முதலாளித்துவத்தை விமர்சிப்பது அரசியலமைப்பிற்கு எதிரானது என பேர்லின் நிர்வாக நீதிமன்றம் அறிவித்துள்ளது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

ஜனவரி 2019 இல் சோசலிச சமத்துவக் கட்சி (Sozialistische Gleichheitspartei, SGP) தொடுத்த வழக்கை டிசம்பர் 13, 2021 அன்று, பேர்லின் நிர்வாக நீதிமன்றம் நிராகரித்தது. ஜேர்மன் இரகசிய சேவை என அழைக்கப்படும் அரசியலமைப்பு பாதுகாப்பு அலுவலகம் சோசலிச சமத்துவக் கட்சியை அதன் வருடாந்த அறிக்கையில் 'இடதுசாரி தீவிரவாத' அமைப்பாகப் பட்டியலிடப்பட்டு, கண்காணிப்பில் வைக்கப்பட்டதற்கு எதிராக ஜேர்மன் உள்துறை அமைச்சகத்தின் மீது வழக்குத் தொடுத்தது. இப்போது எழுத்து மூலமாக கிடைக்கப்பட்ட தீர்ப்பும் நீதிமன்றக் கருத்தும் ஜனநாயக உரிமைகள் மீதான அடிப்படைத் தாக்குதலை கொண்டிருக்கின்றன. அவை சோசலிச சிந்தனைகளையும் முதலாளித்துவத்தின் மீதான எந்த விமர்சனத்தையும் தடை செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளன.

இந்த தீர்ப்பு முற்றுமுழுதாக அரசியல் உள்நோக்கம் கொண்டது. கட்சி, ஜனநாயகம் மற்றும் சுதந்திரத்தை எதிர்ப்பதால் அல்ல, மாறாக அது அவற்றை பாதுகாத்து, அவை ஒரு சிறுபான்மையினரின் கைகளில் செல்வத்தையும் பொருளாதார சக்தியையும் குவிக்கும் ஒரு சமூக அமைப்போடு ஒத்துப்போகவில்லை என்று வெளிப்படையாகக் கூறுவதால், அது சோசலிச சமத்துவக் கட்சியின் வழக்கை தள்ளுபடி செய்கிறது. பிஸ்மார்க்கின் சோசலிச-விரோத சட்டங்கள் மற்றும் நாஜிகளின் அரசியல் நம்பிக்கைகளின் அடிப்படையில் நீதி வழங்குதலின் (Gesinnungsstrafrecht) பாரம்பரியத்தில், நீதிமன்றமும் அதன் தலைமை நீதிபதி வில்பிரைட் பீட்டர்ஸும் பொருளாதாரத்தை ஜனநாயகமயப்படுத்துவதற்கான எந்தவொரு கோரிக்கையும் மற்றும் அரசு நிறுவனங்களை கேள்விக்குள்ளாக்குவதையும் அரசியலமைப்பிற்கு விரோதமானது என அறிவிக்கின்றனர்.

வழக்கு ஆரம்பிக்க முன்னர் நீதிபதி வில்பிரட் பீட்டர்ஸ் (இடதுபக்கம்) (Photo: WSWS) [Photo: WSWS]

அதன் தீர்ப்பின் மூலம், பாரிய சமூக சமத்துவமின்மை, தொற்றுநோயின் போதான 'உயிர்களைவிட இலாபங்களுக்கு முன்னுரிமை' கொடுக்கும் கொள்கை மற்றும் பயங்கரமான அளவிலான இராணுவ செலவினங்களுக்கு எதிராக வளர்ந்து வரும் எதிர்ப்பிற்கு நீதிமன்றம் பிரதிபலிப்பை காட்டுகிறது. இந்தக் கொள்கைகள் செல்வந்தர்களின் நலன்களுக்காக நடைமுறைப்படுத்தப்படுகின்றன என்ற உண்மையை தெளிவாகக் கூறும் எவரையும் மௌனமாக்க வேண்டும். நாஜிக்கள் ஆட்சிக்கு வந்து ஏறக்குறைய 90 ஆண்டுகளுக்குப் பின்னர், சோசலிச கருத்துக்கள் மீண்டும் குற்றமாக்கப்பட்டுள்ளன.

இந்த தீர்ப்பு சோசலிச சமத்துவக் கட்சியை குறிவைக்கிறது, ஏனெனில், அது மக்களிடமுள்ள இந்த எதிர்ப்பிற்கு ஒரு குரலை கொடுப்பதுடன் அதற்கு ஒரு சோசலிச முன்னோக்கையும் வழங்குகிறது. அதே நேரம் அது முதலாளித்துவத்தை விமர்சிக்கும் மற்றும் அரசாங்கத்தின் வலதுசாரி கொள்கைகளை நிராகரிப்போரை நோக்கி திரும்புகிறது. இந்தத் தீர்ப்பின் அடிப்படையில், மார்க்சிச இலக்கியங்களை சாதகமான முறையில் குறிப்பிடும் ஒவ்வொரு எழுத்தாளரும், சமூகத்தில் சமூக சமத்துவமின்மையின் விளைவுகளை ஆராயும் ஒவ்வொரு சமூகவியலாளரும், ஆயுதப்படைகளில் உள்ள வலதுசாரி பயங்கரவாத வலைப்பின்னல்களை எடுத்துக்காட்டும் ஒவ்வொரு பத்திரிகையாளரும், வேலைநிறுத்தம் செய்யும் ஒவ்வொரு தொழிலாளியும் அரசியலமைப்பின் எதிரி என அறிவிக்கப்படலாம்.

எனவே ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்க விரும்பும் மற்றும் வலதுசாரி ஆபத்தை எதிர்க்க விரும்பும் அனைவருக்கும் சோசலிச சமத்துவக் கட்சியின் வழக்கை ஆதரிக்குமாறு நாங்கள் வேண்டுகோள் விடுக்கிறோம். நிர்வாக நீதிமன்றத்தின் முடிவை நாங்கள் ஏற்க மாட்டோம் மற்றும் ஏற்கனவே பேர்லின் உயர் நிர்வாக நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய விண்ணப்பித்துள்ளோம். இதில் எங்களுக்கு ஆதரவளிக்க விரும்புவோர் Change.org இல் எங்கள் மனுவில் கையொப்பமிட்டு, செயலூக்கமான ஆதரவாளராகப் பதிவுசெய்து உங்களுக்கு அறிமுகமானவர்கள் மற்றும் நண்பர்களிடையே இந்த அறிக்கையை பகிரவும்.

தீர்ப்பின் விபரம்

சோசலிச சமத்துவக் கட்சியை 'இடதுசாரி தீவிரவாதி' என வரையறுப்பதையும், மார்க்சிச முன்னோக்கை ஆதரிக்கிறது என்ற அடிப்படையில் இரகசிய உளவுத்துறையின் கண்காணிப்பையும் நீதிமன்றம் வெளிப்படையாக நியாயப்படுத்துகிறது. சோசலிச சமத்துவக் கட்சி, 'வரலாற்று ரீதியான மறுபரிசீலனையை முன்வைப்பதில் ஈடுபடவில்லை, மாறாக மார்க்ஸ், ஏங்கெல்ஸ், ட்ரொட்ஸ்கி மற்றும் லெனின் ஆகியோரின் எழுத்துக்களை அடிப்படையாகக் கொண்ட ஒரு அரசியல் நிகழ்ச்சி நிரலைப் பின்பற்றுகிறது' என்பதால், அது தாராளவாத ஜனநாயக அடிப்படை ஒழுங்கமைப்பிற்கு எதிராக இயக்கப்படுகிறது என அத்தீர்ப்பு குறிப்பிடுகின்றது.

உண்மையில், இந்த நாட்டில் கிட்டத்தட்ட அனைத்து ஜனநாயக உரிமைகளும் மார்க்சிச தொழிலாளர் இயக்கத்தின் போராட்டங்கள் மூலமே வென்றெடுக்கப்பட்டன. 1919 இல் தொழிலாளர்கள் மற்றும் சிப்பாய்கள் குழுக்கள் மன்னரை தூக்கியெறிந்த பின்னரே வரையறுக்கப்பட்ட பாராளுமன்ற ஒழுங்குமுறையை நிறுவ முடிந்தது. இறுதியில், ஹிட்லருக்கு சர்வாதிகார அதிகாரங்களை வழங்கும் சட்டத்திற்கு எதிராக வாக்களித்தது தொழிலாளர் கட்சிகள் மட்டுமே. அந்த நேரத்தில் ஹிட்லர் பதவிக்குவருவதை நிறுத்தியிருக்ககூடிய ஒரு ஐக்கிய முன்னணி முன்னோக்கிற்காக போராடியது ட்ரொட்ஸ்கிஸ்டுகள் மட்டும்தான்.

நீதிமன்றம் 'தாராளவாத ஜனநாயக அடிப்படை ஒழுங்கமைப்பு' என்று குறிப்பிடும் போது, அது மார்க்சிச தொழிலாளர் இயக்கம் போராடிய அடிப்படை ஜனநாயக உரிமைகளை அர்த்தப்படுத்துவதில்லை, மாறாக பெரும்பான்மை மக்களுக்கு எதிராக முதலாளித்துவத்தின் பாதுகாப்பையே குறிப்பிடுகின்றது. முன்பு பிஸ்மார்க் மற்றும் ஹிட்லர் செய்தது போலவே, மார்க்ஸ், ஏங்கெல்ஸ், லெனின் அல்லது ட்ரொட்ஸ்கியை அடிப்படையாக கொண்டிருக்கும் எந்தவொரு கட்சியையும் தடை செய்ய விரும்புகிறது.

சோசலிச சமத்துவக் கட்சி தனது இலக்கான சோசலிச சமுதாயத்தை ஜனநாயக வழிமுறைகளால் அடைய விரும்புகிறது என்பதையும் மற்றும் அதற்காக பெரும்பான்மையான மக்களை வெற்றிகொள்ள முயல்கின்றது என்பதையும் நீதிமன்றம் மறுக்கவில்லை. சோசலிச சமத்துவக் கட்சியின் கொள்கைகளின் பிரகடனத்தில் உள்ளவாறு, 'இவை மற்றும் பிற ஜனநாயக மாற்றங்கள் மீதான முடிவு வெகுஜனங்களால் எடுக்கப்படும்' மற்றும் அதிகாரத்திற்கான போராட்டத்தில் தொழிலாளர்கள் 'அனைத்து ஜனநாயக உரிமைகளையும் தீவிரமாக பாதுகாக்க வேண்டும்' என்ற அறிக்கையை தனது தீர்ப்பில் குறிக்கிறது.

பொருளாதாரம் உட்பட சமூக வாழ்வின் அனைத்து துறைகளையும் மக்கள் ஜனநாயகரீதியாகக் கட்டுப்படுத்தும் இந்த வேலைத்திட்டமே அரசியலமைப்பிற்கு எதிரானது என நீதிமன்றம் அறிவிக்கிறது. சமூக சமத்துவமின்மையை வெளிக்கொணரும் எந்தவொரு அறிக்கையும் ஜனநாயகத்துடன் ஒத்துப்போகாது, பெரிய வங்கிகள் மற்றும் பெருநிறுவனங்களின் அதிகாரம் உண்மையான மக்கள் அரசாங்கத்திற்கு எதிரானது அல்லது அரசின் அமைப்புக்கள் பணக்காரர்களின் நலன்களுக்குச் சேவை செய்கின்றன என்ற எந்தவொரு அறிக்கையும் நீதிமன்றத்தின்படி தடை செய்யப்பட வேண்டும் என்கிறது. தீர்ப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

அடிப்படைச் சட்டத்தின் (அரசியலமைப்புச் சட்டம்) கீழ் நிறுவப்பட்ட அமைப்புக்கள் ஒரு முதலாளித்துவ வர்க்கத்திற்கு அதிகாரத்தைத் தக்கவைக்க மட்டுமே உதவுகின்றன என்றால், அரசியலமைப்பின் படி அவை முழு மக்களின் சட்டபூர்வமான தன்மையைக் கொண்டிருந்தாலும், சோசலிச சமத்துவக் கட்சியால் கற்பனை செய்யப்படும் 'புதிய அமைப்புக்கள்' இதிலிருந்து வேறுபட்ட ஒரு சட்டபூர்வத்தன்மையை கொண்டிருக்கவேண்டும் என்பது வெளிப்படையானது. ஏனென்றால், 'புதிய அமைப்புக்கள்' முழு மக்களின் விருப்பத்திற்கு ஏற்றமாதிரி இருக்குமானால், சோசலிச சமத்துவக் கட்சியால் விமர்சிக்கப்படும் சூழ்நிலைகளில் உண்மையில் எதுவும் மாறாது. சோசலிச சமத்துவக் கட்சியின் கருத்தில் உள்ளது 'புதிய அமைப்புகளான' தொழிலாளர்கள் குழுக்களாகும். இது, இந்த அடிப்படைச் சட்டத்தின்படி பாராளுமன்ற ஜனநாயகத்துடன் பொருந்தாது என்ற முடிவிற்கு வரச்செய்கின்றது.

அரச அமைப்புகளின் ஜனநாயக சட்டபூர்வமான தன்மையைக் கேள்விக்குள்ளாக்குவது அரசியலமைப்பிற்கு முரணானது என்று அறிவிக்கப்படுவதே இந்த வார்த்தைப் பிரயோகத்தின் மைய அம்சமாகும். இன்னொரு இடத்தில், அரசு அமைப்புகள் முதலாளிகளின் நலன்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றன, எனவே அவை உண்மையான ஜனநாயகரீதியான அமைப்புக்களால் மாற்றப்பட வேண்டும் என்ற சோசலிச சமத்துவக் கட்சியின் கருத்தை நீதிமன்றம் தடை செய்கிறது. இதற்கு: “பிரிவு 20 (2) பத்தி 1 GG [Grundgesetz- அரசியலமைப்பு] படி, அனைத்து அரச அதிகாரமும் மக்களிடமிருந்தே வந்தாலும், அரசு முழு மக்களாலும் சட்டபூர்வமாக்கப்படவில்லை என்று சோசலிச சமத்துவக் கட்சி கூறுகிறது”.

எனவே, பெரும்பான்மையான மக்களின் ஒரு வெகுஜன இயக்கமானது, அரசு அமைப்புகளின் சட்டபூர்வமான தன்மையை மறுப்பதற்கும், பெரிய வங்கிகள் மற்றும் பெருநிறுவனங்களை கையகப்படுத்துவதற்கும், பொருளாதாரத்தை ஜனநாயகமயமாக்குவதற்கும் ஆதரவானதாக இருக்குமானால், நீதிமன்றத்தின்படி, இது ஒரு மர்மமான 'ஒட்டுமொத்த மக்களின் விருப்பத்திற்கு” எதிரானது என நீதிமன்றம் குறிப்பிடுகின்றது. இந்த விருப்பானது, அரசு அமைப்புகளில் அதன் முழுமையான வெளிப்பாட்டைக் காண்கிறது என்கின்றது. இந்த அமைப்புக்கள் என நீதிமன்றம் வெளிப்படையாகக் குறிப்பிடுவது அடக்குமுறையின் அரசு எந்திரத்தையே:

அடிப்படைச்சட்டத்தின் கருத்தாக்கத்திலிருந்து வேறுபட்ட விதத்திலான ஒரு ஜனநாயகத்தைப் பற்றிய விளக்கம் சோசலிச சமத்துவக் கட்சிக்கு உள்ளது என்பது இறுதியாக, கட்சிக் கொள்கைகள் பற்றிய அறிக்கையின் 24 வது பத்தியில் குறிப்பிட்டுள்ளதுபோல், சட்டத்திற்கு இணங்க அடிப்படைச் சட்டத்தால் சட்டபூர்வமாக்கப்பட்ட அரசு அமைப்புகளை இழிவுபடுத்துகிறது. அதாவது அரசு உளவுத்துறை மற்றும் கூட்டாட்சி ஆயுதப்படைகளை ஜனநாயக விரோதமானது மற்றும் மக்களுக்கு எதிராக இயக்கப்பட்டுகின்றது எனக் குறிப்பிடுகின்றது.

இது சர்வாதிகாரத்தின் வார்த்தைகளாகும். இது பெரும்பான்மை மக்களின் அறிவிக்கப்பட்ட விருப்பம் அல்ல, மாறாக அரசின் நிறுவனங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதாகும். இந்த வாதத்திற்கும், 'தாராளவாத ஜனநாயக அடிப்படை ஒழுங்கமைப்பை' பாதுகாப்பதற்கும் எந்த தொடர்பும் இல்லை. ஆனால் இது ஒரு ஜனநாயகரீதியான இயக்கத்திற்கு எதிராக அரசு அமைப்புகளை பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

ஜனவரி 6, 2021 அன்று அமெரிக்காவில் ட்ரம்பின் ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி, அரசு அமைப்பினுள் இருக்கும் சர்வாதிகாரப் போக்குகளின் ஆபத்து எவ்வளவு கடுமையானது என்பதைக் காட்டுகிறது. ஜேர்மனியில், இராணுவமும் காவல்துறையும் தீவிர வலதுசாரி பயங்கரவாத வலைப்பின்னல்களால் சிக்கியுள்ளன. மேலும் உளவுத்துறை (Verfassungsschutz) நவ-நாஜி பிரிவிவினருடன் நெருக்கமாகப் பின்னிப் பிணைந்துள்ளது.

இதேமாதிரியான ஜனநாயக விரோத தர்க்கம்தான் இத்தீர்ப்பு முழுவதும் ஊடுருவி இருக்கிறது. எனவே, 'சோசலிசம், புரட்சி மற்றும் முதலாளித்துவம்' போன்ற சொற்களின் பயன்பாடு 'பொருளாதார-அரசியல் உறவுகளின் மாற்றத்தை' குறிப்பிட்டால் மட்டுமே அனுமதிக்கப்படும் என்று நீதிமன்றம் கூறுகிறது. எவ்வாறாயினும், அரசியலின் மீது பொருளாதார அமைப்பு ஏற்படுத்தும் தாக்கங்களுக்கு கவனம் செலுத்தினால் -உதாரணமாக பணம்தான் உலகை சுற்ற வைக்கிறது என்ற பழமொழி மூலம்- இது நீதிமன்றத்தின் படி அரசியலமைப்பிற்கு எதிரானது.

குறிப்பாக நீதிமன்றத்தின் பார்வையில் மார்க்சிசம் அரசியலமைப்பிற்கு எதிரானது, ஏனெனில் 'மார்க்சிச விளக்கத்தின்படி, முதலாளித்துவம் ஒருபோதும் பொருளாதார அமைப்புடன் மட்டும் மட்டுப்படுத்தப்பட முடியாது. மாறாக, அதன் படி, முற்றுமுழுதான உற்பத்தி உறவுகள் சமூகத்தின் பொருளாதார கட்டமைப்பை உருவாக்குகிறது. இந்த உண்மையான பொருளாதார கட்டமைப்பின் அடித்தளத்தின் மீது சட்ட மற்றும் அரசியல் மேற்கட்டுமானம் எழுகிறது.”

வங்கிகள் மற்றும் பெருநிறுவனங்களின் ஆணைகள் மேலும் மேலும் அம்பலமாகி வருவதால், நீதிமன்றம் அவற்றைப் பற்றிய எந்தக் குறிப்பையும் தடை செய்ய விரும்புகிறது. அதன்படி, சோசலிசக் கொள்கைகளின்படி சமூகத்தை மாற்றுவது அரசியலமைப்பிற்கு எதிரானது என்று அறிவிக்கிறது. ஏனெனில் இது பொருளாதாரக் கொள்கையில் மட்டுமான ஒரு மாற்றத்திற்கு அப்பால் செல்கிறது.

நீதிமன்றத்தின் வாய்மூலமான தீர்ப்பை வழங்கும்போது, தலைமை நீதிபதி பீட்டர்ஸ், 'சந்தை அடிப்படையிலான சொத்துடமை முறையை' ஒரு 'சுதந்திர சட்டம்' என்று உயர்த்திக்காட்டி, சோசலிச சமத்துவக் கட்சி 'உற்பத்திச் சாதனங்களின் மீதான தனியார் சொத்துரிமையை” கேள்விக்குள்ளாக்குவதையும் மற்றும் விமர்சிப்பதையும் அரசியலமைப்புக்கு எதிரானது என அறிவித்தார். இவ்வாறு அவர், மக்களைச் சுரண்டுவதை மிக உயர்ந்த அடிப்படை உரிமையாக உயர்த்தி, அது பெரும்பான்மையினரால் அறிவிக்கப்பட்ட விருப்பத்திற்கு எதிராகவும் கூட பாதுகாக்கப்பட வேண்டும் என்றார்.

தற்போதுள்ள வர்க்க முரண்பாடுகளில் இருந்து எழும் எந்தவொரு கொள்கையையும் நீதிமன்றம் தடை செய்ய விரும்புகிறது. தீர்ப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

சமூகத்தை வர்க்கங்களாக வேறுபடுத்திக்காட்டுவது 'சமூகங்களின் பகுப்பாய்விற்கு விஞ்ஞானரீதியாக அங்கீகரிக்கப்பட்ட மற்றும் பரவலாக பயன்படுத்தப்படும் கருவி' என்று சோசலிச சமத்துவக் கட்சிக்கு கூற சுதந்திரம் இருக்கிறது. இருப்பினும், சோசலிச சமத்துவக் கட்சி சமூகம் பற்றிய சமூகவியல் ஆய்வுகளை நடத்தவில்லை. ஆனால் அதன் கட்சி வேலைத்திட்டம் சமூகத்தை வர்க்கங்களாகப் பிரிப்பதை அடிப்படையாகக் கொண்டது. இது தெளிவாக வர்க்கப் போராட்டத்தை நோக்கியதாகும்.

எனவே, நீதிமன்றத்தின் கூற்றுப்படி, தற்போதுள்ள வர்க்க விரோதங்களை ஒருவர் அதன் பெயரால் அழைக்க அனுமதிக்கப்படுகிறார், ஆனால் அவற்றிலிருந்து அரசியல் முடிவுகளைப் பெற ஒருவர் அனுமதிக்கப்படுவதில்லை. உண்மையில், இந்த அபத்தமான சூத்திரப்படுத்தல் சமூக சமத்துவமின்மை பற்றிய எந்த விவாதமும் தடை செய்யப்படுவதில் முடியும் என்பதையே குறிக்கிறது. எடுத்துக்காட்டாக, பிரிட்டிஷ் தொண்டு நிறுவனமான ஆக்ஸ்பாம் இந்த ஆண்டு வறுமை பற்றிய அறிக்கையில் சமத்துவமின்மை வரலாற்றில் மிகப்பெரிய அளவில் இருப்பதாகவும், 'பொருளாதார வன்முறையை அதன் வேர்களில் எதிர்த்துப் போராடுவதற்கும், மேலும் சமத்துவமான ஒரு உலகத்திற்கான அடித்தளத்தை அமைப்பதற்கும் திட்டமிட்ட தீர்வுகளால் மட்டுமே முடியும் எனக் குறிப்பிட்டது. நீதிமன்றத்தின் படி இவ்வாறான கருத்து அரசியலமைப்பிற்கு எதிரானதாகும்.

வழக்கு தொடர்பான செலவுத் தொகையை நிர்ணயிப்பதில் கூட இத்தீர்ப்பின் பக்கச்சார்பான தன்மை தெளிவாகத் தெரிகிறது. இதுபோன்ற வழக்குகளில் வழக்கமான 5,000 யூரோக்களுக்குப் பதிலாக, நீதிபதி 20,000 யூரோக்களாக சர்ச்சைக்குரிய தொகையை சுருக்கமாக நிர்ணயித்துள்ளார். இது நீதிமன்றச் செலவுகளையும் மேல்முறையீட்டுக்கான செலவுகளையும் பெருமளவில் அதிகரிக்கிறது. 2017 உளவுத்துறை (Verfassungsschutz) அறிக்கையிலிருந்து சோசலிச சமத்துவக் கட்சி அதை நீக்குவதற்கு விண்ணப்பித்தது மட்டுமின்றி, அடுத்த ஆண்டுகளில் இருந்தவற்றிலிருந்தும் நீக்குமாறு கோரியதால் அத்தொகை தீர்மானிக்கப்பட்டது என்பது நீதிமன்றத்தின் போலியான நியாயப்படுத்தலாகும். இது ஏறக்குறைய ஒரே மாதிரியாக விடயமாக இருப்பதால் நான்கு மடங்கு அதிகரிப்பை அவ்வாறு நியாயப்படுத்த முடியாது. மேலும், சோசலிச சமத்துவக் கட்சி அடுத்தடுத்த விண்ணப்பங்களைத் தாக்கல் செய்ய வேண்டியிருந்தது என்பதற்கு நீதிமன்றமே பொறுப்பாகும். ஏனெனில் இது ஆரம்ப விசாரணையை கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் தாமதப்படுத்தியது.

பாசிசத்தின் துர்நாற்றம்

நிர்வாக நீதிமன்றத்தின் தீர்ப்பை சர்வாதிகார மற்றும் பாசிச வழிமுறைகளை நோக்கி ஆளும் வட்டங்களின் திரும்பும் சர்வதேச நிகழ்வுகளின் ஒரு பகுதியாக பார்க்கப்பட வேண்டும். குடியரசுக் கட்சி டொனால்ட் ட்ரம்பிற்கு தொடர்ந்து ஆதரவளிக்கிறது, அவர் தனது வாரிசான ஜோ பைடெனின் தேர்தலை சதித்திட்டத்தின் மூலம் தடுக்க முயன்றார் மற்றும் ஒரு பாசிச சர்வாதிகாரத்தை நிறுவ முயன்றார். இங்கு, ஜேர்மனிக்கான மாற்றீட்டு கட்சி (AfD) நாஜிக்களின் வீழ்ச்சிக்குப் பின்னர் நாடாளுமன்றத்தில் அமர்ந்திருக்கும் முதல் தீவிர வலதுசாரிக் கட்சியாகும். இது மற்ற கட்சிகளால் நாடாளுமன்ற வேலைகளில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளதுடன் மற்றும் அகதிகள் கொள்கை மற்றும் பல துறைகளிலும் அரசாங்கத்தின் கொள்கையை தீர்மானிக்கின்றது. வலதுசாரி தீவிரவாத பயங்கரவாத வலையமைப்புகள் அரச பாதுகாப்பு அமைப்புகளால் ஊக்குவிக்கப்பட்டு பாதுகாக்கப்படுகின்றன.

சோசலிச சமத்துவக் கட்சி மீதான தாக்குதல், இந்த வலதுநோக்கிய திருப்பத்தின் மத்திய கூறுபாடாகும். இது முதன்முதலில் 2018 இல் உளவுத்துறையின் (Verfassungsschutz) ஆண்டறிக்கையில் சேர்க்கப்பட்டது. அந்த நேரத்தில், வலதுசாரி தீவிரவாதியான ஹன்ஸ் கியோர்க் மாஸன் உளவுத்துறைக்குத் தலைமை தாங்கினார்.

இதற்கு எதிராக சோசலிச சமத்துவக் கட்சி வழக்குத் தொடுத்தபோது, மத்திய உள்துறை அமைச்சகம் 56 பக்க சுருக்கத்துடன் பதிலளித்தது. இது ஒரு சட்ட ஆவணம் அல்ல, ஆனால் சோசலிசத்திற்கு எதிரான கோபமான வசைமாரியாகும். 'சமத்துவ, ஜனநாயக மற்றும் சோசலிச சமுதாயத்திற்காக வாதிடுவது' மற்றும் 'ஏகாதிபத்தியம்' மற்றும் 'இராணுவவாதம்' என்று கூறப்படுவதற்கு எதிராக கிளர்ச்சி செய்வது கூட அரசியலமைப்பிற்கு எதிரானது என்று அமைச்சகம் அறிவித்தது. அது 'வர்க்க அடித்தளத்தில் சிந்திப்பது' மற்றும் 'சமரசம் செய்யமுடியாத எதிரெதிரான போட்டி வர்க்கங்கள் இருக்கின்றன என்ற நம்பிக்கை' ஆகியவற்றை தடை செய்ய விரும்பியது.

நீதிமன்றம் இப்போது இந்த ஜனநாயக விரோத நிலைப்பாட்டை ஆதரித்து இன்னும் மேலே சென்றுள்ளது. பெரும்பான்மையான மக்கள் கூட அரசு அமைப்புகளை மாற்ற அனுமதிக்கக் கூடாது என்ற அதன் விவாதமானது, இவை 'ஒட்டுமொத்த மக்களின் விருப்பத்தை' உள்ளடக்கியிருப்பது மட்டுமல்ல ஒரு சோசலிச வெகுஜன இயக்கத்திற்கு எதிரானது மட்டுமல்ல, அடிப்படை ஜனநாயகக் கோட்பாடுகளுக்கும் எதிரானதாகும்.

ஏற்கனவே 1776 ஆம் ஆண்டின் அமெரிக்க சுதந்திரப் பிரகடனம், 'வாழ்க்கை, சுதந்திரம் மற்றும் மகிழ்ச்சியாக இருப்பது ஆகியவற்றிற்கு இறுதியில் அழிவை ஏற்படுத்தும் எந்தவொரு அரசாங்கத்தையும் மாற்றுவதற்கும் அல்லது அகற்றுவதற்கும், புதிய அரசாங்கத்தை நிறுவுவதற்கும் மக்களுக்கு உரிமை உள்ளது' என்று பிரகடனப்படுத்தியது.

பேர்லின் நிர்வாக நீதிமன்றத்தின் தீர்ப்பு இந்த ஜனநாயக பாரம்பரியத்தின் மீது தங்கியிருக்கவில்லை, மாறாக கெய்சர் பேரரசின் எதேச்சதிகார பாரம்பரியத்தின் மீது தங்கியுள்ளது. இது அரசின் உத்தரவை மிக உயர்ந்த நன்மையானதாக அறிவித்து சமூக ஜனநாயகத்தை தடைசெய்தது.

பின்னர் நாஜிகளை ஆதரித்த நீதிபதி கார்ல் ஷ்மிட், புரட்சியை நசுக்க 'இராணுவ சர்வாதிகாரத்தின்' அவசியத்தை நியாயப்படுத்த வைய்மார் குடியரசில் இந்த கருத்தியல் பாரம்பரியத்தை எடுத்துக் கொண்டார். பின்னர், அவர் மூன்றாம் குடியரசின் ஜனாதிபதியை 'அரசியலமைப்பின் பாதுகாவலர்' என்று வாதிடுவதன் மூலம் வொன் பாப்பன் மற்றும் ஷிலைசரின் ஜனாதிபதி சர்வாதிகாரத்தை நியாயப்படுத்தினார். அவ்வாறு, அவர் பாராளுமன்றத்தில் இருந்து 'முழு ஜேர்மன் மக்களின் அரசியல் ஒற்றுமையை' பாதுகாக்க வேண்டியிருந்தது. இது 'நலன்களுக்கான சமூக மற்றும் பொருளாதார மோதல்களின்' பிரதிபலிப்பாக, அதாவது வர்க்க முரண்பாடாக, அரசின் சிதைவுக்கு பங்களித்தது.

அங்கிருந்து 'தலைவர்' (“Führer”) மகிமைப்படுத்தப்படுவதற்கு இது ஒரு சிறிய படி மட்டுமே இருந்தது. 1934 ஆம் ஆண்டில், Röhm சதி என்றழைக்கப்படுவதின் பின்னர் தனது பிரபலமற்ற கட்டுரையான 'தலைவர் சட்டத்தை பாதுகாக்கிறார்' என்பதில் ஹிட்லருக்கு எதிரான 200 பேரின் கண்டிக்கத்தக்க கொலையை ஷ்மிட் ஆதரித்தார். 1937 இல் வெளியிடப்பட்ட அவரது 'அரசியலமைப்புச் சட்டம்' என்பதில், ஷ்மிட்டின் மாணவர் ஏர்ன்ஸ்ட் ருடோல்ஃப் ஹூபர் பின்னர் சமூக நலன்களின் மோதல்களால் தீர்மானிக்கப்பட்ட 'அகநிலைரீதியான மக்களின் நம்பிக்கைகளிலிருந்து' மக்களின் புறநிலைரீதியான விருப்பத்தை நிராகரிக்கிறார். 'எவ்வாறாயினும், மக்களின் விருப்பத்தை உண்மையில் தாங்குபவராக தலைவர் இருக்கிறார்' என்று அவர் அறிவித்தார். 'வாக்களிக்கும் மக்கள் அவருக்கு எதிராகத் திரும்பினாலும், மக்களின் புறநிலைரீதியான பணியை உள்ளடக்கியவராக இருக்கின்றார்' என்றார்.

இந்த சட்டப் பாரம்பரியத்தின் அடிப்படையில், நீதிபதி பீட்டர்ஸ் எந்த வரலாற்றுக் குறிப்புகளையும் நிராகரிப்பதில் ஆச்சரியமில்லை. ஏற்கனவே வாய்மொழித் தீர்ப்பில் அவர் பின்வருமாறு அறிவித்தார்: 'இன்று நாம் பிஸ்மார்க்கின் சட்டங்கள், கார்ல் மார்க்ஸ் பற்றிய வாதங்கள் போன்ற பல வரலாற்று விஷயங்களைக் கேட்டிருக்கிறோம்,' ஆனால் அவை அனைத்தும் இங்கே 'தேவையானவை அல்ல'.

அதனாலேயே அவர் தனது அனைத்து நியாயத்தன்மையையும் இழந்துவிட்டார். இந்த வரலாற்று அனுபவத்தின் படிப்பினைகளைப் பெறாமல், ஜேர்மனியில் ஜனநாயகத்தைப் பற்றி பேச முடியாது. ஜேர்மனியில் 'சட்ட' மற்றும் 'ஜனநாயக' வழிமுறைகள் மூலம் ஹிட்லர் அதிகாரத்திற்கு வரமுடிந்தது. ஒரு சில மதிப்பளிக்கக்கூடிய விதிவிலக்குகளுடன், முழு நீதித்துறை மற்றும் அரசுசேவை அமைப்பும் அவரது சர்வாதிகாரத்திற்கு சேவை செய்து, அழிப்புப் போரையும் யூதப்படுகொலையையும் ஒழுங்கமைக்க உதவியது.

ஆனால் நீதிமன்றத்தைப் பொறுத்தவரை, இது 'தேவையாதல்ல.' மாறாக, அது ஏனையவற்றுடன், லியோன் ட்ரொட்ஸ்கி 1938 இல் 'பாசிசத்திற்கு எதிரான போராட்டத்தில் பாட்டாளி வர்க்கத்தை ஆயுதபாணியாக்க' அழைப்பு விடுத்ததை காட்டி சோசலிச சமத்துவக் கட்சி அரசியலமைப்புக்கு விரோதமானது என நியாயப்படுத்தியது. ட்ரொட்ஸ்கியின் இந்த அழைப்புத்தான் இரண்டாம் உலகப் போர் மற்றும் யூதப் படுகொலையை தடுப்பதற்கான ஒரேயொரு வழியாக இருந்திருக்கும் என்று சோசலிச சமத்துவக் கட்சியின் பிரதிநிதிகள் நீதிமன்றத்தில் விளக்கமளித்திருந்தனர்.

அதன் சுருக்கத்தில், உள்துறை அமைச்சகம் ட்ரொட்ஸ்கியின் அழைப்பை தாராளவாத ஜனநாயக அடிப்படை ஒழுங்கிற்கு எதிராக ட்ரொட்ஸ்கிச சோசலிச சமத்துவக் கட்சி போராடியது என்பதற்கான ஆதாரமாக மேற்கோள் காட்டியது. இதை நீதிமன்றம் தனது எழுத்துபூர்வ தீர்ப்பில் ஒப்புக்கொள்கிறது. லியோன் ட்ரொட்ஸ்கியைப் பற்றிய குறிப்புகள் 'அவர்களின் வரலாற்று உள்ளடக்கத்தில் வைத்து மதிப்பீடு செய்யப்பட வேண்டும்' மற்றும் அப்போது, பாசிசத்தின் உள்ளடக்கத்தில் கட்சி 'ட்ரொட்ஸ்கியை அடித்தளமாகக் கொண்ட' அரசியல் நிகழ்ச்சி நிரலை பின்பற்றியது என்ற சோசலிச சமத்துவக் கட்சியின் வாதத்தை நீதிமன்றம் நிராகரித்தது.

இவ்வாறு, ஒரு அரசியல் கட்சி, 1938ல் தொழிலாள வர்க்கத்தின் ஆயுதமேந்திய எழுச்சி மூலம் நாஜி ஆட்சி தூக்கியெறியப்பட்டிருக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டை ஒரு அரசியல் கட்சி எடுத்தால், அது தாராளவாத ஜனநாயக அடிப்படை ஒழுங்கிற்கு எதிரானது! எல்லா சூழ்நிலைகளிலும் அரசு எந்திரம் 'ஒட்டுமொத்த மக்களின் விருப்பத்தை' இன்னும் தெளிவாக பிரதிபலிக்கிறது என்ற தனது கருத்தை நீதிபதி பீட்டர்ஸால் வெளிப்படுத்த முடியவில்லை.

ஜேர்மன் கம்யூனிஸ்ட் கட்சி மீதான தடை

அதன் ஜனநாயக விரோத நோக்குநிலையில் இருந்து, நீதிமன்றம் மிகவும் வெளிப்படையாக பிரயோகிக்ககூடிய சட்டம் மற்றும் உச்ச நீதிமன்ற நீதித்துறையை மீறுகிறது. தனது தீர்ப்பிற்கு அதிகாரபூர்வமாக தன்னை அடித்தளமாகக் கொண்ட ஜேர்மன் அரசியலமைப்பு பாதுகாப்புச் சட்டம் (Bundesverfassungsschutz), அத்தகைய ஒரு விளக்கத்தை அனுமதிக்கவே இல்லை. அரசியலமைப்பு ரீதியாக உத்தரவாதம் அளிக்கப்பட்ட கருத்துச் சுதந்திரத்தின் மீது பாரிய கட்டுப்பாட்டை பிரதிநிதித்துவப்படுத்தும் இந்தச் சட்டம், பாதுகாக்கப்பட தகுதியான தாராளவாத ஜனநாயக அடிப்படை ஒழுங்கின் கொள்கைகளில் முதலாளித்துவம் மற்றும் தனியார் சொத்துக்களை வெளிப்படையாக சேர்த்துக்கொள்ளவில்லை.

ஜனவரி 17, 2017 அன்று பாசிச ஜேர்மன் தேசியக் கட்சி (NPD) மீதான தடைக்கு எதிரான தனது தீர்ப்பில் உச்ச நீதிமன்றம் வெளிப்படையாகக் பின்வருமாறு கூறியது. இது அரச அமைப்புகளை நிராகரிப்பது பற்றியது அல்ல, மாறாக 'அரசியல் முடிவெடுக்கும் செயல்பாட்டில் அனைவரும் சமமாக பங்கேற்பதற்கான சாத்தியக்கூறு மீதான தாக்குதல் மட்டுமே. அத்துடன் அரசு, அதிகாரத்தை மக்கள் மீது பிரயோகிப்பதை மீண்டும் திருப்பியளிப்பது' இது அரசியலமைப்பிற்கு எதிரானதாகக் கருதப்படும். தீர்ப்பில் வெளிப்படையாகக் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது:

பாராளுமன்றவாதத்தை நிராகரிப்பது, அதை ஒரு வாக்கெடுப்பு முறையால் மாற்றுவதற்கான கோரிக்கையுடன் இணைந்தால், அது தாராளவாத ஜனநாயக அடிப்படை ஒழுங்கை புறக்கணிப்பது என்ற குற்றச்சாட்டை நியாயப்படுத்த முடியாது. எவ்வாறாயினும், ஒரு கட்சி அமைப்பை நிறுவும் நோக்கில் பாராளுமன்றத்தை நிராகரிக்கும் சந்தர்ப்பத்தில் நிலைமை வித்தியாசமானது.

இந்த தீர்ப்பை சோசலிச சமத்துவக் கட்சியின் வழக்கறிஞர் பியர் ஸ்ரோல்ல (Peer Stolle) மற்றும் நீதிமன்றத்தில் சோசலிச சமத்துவக் கட்சியின் பிரதிநிதிகள் இருவரும் மேற்கோள் காட்டியுள்ளனர். ஆனால் நீதிபதி பீட்டர்ஸ் வேண்டுமென்றே அந்த வழக்கு சட்டம் பற்றிய குறிப்புகளை புறக்கணித்தார். மாறாக, ஜேர்மன் கம்யூனிஸ்ட் கட்சியின் (KPD) தடை மீதான 1956 தீர்ப்பின் அடிப்படையில் அவர் தனது எழுத்துபூர்வ தீர்ப்பை முழுமையாக அடிப்படையாகக் கொண்டார்.

இது, சோசலிச சமத்துவக் கட்சிக்கு எதிரான நடவடிக்கையில் இருக்கும் பிற்போக்குத்தனமான மற்றும் ஜனநாயக விரோத பாரம்பரியத்தையும் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. பனிப்போர் காலத்தில் இருந்து ஜேர்மன் கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிரான தீர்ப்பு நீண்டகாலமாக மதிப்பிழந்து வருகிறது. அப்போதைய உச்ச நீதிமன்றத் தலைவர் ஜுட்டா லிம்பாக், 1996 ஆம் ஆண்டு, பொருந்தக்கூடிய அரசியலமைப்புச் சட்டங்களின்படி தடையை நிராகரித்திருப்பார் என்று ஏற்கனவே கூறியிருந்தார். வரலாற்றாசிரியர் பேராசிரியர் ஜோசப் ஃபோஸ்சபோத், ஜேர்மன் கம்யூனிஸ்ட் கட்சியின் வழக்கை முழுமையாக ஆராய்ந்து, முன்னர் அணுக முடியாத நிலை கோப்புகளை மதிப்பிட்டு, 2017 இல் வெளியிடப்பட்ட அரசியலமைப்புக்கு எதிரானது! என்ற புத்தகத்தில் ஜேர்மன் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்பான தீர்ப்பு அரசியல் சாசனத்தை அப்பட்டமாக மீறியது மற்றும் அரசியல் உள்நோக்கம் கொண்டது. 'இந்த வழக்கில் தனி அதிகாரங்கள் இருக்கவில்லை, ஆனால் ஒரே ஒரு அதிகாரம் மட்டுமே இருந்தது. அது மத்திய அரசாங்கத்தின் அழுத்தத்தின் கீழ், ஜேர்மன் கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்தியது' என்று ஃபோஸ்சபோத் எழுதுகிறார்.

நாஜிக்களின் கீழ் கம்யூனிஸ்டுகளை துன்புறுத்துவதில் ஏற்கனவே ஒரு தீவிர பங்கைக் கொண்டிருந்த அதே தீவிர வலதுசாரி பிரிவினரால் அடினோவர் அரசாங்கம் இந்த வழக்கில் பிரதிநிதித்துவப்படுத்தப்பட்டது. அப்போது மத்திய அரசாங்கத்தின் வழக்கு அலுவலகத்தின் தலைவர் ஹான்ஸ் ரிட்டர் வொன் லெக்ஸ் ஆவார். அவர் பவேரியன் மக்கள் கட்சியின் (BVP) பாராளுமன்ற (Reichstag) உறுப்பினராக 23 மார்ச் 1933 அன்று ஹிட்லருக்கு அதிகாரத்தை வழங்கும் சட்டத்திற்கு தனது கட்சியின் ஒப்புதலை அறிவித்தார். சில நாட்களுக்கு முன்பு, ஒரு தனிப்பட்ட உரையாடலில், 'ஜேர்மனியில் மார்க்சிசத்தை ஒழிப்பதற்கான' அவரது இலக்கை தானும் பகிர்ந்து கொள்வதாக ஹிட்லரிடம் உறுதியளித்தார்.

'கடுமையான வழிமுறைகளைப் பயன்படுத்துவதன் மூலமும், இந்த மாசுபாட்டிலிருந்து (மார்க்சிசத்தில்) ஜேர்மன் மக்கள் விடுவிக்கப்பட வேண்டும் என்பது அனைத்து தேசபக்தி எண்ணம் கொண்ட வட்டங்களின் பொதுவான கோரிக்கையாகும்,' என்று அவர் கூறினார்.

நீதிபதி பீட்டர்ஸ் முன்னாள் நாஜி வழக்கறிஞர்களின் இந்தத் தீர்ப்பைப் பயன்படுத்தி சோசலிசக் கருத்துகளை முற்றிலுமாகத் தடை செய்கிறார். எந்த ஆதாரத்தையும் மேற்கோள் காட்டாமல் ஜேர்மன் கம்யூனிஸ்ட் கட்சி மீதான தீர்ப்பின் வார்த்தைகளைப் பயன்படுத்தி, ட்ரொட்ஸ்கிச சோசலிச சமத்துவக் கட்சி 'அரசு அதிகாரம் ஒரு அரசாங்க கட்சியில் குவிந்திருக்கும்' ஒரு கட்சி சர்வாதிகாரத்தை ஆதரிப்பதாக அவர் குற்றம் சாட்டுகிறார். இதை ட்ரொட்ஸ்கிச இயக்கம் எப்போதுமே ஸ்ராலினிச சோவியத் ஒன்றியம் மற்றும் முன்னாள் கிழக்கு ஜேர்மனியில் இவ்வாறான வடிவத்தை நிராகரித்துள்ளது.

'அரசு கட்சியின் சர்வ வல்லமை மற்றும் அரசியல் தேவைகள் பற்றிய அதன் ஒரே உட்பார்வையில், மக்கள் பிரதிநிதித்துவத்திற்கான அரசாங்கத்தின் பொறுப்புக்கூறல் மற்றும் இன்னும் அதிகமாக ஒரு நாடாளுமன்ற எதிர்ப்பை உருவாக்குவது மற்றும் செயல்படுத்துவது விலக்கப்பட்டுள்ளது' என்று பீட்டர்ஸ் தனது பொய்யான கட்டமைப்பை உருவாக்குகிறார். 'அத்தகைய அரசியலில், மனித உரிமைகளுக்கு உத்தரவாதம் இல்லை' என்றார்.

நீதிபதி பீட்டர்ஸ் உறுதிப்படுத்துவதற்கு கூட கவலைப்படாத இந்தப் பொய்யின் மூலம், அவர் ஸ்ராலினிச குற்றங்களுக்கு எதிராக நிறுவப்பட்ட ட்ரொட்ஸ்கிச இயக்கத்தை அதனுடன் ஒரேமாதிரியானதாகக் காட்டுகின்றார். அவ்வாறு செய்யும்போது, பீட்டர்ஸ் வேண்டுமென்றே ஸ்டோல் தனது சுருக்கங்களில் கூறிய அறிக்கைகளையும், நீதிமன்றத்தில் சோசலிச சமத்துவக் கட்சிப் பிரதிநிதிகள் கூறியதையும் புறக்கணிக்கிறார். இவ்விசாரணையின் போது, ஸ்ராலினிசமும் ட்ரொட்ஸ்கிசமும் ஒன்று என அடையாளம் காட்டப்படுவதை அவர்கள் வெளிப்படையாக பின்வருமாறு நிராகரித்தனர்:'

உண்மையில், ட்ரொட்ஸ்கியும் இடது எதிர்ப்பாளர்களும் ஸ்ராலினிச எதிர்ப்புரட்சிக்கு எதிராக அக்டோபர் புரட்சியில் பொதிந்திருந்த மார்க்சிசக் கொள்கைகளை பாதுகாத்தனர். ஆரம்பத்தில் இருந்தே, இந்தக் கோட்பாடுகள் சோவியத் ஒன்றியத்தில் ஜனநாயகத்தையும் சர்வதேச சோசலிசப் புரட்சியை நோக்கிய நோக்குநிலையையும் உள்ளடக்கியிருந்தது.

ஸ்ராலினிச கொடுங்கோன்மைக்கும் உண்மையான சோசலிசக் கொள்கைகளுக்கும் இடையே உள்ள இணைக்கமுடியாத இடைவெளி 1930களின் மாபெரும் களையெடுப்புகளில் வெளிப்படுத்தப்பட்டது. இதன் போது ட்ரொட்ஸ்கிச ஆதரவாளர்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் நூறாயிரக்கணக்கான கம்யூனிஸ்டுகள் கொல்லப்பட்டனர். ஜேர்மன் ஜனநாயகக் குடியரசில் (கிழக்கு ஜேர்மனி), ஸ்ராலினிஸ்டுகளுக்கு எதிராக ஜனநாயகம் மற்றும் சோசலிசத்திற்காகப் போராடிய ஒஸ்கார் ஹிப்ப போன்ற ட்ரொட்ஸ்கிஸ்டுகளுக்கு நீண்ட கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

நீதிபதி பீட்டர்ஸ் இந்த பிரச்சினைகளை வெறுமனே நிராகரித்திருப்பது, மார்க்சிசத்தையும் மற்றும் அரசாங்கத்தின் வலதுசாரி கொள்கைகளுக்கு எந்தவொரு தீவிர எதிர்ப்பையும் குற்றமாக்குவதை இலக்காகக் கொண்ட ஒரு அரசியல் தீர்ப்பை அவர் வழங்கினார் என்பதை உறுதிப்படுத்துகிறது.

தீர்ப்பின் அரசியல் முக்கியத்துவம்

அரசு அமைப்புகளின் சட்டபூர்வத்தன்மை பற்றிய எந்தவொரு கேள்வியையும், முதலாளித்துவ சமூகத்தின் மீதான எந்தவொரு விமர்சனமும் மற்றும் ஒரு சோசலிச மாற்றத்திற்கான எந்தவொரு ஆதரவையும் குற்றமாக்கும் நீதிமன்றத்தின் முயற்சியானது, அதிகரித்து வரும் சமூக எதிர்ப்பின் முன் ஆளும் வர்க்கத்தின் பீதி நிறைந்த அச்சத்தின் வெளிப்பாடாகும். பெருந்திரளான உழைக்கும் மக்களின் முக்கிய நலன்களுக்கு முன்னால் பணக்காரர்களின் இலாபங்களை முன்வைத்து, போருக்கு ஆயுதமயமாக்கும் கொள்கை மீதான பரவலான நிராகரிப்பு ஒரு நனவான மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட வடிவத்தைப் பெறுகிறது என்று அது அஞ்சுகிறது.

ஓர்வெல்லியன் கற்பனையைப் போலவே, வெளிப்படையாகக் கூறுவதைத் தடை செய்ய முடியும் என்று நீதிமன்றம் கருதுகிறது. பெயரிட்டு குறிப்பிடுவதை நீதிமன்றம் தடை செய்ய விரும்பும் அரசின் வர்க்கத் தன்மை, குறிப்பாக தொற்றுநோய்களில் தெளிவாகத் தெரிகிறது. ஜேர்மனியில் மட்டும், 115,000க்கும் அதிகமான மக்கள் ஏற்கனவே இறந்துவிட்டனர். ஏனெனில் ஆளும் வர்க்கம் மக்களின் வாழ்க்கையை விட அதன் இலாபங்களுக்கு முன்னுரிமை அளிக்கிறது. வணிகங்கள் இயங்குவதற்கும், இலாபம் பெருகுவதற்கும், பங்கு விலைகள் உயருவதற்கும் ஒட்டுமொத்த சமூகமும் வேண்டுமென்றே நோய்த்தொற்றுக்கு உள்ளாக்கப்படுகின்றது.

பெரிய நிறுவனங்கள், நூற்றுக்கணக்கான பில்லியன்களை வரி செலுத்துவோரின் பணத்தைப் பெற்றிருந்தாலும், செவிலியர்கள் நிதி வழங்கல் வெட்டப்பட்ட மருத்துவமனைகளில் அடிமைகளாகவும், அடிப்படை காற்று வடிகட்டிகள் கூட இல்லாத பள்ளிகளும் அவ்வாறே இருக்க வேண்டியுள்ளது. தொற்றுநோயின் முதல் ஆண்டில் மட்டும், உலகின் பில்லியனர்கள் தங்கள் செல்வத்தை 60 சதவிகிதம் அதிகரித்து $13 டிரில்லியன் டாலர்களாக உயர்த்தியுள்ளனர். அதே நேரத்தில் மேலும் 160 மில்லியன் மக்கள் முழுமையான வறுமையில் மூழ்கி உயிர்வாழப் போராடினர்.

மறுசீரமைப்பு என்ற போலிக்காரணத்தின் கீழ், நூறாயிரக்கணக்கான வேலைகள் வெட்டப்படுகின்றன, ஊதியங்கள் குறைக்கப்படுகின்றன, சமூக நலன்கள் வெட்டப்படுகின்றன. பாரியளவில் விரிவுபடுத்தப்பட்ட ஒரேயொரு வரவு-செலவுத் திட்டம் ஆயுதங்களுக்காக மட்டுமே. 2014 முதல், பாதுகாப்பு வரவு-செலவுத் திட்டம் 30 சதவீதத்திற்கு மேல் அதிகரிக்கப்பட்டுள்ளது. சமூக ஜனநாயகவாதிகள், தாராளவாத ஜனநாயகவாதிகள் மற்றும் பசுமைவாதிகளின் கூட்டணி அதை மேலும் அதிகரித்து அணுசக்தி சக்திகளான ரஷ்யா மற்றும் சீனாவுடன் ஒரு மோதல் போக்கை கடைப்பிடித்து, ஒரு புதிய உலகப் போருக்கான ஆபத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்தக் கொள்கைகள் மக்களிடையே வெறுக்கப்படுகின்றன. நீதிமன்றம் தடை செய்ய விரும்பும் கருத்துக்களான, பணக்காரர்களின் நலன்களுக்காக அரசாங்கம் கொள்கைகளை பின்பற்றுகிறது, இந்தக் கொள்கைகளைச் செயல்படுத்த அரசு உதவுகிறது மற்றும் சமூகம் சோசலிச வழியில் மாற்றப்பட வேண்டும் என்பவை பரவலாக பகிரப்படுகின்றன.

ஜனவரி 30, 1933 அன்று, ஜேர்மனியின் ஆளும் வர்க்கம் நாஜிக்கள் தலைமையிலான ஆட்சியினால் மட்டுமே அதன் போர்த் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதையும் மற்றும் தொழிலாளர் இயக்கத்தை நசுக்க முடியும் என்று முடிவு செய்தது. இன்று, அதன் வலதுசாரிக் கொள்கைகளுக்கு எதிரான எதிர்ப்பை முறியடிக்க அது மீண்டும் எதேச்சாதிகார வழிமுறைகளை நாடுகிறது.

இரகசிய சேவையின் வருடாந்தர அறிக்கையில் சோசலிச சமத்துவக் கட்சியை சேர்த்தமையும் மற்றும் 'இடதுசாரி தீவிரவாதிகள்' என்ற அதன் அவதூறு மற்றும் உளவுத்துறை அமைப்புகளால் அதன் கண்காணிப்பு ஆகியவை இந்த திசையில் இன்றியமையாத படிகள் ஆகும். கட்சியை தடை செய்வதற்கான சட்டரீதியான பாதையை இந்த தீர்ப்பு வழங்குகிறது. ஆனால் மத்திய அரசு மற்றும் நீதிமன்றத்தின் ஜனநாயக விரோத வாதம் வலதுசாரி ஆபத்தை எதிர்க்கும் மற்றும் முதலாளித்துவத்தை விமர்சிக்கும் எவருக்கும் எதிராக இயக்கப்படுகிறது.

ஆனால் 2022 ஆம் ஆண்டு 1933 இனைப்போலல்ல. இந்த தீர்ப்பு, தொழிலாள வர்க்கத்தின் பாரிய தோல்விகளைத் தொடர்ந்து வழங்கப்படவில்லை. மாறாக வளர்ந்து வரும் தீவிரமயமாக்கல் நிலைமைகளின் கீழ் வழங்கப்பட்டுள்ளது. ஜேர்மனி, ஐரோப்பா மற்றும் உலகெங்கிலும் வேண்டுமென்றே பாரிய தொற்று, போர் மற்றும் சமத்துவமின்மைக்கு எதிராக போராட தொழிலாள வர்க்கத்தின் ஒரு புதிய வெகுஜன இயக்கம் உருவாகி வருகிறது.

இந்த நிலைமைகளின் கீழ், சோசலிச சமத்துவக் கட்சியின் பாதுகாப்பு முக்கியமானது. உலக சோசலிச வலைத் தள வாசகர்கள் அனைவரையும் இன்றே Change.org இல் கையொப்பமிடுமாறும், எங்களின் சட்டச் செலவுகளுக்கு இயன்றவரை தாராளமாக நன்கொடை வழங்குமாறும் ஆதரவாளராக பதிவு செய்து கொள்ள வாசகர்களை நாங்கள் அழைக்கிறோம். இந்த அறிக்கையைப் பகிர்வதுடன் மற்றும் சமூக ஊடகங்களிலும் நண்பர்கள் மற்றும் சக ஊழியர்களுடன் இதுபற்றி கலந்துரையாடுமாறும் கேட்டுக்கொள்கின்றோம்.

Loading