உக்ரேன் போரின் வரலாற்று மற்றும் அரசியல் பின்னணி தொடர்பாக நண்பர் ஒருவருக்கு ஒரு கடிதம்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

உலக சோசலிச வலைத் தளத்தின் சர்வதேச ஆசிரியர் குழுவின் தலைவர் டேவிட் நோர்த்திடம், ரஷ்யா-உக்ரேன் போர் குறித்து அமெரிக்க கல்லூரியில் சமீபத்தில் நடைபெற்ற இணையவழி கருத்தரங்கம் பற்றி அவரது கருத்தைக் கேட்ட நண்பருக்கு பின்வரும் கடிதம் அனுப்பப்பட்டது.

அன்புடன் நண்பருக்கு,

ரஷ்யா-உக்ரேன் போர் பற்றிய இணையவழி கருத்தரங்கத்தை எனது கவனத்திற்குக் கொண்டு வந்து பல்கலைக்கழக நிகழ்வில் நான் கலந்துகொள்ள ஒழுங்மைத்தற்கு நன்றி. நான் இப்போது ஒளிபரப்பைக் கேட்டேன். நீங்கள் கோரியபடி, இரண்டு கல்வியாளர்களின் விளக்கக்காட்சியை பற்றிய எனது 'தகுதிமிக்க' கருத்தை உங்களுக்குத் தருகிறேன். யூதப்படுகொலை (Holocaust) ஆய்வுத்துறையில் அவரின் பணிதொடர்பாக எனக்குப் பரிச்சயமான வரலாற்றாசிரியரின் கருத்துக்களில் நான் கவனம் செலுத்துவேன். எப்படியிருந்தாலும், அவர் மிகவும் முக்கியமான கருத்துக்களை வெளியிட்டார்.

வெளிப்படையாகச் சொல்வதென்றால், உலக நிகழ்வுகளில் இந்த முக்கியமான மற்றும் ஆபத்தான திருப்புமுனை தொடர்பாக எடுக்கப்பட்ட மேலோட்டமான அணுகுமுறையால் நான் அதிருப்திடைந்தாலும், ஆச்சரியப்படுவதற்கில்லை. போர் பற்றிய எனது மதிப்பீடு சர்வதேச சோசலிச அரசியலில் தீவிரமாக இருக்கும் ஒருவருடையதாக இருக்கும் என்பது உங்களுக்குத் தெரியும். உக்ரேன் மீதான ரஷ்ய படையெடுப்பை உலக சோசலிச வலைத் தளம் பகிரங்கமாகக் கண்டித்துள்ளது.

எவ்வாறாயினும், இந்த அரசியல் இடதுகளின் கொள்கை ரீதியான எதிர்ப்பு, கோரமான ஒருதலைப்பட்ச உத்தியோகபூர்வ அமெரிக்க-நேட்டோ பிரச்சார புனைகதையுடன் பொதுவானது எதையும் கொண்டிருக்கவில்லை. இக்கதை, இப்படையெடுப்பை ரஷ்யாவின் முற்றிலும் முன்தூண்டப்படாத ஆக்கிரமிப்புச் செயலாகக் காட்டுகிறது.

போர்கள் மற்றும் புரட்சிகள் போன்ற முக்கியமான நிகழ்வுகள் எப்போதும் அதற்கான சிக்கலான காரணங்களை எழுப்புகின்றன. இதனால்தான் தீவிர அரசியல் பகுப்பாய்விற்கு வரலாற்றை ஆய்வு செய்வது இன்றியமையாத அடித்தளமாக இருக்கின்றது. ரஷ்யா பற்றிய எந்தவொரு விவாதத்திலும் இந்த பொதுவான உண்மை தனிச்சிறப்புவாய்ந்த முக்கியத்துவத்தைப் பெறுகிறது. இந்த நாடு இருபதாம் நூற்றாண்டின் மிக முக்கியமான அரசியல் நிகழ்வான 1917 அக்டோபர் புரட்சியின் தளமாக இருந்தது. அதன் வரலாற்று, அரசியல் மற்றும் அறிவுசார் மரபு இன்னும் நம் காலத்திலும் எதிரொலிக்கிறது. சமகால உலகின் அரசியல் மற்றும் பிரச்சனைகளை புரிந்து கொள்வதற்கு சோவியத் வரலாற்று பற்றிய ஆய்வு முக்கியமானதாக இருக்கின்றது.

இந்தக் கருத்தைக் கூறுவது அரசியல்ரீதியாக கடந்த காலத்தினை நினைவுகூருவது அல்ல. வரலாற்றாசிரியர் தனது ஆரம்பக் கருத்துக்களில் சோவியத் ஒன்றியத்தின் இறுதிப் பத்தாண்டுகளை சுருக்கமாகக் குறிப்பிட்டு அதன் கலைப்பினால் ஏற்பட்ட அதிர்ச்சியை வலியுறுத்தினார். இருப்பினும், விளாடிமிர் புட்டினின் தனிப்பட்ட உளவியலில் இந்த நிகழ்வின் தாக்கத்தை அவர் வலியுறுத்தியதன் மூலம் ரஷ்யா அல்லது தற்போதைய போரைப் பற்றிய முக்கியமான புரிந்துகொள்ளலுக்கு அது வழிவகுக்கவில்லை. சோவியத் ஒன்றியத்தை கலைக்க ஸ்ராலினிச அதிகாரத்துவம் எடுத்த முடிவிலிருந்து வெளிப்பட்ட ஆட்சியின் சமூக-பொருளாதார அடித்தளங்களை அவர் விளக்க முயற்சிக்கவில்லை.

முக்கியமான கேள்விகள் கேட்கப்படவில்லை. புட்டின் யாருடைய நலன்களுக்காக ஆட்சி செய்கிறார்? ரஷ்ய முதலாளித்துவ உயரடுக்கின் நலன்களை பாதுகாப்பது பற்றிய பார்வையில் அரசு சொத்துக்களை தனியார்மயமாக்குவது என்ன தாக்கத்தை ஏற்படுத்தியது? புட்டினின் வெளியுறவுக் கொள்கையை சோவியத் ஒன்றியத்துடன் ஒப்பிடுகையில், அதன் கொள்கைகளில் என்ன கூறுகள் மாறின, என்ன கூறுகள் நீடித்தன?

அதன் புவியியல் நிலை ஒரு உறுதியான காரணியாகும். மேலும் இது பல படையெடுப்புகளின் நிலப்பரப்பாக இருந்த ரஷ்யாவை வேட்டையாடிய ஒன்றாகும். இதில் 30 முதல் 40 மில்லியன் குடிமக்களின் உயிரை பலியெடுத்த 80 ஆண்டுகளுக்கு முன்பு நாஜி ஜேர்மனியால் தொடங்கப்பட்ட அழிப்புப் போரை பற்றியும் நான் குறிப்பிட வேண்டும். 1989 இல் பேர்லினில் உள்ள KGB தலைமையகத்திற்கு வெளியே அணிதிரண்ட கும்பல்கள் பற்றிய காட்சியினால் புட்டினுக்கு ஏற்பட்ட தாக்கத்தை வரலாற்றாசிரியர் குறிப்பிட்டார். 'பெரும் தேசபக்தி போர்' மற்றும் அதன் பின்விளைவுகளினால் நீடித்திருக்கும் சமூகரீதியான நினைவுகளை விட அந்த சம்பவம் அவரை அதிகம் பாதித்திருக்கும் என்று நம்புவது கடினமாகும்.

1949 இலிருந்து நேட்டோவின் கிழக்கு நோக்கி விரிவாக்கத்தை காட்டும் வரைபடம் Map showing the eastward expansion of NATO since 1949 (Credit: Wikimedia) [Photo by Patrickneil / CC BY-NC-SA 4.0]

ஜூன் 22, 1941 இல் தொடங்கிய பேரழிவு ரஷ்யர்களின் கூட்டு நனவில் பொதிந்துள்ளது. இது இரண்டாம் உலகப் போரில் இருந்து அலெக்சாண்டர் டுகின் போன்ற தீவிர வலதுசாரிக் கூறுகளை போல், புட்டினால் எடுக்கப்பட்ட தேசியவாத முடிவுகளை நியாயப்படுத்துவது அல்ல. ஆனால் இரண்டாம் உலகப் போரின் அனுபவம், இழந்த சாம்ராஜ்யத்தின் கனவுகள் எனக் கூறப்படுபவற்றைக் காட்டிலும், தொழிலாளர்களின் மத்தியில் இருப்பது உட்பட ரஷ்ய உள்உணர்வைப் புரிந்துகொள்வதில் முக்கியமானது.

அத்துடன், போரைப் பற்றிய இணையவழி விவாதத்தில் எனக்கு மிகவும் கவலையாக இருப்பது என்னவென்றால், கடந்த 30 ஆண்டுகளில் அமெரிக்கா, பெரும்பாலும் அதன் நேட்டோ நட்பு நாடுகளின் ஆதரவுடன் நடத்திய போர்கள் பற்றிய எந்தக் குறிப்பும் இல்லாததுதான். ஊடகங்களில் இந்தப் போரின் முழுத் தகவல்களும் வெறுக்கத்தக்க மட்டத்திலான ஒரு பாசாங்குத்தனத்தால் குணாதியசயப்பட்டுள்ளன. கடந்த மாதத்தில் ரஷ்யர்கள் மீது சுமத்தப்பட்ட குற்றங்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என ஒருவர் ஏற்றுக்கொண்டாலும், அமெரிக்காவும் நேட்டோவும் ஈராக், லிபியா மற்றும் ஆப்கானிஸ்தான் மீது ஏற்படுத்திய பயங்கரங்களின் அளவை அது அணுகக்கூடவில்லை. அமெரிக்க குண்டுவீச்சுகள், ஏவுகணைத் தாக்குதல்கள் மற்றும் இலக்கு வைக்கப்பட்ட கொலைகளின் முடிந்த மற்ற நாடுகளைப்பற்றிக் குறிப்பிடத்தேவையில்லை. ஒளிபரப்புச் செய்திகள் மற்றும் அச்சு ஊடகங்களில் ஒருவர் பார்ப்பது மற்றும் படிப்பது ஆகியவற்றின் அடிப்படையில், அமெரிக்காவின் ஒரு கூட்டு நினைவு இழப்பு வைரஸால் கையகப்படுத்தப் படுத்தப்பட்டு விட்டதோ என்ற கருத்தை ஒருவர் உருவாக்கிக்கொள்ளலாம்.

'அதிர்ச்சியும் அச்சுறுத்தலும்' யாருக்கும் நினைவில் இல்லையா? பென்டகன் உக்ரேன் மீதான போரைத் திட்டமிட்டிருந்தால், போரின் முதல் இரவிலேயே கியேவ் மற்றும் கார்கிவ் நகரங்கள் தரைமட்டமாக்கப்பட்டிருக்கும். மரியுபோலில் உள்ள மகப்பேறு மருத்துவமனை மீதான தாக்குதல் (தற்போது விபரிக்கப்படுவதுபோல் அதனை உண்மையாக ஏற்றுக்கொண்டால்) மூன்று உயிர்களை பலிவாங்கியது வார்த்தைகளால் விபரிக்க முடியாத மிருகத்தனமான செயல் என்பதுபோல் அமெரிக்க ஊடகங்கள் செயல்பட்டன. 1991 பிப்ரவரியில் கிட்டத்தட்ட 1500 பெண்களும் குழந்தைகளும் இறந்த பாக்தாத்தின் புறநகரில் உள்ள அமிரியா நகரின் மீதான வான்வழித் தாக்குதல் புகலிடம் மீது அமெரிக்கா குண்டுவீசித் தாக்கியதை அனைவரும் மறந்துவிட்டீர்களா? அமெரிக்காவின் 'தேர்வுப் போர்களால்' 1 மில்லியனுக்கும் அதிகமான இறப்புகள் ஏற்பட்டதாக நம்பகத்தன்மையுடன் மதிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் இறப்பது தொடர்கிறது. ஆப்கானிஸ்தானில் இலட்சக்கணக்கான குழந்தைகள் பட்டினியால் வாடுகின்றனர். நேட்டோ குண்டுகளால் லிபியாவில் உருவாக்கப்பட்ட பேரழிவின் கருமை நிறத்தோல் அகதிகள் இன்னும் மத்தியதரைக் கடலில் மூழ்கிக் கொண்டிருக்கிறார்கள். இதை யாராவது கவனிக்கிறார்களா? உக்ரேனில் உள்ள ஐரோப்பியர்களை விட மத்திய ஆசியா மற்றும் மத்திய கிழக்கு மக்களின் உயிர்கள் விலைமதிப்பற்றதா?

இப்போது புட்டினை ஹிட்லருடன் ஒப்பிடும் பத்திரிகையாளர்கள் சேர்பியா மீதான வான்வழிப் போரின் போதும் பின்னர் ஈராக் ஆக்கிரமிப்பின் போதும் தாங்கள் எழுதியதை மறந்துவிட்டதாகத் தெரிகிறது. நியூ யோர்க் டைம்ஸின் தோமஸ் ஃபிரீட்மனை ஒரு முக்கிய புவிசார் அரசியல் சிந்தனையாளர் என்று இந்த வரலாற்றாசிரியர் குறிப்பிட்டார். ஏப்ரல் 23, 1999 அன்று சேர்பியா மீது அமெரிக்க-நேட்டோ குண்டுவீச்சின் போது அவர் எழுதியதை நினைவு கூர்வோம்:

ஆனால் நேட்டோவின் ஒரேயொரு பலம் அது என்றென்றும் குண்டு வீசக்கூடியதுதான் என்றால், அது சாத்தியமான அனைத்தையும் செய்ய வேண்டும். குறைந்தபட்சம் ஒரு உண்மையான ஆகாயப்போரையாவது நடத்துவோம். சக சேர்பியர்கள் கொசோவோவை 'இனச்சுத்திகரிப்பு செய்கின்றபோது' மக்கள் இன்னும் பெல்கிராட்டில் ராக் இசைநிகழ்ச்சிகளை நடத்துகிறார்கள் அல்லது ஞாயிற்றுக்கிழமை பொழுதுபோக்கு களியாட்டங்களுக்கு வெளியே செல்கிறார்கள் என்றால் அந்த எண்ணமே மோசமானது. பெல்கிராட்டில் விளக்குகள் எரியாமல் இருக்க வேண்டும்: ஒவ்வொரு மின் கட்டம், தண்ணீர் குழாய், பாலம், சாலை மற்றும் போர் தொடர்பான தொழிற்சாலை ஆகியவை குறிவைக்கப்பட வேண்டும்.

விரும்பியோ விரும்பாமலோ, நாங்கள் சேர்பிய தேசத்துடன் போரில் இருக்கிறோம் (சேர்பியர்கள் நிச்சயமாக அப்படித்தான் நினைக்கிறார்கள்), மற்றும் அதில் உள்ளடங்கியுள்ள விடயம் மிகவும் தெளிவாக இருக்க வேண்டும்: நீங்கள் கொசோவோவை ஒவ்வொரு வாரமும் அழிக்கும் போதும் உங்களைத் தூள்தூளாக்கி உங்கள் நாட்டை நாங்கள் இன்னொரு தசாப்தம் பின்னுக்குத் தள்ளுவோம். உங்களுக்கு 1950 வேண்டுமா? நாங்கள் 1950 இனை உங்களுக்கு கிடைக்கச்செய்வோம். உங்களுக்கு 1389 வேண்டுமா? நாம் 1389 இனையும் உங்களுக்கு கிடைக்கச்செய்வோம். எங்களால் அவ்வாறு செய்ய முடிந்தால், திரு. மிலோசெவிக் கண் சிமிட்டுவார். அவருடைய முதல் படபடப்பை நேற்று நாம் பார்த்திருக்கலாம்.

2003 ஆம் ஆண்டு ஈராக் மீதான அமெரிக்க படையெடுப்பின் போது ஒரு அமெரிக்க வழிகாட்டி ஏவுகணை க்ரூஸர் ஒரு டோமாஹாக் ஏவுகணையை வீசுகிறது [Credit: US Navy]

வாஷிங்டன் போஸ்ட் கட்டுரையாளர் ஜோர்ஜ் வில்லின் வார்த்தைகளை நினைவுபடுத்த என்னை அனுமதியுங்கள். அவர் இப்போது புட்டினின் குற்றங்கள் குறித்து ஆத்திரத்தில் கொதித்தெழுந்துள்ளார். ஆனால் ஏப்ரல் 7, 2004 தேதியிட்ட பத்தியில் ஈராக் மீதான அமெரிக்க படையெடுப்பின் போது ஜோர்ஜ் வில் எழுதியது இதுதான்:

ஆட்சி மாற்றம், ஆக்கிரமிப்பு, தேசத்தைக் கட்டியெழுப்புதல் ஆகியவற்றை ஒரு வார்த்தையில் குறிப்பிட்டால் பேரரசின் இரத்தம் தோய்ந்த வணிகமாகும். ஈராக்கின் நகர்ப்புற போராளிகளை நிராயுதபாணியாக்க அல்லது தோற்கடிக்க தேவையான வன்முறையை பயன்படுத்துவதற்காக இப்போது அமெரிக்கர்கள் தங்களைத் தாங்களே உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.

ஒரு வாரத்திற்குப் பின்னர், ஏப்ரல் 14, 2004 அன்று, வில் மற்றொரு கொலைவெறியை இடுகை போஸ்டில் கட்டவிழ்த்துவிட்டார்:

பல்லூஜாவிற்கு பின்னர், கடற்படையினர் மற்றும் பிற அமெரிக்கப் படைகளுக்கான நடவடிக்கைகளின் முதலில் இருப்பது அவர்களின் அடிப்படை வேலையான கொலைகார பலாத்காரத்தினை பயன்படுத்துவதாகும்.

வில்லின் பத்திகள் விதிவிலக்கானவை அல்ல. இது அந்த நேரத்தில் அமெரிக்க பண்டிதர்கள் என்ன எழுதிக் கொண்டிருந்தார்கள் என்பதற்கு மிகவும் பொதுவான ஒன்றாகும். ஆனால் மாறியது என்னவெனில் பரந்த மக்களின் பிரதிபலிப்பாகும். அந்த நேரத்தில், அமெரிக்கப் போர்களுக்கும் அவற்றைத் தூண்டிய வெளியுறவுக் கொள்கைகளுக்கும் எதிர்ப்பு பரவலாக இருந்தது. ஆனால் இன்று மக்கள் எதிர்ப்பின் தடயங்களைக் கூட கண்டுபிடிப்பது கடினமாக உள்ளது.

சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டதில் இருந்து அமெரிக்காவின் ஆக்கிரமிப்பு வெளியுறவுக் கொள்கையை ஆய்வு செய்வது அமெரிக்க பாசாங்குத்தனத்தை அம்பலப்படுத்துவது மட்டுமல்ல. ரஷ்ய கொள்கைகள் வகுக்கப்பட்ட உலகளாவிய உள்ளடக்கத்தின் பகுப்பாய்விற்கு அப்பாற்பட்டு அவற்றை எவ்வாறு புரிந்துகொள்வது? அமெரிக்கா இடைவிடாது போரை நடத்தி வரும் நிலையில், நேட்டோவின் விரிவாக்கத்தை புட்டின் எச்சரிக்கையுடன் பார்ப்பது பகுத்தறிவற்றதா? கருங்கடல் பகுதி, காஸ்பியன் பிராந்தியம் மற்றும் யூரேசிய நிலப்பரப்பு ஆகியவற்றில் அமெரிக்காவின் பாரிய மூலோபாய நலன்களை அவரும் மற்ற ரஷ்ய கொள்கை வகுப்பாளர்களும் நிச்சயமாக அறிந்திருக்கிறார்கள். மறைந்த ஷிபிக்னியேவ் ப்ரெஸின்ஸ்கி (Zbigniew Brzezinski) மற்றும் பிற முன்னணி அமெரிக்க புவிசார் மூலோபாயவாதிகள் 'உலகத் தீவு' என்று அழைக்கப்படும் யூரேசியா மீதான அமெரிக்காவின் மேலாதிக்கம் ஒரு தீர்க்கமான மூலோபாய இலக்கு என நீண்ட காலமாக வலியுறுத்தி வருவது ஒன்றும் இரகசியமானது அல்ல.

சீனாவுடனான அமெரிக்க மோதல் அதிகரித்து வரும் சூழலில் இந்த தேவை இன்னும் முக்கியமானதாக மாறியுள்ளது.

இந்த கட்டமைப்பிற்குள் தான் உக்ரேனின் எதிர்காலம் அமெரிக்காவிற்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த விஷயமாக மாறியுள்ளது. உக்ரேனில் தனது செல்வாக்கை இழந்த ரஷ்யா, ஒரு சிறிய சக்தியின் நிலைக்குத் தள்ளப்பட்டுவிடும் என ப்ரெஸின்ஸ்கி வெளிப்படையாகக் கூறினார். மிகவும் அச்சுறுத்தும் வகையில், ஆப்கானிஸ்தானில் முந்தைய சோவியத் தலையீட்டைப் போலவே தன்னைத்தானே அழித்துக் கொள்ளும் ஒரு போருக்குள் உக்ரேனில் ரஷ்யாவை கவர்ந்திழுப்பது பற்றி ப்ரெஸின்ஸ்கி வெளிப்படையாக பேசினார். 2014 ஆம் ஆண்டு அமெரிக்க ஆதரவுடன் நடந்த மைதான் சதுக்க சதியிலிருந்து போருக்கு இட்டுச் சென்ற நிகழ்வுகள் வரையிலான மறுஆய்வு இந்த இலக்கு இப்போது அடையப்பட்டுள்ளது என்ற வாதத்தை வலுவாக ஆதரிக்கிறது.

மீண்டும், அமெரிக்கா மற்றும் நேட்டோவின் நடவடிக்கைகளை ரஷ்யா ஒரு தீவிர அச்சுறுத்தலாக உணர்ந்தது என்பதை ஏற்றுக்கொள்வதால் படையெடுப்பை நியாயப்படுத்த முடியாது. ஆனால் அமெரிக்காவின் கொள்கைகள் அதை எப்படி வழிநடத்தியது மற்றும் வேண்டுமென்றே தூண்டியது என்பதை பற்றிய விமர்சனரீதியான மதிப்பீடு இருக்க வேண்டாமா?

டிசம்பர் 28, 2021 அன்று Foreign Affairs இனால் இணையத்தில் இடுகையிடப்பட்ட கட்டுரையில், படையெடுப்புக்கு கிட்டத்தட்ட இரண்டு மாதங்களுக்கு முன்பு, ஆய்வாளர் டிமிட்ரி ட்ரெனின் (Dmitri Trenin) பின்வருமாறு எழுதினார்:

குறிப்பாக, நேட்டோவை விரிவுபடுத்துவதற்கான பொதுவான நீண்டகால தடைக்கும் மற்றும் ஐரோப்பாவில் இடைத்தூர ஏவுகணைகளை நிறுத்தக்கூடாது என்ற உறுதிப்பாட்டிற்கும் அமெரிக்க அரசாங்கம் ஒப்புக்கொண்டால் கிரெம்ளின் திருப்தி அடையலாம். இது ரஷ்யாவிற்கும் நேட்டோவிற்கும் இடையே ஒரு தனி ஒப்பந்தம் மூலம் உறுதிப்படுத்தப்படலாம். இது பால்டிக் முதல் கருங்கடல் வரை அவர்களின் பிரதேசங்கள் சந்திக்கும் பகுதிகளில் இராணுவப் படைகள் மற்றும் நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும். …

நிச்சயமாக, பைடென் நிர்வாகம் ரஷ்யாவுடன் தீவிரமாக அதுதொடர்பான உடன்பாட்டில் ஈடுபட விரும்புகிறதா என்பது ஒரு திறந்த கேள்வி. உள்நாட்டு அரசியல் துருவமுனைப்படுத்தலாலும் மற்றும் புட்டினுடன் ஒப்பந்தம் செய்வது பைடென் நிர்வாகத்தை ஒரு எதேச்சதிகாரத்திற்கு அடிபணியச் செய்கிறது என்ற விமர்சனத்திற்கு திறக்கிறது என்ற உண்மையின் காரணமாக எந்தவொரு ஒப்பந்தத்திற்கும் எதிர்ப்பு அமெரிக்காவில் அதிகமாக இருக்கும். ஐரோப்பாவிலும் எதிர்ப்பு அதிகமாக இருக்கும், அங்கு வாஷிங்டனுக்கும் மாஸ்கோவிற்கும் இடையே பேச்சுவார்த்தை மூலம் தீர்வு ஏற்படுவது தங்களை ஓரங்கட்டுவதாக அதன் தலைவர்கள் கருதுவார்கள். [உக்ரேனில் புட்டின் உண்மையில் என்ன விரும்புகிறார்: ரஷ்யா நேட்டோவின் விரிவாக்கத்தை நிறுத்த முயல்கிறது. மேலும் பிரதேசத்தை இணைக்க அல்ல]

உக்ரேனின் நேட்டோ அங்கத்துவம் அல்லாத அந்தஸ்து குறித்த ஒரு ஒப்பந்தம் உறுதி செய்யப்பட்டிருந்தால், தற்போதுள்ள சூழ்நிலையை விட அது விரும்பத்தக்கதாக இருந்திருக்காதா? உக்ரேன் நேட்டோவில் இணைவதை ரஷ்யா ஆட்சேபிக்க எந்த காரணமும் இல்லை என்று தீவிரமாக வாதிட முடியுமா? அக்டோபர் 1962 நெருக்கடியை கண்டவர்கள், கியூபாவில் சோவியத் ஒன்றியம் பாலிஸ்டிக் ஏவுகணைகளை நிலைநிறுத்தியதால் அது தூண்டப்பட்டது என்பதை நினைவில் கொள்வார்கள். இது காஸ்ட்ரோ ஆட்சியின் முழு ஒப்புதலுடன் செய்யப்பட்டாலும், ஜனாதிபதி கென்னடி அமெரிக்க கண்டத்தின் மேற்கு அரைக்கோளத்தில் சோவியத் இராணுவ பிரசன்னத்தை அமெரிக்கா ஏற்காது என்றும், இந்த விவகாரத்தில் அணு ஆயுதப் போரை எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.

அது 60 ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்தது. உதாரணமாக, மெக்சிகோ அல்லது வேறு ஏதேனும் கரீபியன் அல்லது இலத்தீன் அமெரிக்க நாடு அது முற்றிலும் தற்காப்பு என கூறப்பட்டு சீனாவுடன் இராணுவக் கூட்டணியில் நுழைந்தால், பைடென் நிர்வாகம் இன்று குறைவான ஆக்ரோஷத்துடன் செயல்படும் என்று யாராவது உண்மையிலேயே நம்ப முடியுமா?

தீவிரமாக கவனிக்கப்படாத இன்னும் ஒரு பிரச்சினை உள்ளது. இரண்டு பேராசிரியர்களும் உக்ரேனில் பாசிசத்தின் தொடர்ச்சியான அரசியல் மற்றும் கலாச்சார செல்வாக்கைக் குறைத்துக்காட்டினர். இது பாரிய கொலையாளி ஸ்டீபன் பண்டேராவின் புதுப்பிக்கப்பட்ட மகிமையிலும், அசோவ் படைப்பிரிவு போன்ற பெரும் ஆயுதமேந்திய துணை இராணுவப் படைகளின் செல்வாக்கிலும் எடுத்துக்காட்டப்பட்டுள்ளது. அசோவ் படைப்பிரிவு உக்ரேனிய தேசியவாதிகளின் அமைப்பு (OUN) மற்றும் அதன் ஆயுதப் படையான உக்ரேன் எழுச்சி இராணுவம் (Ukrainska povstanska armiia - UPA) ஆகியவற்றின் அச்சுறுத்தும் பாரம்பரியத்துடன் தன்னை அடையாளம் காட்டிக்கொள்கின்றது. உக்ரேனிய யூதர்களை அழிப்பதில் OUN மற்றும் UPA ஆற்றிய முக்கிய பங்கு நன்கு ஸ்தாபிக்கப்பட்ட வரலாற்று உண்மையாகும். அவர்களின் இனப்படுகொலைக் குற்றங்களின் மிகச் சமீபத்திய பங்கு பற்றிய, உக்ரேனிய தேசியவாதிகள் மற்றும் படுகொலை: OUN மற்றும் UPA இன் உக்ரேனிய யூதர்களின் அழிவில் பங்கேற்பு, 1941-1944, என்றஜோன்-பௌல் ஹிம்கா எழுதிய புத்தகம் படிக்க மிகவும் கடினமாக உள்ளது.

ஜனவரி 1, 2022 சனிக்கிழமையன்று, உக்ரேனின் கியேவில் நடந்த பேரணியின் போது பல்வேறு தேசியவாதக் கட்சிகளின் உறுப்பினர்கள் தீப்பந்தங்களையும் ஸ்டீபன் பண்டேராவின் உருவப்படத்தையும் ஏந்திச் சென்றனர் (AP Photo/Efrem Lukatsky) [AP Photo/Efrem Lukatsky]

இரண்டாம் உலகப் போரின் கொடூரங்கள் வரலாற்றிற்கு 'மட்டும்” உரிய ஒரு விஷயம் “மட்டுமல்ல”. (யூதப்படுகொலை போன்ற குற்றங்களுடன் தொடர்புடைய நிகழ்வுகளைக் குறிப்பிடும்போது இந்த இரண்டு வார்த்தைகளும் பயன்படுத்தப்படக்கூடாது என்பதால் மேற்கோள் குறிகளுக்குள் 'மட்டுமல்ல' என்பதை இட்டுள்ளேன்) சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்ட பின்னர் உக்ரேனின் அரசியல் மற்றும் கலாச்சார வாழ்க்கையில் ஒரு சக்திவாய்ந்த மற்றும் மிகவும் ஆபத்தான காரணியாக மீண்டும் உருவாகியுள்ள ஸ்டீபன் பண்டேராவை வழிபடுவது மற்றும் அவர் செய்த அனைத்து குற்றங்களையும் நியாயப்படுத்துவது அனைவரும் அறிந்ததே.

ஸ்டீபன் பண்டேராவின் அதிகாரபூர்வமான சுயசரிதையில் (உக்ரேனிய தேசியவாதியின் வாழ்க்கை மற்றும் மறுவாழ்வு: பாசிசம், இனப்படுகொலை மற்றும் வழிபாட்டு முறை) வரலாற்றாசிரியர் க்ரெஸ்கோர்ஸ் ரோசோலின்ஸ்கி-லீபே 1991 க்குப் பின்னர் எழுதினார்:

பண்டேராவும் உக்ரேனிய புரட்சிகர தேசியவாதிகளும் மீண்டும் மேற்கு உக்ரேனிய அடையாளத்தின் முக்கிய கூறுகளாக மாறினர். தீவிர வலதுசாரி ஆர்வலர்கள் மட்டுமல்ல, உயர்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பல்கலைக்கழக பேராசிரியர்கள் உட்பட மேற்கத்திய உக்ரேனிய சமூகத்தின் முக்கியமான போக்குகளும், பண்டேராவை உக்ரேனிய தேசிய வீரராகவும், சுதந்திரப் போராளியாகவும், சோவிய ஒன்றியத்திற்கு எதிரான அவரது போராட்டத்திற்காக கௌரவிக்கப்பட வேண்டிய நபராகவும் கருதினர். உக்ரேனில் சோவியத்திற்கு பிந்தைய நினைவக அரசியல் ஜனநாயக விழுமியங்களை முற்றிலும் புறக்கணித்ததுடன் மற்றும் வரலாற்றில் எவ்வகையிலான மன்னிப்பும் கேட்காத அணுகுமுறையையும் கூட உருவாக்கவில்லை. [ப. 553]

ரோசோலின்ஸ்கி-லீபே மேலும் தெரிவிக்கின்றார்:

2009 அளவில், மேற்கு உக்ரேனில் சுமார் முப்பது பண்டேரா நினைவுச்சின்னங்கள் திறக்கப்பட்டன. நான்கு பண்டேரா அருங்காட்சியகங்கள் திறக்கப்பட்டதுடன், மேலும் அறியப்படாத எண்ணிக்கையிலான தெருக்கள் அவருக்குப் பெயர் மாற்றப்பட்டன. சோவியத்துக்கு பிந்தைய உக்ரேனில் தோன்றிய பண்டேரா வழிபாட்டு முறை, பனிப்போரின் போது உக்ரேனிய புலம்பெயர்ந்தோர் கடைப்பிடித்ததை ஒத்திருக்கிறது. பண்டேரா ஆதரவாளர்களின் புதிய எதிரிகளாக ரஷ்ய மொழி பேசும் கிழக்கு உக்ரேனியர்கள், ரஷ்யர்கள், ஜனநாயகவாதிகள் மற்றும் அவ்வப்போது போலந்து மக்கள், யூதர்கள் மற்றும் இன்னும் பலர் இருந்தனர்.

இந்த வழிபாட்டை கடைப்பிடிக்கும் மக்களின் பிரிவு, மிகவும் பரந்தது. பண்டேரா ரசிகர்களிடையே, ஒருபுறம், மொட்டையடித்த தலையுடன் தீவிர வலதுசாரிகள் தங்கள் நினைவேந்தலின் போது பாசிச வணக்கம் செலுத்துவதையும், யூதப்படுகொலை உக்ரேனிய வரலாற்றில் பிரகாசமான அத்தியாயம் என்று வாதிடுவதையும், மறுபுறம் உயர்நிலைப் பள்ளி ஆசிரியர்களையும் மற்றும் பல்கலைக்கழக பேராசிரியர்களையும் காணலாம். [ப. 554]

பனிப்போரின் போது, வலதுசாரி தீவிரவாத உக்ரேனிய ஆதரவுப் பிரிவு குறிப்பாக முன்னாள் மேற்கு ஜேர்மனி, அமெரிக்கா மற்றும் கனடாவில் கணிசமான சர்வதேச செல்வாக்கை செலுத்தியது. 1959 இல் பேர்லினில் சோவியத் KGB யால் அவர் படுகொலை செய்யப்படும் வரை, பண்டேரா வழங்கிய நேர்காணல்கள் மேற்கு ஜேர்மனியில் ஒளிபரப்பப்பட்டன. இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய பண்டேராவின் துணைத்தலைவரான, ஐரோஸ்லாவ் ஸ்டெட்ஸ்கோவின் (Iaroslav Stets’ko) வாழ்க்கையும் கவனத்திற்குரியது. அவர் ஹிட்லர், முசோலினி மற்றும் பிராங்கோவுடன் தொடர்புகொண்டு, சோவியத் ஒன்றியத்துக்குள் ஜேர்மன் படையெடுப்பிற்குப் பின்னர் ஸ்டெட்ஸ்கோ அறிவித்த 'சுதந்திர உக்ரேனிய அரசு' க்கு மூன்றாம் குடியரசின் ஆதரவைப் பெற முயன்றார்.

உக்ரேனிய தேசியவாதிகளின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்வதில் நாஜி ஆட்சிக்கு எந்த அக்கறையும் இல்லாததால், இந்தத் திட்டம் தோல்வியடைந்தது. ஸ்டெட்ஸ்கோ 'கௌரவ கைதுக்கு' உட்படுத்தப்பட்டு பேர்லினுக்கு கொண்டு வரப்பட்டார். ஜூலை 1941 இல் அவர் ஒரு அறிக்கையை வெளியிட்டார். அதில் அவர் அறிவித்தார்:

மார்க்சிசம் யூத சிந்தனையின் விளைபொருளாக நான் கருதுகிறேன். இருப்பினும், யூதர்களின் உதவியுடன் மாஸ்கோவாத-ஆசிய மக்களால் மாஸ்கோ சிறைச்சாலையில் நடைமுறையில் பயன்படுத்தப்பட்டது. மாஸ்கோவும் யூதர்களும் உக்ரேனின் மிகப் பெரிய எதிரிகள் மற்றும் ஊழல் நிறைந்த போல்ஷிவிக் சர்வதேசவாதக் கருத்துக்களைக் கொண்டவர்கள்….

எனவே யூதர்களை அழிப்பதையும், யூதர்களை அழித்தொழிக்கும் ஜேர்மன் முறைகளை உக்ரைனுக்கு கொண்டு வருவதற்கான முயற்சியையும் நான் ஆதரிக்கிறேன். இதன் மூலம் அவர்களின் ஒன்றிணைப்பையும் மற்றும் அதுபோன்றவற்றையும் தடுக்கமுடியும் [Himka, ப. 106]

ஸ்டெட்ஸ்கோ போரில் உயிர் தப்பி சர்வதேச வலதுசாரி அரசியலில் நன்கு அறியப்பட்ட நபராக ஆனதுடன் மற்றும் உலக கம்யூனிச எதிர்ப்பு அமைப்பின் ஒரு குழு உறுப்பினராக பணியாற்றினார். மார்க்சிசத்திற்கு எதிரான அவரது வாழ்நாள் போராட்டத்திற்காக அவர் பெற்ற பல அஞ்சலிகளில், 1966 இல் கனடாவின் வின்னிபெக் நகரின் கௌரவ குடிமகனாக அறிவிக்கப்பட்டது மட்டும் உள்ளடங்கவில்லை. 1983 ஆம் ஆண்டில், ரோசோலின்ஸ்கி-லீபே, எழுதியதுபோல் ஸ்டெட்ஸ்கோ 'காங்கிரஸ் மற்றும் வெள்ளை மாளிகைக்கு அழைக்கப்பட்டார். அங்கு ஜோர்ஜ் புஷ் மற்றும் ரொனால்ட் ரீகன் ஆகியோர் ‘ஒரு சுதந்திர உக்ரேனின் கடைசி பிரதமரை’ வரவேற்றனர்”. [p. 552].

ஐரோஸ்லாவ் ஸ்டெட்ஸ்கோ (Credit: szru.gov.ua)

ரோசோலின்ஸ்கி-லீபே இன்னொன்றையும் நினைவுபடுத்துகிறார்:

1982 ஆம் ஆண்டு ஜூலை 11 ஆம் தேதி சிறைபிடிக்கப்பட்ட நாடுகளின் வாரத்தின் போது, 1941 ஆம் ஆண்டு உக்ரேனிய தேசியவாதிகளின் இரண்டாவது பெரிய காங்கிரஸில் அறிமுகப்படுத்தப்பட்ட OUN-B இன் சிவப்பு-கறுப்பு கொடி, அமெரிக்காவின் காங்கிரஸில் பறந்தது. காங்கிரஸ் சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்தை அடையாளப்படுத்தியதே தவிர இனத் தூய்மை மற்றும் இனப்படுகொலை பாசிசத்தை அல்ல. எல்விவ் நகர மண்டபம் மற்றும் பிற கட்டிடங்களில் பறந்த அதே கொடிதான், ஜூலை 1941 இல் இந்த கொடியுடன் தங்களை அடையாளப்படுத்திய நபர்களால்தான் யூத குடிமக்கள் தவறாக நடத்தப்பட்டு கொல்லப்பட்டனர் என்பதை யாரும் புரிந்து கொள்ளவில்லை. [ப. 552]

உக்ரேனிய நவ-நாஜிகளின் சர்வதேச தொடர்புகள் தற்போதைய நெருக்கடிக்கு மிகவும் பொருத்தமானவை. அசோவ் படைப்பிரிவின் உறுப்பினர்களை கனேடிய அதிகாரிகள் சந்தித்தது சமீபத்தில் தெரியவந்துள்ளது. நவம்பர் 9, 2021 அன்று Ottawa Citizen வெளியிட்ட அறிக்கையின்படி:

ஜூன் 2018 இல் அசோவ் படைப்பிரிவின் தலைவர்களால் கனேடியர்கள் சந்தித்து விளக்கமளித்தனர். அதிகாரிகள் மற்றும் இராஜதந்திரிகள் இந்த சந்திப்பை எதிர்க்காததுடன், தங்களை நாஜி சார்பு என்று முன்னறிவித்த போதிலும் தங்களை படைப்பிரிவின் அதிகாரிகளுடன் புகைப்படம் எடுக்க அனுமதித்தனர். அசோவ் படைப்பிரிவு அந்த புகைப்படங்களை அதன் இணையவழி பிரச்சாரத்திற்கு பயன்படுத்தி கனேடிய தூதுக்குழு 'மேலும் பலனளிக்கும் ஒத்துழைப்புக்கான நம்பிக்கையை' வெளிப்படுத்தியது எனக் குறிப்பிட்டது.

அறிக்கை தொடர்கிறது:

சந்திப்பிற்கு ஒரு வருடம் முன்பு, கனடாவின் கூட்டு பணிக்குழு உக்ரேன் அசோவ் படைப்பிரிவு பற்றிய விளக்கத்தை தயாரித்தது. நாஜி சித்தாந்தத்துடன் அதன் தொடர்புகளை ஒப்புக் கொண்டது. 'அசோவின் பல உறுப்பினர்கள் தங்களை நாஜிக்கள் என்று விவரித்துள்ளனர்' என கனேடிய அதிகாரிகள் தங்கள் 2017 மாநாட்டில் எச்சரித்தனர்.

வெறுப்பு எதிர்ப்பு வலைப்பின்னலின் (Anti-Hate Network) கனேடிய தலைவர் பேர்னி ஃபார்பர், கனேடியர்கள் உடனடியாக அசோவ் படைப்பிரிவின் மாநாட்டில் கூட்டத்தில் இருந்து வெளியேறியிருக்க வேண்டும் என்றார். “கனேடிய ஆயுதப்படையினர் நாஜிகளை சந்திப்பதில்லை; இத்துடன் முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் என” ஃபார்பர் கூறினார். 'இது செய்திருக்கக்கூடாத ஒரு பயங்கரமான தவறு' என்றார்.

கனேடிய அரசாங்கத்தின் மிகவும் ஆக்கிரோஷமான ரஷ்ய-விரோதக் கொள்கையுடன் நேரடியாக தொடர்புடைய இந்தக் கதையின் மற்றொரு குழப்பமான அம்சம் உள்ளது. கிறிஸ்டியா ஃப்ரீலாண்ட் (Chrystia Freeland) கனடாவின் துணைப் பிரதமராக உள்ளார். அவரது பாட்டன், மிக்கைலோ கோமியாக் (Mykhailo Khomiak), ஆக்கிரமிக்கப்பட்ட போலந்தில் கிராகிவ்ஸ்கி விஸ்டி (க்ராகோவ் நியூஸ்) என்ற நாஜி செய்தித்தாளின் ஆசிரியராக இருந்துள்ளார். பின்னர் குறுகியகாலம் வியன்னாவில் 1940 முதல் 1945 வரை பணியாற்றினார். நிச்சயமாக, துணைப் பிரதமர் ஃப்ரீட்லாண்ட் தனது பாட்டனின் பாவங்களுக்கும் குற்றங்களுக்கும் பொறுப்பேற்க முடியாது. ஆனால் வலதுசாரி உக்ரேனிய தேசியவாதத்தின் செல்வாக்கு, அவரது சொந்த அரசியல் கருத்துக்கள் மற்றும், எனவே, கனேடிய அரசாங்கத்தின் கொள்கைகள் மீது கடுமையான தாக்கங்கள் ஏற்படுத்துவது குறித்த கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன.

கனேடிய துணைப் பிரதமர் கிறிஸ்டியா ஃப்ரீலாண்ட் (Wikimedia Commons)

கனடாவின் National Post மார்ச் 2, 2022 அன்று பின்வருமாறு தெரிவித்தது:

டொராண்டோ நகர மத்தியில் உக்ரேன் சார்பு பேரணியில் ஃப்ரீலாண்ட் பல ஆயிரம் ஆர்ப்பாட்டக்காரர்களுடன் இணைந்தார். ட்விட்டரில் அவரது அலுவலகம் பின்னர் வெளியிடப்பட்ட ஒரு புகைப்படத்தில், ஃப்ரீலாண்ட் 'ஸ்லாவா உக்ரேனி' (உக்ரைனுக்கு மகிமை) என்ற வாசகத்தைத் தாங்கிய சிவப்பு-கறுப்பு கழுத்து பட்டியைப் பிடிக்க உதவுவதைக் காணலாம்.

இரண்டாம் உலகப் போரின் போது செயல்பட்ட ஒரு தேசியவாத கிளர்ச்சி குழுவான உக்ரேனிய எதிர்ப்பு இராணுவத்தின் உத்தியோகபூர்வ நிறங்கள் சிவப்பு மற்றும் கறுப்பு என்பதை பார்வையாளர்கள் விரைவாகக் கவனித்தனர்.

ஃப்ரீட்லாண்டின் குடும்பத் தொடர்புகள் மற்றும் உக்ரேனிய தீவிர வலதுசாரிகளுக்கும் கனேடிய அரசாங்கத்திற்கும் இடையிலான பரந்த தொடர்பைப் பற்றிய தீவிர விசாரணையை மேற்கொள்வதில் ஊடகங்களின் தயக்கம், நாட்டின் கலாச்சார வாழ்வில் ரஷ்ய செல்வாக்கின் அனைத்து தடயங்களையும் அடக்குவதை நோக்கமாகக் கொண்ட சூனிய வேட்டைக்கு முற்றிலும் மாறுபட்டதாக இருக்கின்றது. இந்த மாத தொடக்கத்தில், உக்ரேன் மீதான ரஷ்ய படையெடுப்பிற்கு எந்த வகையிலும் பொறுப்பேற்காத 20 வயதான ரஷ்ய பியானோ கலைஞரான அலெக்சாண்டர் மலோஃபீவ் இனால் வான்கூவர் மற்றும் மொன்ட்ரீயாலில் திட்டமிடப்பட்டிருந்த இசை நிகழ்ச்சிகளை முன்னெடுத்துச் செல்ல முடியவில்லை. ரஷ்ய கலாச்சார செல்வாக்கின் இதேபோன்ற சுத்திகரிப்பு அமெரிக்காவிலும் ஐரோப்பா முழுவதிலும் நடந்து வருகிறது. அமெரிக்காவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையே 1950 களின் நடுப்பகுதியில் பனிப்போர் இருந்தபோதிலும் வளரத் தொடங்கிய கலாச்சார உறவுகளின் மறுப்பான இந்த இழிவான பிரச்சாரம் மிகவும் ஆபத்தான அரசியல் மற்றும் கருத்தியல் தூண்டுதல்கள் மற்றும் உந்துதல்களின் வெளிப்பாடாகவும் மற்றும் தற்போதைய நெருக்கடியில் பின்னணியில் இயங்குவதையும் கவனிக்க வேண்டும். ரஷ்ய-எதிர்ப்பு வெறித்தனத்தை கண்டனம் செய்வதற்கும் எதிர்ப்பதற்கும் அப்பால், பெரும்பாலான அறிவுசார் மற்றும் கலாச்சார நிறுவனங்கள் அதற்கு தங்களை அடிபணியச்செய்கின்றன.

இணைய கலந்துரையாடலைப் பற்றி நான் செய்ய வேண்டிய இறுதி விமர்சனம் உள்ளது. அமெரிக்கா எடுத்துள்ள மிகவும் ஆக்கிரோஷமான நிலைப்பாட்டிற்கும் உள்நாட்டு சூழ்நிலைக்கும் முற்றிலும் சம்பந்தம் இல்லை என்பது போல, அமெரிக்காவிற்குள் இருக்கும் தீவிர அரசியல் மற்றும் சமூக நெருக்கடி பற்றி விவாதத்தில் எந்த குறிப்பும் இருக்கவில்லை. முதலாம் உலகப் போர் மற்றும் இரண்டாம் உலகப் போர் பற்றிய பல தீவிர ஆய்வுகள் வரலாற்றாசிரியர்கள் மத்தியில் 'Der Primat der Innenpolitik' (உள்நாட்டு அரசியலின் முதன்மையான தன்மை) என அறியப்பட்டவற்றில் கவனம் செலுத்துகின்றன. 1930 களின் முற்பகுதியில் இடதுசாரி ஜேர்மன் வரலாற்றாசிரியர் எக்கார்ட் கேஹரால் உருவாக்கப்பட்ட இந்த விளக்கம், வெளியுறவுக் கொள்கையை வகுப்பதில் உள்நாட்டு சமூக மோதல்களின் பங்கிற்கு மைய முக்கியத்துவம் அளித்தது.

பைடென் நிர்வாகத்தின் அரசியல் உந்துதல்களை பகுப்பாய்வு செய்வதில், அடுத்தடுத்த தலைமுறை வரலாற்றாசிரியர்களிடையே பெரும் செல்வாக்கைப் பெற்ற கேஹரின் கருத்துருக்களை கவனமாக பரிசீலிப்பது நிச்சயமாக அவசியமாகும். இந்த தசாப்தத்தின் தொடக்கத்தில் இருந்து, அமெரிக்கா இரண்டு வரலாற்று நெருக்கடிகளால் உலுக்கப்பட்டுள்ளது: 1) கோவிட்-19 தொற்றுநோய் மற்றும் 2) ஜனவரி 6, 2021 இல் மேற்கொள்ளப்பட்ட ஆட்சிக் கவிழ்ப்பு சதி முயற்சி (மற்றும் கிட்டத்தட்ட வெற்றிகரமான) இந்த நிகழ்வுகள் ஒவ்வொன்றையும் தனித்து பார்க்கும்போது கூட, அதிர்ச்சிகரமான அனுபவங்களாகும்.

இரண்டே ஆண்டுகளில், கோவிட்-19 காரணமாக குறைந்தபட்சம், 1 மில்லியன் இறப்புகளை அமெரிக்கா சந்தித்துள்ளது. இது எந்த அமெரிக்கப் போரையும் விட அதிகமாகும். மேலும், அனைத்து அமெரிக்கப் போர்களிலும் அமெரிக்கர்கள் சந்தித்த மொத்த இறப்புகளின் எண்ணிக்கையை விட அதிகமாகும். மேலதிக இறப்புகள் பற்றிய ஆய்வின் அடிப்படையில் இறப்புகளின் உண்மையான எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கலாம். இதன் பொருள், அசாதாரணமான பெரிய எண்ணிக்கையிலான அமெரிக்கர்கள் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்களின் இழப்பை அனுபவித்திருக்கிறார்கள்.

65 வயதுக்கு மேற்பட்ட 100 அமெரிக்கர்களில் ஒருவர் இறந்துள்ளனர். மில்லியன் கணக்கான அமெரிக்கர்கள் நோய்த்தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். மேலும் அவர்களில் ஒரு பெரிய ஆனால் இன்னும் கணக்கிடப்படாத எண்ணிக்கையானது நீடித்த கோவிட்டின் பின்விளைவுகளுடன் போராடி வருகிறது. அமெரிக்க வரலாற்றில் இதுவரை கண்டிராத வகையில் சமூக வாழ்க்கையின் இயல்பான வடிவங்கள் சீர்குலைந்துள்ளன. நீண்டகால சமூக தனிமைப்படுத்தல் உளவியல் பிரச்சினையை தீவிரப்படுத்தியுள்ளது. இது தொற்றுநோய் தொடங்குவதற்கு முன்பே மிகவும் தீவிரமாக இருந்தது. எல்லாவற்றையும் விட மோசமானது, அமெரிக்கா இந்த நெருக்கடியை முடிவுக்குக் கொண்டுவர இயலாது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. மனித உயிர்களைப் பாதுகாப்பதைவிட பொருளாதார நலன்களுக்கு முன்னுரிமை அளிப்பது, தொற்றுநோயை முடிவுக்குக் கொண்டுவரக்கூடிய பூச்சிய-கோவிட் கொள்கையை செயல்படுத்துவதைத் தடுத்தது.

செல்வம் மற்றும் வருமான ஏற்றத்தாழ்வுகளின் அதிர்ச்சியூட்டும் அளவுகளால் பாதிக்கப்பட்ட ஒரு சமூகத்திற்குள் அதீதமான சமூக, பொருளாதார மற்றும் அரசியல் முரண்பாடுகள் உருவாகி, இறுதியாக ஜனவரி 6, 2021 அன்று வெடித்தது. அமெரிக்க ஜனாதிபதி 2020 தேர்தல் முடிவுகளை அடக்கி, அரசியலமைப்பை தூக்கியெறிய முயன்று மற்றும் தன்னை ஒரு சர்வாதிகார சர்வாதிகாரியாக நிறுவிக்கொள்ள முயன்றார்.

உள்நாட்டுப் போருக்குப் பின்னர் அமெரிக்க அரசியல் அமைப்பு இத்தகைய அடிப்படை அரசியல் சவாலை எதிர்கொள்ளவில்லை. நிகழ்வின் முக்கியத்துவத்தை குறைப்பவர்கள் அல்லது நெருக்கடி சமாளிக்கப்பட்டதாகக் கூறுபவர்கள் சுயமாக ஏமாற்றும் மாயையில் ஈடுபட்டுள்ளனர். இந்த தசாப்தத்தின் இறுதியில் அமெரிக்க ஜனநாயகம் இன்னும் இருக்கும் என்பதற்கு உத்திரவாதமும் இல்லை என்று ட்ரம்பின் சதி முயற்சியின் ஆண்டு நிறைவில் பைடெனே ஒப்புக்கொண்டார்.

இந்த இரண்டு நெருக்கடிகளின் தொடர்பு அமெரிக்க வெளியுறவுக் கொள்கையை உருவாக்குவதில் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டுள்ளது என்று கூறுவது உண்மையில் நம்பமுடியாததா? தீர்க்க முடியாத உள்நாட்டுப் பிரச்சனைகளில் இருந்து கவனத்தைத் திசைதிருப்ப ஒரு சர்வதேச நெருக்கடியை ஒரு அரசாங்கம் பற்றிக்கொண்டதும் தூண்டியதும் இதுவே முதல் முறையா?

இந்தக் கடிதத்தை முடிக்கையில், சோவியத் வரலாற்றைப் படிப்பது தற்போதைய உலகச் சூழலைப் புரிந்துகொள்வதற்கு முக்கியமானது என நான் முன்பு கூறிய ஒரு விஷயத்திற்கு நான் திரும்ப வேண்டும். சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்ட பின்னர் நிலவிய முதலாளித்துவ வெற்றியின் மத்தியில், 'வரலாற்றின் முடிவு' பற்றி மிகவும் கற்பனையான பேச்சு இருந்தது. முன்னாள் சோவியத் ஒன்றியத்திற்குள் முதலாளித்துவத்தை மீட்டமைப்பது ரஷ்யாவிற்கு விபரிக்கமுடியாத செல்வங்களைக் கொண்டுவந்து, ஜனநாயகத்தை மலரச் செய்யும் என்பது என்ற குறிப்பாக புத்திஜீவிகள் மற்றும் அந்தஸ்து உணர்வுகொண்ட வல்லுநர்களிடையே நிலவிய நம்பிக்கை, இந்த சுய-ஏமாற்றும் பரவசத்திற்குச் சமமானதாகும். அதாவது 1917 பிப்ரவரி புரட்சியின் நிறைவேறாத கனவுகள் நனவாகும் என்பதாகும். அக்டோபரில் போல்ஷிவிக்குகளால் தூக்கியெறியப்பட்ட முதலாளித்துவ இடைக்கால அரசாங்கம் மீண்டும் பிறக்கும் எனக் கருதப்பட்டது. திறமை, இலட்சியம் மற்றும் தொடர்புகள் உள்ள அனைவரும் பணக்கார தொழில்முனைவோராகவோ அல்லது குறைந்தபட்சம் புதிய மற்றும் வளமான நடுத்தர வர்க்கத்தின் உறுப்பினர்களாகவோ ஆகலாம். மார்க்சிசம் எங்கெல்லாம் எதிர்மறையான அடையாளங்களை இட்டதோ, அங்கெல்லாம் புதிதாகத் தோன்றிய குட்டி முதலாளித்துவம் இப்போது நேர்மறையான அடையாளத்தை இட்டது.

இந்த பரவசத்தின் இரண்டாவது கூறு என்னவென்றால், ரஷ்யா, அதன் புரட்சிகர மற்றும் கற்பனாவாத முயற்சிகளை தூக்கி எறிந்துவிட்டு, ஒரு 'சாதாரண' நாடாக இருக்கும், மேற்கத்திய நாடுகளின் சமூகத்தில் அன்புடன் வரவேற்கப்படும் எனக் கூறப்பட்டது. ஏகாதிபத்தியம் பற்றிய லெனினின் எழுத்துக்கள் பற்றிய குறிப்புகள், ட்ரொட்ஸ்கியைப் பற்றி குறிப்பிடத்தேவையில்ல, நகைப்புடன் வரவேற்கப்பட்டன. ரஷ்யா, கடைசியில், தன் உணர்வுக்கு வந்தது; 'மார்க்சிசம்-லெனினிசத்தை' யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. கியேவில் நான் சந்தித்த உக்ரேனிய கல்வியாளர்களிடையே அதே கருத்தாக்கங்களை நான் சந்தித்தேன் என்பதை நான் சேர்க்க வேண்டும்.

எவ்வாறாயினும், உலகளாவிய முதலாளித்துவ செழிப்பு, ஜனநாயகத்தின் மலர்ச்சி மற்றும் அமெரிக்காவின் மேலாதிக்க உலக அமைப்பில் அமைதியான ஒருங்கிணைப்பு ஆகிய இந்த மாபெரும் மாயைகள் முற்றிலும் சிதைந்துவிட்டன.

பொருளாதார 'அதிர்ச்சி சிகிச்சை' (“shock therapy”) மற்றும் 1998 இன் பொருளாதார சரிவு ஆகியவை ஆர்வமுள்ள நடுத்தர வர்க்கத்தின் பரந்த பிரிவுகளை திவாலாக்கியது. 1993 அக்டோபரில் ரஷ்ய பாராளுமன்றத்தின் குண்டுவீச்சுக்கு மத்தியில் நடுத்தர வர்க்கம் கனவு கண்ட ஜனநாயகம் சரிந்துபோனது. முதலாளித்துவ மறுசீரமைப்பு ஒரு ஊழல் நிறைந்த தன்னலக்குழு அமைப்பை உருவாக்கியது. இது பாரிய சமூக சமத்துவமின்மை, அரை-அதிகார போனபார்ட்டிச ஆட்சியால் ஆதிக்கம் செலுத்தப்பட்டது. இறுதியாக, தேசங்களின் சமூகத்துடன் அமைதியான முறையில் ஒருங்கிணைக்கப்படுவதற்குப் பதிலாக, ரஷ்யா தனது 'மேற்கத்திய பங்காளிகளின்' இடைவிடாத இராணுவ மற்றும் பொருளாதார அழுத்தத்தில் இருப்பதைக் கண்டது. நேட்டோ விரிவுபடுத்தப்படாது என்பது தொடர்பாக அது பெற்ற வாக்குறுதிகள் பயனற்றவையாகின. ரஷ்யா தனது சுதந்திர நலன்களை வலியுறுத்த எடுத்த ஒவ்வொரு முயற்சியும் பொருளாதார தடைகள் மற்றும் இராணுவ அச்சுறுத்தல்களை சந்தித்தது.

உக்ரேன் நெருக்கடியின் வடிவத்தில், சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டதன் சோகமான மற்றும் சாத்தியமான பேரழிவு விளைவுகளை ரஷ்யா எதிர்கொள்கிறது. முற்றிலும் பிற்போக்குத்தனமான மற்றும் அரசியல் ரீதியில் திவாலான நடவடிக்கைகள் மூலம் - அதாவது ரஷ்ய தேசிய அரசின் எல்லைகளை வலுப்படுத்துவதை இலக்காகக் கொண்ட ஒரு போரின் மூலம் புட்டின் இந்த நெருக்கடியை சமாளிக்க முயல்கிறார். அண்மையில் புட்டினின் போர் பற்றிய பேச்சு, லெனின், அக்டோபர் புரட்சி மற்றும் சோவியத் ஒன்றியத்தின் ஸ்தாபகத்தினை கண்டிப்பதுடன் தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது. முரண்பாடாக, மார்க்சிசம் மற்றும் போல்ஷிவிசத்தின் மீதான அவரது வெறுப்பில், புட்டினின் கருத்துக்கள் அவரது நேட்டோ எதிரிகளுடன் முழுமையாக இணைந்துள்ளன.

சோவியத் ஒன்றியத்தின் வெளியுறவுக் கொள்கையை நிராகரித்த புட்டின், ஜார் நிக்கோலஸின் வெளியுறவுக் கொள்கையை மீண்டும் உயிர்ப்பிக்க முயற்சிக்கிறார் மற்றும் 'அன்னை ரஷ்யாவின்' ஆதரவைக் கோருகிறார். இந்த பரிதாபகரமான பிற்போக்குத்தனமான கொள்கையின் அடிப்படையில், அவர் 1904 இன் பேரழிவுகரமான ருஸ்ஸோ-ஜப்பானிய (Russo-Japanese) போரின் நவீனகால பதிப்பை உருவாக்கினார். இந்த போர்தான் ரோமானோவ் ஆட்சியின் அடித்தளங்களை அபாயகரமான அரிப்பிற்கு உட்படுத்தி மற்றும் ரஷ்யாவை புரட்சியின் பாதையில் இட்டுச்சென்றது. இந்தப் போர் இதேபோன்ற விளைவுக்கு வழிவகுக்கும் என்று நம்புவதற்கு காரணம் இருக்கிறது, ஆனால் அது பைடென் நிர்வாகம் வரவேற்கும் புரட்சியாக இருக்காது. ரஷ்ய தொழிலாள வர்க்கம், ஒரு அசாதாரணமான மற்றும் வரலாற்றுரீதியாக ஒப்பிட்டுக்காட்ட முடியாத புரட்சிகரப் போராட்ட மரபைக் கொண்ட பாரிய சக்திவாய்ந்த சமூக சக்தியாகும். புரட்சிகர மார்க்சிச புத்திஜீவிகள் மற்றும் தொழிலாள வர்க்க முன்னணி ஸ்ராலினிச பயங்கரவாதத்தின் போது உடல்ரீதியாக அழித்தொழிக்கப்பட்டது உட்பட பல தசாப்தகால அரசியல் அடக்குமுறை இந்த பாரம்பரியத்திலிருந்து தொழிலாள வர்க்கத்தை பிரித்தது. ஆனால் இப்போதைய நெருக்கடி சோவியத்துக்கு பிந்தைய ஆட்சி மதிப்பிழப்பதை நிறைவு செய்வதுடன், ரஷ்யாவில் சோசலிச சர்வதேசியத்தை புதுப்பிப்பதற்கான நிலைமைகளை உருவாக்கும்.

1991க்குப் பிந்தைய மாயைகள் ரஷ்யாவில் மட்டும் தகர்ந்து போகவில்லை. அமெரிக்காவிற்குள்ளும், அனைத்து முதலாளித்துவ நாடுகளிலும், சமூக, பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிகளின் எடுத்துக்காட்டல் முதலாளித்துவத்திற்கும் உலகை அணுவாயுதப் போரின் வாசலுக்குக் கொண்டு வந்த ஏகாதிபத்தியத்தின் பொறுப்பற்ற கொள்கைகளுக்கும் எதிரான எதிர்ப்பின் மறு எழுச்சியை உருவாக்கும். நிச்சயமாக, நான் எதிர்பார்க்கும் விளைவுக்கு உத்தரவாதம் எதுவும் இல்லை. ஆனால் தீவிரமடைந்து வரும் உலக நெருக்கடிக்கு வேறு எந்த முற்போக்கான தீர்வையும் என்னால் கற்பனை செய்ய முடியாது.

ரஷ்ய-உக்ரேன் போரின் வெடிப்பினால் முன்வைக்கப்படும் அனைத்து சிக்கலான பிரச்சினைகளையும் இந்த இணையவழி கருத்தரங்க கலந்துரையாடல் விரிவாக எடுத்துரைக்கும் என்று எதிர்பார்க்க முடியாது. எவ்வாறாயினும், நாடு முழுவதிலும் உள்ள கல்லூரிகளில் இப்போது நடக்கும் விவாதங்களை இது பிரதிபலிக்கும் அளவிற்கு, இது ஒரு பேரழிவாக வளரும் அச்சுறுத்தலுக்கு அச்சுறுத்தும் ஒரு நெருக்கடியை நோக்கி, ஆபத்தான விமர்சனமற்ற மற்றும் மனநிறைவு அணுகுமுறையைக் குறித்துக்காட்டுகின்றது. உலக சோசலிச வலைத் தளம் வழங்கும் பகுப்பாய்வு, இந்த ஆபத்தான விரிவாக்கத்திற்கு எதிராக குரல் கொடுக்க தீவிரமாக சிந்திக்கும் அறிஞர்களை ஊக்குவிக்கும் என்றும், வெறித்தனமான மற்றும் போர்வெறிப் பிரச்சாரத்திற்கு எதிராக வரலாற்று அறிவுபற்றிய மக்கள் கருத்தை உயர்த்துவதற்கு தங்களுக்குக் கிடைக்கும் எல்லா வழிகளையும் பயன்படுத்தவும் ஊக்குவிக்கும் என்று நம்புகிறேன்.

இணைய கருத்தரங்கம் பற்றிய எனது கருத்து தொடர்பான உங்கள் கோரிக்கையை, இந்தக் கடிதம் போதுமான அளவுக்கு பூர்த்தி செய்யும் என நம்புகிறேன்.

மிகவும் அன்புடன்,

டேவிட் நோர்த்

Loading