இலங்கை IYSSE நடத்திய கூட்டத்தில் ஆப்கானிஸ்தானில் அமெரிக்காவின் தோல்வி பற்றி கலந்துரையாடப்பட்டது

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

இலங்கையில் சமூக சமத்துவத்துக்கான சர்வதேச இளைஞர் மற்றும் மாணவர் (IYSSE) அமைப்பு கடந்த வெள்ளிக்கிழமை, “ஆப்கானிஸ்தானுக்குள் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் தோல்வி” என்ற தலைப்பில் ஒரு இணையவழி பகிரங்க விரிவுரையை நடத்தியது. இந்த சுமார் நூறு பேர் பங்குபற்றியிருந்தனர். டசின் கணக்கானவர்கள், சோசலிச சமத்துவக் கட்சியின் (சோ.ச.க) முகநூல் பக்கத்தின் ஊடாக பங்குபற்றியிருந்தனர். இந்த வீடியோ ஆயிரத்திற்கும் மேற்பட்டோரால் பார்வையிடப்பட்டு, 200 தடவைகள் பகிரப்பட்டுள்ளது.

கொழும்பு, ஸ்ரீ ஜயவர்தனபுர, பேராதனை, யாழ்ப்பாணம் மற்று சப்ரகமுவ வளாகம் உட்பட, ஏறக்குறைய இலங்கையில் உள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த மாணவர்களும் இந்த விரிவுரையில் கலந்து கொண்டிருந்தனர். இது, முக்கியமான சர்வதேச அபிவிருத்திகள் பற்றிய கருத்தாழமுடைய பகுப்பாய்வுகளை இளைஞர்கள் தேடிக் கொண்டிருக்கின்றார்கள் என்பதற்கான அறிகுறியாகும்.

ஐ.வை.எஸ்.இ. கூட்டம் (WSWS Media)

ஐ.வை.எஸ்.இ. ஒருங்கிணைப்பாளரும் சோ.ச.க. அரசியல் குழு அங்கத்தவருமான கபில பெர்னாண்டோ நிகழ்வுக்கு தலமை தாங்கினார். ஆப்கானிஸ்தானில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் இரண்டு தசாப்தகால “பயங்கரவாதத்திற்கு எதிரான போர்” என்பதற்கான மூல காரணம் மற்றும் அதன் அவமானகரமான தோல்வியின் காரணங்களையும் இளைஞர்களும் தொழிலாளர்களும் புரிந்து கொள்ள வேண்டும், என அவர் வலியுறுத்தினார்.

சோ.ச.க. அரசியல் குழு உறுப்பினர் சமன் குணதாச பிரதான விரிவுரையை ஆற்றினார். இரண்டு தசாப்தகால அமெரிக்க தலமையிலான ஆக்கிரமிப்பின் மூலம் ஆப்கான் பொதுமக்கள் மீது சுமத்தப்பட்ட கொடூர நிலமைகள் பற்றி விளக்கி, அவர் தனது விரிவுரையை ஆரம்பித்தார். ஆஸ்பத்திரிகள் மற்றும் திருமண நிகழ்வுகள் மீதான குண்டுத் தாக்குதல்கள் உட்பட, அமெரிக்கப் படைகளால் மேற்கொள்ளப்பட்ட கண்மூடித்தனமான குண்டுத் தாக்குதல்களினால் 170,000 ஆப்கான் பொதுமக்கள் கொல்லப்பட்டனர். கடத்தல் மற்றும் இரகசிய இடங்களில் வைத்து பொதுமக்களைச் சித்திரவதை செய்தல் உட்பட யுத்தக் குற்றங்களில் அமெரிக்கப் படைகள் ஈடுபட்டன.

அமெரிக்கப் படையெடுப்பானது, இலட்சக் கணக்கான அகதிகளை உருவாக்கியதுடன், மக்கள் தொகையின் அரைவாசிப்பேர், மனிதாபிமான உதவியை நாடுவதற்கு தள்ளப்பட்டனர். இந்தப் பேரழிவு, மக்கள் மத்தியில் கொதிக்கும் வெறுப்பினை அதிகரித்ததுடன், அமெரிக்காவால் உருவாக்கப்பட்ட ஆப்கான் பொம்மை அரசை, சிறிய சிரமத்துடன் கவிழ்ப்பதற்கான பாதையை தலிபான்களுக்கு அமைத்துக் கொடுத்தது.

“ஆப்கானிஸ்தானுக்குள் ஏற்பட்ட தோல்வியானது, வியட்நாமில் அமெரிக்கா சந்தித்த தோல்வியின் பின்னர் ஏற்பட்ட மிகவும் அவமானகரமான தோல்வியாகும்” என பேச்சாளர் கூறினார். அமெரிக்க இராணுவத்தின் உயிரிழப்புக்கள் மற்றும் பிரமாண்டமான யுத்தச் செலவுகள் உட்பட, பாதிப்பின் பட்டியலை வெளியிட்ட, ஜனாதிபதி பைடனின் உரையை அவர் சுட்டிக்காட்டினார். எவ்வாறாயினும், அமெரிக்காவின் யுத்தத்தினை நியாயப்படுத்திய பைடன், ஆப்கான் மக்கள் சந்தித்த பேரழிவுகள் பற்றி குறிப்பிடத் தவறிவிட்டார், என அவர் சுட்டிக் காட்டினார்.

ஆப்கானிஸ்தான் படையெடுப்புக்கு வழிவகுத்த வரலாற்று மற்றும் அரசியல் நிகழ்வுகளை குணதாச ஆய்வுசெய்தார். நியூயோர்க் மற்றும் வாஷிங்டன் நகரங்கள் மீதான, 11 செப்டம்பர் 2001 அன்று நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலின் குற்றவாளிகள் ஆப்கானிஸ்தானில் இருக்கவில்லை. ஆயினும் கூட, அமெரிக்க அரசாங்கம், மத்திய ஆசிய நாட்டினை ஆக்கிரமிப்பதற்கான ஒரு சாக்குப் போக்காக இதைப் பயனபடுத்தியது.

ஆப்கானிஸ்தான் ஒரு ஏகாதிபத்திய சூழ்ச்சி மற்றும் நவகாலனித்துவ சதித்திட்டங்களின் மையமாக நீண்டகாலமாக இருந்து வருகின்றது. 1980 களில், சோவியத் யூனியனுக்கு எதிரான யுத்தத்தின் போது, அல்கைடாவின் முன்னோடிகள் உட்பட இஸ்லாமிய தீவிரவாத அமைப்புக்களுக்கு வாஷிங்டன் வழங்கிய ஆதரவு பற்றி பேச்சாளர் சுட்டிக்காட்டினார்.

அமெரிக்க ஏகாதிபத்தியாமானது, வீழச்சியடைந்துவரும் மேலாதிக்கத்தை தனது இராணுவத்தினைப் பயபடுத்தி மீண்டும் மீண்டும் தூக்கி நிறுத்தும் முயற்சியில் ஈடுபடுதவதன் மூலம், 1991இல் ஸ்டாலினிச அதிகாரத்துவத்தினால் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டமைக்கு எதிர்வினையாற்றியது. ஆனால், மில்லியன் கணக்கான மக்கள் கொல்லப்பட்டாலும், ஈராக் மற்றும் லிபியா போன்ற முழு சமூகங்களையும் அழித்த போதிலும், அமெரிக்க முதலாளித்துவம் எதிர்கொள்ளும் எந்த அடிப்படை பிரச்சனையும் போரின் மூலம் தீர்க்கப்படவில்லை.

“இராணுவம் நவீன கருவிகளுடன் ஆயுதபாணியாக்கப்பட்டு இருந்தாலும், இராணுவ வியூகத்தால் பொருளாதார சிக்கல்களை சமாளிக்க முடியாது”, என பிரெடெரிக் எங்கெல்ஸ் கூறியதை குணதாச மேற்கோள் காட்டினார்.

ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட தோல்வி அமெரிக்க தலைமையிலான போர்கள் மற்றும் இராணுவ ஆக்கிரமிப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கும் என்று யாரும் மாயையில் இருக்கக் கூடாது என, பேச்சாளர் எச்சரித்தார். மேலும் மேலும் பிரதான இராணுவத் தலையீடுகளில் திறம்படக் கவனம் செலுத்துவதற்காகவே, தன்னுடைய நிர்வாகம் ஆப்கானிஸ்தானில் இருந்து தனது கைகளை விடுவித்துக் கொண்டதாக, பைடன் வெளிப்படையாக கூறியுள்ளார். அதன் அர்த்தம், சீனா மற்றும் ரஷ்யா அத்தோடு, ஈரான், வடகொரியா போன்ற இன்னும் ஏனைய எதிரி நாடுகளுமே அதன் இலக்காகும். என குணதாச விளக்கினார்.

ஆப்கானிஸ்தானில் புதிதாக உருவாக்கப்பட்ட தலிபான் நிர்வாகத்தைப் பற்றி குறிப்பிட்ட குணதாச, புதிய ஆட்சியால் 20 வருடப் போரின் போது மக்களுக்கு ஏற்பட்ட பேரழிவை சமாளிக்க முடியாது, ஆனால் நாட்டின் மலிவான உழைப்பு மற்றும் வளங்களை ஈவிரக்கமின்றி சுரண்டுவதன் பேரில் அவர்கள் சர்வதேச நிதி மூலதனத்தின் பக்கம் திரும்புவார்கள் என்றார்.

புதிய ஆட்சியுடன் நெகிழ்வாக இருக்கப் போகும் பிரிட்டனின் விருப்பத்தை இங்கிலாந்தின் வெளியுறவு செயலாளர் வெளிப்படுத்தியுள்ளதோடு, அமெரிக்க இராணுவ ஆக்கிரமிப்பின் போது, இந்திய பெரு வணிகர்கள் ஆப்கானிஸ்தானில் ஏற்கனவே முதலீடு செய்துள்ளனர் என பேச்சாளர் சுட்டிக் காட்டினார்,

அந்த முதலீடுகளைத் தக்க வைத்துக்கொள்வதற்கான ஏற்பாடுகளை செய்வதற்கு, இந்தியாவின் மோடி அரசாங்கம் இப்போது முயல்கின்றது. தலிபான் அமைப்பின் பாரம்பரிய கூட்டாளியான பாகிஸ்தான், அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு மேற்பார்வையாளராக செயற்பட்டு வருகிறது. அத்தோடு, புதிய ஆப்கானிஸ்தான் அரசுக்கும் அமெரிக்க ஏகாதிபத்திய நலன்களுக்கும் இடையில் ஒரு மத்தியஸ்தராக இருக்க வேண்டும் என்று பரிந்துரைக்கிறது.

இலங்கையின் இராஜபக்ஷ அரசாங்கம் தலிபான்களுக்கு மனித உரிமைகளைப் பாதுகாக்க அறிவுறுத்திய போதிலும், இப் பிராந்தியத்தில், வாஷிங்டனின் அடுத்த நகர்வுகள் எத்தகையதாக இருக்கும் என்ற பதட்டத்துடன் யோசிக்கின்றது என குணதாச குறிப்பிட்டார். பணத் தட்டுப்பாட்டில் இருக்கும் கொழும்பு அரசாங்கம், சீனாவுடனான உறவுகளை துண்டித்துக் கொள்ளுமாறு அமெரிக்காவின் அதிகரித்துவரும் அழுத்தங்களின் கீழ், கடன்களுக்காகவும் மற்றும் ஏனைய நிதி உதுவிகளுக்காகவும் பெய்ஜிங்கை நாடியுள்ளது.

இந்த கிரகத்தில் உள்ள மில்லியன் கணக்கான தொழிலாளர்களின் நனவில் இருந்து வந்த, ஏகாதிபத்தியத்தை வெல்ல முடியாதது என்ற கட்டுக்கதை, தற்போது தகர்ந்துவிட்டது என்று சுட்டிக் காட்டி குணதாச தனது உரையை முடிவுக்கு கொண்டு வந்தார்.

“எவ்வாறாயினும், தொழிலாளர் வர்க்கத்தின் அந்த நனவு அபிவிருத்தி செய்யப்பட வேண்டும் மற்றும் சகல ஏகாதிபத்திய யுத்தங்களையும் நிறுத்துவதற்காக சோசலிச வேலைத்திட்டத்தை அடிப்படையாக கொண்ட, ஒரு பூகோள போர் – எதிர்ப்பு இயக்கத்தை கட்டியெழுப்புவதை நோக்கி திருப்பப்பட வேண்டும்,” என்று கூறி அவர் உரையை முடித்தார்.

அவருடைய விரிவுரையின் பின்னர் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு குணதாச பதிலளித்தார். ஆப்கானிஸ்தானில் பெண்களின் உரிமைகளைப் பாதுகாக்க வாதிடும் அமைப்புகளைக் குறிப்பிட்டு, ஏகாதிபத்தியத்திடம் முறைப்பாடு செய்வதன் மூலம் இந்த உரிமைகளை வெல்ல முடியாது என்று விளக்கினார்.

'ஏகாதிபத்தியவாதிகள் ஏதாவதொரு விதத்தில் “மனிதாபிமானத்தில்” ஆர்வம் கொண்டிருந்தால், அவர்கள் ஆப்கானிஸ்தானில் இரண்டு தசாப்த கால யுத்தத்தை நடத்தி, ஆயிரக்கணக்கான குழந்தைகள் மற்றும் பெண்களின் வாழ்க்கையை அழித்திருப்பார்களா?' என அவர் கேள்வி எழுப்பினார். எந்தவொரு சமூகத்தின் உரிமைகளும், தொழிலாள வர்க்கத்தின் தலைமையிலான சோசலிச இயக்கத்தின் ஊடாக ஏகாதிபத்தியத்தை தோற்கடிப்பதற்கான போராட்டத்தின் மூலம் மட்டுமே பாதுகாக்கப்பட முடியும், என அவர் தெரிவித்தார்.

தலிபான்களின் அதிகாரம் மற்றும் மத தீவிரவாதம் பரவுவதில் அதன் தாக்கம் பற்றிய கேள்விக்கும் குணதாச பதிலளித்தார். அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்திய சக்திகள், மத தீவிரவாதத்தை ஊக்குவிப்பதிலும், நிதியுதவி செய்வதிலும் முக்கிய குற்றவாளிகள் மற்றும் அதை தங்கள் சொந்த அழிவுகரமான நலன்களுக்காக பயன்படுத்தினர், என அவர் விளக்கினார். பொதுமக்களை சர்வதேச சோசலிசத்துக்கான போராட்டத்துடன் ஒன்றிணைக்கவும், மத, இன மற்றும் ஏனைய பாகுபாட்டு வடிவங்களையும் முடிவுக்கு கொண்டுவருவதற்குமான ஒரேயொரு சமூக சக்தி தொழிலாளர் வர்க்கமே. என பேச்சாளர் வலியுறுத்தினார்.

Loading