இந்திய மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் தாக்குதல்களும் இந்திய மற்றும் இலங்கை மீனவர்களுக்கு முன்நோக்கிய பாதையும்

ஜனவரி 18 அன்று இரவு இலங்கையின் வடக்கு கடற்பகுதியில் மீன் பிடித்துக்கொண்டிருந்த இந்திய மீனவர்களின் படகு ஒன்று இலங்கை கடற்படையால் மூழ்கடிக்கப்பட்டு அதிலிருந்த நான்கு இந்திய மீனவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சித்திரவதை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாட்டு மீனவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

மீனவர்களை சித்திரவதை செய்து படுகொலை செய்தமைக்கு ஆதாரமாக அவர்களது சடலங்களில் ரத்தக்கறை மற்றும் காயங்கள் இருப்பதாக தமிழ்நாட்டின் ராமேஸ்வரத்தில் உள்ள மீனவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். தமிழகத்தின் தங்கச்சிமடத்தை சேர்ந்த மெசியா (30), மண்டபத்தை சேர்ந்த சாம்சன் டார்வின் (28), உச்சிப்புளியைச் சேர்ந்த நாகராஜன் (52) மற்றும் செந்தில்குமார் (32) ஆகியோரே உயிரிழந்தவர்கள் ஆவர். இதில் சாம்சன் டார்வின், இலங்கையில் இனவாத யுத்த்த்தின் இறுதிக் கட்டத்தில் தப்பிச்சென்று மண்டபம் அகதிகள் முகாமில் வாழ்ந்தவராவார். அவருக்கு பிறந்து 20 நாளே ஆன குழந்தையும் இருக்கின்றது.

மெசியா, செந்தில் குமார், சாம்சன் டார்வின் மற்றும் நாகராஜன்

இந்த தாக்குதல்கள் இந்திய மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் தசாப்த கால அடக்குமுறைகளில் அண்மையதாகும். எல்லை தாண்டி வந்து மீன் பிடித்ததாக கூறி தாம் கைது செய்த தமிழக மீனவர்களின் படகு ஒன்றை, ரோந்து சென்ற இலங்கை கடற்படையினர் தமது படகு மூலம் இடித்து மூழ்கடித்ததை கண்டதாக, தப்பிச் சென்ற இந்திய மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

அதே வேளை, மரணமடைந்த மீனவர்கள், தமது படகில் இருந்த வயர்லெஸ் கருவி மூலம், இலங்கை கடற்படை தங்களது படகை இடிப்பதாகவும், தங்களை காப்பற்ற வருமாறும் தகவல் கொடுத்துள்ளனர். இதுவரை காலமுமான மரண அனுபவங்களால் பீதியடைந்திருந்த இந்திய மீனவர்கள், சக மீனவர்களை காப்பற்ற முடியாமல் தவித்துள்ளனர்.

சாம்சன் டார்வினின் மனைவி விஜயலட்சுமி (இடது) மற்றும் அவரது குழந்தையும் (படம்: உ. பாண்டி, விகடன்)

பி.பி.சி. தமிழ் செய்திச் சேவைக்கு கருத்து தெரிவித்த போது, சம்பவத்தை நியாயப்படுத்த முயற்சித்த இலங்கை கடற்படை பேச்சாளர் கேப்டன் இந்திக்க டி சில்வா, இலங்கை கடற்பரப்புக்குள் சட்டவிரோதமாக நுழைந்த ஐம்பதுக்கும் அதிகமான இந்திய மீன்பிடி படகுகளை பிடிக்க முற்பட்ட போது, குறித்த படகு கடற்படையின் படகை மோதிவிட்டு தப்பிச்செல்ல முற்பட்ட போது கவிழ்ந்ததாக தெரிவித்துள்ளார். இந்திய படகுகள், இலங்கை கடற்படையிடம் இருந்து தப்பிப்பதற்காக வழமையாகவே கடற்படை படகை சேதப்படுத்துவதாக, அவர் கேலிக்கூத்தான முறையில் கூறிக்கொண்டார்.

கடற்படை பேச்சாளரின் கூற்று, அப்பட்டமான பொய்யாகும். பிரிவினைவதாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தம் தொடங்கிய காலத்தில் இருந்தே, எல்லை தாண்டியதாக கூறப்படும் இந்திய மீனவர்கள், இலங்கை கடற்படையால் கொல்லப்படுவதும், சித்திரவதை செய்யப்படுவதும் மற்றும் கைது செய்து இலங்கை சிறைகளில் அடைக்கப்படுவதுமே பல தசாப்த கால வரலாறு ஆகும். இந்திய மீனவர்களின் பல மில்லியன் பெறுமதியான நூற்றுக்கணக்கான இளுவைப் படகுகள் பறிமுதல் செய்யப்பட்டு யாழ்ப்பாணத்து கடற்கறைகளில் வருடக் கணக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணம் காரைநகரில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களுக்கு சொந்தமான படகுகள் (Photo: WSWS media) [Photo: WSWS]

இந்த படுகொலைகளை நியாயப்படுத்த முயன்ற இலங்கை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவனந்தா, இந்திய மீனவர்களால் இலங்கை மீனவர்களுக்கு ஏற்படும் பாதிப்பை சுரண்டிக்கொண்டார். எல்லை தாண்டிவரும் இந்திய மீனவர்கள் எமது கடற்பரப்பிற்குள் நுழைந்து சட்டவிரோதமானதும் அத்துமீறியதும் தடைசெய்யப்பட்டதுமான தொழில் நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருகின்றனர், என அவர் குற்றம்சாட்டினார்.

இலங்கையின் வடக்கை ஆக்கிரமித்துக்கொண்டுள்ள கடற்படையானது புலிகளுக்கு எதிரான போரின் போது, படுகொலைகள், ஆட்கடத்தல்கள் மற்றும் காணாமல் ஆக்குதல்களுக்கு பேர்போனதாகும். டக்ளஸ் தேவானந்தாவும் அவரது ஈழ மக்கள் ஜனநாயக கட்சியும் (ஈ.பி.டி.பி.) இலங்கை அரசாங்கங்களின் பங்காளியாக இருப்பது மட்டுமன்றி, யுத்த காலத்தில் இராணுவத்தினதும் கடற்படையினதும் துணைப்படைக் குழுவாக இயங்கியது.

மீனவர்கள் கொல்லப்பட்டமை, தமிழ்நாட்டில் பாரிய எதிர்ப்பலைகளை தூண்டிவிட்டுள்ளது. ஜனவரி 21 மற்றும் 23 ஆம் திகதிகளில் இராமேஸ்வரம் மீனவர்கள் வீதி மறியல் போராட்டத்தையும் உண்ணாவிரதத்தையும் நடத்தியதுடன் இலங்கை கடற்படையை கைதுசெய்யுமாறும் இலங்கை அரசாங்கம் நட்ட ஈடு வழங்கவேண்டும் என்றும் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இராமேஸ்வரத்தில் வீதி மறியலில் ஈடுபடும் மீனவர் குடும்பங்கள் (படம்: உ. பாண்டி, விகடன்)

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, வெகுஜன கோபத்தை தடுப்பதற்காக மரணித்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 10 இலட்சம் அற்பத் தொகையை வழங்கியுள்ளதோடு 'இச்சம்பவம் குறித்து இந்திய தூதரகத்தின் மூலம் உரிய விசாரணை மேற்கொள்ள வலியுறுத்தி” இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதி உள்ளதாக தெரிவித்துள்ளார். தமிழக மீன்வளத்துறை அமைச்சரான டி. ஜெயக்குமார் இலங்கை கடற்படையினருக்கு தண்டனை வாங்கித் தருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக குறிப்பிட்டுள்ளார்.

இது பற்றி இந்திய பாராளுமன்றத்தில் இரண்டு தமிழ் நாட்டு உறுப்பினர்கள் ஆவேசமாக பேசிய போதிலும், வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், இலங்கை அரசாங்கத்திற்கு கடும் கண்டனம் தெரவிக்கப்பட்டதாக அறிவித்த உடன் அமைதியாகவிட்டனர். தமிழகத்தின் ஏறத்தாழ எல்லா அரசியல் கட்சிகளும் கண்டனம் தெரிவிந்திருந்த அதே வேளை, இறந்தவர்களின் வீடுகளுக்கும் சென்றிருந்தனர். தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் மே மாதம் இடம்பெறவுள்ள நிலையில், இத்தகைய வாய்ச்சவடால்கள் தமது வாக்கு வங்கிகளை தக்கவைக்கும் பாசாங்குகள் மட்டுமே.

இந்திய மீனவர்களின் இளுவைப் படகுகள் குறிப்பாக இலங்கையின் யாழ்ப்பாண மாவட்ட கடல் பகுதிகளுக்குள் நுழைவதால் இலங்கை மீனவர்களின் வலைகளும் இயற்கை வளங்களும் நாசமாக்கப்படுவதாக தொடர்ச்சியான குற்றச்சாட்டுக்கள் இருந்து வருகின்றன. உண்மையில், தமிழக மீனவர்கள் தமது ஜிவனோபாயத்திற்காக, பல நூற்றுக்கணக்கான விசைப்படகுகளை உடமையாக வைத்துள்ள பெரிய முதலாளிகளிடம்’ நாள் கூலிக்கோ அல்லது வாரக் கூலிக்கோ மீன்பிடி தொழிலாளர்களாக உள்ளனர். படகு முதலாளிகள் அதிக இலாபம் ஈட்டுவதற்காக மீன்பிடி தொழிலாளர்கள் இலங்கையின் கடற்பகுதிக்குள் சென்று மீன் பிடிக்க நிர்ப்பந்திக்கப்படுகின்றனர்.

கடந்த ஆண்டு பல தடவை டசின் கணக்கான இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட நிலையில், டிசம்பரில் இந்திய மற்றும் இலங்கை அதிகாரிகளுக்கு இடையான பேச்சுவார்த்தையில், இரு நாட்டு கடற்படையும் கூட்டாக ரோந்து நடத்துவதாக முடிவெடுக்கப்பட்டுள்ளது. இந்த தீர்மானத்தின் நோக்கம், இந்திய மற்றும் இலங்கை மீனவர்களின் வாழ்வாதார பிரச்சினைகளுக்கு தீரவு வழங்குவதற்கு மாறாக, அவர்களை துப்பாக்கி முனையில் அச்சுறுத்துவதே என்பது, சமீபத்திய படுகொலைகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.

எல்லைக்கோடுகள் எதுவும் இல்லாத சுமார் 53-82 கிலோமீற்றர் அகலமுடைய பாக்கு நீரிணை குறுகிய கடற்பரப்பிலேயே இலங்கை மற்றும் இந்திய மீனவர்களும் மீன் பிடித்து வருகின்றனர்.

இலங்கை மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நடவடிக்கைகளை எடுக்காத இலங்கை தமிழ் அரசியல்வாதிகள், தமிழ் நாட்டிலும் வட இலங்கையிலும் உள்ள மீனவர்களுக்கு இடையிலான பிளவையும் மோதலையும் தூண்டிவிடுவதற்கு இந்திய மீனவர்களால் இலங்கை மீனவர்கள் பாதிக்கப்படும் சம்பவங்களை சுரண்டிக்கொள்கின்றனர்.

இந்திய மீனவர்கள் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் அமைந்துள்ள கச்சதீவுப்பகுதிகளில் மீன்பிடிக்க இலங்கை மீனவர்கள் எப்போதுமே எதிர்புத் தெரிவிக்கவில்லை. கச்சதீவு தொடர்பான ஒப்பந்தத்தின் ஆறாவது சரத்தில் அதற்கான அனுமதியும் உள்ளது. ஆனால் தற்போது, டக்ளஸ் தேவானந்தாவின் தூண்டுதலின் பேரில், வடமாகாண கடற்றொழிலாளர் சங்க சமாசங்களின் சம்மேளனத்தால் இந்திய மீனவர்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன.

கடந்த டிசம்பரில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோர், இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்புக்குள் மீன் பிடியில் ஈடுபடுவதை எதிர்த்து முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர் சங்கங்களுடன் கவனயீர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர். தமது செல்வாக்கு மண்டலம் பொறிந்து வருவதை கண்டு பீதியடைந்துள்ள தமிழ் முதலாளித்துவ கட்சிகள், அரசாங்கத்துக்கு எதிராக வளர்ச்சி கண்டுவரும் போராட்டங்களின் மீது அமர்ந்துகொண்டு இவ்வாறு தமது இருப்பை தக்கவைக்க முற்படுகின்றன.

பிரித்தானிய காலனித்துவ ஆட்சியாளர்கள் இந்தியத் துணைக்கண்டத்தை துண்டாடி தேசிய அரசுகளை ஸ்தாபித்தமை இந்த துன்பகரமான சம்பவங்களுக்கான ஒரு வரலாற்று காரணமாகும். 1974 இல் இந்தியப் பிரதமர் இந்திரா காந்தியும் இலங்கை பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயகவும் கடல் எல்லை வரையறை ஒப்பந்தம் (India Srilanka Internatioal Maritime Boundary Agreement) ஒன்றை செய்துகொண்டனர்.

1976 இல், இந்தியாவில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டிருந்த நிலையில், இரு நாடுகளின் வெளியுறவு அமைச்சகங்களுக்கு இடையே நடந்த கடிதப் பரிமாற்றத்தின் மூலம் “இதற்குமேல் இரு நாட்டு மீனவர்களும் தத்தமது நாட்டின் கடல் எல்லைக்கு உட்பட்டே மீன் பிடிக்க வேண்டும்” என்று தன்னிச்சையாக முடிவு செய்துகொண்டன.

1983ல் இலங்கையில் உள்நாட்டு யுத்தம் ஆரம்பித்த போது, அப்போதைய ஜே.ஆர். ஜயவர்த்தன அரசாங்கம் பயங்கரவாத தடைச் சட்டத்தை கொண்டு வந்ததுடன், கடல் வலய எல்லை பாதுகாப்புச் சட்டத்தின் பிரகாரம் காவல் வலய எல்லை ஒன்றினை பிரகடனம் செய்தது. அப்போதிருந்தே இந்திய மீனவர்கள் இத்தகைய தொடர்ச்சியான கொலை தாக்குதல்களை எதிர்கொண்டு வருகின்றனர். இதுவரை 265 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அரசாங்கம் கூறுகின்ற அதே வேள, 565 பேர் கொல்லப்பட்டுள்ளதாக மீனவர் தரப்பில் கூறப்படுகின்றது.

இலங்கை மீனவர்கள் இழுவை படகு மீன் பிடித்தலை எதிர்க்கிறார்களே தவிர, இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்புக்குள் மீன் பிடிப்பதை எதிர்க்கவில்லை. அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனை எல்லை பிரச்சனையும் அல்ல. மாறாக பெரும் மீன்படி நிறுவனங்களின் இலாப குவிப்பே மீனவர்களின் பிரச்சினை ஆகும்.

பெரும்பான்மையான வட இலங்கை மீனவர்கள் படுப்புவலைகள், இறால்கூடுகள், கரைவலைகள், வீச்சுவலைகள் மற்றும் நீள்வரிகைத்தூண்டில்கள் போன்ற பாரம்பரிய முறைகளையே பின்பற்றுகின்றனர். சிலர் கடலுக்குள் மூழ்கி கடல் அட்டை சேகரித்துப் பிழைக்கின்றார்கள். இந்திய மீனவர்களோ தமிழ்நாட்டு முதலாளிகளின் பாரிய டோலர்கள், இழுவைப் படகுகள் போன்ற கடல் வளங்களை பாதிக்கும் மீன்பிடி உபகரணங்களுடன் ஆழமற்ற இலங்கை வடக்கு கடலுக்குள் நுழைவதால் கடல் அடித்தளத்தில் காணப்படும் கடல் வளங்களை சேதமடையச் செய்வதுடன் மீன் இனக்கப்பெருக்கத்துக்கும் பாதிப்பை ஏற்படுத்துகின்றது. அத்தோடு இலங்கை மீனவர்களின் பெறுமதியான வலைகளும் சேதமாக்கப்படுகின்றன.

இந்திய மீனவர்கள், படகு உரிமையாளர்களாலும் கொள்வனவாளர்களாலும் சுரண்டப்படுவதைப் போலவே இலங்கையில், குறிப்பாக வடக்கில் உள்ள மீனவர்கள் மீன், கடலட்டை, இறால் மற்றும் நண்டு போன்றவற்றை ஏற்றுமதி செய்யும் வர்த்தகர்களால் மோசமாக சுரண்டப்படுகிறார்கள். இலபம் என்ற பொது எதிரியை எதிர்கொள்ளும் இந்த மீனவர்களின் பிரச்சினையை தீர்ப்பதற்கான ஒரே முற்போக்கான வழி, கடல்வளத்தை கூட்டாகவும் சமமாகவும் பகிர்ந்துகொள்வதே ஆகும்.

இந்தியா மற்றும் இலங்கையில் உள்ள தொழிலாள வர்க்கம், ஒடுக்கப்பட்ட விவசாயிகள் மற்றும் மீனவர்களை தம் பின்னால் அணிதிரட்டிக்கொண்டு, இரு நாடுகளிலும் முதலாளித்துவ அரசாங்கங்களை தூக்கிவீசி, தெற்காசிய சோசலிச குடியரசு ஒன்றியத்தின் ஒரு பகுதியாக இந்திய-இலங்கை சோசலிச குடியரசு ஒன்றியத்தை ஸ்தாபிக்கப் போராடுவதானது இந்த ஐக்கியத்தை ஸ்தாபிக்க அடித்தளம் அமைக்கும். இதற்காக, தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் மீனவர்கள் அனைத்து வகையான முதலாளித்துவ மற்றும் ஸ்ராலினிச, மாவோயிஸ்ட் மற்றும் சாதி கட்சிகளில் இருந்தும் விலகிக்கொள்வது அவசியமாகும்.

கொரோனா வைரஸ் பரவலுடன் உலகம் பூராவும் முதலாளித்துவ அரசாங்கங்கள் முன்னெடுக்கும் சிக்கன நடவடிக்கைக்கு எதிராக, பல நாடுகளிலும் தொழிலாளர்கள் தங்களது போராட்டத்தை தொழிற்சங்கங்களில் இருந்து சுயாதீனமாக தங்கள் கைகளில் எடுத்துக்கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழுவும் உலகம் முழுதும் உள்ள அதன் பகுதிகளான சோசலிச சமத்துவக் கட்சிகளும் மட்டுமே இந்த போராட்டங்களை சோசலிச முன்நோக்கின் கீழ் ஐக்கியப்படுத்த செயற்படுகின்றன.

சோசலிச சமத்துவக் கட்சியின் வழிகாட்டலின் கீழ் தோட்டத் தொழிலாளர்கள், சுகாதார ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களும் ஸ்தாபித்துக்கொண்டுள்ள நடவடிக்கை குழுக்களைப் போலவே இலங்கையின் வடக்கில் மீனவர்களும் நடவடிக்கை குழுவொன்றை ஸ்தாபித்துள்ளனர். இந்த நடவடிக்கை குழுவுடனும் அதன் கலந்துரையாடல்களிலும் இணைந்துகொள்ளுமாறும் நாம் அனைத்து கடற்தொழிலாளர்களுக்கும் அழைப்பு விடுக்கின்றோம்.

Loading