முன்னோக்கு

மீண்டுமொருமுறை போர் குற்றங்கள் மற்றும் போர் குற்றவாளிகள் தொடர்பாக

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

புதன்கிழமை, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடென் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை ஒரு போர் குற்றவாளியாக குற்றஞ்சாட்டினார்.

இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த குற்றச்சாட்டு முன்யோசனையற்று வழங்கப்பட்ட ஒரு கருத்தாக எடுக்கப்பட்டது. பைடென் ஒரு நெரிசலான நிகழ்வில் இருந்து வெளியேறிக் கொண்டிருந்த போது, ஒரு நிருபர் பைடெனிடம், நீங்கள் புட்டினை ஒரு போர்க்குற்றவாளியாக கருதுகிறீர்களா என்று வினவினார். 'இல்லை,' என்று பதிலளித்த பைடென், கேமராவை ஒதுக்கி விட்டு நகர்ந்தார். இந்த காட்சி வெட்டப்பட்டது, பின்னர் பைடென் திரும்பி வந்து, அந்த கேள்வியை மீண்டும் கேட்குமாறு அந்த நிருபரைக் கோருகிறார். பைடென் அவர் கையை அசைத்தவாறு கூறினார், “ஆம்,” “அவரை ஒரு போர் குற்றவாளியாக கருதுகிறேன்,” என்றார். தனக்கு விருப்பமான ஒன்றுக்காக முன்னைய முடிவை மாற்றி, மேலதிகமான ஒன்றையும் சேர்த்துக்கொண்ட ஒருவரின் தீவிரமானதன்மை அவரது குரலில் இருந்தது.

Former Presidents Jimmy Carter, Bill Clinton, Barack Obama, and George W. Bush [Photo]

உக்ரேன் விவகாரத்தில் ரஷ்யாவுடன் மோதலைத் தீவிரப்படுத்த வாஷிங்டன் மீண்டும் மீண்டும் பயன்படுத்தி வந்துள்ள எரிச்சலூட்டும் மற்றும் ஆத்திரமூட்டும் மொழியுடன் பைடெனின் அறிக்கை பொருந்தி இருந்தது. இந்த கருத்தைக் கூறுவதற்காகவே பைடென் கேமராவுக்குத் திரும்பி வந்தமை, பிரச்சார நோக்கத்திற்காக பதட்டங்களை அதிகரிக்கவும் தனக்கு சாதகமாக பன்படுத்திக்கொள்ளவும் கணிப்பிடப்பட்ட விருப்பம் இருப்பதை எடுத்துக்காட்டுகிறது. இத்தகைய கருத்துக்கள் மாற்ற முடியாத தன்மையைக் கொண்டவையாகும்.

பைடென் வெளிப்படுத்திய இந்த குற்றச்சாட்டு சாத்தியமான பாரதூரமானவற்றில் ஒன்றாக உள்ளது. ஒரு நாட்டின் ஜனாதிபதிக்கு எதிராக எழுப்பப்பட்ட இந்த குற்றச்சாட்டு, வெறுமனே மோதல் நெறிமுறைகளின் போது நடந்த குற்ற நடவடிக்கைகளின் தன்மையை மட்டும் குறிப்பிடவில்லை, மாறாக சமாதானத்திற்கு எதிரான ஒரு குற்றமாக போர் ஆக்கிரமிப்பைத் தொடங்கியதை விட மிகப்பெரிய குற்றச்சாட்டாக உள்ளது. இதுபோன்றவொரு போரைத் தொடங்குவதே அடுத்தடுத்த எல்லா இரத்தக்களரியான போர் குற்றங்களுக்குமான ஒட்டுமொத்த காரணமாக அமைகிறது.

இந்த கடுமையான நிலைப்பாட்டின்படி பார்த்தால் கடந்த முப்பது ஆண்டுகளில் ஒவ்வொரு அமெரிக்க ஜனாதிபதியும் ஒரு போர் குற்றவாளி ஆகிறார்.

இந்த கோட்பாட்டுக்கான சட்ட அடித்தளங்கள், நூரெம்பேர்க் வழக்கு விசாரணைகளில் நாஜி ஜேர்மனியின் முன்னாள் தலைவர்களுக்கு எதிராகவும் மற்றும் இரண்டாம் உலகப் போர் முடிவில் டோக்கியோ வழக்கு விசாரணைகளில் ஜப்பானிய சாம்ராஜ்ஜியத்தின் முன்னாள் தலைவர்கள் மீதும் கொண்டு வரப்பட்ட போர் குற்றச்சாட்டுகளில் அடித்தளமாக உள்ளன. ஆக்கிரமிப்பு போர் தொடங்குவதும் அதற்கான திட்டம் தீட்டுவதும் 'சமாதானத்திற்கு எதிரான ஒரு குற்றம்' என்ற சர்வதேச சட்ட கோட்பாட்டை அந்த வழக்கு விசாரணைகள் ஸ்தாபித்தன. இது 1950 இல் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் மாநாடு மூலம் நூரெம்பேர்க் கோட்பாடுகளில் கோட்பாடு 6(a) ஆக ஆழமாக உட்பதியப்பட்டது.

1946 இல் நூரெம்பேர்க் விசாரணையின் தலைமை வழக்கறிஞர், ரொபேர்ட் எச். ஜாக்சன் பின்வருமாறு எழுதினார், 'ஒப்பந்தங்களை மீறும் சில குறிப்பிட்ட நடவடிக்கைகள் குற்றங்கள் என்றால், அவற்றை அமெரிக்கா செய்தாலும்ம சரி அல்லது ஜேர்மனி செய்தாலும் சரி அவை குற்றங்களே. எங்களுக்கு எதிராக பயன்படுத்த விரும்பாத ஒன்றை மற்றவர்களின் குற்றமுள்ள செயல்களுக்கான ஒரு சட்டமாக நாங்கள் பயன்படுத்த விரும்ப நாங்கள் தயாராக இல்லை.”

ஆனால் பொதுவான இத்தகைய சர்வதேச சட்ட முன்மாதிரிகளைக் கொண்டு வருவதில் அமெரிக்கா பங்கெடுத்திருந்திருந்தாலும், அதன் சொந்த நடவடிக்கைகளுக்கு இத்தகைய கோட்பாடுகள் பொருந்தாது என்பதை உறுதிப்படுத்த வாஷிங்டன் இது வரையில் சாத்தியமான எல்லாவற்றையும் செய்து வந்துள்ளது.

இனப்படுகொலை, போர்க்குற்றங்கள் மற்றும் ஆக்கிரமிப்பு குற்றங்களை விசாரிக்க 1998 இல் ரோம் சட்ட சாசனம் கையெழுத்தானதன் மூலம் ஹேக் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (ICC) நிறுவப்பட்டது. அமெரிக்கா பல ஆண்டுகளாக இந்த நீதிமன்றம் உருவாக்குவதைத் தாமதப்படுத்தியது மற்றும் முட்டுக்கட்டையாக இருந்தது.மேலும் அதன் சாசனத்தில் கையெழுத்திட மறுத்த ஏழு நாடுகளில் அதுவும் ஒன்றாகும். புட்டின் மற்றும் அதன் ஏனைய புவிசார் அரசியல் எதிரிகள் மீது 'போர்க்குற்றங்கள்' மற்றும் 'இனப்படுகொலை' குற்றச்சாட்டும் கூட சுமத்துகின்ற அதேவேளையில், அமெரிக்கா இந்த சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் அதிகாரத்தை ஏற்க மறுப்பதுடன், அதன் அரசியல் மற்றும் இராணுவத் தலைவர்கள் மீதோ அல்லது அதன் போர்ப்படை பிரிவுகள் மீதோ அதன் சட்டங்கள் பிரயோகிப்பதை ஒப்புக் கொள்ள மறுக்கிறது.

வாஷிங்டன் ஆரவாரத்துடன் வக்கிரமான ஒரு நீதிபதியின் குரலில் 'சட்ட விதிகளை அடிப்படையாகக் கொண்ட சர்வதேச ஒழுங்கை' குறித்து பேசுகிறது, அது அப்பட்டமாக மீறும் சட்டங்களை உலகின் ஏனைய பகுதிகள் மீது எதேச்சதிகாரமாக திணித்து வருகிறது.

கடந்த முப்பதாண்டுகளில் அமெரிக்கா தொடங்கிய போர்களான ஈராக், யூகோஸ்லாவியா, ஆப்கானிஸ்தான், மீண்டும் ஈராக், சிரியா, யேமன், லிபியா ஆகிய அனைத்தும், நூரெம்பேர்க் வரையறைகளின்படி, போர்க் குற்றவாளிகளால் திட்டமிடப்பட்ட ஆக்கிரமிப்புப் போர்களாகும். நூரெம்பேர்க் கோட்பாடுகளை மீறுவது 2002 இல் புஷ் நிர்வாகத்தின் தேசிய பாதுகாப்பு மூலோபாயத்தில் அமெரிக்கக் கொள்கையாக சூசகமாக குறிப்பிடப்பட்டது. தற்காப்புக்கான நம்பகமான ஆதாரங்களை முன்வைக்காமலேயே மற்றொரு நாட்டுக்கு எதிராக ஒருதலைப்பட்ச இராணுவ நடவடிக்கை எடுக்க அமெரிக்காவுக்கு உரிமை இருப்பதாக அந்த மூலோபாயம் வலியுறுத்தியது.

இரண்டு உலகப் போர்களின் இரத்தந்தோய்ந்த அனுபவங்களில் பிறந்த, வரலாற்றுரீதியாக நிறுவப்பட்ட இந்த நெறிமுறைக்கு, அதாவது இராணுவ நடவடிக்கையை நியாயப்படுத்த உடனடியாக தாக்குதல் நிகழும் அச்சுறுத்தல் இருக்க வேண்டும் என்பதற்கு, இனி அது உட்பட வேண்டியதில்லை என்று வாஷிங்டன் அறிவித்தது. அச்சுறுத்தல் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகளை அவர்கள் உணர்ந்ததாக வலியுறுத்துவதே, படையெடுப்பை நியாயப்படுத்த போதுமான அடித்தளமாக இருந்தது. போர் என்பது கொள்கையின் அப்பட்டமான கருவியானது.

உலக சோசலிச வலைத் தளத்தின் சர்வதேச ஆசிரியர் குழு தலைவர் டேவிட் நோர்த், 2004 இல் டப்ளினில் டிரினிட்டி கல்லூரியில் உரையாற்றுகையில், 'செப்டம்பர் 2002 இல் முன்கூட்டிய போர் கோட்பாடு பிரகடனம் செய்யப்பட்டது, மற்றும் ஈராக்கிற்கு எதிரான ஓர் ஆக்கிரமிப்பு போர் தொடங்கியதுடன் மார்ச் 2003 இல் அது நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்டது. இது நூரெம்பேர்க்கில் நாஜி குற்ற தலைவர்களுக்கு எதிராக அமுலாக்கப்பட்ட சட்டரீதியான கோட்பாடுகளை அமெரிக்கா சந்தேகத்திற்கிடமின்றி மறுத்தளித்ததை தவிர வேறொன்றுமில்லை. ஆகவே குற்றவியல் என்ற வார்த்தை அதன் முழுமையான மற்றும் மிகவும் ஆழ்ந்த சட்டரீதியான அர்த்தத்தில் அமெரிக்க வெளியுறவுக் கொள்கையாக உள்ளது,” என்று வாதிட்டார்.

இல்லாத பேரழிவு ஆயுதங்கள் இருப்பதாக இட்டுக்கட்டப்பட்ட வாதங்களுடன் மற்றும் 'பயங்கரவாதத்தின் மீதான போர்' என்ற உலகளாவிய உரிமைக் கட்டளையுடன், வாஷிங்டன் மத்திய கிழக்கு மற்றும் மத்திய ஆசியாவின் ஒட்டுமொத்த நாகரிகங்களையும் சிதைத்து இடிபாடுகளாக மாற்றியது. மில்லியன் கணக்கானவர்கள் உயிரிழந்தார்கள் மற்றும் மில்லியன் கணக்கானவர்கள் அவர்கள் வீடுகளை விட்டு வெளியேறினார்கள்.

இந்தப் போர்கள் ஒவ்வொன்றும் சமாதானத்திற்கு எதிரான குற்றமாகும். இதில் எந்த ஒரு நாடும் அமெரிக்காவுக்கு எந்த அச்சுறுத்தலையும் ஏற்படுத்தவில்லை. கடந்த முப்பது ஆண்டுகளில் வாஷிங்டன் தொடங்கிய ஆக்கிரமிப்பு போர்களை விட, ஒருவர் ஆக்கிரமிப்புப் போருக்கான ஒரு பாட நூல் வரையறையை கேட்க முடியாது.

1945 இல் நூரெம்பேர்க் சர்வதேச தீர்ப்பாயம், 'போர் என்பது அடிப்படையிலேயே ஒரு தீய விஷயம். அதன் விளைவுகள் போர்நாடும் அரசுகளுடன் மட்டும் மட்டுப்பட்டு நிற்பதில்லை, மாறாக ஒட்டுமொத்த உலகையும் பாதிக்கிறது. ஆகவே, ஆக்கிரமிப்புப் போரைத் தொடங்குவதால் மட்டும் அது ஒரு சர்வதேசக் குற்றம் அல்ல; அது ஒட்டுமொத்தமாக திரண்ட தீமையைத் தன்னுடன் முன்கொண்டுவருவதால் மட்டுமே மற்ற போர் குற்றங்களில் இருந்து வேறுபடும் உச்சபட்ச சர்வதேச குற்றமாகும்,” என்று அறிவித்தது.

அபு கிரைப் மற்றும் குவாண்டனாமோ சித்திரவதை, விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகள் மீது டிரோன் குண்டுவீச்சு, துல்லியமாக தாக்கும் ஏவுகணைகளைக் கொண்டு கிராமங்களைத் தரைமட்டமாக்கியமை, மத்திய தரைக்கடலில் அகதிகளை மூழ்கடித்தமை என்று கிளிண்டன், புஷ், ஒபாமா மற்றும் ட்ரம்ப் ஆகியோரின் ஆக்கிரமிப்புப் போர்கள் ஒருமித்த தீமையை உள்ளடங்கி இருந்தன. பாக்தாத் இடைவிடாத அமெரிக்க குண்டுவீச்சின் அதிரடி தாக்குதலில் நொறுக்கப்பட்டது; ஃபல்லூஜா வெள்ளை பாஸ்பரஸ் கொண்டு எரிக்கப்பட்டது.

அமெரிக்க வெகுஜன ஊடகங்களும் இந்தக் குற்றங்களுக்கு உடந்தையாக உள்ளன. அவை அரசாங்கத்தின் கூற்றுகளை ஒருபோதும் சவால் செய்யவில்லை, மாறாக அதன் சாக்குப்போக்குகளைத் தம்பட்டமடித்தன. அவை பொதுமக்களிடையே போர் வெறியைத் தூண்டின. இப்போது புட்டினைக் கண்டிக்கும் பண்டிதர்கள், பொதுமக்கள் மீது அமெரிக்கா குண்டுவீச வேண்டும் என்று வெறித்தனமாக கோரி வருகின்றனர்.

ஏப்ரல் 7, 2004 இல் ஜோர்ஜ் வில் வாஷிங்டன் போஸ்ட்டில் பின்வருமாறு எழுதினார், “ஆட்சி மாற்றம், ஆக்கிரமிப்பு, தேசத்தை கட்டியெழுப்புதல் —இவை ஓர் இரத்தக்களரியான வியாபாரமாகி உள்ளன. ஈராக்கின் நகர்ப்புற போராளிகள் குழுக்களை நிராயுதபாணியாக்க அல்லது தோற்கடிக்க தேவையான வன்முறையை கையாள்வதற்காக அமெரிக்கர்கள் இப்போது தங்களை உறுதியாக்கிக் கொள்ள வேண்டும்…”

தோமஸ் ப்ரீட்மன் 1999 இல் நியூயார்க் டைம்ஸில் கிளின்டனின் கீழ் சேர்பியா மீதான குண்டுவீச்சு பற்றி எழுதினார், “பெல்கிராட்டில் விளக்குகள் அணைய வேண்டும்: ஒவ்வொரு மின்சார தடமும், தண்ணீர் குழாய், பாலம், சாலை மற்றும் போர் தொடர்பான தொழிற்சாலைகள் குறி வைக்கப்பட வேண்டும்… [உ]ங்களைத் தூள் தூளாக்கி உங்கள் நாட்டைப் பின்னுக்குத் தள்ளுவோம். உங்களுக்கு 1950 வேண்டுமா? எங்களால் 1950 ஐ கொண்டு வர முடியும். உங்களுக்கு 1389 வேண்டுமா? எங்களால் 1389 ஐயும் ஏற்படுத்த முடியும்,” என்றார்.

ஒரு புதிய ஊடக விஷம பிரச்சாரத்திற்கு மத்தியில் புட்டினை பைடென் ஒரு போர்க் குற்றவாளியாக முத்திரை குத்துகிறார். அவை, அமெரிக்காவின் நடவடிக்கைகளைப் பற்றி ஒன்றும் குறிப்பிடாமல், மூச்சு விடாமல், முன்பினும் அதிகமாக விரிவடைந்து செல்லும் போருக்காக எரியும் தீயில் எண்ணெய் வார்த்து வருகின்றன.

புட்டினுக்கு எதிராக குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட வேண்டுமானால், அவருக்கு என்ன அளவுகோல் பயன்படுத்தப்படுகிறதோ, அவை மற்ற தலைவர்களுக்கு எதிராகவும், எல்லாவற்றிற்கும் மேலாக அமெரிக்க ஜனாதிபதிகளுக்கு எதிராகவும் பயன்படுத்தப்பட வேண்டும்.

ஆணவமும் போலித்தனமும் பதிந்துள்ள வாஷிங்டனின் ஒவ்வொரு அறிக்கையும் உலக வரலாற்றிலேயே சிலவேளை அசாதாரண ஏமாற்றுகரமானதாக இருக்கலாம். அமெரிக்க பேரரசு முழங்கை வரை இரத்தத்தில் ஊறிய அதன் கைகளை அதன் எதிரிகளுக்கு எதிராகக் காட்டி போர்க்குற்றங்களைப் பற்றி ஓலமிடுகிறது.

Loading