ஒரு கொலையை உருவாக்குதல்: கோவிட் தடுப்பூசிகளுக்கான சந்தையில் ஃபைசரின் ஆதிக்கம்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

வட அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஜப்பான் ஆகிய ஏகாதிபத்திய நாடுகளில் கோவிட் தடுப்பூசிகளுக்கான சந்தையில் ஆதிக்கம் செலுத்தும் மருந்து நிறுவனமான ஃபைசர், ஆறு பில்லியனுக்கும் அதிகமான தடுப்பூசிகளுக்கு இருதரப்பு ஒப்பந்தங்களுடன், உலகின் ஏழ்மையான நாடுகளளுக்கான உலகளாவிய தடுப்பூசி திட்டமான COVAX இற்கு முக்கிய விநியோகஸ்த்தராக உள்ளது.

அதன் தடுப்பூசி மலிவானதும் மற்றும் வழங்க எளிதானதுமான அஸ்ட்ராசெனெகாவின் இடத்தை அது எடுத்துக்கொள்வதானது, அதனை பெறும் பலநாடுகளில் ஃபைசர்/பயோன்டெக் (Pfizer/BioNTech) தடுப்பூசியை வைத்திருக்க தேவையான குளிர் சேமிப்பு வசதிகள் இல்லாத போதிலும் வருகிறது. ஏறக்குறைய 150 நாடுகளுக்கு வழங்கப்பட்ட 600 மில்லியன் அல்லது அதற்கு மேற்பட்ட தடுப்பூசிகளில், 220 மில்லியனுக்கும் அதிகமானவை அஸ்ட்ராசெனெகா (AstraZeneca) மற்றும் சுமார் 160 மில்லியன் ஃபைசர்/பயோன்டெக் உள்ளடங்குகின்றன. ஆனால் COVAX ஐ இயக்கும் தடுப்பூசி கூட்டணியான Gavi இன் கூற்றுப்படி, ஃபைசர் 'ஒதுக்கப்பட்ட' தடுப்பூசிகளின் அடிப்படையில் மிகவும் முன்னால் உள்ளது. சுமார் 470 மில்லியன் தடுப்பூசிகள் அடுத்த சில மாதங்களில் வினியோகிக்கப்பட்டுவிடும் அல்லது வினியோகத்திற்கு தயாராக உள்ளன. ஆனால் அஸ்ட்ராசெனெகாவிலிருந்து 350 மில்லியன் வழங்கப்பட்டுள்ளது.

ஃபைசர்/பயோன்டெக் தடுப்பூசி (credit: WSWS media) [Photo: WSWS]

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தால் உருவாக்கப்பட்ட தடுப்பூசியான அஸ்ட்ராசெனெகா, தொற்றுநோய்களின் போது அதன் தடுப்பூசியை ஒரு அதன் உற்பத்திசெய்யும் விலையான 4 டாலருக்கும் குறைவாக விற்க ஒப்புக்கொண்டது. ஆனால் ஃபைசர் அதன் இலாபத்தை அதிகப்படுத்த முயன்று, பொதுவாக ஒரு ஊசியை 20 டாலர்கள் என அதிக விலைக்கு விற்றது. ஒரு உயிரியல் பொறியியல் நிபுணர் பிரிட்டனின் சேனல் 4 இன் Dispatches நிகழ்ச்சியான தடுப்பூசி போர்: ஃபைசரைப் பற்றிய உண்மை என்பதில் தடுப்பூசி தயாரிப்பதற்கு ஒரு ஊசிக்கு வெறும் 76 பென்ஸ் மட்டுமே செலவாகும் என்று கூறினார். இருப்பினும் இதில் விநியோகம், சந்தைப்படுத்தல் மற்றும் பிற செலவுகள் உள்ளடங்கவில்லை. பிரித்தானிய அரசாங்கம் ஒரு ஊசிக்கு 22 பவுண்டுகள் செலுத்துவதால், இது உற்பத்தி விலையில் இருந்து கிட்டத்தட்ட 3,000 சதவீத அதிகரிப்பாகும்.

ஃபைசர் இதை மறுத்து, வரிக்கு முந்தைய ஒரு சதவீதமாக அதன் இலாப வரம்பு '20களில்' உள்ளது என்றது. இந்த ஆண்டு விற்கப்பட்ட 2.3 பில்லியன் தடுப்பூசிகளுக்கு 36 பில்லியன் டாலர்களாக கணிக்கப்பட்ட வருவாயுடன் ஒப்பிட்டால் இது பொருத்தமற்ற எண்ணிக்கையாகும். அது தானாகவே அனுமதித்தபடி அதன் இலாபம் குறைந்தது 10 பில்லியன் டாலர்கள் ஆகும்.

கடந்த மாதம், அதன் தலைமை நிறைவேற்று அதிகாரி அல்பேர்ட் போர்லா முதலீட்டாளர்களிடம், நிறுவனம் இந்த ஆண்டு 80 பில்லியன் டாலர்கள் வருவாயை எதிர்பார்க்கிறது. இது, எந்தவொரு மருந்து நிறுவனத்திற்கும் ஒரு சாதனையாகும். இதில் தடுப்பூசி மூலம் மூன்றில் ஒரு பங்கிற்கும் அதிகமான வருமானம் உள்ளது. இது தடுப்பூசியை இந்த ஆண்டு அதிகம் விற்பனையாகும் மருந்து தயாரிப்புகளில் ஒன்றாக ஆக்குவதுடன் மற்றும் மருந்துத் துறையின் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவில் மிகப்பெரிய விற்பனையாளராகுவதையும் சாத்தியமாக்கலாம்.

பைனான்சியல் டைம்ஸ், ஃபைசர் தடுப்பூசியின் உட்கதை: ஒரு சகாப்தத்திற்கு ஒரு முறை என்பதில் குறிப்பிட்டுள்ளபடி, 'தடுப்பூசி ஃபைசரின் அரசியல் செல்வாக்கை மாற்றியுள்ளது.' கடந்த ஆண்டு இறுதியில் தடுப்பூசி அங்கீகரிக்கப்பட்டதிலிருந்து, அதன் “முடிவுகள் தொற்றுநோயின் போக்கை வடிவமைக்க உதவியது. பணக்கார நாடுகள் இப்போது முடுக்கிவிடத் துடித்துக்கொண்டிருக்கும் மேலதிக தடுப்பூசி திட்டங்கள் உட்பட விலைகளை நிர்ணயிப்பதற்கும், ஒருவரும் கண்டுகொள்ள முடியாதுள்ள வினியோக வரிசையில் எந்த நாடு முதலில் வரும் என்பதைத் தேர்ந்தெடுப்பதற்கும் அதற்கு அதிகாரம் உள்ளது.”

இந்த தடுப்பூசி ஃபைசரால் உருவாக்கப்படவில்லை, ஆனால் ஜேர்மன் அரசாங்கத்தின் 375 மில்லியன் யூரோக்கள் நிதியுதவியுடன் பயோன்டெக் மூலம் தயாரிக்கப்பட்டதாகும். தடுப்பூசியைத் தயாரிப்பதற்கும் சந்தைப்படுத்துவதற்கும் போதுமான ஆதாரவளங்கள் இல்லாததால், பயோன்டெக் (BioNTech) வணிகச் செயல்பாடுகளை நிர்வகிக்க ஃபைசர் பக்கம் திரும்பியது. தடுப்பூசி கொள்முதலில் ஈடுபட்டுள்ள அமெரிக்க அரசாங்கத்தின் முன்னாள் அதிகாரி ஒருவர் பைனான்சியல் டைம்ஸிடம் கூறியது போல், தடுப்பூசி இப்போது உலகளவில் ஃபைசர் தடுப்பூசி என்று அறியப்படுகிறது என்பது 'அமெரிக்க மருந்துகளின் வரலாற்றில் மிகப்பெரிய சந்தைப்படுத்தல் கிளர்ச்சி' ஆகும்.

பயோன்டெக் இலாபத்தில் பாதியைப் பெறும் அதேவேளையில், பயோன்டெக் இன் நிறுவனர்களின் சொந்த நாடுகளான ஜேர்மனி மற்றும் துருக்கி மற்றும் பயோன்டெக் ஏற்கனவே Fosun Pharma உடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட சீனாவைத் தவிர எல்லா இடங்களிலும் தடுப்பூசியின் வணிகமயமாக்கலை ஃபைசர் கட்டுப்படுத்தும். ஃபைசர், மொடேர்னாவை (Moderna) போலல்லாமல், தடுப்பூசி மற்றும் விலைக் கொள்கையைக் கட்டுப்படுத்த அரசாங்க நிதியை வேண்டுமென்றே நிராகரித்தது. இது ஆரம்பத்தில் அமெரிக்க அரசாங்கத்திடம் ஒரு தடுப்பூசிக்கு மோசமான 100 டாலர்கள் அல்லது ஒரு முழுத் தடுப்பூசிக்கு 200 டாலர்கள் வசூலிக்க முற்பட்டது. இறுதியில் மொடேர்னா கணிசமான அளவு குறைவாக விலையை தீர்த்த பின்னர், ஒரு தடுப்பூசிக்கு 19.50 டாலருக்கு நிர்ணயிப்பதற்கு முன், அதிக விலை உயர்த்தி வைத்திருப்பது அதன் நற்பெயருக்கு கேடு விளைவிக்கும் என்பது ஃபைசரருக்கு தெளிவாகியது.

இது கூட ஒற்றை டோஸ் ஜோன்சன்&ஜோன்சன் (Johnson & Johnson) தடுப்பூசியை விட 4 மடங்கும் மற்றும் அஸ்ட்ராசெனெகாவை விட 5 மடங்கு விலை உயர்ந்ததாக இருந்தது. சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கும் கொள்கையின் பின்னால் உள்ள வணிக நலன்களை வெளிச்சம் போட்டுக் காட்டி, ஃபைசர் அதன் முதலீட்டாளர்களுக்கு ஆறுதல் அளித்து, வைரஸ் தொடர்ச்சியாக பரவும்போது விலையை அதிகரிக்க முடியும். அதன் மூலம் காலவரையற்ற இலாப ஓட்டத்திற்கு உத்தரவாதம் அளிக்க முடியும் என்றது.

ஃபைசர் அதன் சக்திவாய்ந்த நிலையைப் பயன்படுத்திக் கொண்டு, பணக்கார நாடுகளுடன் இரகசியமாக வைத்திருப்பதன் ஊடாக பாதுகாக்கப்பட்ட இருதரப்பு ஒப்பந்தங்களுக்கான ஆக்ரோஷமாகப் பேச்சுவார்த்தை நடத்தியதுடன், சுதந்திரமான விஞ்ஞானிகளைக் கூட வெளிப்படுத்தாத ஒப்பந்தங்களுடன் பிணைத்தது மற்றும் அரசாங்கங்கள் வழக்குகளுக்கு எதிராக இழப்பீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியது. லெபனான் மற்றும் பிலிப்பைன்ஸ் உட்பட அரசாங்கங்கள் ஃபைசருடன் ஒப்பந்தங்களைப் பெறுவதற்கு சட்டத்தை மாற்ற வேண்டியிருந்தது.

Pan American சுகாதார அமைப்பின் உதவி இயக்குநரான ஜர்பாஸ் பார்போசா, ஃபைனான்சியல் டைம்ஸிடம், 'அவசரநிலை காரணமாக அரசாங்கங்கள் இல்லை என்று கூறுவதற்கு நேரமில்லாதபோது, ஃபைசரின் நிபந்தனைகள் தவறானவை' என்று கூறினார்.

நாடுகளுக்கு தேவையான குளிர் சேமிப்பு திறன் உள்ளது என்பதை உறுதிப்படுத்தும் வரை நிறுவனம் தடுப்பூசிகளை வெளியிட மறுத்தது. தென்னாபிரிக்காவுடனான அதன் பேச்சுவார்த்தைகள் குறிப்பாக ஆத்திரமூட்டுவதாக இருந்தன. இழப்பீடுக்கான எந்தவொரு சட்டபூர்வ உரிமைகோரல்களையும் ஈடுசெய்ய பொதுச் சொத்துக்கள் பிணையமாக ஒதுக்கப்பட வேண்டும் என்ற நிபந்தனையும் கூட, 'தேசிய இறையாண்மை சரணடைவதற்கு சமமானதாக' விவரிக்கப்பட்டது.

பிரிட்டனைப் பொறுத்தவரை, ஒப்பந்தங்களின் பெரும் பகுதிகள் திருத்தப்பட்டுள்ளன. ஒரு தகராறு ஏற்பட்டால், ஃபைசரை நீதிமன்றத்திற்கு கொண்டு செல்ல முடியாது. ஆனால் நடுவர் மன்றத்திற்கு முன்னால் கொண்டுசெல்லப்பட்டு இரகசியமாக வைக்கப்படும். இது உயர் வருமானம் கொண்ட நாட்டுடனான ஒரேயொரு ஒப்பந்தமாகும்.

போரிஸ் ஜோன்சனின் கன்சர்வேடிவ் அரசாங்கம், அமெரிக்கா மற்றும் முக்கிய ஐரோப்பிய நாடுகளுடன் இணைந்து, தடுப்பூசி உற்பத்தியை அதிகரிப்பதற்கான 130 க்கும் மேற்பட்ட நாடுகளின் முயற்சிகளைத் தடுக்கிறது. மற்றும் கோவிட்-19 தடுப்பூசிகள் மற்றும் தொற்றுநோயின் எஞ்சிய காலப்பகுதிக்கு சிகிச்சைகள் குறித்த உலக வர்த்தக அமைப்பின் (WHO) அறிவுசார் சொத்து விதிகளைத் தள்ளுபடி செய்து விலையைக் குறைக்கிறது.

பிரிட்டனின் தேசிய சுகாதார சேவை (NHS) 135மில்லியன் ஃபைசர் தடுப்பூசிகளில் முதல் 100 மில்லியன் ஒரு தடுப்பூசிக்கு 18 பவுண்டுகள் மற்றும் அடுத்த 35மில்லியனுக்கு ஒரு தடுப்பூசிக்கு 22 பவுண்டுகள் என, 2.57 பில்லியன் பவுண்டுகளை விட உற்பத்திச் செலவிற்கு அதிகமாக 1.903 பில்லியன் பவுண்டுகளை செலுத்தியுள்ளது. ஏறக்குறைய 75 சதவீத இந்த இலாப வரம்பானது, இந்த ஆண்டு NHS இங்கிலாந்து தனது 300,000 அல்லது அதற்கு மேற்பட்ட செவிலியர்களுக்கு செலவு செய்ய அரசாங்கம் அனுமதித்துள்ள 302 மில்லியன் பவுண்டுகளை விட ஆறு மடங்கு அதிகமாக ஊதிய உயர்வுக்கு நிதியளித்திருக்கலாம். பணவீக்கத்திற்குப் பின்னர், செவிலியர்களின் 1,000 பவுண்டுகள் உயர்வு என்பது உண்மையில் ஊதியக் குறைப்பாகும்.

People’s Vaccine Alliance அமைப்பின் கூற்றுப்படி, இது ஃபைசர் மட்டுமல்ல மொடேர்னா மற்றும் பயோன்டெக் ஆகியவை வானளவிலான இலாபங்களை அறுவடை செய்கின்றன. மூன்று பெருநிறுவனங்களும் தங்கள் தடுப்பூசிகளின் விலையை மதிப்பிடப்பட்ட உற்பத்திச் செலவை விட 41 பில்லியன் டாலர்கள் அதிகமாக அதிகரித்து குறைந்த வரிகளை செலுத்தி வருகின்றன என்று இவ்வமைப்பு மதிப்பிடுகிறது. இந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டில் மொடேர்னா 6 பில்லியன் டாலர்களுக்கும் அதிகமான வருவாயில் 4.3 பில்லியன் டாலர்கள் இலாபம் ஈட்டியுள்ளது என்று மதிப்பிடுகிறது. இது ஒரு மிகமோசமான 69 சதவீத இலாப வரம்பாகும். 2021 ஆம் ஆண்டில் மொத்த தடுப்பூசி விற்பனை 20 பில்லியன் டாலர்களை எட்டும் என்று மொடேர்னா எதிர்பார்க்கிறது. கோவிட் தடுப்பூசிகளைத் தவிர வேறு எந்த வணிகத் தயாரிப்புகளும் இல்லாமல், அவர்களின் இலாபம் தடுப்பூசிகளிலிருந்து மட்டுமே பெறப்படுகிறது.

2021 இன் முதல் பாதியில், மொடேர்னா 7 சதவீதத்திலும், ஃபைசர் 15 சதவீதத்திலும் அமெரிக்க வரிகளை செலுத்தியது. இது அமெரிக்க வரி விகிதமான 21 சதவீதத்திற்கு மிகக் குறைவாக, பில்லியன் கணக்கான டாலர்களை ஈட்டும் நிறுவனங்களை உழைக்கும் குடும்பங்களை விட குறைவான வரிவிகிதத்தில், கணிசமாகக் குறைவாக செலுத்த அனுமதிக்கும் அமைப்பு முறையின் காரணமாக என்று People’s Vaccine Alliance கூறுகிறது.

நவம்பரில் ஓமிக்ரோன் மாறுபாடு அடையாளம் காணப்பட்டதில் இருந்து, பெரும் மருத்துவ நிறுவன உயர்மட்ட நிர்வாகிகள் மற்றும் பங்குதாரர்கள் தங்கள் பங்கு விலைகள் உயர்ந்ததால் அவர்களின் செல்வம் உயர்ந்ததைக் கண்டனர். ஃபைசர் மற்றும் மொடேர்னாவின் பங்குதாரர்களில் எட்டு பேர் மொத்தமாக 10.31 பில்லியன் டாலர்கள் தங்கள் செல்வத்தை அதிகரித்தனர். இது மருந்தக நிர்வாகிகள் தங்கள் காப்புரிமை உரிமைகளைத் தள்ளுபடி செய்து, தடுப்பூசி தொழில்நுட்பத்தைப் பகிர்ந்து கொள்ள மறுப்பதன் மூலம் 'அவர்கள் உருவாக்க உதவிய நெருக்கடியிலிருந்து ஒரு கொலையைச் செய்கிறார்கள்' என்ற குற்றச்சாட்டுகளைத் தூண்டியது.

கடந்த ஆண்டு, உலக சுகாதார அமைப்பு கோவிட்-19 தொழில்நுட்ப அணுகல் மையத்தை (C-TAP) அமைத்து, அங்கீகாரம் பெற்ற உற்பத்தியாளர்களுக்கு தடுப்பூசி தொழில்நுட்பம் மற்றும் அது பற்றிய அறிவு கிடைப்பதை எளிதாக்கியது. பெரும் மருத்துவ நிறுவனங்கள் இத்திட்டத்தை பகிஸ்கரித்து, ஃபைசர் இன் தலைவர் போர்லா இதனை முட்டாள்தனம் என நிராகரித்தார். இது, அதிக ஏலதாரர்களுக்கு விற்பது மற்றும் தடுப்பூசி சமத்துவமின்மையின் கோரமான அளவுகளை உருவாக்கும் அவர்களின் நடைமுறையுடன் சேர்ந்து, ஓமிக்ரோன் மாறுபாடு வெளிப்படுவதற்கான நிலைமைகளை உருவாக்கும் காரணிகளில் ஒன்றாகின்றது.

இப்போது, புதிய கோவிட் மாத்திரையை உருவாக்குவதன் மூலம் அவர்கள் மற்றொரு இலாபம் ஈட்ட முனைகின்றார்கள். ஃபைசர் அடுத்த ஆண்டு சந்தையில் 20 பில்லியன் டாலர்கள் ஆதிக்கம் செலுத்த உள்ளது. ஏனெனில் பணக்கார நாடுகள் வினியோகங்களை உறுதிப்படுத்திக்கொள்ள விரைகையில், ஏழை நாடுகள் அடுத்துவரும் மருந்துகளுக்காக காத்திருக்க வேண்டும். 2023 வரை அவை இது கிடைக்குமென எதிர்பார்க்க முடியாது. இந்த நிறுவனம் 2022 ஆம் ஆண்டில் அதன் பரிசோதனை சிகிச்சையான பாக்ஸ்லோவிட் (Paxlovid) மூலம் 17 பில்லியன் டாலர்கள் வருவாயைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் மேர்க் நிறுவனத்தின் மோல்னுபிராவிர் (molnupiravir) சுமார் 2.5 பில்லியன் டாலர்களை ஈர்க்கும். இந்த புதிய மருந்துகள் தற்போதுள்ள மருந்துகளுக்கு பதிலாக வரும்போது, அதிக ஆபத்துள்ள நோயாளிகளுக்கான சிகிச்சைக்கான செலவு அதிகமாக இருக்கும்.

Loading