப்புகளை அம்பலப்படுத்தியுள்ளது.

தொழிலாள வர்க்கத்தின் ஜனநாயகக் கட்டுப்பாட்டின் கீழ் பெருந்தோட்டக் கம்பனிகளை தேசியமயமாக்குவதற்கான போராட்டத்தின் மூலம் மட்டுமே தொழிலாளர்கள் மேற்கூறிய கோரிக்கைகளை அடையவும் அவர்களின் அடிப்படை உரிமைகளை வென்றெடுக்கவும் முடியும் என்று நாங்கள் கூறுகிறோம். இது சோசலிசக் கொள்கைகளுக்கான பரந்த போராட்டத்தினதும், இலங்கை மற்றும் சர்வதேச அளவில் தொழிலாளர்களுடனான ஐக்கியத்தினதும் பாகமாக இடம்பெற வேண்டும்.

தோட்டத் தொழிலாளர்கள் தங்கள் சர்வதேச வர்க்க சகோதர சகோதரிகளை நோக்கித் திரும்பி, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவால் முன்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள தொழிலாளர் நடவடிக்கை குழுக்களின் சர்வதேச கூட்டணியில் இணைய வேண்டும்.

Loading