ஜூலியன் அசான்ஜ் இலண்டனின் பெல்மார்ஷ் சிறையில் ஸ்டெலா மோரிஸை மணந்தார்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

விக்கிலீக்ஸ் ஸ்தாபகர் ஜூலியன் அசான்ஜ் தனது வருங்கால மனைவி ஸ்டெலா மோரிஸை நேற்று திருமணம் செய்து கொண்டார்.

கடந்த மூன்று ஆண்டுகளாக அசான்ஜ் அடைத்து வைக்கப்பட்டுள்ள பிரிட்டனின் உச்சபட்ச பாதுகாப்புள்ள பெல்மார்ஷ் சிறையில் இந்த திருமண விழா நடந்தது. அமெரிக்க அரசாங்கம் மற்றும் அதன் நட்பு நாடுகளின் போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்களை அம்பலப்படுத்தியதற்காக, ஆயுள் தண்டனை விதிக்கத்தக்க உளவு குற்றச்சாட்டின் பேரில் அவர் அமெரிக்காவிற்கு நாடு கடத்தப்படுவதை எதிர்த்துப் போராடுகிறார்.

கேப்ரியல் ஷிப்டன், ஜோன் ஷிப்டன், ஸ்டெல்லா மோரிஸ் மற்றும் ஸ்டெல்லாவின் தாய் (WSWS Media)

மோரிஸை வரவேற்க மதிய நேரம் முதல் அசான்ஜின் ஆதரவாளர்கள் சிறை நுழைவாயிலுக்கு வெளியே கூடினர். மாலை 4 மணிக்குப் பின்னர் மோரிஸ், ஜூலியனின் மகன்கள் மக்ஸ் (3 வயது) மற்றும் காப்ரியல் (4 வயது), அவரது தாயார், அவரது மாமனார் ஜோன் ஷிப்டன் மற்றும் மைத்துனர் காப்ரியல் ஆகியோருடன் சிறைக்கு வந்தார்.

மோரிஸ், திருமண உடை மற்றும் முக்காடு அணிந்து, கையில் ஒரு பூங்கொத்தைப் பிடித்தபடி, பொலிசாரின் சுற்றிவளைப்பை எதிர்கொண்டார். பொலிஸ் அதிகாரிகள் ஆதரவாளர்களையும் கூடியிருந்த ஊடக நிரூபர்களையும் தடுத்து நிறுத்தியதால், புகைப்பட கலைஞர்கள் அந்த சிறிய திருமண கொண்டாட்ட காட்சிகளை படம் பிடிக்க முட்டித் தள்ளியது ஒரு சலசலப்பூட்டும் காட்சியாக இருந்தது.

மணமகள் நலம் விரும்பிகளுடன் சேர்ந்து, நீண்ட கால அசான்ஜ் ஆதரவு பிரச்சாரகர்களால் வழங்கப்பட்ட ஏராளமான திருமண கேக்கை வெட்டினார். திருமணத்திற்காக அந்த குடும்பத்திற்கு வழங்கப்பட்ட இரண்டு மணிநேர கால அவகாசம் முடிவடைந்ததும், சிறையிலிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டதன் பின்னர், மோரிஸின் பேச்சு சுருக்கமாக ஆனால் இதயத்தை உருக்குவதாக இருந்தது, அது அவரது குணாதிசயமான தைரியத்தையும், துன்பத்திற்கு இடையில் கண்ணியத்தையும் வெளிப்படுத்துவதாக இருந்தது.

நீண்ட கால அசான்ஜ் ஆதரவு பிரச்சாரகர்களால் வழங்கப்பட்ட ஏராளமான திருமண கேக்குகள் (WSWS Media)

“நன்றி. எனக்கு என்ன சொல்வதென தெரியவில்லை. நான் மிகவும் மகிழ்ச்சியாகவும் மிகவும் வருத்தமாகவும் இருக்கிறேன். நான் ஜூலியனை முழு மனதுடன் நேசிக்கிறேன், மேலும் அவர் இங்கே இருக்க விரும்புகிறேன். நாம் அனுபவிப்பது கொடூரமானது, மனிதாபிமானமற்றது. நாங்கள் ஒருவருக்கொருவர் கொண்டிருக்கும் அன்பானது, இந்த சூழ்நிலையையும் வரவிருக்கும் எந்தவொரு சூழ்நிலையையும் எங்களை கடந்து செல்ல வைக்கிறது. அவர் உலகின் மிக அற்புதமான மனிதர், இந்த அற்புதமான மனிதர் சுதந்திரமாக இருக்க வேண்டும்.”

இந்நிகழ்வு ஒரு அவதூறான செயலாகும். முந்தைய நாள் கார்டியனில் வெளியிடப்பட்ட ஒரு கருத்தில் மோரிஸ் விளக்கியபடி, “சிறைச் சுவர்கள் இருந்தபோதிலும், அரசியல் வழக்குகள் இருந்தபோதிலும், தன்னிச்சையான தடுப்புக்காவலில் இருந்தபோதிலும், ஜூலியனுக்கும் எங்கள் குடும்பத்துக்கும் இழைக்கப்பட்ட தீங்கு மற்றும் துன்புறுத்தல்கள் இருந்தபோதிலும், இது அன்பையும் நெகிழ்ச்சியையும் வெளிப்படுத்தும் தருணமாகும்.”

அவர்களது திருமணத்தை நடத்தி பிரபலப்படுத்துவதன் மூலம், அசான்ஜை “பொது உணர்வில் இருந்து மறையச் செய்ய”, “எந்தச் சூழ்நிலையிலும் அவரை பொதுமக்கள் பார்க்க முடியாமல்” வைத்திருக்கும் பிரிட்டிஷ் அரசின் முயற்சிகளை எதிர்த்துப் போராடுவதாக மோரிஸ் கூறினார்.

திருமணத்திற்குப் பின்னர் பெல்மார்ஷ் சிறைக்கு வெளியே ஸ்டெல்லா மோரிஸ் (WSWS Media)

அரசாங்கத்தின் குற்றங்களை தைரியமாக அம்பலப்படுத்தி விக்கிலீக்ஸ் உருவாக்கியிருக்கும் பெரும் பொதுமக்கள் அனுதாபத்திலிருந்து அசான்ஜை தனிமைப்படுத்துவதற்கு அசாதாரணமான மற்றும் கொடூரமான முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன. பெல்மார்ஷ் சிறைக்கு கொண்டுவரப்படுவதற்கு முன்னர், 2019 இல் இலண்டனில் உள்ள ஈக்வடோர் தூதரகத்தில் அவர் தஞ்சம் புகுந்திருந்த காலத்தின் இறுதி மாதங்களில் அவர் எந்தவித தகவல் தொடர்பையும் பெற முடியாத வகையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார், மேலும் அவரது சொந்த நீதிமன்ற விசாரணைகளில் பெயரளவில் ஆஜராக அனுமதிக்கப்பட்டது தவிர மற்ற அனைத்திலிருந்தும் அவர் தடுக்கப்பட்டார். வீட்டுக் காவலின் கடுமையான நிபந்தனைகளின் கீழ் கூட அவரை பிணையெடுப்பதற்கான பல கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டுவிட்டன.

கடந்த ஆண்டு, சிறை அதிகாரிகள் திருமணத்தை தடுக்க முயன்றனர். தம்பதியினரின் முந்திய விசாரணைகளுக்குப் பின்னர் அக்டோபர் 7 அன்று பெல்மார்ஷ் சிறைக்கு திருமணத்திற்கான முறையான கோரிக்கை அனுப்பப்பட்டது, மேலும் சில நாட்களுக்குப் பின்னர் திருமணத்திற்கு தேவையான ஏற்பாடுகளைச் செய்ய மோரிஸூம் பதிவாளரும் சிறைக்கு வருவதற்கு அனுமதிக்குமாறு அசான்ஜின் வழக்குரைஞர்கள் கோரிக்கை விடுத்தனர். வாரக்கணக்கில் அதற்கு எந்த பதிலும் இல்லை. பின்னர், சிறை ஆளுநர் ஜென்னி லூயிஸ், இந்த வழக்கில் அமெரிக்க அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் Crown Prosecution Service க்கு கோரிக்கை அனுப்பப்பட்டுள்ளதாக இறுதியில் குறிப்பிட்டார்.

“ஜூலியனைக் கொல்லத் திட்டமிட்டு, அவரை உளவியல் ரீதியாக சித்திரவதை செய்து வேட்டையாட நினைக்கும் நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நிறுவனம் தான் நாங்கள் திருமணம் செய்து கொள்ளலாமா என்பதை முடிவு செய்கிறது என்பது திகைப்பூட்டும் விஷயமாக உள்ளது” என்று மோரிஸ் கருத்து தெரிவித்தார்.

“திருமணம் செய்து கொள்வதற்கு மட்டுமல்ல, அதற்கான சட்டபூர்வ செயல்முறையைத் தொடங்குவதற்கு கூட முழுமையான மற்றும் காலவரையற்ற தடையை” உருவாக்குவதன் மூலம் தங்களின் மனித உரிமைகளை மீறியதற்காக லூயிஸ் மற்றும் நீதித்துறை செயலர் டொமினிக் ராப் ஆகியோருக்கு எதிராக சட்ட ரீதியிலான நடவடிக்கை எடுக்க அசான்ஜூம் மோரிஸூம் இறுதியில் அவர்களை அச்சுறுத்த நேரிட்டது. அவர்களின் சட்ட நடவடிக்கைக்கான அறிவிப்பு காலம் முடிவடைவதற்கு சற்று முன்பு தம்பதியருக்கு அனுமதி வழங்கப்பட்டது.

திருமணம் முடிந்த பின்னர் காப்ரியல் ஷிப்டன், ஜோன் ஷிப்டன், ஸ்டெல்லா மோரிஸ், ஸ்டெல்லாவின் தாயார், மற்றும் குழந்தைகள் மக்ஸ் மற்றும் காப்ரியல் ஆகியோர் பெல்மார்ஷ் சிறையிலிருந்து வெளியேறி ஆதரவாளர்கள் மற்றும் நலம் விரும்பிகளை நோக்கிச் செல்கின்றனர் (WSWS Media)

கசப்புடன் ஒப்புக்கொள்ளப்பட்டதால், நேற்று திருமண விழா கடுமையாக கட்டுப்படுத்தப்பட்டது. நிகழ்வில் கலந்துகொள்ள ஆறு சாட்சியாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். “திரைக்குப் பின்னால், எங்களால் முன்மொழியப்பட்ட இந்த சாட்சியாளர்கள் அனைவரும் ஊடகவியலாளர்கள் என்பதால் அவர்களை அனுமதிக்க மறுத்த நீதி அமைச்சகம் மற்றும் சிறை அதிகாரிகள் உடனான ஒரு சர்ச்சையில் நாங்கள் சிக்கியுள்ளோம்; மேலும் தனிப்பட்ட முறையில் கலந்து கொள்ளும் தகுதியுடையவர் என்றாலும், எங்களால் முன்மொழியப்பட்ட புகைப்படக் கலைஞரும் ஒரு பத்திரிகை புகைப்படக் கலைஞர் என்பதால் அவரையும் அனுமதிக்க மறுத்தனர்” என்று கார்டியன் கருத்தில் மோரிஸ் மேலும் விளக்கமளித்துள்ளார்.

சிறைச்சாலையின் கூற்றுப்படி, இந்த நபர்கள் ‘பாதுகாப்புக்கு அபாயம்’ ஏற்படுத்தக்கூடியவர்களாகும். “பெல்மார்ஷ் வழமையாக புகைப்படம் எடுக்க அனுமதிக்கிறது. டாமி ராபின்சன் [பிரிட்டிஷ் பாசிசத் தலைவர்] மற்றும் ஏனைய தண்டனைக் கைதிகளை ITV படம்பிடித்தபோது கேமராவில் பேட்டி காண அவர்கள் அனுமதிக்கப்பட்டனர்” என்று மோரிஸ் குறிப்பாக சுட்டிக்காட்டினார்.

அனுமதி மறுக்கப்பட்ட சாட்சியாளர்களில் ஸ்காட்லாந்து பத்திரிகையாளரும், முன்னாள் இங்கிலாந்து தூதருமான கிரைக் முர்ரே ஒருவராவார். அவர் சிறைக்கு வெளியே நடந்த நிகழ்ச்சியில் மட்டும் கலந்து கொண்டார்.

கிரைக் முர்ரே (WSWS Media) [Photo: WSWS]

செய்தியாளர்களிடம் பேசிய முர்ரே கடைசி நிமிடத்தில் தான் விலக்கப்பட்டது குறித்து, “இந்த மகிழ்ச்சியான நாளில் கூட விருந்தினர் பட்டியிலில் இருந்து விருந்தாளிகளை கலந்து கொள்ள விடாமல் கடைசி நேரத்தில் தடுப்பதானது தற்போது அவருக்கு நடந்துகொண்டிருக்கும் உளவியல் சித்திரவதையின் ஒரு பகுதியாகும்” என்று கூறினார்.

மோரிஸை அசான்ஜ் திருமணம் செய்து கொண்டது “மிகத் தீவிரமான சூழ்நிலைகளில் நம்பிக்கை மற்றும் அன்பிற்கு கிடைத்த ஒரு உண்மையான வெற்றியாகும். இவர் தனது மனைவி மற்றும் குடும்பத்துடன் இனிமேல் வாழவே முடியாது என்ற ஒரு எதிர்பார்ப்பை எதிர்கொண்டுள்ள மனிதராவார்…

“இது ஜூலியனுக்கு கிடைத்த ஒரு உண்மையான வெற்றி என்றே நான் நினைக்கிறேன். ஜூலியனுக்கு திருமணம் செய்துகொள்ள உரிமை இருந்தாலும், அதற்கான உரிமையை உறுதிப்படுத்த அவர் போராட வேண்டியிருந்தது.”

இந்த நிகழ்வில் தனிப்பட்ட முறையில் கலந்துகொண்டதை தெளிவுபடுத்திய போதிலும், அசான்ஜின் விருந்தினர் பட்டியலில் இருந்து ஒரு பத்திரிகை புகைப்படக் கலைஞர் தடைசெய்யப்பட்ட உண்மையைப் பற்றி முர்ரே கருத்து தெரிவிக்கையில், “முழு திருமண நிகழ்வும் நிச்சயமாக பாதுகாப்புத் துறையால் ஒவ்வொரு கணமும், அநேகமாக பல்வேறு கோணங்களில் இரகசியமாக புகைப்படம் எடுக்கப்பட்டு கண்காணிக்கப்படும்” என்று கூறினார்.

அசான்ஜின் திருமண நாளில் அவரை புகைப்படம் எடுக்கக் கூட அனுமதிக்க அதிகாரிகள் ஏன் பயப்படுகிறார்கள் என்று கேட்டதற்கு, முர்ரே, “ஊடகங்கள் அவரைப் பற்றி எந்தவித அனுதாபத்தையும் உருவாக்குவதை அவர்கள் விரும்பவில்லை. அதனால் தான் அவர்கள் அவரது திருமணத்தை புகைப்படம் எடுக்க பயப்படுகிறார்கள், மேலும் நான் அங்கு இருந்தது பற்றியும் குறிப்பிடுகிறார்கள்” என்று பதிலளித்தார்.

அசான்ஜை அமெரிக்காவிற்கு நாடு கடத்துவதற்கான முன்னைய உயர் நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக அசான்ஜின் வழக்குரைஞர்கள் மேல்முறையீட்டை விசாரிக்க இங்கிலாந்து உச்ச நீதிமன்றம் மறுத்து இரண்டு வாரங்களுக்குள் திருமணம் நடைபெற்றது. அவருக்கு பல்வேறு மேல்முறையீடுகளைச் செய்வதற்கான உரிமை இருந்தாலும், சம்பந்தப்பட்ட நீதிமன்றங்கள் அவற்றை விசாரிக்க ஒப்புக்கொள்வதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. அவர்கள் மறுத்துவிட்டால், சில மாதங்களில் அவர் நாடு கடத்தப்படலாம்.

இந்த இடைவிடாத பிரச்சாரத்தை எதிர்கொள்கையில் கூட, அசான்ஜூம் அவரது குடும்பத்தினரும் தொடர்ந்து அபரிமிதமான தைரியத்தைக் காட்டுகின்றனர். அவர்களின் இந்த தைரியம் அவரது ஆதரவாளர்களுக்கு அவரது சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்கான பிரச்சாரத்தை உருவாக்க எல்லா வாய்ப்பையும் அளிக்கிறது.

திருமணம் நடந்தபோது பெல்மார்ஷ் சிறைக்கு வெளியே கூடியிருந்த ஜூலியன் அசான்ஜ் மற்றும் ஸ்டெல்லா மோரிஸின் ஆதரவாளர்கள் (WSWS Media)

அந்த பிரச்சாரத்திற்கு பரந்த வெகுஜன ஆதரவு அவசரமாக கிடைக்க வேண்டும். ஆனால், விக்கிலீக்ஸ் ஸ்தாபகர் தனிமைப்படுத்தப்படுவதற்கு அவதூறுகளைப் பரப்பியும் மௌனம் சாதித்தும் முதன்மை பொறுப்பைக் கொண்டுள்ள பெருநிறுவன ஊடகங்களிடம் முறையிடுவதன் மூலம் அதைச் செய்ய முடியாது. மேலும், தொழிற்சங்கங்கள் மற்றும் தொழிற் கட்சியின் 'இடதுகள்' மூலம் மக்கள் ஆதரவைப் பெறுவதும் சாத்தியமில்லை. அவர்களில் எவரும் நேற்றைய நிகழ்வில் கலந்து கொள்ளவில்லை. மேலும் எந்த வகையிலும், நடுத்தர வர்க்கம் மற்றும் தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் மெல்லிய அடுக்குக்கு வெளியே குறிப்பிடத்தக்க சக்தியை அவர்கள் பிரதிநிதித்துவப்படுத்துவதில்லை.

சர்வதேச தொழிலாள வர்க்கம், சரிந்து வரும் வாழ்க்கைத் தரங்கள், சமூக செலவின வெட்டுக்கள், எதேச்சதிகாரம் மற்றும் வளர்ந்து வரும் போர் அபாயம் ஆகியவற்றிற்கு எதிராக அதன் அரசாங்கங்களை எதிர்க்க முன்வருவது போல, அசான்ஜை விடுவிப்பதற்கான பிரச்சாரத்திலும் அது நேரடியாக தலையிட்டு அதனை கட்டமைக்க வேண்டும். சர்வாதிகாரம் மற்றும் ஏகாதிபத்தியத்தை எதிர்க்கும் உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் பாரிய இயக்கத்துடன் அசான்ஜை மீண்டும் இணைப்பதன் மூலம் மட்டுமே அவரது துன்புறுத்தலுக்கு முடிவுகட்ட முடியும், மேலும் அவரை சித்திரவதை செய்பவர்களை நீதியின் முன் நிறுத்த முடியும்.

Loading