இலங்கை நிதி அமைச்சரின் வரவு-செலவுத் திட்ட முன்மொழிவுகள் சமூகத் தாக்குதல்களை ஆழப்படுத்துகின்றன

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

வெள்ளியன்று, இலங்கை ஜனாதிபதி கோட்டாபய இராஜபக்ஷவின் சகோதரரும், நிதி அமைச்சருமான பசில் இராஜபக்ஷ தனது சிக்கன வரவு-செலவுத் திட்டத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.

அவர், 'இது வரலாற்றின் மிகவும் சவாலான காலகட்டம்,' என்று வார்த்தைஜாலத்தில் அறிவித்த அதேவேளை, 'பொருளாதாரத்தை நிர்வகிப்பதற்கும் அத்தகைய சவால்களை சமாளிப்தற்கும் தேவையான அனைத்து பலங்களையும் நாங்கள் பெற்றுள்ளோம்,' என்றும் கூறிக்கொண்டார்.

கண்டி வைத்தியசாலையில் தாதிகள் மற்றும் ஏனைய சுகாதார ஊழியர்கள் நடத்திய ஆர்ப்பாட்டம் (WSWS Media) [Photo: WSWS]

எளிய மொழியில் மொழிபெயர்க்கப்பட்டால், 'பொருளாதாரத்தை நிர்வகித்தல்' மற்றும் 'சவால்களை சமாளித்தல்' என்பது, கோவிட்-19 வைரஸால் மோசமாக்கப்பட்ட பொருளாதார நெருக்கடியின் சுமைகளை ஈவிரக்கமற்ற முறையில் மக்களின் முதுகில் திணிப்பதாகும்.

'கோவிட்-19 தொற்றுநோயை முன்கூட்டியே கட்டுப்படுத்துவதன் மூலம் இலங்கை ஒரு நிச்சயமான முன்னேற்றத்தைப் பெற முடிந்தது' என்று பொய்யாகப் பிரகடனம் செய்வதன் மூலம், இராஜபக்ஷ, வைரஸால் பாதிக்கப்பட்ட அல்லது கொல்லப்பட்ட ஆயிரக்கணக்கான மக்கள் மீது ஆளும் உயரடுக்கின் முழு அலட்சியத்தையும் வெளிப்படுத்தினார்.

அரசாங்கத்தின் பிரதிபலிப்பு 'எங்கள் மக்களின் வாழ்க்கையை' புத்துயிர் பெறச் செய்துள்ளதுடன் 'பொருளாதாரத்தின் முக்கியமான துறைகளுக்கு உயிரூட்டியுள்ளது,' என அவர் தொடர்ந்தார். 'இயக்கம் திரும்பியுள்ளது. வருமானம் ஈட்டும் நடவடிக்கைகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன. எமது மக்களின் வாழ்வில் இயல்பு நிலை திரும்பியுள்ளது”, 'ஒட்டுமொத்த நாடும் தன்னை ஒரு சுறுசுறுப்பான வேலைத்தளமாக மாற்றிக்கொண்டிருப்பதை' நாம் பார்த்திருக்கிறோம், என அவர் அறிவித்தார்.

இராஜபக்ஷ கூறிக்கொள்வது போல், இலங்கையில் தொற்றுநோயைக் கட்டுப்படுத்த முடியாது. உத்தியோகபூர்வ புள்ளிவிவரங்களின்படி, அரசாங்கத்தின் பற்றாக்குறையான பதில் நடவடிக்கையின் விளைவாக 552,000 க்கும் மேற்பட்ட நோய்த்தொற்றாளர்கள் உருவாவதற்கும் 14 ஆயிரத்துக்கும் அதிகமானோரின் இறப்புக்கும் வழிவகுத்தது. மேலும், கொடிய நோயின் புதிய எழுச்சி தவிர்க்க முடியாதது என்று மருத்துவ நிபுணர்கள் பலமுறை எச்சரித்துள்ளனர்.

அதன் உலகளாவிய சமதரப்பினருக்கு இணங்க, இராஜபக்ஷ ஆட்சியானது மனித உயிர்களுக்கு மேலாக சர்வதேச முதலீட்டாளர்கள் மற்றும் பெருவணிகங்களின் இலாபங்களுக்கு முன்னுரிமை கொடுத்து பொருளாதாரத்தை மீண்டும் திறந்துவிட்டது. சமூகப் பேரழிவைப் பற்றி ஒரு வார்த்தை கூட பேசாத நிதியமைச்சர் இராஜபக்ஷ, இழந்த உயிர்கள் குறித்து எந்த அனுதாபத்தையும் வருத்தத்தையும் வெளிப்படுத்தவில்லை.

நவம்பர் 1 அன்று, இராஜபக்ஷ, தனது வரவு-செலவுத் திட்டம் மக்களுக்கு எதையும் கொடுக்காது, மாறாக அவர்களிடம் இருந்து எடுத்துக்கொள்ளும் என அப்பட்டமாக ஊடகங்களிடம் கூறினார். கடந்த வெள்ளியன்று பாராளுமன்றத்தில் பேசும் போது, பாதீடு 'மக்கள் மீது சுமையை திணிக்காதவாறு' கவனமாக தயாரிக்கப்பட்டதாகக் அவர் வஞ்சத்தனமாக கூறினார்.

எதிர்பார்த்தபடி, அதிகரித்து வரும் பணவீக்கம் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் பற்றாக்குறைக்கு மத்தியில் ஊதியங்கள் முடக்கப்பட்டுள்ளதுடன் சேர்த்து, இந்த வரவு-செலவுத் திட்டம் தொழிலாளர்கள் மற்றும் ஏழைகள் மீதான ஒரு பெரிய தாக்குதலாகும். வரவு-செலவுத் திட்டத்திற்கு முன்னதாக, கொழும்பு அரசாங்கம் அத்தியாவசியப் பொருட்களின் மீதான அனைத்து விலைக் கட்டுப்பாடுகளையும் விலக்கிக் கொண்டதுடன், பெரு வணிகங்களுக்கு அதிக சந்தை விலைகளுக்கு கட்டளையிடும் சுதந்திரத்தையும் வழங்கியது.

அடுத்த ஆண்டுக்கான ஒட்டுமொத்த வரவு-செலவுத் திட்டம், 2.2 டிரில்லியன் ரூபா மதிப்பிடப்பட்டுள்ள வருவாயுடன், 3.9 டிரில்லியன் ரூபாயாக (19.2 பில்லியன் டாலர்) அதிகரிக்கப்படும். உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கடன்கள் மற்றும் உழைக்கும் மக்கள் மீதான வரிகளை அதிகரிப்பதன் மூலம் பற்றாக்குறைக்கு நிதியளிக்கப்படும்.

அதே நேரம், அரசாங்கம் கடந்த ஆண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 14.7 சதவீதமாக இருந்த வரவு-செலவுத் திட்ட பற்றாக்குறையை அடுத்த ஆண்டு 8.8 சதவீதமாகக் வெட்டிக்குறைக்க எதிர்பார்ப்பதுடன், அடுத்தடுத்த வெட்டுக்கள் 2028 ஆம் ஆண்டளவில் வரவு-செலவுத் திட்டத்தை சமநிலைப்படுத்தும் என்று மதிப்பிடுகிறது. இது அத்தியாவசியப் பொருட்களின் விலையில் மேலும் அதிகரிப்பு மற்றும் வெகுஜனங்களின் வாழ்க்கை நிலைமைகளில் கூர்மையான வெட்டுக்களை மட்டும் அர்த்தப்படுத்தாது, மாறாக ஒட்டுமொத்த அரசாங்கத்துறையையும் கலைக்கும் முயற்சிகளைக் கொண்டிருக்கும்.

இந்த வருடத்தின் 1,030 பில்லியன் ரூபாயில் இருந்து அடுத்த ஆண்டு எதிர்பார்க்கப்படும் 1,491 பில்லியன் ரூபாவைப் பெறுவதற்கு, இராஜபக்ஷவின் வரவு-செலவுத் திட்டத்தில் இறக்குமதிகள் மற்றும் சரக்கு மற்றும் சேவை மீதான வரிகளை (GST) அதிகரிப்பதை உள்ளடக்கியுள்ளது. சரக்கு மற்றும் சேவை மீதான வரிகளை அதிகரிப்பதற்கு பொருட்களின் முழு பட்டியலும் மற்றும் குறித்த வரியின் விகிதங்களும் அறிவிக்கப்படவில்லை. ஆனாலும் பாதீடு தாக்கல் செய்யப்பட்ட நாளிலேயே மதுபானம் மற்றும் சிகரெட்டுகள் மீதான அதிக கலால் வரிகள் அறிவிக்கப்பட்டன.

சுமார் அரசுக்கு சொந்தமான 300 நிறுவனங்களை 'வணிகமயமாக்குவதன்' மூலம் கூர்மையான வெட்டுக்கள் மேற்கொள்ளப்படும். 'இந்த நிறுவனங்களில் பெரும்பாலானவை அரசாங்கத்தால் செய்யப்பட்ட முதலீடுகளுக்கு வருமானத்தை வழங்குவதில்லை' மற்றும் 'தேசிய பொருளாதாரத்திற்கு ஒரு வடிகாலாக இருக்கின்றன' என்று இராஜபக்ஷ அறிவித்தார்.

அரசுக்கு சொந்தமான நிறுவனங்கள், 'ஒரு மூலோபாய வழியை' உருவாக்குகின்ற ஒரு 'பல்-ஒழுங்கு ஆலோசனைக் குழுவிற்கு' உட்படுத்தப்படும், என்று அவர் கூறினார். அரசாங்கத் துறையில் எந்த ஒரு புதிய கட்டிடத்தை கட்டுவதை நிறுத்தவும், தொலைபேசி மற்றும் மின்சார செலவினங்களை முறையே 25 மற்றும் 10 சதவிகிதம் குறைக்கவும் அவர் முன்மொழிந்தார்.

இராஜபக்ஷ தனது வரவு-செலவுத் திட்டத்தை சமர்ப்பித்த பின்னர் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், முழு அரசாங்கத் துறையும் 'தாங்க முடியாத சுமையாக' உள்ளது என்று கூறினார். 'அரசாங்க ஊழியர்களுக்கு பொதுப் பணத்தைச் செலவழிக்க எந்த வழியும் இல்லை' என்று அவர் கூறினார். இராஜபக்ஷவின் வரவு-செலவுத் திட்டத்தில், அனைத்து புதிய ஆட்சேர்ப்புகளுக்கும் தடை போடப்பட்டு அரச ஊழியர்களின் ஓய்வூதிய வயதை 60 இலிருந்து 65 ஆக அதிகரிக்கவும் முன்மொழியப்பட்டுள்ளது.

நாட்டின் 1.4 மில்லியன் அரச ஊழியர்கள் மீதான இந்த தாக்குதல், முந்தைய சர்வதேச நாணய நிதியத்தின் 'கட்டமைப்பு சீர்திருத்த' கோரிக்கைகளுக்கு ஏற்றதாக உள்ளதுடன் இந்த தொழிலாளர்கள் போராடி வென்ற உரிமைகளையும் அபகரிப்பதை உள்ளடக்கிக்கொண்டுள்ளது.

நிதியமைச்சர் இராஜபக்ஷ, அரச நிறுவனங்களில் கடுமையான செலவினக் குறைப்புக்களை உடனடியாக நடைமுறைப்படுத்த கட்டாயப்படுத்துவதற்காக, அவற்றுக்கான செலவின அங்கீகாரங்கள் வருடாந்தரத்திற்குப் பதிலாக காலாண்டு அடிப்படையில் இருக்க வேண்டும் என்று விரும்புகின்றார். 'வாடிக்கையாளர்களின் திருப்தி மற்றும் முக்கிய செயல்திறன் குறிகாட்டிகளின் அடிப்படையில்' ஒரு மதிப்பீட்டு முறைமை மூலம், பொது சேவையின் செயல்திறன் மற்றும் உற்பத்தித்திறன் 'மேம்படுத்தப்படும்'.

சுகாதாரம், சமுர்த்தி (ஏழைகளுக்கான குறைந்த நலன்புரி கொடுப்பனவுகள்), நீர் வழங்கல், மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாடு மற்றும் கிராமப்புற வீட்டு ஒதுக்கீடுகள் ஆகியவற்றில் மொத்தமாக 173 பில்லியன் ரூபாய் வெட்டப்பட உள்ளது.

பெற்றோலிய கூட்டுத்தாபன ஊழியர்கள் கொலன்னாவையில் நடத்திய ஆர்ப்பாட்டம் (WSWS media)

வரவு செலவுத் திட்டத்தில் அரச துறை ஊழியர்களுக்கு 10,000 ரூபா சம்பள அதிகரிப்பை வழங்குமாறு சில தொழிற்சங்கங்கள் அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்ததுடன், தனியார் துறை முதலாளிகளிடமும் இதேபோன்ற சம்பள உயர்வை வழங்குமாறு நிதி அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த பரிதாபகரமான கோரிக்கைகள், அதிகரித்து வரும் தொழிலாள வர்க்க அமைதியின்மையைக் கலைத்து, அரசாங்கம் மற்றும் முதலாளிகளுக்கு எதிரான நேரடி அரசியல் போராட்டத்தைத் தடுக்கும் அவநம்பிக்கையான முயற்சியாகும்.

நிதி அமைச்சர் இராஜபக்ஷ, 250,000 ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களுக்கு சொற்ப ஊதிய உயர்வுக்கான வரவு-செலவுத் திட்ட ஒதுக்கீட்டை அறிவித்தார். ஆசிரியர் தொழிற்சங்கங்கள் அசல் கோரிக்கையில் மூன்றில் ஒரு பங்கிற்கு அரசாங்கத்துடன் ஒரு அழுகிய பேரம் பேசி, பின்னர் நீண்டகாலமாக நடந்து வந்த தேசிய ஆசிரியர் வேலைநிறுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்தன.

இராஜபக்ஷ, 62 பெரு வணிகங்கள் மற்றும் 2 பில்லியன் ரூபாய் ஆண்டு வருமானம் கொண்ட தனிநபர்கள் மீது 25 சதவீத ஒரு தடவை வருமான வரியையும், 120 மில்லியனுக்கும் அதிகமான வருடாந்த வருமானத்தைக் கொண்ட நிறுவனங்களுக்கு 2.5 சதவீத சமூகப் பாதுகாப்பு வரியையும் முன்மொழிந்தார். இந்த வரிகள் மூலம் அரசாங்க வருவாயை 200 பில்லியன் ரூபாவால் அதிகரிக்க முடியும் என்றாலும், அதிக இலாபம் ஈட்டுபவர்களுக்கு இது ஒரு மென்மையான அடியாகும்.

உழைக்கும் மக்கள் மீதான அரசாங்கத்தின் பேரழிவுகரமான தாக்குதலில் இருந்து கவனத்தைத் திசைதிருப்புவதற்காக, பெருவணிக ஊடகங்கள் இந்த அற்ப வரி அதிகரிப்புகளை தூக்கிப் பிடித்தன. எவ்வாறாயினும், கொழும்பு, தெற்காசியாவில் மிகக் குறைந்த விகிதமான தற்போதுள்ள 14 முதல் 24 சதவீத பெருநிறுவன வரி ஆட்சியில் கைவைக்கவில்லை.

பெரிய முதலீட்டாளர்களுக்கான அரசாங்கத்தின் தாராளமான வரி விடுமுறைகளும் அப்படியே இருக்கின்றன. எடுத்துக்காட்டாக, கொழும்பில் உள்ள சீன நில அபிவிருத்தி திட்டமான துறைமுக நகரம், சர்வதேச நிதி மையமாக அறிவிக்கப்பட்டுள்ளதுடன் இலங்கையின் வரி மற்றும் தொழிலாளர் சட்டங்களில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இராஜபக்ஷவின் 'மீட்பு' வாய்ச்சவடால்கள் ஒரு புறம் இருக்க, தொற்றுநோய் தொடர்கின்ற நிலையில், நாட்டின் பொருளாதார நெருக்கடி மற்றும் வெளிநாட்டு கடன் பிரச்சனைகள் மோசமடையும், ஏற்றுமதி வீழ்ச்சியடையும் மற்றும் உலகளாவிய வர்த்தக சீர்குலைவும் தொடர்ந்தும் இருக்கும். வெளிநாட்டுக் கடனைத் திருப்பிச் செலுத்துதல், அரசாங்கத்தின் மிகப்பெரிய வரவு-செலவுத் திட்ட செலவீனமாகும் என்று நிதி அமைச்சர் ஒப்புக்கொண்டார். அடுத்த ஆண்டுக்கான கடன் செலுத்துகை 4.3 பில்லியன் டாலராக இருப்பதோடு அடுத்த ஆண்டுகளில் இந்த தொகை இதை விட அதிகமாக இருக்கும்.

ஒரு பெரிய கருத்தாதரவு குழுவான இலங்கை முதலாளிமார் சம்மேளனம், 'பிரதான பெருநிறுவன வரி விகிதங்கள் மற்றும் முதலீட்டு ஊக்குவிப்புகளை' பராமரிப்பதை வரவேற்றதோடு அரச நிறுவனங்களில் சீர்திருத்தங்களை பாராட்டியது. எனினும் பெரிய முதலீட்டாளர்களுக்கு ஒரு தடவை வரி விதிப்பது குறித்து தனது அதிருப்தியை தெரிவித்தது.

ஐக்கிய மக்கள் சக்தி, ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) போன்ற எதிர்க்கட்சிகள், 'ஊழல்' மற்றும் பொருளாதாரத்தை 'தவறாகக் கையாள்வதால்' நெருக்கடி ஏற்பட்டதாகக் கூறி, அரசாங்கத்தை கோழைத்தனமாக விமர்சித்தன. முதலாளித்துவ இலாப நோக்கு அமைப்பு முறையைப் பாதுகாக்கின்ற இந்த கட்சிகள் அனைத்தும், இராஜபக்ஷ ஆட்சியுடன் தந்திரோபாய வேறுபாடுகளை மட்டுமே கொண்டுள்ளதுடன், அதிகாரத்தில் இருக்கும் போது, தொழிலாளர்கள் மற்றும் ஏழைகளுக்கு எதிராக இரக்கமின்றி சிக்கன நடவடிக்கைகளை திணித்தன.

கடந்த பத்து மாதங்களில் தொழிலாள வர்க்கத்தின் பரந்த அடுக்கினரும் கிராமப்புற ஏழைகளும் ஆர்ப்பாட்டங்கள், எதிர்ப்புகள் மற்றும் வேலைநிறுத்தங்கள் மூலம் வாழ்க்கை நிலைமைகள் மற்றும் சமூக நிலைமைகள் மீதான அரசாங்கத்தின் தாக்குதல்களை எதிர்த்துள்ளனர். இந்தப் போராட்டங்களில் சுகாதாரம், கல்வி, புகையிரதம் மற்றும் அரச நிர்வாகத்துறை ஊழியர்கள் மற்றும் தோட்டத் தொழிலாளர்கள் பங்குபற்றினர்.

அரசாங்கத்தின் வணிகமயமாக்கல் மற்றும் தனியார்மயமாக்கல் திட்டநிரல் மின்சாரம், பெட்ரோலியம் மற்றும் துறைமுகத் துறை ஊழியர்களின் எதிர்ப்பைக் கண்டது. இந்த மாத தொடக்கத்தில் நாடு தழுவிய போராட்டங்கள் இடம்பெற்றன. சீற்றமடைந்துள்ள விவசாயிகள், பயிர்ச்செய்கைக்கு தேவையான உரம் மற்றும் இதர அடிப்படை இடுபொருட்கள் இல்லாததால் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

நிதியமைச்சர் இராஜபக்ஷ, 18 பில்லியன் ரூபா அதிகரிப்புடன் 373 பில்லியன் ரூபாவை, பாதுகாப்புச் செலவினங்களுக்காக ஒதுக்க விரும்புவது தற்செயலானது அல்ல. இந்த தொகை வெளிநாட்டு கடன் மீள் செலுத்தும் தொகைக்கு ஒதுக்கப்பட்ட தொகைக்கு மட்டுமே அடுத்ததாக இருக்கின்றது. இந்த ஆண்டு பொலிசுக்கான செலவு 10 பில்லியன் ரூபாயால் அதிகரிக்கப்பட்டு 95 பில்லியனாக உயர்த்தப்பட்டுள்ளது. அரசு எந்திரத்தை வலுப்படுத்துவதானது தொழிலாள வர்க்கத்துடன் நேரடி மோதலுக்கான தயாரிப்பாகும்.

Loading