அமெரிக்க ஊடகம் எவ்வாறு "வூஹான் ஆய்வக" பொய்யை "நம்பகமாக" அறிவித்தது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

கோவிட்-19 வூஹான் நுண்கிருமியியல் ஆய்வகத்திலிருந்து விடுவிக்கப்பட்டதாக முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அவரின் அரசியல் கூட்டாளிகள் பாதுகாத்த பொய்யான வாதத்தை அமெரிக்க ஊடகங்களும் கடந்த வாரம் தழுவிக் கொண்டன.

அமெரிக்க ஊடகங்கள் ஒரு வலதுசாரி சதிக் கோட்பாட்டை நியாயமானதாகவும் தர்க்கரீதியானதாகவும் தழுவும் நோக்கில், "வூஹான் ஆய்வக-கசிவு கோட்பாடு திடீரென எப்படி நம்பகமாக மாறியது" என்ற தலைப்பில் வாஷிங்டன் போஸ்ட் கிளென் கெஸ்லரின் (Glenn Kessler) "உண்மை சரிபார்ப்பு" கட்டுரை ஒன்றை மே 25 இல் பிரசுரித்தது.

கெஸ்லரும் போஸ்ட் உம், உண்மைகளைச் சர்ச்சைக்கிடமின்றி ஆராய்கிறோம் என்ற போர்வையில், வூஹான் ஆய்வக சதிக் கோட்பாட்டின் தோற்றுவாய் குறித்து நியூ யோர்க் டைம்ஸ், CNN மற்றும் பிற பத்திரிகைகளும் மிகப் பரந்தளவில் —படுமோசமாக— செய்திருந்த ஆராய்ச்சியிலிருந்து எடுத்து எழுத முற்படுகின்றனர். ஆறு மாதத்திற்கு முன்னர், இந்த கோட்பாடு ட்ரம்பின் முன்னாள் தேர்தல் பிரச்சார தலைமை செயலதிகாரியும் தலைமை மூலோபாயவாதியுமான ஸ்டீபன் கே. பானன், பானனுடன் தொடர்புடைய மைல்ஸ் குவோ (Miles Guo) மற்றும் ஹாங்காங்கை மையமாக கொண்ட அதிவலது பத்திரிகை Epoch Times ஆகியவை தலைமையில், ட்ரம்பின் அரசியல் கூட்டாளிகள் மற்றும் துணைவர்களால் உண்மைக்கான எந்தவித அடித்தளமும் இல்லாமல் இட்டுக்கட்டப்பட்டது என்பதை அவர்களின் எழுத்துக்கள் எடுத்துக்காட்டின.

வாஷிங்டன் போஸ்ட் கணக்கிலிருந்து வந்த செய்திகள், CNN மற்றும் டைம்ஸ், அத்துடன் உலக சோசலிச வலைத் தள செய்திகளை அடிப்படையாக வைத்து, முற்றிலும் கூறப்படாத அல்லது தீவிரமாக மாற்றிப் பொருள்விளங்கப்படுத்தப்பட்ட அபிவிருத்திகளைப் பின்வரும் கால அட்டவணை உள்ளடக்கி உள்ளது.

CNN வெளியிட்டுள்ள மேலேயுள்ள புகைப்படத்தில், வாங் டிங்காங் ட்ரம்ப் இன் வழக்கறிஞர் ரூடி கியுலியானியுடன் படம்பிடிக்கப்படுகிறார், பானன் பின்னணியில் காட்டப்பட்டுள்ளது. “Whistleblower” லி-மெங் யான் ஒரு கண்ணாடியில் பிரதிபலிக்கிறார். Credit: CNN [Photo: WSWS]

ஜனவரி 2020 மத்தியில் — கோவிட்-19 "சீன கம்யூனிஸ்ட் கட்சியால் வேண்டுமென்றே வெளியிடப்பட்டது" என்ற கூற்றை, மாண்டரின் மொழியில் ஆபாசமாக பேசி நிகழ்ச்சி வழங்கும் அமெரிக்காவை மையமாக கொண்ட சீன "அதிருப்தியாளர்" வாங் டிங்காங் (Wang DingGang) தொடங்கி வைத்ததாக தெரிகிறது என்று நியூ யோர்க் டைம்ஸ் குறிப்பிட்டது. ஸ்டீவ் பானன், மைல்ஸ் குவோ மற்றும் முன்னாள் நியூ யோர்க் நகரசபை தலைவர் ரூடி கியூலானி ஆகியோருடன் வாங் டிங்காங் தொடர்புடையவர்.

ஜனவரி 25, 2020 — ட்ரம்பின் 2016 தேர்தல் பிரச்சார குழு தலைமை செயலதிகாரி ஸ்டீவ் பானனின் வியாபார பங்குதாரரான மைல்ஸ் குவோ நடத்தும் செய்தி வலைத்தளம் G News, "இரகசிய உயிரியல் ஆயுதத் திட்டங்களுடன் தொடர்புடைய 'வூஹான் ஆய்வகமே’ கொரோனா வைரஸின் உண்மையான மூல ஆதாரத்தளம்” என்று வலியுறுத்தி ஒரு கட்டுரை வெளியிட்டது. எப்படி பார்த்தாலும், இந்த பதிவு தான் இந்த கூற்றை முதன்முதலில் திட்டவட்டமான வலியுறுத்திய ஆங்கிலத்தில் கிடைக்கும் முதல் பதிவாக உள்ளது.

ஜனவரி 25, 2020 — முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பைச் சுற்றியுள்ள பாசிச இயக்கத்திற்கு ஆதாரமாக மாற இருந்த, War Room Pandemic என்ற வலையொலி உரையாடல் நிகழ்ச்சியை ஸ்டீவ் பானன் தொடங்குகிறார். (டாக்டர் அந்தோணி பௌஸியின் தலை துண்டிக்கப்பட வேண்டும் என்றும், அவர் தலை வெள்ளை மாளிகைக்கு வெளியே ஒரு கூர்முனையில் சொருகி வைக்கப்பட வேண்டும் என்றும் அந்நிகழ்ச்சி ஒன்றில் அவர் கூறியதும், நவம்பரில் ட்வீட்டர் அவர் பயனர் கணக்கை தற்காலிகமாக முடக்கியது.)

ஜனவரி 25 இல் பதிவு செய்யப்பட்ட முதல் வலையொலி உரையாடல் நிகழ்ச்சியில், “வூஹான் ஆய்வக" கோட்பாடு குறித்து பேச பானன் வாஷிங்டன் டைம்ஸ் கட்டுரையாளர் Bill Gertz ஐ அழைக்கிறார். பானன் அவரிடம் கேட்கிறார், "பில், நேற்று நீங்கள் எழுதிய கட்டுரையைக் குறித்து சுருக்கமாக தொகுத்துரைக்க முடியுமா." அந்த கட்டுரை பிரசுரிக்கப்படுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னரே Gertz இன் கட்டுரை குறித்து பானன் அறிந்திருந்தார் என்பதை இது குறிப்பாக சுட்டிக்காட்டுகிறது.

ஜனவரி 26, 2020—பானனுக்கு விவரித்த அறிக்கையை Bill Gertz வாஷிங்டன் போஸ்டில் பிரசுரித்ததுடன், அதில் பிரத்யேகமாக இஸ்ரேலிய உளவுத்துறை அதிகாரியான இஸ்ரேலிய லெப்டினென்ட் கர்னல் டேனி ஷோஹாம் ஐ மேற்கோளிட்டார். "கொரோனா வைரஸ் சீனாவின் உயிரியல் போர்திட்டத்துடன் தொடர்புடைய ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டிருக்கலாம்" என்று அறிவிப்பதில் அது G news வலைத்தளத்தை விட குறைவாகவே திட்டவட்டமாக உள்ளது.

இந்தக் கோட்பாடு எவ்வாறு "நம்பகமானதாக" மாறியது என்பது பற்றிய வாஷிங்டன் போஸ்ட் அறிக்கையில், Gertz இன் கட்டுரை குறிப்பிடப்பட்டுள்ளது என்றாலும், பானனின் வலையொலி உரையாடல் நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டதோ அல்லது அந்த கட்டுரையின் உள்ளடக்கம் பானனுக்கு தெளிவாக முன்கூட்டியே தெரிந்திருந்தது குறித்தோ எதுவும் குறிப்பிடப்படவில்லை.

ஜனவரி 31, 2020 — புதிய மதவாத இயக்கமான Falun Gong உடன் தொடர்புடைய அதிவலது Epoch Times பத்திரிகை, "அமெரிக்காவின் பதிலடியை நாசமாக்க சீனா திட்டமிட்டதா?" என்ற தலைப்பில் ஒரு கட்டுரையைப் பிரசுரிக்கிறது. "அமெரிக்காவைச் சுத்திகரிக்கும்" அவர்களின் இலக்கை அடைய ஆளும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி உயிரியல் ஆயுதங்களை அதன் மிக முக்கிய ஆயுதங்களாக பரிசீலிக்கிறது என்று அந்த கட்டுரை அறிவிக்கிறது. "2019-nCoV நுண்ணுயிரி 2012 இல் சவூதி மருத்துவர்களால் கண்டுபிடிக்கப்பட்ட NCoV இன் ஆயுதமயமாக்கப்பட்ட மறுவடிவமாக இருக்க அதிக சாத்தியமுள்ளது," என்று அந்த கட்டுரை முடிவு செய்கிறது.

ஏப்ரல் 14, 2020 — “வெளியுறவுத்துறை இரகசிய ஆவணங்கள் வௌவால் கொரோனா வைரஸ்களை ஆய்வு செய்து வரும் வூஹான் ஆய்வகத்தின் பாதுகாப்பு பிரச்சினைகளை எச்சரித்தன,” என்று தலைப்பிட்டு ஜோஸ் ரோகினின் ஒரு கட்டுரையை வாஷிங்டன் போஸ்ட் பிரசுரித்தது. ட்ரம்ப் நிர்வாகத்தின் பெயர் வெளியிட விரும்பாத ஒரு அதிகாரி, “இப்போது, அது ஆய்வகத்திலிருந்து கசிகிறது என்ற தரப்பிலிருக்கும் பேரேடு முக்கிய புள்ளிகளைக் கொண்டுள்ளது, மறுதரப்பில் ஏறக்குறைய எதுவும் இல்லை,” என்று கூறியதாக அக்கட்டுரை அவரை மேற்கோளிட்டது.

ரோகினின் கட்டுரை அறிவிக்கிறது: "அந்த பெருந்தொற்று வூஹானின் ஓர் ஆய்வக விபத்தின் விளைவாக இருக்கலாம் என்பதை ஆதரிக்க அந்த உள்அலுவலக ஆவணங்கள் கூடுதல் ஆதாரத்தை வழங்குவதாக நிர்வாகத்தின் ஒரு மூத்த அதிகாரி என்னிடம் தெரிவித்தார்,” என்றார்.

மூன்று மாதங்களுக்குப் பின்னர், அந்த உள்அலுவலக இராஜாங்க ஆவணங்கள் வெளியிடப்பட்டன. ஆய்வகத்தில் நடத்தக்கூடிய ஆராய்ச்சியின் அளவை பணியாளர்கள் பற்றாக்குறை மட்டுப்படுத்தியதாக குறிப்பிட்ட அந்த உள்-அலுவலக இராஜாங்க ஆவணங்கள், பாதுகாப்பு குறைபாடுகளைச் சுட்டிக்காட்டவில்லை. அந்த உள்அலுவலக இராஜாங்க ஆவணங்களின் வெளியீடு குறித்து செய்தி அறிவிக்கையில் போஸ்ட் குறிப்பிட்டது: "ஆய்வகத்தில் நடந்த விபத்து தான் வைரஸை ஏற்படுத்தியது என்ற கூற்றை மொத்த இராஜாங்க ஆவணங்களும் வலுப்படுத்தவில்லை," என்றது.

குறிப்பாக, போஸ்ட் இன் சொந்த அறிக்கையே ரோகினின் விளக்கத்திற்கு முற்றிலுமாக குழிபறிக்கிறது என்ற உண்மையை கெஸ்லர் சுட்டிக்காட்டவே இல்லை.

பெப்ரவரி 21, 2021 இல், முன்னாள் துணை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மத்தேயு பொட்டிங்கர் CBS நிகழ்ச்சியான "Face the Nation" நிகழ்ச்சி பேட்டியில் பேசுகையில், ரோகினின் கட்டுரையில் குறிப்பிடப்பட்ட அநாமதேய ஆதார நபரின் உரை குறிப்புகளை ஏறக்குறைய அப்படியே துல்லியமாக பயன்படுத்தினார்.

ஜூலை 3, 2020 — வெள்ளை மாளிகையின் வர்த்தக ஆலோசகர் பீட்டர் நவார்ரோ MSNBC இக்குக் கூறுகையில், "சீன கம்யூனிஸ்ட் கட்சி ... வைரசை உருவாக்கியது" என்றதுடன், அந்நோய் ஓர் "ஆயுதமயமாக்கப்பட்ட வைரஸ்" என்று அழைக்கிறது.

ஜூன் 20, 2020—ஆக்லஹாமாவின் துல்சா உரை ஒன்றில், இதில் தான் ட்ரம்ப் (“பரிசோதனைகளை மெதுவாக்குங்கள் என்று நான் தான் மக்களிடம் கூறினேன்") என்று கோவிட்-19 நோயாளிகளை கண்டறிவதற்கான அமெரிக்க முயற்சிகளைக் குறைப்பதை ஒப்புக் கொண்டார், அதில், ட்ரம்ப் SARS-COV-2 மீண்டும் மீண்டும் "சீன வைரஸ்" என்றும் "குங் ஃப்ளூ" என்றும் குறிப்பிடுகிறார்.

செப்டம்பர் 14, 2020 — ஹாங்காங் பல்கலைக்கழகத்தின் முன்னாள் முனைவர் பட்ட ஆராய்ச்சியாளரான Li-Meng Yan, கோவிட்-19 மனிதரால் உருவாக்கப்பட்ட வைரஸ் என்று குற்றஞ்சாட்டி முன்-மறுமதிப்பீடு செய்திராத ஆவணம் ஒன்றை பிரசுரிக்கிறார். அது மைல்ஸ் குவோ மற்றும் ஸ்டீவ் பானனுடன் தொடர்புடைய Rule of Law Foundation அமைப்பின் உதவி பெற்றிருப்பதாக அந்த ஆவணத்தின் தலைப்பு பக்கம் குறிப்பிடுகிறது. “SARS-CoV-2 இன் உயிரியியல் தன்மைகள் விலங்குகளிலிருந்து மனிதர்களுக்குப் பரவும் (zoonotic) இயற்கையாக தோன்றிய தோன்றிய கிருமிகளின் தன்மைகளுடன் ஒத்துப் போகவில்லை,” என்று அந்த ஆவணம் குறிப்பிடுகிறது. அந்த ஆவணம் உடனடியாக விஞ்ஞானிகளால் உதறிவிடப்பட்டது.

அக்டோபர் 3, 2020CNN தகவல்படி, பானன் அவர் வலையொலி உரையாடல் நிகழ்ச்சியில் அறிவிக்கிறார், “நான் மைல்ஸ் குவோவுக்கு நன்றி கூற விரும்புகிறேன் ஏனென்றால் மைல்ஸ் குவோ மற்றும் அந்த இரகசிய ஆவண வெளியீட்டு இயக்கமும் தான், மைல்ஸ் குவோ மற்றும் Rule of Law Society அமைப்பு, Rule of Law Foundation அமைப்பும் தான், ஜனவரி ஆரம்பத்தில் அந்த பெருந்தொற்றுக்கு "சீனக் கம்யூனிஸ்ட் கட்சியே" பொறுப்பு என்ற கூற்றின் மீது உண்மையிலேயே திரும்பவும் நாம் ஒருமுகப்படுவதைத் தொடங்கி வைத்தவர்கள்.

நவம்பர் 20, 2020 — “ஸ்டீவ் பானனும் ஒரு சீன பில்லியனரும் எவ்வாறு ஒரு வலதுசாரி கொரோனா வைரஸ் ஊடக பரபரப்பை உருவாக்கினார்கள்" என்று தலைப்பிட்டு, நியூ யோர்க் டைம்ஸ் படுமோசமாக ஆனால் மிகவும் கவனமாக ஆராயப்பட்ட ஒரு கட்டுரையில் பனான் மற்றும் குவோ வென்குய்யின் (Guo Wengui) உருவாக்கமே லீ-மென்ங் யான் (Li-Meng Yan) என்பதை அம்பலப்படுத்தியது. (மைல்ஸ் குவோவின் பல புனைப்பெயர்களில் ஒன்று தான் இந்த குவோ வென்குய், அவர் Guo Wen Gui, Guo Haoyun மற்றும் Miles Kwok என்றும் அழைக்கப்படுகிறார்.) இதற்காக நீண்டதொரு மேற்கோள் காட்டுவது மதிப்புடையதாக இருக்கும்:

ஜனாதிபதி ட்ரம்பின் உயர்மட்ட ஆலோசகர்கள் மற்றும் பழமைவாத பண்டிதர்கள் அப்பெண்மணியை ஒரு கதாநாயகியாக பாராட்டும் அளவுக்கு … டாக்டர் யான், ஒரே இரவில், பரபரப்பான ஒரு வலதுசாரி ஊடக பிரபலமானார் …

அவரின் பரிணாமம், தவறான தகவல்களைப் பரப்பும் இரண்டு தனித்தனியான ஆனால் அதிகரித்தளவில் கூட்டணி குழுக்கள், அதாவது சீன புலம்பெயர்ந்தோரின் ஒரு சிறிய ஆனால் செயலூக்கமான பகுதிக்கும் அமெரிக்காவில் மிகவும் செல்வாக்கான அதிவலது, இவ்விரண்டுக்கும் இடையிலான ஒத்துழைப்பின் விளைவாக இருந்தது.

இந்த வைரஸ் மனிதர்களுக்குப் பரவ பரிணாமம் எடுப்பதற்கு முன்னதாக, கிட்டத்தட்ட நிச்சயமாக ஒரு விலங்கில் தோன்றியது, பெரும்பாலும் ஒரு வௌவாலில் இருந்து தோன்றியிருக்கலாம் என்பதை ஏராளமான ஆதாரங்கள் காட்டுகின்றன. அமெரிக்க உளவுத்துறை அமைப்புகள் ஓர் ஆய்வக கசிவுக்கான சாத்தியக்கூறுகளை நிராகரிக்கவில்லை என்றாலும், அந்த கோட்பாட்டை ஆதரிக்க இதுவரை எந்த ஆதாரத்தையும் அவர்கள் கண்டுபிடிக்கவில்லை.

டாக்டர் யானின் போக்கை, ஒரு தப்பியோடி வந்த சீன பில்லியனரான குவோ வென்குய்யும் மற்றும் திரு. ட்ரம்பின் முன்னாள் ஆலோசகரான ஸ்டீபன் கே பானனும் மிகக் கவனமாக வடிவமைத்தனர்.

அவர்கள் டாக்டர் யான் ஐ அமெரிக்க விமானத்தில் ஏற்றி, அவருக்கு தங்க இடம் கொடுத்து, ஊடகங்களில் தென்படுவதற்கு அவருக்குப் பயிற்சி கொடுத்து, Fox நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கிய டக்கர் கார்ல்சன் மற்றும் லூ டாப்ஸ் போன்ற பிரபலமான பழமைவாத தொலைக்காட்சி தொகுப்பாளர்களுடன் அவர் பேட்டிகள் கொடுக்க உதவினார்கள். அந்த பெண்மணி வழங்கியதையே விமர்சனமின்றி ஆதாரமாக தழுவி, அந்த வைரஸ் மரபணுரீதியாக வடிவமைக்கப்பட்டது என்ற ஆழ்ந்த நம்பிக்கையைக் கண்கூடாகவே அவர்கள் அவருக்குள் வளர்த்தெடுத்தார்கள்.

டாக்டர் யான் போல் அல்லாமல் திரு. பானன், சீன அரசாங்கம் "வேண்டுமென்றே இதைச் செய்தது" என்று அவர் நம்பவில்லை என்றார். ஆனால் ஆபத்தான ஆய்வக ஆராய்ச்சியின் ஒரு தற்செயலான கசிவு பற்றிய கோட்பாட்டுக்கு அழுத்தமளித்த அவர், அந்த புதிய கொரோனா வைரஸின் தோற்றுவாய்கள் குறித்த ஒரு விவாதத்தை உருவாக்க நோக்கம் கொண்டிருந்தார்.

டாக்டர் யான் அமெரிக்காவுக்கு வந்ததும், திரு. பானன், திரு. குவோ மற்றும் அவர்களின் கூட்டாளிகள் உடனடியாக அவரை அமெரிக்க மக்களிடம் விற்பனை செய்யத்தக்க இரகசிய ஆவண வெளியீட்டாளராக தொகுத்தளித்தனர்.

அவர்கள் அப்பெண்மணியை நியூ யோர்க் நகருக்கு வெளியே ஒரு "பாதுகாப்பான வீட்டில்" தங்க வைத்ததுடன், அவருக்காக வழக்கறிஞர்களை நியமித்ததாகவும் திரு. பானன் தெரிவித்தார். ஆங்கிலம் அவரது முதல் மொழி இல்லை என்பதால், அவர்கள் அவருக்காக ஓர் ஊடக பயிற்சியாளரைக் கண்டனர். அவர் கூறும் சாட்சியங்களைத் தொகுத்து பல ஆவணங்களைச் சமர்பிக்குமாறு திரு. பானன் அவரைக் கேட்டுக் கொண்டதாக டாக்டர் யான் பின்னர் கூறினார்.

"பானனுடன் உங்களை இணைத்துக் கொள்ளாதீர்கள், குவோ வென்குய்யுடன் உங்களை இணைத்துக் கொள்ளாதீர்கள்," என்று திரு. குவோ திரு. யான்னுக்குக் கூறியதை அவரின் சொந்த நிகழ்ச்சியிலேயே நினைவுகூர்ந்தார். "நீங்கள் எங்களைக் குறிப்பிட்டதும், அந்த அமெரிக்க தீவிர இடதுசாரிகள் தாக்குவார்கள், உங்களிடம் ஓர் அரசியல் திட்டநிரல் இருப்பதாகச் சொல்வார்கள்."

அமெரிக்க ஊடகங்களைப் பொறுத்த வரை, வூஹான் ஆய்வகக் கோட்பாட்டை "நம்பகமானது" என்று அறிவிக்கும் செயல்முறையானது, கோவிட்-19 சதிக் கோட்பாடு ஆரம்பத்திலிருந்து இறுதி வரையில் ஒரு கட்டுக்கதை என்பதை தெளிவுபடுத்தும் பரந்தளவிலான ஆதாரங்களைக் கணக்கில் இல்லாது செய்வதற்கான திட்டமிட்ட முயற்சியாக இருக்கிறது.

இதனுடன் பகிரங்கமான தணிக்கையும் சேர்ந்து கொள்கிறது. வூஹான் ஆய்வக சதிக் கோட்பாட்டுக்கு அமெரிக்கா எந்த ஆதாரமும் வழங்கவில்லை என்பதை வாஷிங்டன் போஸ்ட் ஒப்புக் கொண்டது என்பதைத் தெளிவுபடுத்தி உலக சோசலிச வலைத்தளம் ஒரு கட்டுரை வெளியிட்ட போது, நமது அறிக்கை இரண்டு மாதங்களுக்கு பேஸ்புக்கில் தணிக்கை செய்யப்பட்டது, அதை பகிர்ந்து கொள்ள முயன்ற ஒவ்வொரு பயனர் கணக்கும் ஒரு எச்சரிக்கை அறிக்கையை பெற்றது அல்லது தற்காலிகமாக முடக்கப்பட்டது. பேஸ்புக் பின்னர் அதுவொரு தவறு என்று மன்னிப்பு கோரிய போதும், இந்த "தவறு" எப்படி நடந்தது என்பதைக் குறித்து அது எந்த விளக்கமும் தரவில்லை.

CNN மற்றும் டைம்ஸ் செய்திகளில் பானன் மற்றும் குவோவின் மையப் பாத்திரம் குறித்து குறிப்பிட்டதற்காக இந்த எழுத்தாளரின் கணக்கு ஏன் மறுமதிப்பீடு செய்யப்பட்டது என்று இவர் ட்விட்டரின் கிளென் கெஸ்லரை அணுகியுள்ளார். கெஸ்லெரிடமிருந்து பதில் இல்லை.

"சமூக நோயெதிர்ப்பு" என்று ட்ரம்ப் எதை குறிப்பிட்டாரோ அதன் காரணமாக அந்நோய் தானாகவே போய்விடும் என்ற அவரது வாக்குறுதிகள் மற்றும் 2020 தேர்தல் "களவாடப்பட்டது" என்ற பிந்தைய அவரின் பாசிசவாத கூற்றுக்கள் என இவ்விரு கருத்துக்களில் உள்ளார்ந்து முரண்பாடுகள் இருந்தாலும், இந்த தொற்றுநோய்க்குச் சீனா மீது பழிசுமத்தும் முயற்சி கோவிட்-19 ஒரு "புரளி" என்ற குற்றச்சாட்டிலிருந்து பிரிக்க முடியாததாகும்.

வாஷிங்டன் போஸ்டும் ஏனைய பிரதான செய்தி நிறுவனங்களும், கோவிட்-19 வூஹான் நுண்கிருமியியல் நிறுவனத்திலிருந்து விடுவிக்கப்பட்டது என்ற வாதத்தைக் கொண்டு வெகுஜன ஊடகங்களில் தாக்குதல் நடத்தவும், கண்கூடான இனவாத அருவருப்பை மறைக்கவும், QAnon, Pizzagate, மற்றும் "யூத விண்வெளி லேசர்கற்றைகள்" (Jewish space lasers) போன்ற ட்ரம்ப் ஆதரவாளர்கள் ஊக்குவிக்கும் ஏனைய சதிக் கோட்பாடுகளை விட ஏதோவிதத்தில் அடிப்படையில் இந்த கோட்பாட்டை வித்தியாசமானதாக மற்றும் இன்னும் நம்பத்தகுந்ததாக முன்வைக்கவும் முயற்சித்து வருகின்றன.

இதில், CNN, டைம்ஸ் மற்றும் அமெரிக்க பெருநிறுவன செய்தி ஊடகங்களின் மொத்த கவச அங்கிகளும் சீன-விரோத கூச்சலில் இணைந்து அவர்களுக்கு ஒத்துழைக்கின்றன. CNN மற்றும் டைம்ஸைப் பொறுத்த வரையில், வூஹான் சதிக் கோட்பாட்டின் அதிவலது தோற்றுவாய்கள் பல மாதங்களுக்கு முன்னரே அம்பலமாகிவிட்டது என்ற உண்மையும் கூட, இன்று அந்தக் கோட்பாட்டைத் தழுவுவதில் இருந்து அவற்றைத் தடுத்துவிடவில்லை.

அரசியல் நோக்கம் தெளிவாக உள்ளது, அதுவாவது: ட்ரம்ப் நிர்வாகத்தில் இருந்து பைடென் நிர்வாகமாக ஆன பின்னரும் இம்மியளவும் மாறாத, அமெரிக்க ஏகாதிபத்திய வெளியுறவுக் கொள்கையின் ஒரு முக்கிய அம்சத்தை ஆதரிப்பதாகும். இதற்காக தான் அதிகரித்தளவில் விஷமத்தனமான சீன-விரோத பிரச்சாரம், சீனாவுடனான முற்றுமுதலான மோதலுக்கு அமெரிக்க சமூகத்தை அணித்திரட்டுவதற்கான ஓர் இன்றியமையா கூறுபாடாக பயன்படுத்தப்படுகிறது, இது இறுதியில் தர்க்கரீதியில் அணுஆயுத பிரயோகத்தைக் கொண்ட ஒரு போருக்கு வழிவகுக்கிறது.

Loading