1871 பாரிஸ் கம்யூனின் அனுபவங்கள்: மார்க்சின் பகுப்பாய்வு

1917

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

ஏப்ரல் 3 சனிக்கிழமையன்று, பாரிஸ் கம்யூனின் 150 வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் WSWS ஒரு சர்வதேச இணையவழி கூட்டத்தை நடத்துகிறது. மேலதிக விபரங்களுக்கு இங்கே பதிவு செய்யுங்கள். இந்த நிகழ்வுக்கு முன்னதாக, பாரிஸ் கம்யூனின் முக்கியத்துவத்தையும் படிப்பினைகளையும் ஆராய்ந்த 19 மற்றும் 20 ஆம் நூற்றாண்டுகளின் மார்க்சிஸ்டுகளின் உன்னதமான படைப்புகளை தொடர்ச்சியாக பிரசுரித்து வருகின்றோம்.

இந்த கட்டுரை 1917 ஆம் ஆண்டு கோடையில் லெனின் எழுதிய அரசும் புரட்சியும் என்ற நூலின் 3ஆவது அத்தியாயம் ஆகும். அந்த நேரத்தில், போல்ஷிவிக் கட்சி மீதான ரஷ்யாவின் இடைக்கால அரசாங்கத்தின் வன்முறையான அடக்குமுறைக்கு மத்தியில் லெனின் முதலில் பெட்ரோகிராட்டிற்கு வெளியேயும் பின்னர் ஃபின்லாந்திலும் தலைமறைவாக இருந்தார். 1917 அக்டோபர் புரட்சிக்காக லெனினின் போல்ஷிவிக் கட்சி மற்றும் ரஷ்ய தொழிலாள வர்க்கத்தின் மிகவும் முன்னேறிய பிரிவுகளைத் தயாரிப்பதில் இந்த நூல் ஒரு பிரதான அங்கமாக இருந்தது. அரசும் புரட்சியும் என்ற நூலின் முழுமையான மீள்ஆய்வுக்கு,இந்த இணைப்பை பார்க்கவும் ஜூலை நாட்களில் இருந்து கோர்னிலோவ் ஆட்சிக்கவிழ்ப்பு சதி வரையில்: லெனினின் அரசும் புரட்சியும். lecture by Barry Grey.

1. கம்யூனார்டுக்களின் முயற்சியினை வீரம்மிக்கதாக செய்தது எது?

1870ம் ஆண்டு இலையுதிர் காலத்தில், கம்யூனுக்கு சில மாதங்களுக்கு முன்னர், அரசாங்கத்தை வீழ்த்துவதற்கான எந்த முயற்சியும் அசட்டுத் துணிச்சலே ஆகும் என பாரிஸ் தொழிலாளர்களை மார்க்ஸ் எச்சரித்தது தெரிந்ததே. ஆயினும் 1871 மார்ச்சில் தொழிலாளர்கள் தீர்மானகரமான போரில் இறங்கும்படியான நிர்ப்பந்தம் ஏற்பட்டு, அவர்களும் இதை ஏற்றுக் கொண்டுவிட்டபோது, எழுச்சி எதார்த்த உண்மையாகிவிட்டபோது, அது பாதகமாக சென்றுமுடியக்கூடிய அறிகுறிகள் தென்பட்டுங்கூட மார்க்ஸ் அளவிலா ஆர்வத்தோடு பாட்டாளி வர்க்கப் புரட்சியை வரவேற்றார். மார்க்சிசத்தை விட்டு ஓடி அவப்பேர் பெற்ற ரஷ்ய ஓடுகாலி பிளெக்ஹானோவ் 1905 நவம்பரில் தொழிலாளர், விவசாயிகளின் போராட்டத்தை ஆதரித்து எழுதிவிட்டு, ஆனால் 1905 டிசம்பருக்குப் பின்னர் தாராளவாதியின் பாணியில் “அவர்கள் ஆயுதங்களை எடுத்திருக்கக் கூடாது” என்று ஓலமிட்டு “காலத்துக்கு முன்னதாகவே தொடக்கப்பட்ட” இயக்கமென்று மார்க்ஸ் கண்டனம் கூறிக் கொண்டிருக்கவில்லை.

"விண்ணையே உலுக்கியவர்கள்" என கம்யூனார்டுக்களை மார்க்ஸ் போற்றினார். ஆனால் அவர் கம்யூனார்டுக்களின் வீரத்தை ஆர்வத்தோடு பாராட்டியதுடன் நின்று விடவில்லை. வெகுஜனப் புரட்சிகர இயக்கம் அதன் குறிக்கோளை அடையவில்லை என்றாலுங்கூட, அது அளவு கடந்த முக்கியத்துவம் வாய்ந்த வரலாற்று அனுபவமாகுமென, உலகப் பாட்டாளி வர்க்கப் புரட்சியின் குறிப்பிட்டதொரு முன்னேற்றமாகுமென, நூற்றுக் கணக்கான வேலைத்திட்டங்களையும் விவாதங்களையும் காட்டிலும் முக்கியமான நடைமுறைச் செயலாகுமெனக் கருதினார். மார்க்ஸ் இந்த அனுபவத்தைப் பகுத்தாராயவும், அதிலிருந்து தந்தரோபாய படிப்பினைகளை பெறவும், அந்த அனுபவத்தின் வெளிச்சத்தில் அவருடைய தத்துவத்தை மறுபரிசீலனை செய்யவும் முயன்றார்.

கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கைக்கு மார்க்ஸ் தேவையெனக் கருதிய ஒரேயொரு “திருத்தம்”, பாரிஸ் கம்யூனார்டுக்களின் புரட்சிகர அனுபவத்தின் அடிப்படையிலே அதனை இணைத்துக்கொள்வதாகும்.

கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையின் புதிய ஜேர்மன் பதிப்புக்கு அதன் இரு ஆசிரியர்களும் கையொப்பமிட்டு எழுதிய கடைசி முன்னுரை 1872 ஜூன் 24ம் தேதியிடப்பட்டதாகும். இந்த முன்னுரையில் அதன் ஆசிரியர்களான கார்ல் மார்க்சும் பிரெடெரிக் ஏங்கெல்சும் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையின் வேலைத்திட்டம் “சில விடயங்களில் காலங் கடந்ததாகி விட்டது” என்று குறிப்பிட்டு விட்டு, மேலும் கூறுவதாவது:

…கம்யூனானது முக்கியமாய் ஒரு விவரத்தை, அதாவது “ஏற்கெனவே உள்ள அரசு எந்திரத்தை தொழிலாள வர்க்கம் அப்படியே கைப்பற்றித் தனது சொந்த நோக்கங்களுக்காகப் பயன்படுத்திக் கொண்டுவிட முடியாது” என்பதை நிரூபித்துக் காட்டிற்று…”

இந்த வாசகத்தில் மேற்கோள் காட்டப்படும் சொற்களை ஆசிரியர்கள், மார்க்ஸ் எழுதிய பிரான்சில் உள்நாட்டுப் போர் என்ற நூலிலிருந்து அப்படியே எடுத்துக் கையாளுகின்றனர்.

இவ்வாறாக, பாரிஸ் கம்யூனின் முதன்மையானதும் அடிப்படையானதுமான ஒரு படிப்பினை, கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையில் ஒரு முக்கிய திருத்தமாய் அறிமுகப்படுத்தும்படி அவ்வளவு பிரம்மாண்டமான முக்கியத்துவமுடையதாக மார்க்சும் ஏங்கெல்சும் கருதினர்.

இந்த முக்கிய திருத்தம் சந்தர்ப்பவாதிகளால் திரித்துப் புரட்டப்பட்டிருப்பது மிகவும் குறிப்பிடத்தக்கது. கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையின் வாசகர்களில் பத்தில் ஒன்பது பேருக்கு, ஏன் நூற்றில் தொண்ணூற்று ஒன்பது பேருக்குங்கூட, இதன் பொருள் அநேகமாய் தெரிந்திருக்காது எனலாம். இந்த திரித்தலை பின்னர் திரித்தல்களுக்கென்றே ஒதுக்கப்பட்டுள்ள ஒரு தனி அத்தியாயத்தில் நாம் பரிசீலிப்போம். மேலே தரப்பட்ட மார்க்சின் புகழ் மிக்க வாக்கியத்துக்கு தற்போது சகஜமாய் அளிக்கப்படும் கொச்சையான “பொருள்விளக்கத்தை” மட்டும் இங்கு குறிப்பிடுவதுடன் நிறுத்திக் கொள்கிறோம். மார்க்ஸ் இங்கே, ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு மாறாய், மெதுவான வளர்ச்சியடையும் கருத்தினையும், அது போன்றவற்றையும் வலியுறுத்துகிறார் என்பதாக “பொருள்விளக்கம்” அளிக்கப்படுகிறது.

ஆனால் இதற்கு நேரெதிரானதே உண்மை. “ஏற்கெனவே உள்ள அரசு எந்திரத்தை தொழிலாள வர்க்கம் கைப்பற்றுவதோடு மட்டும் நிற்காமல், அதை அழித்தொழித்திடவும் நொருக்கவும் வேண்டுமென்பதே மார்க்ஸ் கூறும் கருத்து.

1871 ஏப்ரல் 12ல், அதாவது கம்யூன் நடைபெற்ற அதே காலத்தில், குகல்மானுக்கு மார்க்ஸ் எழுதினார்:

எனது பதினெட்டாவது புரூமேர் படைப்பின் கடைசி அத்தியாயத்தைப் பார்த்தால், பிரெஞ்சு புரட்சியின் அடுத்த முயற்சி, இனி முந்தையதைப் போல, அதிகாரத்துவ-இராணுவ எந்திரத்தை ஒரு கையிலிருந்து மற்றொன்றுக்கு மாற்றுவதாக இருக்காது, மாறாக அதை நொருக்கிடுவதாகவே இருக்கும். [அழுத்தம் மார்க்சினுடையது - மூலத்தில் இருப்பது Zerbrechen]. இது அக்கண்டத்தில் ஒவ்வொரு நிஜமான மக்கள் புரட்சிக்கும் இன்றியமையாதது என நான் கூறுவதைக் காண்பீர்கள். வீரமிக்க நமது கட்சித் தோழர்கள் பாரிசில் இதைத்தான் செய்ய முயன்று வருகிறார்கள். (Neue Zeit, இதழ் 20, இதழ் 1, 1901-02, பக்கம் 709.)

(குகல்மானுக்கு மார்க்ஸ் எழுதிய கடிதங்கள் இரண்டுக்கு குறையாத பதிப்புகளில் ரஷ்ய மொழியில் வெளிவந்திருக்கின்றன; இவற்றில் ஒன்று நான் பதிப்பித்து முன்னுரை எழுதியதாகும்.)

கார்ல் மார்க்ஸ் (1818-1883)

“அதிகாரத்துவ இராணுவ அமைப்புமுறையை நொருக்கிடுவது” என்ற இச்சொற்கள் புரட்சியின்போது பாட்டாளி வர்க்கம் அரசு சம்பந்தமாய் செய்ய வேண்டிய பணிகள் குறித்து மார்க்சிசம் கூறும் பிரதான படிப்பினையை சுருக்கமாய் எடுத்துரைக்கின்றன. இந்தப் படிப்பினையைத்தான், மார்க்சிசத்துக்கு தற்போது ஆதிக்கத்திலுள்ள காவுட்ஸ்கிவாதம் அளிக்கும் “பொருள்விளக்கத்தில்” அடியோடு புறக்கணிப்பதோடு, அப்பட்டமாக திரித்துப் புரட்டியுமுள்ளது!

மார்க்ஸ் குறிப்பிடும் பதினெட்டாவது புரூமேர் படைப்பில் இது பற்றிய முழு வாசகத்தையும் ஏற்கெனவே நாம் மேலே மேற்கோளாய் கொடுத்திருக்கிறோம்.

மேற்கூறிய மார்க்சின் வாதத்தில் குறிப்பாய் இரு விவரங்கள் கவனத்திற்கு எடுப்பது ஆர்வத்திற்குரியதாகும். முதலாவதாக, அவர் தமது முடிவைக் கண்டத்திற்கு மட்டும் பொருந்துவதாய் மட்டுப்படுத்திக் கொள்கிறார். 1871இல் இது புரிந்து கொள்ளக் கூடியதே. அப்பொழுது பிரிட்டன் ஒரு இராணுவவாதக் கும்பலும், குறிப்பிட்டளவுக்கு அதிகாரத்துவமும் இல்லாத ஒரு தூய்மையான முதலாளித்துவ நாட்டுக்குரிய எடுத்துக்காட்டாகவே இருந்து வந்தது. ஆகவே பிரிட்டனை மார்க்ஸ் விலக்கிக் கொண்டார். “ஏற்கெனவே உள்ள அரசு எந்திரத்தை” அழித்தொழிக்க வேண்டுமென்ற முன் நிபந்தனை இல்லாமலே அன்று பிரிட்டனில் புரட்சி, மக்கள் புரட்சியாக இருந்தாலும் கூட, நடைபெறுவது சாத்தியமற்றதாகத் தோன்றியது.

இன்று, 1917இல், முதலாவது ஏகாதிபத்திய போர் நடைபெறும் காலத்தில், மார்க்ஸ் முன்பு மட்டுப்படுத்தியது பொருந்தாததாகிவிட்டது. பிரிட்டன், அமெரிக்கா ஆகிய இரு நாடுகளும், இராணுவவாதக் கும்பலும் அதிகாரத்துவமும் இல்லாதவை என்ற பொருளில் அனைத்து உலகிலும் ஆங்கிலோ-சாக்சன் “சுதந்திரத்தக்கு” மிகப் பெரிய கடைசிப் பிரதிநிதிகளாய் விளங்கிய இவ்விரு நாடுகளும், யாவற்றையும் தமக்குக் கீழ்ப்படுத்த, யாவற்றையும் நசுக்கும் அதிகாரத்துவ-இராணுவ அமைப்புகளாலான இரத்தக்கறை படிந்த படுமோசமான அனைத்து ஐரோப்பிய சகதியில் மூழ்கிவிட்டன. இன்று பிரிட்டனிலும் அமெரிக்காவிலும் கூட, “ஏற்கெனவே உள்ள அரசு எந்திரத்தை” (1914-17 ஆம் ஆண்டுகளில் இது இந்நாடுகளில் “ஐரோப்பிய”, பொதுவான ஏகாதிபத்திய பூர்த்தியடைந்த நிலையை எய்திவிட்டது) நொருக்குவதும், அழித்தொழிப்பதும் “உண்மையான மக்கள் புரட்சி ஒவ்வொன்றுக்கும் முன் நிபந்தனையாகும்”.

இரண்டாவதாக, அதிகாரத்துவ-இராணுவ அரசு எந்திரத்தை அழித்தொழிப்பது “உண்மையான மக்கள் புரட்சி ஒவ்வொன்றுக்கும் முன் நிபந்தனையாகும்”” என்று மார்க்ஸ் கூறும் ஆழ்ந்த கருத்தில் தனிக் கவனம் செலுத்த வேண்டும். “மக்கள்” புரட்சி என்னும் கருத்து மார்க்சிடமிருந்து வருவது விந்தையாய் தோன்றுகிறது. ஆகவே தாம் மார்க்சிசவாதிகளாய் கருதப்பட வேண்டுமென விரும்பும் ஸ்துரூவ் (Struve) ஐ பின்பற்றுவோராகிய ரஷ்ய பிளெக்ஹானோவ்வாதிகளும் மென்ஷிவிக்குகளும் இந்த வார்த்தைத்தொடர் மார்க்ஸ் “கைதவறி” எழுதியதெனக் கூறுமளவுக்குச் சென்றாலும் செல்லலாம். இவர்கள், முதலாளித்துவப் புரட்சி, பாட்டாளி வர்க்கப் புரட்சி ஆகிய இரண்டு மட்டுந்தான் ஒன்றுக்கொன்று எதிராய் இருக்க முடியும் என்னும் அளவுக்கு மார்க்சிசத்தை கேவலமான மிதவாத முறையில் திரித்து விடுகிறார்கள். மேலும் இந்த எதிர்முரணான நிலையைக்கூட கிஞ்சித்தும் உயிரற்ற முறையில்தான் விளக்குகிறார்கள்.

இருபதாம் நூற்றாண்டின் புரட்சிகளை உதாரணங்களாய் எடுத்துக் கொண்டால், போர்த்துகீசிய, துருக்கிப் புரட்சிகள் இரண்டும் முதலாளித்துவப் புரட்சிகளே என்பதை நாம் ஒத்துக் கொண்டாக வேண்டும். ஆனால் இவை இரண்டில் எதுவும் “மக்கள்” புரட்சியல்ல; ஏனெனில் எதிலும் மக்களில் பெருந் திரளானோர், மிகப் பெருவாரியானோர் குறிப்பிடத்தக்க அளவுக்குத் தமது சொந்தப் பொருளாதார, அரசியல் கோரிக்கைகளை முன்வைத்து செயலூக்கத்துடன் சுயாதீனமாக முன்வரவில்லை. இதற்கு மாறாக 1905-07 ஆம் ஆண்டுகளின் ரஷ்ய முதலாளித்துவப் புரட்சி, போர்த்துகீசிய, துருக்கிப் புரட்சிகளுக்கு சில நேரங்களில் கிடைத்தது போன்ற “பிரமாதமான” வெற்றிகள் பெறவில்லை என்றாலுங்கூட, இது “மெய்யான மக்கள்” புரட்சி என்பதில் ஐயமில்லை; ஏனெனில் பெருந்திரளான மக்கள், அவர்களில் பெரும்பான்மையினர், ஒடுக்குமுறையாலும் சுரண்டலாலும் நசுக்கப்பட்ட மிகவும் “அடிநிலை” சமுதாயத் தொகுதியோர் சுயாதீனமாக கிளர்ந்தெழுந்து தமது சொந்தக் கோரிக்கைகளின் முத்திரையை, அதாவது ஒழிக்கப்பட்டு வந்த பழைய சமுதாயத்துக்குப் பதிலாய் ஒரு புதிய சமுதாயத்தை தமது சொந்த வழியில் கட்டியமைப்பதற்கான தமது முயற்சிகளின் முத்திரையை இப்புரட்சியின் முழுப்பாதையிலும் பதித்தனர்.

ஐரோப்பாவில் 1871ல் கண்டத்தில் எந்தவொரு நாட்டிலும் பாட்டாளி வர்க்கம் மக்களில் பெரும்பான்மையாய் இருக்கவில்லை. பெரும்பான்மையோரை மெய்யாகவே தன் போக்கிலே இழுத்துச் செல்லும் “மக்கள்” புரட்சியானது, பாட்டாளி வர்க்கம், விவசாயிகள் ஆகிய இரு பகுதியோரையும் தன்னுள் கொண்டதாய் இருந்தால்தான் இவ்வாறு “மக்கள்” புரட்சியாய் இருந்திருக்க முடியும். இவ்விரு வர்க்கங்களையும் அதிகாரத்துவ-இராணுவ அரசு எந்திரம் ஒடுக்கியும் நசுக்கியும் சுரண்டியும் வருகிறது என்பதால் இரண்டும் ஒன்றிணைக்கப்படுகின்றன. இந்தப் பொறியமைவை நொருக்குவது, இதை அழித்தொழிப்பது மெய்யாகவே “மக்களுக்கு”, அவர்களில் பெரும்பான்மையோருக்கு, தொழிலாளர்களுக்கும் பெரும் பகுதி விவசாயிகளுக்கும் நலன் பயக்கிறது என்பதுதான், ஏழை விவசாயிகளுக்கும் பாட்டாளிகளுக்கும் இடையலான சுதந்திரமான கூட்டணிக்கு “முன் நிபந்தனை” ஆகின்றது. இது போன்ற கூட்டணி இல்லாதவரை ஜனநாயகம் நிலையற்றதாகவே இருப்பதுடன் மற்றும் சோசலிச மாற்றம் ஏற்படுவது சாத்தியமல்ல.

நன்கு அறியப்பட்டபடி, பாரிஸ் கம்யூன் அத்தகைய கூட்டணியை நோக்கி மெய்யாகவே சென்றுகொண்டிருந்தது என்பது பிரசித்தமானது. ஆனால் பல உள்நாட்டு, வெளிநாட்டுக் காரணங்களால் அது தனது குறிக்கோளை வந்தடைய முடியாமல் போய்விட்டது.

ஆகவே மார்க்ஸ் “உண்மையான மக்கள் புரட்சி” குறித்துப் பேசுகையில் குட்டி முதலாளித்துவப் பகுதியோரின் தனி இயல்புகளைச் சிறிதும் உதாசீனம் செய்யாமல் (இவர்களைப் பற்றி அவர் நிறையவும் அடிக்கடியும் பேசினார்) ஐரோப்பாவில் 1871ல் கண்டத்து நாடுகள் மிகப் பெருவாரியானவற்றில் வர்க்கங்களுடைய பலத்தின் ஒப்புநிலையை துல்லியமாய் கணக்கில் எடுத்துக் கொண்டார். மறுபுறத்தில் அவர் அரசு எந்திரத்தை “நொருக்குவது” தொழிலாளர்கள், விவசாயிகள் ஆகிய இருசாராரின் நலன்களுக்கும் அவசியமென்றும், இவர்களை இது ஒன்றுபடுத்துகிறதென்றும், “ஒட்டுண்ணியை” அகற்றிவிட்டு அதனிடத்தில் புதிய ஒன்றை அமைத்திடும் பொதுவான பணியை இது இந்த இருசாரார் முன்னும் வைக்கிறதென்றும் கூறினார்.

எதனால் இதனை பிரதியீடு செய்வது?

2. தகர்க்கப்படும் அரசு எந்திரத்தை எதனால் பிரதியீடுசெய்வது?

1847இல் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையில் மார்க்ஸ் இந்தக் கேள்விக்கு அளித்த பதில் முற்றிலும் அருவமானதாகவே இருந்தது. இன்னும் சரியாக கூறுவதெனில், அந்தப் பதில், செய்ய வேண்டிய பணிகளை சுட்டிக்காட்டியதே தவிர இவற்றைச் செய்து முடிப்பதற்கான வழிகளை சொல்லவில்லை. இந்த அமைப்புமுறைக்கு பதிலாய் “பாட்டாளி வர்க்கம் ஆளும் வர்க்கமாய் ஒழுங்கமைய” வேண்டும் மற்றும் “ஜனநாயகத்துக்கான போரில் வெற்றி பெற” வேண்டும் என்பதே கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையில் பதில் தரப்படுகின்றது.

மார்க்ஸ் கற்பனைகளில் ஈடுபடவில்லை. பாட்டாளி வர்க்கம் ஆளும் வர்க்கமாக ஒழுங்கமைவது எந்த பிரத்தியேக வடிவங்களில் நடந்தேறும், இந்த ஒழுங்கமைப்பு “ஜனநாயகத்துக்கான போரில்” முழு நிறைவான, முடிவான “வெற்றி பெறுவதுடன்” இணைக்கப்படுவதற்குரிய திட்டவட்டமான முறை என்ன என்ற கேள்விக்கு வெகுஜன இயக்கத்தின் அனுபவம் பதிலளிக்குமென்று அவர் எதிர்பார்த்தார்.

கம்யூனுடைய அனுபவம் சொற்பமாகவே இருந்ததென்றாலும், மார்க்ஸ் அந்த அனுபவத்தை பிரான்சில் உள்நாட்டுப் போர் என்ற நூலில் மிகவும் உன்னிப்பாய் பகுத்தாய்ந்தார். இந்நூலின் மிக முக்கிய வாசகங்களை மேற்கோளாய் தருகிறோம்.

“நிரந்தரப் படை, போலீஸ், அதிகாரத்துவம், மத குருமார் அமைப்பு, நீதிமன்றம் ஆகிய அனைத்துவிதமான செயலுறுப்புக்களை கொண்ட மையப்படுத்தப்பட்ட அரசு அதிகாரம்” மத்திய காலத்தில் உருவாகி, பத்தொன்பதாம் நூற்றாண்டில் அபிவிருத்தியடைந்தது. மூலதனத்துக்கும் உழைப்புக்கும் இடையேயான வர்க்கப் பகைமைகள் வளர்ச்சியுற்றதை தொடர்ந்து, “அரசு அதிகாரமானது தொழிலாள வர்க்கத்தை அடக்குவதற்கான பகிரங்கமான சக்தியின் தன்மையை, வர்க்க ஆட்சிக்குரிய ஒரு பொறியமைவின் தன்மையை மேலும் மேலும் பெற்றது. வர்க்கப் போராட்டத்தின் முன்னேற்றத்தைக் குறிக்கும் ஒவ்வொரு புரட்சியையும் அடுத்து, அரசு அதிகாரத்தின் அப்பட்டமான பலவந்த தன்மை மேலும் மேலும் கண்கூடாய் புலப்படுகிறது.” 1848-49 ஆம் ஆண்டுகளின் புரட்சிக்குப் பின்னர் அரசு அதிகாரம் “…உழைப்புக்கு எதிரான மூலதனத்தின் தேசிய போர்க் கருவி” ஆகிவிட்டது. இரண்டாம் முடியரசு இதை உறுதியாக்கியது.

“முடியரசுக்கு நேரடியான எதிர்மாறானதே கம்யூன் ஆகும்”. இது “வர்க்க ஆதிக்கத்தின் முடியாட்சி வடிவத்தை மட்டுமின்றி, வர்க்க ஆட்சியையே அகற்றிடுவதற்கான ஒரு குடியரசுக்கு உரிய ஒரு “விசேட வடிவமே” கம்யூன்…”

பாட்டாளி வர்க்க, சோசலிசக் குடியரசுக்கு உரிய இந்த “விசேட” வடிவம் என்ன? அது உருவாக்க தொடங்கிய அரசு எது?

…நிரந்தரப் படைகளை அகற்றிவிட்டு அதற்குப் பதிலாய் ஆயுதமேந்திய மக்களை தோற்றுவித்ததே கம்யூனுடைய முதலாவது ஆணையாகும்…

இப்பொழுது இந்தக் கோரிக்கை, தன்னை சோசலிஸ்ட் என்பதாய் கூறிக் கொள்ளும் ஒவ்வொரு கட்சியின் வேலைத் திட்டத்திலும் இருப்பதைக் காண்கிறோம். ஆனால் இந்தக் கட்சிகளுடைய வேலைத் திட்டங்களின் உண்மையான மதிப்பு என்பது, எங்களுடைய சோசலிச புரட்சியாளர்களும் மென்ஷிவிக்குகளும் நடந்து கொண்ட முறையிலிருந்து நன்றாகத் தெரிகிறது. பிப்ரவரி 27 புரட்சியை அடுத்து இவர்கள் இந்தக் கோரிக்கையை நிறைவேற்றத் தீர்மானமாய் மறுத்து விட்டனர்!

…பொதுவான வாக்குரிமையின் அடிப்படையில் பாரிஸ் நகரின் பல்வேறு தொகுதிகளிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்ட நகராட்சி மன்ற உறுப்பினர்களைக் கொண்டு கம்யூன் நிறுவப்பட்டது. இந்த உறுப்பினர்கள் பொறுப்புக்கூறவேண்டியவர்களாகவும் எந்நேரத்திலும் பதவியிலிருந்து நீக்கப்படக் கூடியவர்களுமாக இருந்தனர். இயற்கையாகவே அதன் உறுப்பினர்களில் பெரும்பான்மையோர் தொழிலாளர்களாகவோ, தொழிலாள வர்க்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதிகளாகவோதான் இருந்தனர். இதுவரை அரசாங்கத்தின் கைக்கருவியாய் இருந்து வந்த போலீஸ் இப்போழுது உடனடியாக அதன் அரசியல் செயற்பாடுகள் யாவும் பறிக்கப்பட்டுப் பொறுப்புக்கூறவேண்டிய, எந்த நேரத்திலும் பதவிநீக்கப்படக் கூடிய கம்யூனின் கருவியாக மாற்றப்பட்டது. நிர்வாகத்தின் ஏனைய எல்லாத் துறைகளையும் சேர்ந்த அதிகாரிகளும் இதே போல மாற்றப்பட்டனர். கம்யூன் உறுப்பினர்கள் முதலாய் எல்லோரும் தொழிலாளருக்குரிய சம்பளங்கள் பெற்று பொதுச்சேவை புரிய வேண்டியதாயிற்று. அரசின் உயர் பதவியாளர்கள் மறைந்ததோடு இந்த உயர் பதவியாளர்களது தனியுரிமைகளும், சலுகைகளும், பிரதிநிதித்துவ மானியத் தொகைகளும் மறைந்துவிட்டன… பழைய அரசாங்கத்தின் சரீர ரீதியான பலாத்காரக் கருவிகளான நிரந்தரப் படைகளையும் போலீசையும் ஒழித்துக் கட்டியதும் கம்யூனானது உடனே மதரீதியான அடக்குமுறைக் கருவியையும், அதாவது குருமார்களுடைய அதிகாரத்தையும் தகர்க்க முற்பட்டது… நீதிமன்ற அதிகாரிகள் போலியான சுயாதீன நிலையை இழந்து விட்டனர்… இனி அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டியோராகவும், பொறுப்புக்கூற வேண்டியவர்களாகவும், பதவிநீக்கப்படக் கூடியவர்களாகவும் ஆயினர்.

ஆக, கம்யூனானது நொருக்கப்பட்ட அரசு எந்திரத்தை “மட்டும்” நிறைவான ஜனநாயகத்தை கொண்டு பிரதியீடுசெய்யப்பட்டதாக தோன்றும்: அதாவது, நிரந்தர படையினை ஒழித்தது; எல்லா அதிகாரிகளையும் தேர்ந்தெடுக்கப்பட வேண்டியவர்களாக்கி, பதவியிலிருந்து திருப்பியழைக்கப்படக் கூடியவர்களாக்கியது. ஆனால் உண்மையில் இந்த “மட்டும்” என்பது ஒரு வகை நிறுவனங்களை அகற்றி அவற்றினிடத்தில் அடிப்படையிலேயே வேறொரு தன்மையானதான பிற அமைப்புகளைத் தோற்றுவிக்கும் பிரம்மாண்ட மாறுதலைக் குறிப்பதாகும். இதுதான் “அளவு பண்பாய் மாறுவதன்” எடுத்துக்காட்டாகும்: அதாவது முடிந்த அளவுக்கு முழுமையாகவும் முரணின்றியும் செயல்படுத்தப்பட்ட ஜனநாயகமானது முதலாளித்துவ ஜனநாயகத்திலிருந்து பாட்டாளி வர்க்க ஜனநாயகமாய் மாற்றமடைந்து விடுகிறது; அதாவது அரசு (= குறிப்பிட்ட ஒரு வர்க்கத்தை அடக்குவதற்கான தனிவகை சக்தி) இனி உண்மையான அரசு என்ற இல்லாத ஒன்றாக மாற்றமடைந்து விடுகிறது.

முதலாளித்துவத்தை அடக்குதும் அவர்களின் எதிர்ப்பை நசுக்குவதும் இன்னும் அவசியம். இது கம்யூனுக்கு இது மிக மிக அவசியமாயிருந்தது. கம்யூன் இப்பணியை போதிய உறுதியோடு செய்யாதது அதன் தோல்விக்குரிய காரணங்களில் ஒன்றாகும். எவ்வாறாயினும், அடக்குமுறையின் அமைப்பு இங்கே மக்கள்தொகையில் பெரும்பான்மையானதாக உள்ளது, எப்போதும் அடிமையுடைமைச் சமுதாயம், பண்ணையடிமைச் சமுதாயம், கூலியடிமைச் சமுதாயம் ஆகிய இவை யாவற்றிலும் இருந்தது போல சிறுபான்மையினராக இருக்கவில்லை. பெரும்பான்மையான மக்கள் தாமே அதன் அடக்குமுறையாளர்களை அடக்குவதால், அடக்குவதற்கு ஒரு சிறப்பு சக்தி இனி தேவையில்லை! இந்த அர்த்தத்தில் அரசு உலர்ந்து உதிரத் தொடங்குகிறது. ஒரு சலுகை பெற்ற சிறுபான்மையினரின் சிறப்பு நிறுவனங்களுக்கு பதிலாக (சலுகை பெற்ற உத்தியோகத்தர்கள் தட்டு, நிரந்தர இராணுவத்தின் தலைவர்கள்), பெரும்பான்மை மக்கள் நேரடியாக தாமே இந்தப் பணிகளை நிறைவேற்ற முடிகிறது. அரசு அதிகாரத்தின் பணிகள் மேலும் மேலும் கூடுதலாய் பெருந்திரளான மக்களுக்குரியதாகும்போது, இந்த அதிகாரத்திற்கான அவசியம் மேலும் மேலும் குறைந்து விடுகிறது.

இச்சந்தர்ப்பத்தில், மார்க்ஸ் வலியுறுத்திக் கூறிய கம்யூனின் பின்வரும் நடவடிக்கைகள் மிகவும் குறிப்பிடத்தக்கனவாகும்: அதிகாரிகளுக்கான எல்லா பிரதிநிதித்துவ மானியங்களையும் பண வகையிலான எல்லா தனிச் சலுகைகளையும் ஒழித்தல், அரசின் அனைத்து ஊழியர்களது ஊதியங்களையும் தொழிலாளர்களுக்குரிய ஊதியங்களின் நிலைக்குச் சமமாக்குதல். முதலாளித்துவ ஜனநாயகத்திலிருந்து பாட்டாளி வர்க்க ஜனநாயகத்துக்கு, ஒடுக்குவோரின் ஜனநாயகத்திலிருந்து ஒடுக்கப்பட்ட வர்க்கங்களுடைய ஜனநாயகத்துக்கு, குறிப்பிட்ட ஒரு வர்க்கத்தை அடக்குவதற்கான தனிவகை சக்தியாய் அமைந்த அரசிலிருந்து ஒடுக்குவோரை அடக்குவதற்கான பெரும்பான்மை மக்களது, அதாவது தொழிலாளர்கள், விவசாயிகளது பொது சக்திக்கு ஏற்பட்ட மாற்றத்தை, ஏனைய எவற்றையும்விட இந்த நடவடிக்கைகள் மிகத் தெளிவாய் புலப்படுத்துகின்றன. மிகவும் முக்கியமான அரசு தொடர்பான பிரச்சினையை பொறுத்தவரை இந்த விடயத்தில்தான், மார்க்சின் கருத்துக்கள் முற்றுமுழுதாக புறக்கணிக்கப்பட்டிருக்கின்றன! எண்ணில் அடங்காத ஜனரஞ்சகமான விளக்க உரைகளில் இக்கருத்துக்கள் குறிப்பிடப்படுவதே இல்லை. இவ்விளக்கங்கள் கிறிஸ்தவர்கள் அவர்களுடைய மதம் அரசின் மதமானதும் ஜனநாயகப் புரட்சிகர மனப்பான்மை கொண்ட புராதன கிறிஸ்தவத்தின் “அறியாமையை மறந்து விட்டது” போல, இதுவும் காலத்துக்கு ஒவ்வாத பழைய பாணியிலான “அறியாமையை” வகைப்பட்டதாக கொள்ளப்பட்டு, இதைப் பற்றிக் குறிப்பிடாமலே மௌனமாயிருப்பதே “உசிதம்” என்றாகிவிட்டது போல் உள்ளது.

அரசின் உயர் அதிகாரிகளுடைய சம்பளம் குறைக்கப்பட வேண்டுமென்பது அப்பாவித்தனமான புராதன ஜனநாயகத்தின் சாதாரண கோரிக்கையாக “மட்டுமே” தோன்றுகிறதாம். நவீன சந்தர்ப்பவாதத்தின் “நிறுவனர்களில்” ஒருவரான முன்னாள் சமூக-ஜனநாயகவாதி எட்வார்ட் பேர்ன்ஸ்டைன் “புராதன” ஜனநாயகம் குறித்துக் கூறப்படும் கொச்சையான முதலாளித்துவக் கேலியையும் கிண்டலையும் பலமுறை தானும் திருப்பிக் கூறியிருக்கிறார். எல்லா சந்தர்ப்பவாதிகளையும் இன்றைய காவுட்ஸ்கிவாதிகளையும் போலவே அவரும் நிலைமையைப் புரிந்து கொள்ளவே இல்லை. முதலாவதாக, “புராதன” ஜனநாயகத்துக்கு ஓரளவு “பின்னோக்கி செல்லாமல்” (வேறு எப்படித்தான் பெரும்பான்மையோரும், பின்னர் விதிவிலக்கின்றி மக்கள் அனைவரும் அரசு பணிகளை ஏற்று நிறைவேற்ற முற்படுவதாம்?) முதலாளித்துவத்திலிருந்து சோசலிசத்துக்கு மாறிச் செல்வது சாத்தியமில்லை என்றும்; இரண்டாவதாக, முதலாளித்துவம், முதலாளித்துவக் கலாசாரம் இவற்றின் அடிப்படையில் அமைந்த “புராதன ஜனநாயகமானது” வரலாற்றுக்கு முற்பட்ட, அல்லது முதலாளித்துவத்துக்கு முற்பட்ட காலங்களை சேர்ந்த புராதன ஜனநாயகத்தைப் போன்றதல்ல என்பதையும் புரிந்து கொள்ளவே இல்லை. முதலாளித்துவக் கலாச்சாரம் பரந்தளவிலான பொருளுற்பத்தியையும், ஆலைகளையும், இரயில்பாதைகளையும், அஞ்சல் துறையையும், தொலை பேசிகளையும், இன்ன பிறவற்றையும் தோற்றுவித்திருக்கிறது. இவற்றின் அடிப்படையில் பழைய “அரசு அதிகாரத்தின்” பணிகளில் மிகப் பெருவாரியானவை மிகவும் சுலபமாகிவிட்டதால், எழுத்தறிவுள்ள ஒவ்வொருவரும் எளிதில் செய்து விடக் கூடிய மிக மிகச் சுலபமான பதிவு செய்தல், தொகுத்து வைத்தல், சரி பார்த்தல் ஆகிய வேலைகளாய் அவற்றைக் குறுக்கிக் கொண்டுவிட முடியும். சாதாரண “தொழிலாளர்களுக்குரிய சம்பளங்களைப்” பெற்று இந்த வேலைகளை எளிதில் செய்துவிடலாம். தனிச் சலுகைகள், “அதிகார ஆடம்பரங்கள்” இவற்றில் இம்மியையும் விட்டு வைக்காமல் இந்தப் பணிகளிலிருந்து அறவே களைந்து விட முடியும் (களைந்து விடவும் வேண்டும்).

விதிவிலக்கின்றி எல்லா அதிகாரிகளும் தேர்ந்தெடுக்கப்படுதல், எந்நேரத்திலும் பதவியிலிருந்து திருப்பியழைக்கப்படக் கூடியவர்களாய் இருத்தல், அவர்களுடைய சம்பளங்களை சாதாரண “தொழிலாளர்களுக்குரிய சம்பளங்களின்” நிலைக்கு சமமாக்கி, இந்த “கூறாமலே விளங்கும்” சர்வசாதாரண ஜனநாயக நடவடிக்கைகள், தொழிலாளர்களுடைய நலன்களையும் விவசாயிகளில் மிகப் பெருவாரியானோரின் நலன்களையும் முழு அளவுக்கு ஒன்றுபடச் செய்வதோடு, அதேபோது முதலாளித்துவத்திலிருந்து சோசலிசத்துக்கு இட்டுச் செல்லும் பாலமாகவும் அமைகின்றன. அரசினை மறுஒழுங்கமைப்பது சம்பந்தமான, முற்றிலும் அரசியல்ரீதியாக சமுதாயத்தை மறுஒழுங்கமைப்பது சம்பந்தமான நடவடிக்கைகளே இவை. “உடைமை பறிப்போரின் உடைமைகள் பறிக்கப்படுதல்” நடைபெறுவதுடனோ, அதற்கான தயாரிப்புகளுடனோ இணைக்கப்படும்போது மட்டும்தான், அதாவது உற்பத்திச் சாதனங்களில் முதலாளித்துவத் தனியுடைமை சமுதாய உடைமையாய் மாற்றப்படுவதுடன் இணைக்கப்படும்போது மட்டுமே, இந்த நடவடிக்கைகள் அவற்றின் முழுப் பொருளையும் முக்கியத்துவத்தையும் பெறுகின்றன என்பதைக் கூறத் தேவையில்லை.

“அனைத்து முதலாளித்துவ புரட்சிகளும் எழுப்பிய அந்தக் கவர்ச்சிக் கோஷமாகிய செலவுகுறைந்த அரசாங்கம் என்பதை, கம்யூனானது செலவினங்களுக்கு இரு பெரும் வழிகளாய் அமைந்த படைகளையும் அதிகார வர்க்கத்தையும் ஒழித்ததன் மூலம் நடைமுறை உண்மையாக்கிற்று” என்று மார்க்ஸ் எழுதினார்.

ஏனைய குட்டி முதலாளித்துவப் பகுதியினரில் எப்படியோ அதுபோலவே, விவசாயிகளிடமிருந்தும் மிகச் சொற்பமானோர் மட்டுமே முதலாளித்துவ அர்த்தத்தில் “மேல் நிலைக்கு உயருகிறார்கள்”, “வாழ்க்கையில் முன்னேறி சுகமாய் வாழ்கிறார்கள்”, அதாவது செல்வமுடையோராகவோ முதலாளிகளாகவோ அல்லது வசதி படைத்த தனிச் சலுகையுள்ள அதிகாரிகளாகவோ ஆகின்றனர். விவசாயிகள் இருந்து வரும் முதலாளித்துவ நாடு ஒவ்வொன்றிலும் (மிகப் பெரும்பாலான முதலாளித்துவ நாடுகளில் விவசாயிகள் இருக்கிறார்கள்), மிகப் பெரும் பகுதி விவசாயிகள் அரசாங்கத்தால் ஒடுக்கப்படுகிறார்கள்; அரசாங்கத்தை வீழ்த்த வேண்டுமென, “செலவுகுறைந்த” அரசாங்கம் வேண்டுமென ஏங்குகிறார்கள். பாட்டாளி வர்க்கத்தால் மட்டுமே இதனைச் வெற்றிபெறச் செய்ய முடியும். இதை வெற்றிபெறச் செய்வதன் மூலம் பாட்டாளி வர்க்கம் அதேபோதில் அரசை சோசலிச வழியில் புனரமைத்திடுவதை நோக்கி முன்னேறிச் செல்கிறது.

3. நாடாளுமன்ற முறையை ஒழித்தல்

[Photo]

“கம்யூனானது நாடாளுமன்ற அமைப்பாக இல்லாமல், செயலாற்றும் அமைப்பாய், ஒருங்கே சட்டமன்றமாகவும் நிறைவேற்று குழுவாகவும் செயல்படும் அமைப்பாக திட்டமிடப்பட்டது” என்று மார்க்ஸ் எழுதினார்.

…ஆளும் வர்க்கத்தின் எந்த உறுப்பினர், நாடாளுமன்றத்தில் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி அவர்களை அடக்கி பிரதிநிதித்துவப்படுத்துவதென [ver- and zertreten] மூன்று அல்லது ஆறு ஆண்டுகளுக்கு ஒரு தரம் தீர்மானிப்பதற்குப் பதிலாய், அனைத்து மக்கள் வாக்குரிமையானது கம்யூன்களில் ஒழுங்கமைக்கப்பட்ட மக்களுக்கு எந்த ஒரு முதலாளியும் தனது தொழிலுக்கு தொழிலாளர்களையும் மேலதிகாரிகளையும் கணக்கர்களையும் தேடிக்கொள்ள தனியார் வாக்குரிமை பணியாற்றுகிறதல்லவா, அதுபோல பணியாற்ற வேண்டும்.

நாடாளுமன்ற முறை குறித்து 1871இல் அளிக்கப் பெற்ற சிறப்பு மிக்க இந்த விமர்சனமுங்கூட, வெகுவாய் மலிந்து விட்ட சமூக-தேசியவெறியின் காரணமாகவும் சந்தர்ப்பவாதத்தின் காரணமாகவும் இப்போழுது மார்க்சிசத்தின் “மறக்கப்பட்ட வாசகங்களில்” ஒன்றாகிவிட்டது. அமைச்சராகவும் நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருப்பதையே தொழிலாய் கொண்டோரும், பாட்டாளி வர்க்கத்துக்கு துரோகம் புரிவோரும், தற்காலத்து “நடைமுறைவாத” சோசலிஸ்டுகளும் நாடாளுமன்ற முறை பற்றிய எல்லா விமர்சனத்தையும் அராஜகவாதிகளிடத்தே விட்டுவைத்து விட்டனர். இந்த அதிசயமான காரணத்தால் நாடாளுமன்ற முறை பற்றிய அனைத்து விமர்சனத்தையுமே அவர்கள் “அராஜகவாதமென” பறைசாற்றுகிறார்கள்!! “முன்னேறிய” நாடாளுமன்ற நாடுகளைச் சேர்ந்த பாட்டாளி வர்க்கத்தினர், ஷைடெமான்களையும் டேவிட்களையும் லெகின்களையும் செம்பாட்ஸ்களையும் ரெனொடெல்களையும் ஹேண்டர்சன்களையும் வாண்டர்வெல்டன்களையும் ஸ்டானிங்குகளையும் பிராண்டிங்குகளையும் பிஸோலாட்டியையும் அவர் சகாக்களையும் போன்ற “சோசலிஸ்டுகளிடம்” அருவருப்புக் கொண்டு சந்தர்ப்பவாதத்தின் உடன் பிறந்த இரட்டை குழந்தையாகிய அராஜகவாத தொழிற்சங்கவாதத்திற்கு மேலும் மேலும் ஆதரவு தெரிவிப்பதில் வியப்பில்லை.

ஆனால் மார்க்சுக்கு புரட்சிகர இயங்கியலானது, பிளெக்ஹானோவும் காவுட்ஸ்கியும் ஏனையோரும் ஆக்கிக் கொண்டு விட்ட வெற்று ஜம்பமாகவோ விளையாட்டுக் கிலுகிலுப்பையாகவோ ஒருபோதும் இருந்ததில்லை. முதலாளித்துவ நாடாளுமன்ற முறை “பன்றித் தொழுவமே” ஆயினுங்கூட அதனைப் பயன்படுத்திக் கொள்ள, முக்கியமாய் நிலைமை புரட்சிகரமானதாய் இல்லை என்பது தெளிவாய் தெரியும் நேரத்தில் அதைப் பயன்படுத்திக் கொள்ள திராணியற்றதாய் இருந்ததென்பதற்காக அராஜகவாதத்திடமிருந்து தயவு தாட்சண்யமின்றி முறித்துக் கொள்ள மார்க்சுக்கு தெரிந்திருந்தது. அதேபோது நாடாளுமன்ற முறையை உண்மையான புரட்சிகரமான பாட்டாளி வர்க்க நிலையிலிருந்து விமர்சிக்கவும் அவருக்குத் தெரிந்திருந்தது.

ஆளும் வர்க்கத்தின் எந்த உறுப்பினர் நாடாளுமன்றத்தின் மூலம் மக்களை அடக்கி ஒடுக்க வேண்டுமெனச் சில ஆண்டுகளுக்கு ஒரு தரம் தீர்மானிப்பதே முதலாளித்துவ நாடாளுமன்ற முறையின் உண்மையான உள்ளடக்கம் நாடாளுமன்ற அரசியல் சட்டத்துக்கு உட்பட்ட முடியரசுகளில் மட்டுமின்றி, மிகவும் ஜனநாயகமான குடியரசுகளிலுங்கூட இதுவேதான் நிலைமை.

அரசு குறித்த பிரச்சனையை பரிசீலிப்போமாயின், இந்த துறையில் பாட்டாளி வர்க்கத்தின் முன்னுள்ள பணிகளின் கண்ணோட்டத்தில் அரசுக்குரிய நிறுவனங்களில் ஒன்றாகிய நாடாளுமன்ற முறையை பரிசீலிப்போமாயின் நாடாளுமன்ற முறையை விட்டொழிக்கும் வழி என்ன? நாடாளுமன்ற முறையைத் தவிர்ப்பது எப்படி?

மறுபடியும் நாங்கள் கூறுகிறோம்: கம்யூனை ஆராய்ந்து மார்க்ஸ் எடுத்துரைத்த படிப்பினைகள் அப்படி அடியோடு மறக்கப்பட்டு விட்டதால், இன்றைய “சமூக ஜனநாயகவாதியால்” (அதாவது, சோசலிசத்தின் இன்றைய துரோகியால்) நாடாளுமன்ற முறை பற்றிய அராஜகவாத அல்லது பிற்போக்கு விமர்சனத்தை தவிர்த்து வேறு எந்த விமர்சனத்தையும் உண்மையில் புரிந்து கொள்ள முடிவதில்லை.

நாடாளுமன்ற முறையை விட்டொழிப்பதானது பிரதிநிதித்துவ உறுப்புக்களையும் தேர்தலையுமே விட்டொழிப்பதாகாது. பிரதிநிதித்துவ உறுப்புக்கள் வெறும் வாய்ப்பேச்சுக் கூடங்களாய் இருப்பதை மாற்றி அவற்றைச் “செயலாற்றும்” உறுப்புக்களாக்க வேண்டுமென்பதே இதன் பொருள். “கம்யூனானது நாடாளுமன்ற உறுப்பாயில்லாமல் செயலாற்றும் அமைப்பாக, ஒருங்கே சட்டமன்றமாகவும் நிறைவேற்றுக் குழுவாகவும் செயல்படும் அமைப்பாகத் திட்டமிடப்பட்டது.”

“நாடாளுமன்ற அமைப்பல்ல, ஒரு செயலாற்றும் அமைப்பு” என்பது தற்கால நாடாளுமன்றத்தினருக்கும் சமூக-ஜனநாயகத்தின் நாடாளுமன்ற “செல்லப் பிள்ளைகளுக்கும்” இது சரியான சவுக்கடி! அமெரிக்கா முதல் சுவிட்சர்லாந்து வரை, பிரான்ஸ் முதல் பிரிட்டன், நோர்வே வரை இவ்வாறு எந்த நாடாளுமன்ற நாட்டை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள். இந்நாடுகளில் எல்லாம் “அரசுக்குரிய” உண்மையான வேலை திரைக்குப் பின்னால் நடத்தப்படுகிறது; இலாகாக்களும் அமைச்சக செயலகங்களும் படைத் தலைமையகங்களும் இதை நடத்துகின்றன. “பொது மக்களை” ஏமாற்றுதற்கென வாய்ப்பேச்சுப் பேசுவதே நாடாளுமன்றத்துக்கு அளிக்கப்பட்டிருக்கும் பணி. இதுவே உண்மை என்பதை முதலாளித்துவ ஜனநாயகக் குடியரசாகியுள்ள ரஷ்ய குடியரசும் கூட புலப்படுத்துகிறது. உண்மையான நாடாளுமன்றம் ஒன்றை இக்குடியரசு நிறுவிக் கொள்ளும் முன்னரே கூட நாடாளுமன்ற முறையின் இந்தக் கேடுகள் யாவும் உடனடியாகவே வெளிப்பட்டு விட்டன. கேடுகெட்ட குட்டி முதலாளித்துவ அற்பவாதத்தின் வீரர்களான ஸ்கோபெலெவ்களையும் த்ஸெரெத்தேலிகளையும், செர்னோவ்களையும் அவ்க்சேன்தியெவ்களையும் போன்றோர்- அருவெறுப்பு மிக்க முதலாளித்துவ நாடாளுமன்ற முறையிலே சோவியத்துகளையும் நச்சுப்படுத்தி அவற்றை வெறும் வாய்ப்பேச்சுக் கூடங்களாய் மாற்றுவதில் வெற்றியுங்கூட பெற்றுவிட்டனர். சோவியத்துகளில் “சோசலிச” அமைச்சர்கள் வாய்வீச்சுக்களாலும் தீர்மானங்களாலும் நாட்டுப்புறத்து ஏமாளிகளை ஏய்த்து வருகிறார்கள். ஒருபுறம் சோசலிசப் புரட்சியாளர்களிலும் மென்ஷிவிக்குகளிலும் எவ்வளவு முடியுமோ அவ்வளவு அதிகமானோருக்கு இலாபமுள்ள, சிறப்புக்குரிய பதவிகளான “சன்மானங்கள்” கிட்டும் பொருட்டும், மறுபுறத்தில் மக்களுடைய “கவனம்” திசை திருப்பப்பட்டுக் “கவரப்படும்” பொருட்டும் அரசாங்கத்தினுள் ஓயாத ஆள் மாற்றம் நடந்தேறுகிறது. இதற்கிடையில் அமைச்சக செயலகங்களும் படைத் தலைமையகங்களும் “அரசுக்குரிய” வேலைகளை “நடத்துகின்றன.”

ஆளும் சோசலிச புரட்சியாளர் கட்சியின் ஏடான டியேலொ நரோடா அண்மையில் ஒரு தலையங்கத்தில் “எல்லோருமே” அரசியல் விபசாரத்தில் ஈடுபட்டிருக்கும் “உயர் குலத்து” மாந்தரது ஒப்பிலா நேர்மையோடு ஒப்புக் கொண்டது: “சோசலிஸ்டுகள்” தலைமை தாங்கும் அமைச்சகங்களிலும் கூட அதிகாரிகளாலான அமைப்பு எந்த மாற்றமுமின்றி அப்படியே இருக்கிறதென்றும், பழைய வழிமுறைகளிலேயே வேலை செய்து, புரட்சிகர நடவடிக்கைகளை “தங்குதடையின்றி” சீர்குலைத்து வருகிறதென்றும் ஒப்புக் கொண்டது! இந்த ஒப்புதல் இன்றியே, அரசாங்கத்தில் சோசலிசப் புரட்சியாளர்களும் மென்ஷிவிக்குகளும் பங்கு கொள்வதன் நடைமுறை வரலாறே இதனை நிரூபிக்கவில்லையா? ஆயினும் அமைச்சரவையில் காடேட்டுகளுடைய சகவாசத்தால் செர்னோவ்களும் ருசானவ்களும் ஸென்ஸீனவ்களும் டியேலொ நரோடாவின் பிற ஆசிரியர்களும் இப்படி வெட்கங்கெட்டவர்களாகி ஏதோ அற்ப விவரத்தைக் குறிப்பிடுவது போல “தமது” அமைச்சகங்களில் எதுவும் மாற்றமின்றி அப்படியே இருப்பதாய் கூறுவது குறிப்பிடத்தக்கதாகும்!! கிராமப்புற ஏழை எளியோரை ஏமாற்ற புரட்சிகர ஜனநாயக சொல்லடுக்குகள், முதலாளிமார்கள் “மனம் மகிழ” அதிகார வர்க்க ஆட்சியும் செயலகங்களுக்கு வழக்கமான இழுத்தடிப்பும்தான் “நேர்மை மிக்க” கூட்டு அமைச்சரவையின் சாராம்சம்.

முதலாளித்துவ சமுதாயத்தின் ஊழல் மலிந்த, நாற்றம் பிடித்த நாடாளுமன்ற முறைக்குப் பதிலாய், கம்யூனானது கருத்துச் சுதந்திரமும் விவாதச் சுதந்திரமும் ஏமாற்று வித்தையாய் சீரழிந்துவிடாத அமைப்புக்களை தோற்றுவிக்கிறது. எப்படியெனில் நாடாளுமன்றத்தினர் தாமே வேலை செய்யவும், தாம் இயற்றும் சட்டங்களைத் தாமே செயல்படுத்தவும், உண்மையில் சாதிக்கப் பெற்ற பலன்களை தாமே சோதித்துப் பார்க்கவும், தம்மைத் தேர்ந்தெடுத்த வாக்காளர்களுக்கு நேரடியாக தாமே பொறுப்புக் கூறவும் வேண்டியதாகிறது. பிரதிநிதித்துவ உறுப்புக்கள் தொடர்ந்து நிலவுகின்றன; ஆனால் நாடாளுமன்ற முறை ஒரு தனிவகை அமைப்பாய், சட்டமியற்றுவதற்கும் செயல்படுத்துவதற்கும் இடையிலான தொழில் பிரிவினையாக, பிரதிநிதிகளது தனிச் சலுகை நிலையாய் நிலவவில்லை. பிரதிநிதித்துவ அமைப்புக்கள் இல்லாமல் ஜனநாயகத்தையோ, பாட்டாளி வர்க்க ஜனநாயகத்தையும் கூட கற்பனை செய்து பார்க்க முடியாது. ஆனால் நாடாளுமன்ற முறை இல்லாமல் ஜனநாயகத்தைக் கற்பனை செய்து பார்க்க முடியும், கட்டாயம் கற்பனை செய்து பார்க்கவும் வேண்டும். முதலாளித்துவ சமுதாயத்தை நாம் விமர்சித்துக் கண்டிப்பது வெறும் வார்த்தையளவிலான விமர்சனமாய் நின்று விடக் கூடாதெனில், முதலாளித்துவ வர்க்கத்தின் ஆதிக்கத்தை வீழ்த்த வேண்டுமென்ற விருப்பம் நமது நேர்மையான, உண்மையான விருப்பமாக இருந்தால், மென்ஷிவிக்குகள், சோசலிசப் புரட்சியாளர்கள் விவகாரத்திலும், மற்றும் ஷெய்டெமான்கள், லெகின்களின் விவகாரத்திலும், செம்பாக்கள், வண்டர்வேல்டேகளின் விவகாரத்திலும் இருப்பது போல தொழிலாளர்களுடைய வாக்குகளைக் கவருவதற்கான வெறும் “தேர்தல்” முழக்கமாக இல்லாது கட்டாயம் நாம் இதை செய்தாகவே வேண்டும்.

கம்யூனுக்கும் பாட்டாளி வர்க்க ஜனநாயகத்துக்கும் அவசியமான அந்த அதிகாரிகளின் பணிகள் குறித்துப் பேசுகையில், மார்க்ஸ் அவர்களை, “எந்த ஒரு முதலாளியின்” ஊழியர்களுடன், அதாவது சாதாரண முதலாளித்துவ தொழில் நிலையத்தின் “தொழிலாளர்கள், மேற்பார்வையாளர்கள், கணக்காளர்களுடன்” ஒப்பிடுவது கருத்தூன்றிக் கவனிக்கத்தக்கதாகும்.

“புதிய” சமுதாயம் ஒன்றை தாமே கற்பனாவாத சக்தியால் தோற்றுவித்துக் கொண்டார் அல்லது கண்டுபிடித்துக் கொண்டார் என்ற பொருளில் மார்க்சிடம் கற்பனாவாதத்தின் சாயல் இம்மியும் கிடையாது. இல்லை, முன்னைய சமுதாயத்தினுள் இருந்து புதிய சமுதாயம் பிறப்பதையும், முன்னது பின்னதாய் மாறிடும் வடிவங்களையும் இயற்கையான வரலாற்று நிகழ்ச்சிப்போக்காய் அவர் ஆராய்ந்தார். வெகுஜனப் பாட்டாளி வர்க்க இயக்கத்தின் ஸ்தூலமான அனுபவத்தைப் பரிசீலித்து, அதனின்று நடைமுறை படிப்பினைகள் பெற முயன்றார். மாபெரும் புரட்சிகர சிந்தனையாளர்கள் எல்லாருமே ஒடுக்கப்பட்ட வர்க்கங்களுடைய மாபெரும் இயக்கங்களின் அனுபவத்திலிருந்து தயக்கமின்றிக் கற்றறிந்து கொண்டது போலவே அவர் கம்யூனிலிருந்து “கற்றறிந்து கொண்டாரே” அன்றி, (“அவர்கள் போர் தொடங்கியிருக்கக் கூடாது” என்று பிளெக்ஹானோவ் கூறியதைப் போலவோ, “வர்க்கமானது உரிய வரம்புக்கு உட்பட்டாக வேண்டும்” என்று த்ஸெரெத்தேலி கூறியதைப் போலவோ) பகட்டுப் புலமை வாய்ந்த “ஞான உபதேசம்” செய்ய முற்பட்டதில்லை.

உடனடியாகவும் எல்லா இடத்தும் முற்றாகவும் அதிகாரத்துவத்தை அழித்தவிடுவது முடியாத காரியம். அது ஓர் கற்பனாவாதம். ஆனால் பழைய அதிகாரத்துவ எந்திரத்தை உடனடியாகவே நொருக்குவதும், அனைத்து வகை அதிகாரத்துவத்தையும் படிப்படியாய் ஒழித்திட வழிகோலும் புதிய எந்திரத்தை உடனே அமைத்திடத் தொடங்குவதும் கற்பனாவாதம் அல்ல, கம்யூனின் அனுபவமாகும்; இது புரட்சிகரப் பாட்டாளி வர்க்கத்துக்குரிய நேரடியான, உடனடியான பணியாகும்.

“அரசு” நிர்வாகத்தின் பணிகளை முதலாளித்துவம் எளிதாக்கிவிடுகிறது. “மேலதிகாரியாக இருப்பது” விட்டொழிக்கப்படுவதும், யாவும் பாட்டாளி வர்க்கத்தினர் (ஆளும் வர்க்கமாய்) ஒழுங்கமையும் விவகாரமாகிவிடுவதும் இதனால் சாத்தியமாகிறது. இவ்வாறு ஒழுங்கமைந்த பாட்டாளி வர்க்கம், சமுதாயம் அனைத்தின் பெயரால் “தொழிலாளர்களையும் மேற்பார்வையாளர்களையும் கணக்காளர்களையும்” சம்பளத்துக்கு அமர்த்திக் கொள்ளும்.

நாம் கற்பனாவாதிகள் அல்ல. நிர்வாகம் அனைத்தையும், கீழ்ப்படிதல் அனைத்தையும் உடனடியாகவே விட்டொழித்து விடலாமென நாம் “கனவு காணவில்லை”. பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்துக்குள்ள கடமைகளைப் புரிந்து கொள்ளாததே இந்த அராஜகவாதக் கனவுகளுக்கு அடிப்படை. இவை மார்க்சிசத்துக்கு முற்றிலும் புறம்பானவை. உண்மையில் மக்கள் வேறு விதமானோராய் மாறுகின்ற வரை சோசலிசப் புரட்சியை ஒத்திப் போடுவதற்கே இவை வகை செய்கின்றன. இல்லை, மக்கள் தற்போது இருக்கும் இதே நிலையிலேயே, கீழ்ப்படிதலையும், மேற்பார்வையையும், “மேற்பார்வையாளர்களையும், கணக்காளர்களையும்” விட்டொழிக்க முடியாதவர்களாயுள்ள மக்களது இந்த இதே நிலையிலேயே, நாம் சோசலிசப் புரட்சி நடத்த விரும்புகிறோம்.

ஆனால் கீழ்ப்படிதலானது, சுரண்டப்படுவோரும் உழைப்பாளர்களுமானோர் அனைவரின் ஆயுதமேந்திய முன்னணிப் படைக்கு, அதாவது பாட்டாளி வர்க்கத்துக்கு கீழ்ப்படிதலாய் இருத்தல் வேண்டும். அரசாங்க அதிகாரிகளது தனிவகை “மேலதிகாரியாக இருப்பது” “மேற்பார்வையாளர்கள், கணக்காளர்கள்” இவர்களது எளிய பணிகளாய் மாற்றுவதற்கு உடனடியாகவே, இத்தருணமே தொடங்கிவிட முடியும், தொடங்கவும் வேண்டும். இந்த எளிய பணிகள் ஏற்கனவே சராசரி நகரவாசியின் ஆற்றலுக்கு முற்றிலும் உட்பட்டவையே ஆனதால், “தொழிலாளர்களுக்குரிய சம்பளத்தை” பெற்று இவற்றை திறம்படச் செய்ய முடியும்.

தொழிலாளர்களாகிய நாம், முதலாளித்துவம் ஏற்கனவே தோற்றுவித்திருப்பதன் அடிப்படையிலே பாரிய பொருளுற்பத்தியை ஒழுங்கமைத்து நிறுவுவோம். தொழிலாளர்களான நம்முடைய சொந்த அனுபவத்தை ஆதாரமாகக் கொண்டும், ஆயுதமேந்திய தொழிலாளர்களது அரசு அதிகாரத்தின் துணையுடன் கண்டிப்பான, உருக்கு உறுதி கொண்ட கட்டுப்பாட்டை நிலைநாட்டியும் இதனை செய்திடுவோம். அரசு அதிகாரிகளுடைய பாத்திரத்தைப் பொறுப்புள்ள, விலக்கப்படக் கூடிய, சாதாரண சம்பளம் பெறும் “மேற்பார்வையாளர்கள், கணக்காளர்களாக” இருந்து (எல்லா வகைகளையும் ரகங்களையும் தரங்களையும் சேர்ந்த தொழில்நுட்ப ஊழியர்களது உதவியுடன் தான்) நமது உத்தரவுகளை நிறைவேற்றுவது மட்டுமான பாத்திரமாய் குறைத்துவிடுவோம். இதுவே நமக்குரிய பாட்டாளி வர்க்கக் கடமை. பாட்டாளி வர்க்கப் புரட்சியை வெற்றிபெறச் செய்வதில் இதுவே நாம் செய்யத் தொடங்கக் கூடியதும் செய்யத் தொடங்க வேண்டியதும் ஆகும். பாரிய பொருளுற்பத்தியின் அடிப்படையிலே அமைந்த இத்தகைய ஒரு ஆரம்பம் ஏற்படுமாயின், அதுவே அதிகாரத்துவம் அனைத்தும் படிப்படியாய் “உலர்ந்து உதிர்ந்து விடுவதற்கு” இட்டுச் செல்லும். மேலும் மேலும் எளிதாகி வரும் கண்காணிப்பு, கணக்கு வைப்பு வேலைகள் கிரமப்படி ஒவ்வொருவராலும் செய்யப்பட்டு, பின்னர் நிலையான பழக்கமாகி, முடிவில் மக்களில் ஒரு தனிப் பகுதியோருக்குரிய தனிவகை வேலைகளாய் இருக்கும் நிலை மறைந்தொழிந்து விடும்படியான ஒழுங்கு முறை —அடைப்புக் குறிகளிட்டுக் காட்டப்பட வேண்டியில்லாத ஒழுங்கு முறை, கூலியுழைப்பு அடிமை முறையின்— சாயல் இம்மியும் இல்லாத ஒழுங்குமுறை படிப்படியாய் தோற்றுவிக்கப்படுவதற்கு இட்டுச் செல்லும்.

கடந்த நூற்றாண்டின் எழுபதாம் ஆண்டுகளில் வேடிக்கையான ஜேர்மன் சமூக ஜனநாயகவாதி ஒருவர் அஞ்சல் பணித்துறையை சோசலிசப் பொருளாதார அமைப்புக்கு ஓர் எடுத்துக்காட்டாய் குறிப்பிட்டார். இது மிகவும் சரிதான். தற்போது அஞ்சல் பணித்துறை அரசு-முதலாளித்துவ ஏகபோகத்தின் அடிப்படையில் ஒழுங்கமைக்கப்பட்ட ஒரு வணிகமாக இருந்து வருகிறது. ஏகாதிபத்தியமானது அனைத்து அறக்கட்டளைகளையும் இதையொத்த நிறுவனங்களாக படிப்படியாய் மாற்றி வருகிறது. இவற்றில் அதே முதலாளித்துவ அதிகாரத்துவம் தான், அளவு மீறிய வேலைப் பளுவுக்கும் பட்டினிக்கும் இலக்காகி அவதியுறும் “சாதாரண” உழைப்பாளி மக்களுக்கு மேலானதாய் நிற்கிறது. ஆனால் சமூக நிர்வாகத்தின் கட்டமைவு ஏற்கனவே இவற்றில் தயாராய் இருக்கிறது. முதலாளிகளை நாம் வீழ்த்தி இந்த சுரண்டலாளர்களுடைய எதிர்ப்பை ஆயுதமேந்திய தொழிலாளர்களது இரும்புக்கரம் கொண்டு நசுக்கி, தற்கால அரசின் அதிகாரத்துவ எந்திரத்தை நொருக்கியதும், உன்னத முறையில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் இந்தக் கட்டமைவு, “ஒட்டுண்ணி”யிடமிருந்து விடுவிக்கப்பட்டு நம் கைக்குக் கிட்டிவிடும், ஐக்கியப்பட்ட தொழிலாளர்கள் தாமே இந்தக் கட்டமைவைத் திறம்பட இயங்கச் செய்ய முடியும். இத்தொழிலாளர்கள் தொழில்நுட்ப நிபுணர்களையும் மேற்பார்வையாளர்களையும், கணக்காளர்களையும் சம்பளத்துக்கு அமர்த்திக் கொள்வார்கள்; அவர்கள் எல்லோருக்கும், பொதுவாய் “அரசு” அதிகாரிகள் எல்லோருக்கும் எப்படியோ அதேபோல, தொழிலாளர்களுக்குரிய சம்பளங்களையே பெறுவார்கள். எல்லா டிரஸ்டுகள் சம்பந்தமாகவும் உடனடியாகவே நிறைவேற்றப்பட்டதும், உழைப்பாளி மக்கள் சுரண்டலிலிருந்து விடுவிக்கப்பட்டு விடுவார்கள். ஏற்கனவே இது கம்யூனானது நடைமுறையில் செய்யத் தொடங்கியதைக் (குறிப்பாய் அரசை அமைத்திடுவது சம்பந்தமாய்) கருத்தில் எடுத்துக் கொண்டு வகுக்கப் பெற்ற பணியாகும்.

பொருளாதாரம் அனைத்தையுமே அஞ்சல் பணித் துறையைப் போல ஒழுங்கமைக்க, தொழில்நுட்ப நிபுணர்கள், மேற்பார்வையாளர்கள், கணக்காளர்கள், மற்றும் அனைத்து அதிகாரிகளும் “தொழிலாளருக்குரிய சம்பளத்துக்கு” அதிகமல்லாத சம்பளம் பெறச் செய்த, அனைத்தையுமே ஆயுதமேந்திய பாட்டாளி வர்க்கத்தின் கண்காணிப்பிலும் தலைமையிலும் இருத்த வேண்டும். இதுவே நமது உடனடிக் குறிக்கோள். இதுவே நமக்குத் தேவையான அரசும், பொருளாதார அடித்தளமும். இதுதான் நாடாளுமன்ற முறையை ஒழித்து, பிரதிநிதித்துவ அமைப்புக்களை விடாமல் பாதுகாப்பதற்கும் வழிவகுக்கும். இதுதான் இந்த அமைப்புக்களை முதலாளித்துவ வர்க்கம் ஆழ்த்திய இழிநிலையிலிருந்து உழைக்கும் வர்க்கங்களை விடுவிக்கும்.

4. தேசிய ஐக்கியத்தை ஒழுங்கமைப்பது

‘…தேசிய ஒழுங்கமைப்புப் பற்றிய சுருக்கமான விபரிப்பில் (இந்த ஒழுங்கமைப்பை அபிவிருத்திசெய்ய கம்யூனுக்கு அவகாசம் கிடைக்கவில்லை) மிகச் சிறிய கிராமத்துக்கும் கூட கம்யூன்தான் உரிய அரசியல் வடிவமாய் இருக்குமென்று அது மிகத் தெளிவாகக் குறிப்பிடுகிறது…’ கம்யூன்கள் பாரிசில் ‘தேசியப் பிரதிநிதிகளின் குழுவைத்’ தேர்ந்தெடுப்பதாய் இருந்தன.

…ஒரு சிலவே ஆயினும், மத்திய அரசாங்கத்திடம் இனியும் எஞ்சி இருக்கக்கூடிய முக்கியமான பணிகள் வேண்டுமென்றே திரித்துக் கூறப்பட்டுள்ளது போல ஒழித்துக் கட்டப்பட்டுவிடமாட்டா. மாறாக, கம்யூனுடைய, அதாவது முற்றிலும் அதற்குப் பொறுப்புக் கூற வேண்டியவர்களான அதிகாரிகளுக்கு அவை மாற்றப்படும்…

…தேசிய ஒற்றுமை குலைக்கப்பட்டுவிடாது; மாறாக, கம்யூன் அமைப்பால் அது ஒழுங்கமைக்கப்படும். இந்த ஒற்றுமையின் உருவகமாய் வேடம் தரித்து, ஆனால் தேசத்தை சாராமல் சுயேச்சையானதாகவும் அதற்கு மேம்பட்டதாகவும் இருக்க விரும்பிய அரசு அதிகாரம், தேசத்தின் உடலில் ஒரு ஒட்டுண்ணியாக வளர்ந்து வேண்டாத தசைப் பிண்டமாய் அமைந்த அரசு அதிகாரம் ஒழிக்கப்படுவதன் மூலம் தேசிய ஐக்கியம் யதார்த்த உண்மையாக்கப்படும். பழைய அரசாங்க அதிகாரத்தின் வெறும் அடக்கு முறை உறுப்புக்கள் வெட்டியெறியப்பட்டு, அதேபோதில் அதன் நியாயமான பணிகள் சமுதாயத்தை விட மேம்பட்டதாய் நிற்க உரிமை கொண்டாடிய இந்த அதிகாரத்திடமிருந்து பிடுங்கப்ப்பட்டு, சமுதாயத்துக்குப் பொறுப்புக் கூற வேண்டியவர்களான ஊழியர்கள் கைவசத்தில் மீட்டளிக்கப்படும்.

புரூதோன்

மார்க்சின் இந்தக் கருத்துரைகளை தற்கால சமூக-ஜனநாயகத்தின் சந்தர்ப்பவாதிகள் புரிந்து கொள்ள எந்த அளவுக்குத் தவறிவிட்டார்கள் அல்லது மறுத்துவிட்டார்கள் என்றால் இன்னும் பொருத்தமாயிருக்கும் என்பதற்கு ஓடுகாலி பேர்ன்ஸ்டைனது காட்டிக்கொடுப்பினால் புகழ் பெற்ற சோலிசத்தின் முன்நிபந்தனைகளும் சமூக ஜனநாயகவாதிகளுடைய கடமைகளும் என்னும் புத்தகம் தெளிவான எடுத்துக்காட்டாகும். மார்க்சின் மேற்கூறிய வாசகம் குறித்துத்தான் பேர்ன்ஸ்டைன் இதில் பின்வருமாறு எழுதினார்; “இதன் அரசியல் உள்ளடக்கத்தைப் பொறுத்தவரை’’ இந்த வேலைத் திட்டம் “இதன் சாராம்சக் கூறுகள் யாவற்றிலும் புரூதோனின் (Proudhon) கூட்டாட்சிக் கோட்பாட்டை மிகவும் ஒத்திருக்கிறது… மார்க்சுக்கும் ‘குட்டி முதலாளித்துவ’ புரூதோனுக்குமிடையே [சிலேடைப் பொருளில் தொனிக்க வேண்டுமென்றே ‘குட்டி முதலாளித்துவ’ என்னும் சொல்லை பேர்ன்ஸ்டைன் அடைப்புகுறிகள் இட்டு உபயோகிக்கிறார்] ஏனைய யாவற்றிலும் எவ்வளவுதான் வேறுபாடு இருப்பினும், இந்த விவகாரங்களில், அவர்களுடைய வாத முறைகள் மிகமிக நெருங்கி வந்துவிடுகின்றன’’. நகர சபைகளுடைய முக்கியத்துவம் அதிகரித்து வருவது மெய்தான் என்று பேர்ன்ஸ்டைன் மேலும் தொடர்ந்து எழுதுகிறார். இருப்பினும் “மார்க்சும் புரூதோனும் நினைக்கிற மாதிரி தற்கால அரசுகளை இப்படி அடியோடு கலைத்து [இல்லாதொழித்து] அவற்றின் ஒழுங்கமைப்பை இப்படி முற்றிலும் மாற்றுவதும் [மாற்றியமைப்பது] (கம்யூன்களால் அனுப்பப்பட்ட பிரதிநிதிகளாலான மாநில அல்லது மாவட்டச் சபைகளுடைய பிரதிநிதிகளைக் கொண்டு தேசிய சபை அமைக்கப்படும்படி), இதன் விளைவாய் தேசிய பிரதிநிதித்துவத்துக்கான பழைய முறையை மறையச் செய்வதுமே ஜனநாயகத்தின் முதற் பணியாய் இருக்குமென்பது சந்தேகத்துக்குரியதாகவே எனக்குத் தோன்றுகிறது’’. (பேர்ன்ஸ்டைன், முன்நிபந்தனைகள், ஜேர்மன் பதிப்பு, 1899, பக்கங்கள் 134, 136.)

எட்வார்ட் பேர்ன்ஸ்டைன்

“ஒட்டுண்ணியாக வளர்ந்து வேண்டாத தசைப் பிண்டமாய் அமைந்த அரசு அதிகாரத்தை ஒழிப்பது’’ பற்றிய மார்க்சின் கருத்தோட்டங்களை புரூதோனின் கூட்டாட்சிக் கோட்பாட்டுடன் ஒப்பிட்டுக் குழப்புவது முழுக்க முழுக்க அபாண்டமேயாகும்! ஆனால் இந்தக் குழப்பம் ஏதோ தற்செயலாய் நிகழ்வதல்ல. ஏனெனில் மத்தியத்தியவாத்துக்கு எதிராய் கூட்டாட்சிக் கோட்பாடு குறித்து இங்கு மார்க்ஸ் பேசவேயில்லை. எல்லா முதலாளித்துவ நாடுகளிலும் செயல்படும் பழைய, முதலாளித்துவ அரசு எந்திரத்தை நொருக்குவது பற்றியே பேசுகிறார் என்பது எந்தச் சந்தர்ப்பவாதிக்கும் புலப்படாதுதான்.

இந்த சந்தர்ப்பவாதிக்கு புலப்படுவதெல்லாம் குட்டி முதலாளித்துவ அற்பத்தனமும் ‘சீர்திருத்தவாத’ சக்தியும் மலிந்துவிட்ட சூழலில் தன்னைச் சுற்றிலும் தான் காண்பதுதான், அதாவது ‘நகர சபைகள்தான்’! பாட்டாளி வர்க்கப் புரட்சி குறித்து சிந்திக்கும் பழக்கத்தையே இந்தச் சந்தர்ப்பவாதி விட்டொழித்துவிட்டார்.

இது நகைக்கத்தக்கதே. ஆனால் இங்கு மிகவும் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவெனில் இந்த விவகாரத்தில் யாருமே பேர்ன்ஸ்டைனை எதிர்த்து வாதாடவில்லை. பேர்ன்ஸ்டைன் பலரால் மறுக்கப்பட்டார். முக்கியமாய் ரஷ்ய வெளியீடுகளில் பிளெக்ஹானோவையும் ஐரோப்பிய வெளியீடுகளில் காவுட்ஸ்கியையும் குறிப்பிடலாம். ஆயினும், இந்த விவகாரத்தில் மார்க்சை, பேர்ன்ஸ்டைன் இவ்வாறு திரித்தது குறித்து இவர்களில் எவரும் எதுவுமே கூறியதில்லை.

இந்த சந்தர்ப்பவாதி புரட்சிகர வழியில் சிந்திக்கவும் புரட்சி குறித்து நினைக்கவும் அறவே மறந்துவிட்டதால், அவர் “கூட்டாட்சி முறையை” மார்க்சுக்குரியதாகக் கற்பித்துக் கூறி, அராஜகவாதத்தின் மூலவரான புரூதோனுடன் மார்க்சை இணைத்துக் குழப்புகிறார். மரபுவழி மார்க்சிசவாதிகள் என்றும் புரட்சிகர மார்க்சிச தத்துவத்தின் காவலர்கள் என்றும் கூறிக் கொள்ளும் காவுட்ஸ்கியையும் பிளெக்ஹானோவையும் பொறுத்தவரை, இந்த விவகாரத்தில் அவர்கள் மௌனம் சாதித்துவிடுகின்றனர்! மார்க்சிசத்துக்கும் அராஜகவாதத்துக்கும் இடையேயுள்ள வேறுபாடு குறித்து அளவு மீறிக் கொச்சையான கருத்துக்களை வெளியிடுவது காவுட்ஸ்கிவாதிகள் மற்றும் சந்தர்ப்பவாதிகள் ஆகிய இருசாராருக்குமுரிய குணாதிசயமாய் இருப்பதற்கான மூல காரணங்களில் ஒன்று இங்கு அடங்கியுள்ளது. இதுபற்றி நாம் பின்னர் திரும்பவும் விவாதிப்போம்.

கம்யூனுடைய அனுபவம் குறித்து மார்க்ஸ் கூறும் மேற்கண்ட கருத்துரைகளில் கூட்டாட்சி முறையின் சாயல் சிறிதும் காணப்படவில்லை. சந்தர்ப்பவாதி பேர்ன்ஸ்டைன் காணத்தவறிய அதே விவரத்தில் தான் மார்க்ஸ் புரூதோனுடன் உடன்பாடு கொண்டிருந்தார். பேர்ன்ஸ்டைன் அவர்களிடையே ஒற்றுமை இருப்பதாக கண்ட விடயத்தில் தான் மார்க்ஸ் புரூதோனுடன் கருத்து வேறுபாட்டை கொண்டிருந்தார்.

தற்கால அரசு எந்திரம் ‘நொருக்கப்பட வேண்டும்’ என்ற இருவருடைய நிலைப்பாட்டிலும் மார்க்ஸ் புரூதோனுடன் உடன்பாடு கொண்டிருந்தார். இந்த விடயத்தில் மார்க்சிசத்துக்கும் அராஜகவாதத்துக்கும் (புரூதோன், பக்கூனின் ஆகிய இருவரின் அராஜகவாதத்துக்கும்) இடையே கருத்து ஒன்றுமை இருப்பதைச் சந்தர்ப்பவாதிகளோ காவுட்ஸ்கிவாதிகளோ காணவிரும்பவில்லை. ஏனெனில் இங்கிருந்து தான் அவர்கள் மார்க்சிசத்திடமிருந்து விலகி ஓடினர்.

கூட்டாட்சி முறை பற்றிய பிரச்சனையில்தான் மார்க்ஸ் புரூதோனுடனும் பக்கூனினுடனும் கருத்து வேறுபாடு கொண்டிருந்தார் (பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை பற்றி குறிப்பிடத்தேவையில்லை). கூட்டாட்சி முறை அராஜகவாதத்தின் குட்டி முதலாளித்துவக் கருத்துக்களிலிருந்து தர்க்கரீதியாக இயல்பாய் பெறப்படும் ஒன்று. மார்க்ஸ் ஒரு மத்தியத்துவவாதி. மேலே தரப்பட்ட அவருடைய கருத்துரைகளில் மத்தியத்துவத்திலிருந்து எவ்விதத்திலும் அவர் விலகிச் சென்றுவிடவில்லை. அரசு பற்றிய அற்பத்தனமான ‘மூடபக்தியில்’ மூழ்கிக் கிடப்போரே முதலாளித்துவ அரசு எந்திரத்தை அழிப்பது மத்தியத்துவத்தை அழிப்பதாகும் என நினைத்துத் தவறிழைக்க முடியும்!

பாட்டாளி வர்க்கத்தினரும் ஏழை விவசாயிகளும் அரசு அதிகாரத்தை தமது கைகளில் எடுத்துக்கொண்டு, முற்றிலும் சுதந்திரமாய் தம்மை கம்யூன்களில் ஒழுங்கமைத்துக் கொண்டு, மூலதனத்தை தாக்குவதிலும், முதலாளிகள் எதிர்ப்பை அடக்குவதிலும் தனியார் உடைமைகளாயிருக்கும் இரயில் பாதைகளையும், ஆலைகளையும், நிலத்தையும் இன்ன பிறவற்றையும் தேசம் அனைத்தினதும், சமுதாயம் முழுவதினதும் உடைமைகளாய் மாற்றுவதிலும் எல்லாக் கம்யூன்களுடைய செயலையும் ஒன்றுபடுத்திக் கொண்டால், அது மத்தியத்துவம் இல்லாமல் வேறு என்ன? இது சிறிதும் முரணில்லாத ஜனநாயக மத்தியத்துவத்துவமும், பாட்டாளி வர்க்க மத்தியத்துவமும் இல்லாமல் வேறு என்ன?

தன்னியல்பான முறையிலான மத்தியத்துவம், கம்யூன்கள் தாமே தன்னியல்பாக முன்வந்து ஒரு தேசமாய் ஒன்றிணைவது, முதலாளித்துவ ஆதிக்கத்தையும் முதலாளித்துவ அரசு எந்திரத்தையும் அழித்திடுவதற்காக பாட்டாளி வர்க்க கம்யூன்கள் தன்னியல்பாக ஒன்றாய் ஒன்றிவிடுவது சாத்தியமே என்பதை பேர்ன்ஸ்டைன் நினைத்துக்கூடப் பார்க்க இயலாதவராய் இருக்கிறார். அனைத்து குட்டி முதலாளித்துவ அற்பவாதிகளையும் போல பேர்ன்ஸ்டைன் மத்தியத்துவத்தை முற்றிலும் மேலிருந்து, முற்றிலும் அதிகாரிகளாலும் இராணுவக் கும்பலாலும் மட்டுமே பலவந்தமாக திணிக்கப்பட்டு நிலை நிறுத்தப்படும் ஒன்றாகவே கற்பனை செய்துகொள்கிறார்.

மார்க்ஸ் தமது கருத்துக்கள் திரித்துப் புரட்டப்படுமென முன்னறிந்து வைத்திருந்தால் போல, கம்யூனானது தேசிய ஐக்கியத்தை அழிக்க விரும்பிற்று, மத்திய அதிகாரத்தை ஒழிக்க விரும்பிற்று என்னும் குற்றச்சாட்டு உணர்வுடனே வேண்டுமென்றே செய்யப்படும் ஏமாற்றாகுமென தெளிவுபட வலியுறுத்தினார். வேண்டுமென்றே தான் மார்க்ஸ் ‘தேசிய ஐக்கியம்… ஒழுங்கமைக்கப்பனவேண்டும்’ என்று குறிப்பிட்டார். முதலாளித்துவ, இராணுவ, அதிகாரத்துவ மத்தியத்துவத்தை எதிர்த்து நனவான, ஜனநாயக வழிப்பட்ட, பாட்டாளி வர்க்க மத்தியத்துவத்தை வலியுறுத்தும் பொருட்டு இவ்வாறு குறிப்பிட்டார்.

ஆனால் கேட்க விரும்பாதவர்களைப் போல் இருக்கும் செவிடர்கள் வேறு யாருமில்லை. அரசு அதிகாரம் அழிக்கப்பட வேண்டும், ஒட்டுண்ணியாக வளர்ந்து வேண்டாத தசைப் பிண்டமாய் இருப்பதை வெட்டியெறிய வேண்டும் என்பதுதான் தற்கால சமூக- ஜனநாயகத்தின் சந்தர்ப்பவாதிகள் கேட்க விரும்பாத உண்மையாகும்.

5. இந்த ஒட்டுண்ணி அரசை ஒழித்தல்

இப்பொருள் குறித்து மார்க்ஸ் கூறியதை ஏற்கனவே மேற்கோள் காட்டியுள்ளோம். இப்பொழுது கூடுதலாய் மேலும் சிலவற்றைத் தர வேண்டும்.

“…வரலாற்றின் புதிய படைப்புகள், அவை ஓரளவு உருவ ஒற்றுமை கொண்டிருக்கக் கூடிய சமுதாய வாழ்வின் பழைய, மரபற்று மறைந்துவிட்ட வடிவங்களின் நேர்பிரதிகளாக தவறாய்க் கருதப்படுவது பொதுவாக புதிய படைப்புகளுக்கு ஏற்படும் தலைவிதியாகும்’’ என்று அவர் எழுதினார். “இவ்வாறுதான், நவீன அரசு அதிகாரத்தை தகர்த்திடும் [நொருக்கும்] இந்தப் புதிய கம்யூனும் மத்திய காலக் கம்யூன்களுடைய மறுபிறவியாய்… சிறு அரசுகளுடைய கூட்டமைப்பாய் (மாண்டிஸ்கியேவும் ஜிரோண்டுவாதிகளும் கற்பனை செய்தவற்றைப் போன்றதாக)… அதீத மத்தியத்துவத்துக்கு எதிரான பழைய போராட்டத்தின் மிகைப்பட்ட வடிவமாக கருதப்பட்டிருக்கிறது.

…ஒட்டுண்ணியாக வளர்ந்து வேண்டாத தசைப் பிண்டமானது, சமூக செலவில் உண்டு கொழுத்து, சமுதாயத்தின் சுதந்திரமான இயக்கத்தை தடுத்திடும் ‘அரசானது’ இதுவரை உறிஞ்சியிழுத்துக் கொண்ட சக்திகள் அனைத்தையும் கம்யூன் அரசியல் அமைப்பு சமுதாய உடலுக்கு மீட்டளித்திருக்கும். இந்த ஒரு செயலாலேயே பிரெஞ்சு நாட்டின் மீளுருவாக்கம் ஆரம்பித்து வைக்கப்பட்டிருக்கும்…

…கம்யூன் அரசியல் அமைப்பு கிராமப்புற உற்பத்தியாளர்களை அவர்களது மாவட்டத்தின் மத்திய நகர்களது புத்திஜீவித தலைமைக்கு கீழ் கொண்டு வந்திருக்கும்; அங்கே நகர உழைப்பாளிகளின் வடிவில் அவர்களது நலன்களின் இயற்கையான காப்பாளர்களை கிடைக்க செய்திருக்கும். கம்யூன் இருப்பதானது இயல்பாகவே பிரதேச சுயாட்சி நிர்வாகத்தைக் குறிப்பதாகும். ஆனால் பிரதேச சுய ஆட்சி இனி அரசு அதிகாரத்தின் எதிர்ப்பலமாக இருக்காது, ஏனென்றால் அரசு அதிகாரமே இப்பொழுது தேவையற்றதாகிவிடும்.

“ஒட்டுண்ணியாக வளர்ந்து வேண்டாத தசைப் பிண்டமாய்” விளங்கும் “அரசு அதிகாரத்தைத் தகர்த்திடல்”, அதை “வெட்டியெறிதல்”, அதை “நொருக்குதல்”; ”அரசு அதிகாரம் இப்பொழுது தேவையற்றதாகி விடுதல்” இவையே கம்யூனுடைய அனுபவத்தை மதிப்பிடுகையிலும் பகுத்தாராய்கையிலும் அரசு குறித்து மார்க்ஸ் உபயோகிக்கும் வார்த்தை தொடர்களாகும்.

இவை யாவும் அரை நூற்றாண்டுக்குச் சற்றுக் குறைவான காலத்துக்கு முன்பு எழுதப்பட்டவை. இவற்றை, திரிக்கப்படாத மார்க்சிசத்தை பெருந்திரளான மக்களுக்கு தெரியப்படுத்த இன்று அகழ்வாய்வு நடத்திப் புதைபொருள் தேடுவது போலத் தேடிப் பிடித்தாக வேண்டியிருக்கிறது. தம் வாழ்நாளில் நடைபெற்ற கடைசிப் பெரும் புரட்சியை கண்ணுற்றதிலிருந்து மார்க்ஸ் வகுத்தளித்த முடிவுகள், அடுத்த பெரிய பாட்டாளி வர்க்கப் புரட்சிகளுக்குரிய காலம் பிறந்துவிட்ட ஒரு நேரத்தில் மறக்கப்பட்டுவிட்டன.

…கம்யூனுக்கு முந்திய எல்லா அரசாங்க வடிவங்களும் சாராம்சத்தில் அடக்கி ஒடுக்கும் தன்மையானதாகவே இருந்திருக்கையில், கம்யூன் மட்டும் மிகுந்த நெகிழ்வுடைய அரசியல் வடிவமாய் இருந்ததென்பதை கம்யூனுக்கு அளிக்கப்பட்டிருக்கும் பலவகை விளக்கங்களும், கம்யூனில் வெளிப்பட்ட பலவகை நலன்களும் காட்டுகின்றன. அதன் உண்மையான இரகசியம் இதில்தான் அடங்கியிருந்தது; சாராம்சத்தில் அது தொழிலாள வர்க்க அரசாங்கமாகும். உற்பத்தியாளர் வர்க்கம் அபகரிப்பாளர் வர்க்கத்தை எதிர்த்து நடத்திய போராட்டத்தின் விளைவாகும். இது உழைப்பின் பொருளாதார விடுதலையை பூர்த்திசெய்யக்கூடிய இறுதியாகக் கண்டுபிடிக்கப்பட்ட அரசியல் வடிவமாகும்…

இந்தக் கடைசி நிபந்தனை இல்லையேல் கம்யூன் அரசியல் அமைப்பு சாத்தியமற்றதாகவும் பகற்கனவாகவுமே இருந்திருக்கும்…

சமுதாயத்தை சோசலிச முறையில் மாற்றியமைப்பதற்குரிய அரசியல் வடிவங்களைக் “கண்டுபிடிப்பதில்” கற்பனைவாதிகள் முனைந்திருந்தனர். அரசியல் வடிவங்களைப் பற்றிய பிரச்சனையையே அராஜகவாதிகள் முற்றிலும் புறக்கணித்து விட்டனர். தற்கால சமூக ஜனநாயகத்தின் சந்தர்ப்பவாதிகள் நாடாளுமன்ற ஜனநாயக அரசுக்குரிய முதலாளித்துவ அரசியல் வடிவங்களே இறுதி வரம்பென்றும் இவற்றுக்கு அப்பால் அடியெடுத்து வைக்கக் கூடாதென்றும் கருதிவிட்டனர். இந்த “முன்மாதிரியின்” முன் மண்டியிட்டு வணங்கி மண்டையை உடைத்துக் கொண்டனர். இந்த வடிவங்களைத் தகர்த்திட வேண்டுமென்ற முயற்சி எதனையும் அராஜகவாதமெனக் கூறி கண்டித்தனர்.

அரசு இல்லாதொழிந்தே தீருமென்றும், அதன் மறைவுக்கான இடைக்கால வடிவம் (அரசுக்கும் அரசு இல்லாததற்கும் இடைப்பட்ட காலத்துக்குரிய வடிவம்) “ஆளும் வர்க்கமாய் ஒழுங்கமைந்த பாட்டாளி வர்க்கமாகவே” இருக்குமென்றும் சோசலிசம் மற்றும் அரசியல் போராட்டம் இவற்றின் முழுவரலாற்றிலுமிருந்து மார்க்ஸ் முடிவுக்கு வந்தார். ஆனால் இந்த வருங்காலத்திற்குரிய அரசியல் வடிவங்களை மார்க்ஸ் கண்டுபிடிக்க முற்படவில்லை. பிரெஞ்சு வரலாற்றை உற்று நோக்கி, அதனைப் பகுத்தாய்ந்து, 1851 ஆம் ஆண்டிலிருந்து பெறப்படும் முடிவினை, அதாவது முதலாளித்துவ அரசு அமைப்பு அழிக்கப்படுவதை நோக்கி விடயங்கள் முற்றிச் சென்றன என்னும் முடிவினை எடுத்துரைப்பதோடு நின்றுவிட்டார்.

பின்னர் பாட்டாளி வர்க்கத்தின் பரந்த புரட்சிகர இயக்கம் வெடித்ததும் மார்க்ஸ், இவ்வியக்கம் தோல்வியுற்றதென்றாலும், குறுகிய காலத்துக்கே நடந்ததென்றாலும், தெளிவாகவே பலவீனங்களை கொண்டிருந்ததென்றாலும், அது கண்டுபிடித்த வடிவங்களை ஆராய முற்பட்டார்.

உழைப்பானது பொருளாதார விடுதலை பெறும் பொருட்டு பாட்டாளி வர்க்கப் புரட்சியால் “இறுதியாகக் கண்டுபிடிக்கப்பட்ட” வடிவம் தான் கம்யூன்.

முதலாளித்துவ அரச அமைப்பை நொருக்குவதற்கு பாட்டாளி வர்க்கப் புரட்சியால் மேற்கொள்ளப்பட்ட முதல் முயற்சியே கம்யூன். நொருக்கப்படும் அரசு எந்திரத்திற்குப் பதிலாய் அமையக் கூடியதாகவும் அமைந்தாக வேண்டியதாகவும் “இறுதியாகக் கண்டுபிடிக்கப்பட்ட” அரசியல் வடிவம் இதுவே.

1905ஆம் ஆண்டு, 1917ஆம் ஆண்டு ரஷ்ய புரட்சிகள் கம்யூனின் பணியை வேறுவிதச் சூழ்நிலைகளிலும் வேறுவித நிலைமைகளிலும் தொடர்ந்து நடத்திச் சென்றதையும், மார்க்சின் உன்னத வரலாற்று பகுத்தாய்வை மெய்ப்பித்து உறுதி செய்ததையும் பின்னர் நாம் காண்போம்.

Loading