இலங்கையில் இலட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சம்பள உயர்வு மற்றும் சிறந்த நிலைமைகளை கோரி வேலை நிறுத்தம் செய்தனர்

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

இரயில்வே வேலைத்தள ஊழியர்கள் மற்றும் தனியார் துறை தொழிலாளர்கள் உட்பட ஆயிரக்கணக்கான சுகாதார ஊழியர்கள், ஆசிரியர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் தொழிலாள வர்க்கத்தின் ஏனைய பிரிவுகளைச் சேர்ந்தவர்களும், சம்பளம் மற்றும் வேலை நிலமைகளுக்காக திங்கள் மற்றும் செவ்வாய் கிழமைகளில் இலங்கை முழுவதும் போராட்டங்கள் மற்றும் வேலைநிறுத்தங்களை நடத்தினர். இந்த நடவடிக்கை மின்சாரம், துறைமுகம் மற்றும் பெட்ரோலிய ஊழியர்களால் கடந்த வாரம் தனியார்மயமாக்கலுக்கு எதிரான முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டங்களைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இலங்கை ஆசிரியர்கள் சம்பள உயர்வு கோரி ஹட்டனில் செவ்வாய்க்கிழமை நடத்திய பேரணி [WSWS Media]

இந்த வெகுஜன எதிர்ப்புகள், இராஜபக்ஷ அரசாங்கத்திற்கும் வாழ்க்கைச் செலவை இரக்கமின்றி உயர்த்துகின்ற மற்றும் அற்ப சமூக நலத் திட்டங்களையும் நீக்குகின்ற, அதே நேரம் ஆசிரியர்கள் மற்றும் பிற ஊழியர்களை தற்போதைய கோவிட்-19 தொற்றுக்கு மத்தியில் வேலைக்குத் திரும்புமாறு கட்டாயப்படுத்துகின்ற அதன் பெருவணிக வேலைத்திட்டத்திற்கும் எதிராக அதிகரித்துவரும் சமூக கோபத்தின் மற்றொரு அறிகுறியாகும்.

* திங்கட்கிழமை, சுமார் 50,000 அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சம்பள முரண்பாடுகளை நீக்குதல், சுமார் 15,000 ரூபாய் ($US75) மாத சம்பள உயர்வு மற்றும் முறையான பதவி உயர்வு திட்டத்தை நிறுவுதல் உள்ளிட்ட ஏழு கோரிக்கைகளை முன்வைத்து ஒரு தேசிய ரீதியிலான சுகயீன விடுமுறைப் போராட்டத்தினை நடத்தினர். நாடு முழுவதும் பல்வேறு அரசு துறைகளில் சுமார் 100,000 அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் பணிபுரிகின்றனர். அரைவாசிக்கும் அதிகமானோர் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்ததாக செய்திகள் சுட்டிக்காட்டியுள்ளன.

* செவ்வாய்கிழமை, அரச மருத்துவமனை தாதியர்களும் துணை மருத்துவ பணியாளர்களும் சுகயீன விடுமுறைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். கிட்டத்தட்ட 50,000 சுகாதார ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதாக தொழிற்சங்க அதிகாரிகள் ஊடகங்களுக்கு தெரிவித்தனர். சம்பள முரண்பாடுகளை சரிசெய்தல், விசேட வேலை கொடுப்பனபவாக 3,000 ரூபா அதிகரிப்பு மற்றும் மேலதிக கொடுப்பனவு உயர்வுகளை வழங்க வேண்டும் என வைத்தியசாலை ஊழியர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

செவ்வாய்கிழமை ஹட்டனில் நடைபெற்ற ஆசிரியர் போராட்டம். [WSWS Media]

16 தொழிற்சங்கங்களின் கூட்டணியான, சுகாதார நிபுணர்களின் கூட்டமைப்பு, இந்த வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. சுகாதார நிபுணர்களின் கூட்டமைப்பு, இதே கோரிக்கைகளுக்காக சமீபத்திய மாதங்களில் தொடர் போராட்டங்கள் மற்றும் வேலைநிறுத்தங்களுக்கு அழைப்பு விடுத்திருந்த அதே வேளை, அது எதிர்ப்புக்களை மட்டுப்படுத்தியதுடன், தொழிலாளர்களின் கோரிக்கைகளைத் தீர்ப்பதாக அரசாங்கம் அளித்த போலி வாக்குறுதிகளைத் தொடர்ந்து போராட்டங்களை கைவிடபட்டது.

செவ்வாய்க்கிழமை நடந்த வேலைநிறுத்தத்திற்கு தங்கள் உறுப்பினர்களை முழுமையாக அணிதிரட்டவில்லை என்று சுகாதார ஊழியர்கள் தொழிற்சங்கங்களைக் குற்றம் சாட்டினர். இதன் விளைவாகவே குறைந்த எண்ணிக்கையிலானோர் போராட்டத்தில் பங்கேற்கின்றனர்.

அங்கத்தவர்கள் போராட்டத்தில் பங்குபற்றுவதற்கு தொழிற்சங்க அதிகாரிகள் ஊக்கப்படுத்தவில்லை, என்று கண்டி தேசிய மருத்துவமனையைச் சேர்ந்த ஒரு தாதியர் உலக சோசலிச வலைத் தளத்துக்கு தெரிவித்தார். மருத்துவமனையில் பணிபுரியும் 2,000 தாதியர்களில் சுமார் 500 பேர் மட்டுமே போராட்டத்தில் இணைந்ததாகவும் அவர் கூறினார்.

“வேலைநிறுத்தத்திற்கு முன்பு உறுப்பினர்களுடன் எந்த கலந்துரையாடலும் இடம்பெறவில்லை. சில துண்டு பிரசுரங்களை விநியோகம் செய்வதன் மூலம் தொழிலாளர்களை அணிதிரட்ட முடியாது,'' என அவர்கள் கூறினார்கள்

கடந்த ஜூன் மாதம் சுகாதாரத் தொழிலாளர்கள் கண்டியில் நடத்திய ஆர்ப்பாட்டம். [WSWS Media] [Photo: WSWS]

சுகாதார தொழிற்சங்கங்கள், தீவு முழுவதிலும் உள்ள அவர்களது சமதரப்பினரைப் போலவே, தொழிலாளர்களை வேண்டுமென்றே பிளவுபடுத்தியுள்ளன. இராஜபக்ஷ அரசாங்கத்தின் ஆதரவாளரும் பௌத்த பிக்குவுமான முருத்தேடுவே ஆனந்த தலைமையிலான பொதுச் சேவைகள் ஐக்கிய தாதியர் சங்கம், எதிர்க் கட்சியான மக்கள் விடுதலை முன்னணி (ஜேவிபி) கட்டுப்பாட்டில் உள்ள அகில இலங்கை சுகாதார சேவைகள் சங்கம் ஆகியவை, செவ்வாய்க் கிழமை போராட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. அதற்குப் பதிலாக, அகில இங்கை சுகாதார சேவைகள் சங்கம் ஒரு மதிய உணவுவேளை ஆர்ப்பாட்டத்தை நடத்துவதற்கு அழைப்பு விடுத்தது.

சுகாதார ஊழியர்கள் தங்களது நீண்டகால கோரிக்கைகளுக்காகப் போராடுவதில் உறுதியாக உள்ள நிலையில், தொழிற்சங்கங்கள் அரசாங்கத்துடன் எந்தவொரு அரசியல் மோதலும் ஏற்படுவதை தடுப்பதற்கு தீவிரம் காட்டி வருகின்றன. கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக, நாட்டின் ஆபத்தான முறையில் பணியாளர் பற்றாகுறை மற்றும் நிதி ஒதுக்கீடு இல்லாத மருத்துவமனைகளில் கோவிட்-19 நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்காக, மேலதிக நேரம் வேலை செய்து வருகின்ற சுகாதார ஊழியர்கள் மத்தியில் அதிகரித்து வரும் கோபத்தை கலைப்பதற்காகவே, இந்த வாரத்தின் ஒரு நாள் எதிர்ப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

* செவ்வாய் கிழமையும், ஆயிரக்கணக்கான அரச பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் தீவின் பல பகுதிகளில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய கொழும்பில் சுமார் 3,000 ஆசிரியர்களும் கண்டியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்களும் இதில் அடங்குவர். மத்திய மலையக மாவட்டமான ஹட்டனிலும் அதே எண்ணிக்கையிலானவர்கள் அணிதிரண்டிருந்தனர். இலங்கை ஆசிரியர் சங்கம் (CTU) மற்றும் ஜே.வி.பி.யின் கட்டுப்பாட்டில் உள்ள இலங்கை ஆசிரியர் சேவைகள் சங்கம் உட்பட சுமார் 30 ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் சங்கங்கள் அடங்கிய கூட்டமைப்பினால் இந்த ஆர்ப்பாட்டங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தன.

கண்டிக்கு மேற்கே, 25 கிலோமீற்றர் தொலைவில் உள்ள மாவனல்லை பொலிஸ் நிலையத்திற்கு வெளியே ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள், அதிபர்கள் மற்றும் பெற்றோர்களும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த வாரம் நடைபெற்ற ஒரு போராட்டத்தின் போது, அதில் பங்கேற்ற பெற்றோரை உடல் ரீதியாக தாக்கியதாக கூறப்படும் ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் உள்ளூர் அரசியல்வாதி ஒருவரை, பொலிசார் கைது செய்ய வேண்டும் என அவர்கள் கோரினர். இறுதியாக, பொலிசார் அரசியல்வாதியையும், தாக்குதலில் ஈடுபட்ட மூன்று பேரையும் கைது செய்தபோதும், அவர்கள் உள்ளூர் நீதிபதியால் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

செவ்வாய்கிழமை ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் கண்டியில் நடத்திய ஆர்ப்பாட்டம் [WSWS Media]

சம்பள உயர்வு கோரி, ஆசிரியர்களால் நடத்தப்பட்ட 100 நாள் உறுதியான வேலைநிறுத்தம் மற்றும் 250,000 ஆசிரியர்கள் பங்குபற்றிய இணையவழிக் கற்பித்தல் பகிஷ்கரிப்பு போராட்டத்தை, தொழிற்சங்கங்கள் ஒக்டோபர் 25 அன்று முடித்துக்கொண்ட பின்னரே, இந்த ஆசிரியர்களின் ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. கடந்த 20 ஆண்டுகளாக ஊதிய உயர்வுகோரி ஆசிரியர்கள் போராடி வருகின்றனர்.

இராஜபக்ஷ அரசாங்கம் ஆசிரியர்களின் ஊதியக் கோரிக்கையை வழங்க மறுத்துவிட்ட போதிலும், பின்னர் கோரப்பட்ட தொகையின் மூன்றில் ஒரு பகுதியை அடுத்த மூன்று ஆண்டுகளில் தவணைமுறையில் செலுத்து 'இணங்கியது'. சர்ச்சையை முடிவுக்கு கொண்டு வர ஏங்கிய தொழிற்சங்கங்கள், குறைக்கப்பட்ட தொகையை ஏற்றுக்கொண்டு, அதை ஒரே தவணையில் செலுத்த வேண்டும் என்று கோரியதுடன் வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்து, ஆசிரியர்களை வேலைக்குத் திரும்புமாறு உத்தரவிட்டன. இந்த வாரம் நடந்த ஆர்ப்பாட்டங்கள் மற்றும் முந்தைய வாரத்தில் நடந்த இதேபோன்ற போராட்டங்களும், உறுப்பினர்களின் கோபத்தைக் கலைக்க தொழிற்சங்கங்கள் எடுத்த இழிந்த முயற்சியாகும்.

புதன்கிழமையன்று, பிரதமர் மஹிந்த இராஜபக்ஷவும் நிதியமைச்சர் பசில் இராஜபக்ஷவும் ஆசிரியர் சங்கங்களைச் சந்தித்து, அரசாங்கம் குறைக்கப்பட்ட சம்பளச் சலுகையை ஒரே தவணையில் செலுத்தும் எனத் தெரிவித்தனர். தொழிற்சங்கங்கள், சொற்ப சம்பள உயர்வை உடனடியாக ஒப்புக்கொண்டதுடன், ஆசிரியர்களின் நீண்டகால ஊதியக் கோரிக்கைகளை ஓரங்கட்டிவிட்டன. கொழும்பின் உடன்பாட்டை சம்பள அதிகரிப்பாக பார்க்கக் கூடாது என நிதி அமைச்சர் பசில் இராஜபக்ஷ பின்னர் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள நிதி அமைச்சர் இராஜபக்ஷவின் வருடாந்த வரவு-செலவுத் திட்ட முன்மொழிவுகளுடன் ஒத்துப்போகும் வகையிலேயே, இந்த வாரத்தில், தொழிற்சங்கக் கட்டுப்பாட்டில் நடந்த போராட்டங்கள் அமைந்திருந்தன. அரசாங்க வரவு-செலவுத் திட்டத்தில், தொழிலாளர்களின் மாதாந்த சம்பளத்தை 10,000 ரூபாவால் அதிகரிக்குமாறு, ஜே.வி.பி-யின் கட்டுப்பாட்டில் உள்ள தொழிற்சங்கங்கள் கோருகின்றன.

ஏற்றுமதி வருமானத்தில் சரிவு, நாணயப் பெறுமதி வீழ்ச்சி மற்றும் பாரிய வெளிநாட்டு நிதிக் கடனை திருப்பிச் செலுத்துதல் ஆகியவற்றை எதிர்கொண்டுள்ள அமைச்சர் இராஜபக்ஷ, இரக்கமற்ற சிக்கன வரவு-செலவுத் திட்டத்தை வெளியிடப் போவதாக தெள்ளத் தெளிவாகக் கூறியுள்ளார். “மக்கள் எதையும் பெற மாட்டார்கள். பதிலாக, நாங்கள் அவர்களிடமிருந்து பெறுவோம்,” என்று, அவர் கடந்த வாரம் பத்திரிகையாளர்களிடம் கூறினார். கடந்த ஆண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 14.7 சதவீதமாக இருந்த நிதிப் பற்றாக்குறையை 4.5 - 5 சதவீதமாக மூன்றில் இரண்டு பங்கு குறைக்க அவர் திட்டமிட்டுள்ளார்.

கோவிட்-19 தொற்றுநோயால் மோசமடைந்துள்ள பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள இராஜபக்ஷ அரசாங்கம், உயிர்களை விட இலாபங்களுக்கு முன்னுரிமை அளித்து 'சமூகத்தில் நோய் எதிர்ப்பு சக்தி' பரப்பும் கொள்கைகளை நடைமுறைப்படுத்துகிறது. இந்த குற்றவியல் செயல்நிரல் தொழிற்சங்கங்களால் முழுமையாக ஆதரிக்கப்பட்டதுடன் சுகாதார தொழிற்சங்கங்கள் தங்கள் உறுப்பினர்களின் பணிப் பாதுகாப்பை அதிகரிப்பதற்கான கோரிக்கைகளை கைவிடுவதைக் காணக்கூடியதாக இருந்தது.

தொழிற்சங்கங்களின் பிற்போக்கு பங்கு, இராஜபக்ஷ அரசாங்கத்தை பாதுகாக்கும் இந்த அமைப்புகளுடன் இலங்கை தொழிலாளர்களை மோதலுக்கு கொண்டு வருவதுடன், முதலாளித்துவ இலாப நோக்கு அமைப்புமுறைக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தின் எந்தவொரு சுயாதீன அரசியல் அணிதிரட்டலுக்கும் விரோதமானதாக உள்ளது.

தொழிலாளர்களின் போராட்டங்களின் அதிகரிப்புடன், உரம் மற்றும் பயிர்ச்செய்கைக்கான ஏனைய தேவைகளுக்கு கோரிக்கை விடுத்து விவசாயிகள் தங்கள் போராட்டங்களைத் தொடர்கின்றனர். செவ்வாய்கிழமை, நூற்றுக்கணக்கான குடும்பத் தலைவிகள், கொழும்பிலும் தீவின் பிற பகுதிகளிலும் அத்தியாவசியப் பொருட்களின் விலையைக் குறைக்கக் கோரியும் உணவுப் பற்றாக்குறையை நிறுத்தக் கோரியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இராஜபக்ஷ அரசாங்கத்துக்கு சலுகைகளை கொடுக்குமாறு நிர்ப்பந்திக்க முடியும் என்று தொழிற்சங்கங்கள் கூறித்திரிவதற்கு மாறாக, கொழும்பு, கிட்டத்தட்ட ஒரு மில்லியன் அரசாங்க ஊழியர்களை உள்ளடக்கிய அரச நிறுவனங்களில் அனைத்து போராட்ட நடவடிக்கைகளையும் வேலை நிறுத்தங்களையும் குற்றமாக்கும், அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டத்தை நிறைவேற்றியது. அதே நேரம், தொழிலாள வர்க்கத்தை பிளவுபடுத்துவதற்கு இனவாத பதட்டங்களை தூண்டுவதற்கும் அது செயற்படுகின்றது.

தொழிற்சங்கங்கள், தொழிற்துறை பொலிஸ்காரனாக வேலை செய்கின்றன. அவை, அரசாங்கத்தின் வேலைநிறுத்த எதிர்ப்பு சட்டங்கள் மற்றும் அதன் இனவாத நகர்வுகளை எதிர்க்கவில்லை. இந்த அமைப்புகளின் மூலம் தொழிலாளர்கள் தங்கள் சமூக மற்றும் ஜனநாயக உரிமைகளுக்கான உண்மையான போராட்டத்தை அபிவிருத்தி செய்ய முடியாது.

வேலைகள், ஊதியங்கள் மற்றும் மேம்பட்ட சமூக நிலைமைகளுக்காகப் போராடுவதற்கு தொழிற்சங்கங்களிலிருந்து சுயாதீனமாகி மற்றும் தொழிலாளர்களால் கட்டுப்படுத்தப்படும் சுயாதீன தொழிலாளர் நடவடிக்கைக் குழுக்களை நிறுவுவது அவசியமாகும். இந்த குழுக்கள், சோசலிச கொள்கைகளுக்காகவும் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்திற்காகவும் முன்னெடுக்கப்படும் போராட்டத்தின் ஒரு பகுதியாக, தீவு முழுவதும் உள்ள தொழிலாளர்களை ஐக்கியப்படுத்தி, சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் பக்கம் திரும்ப வேண்டும்.

Loading