முன்னோக்கு

அமெரிக்காவில் வர்க்க போராட்டத்தின் வளர்ச்சி தொழிலாளர்களைத் தொழிற்சங்கங்களுக்கு எதிராக நிறுத்துகிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

அமெரிக்காவில் வர்க்கப் போராட்டத்தின் குறிப்பிடத்தக்க வளர்ச்சியின் பல வெளிப்பாடுகள் உள்ளன, அவை தொழிலாள வர்க்க முன்னோக்கின் அடிப்படை கேள்விகளை எழுப்புகின்றன.

கொலம்பியா பல்கலைக்கழகத்தில், “கோவிட்-19 சிக்கன நடவடிக்கைகளுக்கு" எதிராக போராடி வரும் 3,000 பட்டதாரி மாணவர்கள், கண்ணியமான சம்பளம், சுகாதார மற்றும் குழந்தை கவனிப்பு சலுகைகளும் கோருகின்றனர். மாசசூசெட்ஸின் வொர்செஸ்டரில், 700 க்கும் மேற்பட்ட செவிலியர்கள் கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு மத்தியில் பாதுகாப்பற்ற பணியாளர் விகிதங்களுக்கு எதிராக நான்கு வாரங்களுக்கும் அதிகமாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். நடந்துவரும் இந்த வேலைநிறுத்தங்களுடன் இந்த வாரம் தொழில்துறை தொழிலாளர்களின் முக்கிய பிரிவுகளும் இணைந்தன, வடகிழக்கு அமெரிக்காவில் எஃகு உருக்காலை ATI நிறுவனத்தின் 1,300 தொழிலாளர்கள் மற்றும் அலபாமாவின் நிலக்கரி நிறுவனமான Warrior Met இன் 1,100 சுரங்க தொழிலாளர்களும் இதில் உள்ளடங்குவார்கள்.

[Photo: WSWS]

இந்த போராட்டங்கள் சர்வதேச அளவில் வளர்ந்து வரும் தொழிலாளர் இயக்கத்தின் ஒரு உட்பாகமாகும், பெல்ஜியத்தில் ஊதிய உயர்வு வரம்பு நிர்ணயத்திற்கு எதிரான ஒரு நாள் பொது வேலைநிறுத்தம், ஜேர்மனியில் 2,000 அமசன் தொழிலாளர்களின் நான்கு நாள் வேலைநிறுத்தம், பொஸ்னியா மற்றும் ஹெர்சகோவினாவில் வாரா சம்பளங்கள் மீது 2,000 சுரங்க தொழிலாளர்களின் வேலைநிறுத்தம், பிரான்சில் தொற்றுநோய் அதிகரித்து வரும் வேளையில் பள்ளிகளை மீண்டும் திறப்பதற்கு எதிராக ஆரம்பப் பள்ளி ஆசிரியர்களின் ஒரு திட்டமிட்ட வெளிநடப்பு ஆகியவை இதில் உள்ளடங்கும்.

இது தொற்றுநோய்க்கு ஆளும் வர்க்கம் காட்டிய விடையிறுப்பின் விளைவாக உலகெங்கிலும் அதிகரித்துள்ள சமூக கோபங்களின் மகத்தான வளர்ச்சியினது ஆரம்ப வெளிப்பாடு மட்டுமே ஆகும். பொது மருத்துவத்தைப் பணக்காரர்களின் இலாப நலன்களுக்கு அடிபணியச் செய்தமை, அமெரிக்காவில் மட்டும் 560,000 க்கும் அதிகமான உயிரிழப்புகள் உள்ளடங்கலாக, உலகளவில் 2.8 மில்லியனுக்கும் அதிகமான உயிரிழப்புகளுக்கு வழிவகுத்துள்ளது. அதே நேரத்தில், இந்த தொற்றுநோய் வரலாற்று ரீதியாக முன்னோடியில்லாத வகையில் பணக்காரர்களுக்குப் பிணையெடுப்பு வழங்க பயன்படுத்தப்பட்டது, இதைத் தொடர்ந்து அந்த பணத்தைச் செலுத்துமாறு தொழிலாளர்களை நிர்பந்திக்க வர்க்க உறவுகளின் பாரியளவிலான ஒரு மறுசீரமைப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தொழிலாள வர்க்கத்தின் ஒவ்வொரு போராட்டமும், அமெரிக்காவில் AFL-CIO தொழிற்சங்கம் உள்ளடங்கலாக, பெருநிறுவனவாத தொழிற்சங்கங்களின் பிற்போக்குத்தனமான பாத்திரத்தை நேரடியாக முன்கொண்டு வருகின்றன, அவை வர்க்கப் போராட்டத்தை அடக்கவும், ஒரு வேலைநிறுத்தத்தைத் தவிர்க்க முடியாத போது, அதை தனிமைப்படுத்தி தோற்கடிக்கவும் சேவையாற்றுகின்றன. தொழிலாளர்களைப் பிரதிநிதித்துவம் செய்வதாக பொய்யாக கூறிக்கொள்ளும் இந்த "தொழிற்சங்கங்கள்" தொழிலாளர்கள் சார்பாக தலையிடுவதில்லை, மாறாக தொழிலாளர்களுக்கு எதிராக நிர்வாகத்திற்குச் சார்பாக தலையீடு செய்கின்றன.

கொலம்பியா பல்கலைக்கழகத்தில், பட்டதாரி மாணவர்களை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த வாகன தொழிலாளர்கள் சங்கம் (UAW) அதே உள்ளாட்சியில் தெற்கே வெறுமனே ஒரு சில மைல்கள் தூரத்தில் உள்ள நியூ யோர்க் பல்கலைக்கழகத்தின் (NYU) பட்டதாரி மாணவர்களின் வேலைநிறுத்தத்தைத் தனிமைப்படுத்த செயல்பட்டு வருகிறது. NYU இல் ஒரு வேலைநிறுத்த வாக்கெடுப்புக்கு முன்னதாக அந்த வேலைநிறுத்தத்தைத் தடுக்க திட்டமிட்டிருந்ததை, கடந்த மாதம், உள்ளூர் UAW தொழிற்சங்க தலைவரே வெளிப்படுத்தினார். UAW தொழிற்சங்கம் பட்டதாரி மாணவர்களை வாகனத் தொழிலாளர்களின் பின்னால் அணிதிரட்டுவதற்கு எதுவும் செய்வதில்லை, அந்த வேலைநிறுத்தம் பற்றி அவர்கள் தெரிந்து கொள்வதையும் கூட தடுக்க அது எல்லாவற்றையும் செய்கிறது.

இதற்கிடையே, 790 மில்லியன் டாலர் வேலைநிறுத்த நிதியை UAW கட்டுப்பாட்டில் கொண்டுள்ளது என்ற உண்மைக்கு மத்தியில், அது அற்ப தொகையான வாரத்திற்கு வெறும் 275 டாலர் வேலைநிறுத்த தொகையோடு மறியலின் போது அந்த பட்டதாரி மாணவர்களைப் பட்டினியில் கிடத்தி வருகிறது.

123,000 உறுப்பினர்களைக் கொண்ட மிகப்பெரிய மாநில அமைப்பான ஒருங்கிணைந்த தேசிய செவிலியர் அமைப்பு, மாசசூசெட்ஸ் செவிலியர் சங்கம் (MNA) எந்தவொரு வேலைநிறுத்த தொகையும் வழங்காமல் 700 வொர்செஸ்டர் செவிலியர்களைத் தனிமைப்படுத்தி வருகிறது. மாறாக, MNA சங்கம் செவிலியர்களைத் தொண்டு நிதி கோருமாறு கட்டாயப்படுத்துகிறது: செவிலியர்களின் வாழ்க்கைச் செலவுகளுக்காக பொதுமக்களிடமிருந்து நன்கொடைகளைப் பெற, அது சமூக நிதிவசூல் சேவை கணக்கான வென்மோ கணக்கைச் (Venmo account) நடத்தி வருகிறது.

ATI மற்றும் Warrior Met நிறுவனத் தொழிலாளர்களைப் பொறுத்த வரை, ஒருங்கிணைந்த எஃகுத்துறை தொழிலாளர்கள் சங்கமும் (United Steelworkers) மற்றும் ஒருங்கிணைந்த சுரங்க தொழிலாளர்கள் சங்கமும் (United Mine Workers) நிர்வாகம் “நல்லெண்ணத்தில் பேரம்" பேசி வருகிறது என்ற சாக்குபோக்கின் கீழ் சாத்தியமானளவுக்கு விரைவாக வேலைநிறுத்தத்தை தொழிற்சங்கமே கலைக்க அனுமதிக்கவும், அதிகரித்து வரும் உறுதியான கோரிக்கைகளைத் தவிர்க்கவும் "நியாயமற்ற தொழிலாளர் நடைமுறை" வேலைநிறுத்த தந்திரோபாயத்தைப் பயன்படுத்தி வருகின்றன.

கடந்தாண்டு, AFL-CIO ஐ செயல்படுத்தும் மற்றும் கட்டுப்படுத்தும் நிர்வாகிகள் ஆளும் உயரடுக்கின் மனிதப்படுகொலை கொள்கையை அமல்படுத்துவதில் முற்றிலும் இன்றியமையா பங்கு வகித்துள்ளனர். ஆசிரியர் சங்கங்கள் — அமெரிக்க ஆசிரியர்கள் கூட்டமைப்பு மற்றும் தேசிய கல்வியாளர்கள் கூட்டமைப்பு ஆகியவை — ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களின் பெரும் எதிர்ப்பை எதிர்த்து பள்ளிகளை மீண்டும் திறக்க நிர்பந்திப்பதில் கருவியாக இருந்துள்ளன. உள்ளூர் ஆசிரியர் தொழிற்சங்கங்கள், சிகாகோ மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸில் போல, முன்பிருந்த நிலைமையைத் தொடர்வதைத் தவிர வேறுவழியில்லை என்பதன் மீது ஆசிரியர்களை வாக்களிக்க நிர்பந்தித்ததன் மூலமாகவோ, அல்லது பிலடெல்பியா மற்றும் டெட்ராய்டில் போல, மொத்தத்தில் அவர்களை வாக்களிக்கவே அனுமதிக்காமல் செய்ததன் மூலமாகவோ, பள்ளிகளை மீண்டும் திறக்கும் உடன்படிக்கைகளைத் திணித்தன.

உணவு மற்றும் வணிகத் தொழிலாளர்களின் ஒருங்கிணைந்த சங்கம் மற்றும் அதன் துணை அமைப்பான சில்லறை விற்பனை, மொத்த விற்பனை மற்றும் பெருஅங்காடிகளின் சங்கம் ஆகியவை, அமெரிக்காவில் 50,000 க்கும் அதிகமானவர்கள் நோய்தொற்றில் பாதிக்கப்பட்டு, குறைந்தபட்சம் 286 பேர் உயிரிழந்த நிலையிலும் கூட, இறைச்சி பதனிடும் தொழிலாளர்களை வேலையில் ஈடுபடுத்தின. வாகனத் தொழில்துறையில், UAW தொழிற்சங்கம் தொழிலாளர்களை வேலையில் வைத்திருப்பது மட்டுமல்லாமல், வாரத்திற்கு 50, 60 மற்றும் 80 மணி நேரம் கூட வேலை செய்யுமாறு கட்டாயப்படுத்துகிறது, அதேவேளையில் நோய்தொற்றுகள் மற்றும் உயிரிழப்புகளின் அளவு பற்றிய எல்லா தகவல்களையும் மறைத்து வருகிறது.

"தொழிற்சங்கம்" என்ற வார்த்தை, நிறுவனங்களின் சுரண்டலுக்கு எதிராக தொழிலாளர்களைப் பாதுகாக்கும் ஓர் அமைப்பின் சித்திரத்தையோ அல்லது குறைந்தபட்சம் ஏதோவிதத்தில் தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரத்தைப் பாதுகாப்பதற்கான ஆற்றல் மற்றும் விருப்பத்துடன் தொடர்புபட்ட ஓர் அமைப்பின் சித்திரத்தையோ மனக்கண்முன் கொண்டு வரும். ஆனால் இதற்கும் தற்போதைய தொழிற்சங்கங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை. அவை தொழிலாளர்களை ஆட்சி செய்யும் ஆட்சிக்குழுக்களாக செயல்படுவதுடன், தொழிலாளர்களின் தலைவிதிக்கு நேரெதிர்விகிதத்தில் வருமானம் ஈட்டும் செல்வ செழிப்பான நிர்வாகிகளால் கட்டுப்படுத்தப்படுகின்றன.

AFL-CIO சங்கத்தின் ஒவ்வொரு மிகப்பெரிய தேசிய அமைப்பிற்குள்ளும், அங்கே தேசியளவிலும் மற்றும் உள்ளூர் மட்டங்களிலும் நேரடியான அர்த்தத்தில் தொழிற்சங்கங்களில் இணைந்துள்ள தொழிலாளர்களை விட பல மடங்கு அதிகமாக ஆண்டுக்கு 100,000 டாலருக்கும் அதிகமாக சம்பாதிக்கின்ற, டஜன்கணக்கான, சில இடங்களில் நூற்றுக் கணக்கான, அதிகாரத்துவவாதிகள் உள்ளனர். உயர்மட்ட நிர்வாகிகள் பெறும் வருமானங்கள், அவர்களை அமெரிக்காவில் அதிகபட்ச வருவாய் ஈட்டும் முதல் 5 சதவீதத்தினரில் அல்லது முதல் 1 சதவீதத்தினரில் கூட கொண்டு வந்து நிறுத்துகின்றன.

அமசனில் அங்கீகாரம் பெறுவதற்காக பிரச்சாரம் செய்து வரும், ஒப்பீட்டளவில் சிறிய RWDSU சங்கத்தின் தலைவர் ஸ்டூவர்ட் அப்பெல்பம் கடந்தாண்டு 344,464 டாலர் சம்பாதித்தார், அதன் பொருளாளர் ஜாக் வூர்ம் 324,022 டாலர் சம்பாதித்தார். RWDSU இன் தேசிய அலுவலகத்தில் 29 பணியாளர்கள் உள்ளனர், இவர்கள் கடந்தாண்டு 100,000 டாலருக்கும் அதிகமாக "சம்பாதித்தனர்", மேலும் அந்த தொழிற்சங்கம் அதன் தேசிய அலுவலகத்திற்கு மட்டும் 6 மில்லியன் டாலருக்கும் அதிகமான தொகையை சம்பளமாக செலவிட்டது.

AFT சங்கத்தின் ராண்டி வெய்ன்கார்டன், ஜூன் 2019 இல் முடிந்த நிதியாண்டிற்கான மொத்த ஈட்டுத்தொகையாக 564,236 டாலர் ஈட்டியிருந்ததாக AFT இன் IRS தாக்கல் குறிப்பிடுகிறது. அந்த தேசிய அலுவலகம் 253 மில்லியன் டாலருக்கும் அதிகமான தொகையை வசூலித்திருந்தது, சம்பளங்களுக்காக 43.75 மில்லியன் டாலர் உள்ளடங்கலாக 238 மில்லியன் டாலரைச் செலவிட்டிருந்தது, ஆனால் கடந்தாண்டு வேலைநிறுத்த இழப்பீட்டுத் தொகைக்காக ஒரு டாலரும் செலவிடவில்லை. AFT சங்கத்தின் கடந்த அறிக்கை காலத்தின் போது, அதன் தேசிய அலுவலகத்தின் மொத்த 234 பேரும் 100,000 டாலருக்கும் அதிகமாக வருமானம் ஈட்டியிருந்தார்கள், அதில் 28 பேர் 200,000 டாலருக்கும் அதிகமாக சம்பாதித்தனர்.

அதன் சம்பள பட்டியலில் 200 க்கும் அதிகமான அதிகாரிகளைக் கொண்டுள்ள Teamsters தொழிற்சங்கம் ஆண்டுக்கு 100,000 டாலருக்கும் அதிகமாக வருமானம் ஈட்டுகிறது, அதன் தலைவர் ஜேம்ஸ் ஹோஃப்பா (387,000 டாலர்) உள்ளடங்கலாக பத்து பேர் 200,000 டாலருக்கும் அதிகமாகவே சம்பாதிக்கிறார்கள்.

தொழிற்சங்கங்களது சொந்த காட்டிக்கொடுப்புகளின் விளைவாக அவற்றின் சந்தா அடித்தளம் தொடர்ந்து சுருங்கி வருவதால், நிர்வாகிகள் அவர்களின் வருமானத்திற்கு நிதி ஒதுக்கவும் மற்றும் குறைநிரப்பவும் வேலைநிறுத்த நிதிகள் மீதும், ஓய்வூதிய நிதிகள் மற்றும் பெருநிறுவன பங்குகளைக் கொள்முதல் செய்வதிலும் கூட கட்டுப்பாட்டை வைத்திருக்க முயல்கின்றனர். இது, நேரடியாக, பெருநிறுவன அமெரிக்காவின் இலாபத்தன்மை மற்றும் பங்குச்சந்தையின் செயல்திறனுக்காக அந்த அமைப்புகள் மற்றும் அவற்றைக் கட்டுப்பாட்டில் கொண்டுள்ள நிர்வாகிகளின் நிதிய அந்தஸ்துடன் பிணைந்துள்ளன. தொழிலாள வர்க்கத்தின் ஓர் இயக்கம் அவர்களின் சொந்த நிதி நலன்களையே அச்சுறுத்தும் என்பதால் அது குறித்து அவர்கள் பெரிதும் அஞ்சுகிறார்கள்.

தொற்றுநோய்களின் போது வோல் ஸ்ட்ரீட் நடத்திய கொள்ளை நடவடிக்கையைத் தொழிற்சங்க அதிகாரத்துவமும் பகிர்ந்து கொள்கிறது. சான்றாக, UAW இன் சமீபத்திய மத்திய நிதிநிலை அறிக்கை தாக்கல்களின்படி, அதன் சொத்துக்கள் கடந்தாண்டு 31 மில்லியன் டாலராக அதிகரித்தன, அந்த தொழிற்சங்கம் ஆண்டுக்கு 150,000 டாலருக்கும் அதிகமாக சம்பாதிக்கும் நூற்றுக் கணக்கான அதன் உயர்மட்ட அதிகாரத்துவவாதிகளுக்கான உல்லாச தங்கும் வசதிகள் மற்றும் சூதாட்ட பயணங்களுக்காக அது பத்தாயிரக் கணக்கான டாலர்களைச் செலவிட்டுள்ளது. UAW தொழிற்சங்கம், தொழிலாளர்களின் சந்தா பணத்தைத் திருடும் ஊழல் கொள்ளையர்களால் நடத்தப்படும் ஓர் அமைப்பாக மற்றும் பேரம்பேசும் ஒப்பந்தங்களைத் திணிப்பதற்கு பிரதி உபகாரமாக நிறுவனங்களிடம் இருந்து கையூட்டு பெறும் அமைப்பாக சமீபத்திய ஆண்டுகளில் அம்பலப்பட்டுள்ளது.

தொழிற்சங்கங்கள், முதலாளித்துவ ஆட்சிக்கலையின் முக்கிய கருவியாக இன்னும் இன்னும் கூடுதலாக மேலெழுந்து வருகின்றன. அமசன் தொழிற்சங்கமயப்படுத்துவதில் பைடென் மற்றும் ஜனநாயகக் கட்சியினரின் முன்னோடியில்லாத தலையீடு, மற்றும் வலதுசாரி குடியரசுக் கட்சியாளர் மார்கோ ரூபியாவின் தலையீடும் கூட, வர்க்கப் போராட்டத்தின் வளர்ச்சி குறித்து ஆளும் வட்டாரத்தில் நிலவும் தீவிர அச்சத்தையும், மற்றும் தொழிலாளர்களை AFL-CIO சங்கம் மற்றும் மிகவும் சிக்கலான அமெரிக்க தொழிற்சங்க சட்டத்தின் காவலில் தொழிலாளர்களை நிறுத்துவதன் மூலமாக இதை மழுங்கடிக்க முடியும் என்ற அவர்களின் கணக்கீடுகளையும் பிரதிபலிக்கிறது.

அமெரிக்காவிற்கும் அதன் போட்டியாளர்களான சீனா மற்றும் ரஷ்யாவுக்கும் இடையே வளர்ந்து வரும் வணிக மற்றும் இராணுவ மோதல் நிலைமைகளின் கீழ், தொழிற்சங்கங்கள் தொழிலாள வர்க்கத்தை முதலாளித்துவ அரசுடனுடனும் அதன் போர் தயாரிப்புகளுடனும் கட்டிப்போடும் ஒரு கருவியாக பார்க்கப்படுகின்றன.

இந்தாண்டு, ஒரு திட்டமிட்ட ஆத்திரமூட்டலில் ரீகனால் வேலையிலிருந்து நீக்கப்பட்ட PATCO விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்களை AFL-CIO சங்கம் காட்டிக்கொடுத்ததன் நாற்பதாம் நினைவாண்டு ஆகும். PATCO தொழிலாளர்கள் மீதான தாக்குதலுக்கு முன்னதாக அவர்களைப் பாதுகாப்பதற்கான தொழிலாள வர்க்கத்தின் எந்தவொரு பரந்த அணித்திரட்டலையும் எதிர்க்க AFL-CIO உடன் ஓர் உடன்பாடு இருந்தது. இதைத் தொடர்ந்து தொடர்ச்சியாக பல போராட்டங்கள் இருந்தன, அவை தொழிற்சங்கங்களின் ஒத்துழைப்புடன் முறையாக தனிமைப்படுத்தப்பட்டு தோற்கடிக்கப்பட்டன. இது, தொழிற்சங்கங்களை முற்றிலுமாக பெருநிறுவன நிர்வாக கட்டமைப்புக்குள் ஒருங்கிணைப்பதில், வெறுமனே அமெரிக்காவில் மட்டுமல்ல உலகம் முழுவதற்கும் ஒரு முக்கிய திருப்புமுனையாக இருந்தது.

தொழிலாள வர்க்கத்தின் போராட்டங்களை விரிவாக்கவும் ஒருங்கிணைக்கவும், முதலாளித்துவ-சார்பு தொழிற்சங்கங்களிலிருந்து முற்றிலும் சுயாதீனமாக, சாமானிய தொழிலாளர்களின் தொழிற்சாலை மற்றும் வேலையிட குழுக்களை உருவாக்குவது அவசியமாகும். தொழிலாளர்கள் மற்றும் சிறு வணிகங்களுக்கு முழு இழப்பீடுடன் சேர்ந்து, கொரோனா வைரஸ் தொற்றுநோயைத் தடுப்பதற்கான அவசர நடவடிக்கைகள், பாதுகாப்பின்றி பள்ளிகள் மற்றும் பணியிடங்களை மீண்டும் திறப்பதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் உள்ளடங்கலாக, தொழிலாளர்கள் அவர்களின் சொந்த கோரிக்கைகளை இந்த குழுக்களின் வடிவில் முன்னெடுக்க முடியும்.

உலக சோசலிச வலைத் தளமும் சோசலிச சமத்துவக் கட்சியும் வர்க்க போராட்டத்தின் வளர்ச்சியை ஒரு சோசலிச அரசியல் முன்னோக்கு மற்றும் வேலைத்திட்டத்துடன் இணைத்து, தொழிலாளர்களின் இந்த சுயாதீனமான அமைப்புகளை அமைப்பதில் உதவவும் மற்றும் அவற்றை ஊக்குவிக்கவும் எங்கள் சக்திக்கு உட்பட்டு அனைத்தும் செய்யும். இது போன்ற குழுக்களை நிறுவ ஆர்வமுள்ள தொழிலாளர்கள் இன்றே எங்களைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

Loading