நீதிமன்றத்தில் நிகழ்த்திய உரையில், ட்ரொட்ஸ்கிசத் தலைவர் ஜேர்மன் அரசு நாஜிகளின் வடிவத்தில் சோசலிச எதிர்ப்புச் சட்டங்களுக்கு புத்துயிரளிப்பதை குற்றஞ்சாட்டினார்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

வியாழன் அன்று, சோசலிச சமத்துவக் கட்சி (Sozialistische Gleichheitspartei, SGP) ஜேர்மன் இரகசிய சேவை (Verfassungsschutz) சோசலிச சமத்துவக் கட்சியை 'இடதுசாரி தீவிரவாத' அமைப்பாக வரையறுக்கும் முடிவை எதிர்த்து ஜேர்மன் நீதிமன்றத்தில் மனுசெய்தது.

'சமத்துவம், ஜனநாயகம் மற்றும் சோசலிச சமுதாயத்திற்கான' சோசலிச சமத்துவக் கட்சியின் அழைப்பு, ஜேர்மன் அரசியலமைப்பை மீறுகிறது என்ற வலியுறுத்தலின் அடிப்படையில் நீதிமன்றம் பின்னர் ஒரு தீர்ப்பை வழங்கியது. தற்போதுள்ள அரசுக்கு எதிரான கட்சியின் எதிர்ப்பு மற்றும் முதலாளித்துவ அமைப்பு மீதான விமர்சனமும் அரசியலமைப்பிற்கு முரணானது என்று நீதிமன்றம் மேலும் கூறியது. அத்துடன் அதனை ஒரு தீவிரவாத அமைப்பு என வரையறுப்பதையும் மற்றும் கவனமாக கண்காணிப்பதையும் அது நியாயப்படுத்தியது. சமூகம் பற்றிய மார்க்சிச வர்க்க பகுப்பாய்வு மற்றும் உற்பத்திச் சாதனங்களின் மீதான முதலாளித்துவ உடமைக்கு எதிரான எதிர்ப்பை அரசியலமைப்பிற்கு எதிரானது என்று நீதிமன்றம் கண்டனம் செய்தது.

மார்க்சிச மற்றும் சோசலிச இலக்கியங்களின் விற்பனை, விநியோகம் மற்றும் வாசிப்பு ஆகியவை அரசியலமைப்பிற்கு முரணானவை என்று அறிவிப்பதற்கான அடிப்படையை இந்த நீண்டகால விளைவுகளை கொண்ட முடிவு உருவாக்குகிறது. ஜேர்மன் இரகசிய சேவை (Verfassungsschutz) சமர்ப்பித்த ஆவணத்தில், உலக சோசலிச வலைத் தளத்தின் சர்வதேச ஆசிரியர் குழுவின் தலைவரான டேவிட் நோர்த்தின் எழுத்துக்கள் உட்பட, மார்க்சிச இலக்கியங்களை விநியோகிப்பதை சோசலிச சமத்துவக் கட்சியின் 'தீவிரவாதத்திற்கு' ஆதாரமாக ஜேர்மன் இரகசிய சேவை மேற்கோள் காட்டியது.

சோசலிச சமத்துவக் கட்சியின் துணைத் தலைவரான கிறிஸ்தோப் வாண்டரையர், விசாரணைக்கு முன் பின்வரும் அறிக்கையை வழங்கினார். ஜேர்மனியில் மட்டுமல்ல, உலகம் முழுவதிலும் உள்ள ஆளும் வர்க்கங்கள், தொழிலாள வர்க்கத்தின் மத்தியில் வளர்ந்து வரும் எழுச்சி மற்றும் சோசலிசத்தின் மீது பெருகிவரும் மதிப்பின் முன்னர் சர்வாதிகார நடவடிக்கைகளுக்குத் திரும்புகின்றன என்று வாண்டரையர் எச்சரித்தார்.

நீதிமன்றத்தின் தீர்ப்பு, வாண்டரையரின் எச்சரிக்கையை உறுதிப்படுத்தி, உள்துறை அமைச்சகத்தின் ஜனநாயக விரோத வாதத்தை நீதிமன்றம் முழுமையாக ஆதரித்தது. சோசலிச சமத்துவக் கட்சியின் வழக்கை அது தள்ளுபடி செய்ததுடன், நீதிமன்றச் செலவுகளையும் வழங்குமாறும் உத்தரவிட்டது.

சோசலிச சமத்துவக் கட்சி இந்த முடிவை எதிர்த்து மேல்முறையீடு செய்து தீவிர வலதுசாரி ஆபத்து மற்றும் சோசலிசத்தின் மீதான தாக்குதலுக்கு எதிர்ப்பைத் அணிதிரட்டும். இந்த முக்கியமான அறிக்கை கவனமாக படிக்கப்பட வேண்டும் மற்றும் பரவலாக விநியோகிக்கப்பட வேண்டும்.

நீதிமன்ற அறையில் கிறிஸ்தோப் வாண்டரையர் மற்றும் உல்ரிச் ரிப்பேர்ட் (image WSWS) [Photo: WSWS]

தலைவரே, இந்த புகாரை நாங்கள் ஏன் தாக்கல் செய்தோம் என்பதையும், அது ஏன் மிகவும் முக்கியமானது என்று நாங்கள் கருதுகிறோம் என்பதையும் சுருக்கமாக விளக்க விரும்புகிறேன். நாஜி சர்வாதிகாரம் முடிவடைந்து எழுபத்தாறு ஆண்டுகளுக்குப் பின்னர், மத்திய உள்துறை அமைச்சகம் சோசலிசக் கருத்துகளையும் இடதுசாரி நிலைப்பாடுகளையும் அரசியலமைப்பிற்கு எதிரானது என்று அறிவிக்க முயற்சிக்கிறது.

புரட்சிகர மார்க்சிசத்தின் பாரம்பரியத்தில், சமூகத்தின் சோசலிச மாற்றத்திற்காக பெரும்பான்மையான மக்களை வென்றெடுக்க சோசலிச சமத்துவக் கட்சி போராடுகிறது. நாங்கள் அடிப்படை ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்கிறோம் மற்றும் உற்பத்திச் சாதனங்களின் மீதான தனியார் உடமையை ஒழித்து, பொருளாதாரத்தை ஜனநாயகமயமாக்குவதன் மூலம் அவற்றை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று வாதிடுகிறோம்.

துல்லியமாக முதலாளித்துவத்தின் விளைவான இந்த பாரிய சமூக சமத்துவமின்மை, வளர்ந்து வரும் இராணுவவாதம் மற்றும் தொற்றுநோயின்போது மிருகத்தனமான 'உயிர்களைவிட இலாபங்களுக்கு முன்னுரிமை' கொடுக்கும் கொள்கைகள் உலகம் முழுவதும் சர்வாதிகார மற்றும் தீவிர வலதுசாரி சக்திகளை வலுப்படுத்துகின்றன.

ஜனவரி 6 அன்று டொனால்ட் ட்ரம்பின் ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி, பிரேசிலில் ஜெய்ர் போல்சனாரோவின் ஆட்சிக்கவிழ்ப்பு தயாரிப்புகள் மற்றும் ஸ்பானிய இராணுவத்தில் வலதுசாரி சதி ஆகியவை தமக்கு எதிராக வளர்ந்து வரும் எதிர்ப்பின் முன்னால் இந்தக் கொள்கைகளை திணிக்க எல்லா இடங்களிலும் ஆளும் வர்க்கங்கள் சர்வாதிகார முறைகளை நம்பியிருப்பதைக் காட்டுகின்றன.

மனித வரலாற்றில் மிகப் பெரிய குற்றங்களுக்குப் பொறுப்பான நாடான ஜேர்மனியில் இந்த நிகழ்வு மிகவும் முன்னேறியுள்ளது. ஜேர்மனிக்கான தீவிர வலதுசாரி மாற்றீடு (AfD) கட்சி அரசு அமைப்பில் முழுமையாக ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. அகதிகளை பாரியளவில் நாடுகடத்துதல், மக்களை வேண்டுமென்றே பாரிய தொற்றுக்குள்ளாக்குதல் மற்றும் அரசு அமைப்பை ஆயுதபாணியாக்குதல் ஆகிய அதன் வேலைத்திட்டம் அனைத்துக் கட்சிகளாலும் பெரிய அளவில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

தீவிர வலதுசாரி பயங்கரவாத வலைப்பின்னல்கள், காவல்துறை, உளவுத்துறை மற்றும் இராணுவத்தினுள் நெருக்கமாக இயங்குவதையும், ஆயுதங்களை குவித்தல், எதிரிகளின் பட்டியலை தொகுத்தல் மற்றும் ஆயிரக்கணக்கான அரசியல் எதிர்ப்பாளர்களை 'ஒரு குறிப்பிட்ட நாளில்' படுகொலை செய்ய இயங்குகின்றன. ஹால மற்றும் ஹனோவ் நகரங்களின் பயங்கரவாத தாக்குதல்கள் மற்றும் வால்டர் லூப்க இன் கொலை ஆகியவை மிகவும் தீவிரமான எச்சரிக்கைகளாகும்.

இந்நிலையில், வலதுசாரி ஆபத்தை எதிர்த்துப் போராடுபவர்கள் மற்றும் அடிப்படை ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பவர்கள் மீது அரசியலமைப்பின் பாதுகாப்பிற்கான அலுவலகம் (Verfassungsschutz - இரகசிய சேவை) நடவடிக்கை எடுத்து வருகிறது. மத்திய அரசு, இரகசிய சேவையின் கண்காணிப்பை நியாயப்படுத்துகிறது மற்றும் இடதுசாரி, சோசலிச நிலைப்பாடுகளை அரசியலமைப்பிற்கு எதிரானது என சுருக்கமாக அறிவித்து எங்கள் கட்சியை அவதூறு செய்கிறது.

மத்திய உள்துறை அமைச்சகத்தின் கடிதத்தில் குறிப்பிடப்படும், 'சமத்துவம், ஜனநாயகம் மற்றும் சோசலிச சமுதாயத்திற்காக வாதிடுதல்', மார்க்ஸ் மற்றும் ஏங்கெல்ஸை பற்றிய நேர்மறையான குறிப்புகள், இராணுவவாதம் மற்றும் தேசியவாதம் பற்றிய விமர்சனங்கள், மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தினை நிராகரிப்பதும் அரசியலமைப்பிற்கு எதிரானது எனப்படுகின்றது. இந்த அடிப்படையில், விமர்சனரீதியான சமூக விஞ்ஞானிகள் அல்லது வேலைநிறுத்தம் செய்யும் தொழிலாளர்களுடன் சேர்ந்து புத்தகக் கடைகளும் குற்றமாக்கப்படலாம்.

உண்மையில், இவை எதுவும் அடிப்படை ஜனநாயக ஒழுங்கை மீறவில்லை. மாறாக, இந்த நாட்டில் அடிப்படை ஜனநாயக உரிமைகளுக்காக, இந்தக் கொள்கைகளை பின்பற்றிய புரட்சிகர தொழிலாளர் இயக்கம் மட்டுமே பிரத்தியேகமாகப் போராடியது. மார்க்சிச சமூக ஜனநாயகம் தான் பிரஷ்ய மூன்று வர்க்க வாக்குரிமையை எதிர்த்ததுடன், இறுதியாக 1918 இல் தொழிலாளர்கள் மற்றும் சிப்பாய்களின் புரட்சிகர எழுச்சி மட்டுமே, ஜேர்மனியில் சுதந்திரமான மற்றும் சமமான தேர்தல்களை சாத்தியமாக்கியது.

அனைத்து முதலாளித்துவக் கட்சிகளும், ஹிட்லரை குடியரசின் சான்சிலராக நியமிப்பதை ஆதரித்தபோது, அவர் ஒழுங்கமைக்கப்பட்ட தொழிலாளர்களை நசுக்குவார் என்று எதிர்பார்த்ததால், அவருக்கு சர்வாதிகார அதிகாரங்களை வழங்கினர். சமூக ஜனநாயகக் கட்சியும் (SPD) மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியும் (KPD) மட்டுமே அதை எதிர்த்தன. மேலும் லியோன் ட்ரொட்ஸ்கி தான் பாசிசத்தை தடுத்து நிறுத்த இரண்டு தொழிலாளர் கட்சிகளின் ஐக்கிய முன்னணிக்காக தீவிரமாக வாதிட்டார்.

மாறாக, மத்திய உள்துறை அமைச்சகமே அடிப்படை ஜனநாயக உரிமைகளைத் தாக்கி, எப்போதும் சோசலிஸ்டுகளுக்கு எதிராகச் செயல்படும் சர்வாதிகார அரசின் உணர்வோடு வாதிடுகிறது.

சோசலிச சமத்துவக் கட்சி தனது நிலைப்பாட்டை பிரத்தியேகமாக சட்டரீதியான மற்றும் ஜனநாயக வழிமுறைகளுடன் முன்னெடுக்கிறது, வன்முறைக்கு அழைப்பு விடுக்கவில்லை என்பதை அமைச்சகமே ஒப்புக்கொள்கிறது. எனவே இது, எங்கள் கட்சியை இரகசிய சேவை கண்காணிப்பது மற்றும் 'இடதுசாரி தீவிரவாதிகள்' என்று அவதூறு செய்வது, நாங்கள் முன்மொழியும் சோசலிச கருத்துக்களை மட்டுமே அடிப்படையாகக் கொண்டுள்ளது.

இந்த வகையான கருத்துகள் அல்லது நம்பிக்கைகளின் அடிப்படையில் நீதி வழங்குதலை (Gesinnungsjustiz) ஏற்கனவே 1852 ஆம் ஆண்டின் கொலோன் கம்யூனிஸ்ட் விசாரணையில் பயன்படுத்தப்பட்டது. இதில் பிரதிவாதிகள் அவர்களின் உண்மையில் செய்த குற்றங்களுக்காக அல்லாது அரசியல் குற்றங்களுக்காக மட்டுமே தண்டிக்கப்பட்டனர். இரண்டு சோசலிச தொழிலாளர் தலைவர்களான ஒகுஸ்ட் பெபல் மற்றும் வில்ஹெல்ம் லீப்க்னெக்ட் ஆகியோரும் ஜேர்மன் இராணுவவாதத்திற்கு எதிரான அவர்களின் பத்திரிகைத்துறை நடவடிக்கைகளுக்காக மட்டுமே மார்ச் 1872 இல் ஜேர்மன் குடியரசு நிறுவப்பட்ட சிறிது காலத்திலேயே ஒரு கோட்டையில் இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டனர்.

கம்யூனிஸ்டுகளுக்கு எதிராக தங்கள் அரசு பயங்கரவாதத்தை மேலும் அதிகரிப்பதற்காக நாஜிக்கள் கருத்துகள் அல்லது நம்பிக்கைகளின் அடிப்படையில் நீதி வழங்கும் (Gesinnungsjustiz) இந்த சட்டப் பாரம்பரியத்தை தீவிரமாக எடுத்துக்கொண்டனர். ஒவ்வொரு அரசியல் எதிரியையும் ஒழிப்பதற்கும், வதை முகாம்களில் அடைத்து கொல்வதற்கும், குற்றவியல் பொறுப்பு என்பது குறிப்பிட்ட நடவடிக்கைகளிலிருந்து அதிகரித்தளவில் பிரிக்கப்பட்டது. 1930களின் முற்பகுதியில், புதிதாக உருவாக்கப்பட்ட மக்கள் நீதிமன்றம், 83வது பிரிவு உயர் தேசத்துரோகத்திற்காக கம்யூனிஸ்டுகளுக்கு அவர்களின் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் முற்றிலும் மரண தண்டனை விதிக்கப்படலாம் என விளக்கியது.

ஒரு மார்க்சிச வர்க்கப் பகுப்பாய்வு மனிதக் கண்ணியத்திற்கு முரணானது என்ற மத்திய உள்துறை அமைச்சகத்தின் வலியுறுத்தலும், இந்த சர்வாதிகார ஆட்சிகளின் பாரம்பரியத்திலிருந்து கடன் வாங்கப்பட்டதாகும். இந்த நிலைப்பாட்டின் படி, குழந்தை வறுமை, வீடற்ற நிலைமை அல்லது கொரோனா வைரஸ் தொற்றுநோய்களின் பாரிய மரணம் ஆகியவை 'மனிதக் கண்ணியத்தை' மீறவில்லை, மாறாக இந்த அப்பட்டமான சமூக சமத்துவமின்மைக்கு எதிர்ப்பு தெரிவிப்பதே 'மனிதக் கண்ணியத்தை' மீறுகின்றது. முதலாளித்துவத்தின் கீழ் வர்க்க முரண்பாடுகள் குறைந்து வருகின்றன என்று நம்பாத எவரும் அரசியலமைப்பின் எதிரி என்று அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இவைதான், தனது சோசலிச-விரோதச் சட்டங்களை நியாயப்படுத்த பிஸ்மார்க் துல்லியமாக பயன்படுத்திய வாதங்களாகும். அவை 'தற்போதுள்ள அரசு அல்லது சமூக அமைப்பைத் தூக்கியெறிவதை நோக்கமாகக் கொண்ட சமூக-ஜனநாயக, சோசலிச அல்லது கம்யூனிச எந்தவொரு அமைப்புக்கும் மற்றும் பொது அமைதிக்கு ஆபத்தை விளைவிக்கும், குறிப்பாக மக்களிடையேயான வர்க்கங்களின் நல்லிணக்கத்திற்கு எதிராக இயக்கும் வழியில் வெளிப்படுத்துபவைக்கு எதிராக இயக்கப்பட்டன.

இந்த அரசால் திணிக்கப்பட்ட வர்க்க நல்லிணக்கமானது, நாஜிகளின் மக்கள் கூட்டு (Volksgemeinschaft) என்ற கருத்தின் இதயத்திலும் இருந்தது. மே 1933 இல் புத்தகங்கள் எரிக்கப்பட்ட நேரத்தில், 'நெருப்பு முழக்கங்களில்' ஒன்று இவ்வாறு எழுதப்பட்டது: 'வர்க்கப் போராட்டத்திற்கும் சடவாதத்திற்கும் எதிராக, மக்கள் கூட்டுக்கும் இலட்சியவாத வாழ்க்கை முறைக்கும்! நான் மார்க்ஸ் மற்றும் கவுட்ஸ்கியின் எழுத்துக்களை தீச்சுடரிடம் ஒப்படைக்கிறேன்”.

மத்திய உள்துறை அமைச்சகம் அதன் வாதங்களில், சோசலிசப் புரட்சி 'மக்களின் விருப்பத்தின் வெளிப்பாடாக இருக்க முடியாது. ஏனெனில் பெரும்பாலான மக்கள் தங்கள் கருத்துக்களை வலியுறுத்துகிறார்கள். அதேசமயம் மக்களின் மற்ற பகுதியினரின் அரசியலமைப்பு உரிமைகள் ஒடுக்கப்படுகின்றன” என பிற்போக்குத்தனமான தர்க்கத்தை வெளிப்படுத்துகிறது. இது, 'சோசலிசப் புரட்சியின் போக்கில் வன்முறை பயன்படுத்தப்பட்டதா என்பதைப் கருத்திலெடுக்காது' பொருந்தும் எனக் குறிப்பிட்டது.

இங்கு, உற்பத்திச் சாதனங்களின் மீதான ஒரு குறுகிய உயரடுக்கின் தனிச்சொத்துடைமைக்கான உரிமை, பெரும்பான்மையானவர்கள் அதற்கு அடிபணிய வேண்டிய மிக அடிப்படை உரிமையாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஹிட்லர், பிராங்கோ மற்றும் பினோசே போன்ற சர்வாதிகாரிகள் இந்த வாதத்திலிருந்து பின்வரும் இறுதி முடிவுகளை எடுத்தனர்: பெரும்பான்மையானவர்கள் சோசலிசக் கருத்துக்களை நோக்கிச் சென்றால், முதலாளித்துவத்தைப் பாதுகாப்பதற்காக மிகக் கொடூரமான அடக்குமுறை முறைகள் கூட நியாயப்படுத்தப்படும்.

இந்த கருத்துக்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் எவ்வளவு நெருக்கமானது என்பதும், பாசிசத்திற்கு எதிரான போராட்டத்தில் பாட்டாளி வர்க்கத்தை ஆயுதபாணியாக்க அழைப்பு விடுக்கும் 1938 ஆம் ஆண்டு நான்காம் அகிலத்தின் ஸ்தாபக வேலைத்திட்டத்தின் பின்னால் நாங்கள் நிற்கிறோம் என்பதும் எங்கள் கட்சியின் மீதான பழிசுமத்தலில் வெளிப்படுகிறது.

மன்னிக்கவும் திரு.ரோத், ஆனால் தொழிலாள வர்க்கத்தின் ஆயுதமேந்திய எழுச்சிதான் மனிதகுல வரலாற்றில் மாபெரும் குற்றங்கள், கிழக்கில் ஜேர்மனியின் அழிப்புப் போர் மற்றும் யூதப்படுகொலை ஆகியவற்றைத் தடுப்பதற்கான ஒரே வழியாக இருந்திருக்கும்.

லியோன் ட்ரொட்ஸ்கியைப் போல யாரும் இதைத் தெளிவாகப் பார்க்கவில்லை. வேறு எவரையும்விட, நாஜிகள் அதிகாரத்தைக் கைப்பற்றியதன் விளைவுகளைப் பற்றி அவர் எச்சரித்தார். தொழிலாளர் அமைப்புகளின் அழிவு மற்றும் இரண்டாம் உலகப் போர் மற்றும் ஐரோப்பிய யூதர்கள் உடல் ரீதியாக அழிக்கப்படுவதைக் கூட அவர் முன்னறிவித்தார். பல கட்டுரைகள் மற்றும் எழுத்துக்களில், ட்ரொட்ஸ்கி பாசிசத்தை நிறுத்த சமூக ஜனநாயக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஐக்கிய முன்னணிக்காக போராடினார்.

எனவே ட்ரொட்ஸ்கிஸ்டுகள் கெஸ்டப்போவால் கொடூரமாக துன்புறுத்தப்பட்டனர். 1937 இல், டான்சிக்கில் உள்ள நீதிமன்றம் பத்து ட்ரொட்ஸ்கிஸ்டுகளுக்கு நீண்ட சிறைத்தண்டனை விதித்தது. நாஜிகளால் பாதிக்கப்பட்ட ட்ரொட்ஸ்கிசவாதிகளில் யூதக் கேள்வி குறித்த மார்க்சிச ஆய்வின் ஆசிரியரான ஆபிரகாம் லியோன் உள்ளடங்குகின்றார். அவர் ஆக்கிரமிக்கப்பட்ட பெல்ஜியம் மற்றும் பிரான்சில் சட்டவிரோத சோசலிச வேலைகளை மேற்கொண்டதுடன் மற்றும் அவுஸ்விட்ஸ் எரிவாயு அறைகளில் கொலை செய்யப்பட்டார். ட்ரொட்ஸ்கிச இயக்கம் இப்போது மீண்டும் துன்புறுத்தப்படுகிறது என்பது உத்தியோகபூர்வ அரசியலில் வலது பக்கம் நோக்கிய ஆபத்தான மாற்றத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

இறுதியாக, ஜேர்மன் கம்யூனிஸ்ட் கட்சி மீதான தடைத்தீர்ப்பை புதுப்பிக்கவும் மற்றும் சோசலிச சமத்துவக் கட்சிக்கு எதிராக அதை பயன்படுத்தவும் உள்துறை அமைச்சகத்தின் முயற்சி குறிப்பாக நேர்மையற்றது. முன்னைய தீர்ப்பு பழைய நாஜி உயரடுக்கினரால் முன்னெடுக்கப்பட்டதுடன் மற்றும் அது அரசியலமைப்பிற்கு முரணானது என்பதால் மட்டுமல்ல, அது ஸ்ராலினிச ஜேர்மன் கம்யூனிஸ்ட் கட்சியை குறிவைத்ததால் நடந்தது. மத்திய உள்துறை அமைச்சகம் ஸ்ராலினிசத்தையும் ட்ரொட்ஸ்கிசத்தையும் வெளிப்படையாக சமன் செய்கிறது. அது ட்ரொட்ஸ்கிசத்தை 'மார்க்சிசம்-லெனினிசத்தின்' மறுவடிவமைப்பாக அதன் அர்த்தம் ஸ்ராலினிசம் என்றாகிறது.

உண்மையில், ட்ரொட்ஸ்கியும் இடது எதிர்ப்பும் ஸ்ராலினிச எதிர்ப்புரட்சிக்கு எதிராக அக்டோபர் புரட்சியில் பொதிந்திருந்த மார்க்சிச கொள்கைகளை பாதுகாத்தனர். ஆரம்பத்தில் இருந்தே இந்தக் கோட்பாடுகள், சோவியத் ஒன்றியத்தில் ஜனநாயகத்தையும் சர்வதேச சோசலிசப் புரட்சியை நோக்கிய நோக்குநிலையையும் உள்ளடக்கியது.

ஸ்ராலினிச கொடுங்கோன்மைக்கும் உண்மையான சோசலிசக் கொள்கைகளுக்கும் இடையே உள்ள இணைக்கமுடியாத இடைவெளி 1930களின் பெரும் களையெடுப்புகளில் வெளிப்படுத்தப்பட்டது. இதன்போது ட்ரொட்ஸ்கிசவாதிகள் என்ற குற்றச்சாட்டின் பேரில் நூறாயிரக்கணக்கான கம்யூனிஸ்டுகள் கொல்லப்பட்டனர். ஜேர்மன் ஜனநாயகக் குடியரசில் (கிழக்கு ஜேர்மனி), ஜனநாயகம் மற்றும் சோசலிசத்திற்காக ஸ்ராலினிஸ்டுகளுக்கு எதிராகப் போராடிய ஒஸ்கார் ஹிப்பே போன்ற ட்ரொட்ஸ்கிஸ்டுகள் நீண்ட கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டனர்.

இப்போது, ஸ்ராலினிச அடக்குமுறையின் முதல் பலிகடாக்களான ட்ரொட்ஸ்கிஸ்டுகளே அவ்வொடுக்குமுறைக்கும் அதன் போலி-மார்க்சிச நியாயப்படுத்தல்களுக்கும் பொறுப்பு என மத்திய அரசு அறிவிக்கிறது! உள்துறை அமைச்சகம் தனது வாதங்களில் பெரும்பாலானவற்றை, மார்க்சிசத்தின் ஸ்ராலினிச கேலிச்சித்திரத்தை அடிப்படையாகக் கொண்டதுடன், மார்க்சிசத்தின் உண்மையான குரலுக்கு எதிராக வாதிடுவதற்கு அதைப் பயன்படுத்தலாம் என்று தீவிரமாக நம்புகிறது!

மத்திய உள்துறை அமைச்சகத்தின் சுருக்கமானது, அரசியலமைப்பின் பாதுகாப்பிற்கான மத்திய அலுவலகத்தின் முன்னாள் தலைவரான ஹான்ஸ் ஜோர்க் மாஸன் நாளாந்தம் கூறும் அதே தீவிர வலதுசாரி உணர்வுகளின் வெளிப்பாடாகும். சர்ச்சைக்குரிய 2017 அரசியலமைப்பின் பாதுகாப்பிற்கான அலுவலகத்தின் அறிக்கையில் சோசலிச சமத்துவக் கட்சி சேர்க்கப்பட்டதற்கு மாஸன் தான் பொறுப்பாகும்.

நவம்பர் 2018 இல், செம்னிட்ஸ் நகரில் தீவிர வலதுசாரி கலவரங்கள் இல்லை என்று மறுத்த பின்னர் மற்றும் 'சமூக ஜனநாயகக் கட்சிக்குள் தீவிர இடதுசாரி சக்திகள்' இருப்பதைப் பற்றி பேசிய பின்னர் மாஸன் பதவியிலிருந்து ஓய்வுபெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அப்போதிருந்து, உளவுத்துறை அமைப்பின் முன்னாள் தலைவரிடமிருந்து புதிய தீவிர வலதுசாரி துவேஷங்கள் வராமல் ஒரு நாள் கூட கடக்கவில்லை.

அரசியலமைப்பின் பாதுகாப்பிற்கான அலுவலகம், வலதுசாரி தீவிரவாத பயங்கரவாத வலையமைப்புகளுடன் நெருக்கமாகப் பின்னிப்பிணைந்துள்ளது. இது தகவல் வழங்குபவர்களுக்கூடாக ஓரளவுக்கு நிதியளித்து கட்டுப்படுத்துகிறது. இந்த வலையமைப்புகளின் தலைவர்களில் பெரும்பகுதி மற்றும் அவற்றின் கட்டமைப்புகள் அப்படியே இருந்தாலும், இரகசிய சேவை இடதுசாரி மற்றும் சோசலிச குழுக்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்து வருகிறது.

உயர் நீதிமன்றத்தின தலைவரே, இந்த அமைப்பிற்கு ஆதரவாகவும், இந்த ஜனநாயக விரோத வாதத்திற்கு ஆதரவாகவும் நீங்கள் தீர்ப்பு வழங்க முடிவெடுத்தால், அது மிகப்பெரிய நீண்டகால விளைவுகளை ஏற்படுத்தும். நாஜி ஆட்சி முடிவுக்கு வந்து எழுபத்தாறு ஆண்டுகளுக்குப் பின்னர், சோசலிச கருத்துக்கள் மீண்டும் அரசியலமைப்பிற்கு முரணானவை என்று அறிவிக்கப்படும். இது உளவுத்துறை கண்காணிப்புக்கும் மற்றும் மார்க்சிச இலக்கியம், விமர்சனரீதியான அறிஞர்கள் மற்றும் வேலைநிறுத்தம் செய்யும் தொழிலாளர்கள், புத்தகக் கடைகளை சட்டவிரோதமாக்குவதற்கான அடித்தளத்தை அமைக்கும். இது, போலீஸ் அரசை நோக்கிய ஒரு படியாக இருக்கும்.

சோசலிச சமத்துவக் கட்சியைப் பாதுகாக்கும் வகையில், Change.org எனும் பிரபலமான தளமான தளத்தில் நாங்கள் வெளியிட்ட ஒரு மனு, ஜேர்மன் மொழி பேசும் நாடுகளில் இருந்து 5,240 கையொப்பங்களைப் பெற்றதற்கும், மேலும் பிற நாடுகளில் இருந்து நூற்றுக்கணக்கான கையொப்பங்களைப் பெற்றதற்கும் காரணமாக இருந்தது.

'WISAG நிறுவனத்திற்கு எதிரான எங்கள் போராட்டத்தில் விமான நிலைய ஊழியர்களை ஆதரித்த ஒரே கட்சி சோசலிச சமத்துவக் கட்சி மட்டுமே' என்று WISAG இனால் பணிநீக்கம் செய்யப்பட்ட விமான நிலைய தரைப் பணியாளர் செமாலெடின் பென்லி அறிவித்தார். 'சோசலிச சமத்துவக் கட்சி மீதான தாக்குதல் என்பது சுரண்டல், பணிநீக்கங்கள், ஊதிய திருட்டு மற்றும் கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு எதிராக போராடும் அனைத்து தொழிலாளர்கள் மீதான தாக்குதலாகும்'.

பாதுகாப்பான கல்விக்கான நடவடிக்கைக் குழுக்களின் உறுப்பினரான கிளவ்டியா பின்வருமாறு எழுதினார்: “எங்கள் குழந்தைகளின் பாதுகாப்பிற்கும் தொற்றுநோயிலிருந்து பாதுகாப்பதற்கும் உறுதியளிக்கும் ஒரு கட்சி அரசியலமைப்பின் பாதுகாப்பு அலுவலகத்தால் கட்டுப்படுத்தப்படுவது முற்றிலும் நினைத்துப் பார்க்க முடியாதது. பெற்றோர்கள், குழந்தைகள், ஆசிரியர்களுடன் இணைந்து நின்று தொற்றுநோயால் மறக்கப்பட்டுபோகாமல் #shadowfamilies என்பதன் கீழ் போராடிய ஒரே கட்சி சோசலிச சமத்துவக் கட்சியாகும்.

5,457 கையொப்பங்கள் மற்றும் இந்த வழக்குக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் புத்திஜீவிகளின் எண்ணற்ற கருத்துகளையும் மற்றும் மத்திய உள்துறை அமைச்சகத்தின் ஜனநாயக விரோத வாதத்திற்கு எதிராக உறுதியான வார்த்தைகளில் தெரிவித்த எதிர்ப்பையும் நாங்கள் உங்களுக்கு முன்வைக்கின்றோம்.

Loading