முன்னோக்கு

தேர்தல் சதி சதித்திட்டத்தின் மத்தியில், ஈரான் மீதான பேரழிவுகரமான போருக்கு ட்ரம்ப் அச்சுறுத்துகிறார்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

நவம்பர் 14 அன்று, உலக சோசலிச வலைத் தளம், ட்ரம்ப் ஈரானுக்கு எதிரான ஒரு போருக்குச் சதி செய்கிறாரா? என்ற கேள்வியைக் கேட்டது. பதில் வர நீண்ட காலம் எடுக்கவில்லை.

"வரவிருக்கும் வாரங்களில் ஈரானின் முக்கிய அணுசக்தி தளத்திற்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கான விருப்பத்தேர்வுகள்" பற்றிக் கலந்துரையாட கடந்த வியாழக்கிழமை அமெரிக்க ஜனாதிபதி தனது தேசிய பாதுகாப்பு அமைச்சரவையின் ஓவல் அலுவலகக் கூட்டத்தை கூட்டினார் என நியூ யோர்க் டைம்ஸ் நவம்பர் 16 கட்டுரையில் வெளிப்படுத்தியுள்ளது.

[Photo: WSWS]

ஜனாதிபதி தேர்தலின் முடிவுகளை செல்லுபடியற்றதாக்க ட்ரம்ப் தனது பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ள வேளையில் கூட்டப்பட்ட கூட்டத்தில், துணை ஜனாதிபதி மைக் பென்ஸ், வெளியுறவுத்துறை செயலர் மைக் பொம்பியோ, புதிதாக நியமிக்கப்பட்ட பதில் பாதுகாப்பு செயலாளர் கிறிஸ்தோபர் மில்லர் மற்றும் கூட்டுத் தலைமைத் தளபதி ஜெனரல் மார்க் மில்லி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த அச்சுறுத்தும் கலந்துரையாடலுக்கான போலிச்சாட்டு, கடந்த வாரம் சர்வதேச அணுசக்தி நிறுவனம் (International Atomic Energy Agency - IAEA) வெளியிட்ட அறிக்கையாகும், ஈரானின் குறைந்த செறிவூட்டப்பட்ட யுரேனியத்தின் இருப்பு 5,386 பவுண்டுகளை எட்டியுள்ளது, இது தெஹ்ரானுக்கும் உலகின் பிரதான சக்திகளுக்கும் இடையில் 2015 இல் எட்டப்பட்ட அணுசக்தி ஒப்பந்தத்தால் நிர்ணயிக்கப்பட்ட வரம்பை விட 12 மடங்கு அதிகமாகும் என்பதாகும். கூட்டு விரிவான செயல் திட்டம் என்று அழைக்கப்படும் இந்த ஒப்பந்தம், ஈரானின் குடிமக்கள் அணுசக்தி திட்டத்தை கடுமையாகக் குறைப்பதற்கும், ஆட்சி கடுமையான மேற்பார்வைக்கு அடிபணிவதற்கும், ஈரானை உடன்படவைக்க ஐக்கிய நாடுகள் சபையின் பொருளாதாரத் தடைகளை நீக்குவதை பேரம்பேசியயது.

ஈரானின் பொருளாதாரத்தை நெரிக்கவும், அதன் மக்களை அடிபணியச் செய்வதற்கும், இடைவிடாத இராணுவ ஆத்திரமூட்டல்களில் ஈடுபடுவதை நோக்கமாகக் கொண்ட முடிவில்லாத தொடர்ச்சியான ஒருதலைப்பட்ச பொருளாதாரத் தடைகளை சுமத்திய அதேவேளையில், ட்ரம்ப் 2018 ல் ஒப்பந்தத்தில் இருந்து விலகினார். இது கடந்த ஜனவரியில் பாக்தாத் சர்வதேச விமான நிலையத்தில் ஈரானிய தலைவரான காசிம் சுலைமானியின் ட்ரோன் படுகொலையில் உச்சக்கட்டத்தை அடைந்து, இரு நாடுகளையும் முழுமையான போரின் விளிம்பிற்கு கொண்டு வந்தது.

ஈரானின் யுரேனியம் கையிருப்பின் அளவு —2015 ஒப்பந்தத்திற்கு முன்பை விட இன்னும் சிறியதாக உள்ளது— எந்த மூலோபாய முக்கியத்துவம் கொண்டதும் இல்லை மற்றும் சர்வதேச சட்டத்தை மீறுவதையும் குறிக்கவில்லை. வாஷிங்டனின் ஒருதலைப்பட்ச பொருளாதாரத் தடைகளை ஐரோப்பா எதிர்க்கத் தவறியதற்கு பதிலளிக்கும் விதமாக தெஹ்ரான் கையிருப்பை அதிகரித்துள்ளது மற்றும் ஒப்பந்தத்தின் பிற வரம்புகளை மீறியுள்ளது. பிளவுபடுத்தக்கூடிய பொருளை உற்பத்தி செய்ய தேவையான 90 சதவிகிதத்திற்கும் அதிகமான அளவிற்கு யுரேனியத்தை வளப்படுத்த ஈரான் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை, அல்லது அவ்வாறு செய்வதற்கான திறன் உள்ளது என்பதற்கான ஆதாரங்களும் இல்லை. ஈரான் தனது அணுசக்தி திட்டம் அமைதியான நோக்கங்களுக்காக மட்டுமே என்று பலமுறை வலியுறுத்தியுள்ளதுடன், மாறாக எதையும் வெளிப்படுத்தும் சர்வதேச மேற்பார்வையையும் ஏற்றுக்கொண்டது.

அடுத்த வசந்த காலத்தின் தொடக்கத்தில் ஈரான் "ஒரு குண்டுக்கு நெருக்கமாக" இருக்கக்கூடும் என்று அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய அரசாங்கங்கள் முன்வைத்த பிரச்சார பொய்யை டைம்ஸ் கட்டுரை மீண்டும் கூறுகிறது. கட்டுரையின் ஆசிரியர்களில் எரிக் ஷ்மிட் மற்றும் டேவிட் சாங்கர் ஆகியோர் அடங்குவதாக சுட்டிக்காட்டுகிறது, புஷ் நிர்வாகத்தின் 2002 -2003 இல் ஈராக்கிற்கு எதிரான அமெரிக்க ஆக்கிரமிப்புப் போருக்கு சாக்குப்போக்காக புஷ் நிர்வாகத்தின் "பேரழிவு ஆயுதங்களை" புனையச் செய்வதற்கான டைம்ஸ் இன் பிரச்சாரத்திற்கு பங்களித்தவர்களே இவ் இருவருமாவர்.

டைம்ஸின் கூற்றுப்படி, "எந்தவொரு தாக்குதலும் —ஏவுகணை அல்லது சைபர் மூலமாக இருந்தாலும்— நிச்சயமாக தலைநகர் தெஹ்ரானுக்கு தெற்கே அமைந்துள்ள ஈரானின் மிகப்பெரிய யுரேனியம் செறிவூட்டல் நிலையமான நட்டான்ஸ் (Natanz) ஐ மையமாகக் கொண்டிருக்கும்".

"திரு. பொம்பியோ மற்றும் ஜெனரல் மில்லி ஆகியோர் இராணுவ விரிவாக்கத்தின் அபாயங்களை விவரித்த பின்னர், ஈரானுக்குள் ஒரு ஏவுகணை தாக்குதல் மேசையில் இல்லை என்று நம்பி அதிகாரிகள் கூட்டத்தை விட்டு வெளியேறினர் ... ” என டைம்ஸ் அறிக்கை பெயரிடப்படாத நிர்வாக அதிகாரிகளை மேற்கோளிட்டுள்ளது.

நல்ல நாணயம் போன்ற உத்தரவாதங்களை ஏற்றுக்கொள்ள எந்த காரணமும் இல்லை. ஒரு அமெரிக்க தாக்குதலுக்கான திட்டமிடல் தொடர்கிறது, மேலும் அதை நிறைவேற்றுவதற்கு திட்டவட்டமான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.

திங்களன்று பென்டகன், ஜேர்மனியின் ஸ்பான்ங்க்டாலெம் (Spangdahlem) விமானத் தளத்திலிருந்து அபுதாபியில் உள்ள அல்-தாஃப்ரா விமானத் தளத்திற்கு F-16 போர் படைப்பிரிவை மீண்டும் பணியில் அமர்த்தியதாக தெரிவித்துள்ளது. ஒரு விமானப்படை தளபதி ஊடகங்களுக்கு கூறியது என்னவென்றால், "பிராந்தியத்தில் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை மேம்படுத்துவதில் நட்பு நாடுகளுக்கும் கூட்டாளிகளுக்கும் CENTCOM இன் அர்ப்பணிப்பு" க்கான வழக்கமான மற்றும் அணு குண்டுகளை இலக்குகளுக்கு எதிராக தாக்கக்கூடியவை இந்த விமானத்தில் பொருத்தப்பட்டுள்ளது. இதற்கிடையில், அமெரிக்க கடற்படையின் Nimitz Carrier Strike Group பாரசீக வளைகுடாவில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது, அதே நேரத்தில் அமெரிக்கா 35,000 துருப்புக்களை இப்பகுதியில் நிறுத்தியுள்ளது.

இதற்கிடையில், அமெரிக்க வெளியுறவு மந்திரி மைக் பொம்பியோ பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் பேச்சுவார்த்தை நடத்த இன்று இஸ்ரேலுக்கு செல்கிறார், அவரும் ட்ரம்ப்பை போலவே, பல கிரிமினல் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ள அதிகாரத்திலிருந்து வெளியேற்றப்படும் அச்சுறுத்தலை முகங்கொடுக்கிறார். பொம்பியோவின் விஜயத்தில் பேசப்படும் முக்கிய பிரச்சினை —வாஷிங்டனின், தெஹ்ரான் எதிர்ப்பு அச்சின் ஒரு பகுதியாக இருக்கும் பாரசீக வளைகுடா எண்ணெய் முடியாட்சிகளில் அவர் அடுத்தடுத்த நிறுத்தங்களில் இருப்பதால்— ஈரானுக்கு எதிரான போராக இருக்கும். ட்ரம்ப் பதவியில் இருந்து தள்ளப்படுவதற்கு முன்னர் அமெரிக்கா ஈரானைத் தாக்குமா அல்லது அவ்வாறு செய்ய நெத்தன்யாகுவுக்கு வாஷிங்டன் உதவுமா என்பது குறித்த ஊகங்களால் இஸ்ரேலிய பத்திரிகைகள் நிரம்பியுள்ளன.

ஒரு விடயம் நிச்சயம். நட்டான்ஸ் அல்லது வேறு எந்த ஈரானிய அணுசக்தி நிலையத்தின் மீதுமான குண்டுவெடிப்பு என்பது உலக வரலாற்று பரிமாணத்தில் ஒரு போர்க்குற்றமாகும். ஆயிரக்கணக்கானவர்களை —பல பத்தாயிரக்கணக்கானவர்கள் இல்லையென்றாலும்— முற்றிலுமாக கொல்ல அச்சுறுத்துகிறது, மேலும் யுரேனியம் ஹெக்ஸாஃப்ளூரைட் வாயுக்கள் வெளிவருவதிலிருந்தும், பின்னர் வரும் கதிரியக்க வீழ்ச்சியிலிருந்தும் இன்னும் பலரை மரணம் மற்றும் நோய்களுக்கு உட்படுத்தும்.

ஈரானிய யுரேனியம் கையிருப்புகளின் போலிச்சாட்டுக்களின் பின்னால், ஈரானுக்கு எதிரான இத்தகைய போர்க்குற்றத்திற்கான உடனடி உந்து சக்தி, அதிகாரத்தில் தொடர்வதற்காக தேர்தலுக்குப் பிந்தைய ஆட்சி கவிழ்ப்பை நடத்த ட்ரம்ப் முயன்றதை எதிர்கொண்டு முன்னோடியில்லாத வகையில் அரசியல் நெருக்கடியில் வாஷிங்டன் சிக்குண்டுள்ளதாகும்.

ட்ரம்ப் உயர்மட்ட பென்டகன் தலைமையை அகற்றி, பாசிச விசுவாசிகளின் ஒரு குழுவை உயர் பதவிகளில் நிறுவியுள்ளார், அவர்கள் அனைவரும் வெறித்தனமான ஈரானிய எதிர்ப்பாளர்களாவர். ஆயுத தொழிற்துறையின் முன்னாள் பரப்புரையாளரான பணிநீக்கம் செய்யப்பட்ட பாதுகாப்பு செயலாளர் மார்க் எஸ்பர், ஈரான் மீதான தாக்குதலை ஆதரிக்க அவர் தயக்கம் காட்டியதாலும் மற்றும் கிளர்ச்சி சட்டத்தை செயல்படுத்தவும், பொலிஸ் வன்முறைக்கு எதிர்ப்புக் காட்டும் ஆர்ப்பாட்டங்களை தாக்குவதற்கு இராணுவ துருப்புக்களை வீதிகளில் நிறுத்துவதற்குமான ட்ரம்பின் முன்மொழிவுகளுக்கு அவர் தெரிவித்த பொது எதிர்ப்பின் காரணமாக நீக்கப்பட்டார்.

ஈரான் மீதான தாக்குதலும் மற்றும் ஏராளமான அமெரிக்க துருப்புக்களின் மரணங்களுடன் தவிர்க்கமுடியாத ஈரானியப் பதிலடியும் இராணுவச் சட்டத்தை திணிப்பதற்கும் வெள்ளை மாளிகையை விட்டு வெளியேற மறுப்பதற்கும் ட்ரம்பிற்கு சாக்குப்போக்கை வழங்கும். திட்டமிடப்பட்ட ஜனாதிபதி பதவியேற்புக்கு 62 நாட்களுக்கு முன்னதாக, அத்தகைய ஆத்திரமூட்டலின் ஆபத்து எப்போதும் உள்ளது.

பைடெனும் ஜனநாயகக் கட்சியினரும் ஈரானுக்கு எதிரான ஒரு பேரழிவு போரின் அச்சுறுத்தலை புறக்கணித்துள்ளனர். அதற்கு பதிலாக, ஆப்கானிஸ்தானிலும் ஈராக்கிலும் கிட்டத்தட்ட இரண்டு தசாப்த கால அமெரிக்கப் போரிலிருந்து அமெரிக்க துருப்புக்கள் "விரைவாக" திரும்பப் பெறுவதால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து அவர்கள் எச்சரிக்கின்றனர், அதே நேரத்தில் ட்ரம்ப் அதிகார மாற்ற செயல்முறைக்கு ஒத்துழைக்க மறுப்பது, "தேசிய பாதுகாப்புக்கு" அச்சுறுத்தல் என்றும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தை அதன் "எதிரிகளுக்கு" முன்னால் பாதிப்படைய வைக்கும் என்கின்றனர்.

ஈரானுக்கு எதிரான போர் அச்சுறுத்தல் மற்றும் ஒரு புதிய உலகப் போரின் ஆபத்து ஆகியவை, அடிப்படையில் ட்ரம்ப் ஆட்சியின் நெருக்கடியில் வேரூன்றியவை அல்ல, மாறாக அதன் மூலத்தில், அது அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் வரலாற்று நெருக்கடியாகும். ஈரானுக்கு எதிரான அதன் இரக்கமற்ற ஆக்கிரமிப்பில், வாஷிங்டன் அதன் புவி மூலோபாய நலன்களைப் பின்தொடர்கிறது. இது பாரசீக வளைகுடா மற்றும் அதன் பரந்த எரிசக்தி வளங்கள் மீது தடையற்ற மேலாதிக்கத்தை செலுத்த முற்படுகிறது, அதே நேரத்தில் அதன் பிரதான உலகளாவிய போட்டியாளரான சீனாவுக்கு மறுக்கிறது.

ஜனவரி 20 ஆம் தேதி பதவியேற்றதில் பைடென் வெற்றிபெற வேண்டுமானால், இந்த போர் அச்சுறுத்தல் தொடர்ந்து அதிகரிக்கும். ரஷ்யா மற்றும் சீனா மீது மிகவும் “மென்மையாக” இருப்பதாக ட்ரம்பை வலதிலிருந்து தாக்கும் பிரச்சாரத்தின் மூலம் ஜனநாயகக் கட்சி இதை போதியளவு தெளிவுபடுத்தியுள்ளது.

ஜனநாயகக் கட்சியின் முக்கிய அக்கறை ட்ரம்பின் சதித்திட்டங்களைத் தோற்கடிப்பது அல்ல, மாறாக வோல் ஸ்ட்ரீட் மற்றும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நலன்களை அச்சுறுத்தும் பரந்துபட்ட மக்களின் எதிர்ப்பைத் தடுப்பதாகும்.

COVID-19 தொற்றுநோய்க்கு, ஆளும் வர்க்கத்தின் "சமூக நோய் எதிர்ப்பு சக்தி பெருக்க" பதிலுக்கு தொழிலாளர்களின் உயிர்கள் பலியிடப்படுவதோடு, ட்ரம்ப் மற்றும் ஜனநாயகக் கட்சியினர், அவர்கள் இருவரும் பாதுகாக்கும் முதலாளித்துவ அமைப்பை எதிர்த்து தொழிலாள வர்க்கத்தால் மட்டுமே போருக்கு எதிரான மற்றும் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதற்கான போராட்டத்தை நடத்த முடியும்.

அமெரிக்கத் தேர்தல்களைத் தொடர்ந்து நடந்த அசாதாரண நிகழ்வுகளை முழு உலகமும் பார்த்துக் கொண்டிருக்கிறது, அமெரிக்க தொழிலாளர்கள் ஒரு சுயாதீனமான அரசியல் போராட்டத்தைத் தொடங்கினால், அதற்கு உலகம் முழுவதும் உள்ள தொழிலாளர்கள் ஆதரவளிப்பார்கள். அமெரிக்காவிலும் ஒவ்வொரு நாட்டிலும் உள்ள தொழிலாளர்களின் பொதுவான நலன்கள், பெருநிறுவன நிதிய தன்னலக்குழுவின் பிடியை உடைத்து, சமத்துவம் மற்றும் சோசலிசத்தின் அடிப்படையில் சர்வதேச அளவில் பொருளாதார வாழ்க்கையை மறுசீரமைப்பதற்காக அதிகாரத்தை தங்கள் கைகளில் எடுத்துக்கொள்வதாகும்.

Loading